6

     நாலு மாதம் கடந்தது.

     பார்வதி பழைய பார்வதியாக இல்லாதது மல்லிகாவிற்கு தெளிவாகத் தெரிந்துவிட்டது. அடிக்கடி அரவை மில்லில் வேலை பார்க்கும் பையன்களைத் திட்டும் சாக்கில் “ஊர்ப்பயல் பிள்ளைகள் ஊர்ப்பயல் பிள்ளைகள்தான்” என்று ஜாடைமாடையாகத் திட்டத் துவங்கினாள்.

     இப்போது மல்லிகாவிற்கு தலைவாரி விடுவதில்லை. கண்ணுக்கு மை போடுவதில்லை. அதே சமயம் எதுவுமே நடவாதது மாதிரியும் பல சமயங்களில் மல்லிகாவிடம் நடந்து கொள்கிறாள். ஒரு தடவை ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏறும் போது மல்லிகா கால் தவறி கீழே விழப்போன போது பார்வதி பதறிப்போய் “பார்த்துப் போம்மா. நீ வர்றது வரைக்கும் உயிரைக் கையில் பிடித்துக்கிட்டு இருக்க வேண்டியதிருக்கு” என்று சொல்லியிருக்கிறாள். அதனால் அம்மா, பழைய அம்மாவாக மாறிவிட்டாள் என்று மகிழ்ந்து போன மல்லிகா, மாலையில் துள்ளிக் குதித்து ஓடி வந்து ‘அம்மா’ என்ற போது, அண்ணனுடன் சீரியஸாகப் பேசிக் கொண்டிருந்த அந்த அம்மாக்காரி “அம்மா இன்னும் சாவாமல் தான் இருக்கேன்” என்று சொன்னாள்.

     உடனே மல்லிகா, ‘நாம சாவாமல் இருக்கோமோ’ என்று மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டாள். அண்ணன் ராமசாமியின் வருகை அதிகரிக்க அதிகரிக்க, அம்மாக்காரியின் வெறுப்பின் வேகம் ஏறிக் கொண்டிருப்பது கல்லூரிக்காரிக்குத் தெரியாது.

     ராமனும் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான்.

     “உன் சித்திக்காரியை கெட்டியாய் பிடித்துக்கடா... அவ்வளவுதான் நான் இப்போ சொல்ல முடியும்” என்று பெரிய மாமா ராமசாமி சொன்னதன் உள்ளர்த்தம் புரியாவிட்டாலும், வெளியர்த்தம் புரிந்தவன் போல், சித்தி வீட்டுக்கு வரத் துவங்கினான்.

     “இங்கே எதுக்குடா வந்தே” என்று கேட்கிற சித்தி, “ஏண்டா, அடிக்கடி வரமாட்டேங்கிற” என்று சொன்னதில் அவனுக்கு பட்டைச் சாராயத்தைக் குடிக்கும் போது ஏற்பட்ட ‘கிக்’கை விட அதிகமான ‘கிக்’ கிடைத்தது. சொக்கலிங்கம் தான் அவன் வருகையை அறவே அங்கீகரிக்கவில்லை. ஆனால், அவன் “சித்தப்பா, சித்தப்பா” என்று செல்லமாகச் சொல்லிக் கொண்டே, அவர் கொண்டு வரும் டிரம்களையும், தகர டப்பாக்களையும் எடுத்து வீட்டுக்குள் வைத்த போது, சொக்கலிங்கம் அவனை விரும்பவில்லையானாலும், வெறுக்காமல் இருந்தார்.

     ஒரு சமயம் அவர் அரவை மில்லில் ஏதோ கலாட்டா. மிளகாயை சரியாக அரைக்கவில்லை என்று ஒரு பட்டாக் கத்தி மைனர் சொக்கலிங்கத்தை மிரட்டினான். பயந்து போன சொக்கலிங்கம், அவனிடம் வாங்கிய காசைத் திருப்பிக் கொடுத்தார்.

