21

     மல்லிகா, ஒரு வாரம் நர்சிங் ஹோமிலேயே இருந்தாள். அப்பாவுக்கு, ஜூஸ் பிழிந்து கொடுத்தும், கால்களைப் பிடித்துவிட்டும், கைவிரல்களை நெட்டி முறித்தும் கவனித்துக் கொண்டாள். மாலை வேளையில், அப்பாவையும் அம்மாவையும் கூட்டிக் கொண்டு அருகே இருந்த பூங்காவிற்குப் போனாள்.

     சொக்கலிங்கம் தேறிக் கொண்டே வந்தார்.

     அந்த ஒரு வார காலத்தில், சரவணன், இரண்டு தடவை வந்தான். முதலில் வரும்போது, “இந்தா... நீ சொன்னது மாதுரியே... அப்பா டிராப்ட் போட்டிருக்கார். ஸ்டாம்ப் இருக்கிற இடத்தில் கையெழுத்துப் போட்டு வைத்துக்கோ...” என்றான். ‘நீங்க’வை, அவன் ‘நீ’யாக்கியதில் மல்லிகா, தானும் அவனும் ஒன்றானது போல, சிரித்தாள்.

     மேலும் ஓரிரு நாட்கள் விடைபெற்றன.

     வாழ்க்கையில் இருந்து விடைபெறாத அளவிற்கு நன்றாகத் தேறிய சொக்கலிங்கம், நர்சிங் ஹோமிலிருந்து விடைபெறும் நாள் வந்தது. செட்டியார் காரும், வந்து நின்றது.

     பார்வதி, மல்லிகாவிற்கு தலைவாரி, பின்னலிட்டாள். இரட்டைப் பின்னல். கண்ணுக்கு மையிட்டாள். தண்டையார்பேட்டையில் வாங்கிய, நைலக்ஸ் புடவையை கட்டாயப்படுத்தி, கட்டிக் கொள்ள வைத்தாள். மல்லிகாவிற்கு, தியாகராய நகர் வீட்டை நினைக்கவே ஆனந்தமாக இருந்தது. எப்போது போவோம் என்பது போல், அவசர அவசரமாக பிளாஸ்டிக் கூடையை எடுத்து வைத்தாள். அப்பாவின் சூட்கேசை தூக்கி டிரைவரிடம் கொடுத்தாள். ‘தியாகராய நகர் போனதும், ‘ஷவர் பாத்’தில் குளிக்க வேண்டும்! டன்லப் பில்லோ கட்டிலில் படுத்துப் புரள வேண்டும்! டி.வியைப் போட்டு, கிரிக்கெட் மேட்சைப் பார்க்க வேண்டும்! என்ன... இந்த அப்பா... இன்னுமா... டாக்டரிடம் பேசிக்கிட்டு இருக்கிறார்.

     பெருமாளும், மனைவி மக்களோடு வந்து விட்டார். பரமசிவம் பயல் மட்டும், மாமாவை சங்கடத்துடன் பார்த்தான். கால் மணி நேரத்தில், குடித்தனப் பெண்களும் வந்து விட்டார்கள். கந்தசாமியின் மனைவி, கண்ணீர் விட்டுக் கொண்டே வந்தாள். யாரது... அடடே... இட்லி ஆயாவா...

     மல்லிகா, இட்லி ஆயாவை, நைலக்ஸ் புடவையோடு போய் நின்று, அணைத்துக் கொண்டாள். ஆயா, அங்கே வந்து சொக்கலிங்கத்திடம், “இந்தப் பிள்ளையாண்டான் தான் சொக்கலிங்கமா... பெரியபாளையாத்தாகிட்டே... ஒரு வாட்டி போயிட்டு வா நாய்னா... உனக்கு ஒண்ணும் வராது” என்றாள்.

     பிறகு, மல்லிகாவின் காதோடு காதாக “நீ நல்லா இருப்பே குயந்தே... நீ... இங்கேயே இருக்கணுமுன்னு சொல்லத் தோணினாக்கூட... சொல்ல விரும்பல குயந்தே... ஏன்னா... நீ இருக்க வேண்டிய இடம் அதுதான் குயந்தே... ஆனால் அடிக்கடி வந்து, முகத்த காட்டிட்டுப் போ குயந்தே... எங்களை மறந்துடாதே குயந்தே... நீ மறக்க மாட்டே குயந்தே...”

     ‘இட்லி’ ஆயா, தன் பொட்டல் கண்களைத் துடைத்துக் கொண்டாள். தன் மடியில் கொண்டு வந்திருந்த ஒரு இட்லியை எடுத்து, மல்லிகாவின் வாயில் ஊட்டினாள். மல்லிகா, ஆயாவையே பார்த்தாள். கடந்த நாற்பது வருடமாய், பாசத்தைப் பார்த்திருக்க மாட்டாளோ...

     பெருமாள் சத்தம் போட்டார்.

     “ராகு காலம் வரப் போவுது. சீக்கிரம்... மல்லி... இன்னுமா பேசி முடிக்கலே. வண்டில ஏறும்மா...”

     காரில், சொக்கலிங்கம் ஏறிக் கொண்டார். பார்வதியும் ஏறிக் கொண்டாள். மல்லிகா போவதற்காக கார் கதவைப் பிடித்துக் கொண்டே, டிரைவர் நின்றார்.

