உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
11 விடிய விடியத் தூங்காமல், கொட்டக் கொட்ட விழித்ததால் மல்லிகாவின் கண்கள் கரித்தன. லேசாகத் தலை சுற்றியது. ஒன்பது மணி வரை பித்துப் பிடித்தவள் போல் உட்கார்ந்திருந்தாள். அன்று கல்லூரி விடுமுறையாதலால் அப்பா கண்டுக்கவில்லை. அம்மா, மணப்பெண்ணை திட்ட விரும்பவில்லை. குளியலறைக்குப் போய், ஷவரை திறந்து விட்டாள். சாரல் மழை போல், கம்பி மத்தாப்பு போல் விழுந்த நீர்க் கற்றைகள் முடிக் கற்றையோடு மோதி, முதுகு வழியாக இறங்கிய போது அவளுக்கு ஓரளவு இதமாக இருந்தது. அதே சமயம் ராமன், சரவணன் இரண்டு அம்மாக்கள், இரண்டு அப்பாக்கள் மாறி மாறி வந்து போனார்கள். தெருப்பொறுக்கியாக வாழும் ராமனை அவளால் கட்டிக்க முடியாது. அப்படி கட்டாமல் அந்த வீட்டில் அவளால் இருக்கவும் முடியாது. இருந்தாலும் முகமறியாப் பருவத்திலேயே பார்த்துப் பழகிய, இந்த அப்பாவையும் அம்மாவையும் விட்டு விட்டு அவளால் பிரிந்திருக்க முடியாது. மல்லிகா சிந்தித்து சிந்தித்து சிந்தனையே இல்லாமல் போனாள். இந்த ராமன் இல்லாமலே இந்த அம்மாவுடனும் இந்த அப்பாவுடனும் வாழணும். எப்படி? எப்படி? அவள் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்து விட்டாள். ராமனைக் கட்டிக்க முடியாது என்று அப்பாவிடமும் அம்மாவிடமும் சொல்ல வேண்டும். குளித்து விட்டு, பீரோவில் இருந்த புதுப் புடவையைக் கட்டாமல் உடுத்திய புடவையையே கட்டிக் கொண்டு சமையல் அறைக்குள் நின்ற பார்வதியின் பக்கம் வந்தாள். “அம்மா” என்றாள் குழைந்தும் இழைந்தும். பார்வதி, அவளை வினா நெற்றியோடு பார்த்த போது, மல்லிகா தயங்கி மயங்கி, தத்திக் கொண்டே பேசினாள்: “எனக்கு ராமன் வேண்டாம்மா... வேண்டாம்மா...” மல்லிகாவால், மேற்கொண்டு பேச முடியவில்லை. அம்மாவின் மார்பில் தலை வைக்கப் போனாள். அதற்குள் அவள் முகம் போன போக்கிற்கும், சிவந்த கண்களுக்கும் பயந்து போய் சுவரில் முகம் புதைத்து அழுதாள். நடித்துப் பழகிய பெரிய அண்ணனின் சகவாச தோசத்தால், மல்லிகாவின் அழுகையையும் ஒரு நடிப்பாகக் கருதி ஒரு நடிப்புக்காகக் கூட ஆறுதலாகப் பேசாமல், பார்வதி பொறிந்தாள். “நீ எதுக்கு அழுவுறேன்னு எனக்குத் தெரியும். எவனோ ஒரு கஸ்மாலத்துக்கிட்ட (இது ராமன் கடன் கொடுத்த வார்த்தை) ரோட்டுல தளுக்கிப் பேசிக்கிட்டு நின்றதை ராமன் சொன்னான். ரோட்டுல காதல்... வீட்டுல... இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிறது மாதிரி நடிக்கிறியாக்கும். எல்லாம் அவரு கொடுத்த இளக்காரம்.” மல்லிகாவிற்கும், லேசாகக் கோபம் வந்தது. “எதுக்கும்மா வீண் பேச்சு. ராமனை