உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
10 ராமன் பிரேக் இல்லாத ஒரு சைக்கிளில், சவாரி வந்தான். அவன் அடிக்கடி வீட்டுக்கு வரும்போதெல்லாம், அவளுக்கு மரியாதையாக ஒதுங்கி நிற்பவன். ஏதாவது அவசியத்தால் பேச வேண்டியது ஏற்பட்டால் “பாப்பா... மச்சானுக்கு காபி வேணுமாம்” என்று ஒதுங்கி நின்றே கேட்பவன். ஆனால் இன்று... மல்லிகா, வேக வேகமாக நடந்தபோது, அவனும் சைக்கிளை வேகவேகமாக மிதித்துக் கொண்டு “சைக்கிள்லே ஏறிக்குமே. அந்த ரிக்ஷா கஸ்மாலம் எங்க பூட்டான்” என்றான். மல்லிகா, அவனை கோபத்தோடு பார்த்தாள். “நான் என்ன எருமை மாடா ‘மே’ங்றீங்க?” “கோவிச்சுக்காதமே. அக்காள், உன்னை ஏத்திக்கினு வரச்சொல்லிச்சு.” “எனக்கு நடக்கத் தெரியும்.” “ஒரு கஸ்மாலம் உன்கிட்ட பேசுனானே, அவன் யாரு?” “கண்ணுக்கு எல்லாம் கஸ்மாலமாத்தான் தெரியும். அவரு... என்னோட நண்பர்...” “அக்காண்ட சொல்லட்டுமா?” “சொல்லேன். சரி... வழியை விடுங்க...” ராமன் எதிர்திசையில் சைக்கிளை உருட்டினான். ஒரு வேளை, சரவணனை வழிமறித்துத் தாக்கப் போகிறானோ என்று மல்லிகா நினைத்தாள். பின்னாலேயே ஓடலாமா என்று கூட எண்ணினாள். ‘அவரை அடிக்காதே... அடிக்காதே’ என்று கத்துவதுபோல் முகத்தைக் கொண்டு போனாள். தலை தெறிக்க சைக்கிளை மிதித்த ராமனையும், தொலைவில் போய்க் கொண்டிருந்த சரவணனையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே வீட்டுக்கு வந்தாள். மல்லிகா வீட்டுள் நுழைந்த போது, பார்வதியின் அண்ணன்மார்கள் இருவர் மச்சானோடு ஊஞ்சல் பலகையிலும், ஒருவர் சாய்வு நாற்காலியிலும் அமர்ந்திருந்தார்கள். ராமன் ஒரு ஓரமாக தூணில் சாய்ந்து கொண்டிருந்தான். மல்லிகாவிற்கு, போன உயிர் திரும்பி வந்தது. சரவணனை இவ்வளவு சீக்கிரம் ராமன் அடித்திருக்க முடியாது. மகளைப் பார்த்ததும், சொக்கலிங்கம் பதைத்துப் போனார். “ஆட்டோ ரிக்ஷாவை வரச்சொல்லி போன் பண்ணினால் என்னம்மா? இப்படியா, வெயிலில் வேர்க்க விறுவிறுக்க நடந்து வருவது?” பார்வதியின் வாய் பல்லாக மாறியது. “நான் ராமனை சைக்கிளில் அனுப்பி வச்சேன். இவள் பின்னால ஏறிக்க மாட்டேன்னு சொல்லி விட்டாளாம்.” ஊஞ்சல் பலகையில் இருந்த பெரிய மைத்துனர் ராமசாமி, இடி இடியென சிரித்துக் கொண்டே பேசினார். “நீ என்ன பார்வதி... கல்யாணம் ஆகும் முன்னால், கட்டிக்கப் போறவனாய் இருந்தாலும் சைக்கிள்லே ஏறலாமா? மல்லிகா அப்படிப்பட்டவளாய் இருந்தால், உன் மகளை அவனுக்கு கேட்பேனா? கல்யாணம் ஆகட்டும் அப்புறம் பாரு அவன் ராமன் சைக்கிள்ல, பின்னால உட்கார மாட்டாள். முன்னால்தான் உட்காருவாள். இல்லியா மல்லிகா?” ‘இல்லை, இல்லவே இல்லை’ என்று கத்த வேண்டும் போலிருந்தது மல்லிகாவுக்கு. ஆனால் அப்படிக் கத்தவில்லை. அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, அப்பாவையும் இறங்கப் பார்த்துவிட்டு, தனது