(பாரதீய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நாவல்)

2

     தஞ்சையிலிருந்து புதுக்குடி வழியாகக் கிளியந்துறைக்கு வரும் பஸ் அது ஒன்று தான். காலையில் ஏழு மணிக்கு வந்து, ஏழரை மணிக்குத் திரும்பி விடும். பத்து மணிக்குத் தஞ்சை செல்லும். கிளியந்துறைக்கு மறுபடியும் மாலை ஐந்து மணியளவில் புதுக்குடியில் இருந்து ஒரு பஸ் வந்து எட்டிப் பார்க்கும். பல நாட்களில் அது சோம்பலாக வராமலும் இருந்து விடும்.

     கிளியந்துறைக் கடை வீதிதான் பஸ் நிறுத்தம். பூமணியாற்றின் கால்வாய் மதகோரம் வளைந்து திரும்பி 'ரைஸ்மில்'லின் வாசலில் பஸ் நின்றால் பாதையில் நடக்கும் போதே கண்களில் படும்.

     பஸ் இன்னமும் வரவில்லை. ஆசுவாசமாக இருக்கிறது.

     ஆற்றுக் கரையைச் சார்ந்த முத்தூரு நாயக்கரின் வயல்களில் நீர் தேங்கிக் காவாளைச் செடிகளுக்கு அந்திம காலம் வந்துவிட்டதைத் தெரிவிக்கின்றன. பச்சைக் கம்பளமாக நாற்றங்கால்... அப்பால் வரப்பினூடே வண்ணப் புள்ளிகளாக நடவுக்குச் செல்லும் பெண்கள்; இரையுண்ட நாகமென நீர் நிரம்பி ஓடுவது தெரியாமல் செல்லும் ஆறு; பளிச்சென்று அன்றையப் பொழுதுக்குக் கட்டியம் கூறும் நீலவானம். எல்லாம் நம்பிக்கையளிக்கின்றன.

     காந்தி, அவர்கள் குடியிலேயே ஒரு புதிய பரம்பரையைத் துவக்கி வைக்க முன்னோடியாக நடக்கிறாள்.

     விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் என்று மட்டுமின்றி, சம்முகம் பொதுவாகக் கிராமத்தாரிடம் மதிப்புப் பெற்றிருப்பவர். சுற்றுவட்டமுள்ள எல்லா அரிசன மக்களுக்குமே பலவகைகளிலும் மேலான மதிப்புக்குரிய சிறப்பைப் பெற்றிருப்பவர்.

     உழவுத் தொழிலாளர் வாழ்க்கைகளைப் பாதிக்கும் எந்தப் பிரச்னைக்கும், சொந்தத் தகராறுகளுக்கும் கூட அவரிடம் வந்து நியாயம் கோருவார்கள். இவருக்குத் தெரியாமல் அந்தக் குடிகளிலிருந்து பெரிய படிப்புப் படிக்கச் சென்றவர், உத்தியோகம் பார்க்கச் சென்றவர், மேற்குடி சம்பந்தம் வைத்துக் கொண்டவர் என்று அதுகாறும் இல்லை.

     கிளியந்துறைக் கடைவீதி காலை நேரச் சுறுசுறுப்புடன் விளங்குகிறது. அருணாசலத்தின் காபிக் கடையில் சூடான இட்டிலியும் சட்டினியுமாக வியாபாரம் நடக்கிறது. சைக்கிள் கடையில் மாலை நேரத்தில் தான் வியாபார நெரிசல் என்றாலும் இப்போது அங்கு குந்தியிருக்கும் ஆட்கள் இருக்கின்றனர். ராமசாமி இப்போதுதான் கடை திறந்து முன்பக்கம் கயிறு வகைகள், வாளிகள் எல்லாம் எடுத்துத் தொங்கவிடுகிறான். பஸ்ஸுக்காகச் சுற்றுப்புறங்களில் இருந்து வரும் மக்களில் கோஷாப் பெண்கள் கூட்டம் ஒன்று இன்னமும் திறக்கப்பட்டிராத மிட்டாய்க்கடை வாயிலில் நிற்கிறது.