     காருக்குள் போகப் போன மல்லிகா, ‘இட்லி’ ஆயாவைப் பார்த்தாள். கந்தசாமியின் மனைவியைப் பார்த்தாள். ‘பீடி சுத்தும்’ காமாட்சியைப் பார்த்தாள், சைக்கிள் ரிக்‌ஷாக்காரர் மனைவி மாரியம்மாளைப் பார்த்தாள். அங்கே இல்லாத ராக்கம்மாவைப் பார்த்தாள். இவர்களை விட்டுவிட்டுப் போகக்கூடாது... இவர்களை செல்வத்தில் தான் என்னால் புரள வைக்க முடியல... அவர்கள் வறுமையில் வாடும் போது, துணையாகவாவது நிற்கணும்... வீட்டுக்காரி மீண்டும் இட்லி ஆயாவை இம்சை செய்யப் பார்க்காள்னு மாரியம்மாள் சொன்னாள். இந்த ராக்கம்மா வேற கஷ்டத்துல இருக்காள்... இவர்கள் கொடுமைப்படுத்தப் படாமல் இருக்கணுமுன்னா, இவர்களை கொடுமைப்படுத்த முயன்றாலும் முடியாதுன்னு ஒரு எண்ணம் வரணும்... அந்த எண்ணத்தின் சின்னமாக... நான் இவர்களோடயே இருக்கணும்... பிறகு, ஒரு முடிவுக்கு வந்துவிட்டவள் போல், காரில் ஏறாமலே, குடித்தனப் பெண்களைப் பார்த்தாள். “அப்பா! நான் இவர்களோடேயே இருந்து விடுகிறேன்.”

     சொக்கலிங்கம் பதறினார்.

     “என்னம்மா சொல்றே... என்னம்மா சொல்றே?”

     “கவலைப்படாதிங்க அப்பா... நான் இனிமேல் உங்கள் பெண் தான். அடுத்த ஜென்மமுன்னு இருந்து, நினைக்கிறது நிறைவேறும் என்றால் நான் உங்கள் பெண் தான். இங்கே... நான் இருக்க வேண்டிய கட்டாயம். இதனால... அங்கே வராமல் போகமாட்டேன். காலையில், இங்கேன்னால், சாயங்காலம் அங்கே. ஒரு நாளைக்கு தியாகராயநகர், இன்னொரு நாளைக்கு வண்ணாரப் பேட்டை... பரமசிவம்... கார்ல ஏறுடா...”

     பார்வதி, கண்ணீரும் கம்பலையுமாகப் புலம்பினாள்.

     “என்னம்மா இது... இன்னுமா யோசிக்கிற... நான் பழைய பார்வதி இல்ல... அதோட உன்னை வளர்த்தவடி. மடியில் போட்டுத் தாலாட்டியவள்... தோளில் தூக்கிக் கொஞ்சுனவள்... இதை விட... நீயே... என்னைக் கொன்னுடுடி...”

     “சத்தியமாய்... சொல்றேன், நீங்கள் தான் என்னோட அம்மா... நீங்கள் சம்மதிக்காத எந்த விஷயத்திலேயும் ஈடுபட மாட்டேன். அது கல்யாணமாய் இருந்தாலுஞ் சரி...” என்றாள் மல்லிகா.

     சொக்கலிங்கம் மல்லிகாவின் முகத்தைப் பார்த்த போது, அவள், அவரிடம் “இந்தாங்கப்பா... சொத்துல எனக்கு உரிமை கிடையாதுன்னு... நான் எழுதியிருக்கிற பத்திரம்...” என்று சொல்லி, சரவணன் கொடுத்திருந்த காகிதத்தை நீட்டினாள்.

     சொக்கலிங்கம், அதைப் பிரித்துப் படிக்கப் போன போது பார்வதி, அதைப் பிடுங்கி, சுக்குநூறாகக் கிழித்துப் போட்டுவிட்டு, “உன் மனசில் என்னடி நெனச்சிக் கிட்டே... பல்லு உடைஞ்சிடும்” என்றாள் அழுது கொண்டே...

     மல்லிகா மன்றாடினாள்.

     “என்னை மன்னிச்சிடுங்க அம்மா... நான் செய்தது முட்டாள் தனந்தான். எனக்கு உங்கள் மேலதான் ஆசையே தவிர... மற்றதுல ஆசையில்லை என்கிறதை காட்டுவதற்காக எழுதினேன். தப்புன்னா மன்னிச்சிடுங்கள். இல்லன்னா, உங்கள் மகளை நல்லா அடியுங்கள்... இந்தாங்க கன்னம்...”

     மல்லிகா, முதுகைக் குனிந்து, முகத்தைக் காட்டிய போது, பார்வதி அதில் முத்தமிட்டாள். மல்லிகா, சமரசம் செய்தாள்.

     “சரிம்மா, நீங்கள் இப்போ புறப்படுங்கள். நான் காலையில் அங்கே வந்துட்டு... சாயங்காலம் இங்கே வந்துடுறேன்...”

     கார் புறப்பட்டது. செல்லம்மா ஏறிக் கொண்டாள். பெருமாள், “தங்கசாலை வரைக்கு வாரேன். பள்ளிப்பட்டுல கோணி கிடக்குது” என்று சொல்லிக் கொண்டே முன்னிருக்கையில் ஒட்டிக் கொண்டார்.

     கார் போய்விட்டது.

     மல்லிகா, ‘இட்லி’ ஆயாவை தன் பக்கமாய் சேர்த்துப் பிடித்துக் கொண்டே, இதர குடித்தன்ப் பெண்களுடன் சேர்ந்து இணைந்து, பிணைந்து நடந்தாள்.

(முற்றும்)