அறைக்குள் போனாள். தலை திடீரென்று கனத்தது. “நாளைக்கே வெத்திலைப் பாக்கு மாத்திடலாம்” என்று வெளியே கேட்ட பார்வதியின் சத்தம், அவளுக்கு தன் தலையே வெடித்து, அப்படி ஒரு சத்தத்தை எழுப்புவது போல் தோன்றியது. பேசாமல் அந்த ‘ஆளோட’ வீட்டுக்கு போயிடலாமா? அம்மாவோட ‘நாத்தனார்’, நல்லவங்கதானே. சீ... அங்கே... அந்த குண்டு குழி விழுந்த வீட்டுக்குள்ள, எப்படி இருக்க முடியும்? அப்பாவை விட்டுட்டு எப்படிப் பிரிஞ்சு இருக்க முடியும்? அதோட, அந்த ‘ஆளு’ வேற குடுச்சிட்டு திட்டுவாரு. அதுக்காக இந்த நொள்ள ராமனை கட்டிக்க முடியுமா? இப்படியெல்லாம் எண்ணினாள், மல்லிகா. வெறித்த கண்களுடன், கடித்த உதடுகளுடன் அவள் கலங்கினாள். கல்யாணத்தை எப்படி நடத்த வேண்டும், எந்த மேளத்தை அமர்த்த வேண்டும், யார் யாருக்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என்று வெளியே பலமாக விவாதங்கள் எழுந்தன. மல்லிகா குப்புறப்படுத்தாள். அவள் மனத்திரையில் சரவணன் வந்தான். வந்த வேகத்திலேயே போய் விட்டான். ஆனால் கிழிந்த புடவையும், மஞ்சள் கயிற்றுக் கழுத்தும், தனித்தனியாக வந்து, பின்பு மருண்ட பார்வையோடு, மிரண்ட முகத்தோடு, கூனிக்குறுகிய தோற்றத்தோடு, ஒரு உருவம் வந்தது. அது எவ்வளவு விரட்டியும் போக மறுத்தது. அவள் செல்லம்மா... மல்லிகாவின் நிஜமான அம்மா. அவளால் இதுவரை ஒதுக்கப்பட்ட அவளைப் பெற்ற பாவி! செல்லம்மாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. “கடைசியில் ராமனுக்குத்தான் கட்டப் போகிறார்களா? இதுக்கா பெத்தேன்? அவரு, தத்து கொடுக்காதே கொடுக்காதேன்னு சொன்னாரே, நான் பாவி. தூரத்தில் நின்னாவது, மகள் உயரத்துல இருக்கறதை தலைநிமிர்ந்து பார்க்கலாமுன்னு நினைச்சேன். இப்போ பள்ளத்தில் விழப்போறவளை, நானுல்லே தலைகுனிந்து பார்க்கணும் போலிருக்கு. அட கடவுளே. இங்கே கூட்டி வந்துடலாமா? எப்படி முடியும்? ராணி மாதிரி இருக்கிற அவளால், இந்த தேனிக் கூட்டில் இருக்க முடியுமா? இருக்கத்தான் சொல்லலாமா?” செல்லம்மா, முழங்கால்களுக்குள் தலையை வைத்து, முட்டிக் கொண்டும், மனதுக்குள் மோதிக்கொண்டும் இருந்த போது, அவளுடைய கடைசி மகள் முறைவாசல் செய்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு குடித்தனமும் தத்தமக்குள்ளே முறை வைத்துக் கொண்டு, சதுரமாக அமைந்திருக்கும் கழிவுநீர் கால்வாயை சுத்தப்படுத்த வேண்டும். பொது இடமான களத்தைப் பெருக்க வேண்டும். இதற்கு முறைவாசல் பரிபாஷை. இன்னொரு மகன் சரியாய் எட்டு மணிக்கு, ராஜாதி ராஜ கம்பீரத்துடன், தோழி சகிதமாய் வரும் வீட்டுக்கார அம்மாவுக்கு குழாயை விட்டுவிட வேண்டும் என்பதற்காக அவசரமாகத் தண்ணீர் பிடித்தான். ஒரு பையன் தெருவில் நின்ற ஒரு டிரக் வண்டியில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். செல்லம்மாளின், பித்துப் பிடித்த