என்னால் கட்டிக்க முடியாது. அவ்வளவுதான்.” “எதிர்த்துப் பேசுகிற அளவுக்கு வந்திட்டியா? எதிர்த்தாப் பேசுறே? இந்த வீட்டுல இருக்கணுமுன்னா ராமனைக் கட்டியாகணும். இல்லைன்னா... மரியாதையாய் உன் அப்பன்வீட்டைப் பார்த்துப் போ...” மல்லிகா பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் நின்றாள். அதே சமயம் அப்பாவிடம் வாதாடி, வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடும் இருந்தாள். எது நடந்தாலும் அம்மாவை விட்டு அவளால் பிரிந்திருக்க முடியாது. ‘அப்பாவைப்’ பார்க்காமல் இருக்கவும் முடியாது. அதோடு அவளால் ‘அந்த ஆள்’ வீட்டிற்குப் போய் இருக்கவும் முடியாது. பார்வதி பேசினால் பேசிக் கொண்டே போகிறவள். அதுவும் ‘எதிரி’ பேச்சை நிறுத்தி விட்டால், எகிறிப் பேசக் கூடியவள். பேசினாள். “வாயைத் திறந்து சொல்லுடி. ராமனைக் கட்டிக்க முடியுமா? முடியாதா? ஏண்டி பேச மாட்டேங்கிறே? நீதான் சரியான கள்ளியாச்சே... உன் அம்மாவுக்கு இருக்கிற திமிரு உனக்கில்லாம போகுமா? போகுமான்னேன்? சரியான நரிக்குறத்தியாச்சே உன் அம்மா.” மல்லிகாவால் பேசாமல் இருக்க முடியவில்லை. “உன் நாத்தனாரை அப்படிப் பேசாதம்மா.” “என்னடி, இன்னுமாடி எதிர்த்துப் பேசறே? உன் அம்மாவைப் பேசினால் ரோஷம் வருதோ? அந்த மேனா மினுக்கியை பேசினால், கோபம் வருதோ? எச்சி இலைக்காரிக்குப் பிறந்தவளுக்கு எச்சிக்கலை புத்திதானே இருக்கும்?” மல்லிகா கண்களை உருட்டிக் கொண்டே பார்வதியைப் பார்த்தாள். ஏதோ ஒரு உண்மை அவளுக்குத் தட்டுப்பட்டது. இவள் அம்மா இல்லை. ஆயிரம் தான் எடுத்து வளர்த்திருந்தாலும், இவள் அம்மாவாக மாட்டாள்... அம்மாவாக மாட்டாள். “என்னையாடி மொறைக்கிறே? உன் அம்மா புத்தி போகுமா?” “எங்க அம்மாவை அப்படிப் பேசாதீங்க, அத்தை.” பார்வதி உச்சி முதல் உள்ளங்கால் வரை அதிர்ந்து போனாள். இதுவரை அவள் கேட்டறியாத வார்த்தை. இதுவரை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தும் சொல்ல மறுத்த வார்த்தை; ஒரே வார்த்தையில், எத்தனை விஷயங்களைக் கொட்டி விட்டாள்? அவளுக்கே தன்னை அவள், அம்மா என்று சொல்லாமல் போனதில் ஒரு ஆத்திரம். வளர்த்த பாசம் குலுக்கிய ஆத்திரம். அந்த ஆத்திரத்தை அவள் வார்த்தைகளாக்க நினைத்த போது, அருகாமையிலேயே ஒரு குரல் கம்பீரமாக ஒலித்தது. “மல்லிகா... சைக்கிள் ரிக்ஷா கொண்டு வந்திருக்கேன். வாம்மா நம்ம வீட்டுக்குப் போகலாம்.” பெருமாள், மீசை துடிக்க நின்றார். மல்லிகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘அந்த ஆளைப்’ பார்த்தாள். அவர், தன் கண்களைத் துடைத்துக் கொள்வதைக் கண்டாள். அவர் கைகால்கள் தாமாக