     நீலச்சட்டையும் அரும்பு மீசையுமாக, நாகரிக மெருகும் படிப்புக்குரிய அடக்கமான களையுமாக ஓர் இளைஞன் சைக்கிள் கடைப்பக்கம் வந்து நிற்கிறான். அவரையும் காந்தியையும் கண்டதும் மரியாதையாக 'ஹலோ' என்று முகமன் கூறுகையில் சம்முகம் உள்ளூறப் பூரித்துப் போகிறார்.

     "தேவுதான, தம்பி; எப்ப வந்தாப்பல?"

     "இங்கதான இருக்கிறேன்? ரெண்டு மாசமாச்சி!"

     "அப்படியா? படிப்பு முடிஞ்சி போச்சா?"

     "லா படிச்சுருக்கேன்... இன்னும் முடிக்கல... பரீட்சை எழுதணும்."

     "அப்பிடியா? ஒண்ணுந் தெரியறதில்ல. வீட்டுப்பக்கம் வரக்கூடாதா? ஆமாம், ஊரிலே ஆரிருக்காங்க?"

     அவன் புன்னகை செய்கிறான். "ஆரு, நாந்தானிருக்கிறேன். இப்படி வந்திட்டுப் போவேன்..."

     பஸ் வந்ததும் தங்களருகில் அவன் உட்கார்ந்து பேசுவதை விரும்புவான் என்று அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இவர்கள் ஏறி முன்பக்கம் இறங்கத் தோதாக அமர்ந்து கொண்டு அவனுக்காக ஓர் இடத்தை ஒதுக்கினாற் போலும் கூட நினைத்து அவனைத் திரும்பிப் பார்க்கின்றனர். ஆனால் தேவு, வேண்டாம் என்பது போல் வேறு பக்கம் அமர்ந்து கொள்கிறான்.

     பஸ்ஸில் இவர் அமர்ந்திருப்பதை நடவுக்குச் செல்லும் வேட்டுவனூர் நாட்டாமை பார்த்து விடுகிறான்.

     "டவுன் போறீங்களா, முதலாளி? ஐயா அம்மா எல்லாம் சொகந்தானா?"

     "சொகந்தா, எங்க நடவு?"

     "இங்கதா, கெழக்கால கரந்தக்குடி பண்ண..."

     "கூலி எல்லாம்... எப்படி? சட்டபடிதான?"

     "ஆமாம். ஏழு... ஒம்பதுதா..."

     "ஒண்ணுந் தகராறில்லியே?"

     "அதெல்லாமில்ல..."

     சட்டென்று ஓடிப்போய், வெற்றிலை பாக்கு வாங்கி வந்து எம்பிக்கொண்டு நீட்டுகிறான்.

     "என்னாத்துக்கு இதெல்லாம்? போ போ..."

     "வெத்தில போடுங்க முதலாளி?"

     "நா வெத்தில போடுறத வுட்டுப்புட்டே. பல்லு வலி வந்திச்சி. எடுத்திட்டுப் போ."

     "சும்மா போடுங்க முதலாளி! நம்ம புள்ளதாங்களே?"

     "ஆமாம். அதும் போடாது, படிக்கிற புள்ள..."

     இதற்கு மேல் அவள் புதிய தொழிற் கல்வியைக் கற்று, மேல் வருக்கத்தினருக்கும் மேலாகப் படி ஏறப் போவதைப் பற்றிச் சொல்லிக் கொண்டாலும் அவர்களுக்குப் புரியாது...

     மேலும் மேலும் கோஷாப் பெண்கள்.

     கம்மென்று அத்தர், சென்ட் வாசனைகள், மேலே போர்த்திருக்கும் போர்வையிலேயே எத்தனை பூ வேலைகள்! ஒவ்வொருத்தியும் முழங்கை வரையிலும் தங்க வளையல்கள் அணிந்திருக்கின்றனர். முன்பெல்லாம் எங்கு திரும்பினாலும் இவர்கள் செழிப்பு இவ்வளவுக்குக் கண்களில் பட்டிருக்கவில்லை.