     பட்டாக்கத்திக்கு மேலும் காசு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. “என்னோட மிளகாயை கஸ்மாலமா பண்ணிட்டே. அதுக்கு ‘மாலு’ வெட்டுறியா... இல்லே மவனே... குடல உருவட்டுமா... நம்ம கிட்டயா டபாய்க்கிற நய்னா...” என்று சொன்னது, சொக்கலிங்கத்திற்கு அதிக பட்சமாகத்தான் தெரிந்தது. “செய்யுறதைச் செய்டா” என்றார். அவனும் செய்ய வேண்டியதைச் செய்தான். அவரது சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டு, “இன்னாய்யா சொன்னே... விட்டேன்னா ஒரு குத்து” என்று, எச்சில் துளிகளில் சாராயத் துளிகள் தெறிக்கும்படி கத்தியபோது, எதேச்சையாக அந்தப் பக்கமாக வந்த ராமன், விட்டான் ஒரு குத்து. பட்டாக்கத்தி சுருண்டு விழுந்தான். விழுந்தவன் எழுந்திருக்கும் முன்னால் விட்டான் ஒரு உதை. பட்டாக் கத்தி படுத்துக் கொண்டே, “விட்டுடு வாத்தியாரே... இவரு... உன்னோட தோஸ்துன்னு தெரியாமப் பூட்டு... அப்பா விட்டுடு... அம்மா விட்டுடு” என்று புரண்டு கொண்டே புலம்பினான்.

     “அவரு என்னோட தோஸ்து இல்லடா... சொந்தமான சின்ன நய்னாடா... அவருகிட்ட மன்னுப்புக் கேள்டா கயிதே...” என்று ராமன் கழுதை மாதிரி கனைத்து, ஆள்காட்டி விரலால், சித்தப்பாவைச் சுட்டிக் காட்டிய போது, அந்த ‘கயிதே’யும் சொக்கலிங்கத்தின் கையிலும், காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்டுவிட்டு, திரும்பிப் பாராமல் ஓடியது.

     சொக்கலிங்கத்திற்குப் பெருமை பிடிபடவில்லை. அந்தத் தெருவுக்கே எஜமானனாகவும், திண்ணைப் பொறுக்கியாகவும் வாழும் ஆனானப்பட்ட பட்டாக்கத்தியையே, இந்த ராமன் அடக்கி விட்டான் என்றால், இவன் சாதாரண ராமன் அல்ல. ரவுடி ராமன். இவன் நமக்கு எப்போதும் தேவை!

     அந்த நன்றிப் பெருக்கில், அவனுக்கு தன் வீட்டுக்குள் சகல உரிமைகளையும் கொடுத்தார், சொக்கலிங்கம்.

     இதை பெரியண்ணன் மூலம் புரிய வைக்கப்பட்ட பார்வதி ஒருநாள், மல்லிகாவைப் பார்த்து “ராமன்கிட்ட ஏம்மா சிடுசிடுன்னு பேசுற. கொஞ்சம் சிரித்துத்தான் பேசேன். நீன்னா அவனுக்கு உயிரு” என்று பட்டும் படாமலும் பேசினாள்.

     அம்மாவின் அபிலாஷை புரியாத மல்லிகா, “இவருகிட்ட சிரித்துப் பேசுறவள், யாருகிட்டயும் சிரித்துப் பேசுறவளாத்தான் இருப்பாள். இதுவும் இது மூஞ்சும். அப்பா சொன்னது மாதிரி சரியான ஓணான் மூஞ்சு” என்று எரிச்சலோடு சொன்ன போது, பார்வதிக்கு படு எரிச்சலாக இருந்தது. அண்ணன் வந்ததும் வராததுமாக “நான் பூடகமாய்ப் பேசிப் பார்த்தேன். இவள், சம்மதிக்க மாட்டாள் போலிருக்கே” என்ற போது, ராமசாமி, ஒரு வில்லன் சிரிப்பை உதிர்த்துக் கொண்டார்.

     “பாரு... பக்குவமாகச் சொல்லிப் பாரு. மாட்டேன்னுட்டாள்னா, கழுதையை வீட்டை விட்டுத் துரத்து...”

     “அது எப்படியண்ணா...”

     “சில சமயம்... ஆபரேஷன் செய்யணுமுன்னா செய்துதான் ஆகணும். ராமனைக் கட்டிக்க சம்மதிக்கலன்னா, அவள் இங்க இருக்கிறதுல அர்த்தமில்லை... இது உன்னோட சொந்த விஷயம். கேட்டாக் கேளு... விட்டால் விடு. ஆனால் ஒண்ணு அப்புறமாய், பெருமாள் திட்டுறான்... மல்லிகா புருஷன் அடிக்கடி வாரான்னு எங்கிட்ட வரப்படாது சொல்லிட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் முடிவு தெரியணும். இல்லை என்றால், என் ரெண்டாவது மகள் இருக்கவே இருக்காள்...”

     “ஏண்ணா கோபப்படுறீங்க... நான் பெண். எனக்கு என்ன தெரியும்? உங்ககிட்ட யோசனைதானே கேட்டேன்.”