தலைக்குள்ளும் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. கணவனிடம் சொல்லாமல் இருக்க முடியாது. இந்த கல்யாணத்தைத் தடுத்து ஆக வேண்டும். அவள் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள். பெருமாள் பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் வருவார். கோணி வியாபாரம் செய்பவர் கோணிக்கடையில் கோணிகளை லைட்டீஸ் கோணி, உப்புக் கோணி, அஸ்கா கோணி என்று பிரிவு படுத்தி, பிரிவுப்படியான பணத்தை ஒன்றுபடுத்தி பத்து ரூபாய் லாபத்தோடு வீட்டிற்கு வந்திருந்தார். அவர் வந்ததும் வராததுமாக செல்லம்மா, அவரிடம் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நேரமோ ஆகிக் கொண்டிருந்தது. அவர்கள் ஜாதியில் நிச்சய தாம்பூலம் ஆகிவிட்டால் பாதிக் கல்யாணம் முடிந்தது மாதிரி. வேறு எவனும் கல்யாணம் செய்ய முன் வர மாட்டான். புருஷன், தான் சொல்லப் போகும் செய்தி கேட்டு தன்னை அடித்தாலும் அடிக்கலாம் என்று நினைத்து, அப்படி அடித்தால் முகத்திலோ தலையிலோ படக்கூடாது என்று எண்ணியவள் போல், செல்லம்மா, ஒரு புறமாக தோளைக் காட்டிக் கொண்டு, ஜாக்கிரதையான இடைவெளி கொடுத்துப் பேசினாள். கணவனுக்கு இதுவரை விஷயம் தெரியாது. “உங்கள் மகள் மல்லிகாவை கூட்டி வாறீங்களா?” “அவளை என் மகள்னு சொல்லாதடி. இங்க வந்தவுடனேயே வீட்டுக்குப் போகணுமுன்னு சொல்றவள், என் மகளாய் இருக்க மாட்டாள்.” “நீங்க அப்படிச் சொல்றதுனால்தான், நாம் பெத்த பொண்ணு சீரழிகிறாள்.” “என்ன சொல்றே?” “பார்வதியோட அக்காள் மகன் ராமனுக்கு அவளை கொடுக்கிறதுன்னு நிச்சயம் பண்ணிட்டாங்களாம்.” “என்ன... இன்னொரு தடவை சொல்லு?” செல்லம்மா, இன்னொரு தடவை சொல்லிவிட்டு, விஷயத்தை ஆதியோடு அந்தமாக விளக்கிவிட்டு, நாத்தனார்காரியிடம் தான் போய் மன்றாடியதையும், அவள் தன்னை உதாசீனப்படுத்தியதையும், ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டு, “செத்தாலும் வாழ்ந்தாலும் நம்மோடயே அவள் சாகட்டும். போய் மகளைக் கூட்டிக் கொண்டு வாங்க” என்றாள். செல்லம்மா எதிர்பார்த்தது போல், பெருமாள் கோபப்படவில்லை. அடிக்க வரவில்லை. பித்துப் பிடித்தவர்போல் அப்படியே தலையில் கை வைத்தபடி ‘குத்துக்கால்’ போட்டு அதிர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். ‘என்னை, பாசத்தோடு பார்க்காதவள் படட்டும்’ என்று பழிவாங்கும் நெஞ்சத்தோடு கணவன் மதர்ப்பாக உட்கார்ந்திருக்கிறாரோ என்று கூட செல்லம்மா நினைத்தாள். “உடனே நீங்கள் போய் கூட்டி வாறீங்களா... நான் போகட்டுமா? எல்லாம் என் தலைவிதி. நீங்கள் சொன்னதை நான் அப்பவே கேட்டிருந்தால், இப்படி வந்திருக்காது” என்று முனங்கினாள். அப்போது, செல்லம்மா எதிர்பாராத ஒன்று நடந்தது. பெருமாளின் கண்களில் நீர் முட்டியது. “என்னங்க