     பஸ் கடைவீதியை விட்டுப் புறப்பட்டு, ஆற்றோரமாகவே சென்று பெருமாள் கோயிலுக்கு நேராக நிற்கிறது. மேல் சாதி அக்கிரகாரம், வேளாளர் தெரு மக்கள் ஏறிக்கொள்ளும் நிறுத்தம் இது. குருக்கள் ஆற்றில் நீராடிவிட்டுப் பளபளவென்று துலக்கிய குடத்தில் நீர் முகர்ந்து செல்கிறார். நந்தவனத்தில் நடராசு மலர் கொய்கிறான்.

     "என்ன, சம்முகம், டவுனுக்கா?" என்று விசாரித்துக் கொண்டு வரதராஜன் முதல் பக்கத்து ஆசனத்தில் அமருகிறான். புதுக்குடியில் பள்ளி ஆசிரியர். இங்கே நடவுக்கு வந்து செல்கிறான் போலிருக்கிறது.

     "ஆமாம். நடவாயிட்டுதா?"

     "இல்ல, ரெண்டொரு பெரும்படிப் பாத்திரம் கல்யாணத்துக்கு எடுத்திட்டுப் போயிருந்தேன். உம் பொண்ணுதான இவ?... படிச்சிண்டிருந்தா இல்ல, மிஷன் ஸ்கூல்ல?"

     "ஆமாம், மூணு வருஷமாச்சி. எஸ்.எஸ்.எல்.ஸி. பண்ணி. மேல படிக்க வைக்க முடியல. இப்பதா, பாலிடெக்னிக்லேந்து இன்டர்வியூ வந்திருக்கு. கூட்டிட்டுப் போறேன்."

     "அப்படியா? படிக்க வையி. உங்களுக்கெல்லாந்தான் அரசு எல்லாம் செய்யக் காத்திண்டிருக்கே? உம் பையன் கூட பி.ஏ. படிச்சான் போல இருக்கு? வேலை பண்றானா?"

     தெரிந்து கொண்டே கேட்கும் கேள்விதான் என்று படுகிறது.

     "மெட்ராசில இருக்கிறான். ஹான்ட்லூம் போர்ட் ஆபீசில..."

     "கல்யாணம் காட்சி பண்ணிருக்கியா?"

     "எல்லாம் அவனே பண்ணிக்கிட்டான். என்னத்தப் பேசறதுங்க..."

     "ஓ... கேள்விப்பட்டேன் போலிருக்கே... எல்லாம் ஒண்ணாப் போச்சு இப்ப. இங்க கூட்டிட்டு வந்தானா?"

     "இல்ல, இப்ப ஊருக்கு வந்திருக்கிறான். எங்களுக்கு ஒண்ணுமில்லன்னாலும், பட்டணத்தில் பழக்கப்பட்டவங்க, கிராமத்தில எப்படி வந்திருப்பா?"

     "பட்டணத்துல பழக்கப்பட்ட பிறகு யாரு வரது. இப்ப உம் பொண்ணே நாளக்கிப் படிச்சு பெரிய பதவில வந்த பெறகு கிராமத்தில வந்து குடிசயில இருப்பாளா? உன்ன அப்பன்னு சொல்லிக்கவே வெக்கப்படுவா!... முன்னப் போல கிராமத்துல யாரு இருக்கப் போறாங்க? ஏழும் ஒம்பதும் கூலி குடுத்து ஆருக்குக் கட்டுப்படியாவும்?"

     இவருக்கு முகம் சிவக்கிறது. "ஏழு ஒன்பது கூலிலதா எல்லாம் பாயுறாங்க. சேத்தில உழலுறவன் இந்த வெலவாசில அரவயித்துக் கஞ்சி குடிக்க வாணாமா?"

     "யாரு வாணாங்கறாங்க? வரியையும் உசத்திப் போட்டான். உரவெல, பூச்சி மருந்துவெல, ஆள் கூலி இதெல்லாம் கணக்குப் பாத்தா யாருக்கு விவசாயம் பண்ணனும்னு இருக்கு? உழுதவன் கணக்குப் பாத்தா உழக்கு மிச்சமில்லங்கறது அன்னிக்கு இல்ல, இன்னிக்குத்தா மெய்யாயிருக்கு..."

     இவர் பேசவில்லை.

     சட்டென்று யாரும் தொழிலாளியின் கூலியில்தான் பாய்கிறார்கள். ஒரு அலுவலகக் கடை நிலை ஊழியன் வாங்கும் சம்பளம் கூட இந்தத் தொழிலாளிக்குக் கிடைக்கவில்லை என்பதை யாரிடம் சொல்வது?