     “அதைத்தான் சொல்றேன். மல்லிகா, இந்த வீட்ல இருக்கிறதாய் இருந்தால், நம் ராமன் பயலோட இருக்கணும். இல்லை என்றால், எங்கேயும் போகட்டும். நீ, ராமனையே சுவீகாரமாய் எடுத்துக்கலாம். என் ரெண்டாவது பொண்ணு, உனக்கே மருமகளாய் வந்துடலாம். நீ கண் மூடுறது வரைக்கும், கண் கலங்காமல் பார்த்துக்குவாங்க...”

     சிறிது திடுக்கிட்ட பார்வதிக்கு, மல்லிகாவை என்ன தான் வெறுத்தாலும் அவளை வீட்டை விட்டு வெளியேற்றுவது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதே சமயம், அண்ணன் சொன்னதுக்கு மறுமொழி கூறத் தெரியாமல், லேசாகச் சிரித்துக் கொண்டாள். சோகச் சிரிப்பு.

     பார்வதி அண்ணன் போய்விட்டார் என்பதை, அரவை மில் பையன் ஒருவனை அனுப்பி நிச்சயப்படுத்திக் கொண்ட சொக்கலிங்கம் உள்ளே வந்தார்.

     அந்தச் சமயத்தில், மல்லிகாவும், கல்லூரியில் இருந்து வந்தாள். வந்தவுடனேயே அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டே, “அப்பா... சபையர் தியேட்டரில் ஒரு நல்ல ஆங்கிலப் படம் வந்திருக்கு... என்னை கூட்டிக் கொண்டு காட்டுங்களேன்” என்று செல்லமாகச் சிணுங்கினாள்.

     “நாளைக்குப் போகலாண்டா” என்று தனக்கு அவள் ஆண்பிள்ளை என்பதுபோல் சொக்கலிங்கம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

     பார்வதிக்குப் பற்றி எரிந்தது. காக்கா பிடிக்கிறாளோ... அப்பாவைக் கைக்குள் போட்டுக்கிட்டு, ராமனை காட்டமாட்டேன்னு சொல்லிவிடுவாளோ... கடைசியில், அந்த குடிகாரன் பெருமாள்கிட்ட அவஸ்தைப் பட வேண்டியதிருக்குமோ... இதுக்கெல்லாம் யார் காரணம்... இவள் தான்... இவளே தான்...

     கணவன், காது கேட்காத தூரத்திற்குப் போய்விட்டார் என்பதை, வாசலுக்குப் போய் எட்டிப் பார்த்து உறுதி செய்து கொண்ட பார்வதி, அங்கிருந்தபடியே, “பொம்புளன்னா... ஒரு அடக்கம் வேணும். இங்கிலீஷ் படம் பார்க்கப் போறாளாம்... எல்லாம் அவர் கொடுக்கிற செல்லம். கொடுப்பாரக் கண்டால், பேய் கூட குழைந்து குழைந்து ஆடுமாம்” என்று தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே சமையலறையைப் பார்த்துப் போனாள். இப்படிப் பேசினாலும், மல்லிகாவிற்கு டிபன் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதை விரும்பாதவள் போல நடந்து கொண்டாள்.

     இப்படி, பாசத்தைக் கொட்டிக் கொண்டே, தன்னையும் ‘கொட்டுவதை’ உணர்ந்த மல்லிகாவால், அவளை, அம்மா இல்லை என்று உதறவும் முடியவில்லை, அம்மா தான் என்று ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. தனக்குள்ளேயே, சமாதானம் செய்து கொண்டாள். ‘ஒவ்வொரு பொண்ணுங்களை அவங்க அம்மாக்கள் எப்படித் திட்டுறாங்க... சில சமயம் அடிக்கக் கூடச் செய்றாங்களே... இந்த அம்மா அப்படி இல்ல. நான் ஆங்கிலப் படம் பார்த்து, ஆங்கிலக்காரியா மாறிடக் கூடாதுன்னு, நிஜமாகவே பயப்படுறாங்க... இதுல தப்பில்ல...’

     என்றாலும், மல்லிகா அந்நியப்பட்டவள் போல் உணர்ந்தாள். அப்பாவிடம் கூட, அவளால் முன்பு பழகியது மாதிரி பழக முடியவில்லை. அவரிடம் பேசும் போதெல்லாம், அம்மாக்காரி, கண்களை உருட்டுவது போல் அவளுக்குத் தோன்றியது.