இப்படி?” என்று செல்லம்மா அவர் கையைப் பிடித்ததும், அவரால் தாள முடியவில்லை. கேவிக் கேவி அழுதார். மனைவியின் கழுத்தில் முகம் புதைத்து, “என் பெண்ணுக்கா இந்த கதி... என் பெண்ணுக்கா” என்று அவர் புலம்பிய சத்தம் கேட்டு, குடித்தனக்காரர்கள் அங்கே கூடிவிட்டார்கள். சில்லறை விஷயங்களில் கவனம் செலுத்துவதைக் கவுரவக் குறைச்சலாகக் கருதும் ‘வீட்டுக்கார அம்மா’ கூட மேல்மாடி பால்கனியில் நின்று எட்டிப் பார்த்தாள். பிள்ளைகள் அங்கே “அப்பா, அப்பா” என்று சொல்லிக் கொண்டே கூடினார்கள். இதுவரை அழவைத்த அப்பா, இப்போது அழுவதைப் பார்த்ததும், ஏதோ பயங்கரமான ஒன்று நடந்திருக்கும் என்பதைப் பாவித்துக் கொண்டு பிள்ளைகள், ஆளுக்கொரு பக்கமாகப் புலம்பினார்கள். அதைரியப்பட்ட செல்லம்மாவே இப்போது அவருக்கு தைரியம் சொன்னாள். “என்னங்க சின்னப் பிள்ளை மாதிரி. நம்ம பொண்ணு நம்மகிட்ட வர்றதுக்கு சந்தோசப்படுறதை விட்டுப்புட்டு...” பெருமாள், அவள் குரலை மேலும் பலமாக அழுது தடுத்தார். பின்னர் கேவிக்கொண்டே, “நீயும் புரிஞ்சுக்காம இருக்கியேடி. விதம் ஒரு புடவை கட்டி, தினம் ஒரு வகை சாப்பாடு சாப்பிட்டு வாழ்ற என் ராஜகுமாரியால, இந்த வீட்டுக்குள்ள எப்படி இருக்க முடியும்? அய்யோ, அவள் இங்க வந்து கஷ்டப்படுவதை இந்தக் கண்ணால பார்க்கிறதை விட, நான் செத்துப் போகலாம்டி” என்று சொல்லிக் கொண்டே, அவர் அழுகையை நிறுத்திய போது, அத்தனைக் குடித்தனக்காரர்களும் வாயடைத்துப் போனார்கள். வீட்டுக்குள் அடிதடி நடத்தினாலும் வெளியே வருவது போவது தெரியாமல் சாதுவாக இருக்கும் பெருமாளின் அழுகை, எல்லோரையுமே ஒரு குலுக்குக் குலுக்கியது. ஒரு எழுபது வயது ஆயாதான், நிதானமாகப் பேசினாள்: “இன்னா பெருமாளு, அய்யோ இப்படியா அழுவுறது? உன் வீட்டுக்காரி செல்லம்மாக் கூடத்தான் ராசாத்தி மாதிரி வாழ்ந்தாள். இப்போ இருக்கறத சரிக்கட்டி பூறாளே... அதான் வாழ்க்கப்பா. உன்னோட மவளும் சரிப்பண்ணுவா. சீக்கிரமா போய் பொண்ணை கூட்டிவா நாய்னா. மனுஷனுக்கு மானந்தான் முக்கியம் நாய்னா. இஷ்டப்படி வசதி இருந்தாலும் இஷ்டப்படி வாழ முடியாதுன்னா, அது வாழ்வா நாய்னா? தூ! கூழ் குடிச்சாலும், சொந்தக் கூழக் குடிக்கோணும். சீக்கிரமா போய் கூட்டி வா நாய்னா.... அய்யோ... எய்ந்திரு... எய்ந்திரு...” பெருமாளுக்கு மூளை வேலை செய்யத் துவங்கியது. பெண்ணைப் போல் பெண்கள் மத்தியில் அழுததற்காக சற்று வெட்கப்பட்டு, விரக்தியாகச் சிரித்துக் கொண்டார். எழுந்து, துண்டை உதறிப் போட்டுக் கொண்டார். “இந்த நிலைமைக்குக் கொண்டு வந்த உன் அண்ணனை, என்ன பண்ணினாலும் தகும்டி” என்று மனைவியிடம் மீண்டும் பழைய முகத்தைக் காட்டிக் கொண்டு, ஆவேசமாகப் புறப்பட்டார். “கடவுளே! என் அண்ணனை இவரு ஏதாவது பண்ணிடப்படாதே”ன்னு செல்லம்மாள் கைகளை நெறித்துக் கொண்டாள். |