     புதுக்குடி பஸ் நிறுத்தத்தில் அநேகமாகப் பஸ்ஸே காலியாகிவிடுகிறது. தேவு இறங்கிச் செல்வதை ஓரத்திலமர்ந்திருக்கும் காந்தி பார்த்துக் கொண்டிருக்கையில் சிவப்புக் கட்டத் துண்டுடன் சின்னராசு ஏறி வருகிறான். "காம்ரேட் எங்க? தஞ்சாவூருக்கா?"

     "ஆமாம், நேத்து ஊருக்குப் போன பிறகுதான் தெரியிது. இதுக்கு இண்டர்வியூக்கு வந்திருக்கு. நான் சொன்னனில்ல நேத்து?"

     "அப்படியா மகிழ்ச்சி. மார்க்கெல்லாம் நல்லா இருக்கில்ல?"

     "இருக்கு, இருந்தாலும் தேர்வு செலக்ஷனாகி, ஆஸ்டல் பாத்து சேத்துவர வரய்க்கும் கவலதான?"

     "அதொண்ணும் தொந்தரவு இல்ல காம்ரேட். நம்ம... கிள்ளிவளவன் இருக்காரு அந்த போர்டிலன்னு சொல்லிக்கிட்டா. உங்களுக்குத்தா அந்த நாளிலேந்து தெரியுமே?..."

     "அப்படியா? கிள்ளிவளவனத் தெரியுமாவது? ஒண்ணா எத்தினி போராட்டத்தில் போயிருக்கிறோம்? நம்ம சுந்தரமூர்த்தி வீட்ல அவர முதல்ல திராவிட இயக்கம் ஆரம்பிச்ச நாள்ளந்து பழக்கம். 'அக்கிரகாரத்தில மாட்ட ஓட்டிட்டுப் போடா'ம்பாரு... வளவந்தா மீட்டிங்கில பேச வருவாரு..."

     "பின்னென்ன? இடம் கிடச்சாச்சின்னு வச்சிக்க!"

     மிகவும் தெம்பாக, உற்சாகமாக இருக்கிறது. தாழ்த்தப்பட்ட இனத்தினருக்கான கல்விச்சலுகை; விடுதியிலிருந்து படிக்கவும் கூட உதவி பெறலாம்... பிறகு... வேலை... இவர்கள் கொள்கை வழியிலே நிற்கும் முற்போக்கு இளைஞனாகப் பார்த்துத் திருமணம்...

     பையனைப் போல் இவளை விட்டு விடக் கூடாது. இவளைத் தம் ஆளுகையில் இருத்திக் கொள்ள, ஒரே கொள்கையாளாகப் பார்த்துச் சம்பந்தம் செய்து கொள்ள வேண்டும். அது அப்படி அசாத்தியமல்ல.

     பஸ் நிறுத்தத்திலிறங்கி நடக்கிறார்கள். கால் வலி கூடத் தெரியவில்லை.

     பழைய நாளைய அரண்மனைக் கட்டிடம் வெளியே சைக்கிள்கள் நிற்கின்றன. பெஞ்சியில் பெண்கள், தந்தையர், சகோதரர்கள் என்று கூட்டம் குறையவில்லை.

     இவர்களில் யாரோ தாழ்த்தப்பட்டவராகத் தம்மினத்தை சார்த்திருக்க முடியும் என்று சம்முகம் பார்க்கிறார்.

     யாருமே தம்மினம் இல்லை என்று நினைக்கும்படியாக இருக்கிறது.

     ஒரு வெள்ளைக்கார், அம்பாஸடர் வந்து நிற்கிறது. அதிலிருந்து ஒரு முன் வழுக்கைக்காரரும் ஓர் இளம்பெண்ணும் இறங்கிச் செல்கின்றனர். சம்முகம் அவரை நினைவு கூறுகிறார்.

     அவர் ஒரு ஆலை அதிபர்.

     கிள்ளிவளவனை முன்னதாகக் கண்டு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அரசியல் கட்சி என்று வேறு ஒரு பக்கம் சார்ந்து விட்ட பிறகு இவருக்குத் தொடர்பே விட்டு விட்டது, என்றாலும் பழைய தோழமையை மறந்து விடமாட்டான்.

     இவள் விண்ணப்பம் பார்த்து யாரோ நினைவு வைத்துக் கொள்ள முடியும்? மனம் உழம்புகிறது. தாழ்த்தப்பட்ட இனம் என்ற ஒரு துரும்பையே பற்றிக் கொண்டு சுழலுகிறது.

     பொழுது கிடுகிடென்று ஏறிப் பன்னிரண்டரையாகிறது. பசி உணர்வு தலைதூக்குகிறது. பிறகுதான் அவள் பெயரைக் கூப்பிடுகிறார்கள். இவள் தான் கடைசி என்று தோன்றுகிறது.

     உள்ளே சென்று முன்னறையில் இவர் தங்க, காந்தி தள்ளு கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே செல்கிறாள். அடியிலும் மேலும் வெளிச்சம் இருந்தாலும் கால்கள் மட்டும் தெரிந்தாலும், பேச்சுக் குரல்களும், நலிந்த காந்தியின் மொழிகளும் செவிகளில் விழுந்தாலும் ஒன்றும் தெளிவாகத் துலங்காமல், மிகப்பெரிய மலை ஏற்றத்தின் முண்டு முடிச்சுக் கட்டத்தில் நிற்பது போல் இலேசானதொரு கலக்கம் ஆட்கொள்கிறது.

     அவருடைய வாலிபப் பருவம், வாழக்கூடிய நாட்களெல்லாம் போராட்டம், போலீசு, கோர்ட்டு, வயல், அடிதடி, வழக்கு, காத்திருப்பு என்று கண்ணாடிச் சில்லுகளில் குத்திக் கொண்டு நடப்பாகவே மோதிக் கொண்டு கழிந்திருக்கிறது. இதே ஊரில் வக்கீல் ஐயங்கார் வீட்டில் எத்தனை நாட்கள் காத்துக் கிடந்திருக்கிறார்? பசி, பட்டினிக்கு எல்லையே கிடையாது. கால் கால் ரூபாயாகக் காசு சேர்க்கும் தொல்லை, கஞ்சுக்கில்லா ஏழைகளிடம் வக்கீலுக்குக் கொடுக்கக் காசு பறிக்கும் தொல்லையை அளவிடுவதற்கில்லை.

     ஆனால் அப்போதெல்லாம் கூட இந்தத் தொய்வும் அவநம்பிக்கை நிழல் காட்டும் தளர்ச்சியும் இல்லை போலிருக்கிறதே? வாழ்க்கையில் பற்றும் பசுமையும் பெருமிதமும் இப்போதுதான் தலைக்காட்டத் தொடங்கியிருக்கின்றன. காந்தி மிகுந்த சூடிகையுள்ள பெண். என்றேனும் அவளோடு சங்க அலுவலகத்தில் தங்க நேர்ந்தால் கூட, பத்திரிகை புத்தகங்கள் என்றுதான் கண்கள் நோட்டமிடும். மூன்று வருட காலம் அவளை முடக்க வேண்டி வந்து விட்டது. அவளுக்காக நூலகத்திலிருந்து புத்தகங்கள் வாங்கி வர வேண்டும். இல்லையேல் தானே செல்வதாக நிற்பாள். இவள் தகுதி - தாழ்த்தப்பட்ட இனம் - அம்பேத்கார் பேரைக் கொண்ட கல்விக் கொடை நிறுவனம். கிள்ளிவளவன்... மூன்று கால்களும் உறுதியானவை.

     இந்தக் கால்களில் மாடமாளிகை எழுப்ப முடியும். 'எலக்ட்ரானிக்ஸ்' அது இது என்றெல்லாம் அவள் சொல்லும் சொற்கள் இவருக்கு அவ்வளவு புரியவில்லைதான். இவர் படித்ததெல்லாம் ஐந்தாவது வரையிலுமே. பின்னர் விசுவநாதனும், இராமச்சந்திரனும் நெடுங்காடியும் பாசறையில் கற்பித்த பாடங்களே அவரை ஒரு சங்கத் தலைவனாக்கியிருக்கின்றன.

     உள்ளே இறுக்கம் தாங்கவில்லை. துண்டால் விசிறிக் கொள்கிறார். காந்தி வெளியே வருகிறாள்.

     அப்பாடா...!

     "என்னம்மா? எல்லாம் நல்லபடியாச் சொன்னியா?"

     "இருங்கப்பா, உங்களை அவரு பார்க்கச் சொன்னாரு..."

     "யாரு...?"

     "அதா, உயரமா முடிய இந்த பக்கமா வாரிட்டு இருந்தாரு. போறதுக்கு முன்ன அரைமணி கழிச்சிப் பார்க்கச் சொல்லுன்னு சொன்னாரு..."

     "கிள்ளிவளவனா? போர்டில இருக்காருன்னாங்க. உங்கிட்ட ஞாபகமாக் கேட்டாரா?"

     ஆவல் அடுக்கடுக்காக விரிகிறது.

     "அவுருதாம்போல இருக்கு. மூணு பேரு இருந்தாங்க. 'எந்த ஸ்கூலில் படிச்சே? ஏ மூணு வருஷமா சும்மா இருந்தே'ன்னுதாங் கேட்டா. நான் 'வசதியில்ல. ஊரை விட்டு வரமுடியல'ன்னேன். தாத்தா பேரச் சொன்னாரு அவுரு. 'ராமசாமி வாய்க்கார் மகன் சம்முகமா உங்கப்பா'ன்னாரு..."

     அரைமணி காத்திருப்பதாகவே இல்லை. பொற்சிறகுகளுடன் பறந்து போகிறது. அறையில் கிள்ளிவளவன் மட்டுமே அமர்ந்திருக்கிறான். அதே கறுப்புத் துண்டுத் தோழமை.

     "வணக்கமுங்க, நம்ம பொண்ணுதா..."

     உட்கார்ந்தவாறே புன்னகை செய்கிறான். 'உட்காருங்க' என்று ஆசனம் காட்டுகிறான்.

     "எப்படி சவுக்கியமெல்லாம்? அப்பா நல்லாயிருக்காரா?"

     "இருக்காருங்க நல்லபடியா..."

     "இது ஒரே மகதானா?"

     "இன்னொண்ணு இருக்கு. அது படிக்கல ரொம்ப. குடும்பமா வச்சிட்டேன். விவசாயக் குடும்பத்தில வீட்டுக்கும் ஆளு வேண்டியிருக்குங்களே!"

     "இவ மதிப்பெண், மற்ற தகுதி எல்லாம் திருப்தியாகவே இருக்கு. உங்க மகளுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது. வாழ்த்துக்கள்" என்று காந்தியைப் பார்த்துப் புன்னகை செய்கிறான். அவள் தலையைக் குனிந்து கொள்கிறாள்.

     "ரொம்ப நன்றிங்க..." என்று சம்முகம் உணர்ச்சி வசப்பட்டுப் போகிறார்.

     "இந்த நிறுவனமே பின் தங்கிய இனத்தினருக்காக தொழிற்கல்வி என்று தொடங்கப்பட்டிருக்கிறது..."

     "சொன்னாங்க..."

     "இது ஒரு புதிய சகாப்தத்தை நோக்கிச் செல்லும் நுழைவாயில். எலக்ட்ரானிக்ஸ், சிவில் இன்ஜினியரிங், பிசினஸ் மானேஜ்மென்ட் என்ற பல துறைகளும் தொடங்குகிறார்கள். இன்னும் விரிவுபடுத்தப் பல திட்டங்களிருக்கின்றன..."

     வளவன் மேசையிலிருக்கும் கண்ணாடிக் குண்டைக் கையில் வைத்துக் கொண்டு திட்டங்களை விவரிக்கிறான். அதெல்லாம் புரியாது போனாலும் மகிழ்ச்சியுடன் ஆமோதிக்கிறார் சம்முகம்.

     "அதனாலே, சம்முகம், உங்க மகள் ஓர் அதிர்ஷ்டப் பாதையில் கால் வைக்க அனுமதி கிடைச்சாச்சு. நீங்க ஓர் இரண்டாயிரம் முதலில் கட்டிடணும்..." திக்கென்று கண்ணாடிக் குண்டைத் தம் மீது எறிந்து விட்டாற் போல் அவர் அதிர்ச்சியுறுகிறார்.

     "உங்க மகன்னில்ல. செலக்ஷன் ஆகும் மாணவியர் யாராக இருந்தாலும் டொனேஷன் கட்டணும் என்று விதி."

     கண்ணாடிக் குண்டு சிதில் சிதிலாக வெடித்து விழுந்தாற் போலிருக்கிறது.

     "இரண்டாயிரமா? அவ்வளவு தொகைக்கு என்னப் போல் ஓர் ஏழை விவசாயி எங்க போக முடியுமுங்க?"

     வளவன் புன்னகை செய்கிறான். பல் வரிசைகள் ஒழுங்காக அழகாகத் தோன்றிய தோற்றம். இப்போது நரிப்பற்களின் நினைப்பைக் கொண்டு வருகிறது.

     "அதெல்லாம் அந்தக் காலம். இன்னைக்கி உங்களால் இரண்டாயிரம் திரட்ட முடியாதுன்னு நான் சொல்ல மாட்டேன். இது இந்தக் கல்விக் கூடத்தின் வளர்ச்சிக்கு மட்டுமே. உங்க மகளுக்குப் பல்வேறு சலுகைகள் கிடைக்க இருக்கின்றன. தாழ்த்தப்பட்ட வகுப்பிலிருந்து, உங்க மகள் வந்து கட்டாயம் படிக்கணும்னு நினைப்பதால், நான் உங்ககிட்ட வற்புறுத்த வேண்டியிருக்கு. ஒரு இரண்டாயிரம் புரட்டிக் கட்டிடுங்க... இது மட்டும் யாருக்கும் விலக்கு இல்லை..."

     மலையாக இருக்கிறது.

     இரண்டாயிரம்! பட்டாமனையில் வீடு கட்ட இருநூற்றைம்பது செலவு செய்து மூவாயிரம் கடன் வாங்கினார். அரை வேக்காட்டுச் செங்கல்லை வைத்து, மண்ணையும், சுண்ணாம்பையும் குழைத்துக் கட்டிய அந்த வீட்டுக்கு மேலும் 'நான்கு' செலவாயிருக்கிறது. அந்தக் கடனுக்கு வட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். உரம் வாங்க, கூலி கொடுக்க, உழவு மாடு வாங்க என்று கடன் கொடுக்கிறார்கள். ஆனால் வீட்டுச் செலவும் பயிர்ச் செலவும் கடனும் வட்டியும் அடைக்க முடியாமல் துண்டாகத் தங்கித் தங்கி பூதாகாரமாக வளர்ந்து வருவதை எங்கே போய்ச் சொல்வது?

     பையனைப் படிக்க வைத்தார். அவன் பெற்ற சலுகையைக் காட்டிலும் அவன் ஆடம்பரச் செலவுகளே அதிகமாயிருந்தன. எப்படியோ ஏதோ வேலை என்று பற்றிக் கொண்டு நம்மை விட்டால் போதும் என்று அவன் வளர்ந்திருக்கிறான். உயர் சாதிப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பிறகே எழுதினான். இப்போது அவன் ஊருக்கு வந்திருப்பது லட்சுமிக்குத்தான் பூரிப்பு. ஆனால் இவருக்கு உள்ளூர அவன் பணம் கேட்டு வந்திருப்பானோ என்ற அச்சம் தான்.

     "இரண்டாயிரமெல்லாம் நினைக்கக் கூட முடியாதுங்க..."

     "கொஞ்சம் குறைச்சிக்குங்க..." என்று சொல்ல எழுந்த நா உடனே சுய மரியாதையில் அடங்கிப் போகிறது.

     இவனிடம் இதற்குப் பேரமா?

     "அதான், பிரத்தியேகமாக உங்களுக்குச் சொன்னேன். எப்படியானும் முதல்ல கட்டிடுங்க, உங்க பெண்ணுக்கு மட்டுமல்ல, சமுதாயத்துக்கே பெருமை."

     "சரிங்க, பார்க்கிறேன்."

     "வணக்கம்..."

     காந்தியும் கும்பிடுகிறாள்.

     வெளியே படி கடந்து வந்த பின்னரும் இருளடித்துப் போனாற் போலிருக்கிறது.