ஆடுவதை, அவள் உணர்ந்தாள். ஏதோ ஒரு உணர்வு உந்த, மெள்ள, மிக மெள்ள, அவரை நோக்கி நடந்தாள். மெள்ள நடந்த மகளை, அவர் வேகமாகப் போய் அணைத்துக் கொண்டார். பிறகு ஒரு குழந்தை போல் கேவிக் கேவி அழுதார். பிறகு தன் அழுக்காடை பட்டு, மகளின் மேனி மாசுபடக் கூடாது என்று நினைத்தவர் போல் சற்றே விலகிக் கொண்டு, அவள் இரு கரங்களை மட்டும் பற்றிக் கொண்டு, “வாம்மா போகலாம். உனக்கு எந்தக் குறை வச்சாலும், இந்தப் பாவி... அன்பில் மட்டும் குறை வைக்க மாட்டேன்” என்று சொல்லிக் கொண்டு, அவர் நடக்க, மல்லிகா, அம்மாவை மலங்க மலங்கப் பார்த்துக் கொண்டே நடந்தாள். அவள் மடியில் புரண்டு அழவேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. தன்னை வளர்த்தவளைக் கட்டிக் கதற வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. என்றாலும் தந்தையின் பின்னால் நடந்தாள். ஒரு கையில் போட்டிருந்த தங்க வளையலையும், கழுத்தில் தொங்கிய செயினையும் கழற்றி, ஊஞ்சல் பலகையில் போட்டுவிட்டு நடந்தாள். ராமனுக்காக நடந்தாள். சரவணனுக்காக நடந்தாள். வளர்த்த அப்பா வரட்டும் என்று காத்திருக்கும் உணர்வில்லாமலே நடந்தாள். இதற்குள், வெளியே இருந்து வந்த ராமனுக்கு, முதலில் விஷயம் புரியவில்லை. பேயடித்தவள் போல் நின்று கொண்டிருந்த சித்தியும், கலங்கியவாறே போகும் மல்லிகாவையும் பார்த்ததும், அவனுக்கு விஷயம் புரிந்து விட்டது. பெருமாளை மேலும் கீழுமாகப் பார்த்தான். ஆசாமியை அடித்து விடலாம்... “யோவ்... இன்னாதான்யா உன் மனசிலே நெனைப்பு? இது உன் பொண்ணாகவே இருக்கட்டும். அதுக்கினு ஒரு ‘கொல்கை’ இல்லையா? சின்ன நய்னா இல்லாத சமயத்துல, வூட்டுக்குள்ளே பூந்து, கலாட்டா பண்ணிட்டு ஒரு பொண்ண கடத்திக்கினு போனால், இன்னாய்யா அர்த்தம்? யோவ், அவள விடுறியா இல்ல செமத்தையா வாணுமா?” பெருமாள், சற்று நின்று அவனை முறைத்தார். மல்லிகா, அப்பாவின் முதுகுப் பக்கம் பதுங்கிக் கொண்டாள். அவனை கால்கள் இரண்டையும் சேர்த்துப் பிடித்து, தலை கீழாகத் தூக்கி நெற்கதிரை அடிப்பது போல் அடிக்கலாமா என்று கூட நினைத்தார். இருந்தாலும், மகள் கணக்கில் தானும் ஒரு ரவுடி என்பது தெரியக்கூடாது என்பது போல், “உனது வேலையைப் பார்த்துக்கிட்டுப் போய்யா...” என்று கத்திவிட்டு, அப்படி, படித்த மகளுக்கு எதிராகக் கத்தியிருக்கக் கூடாது என்பது போல் லேசாக வெட்கப்பட்டுக் கொண்டே நடந்தார். ராமனுக்கு அவர் ‘வீக்’காக பதில் கொடுத்தது, பலத்தைக் கொடுத்தது. “யோவ், கஸ்மாலம், மல்லிகாவை விடுறியா, இல்ல வயித்தக் கீறட்டுமா?” என்று சொல்லிக் கொண்டு அவரை நெருங்கிய போது, வெளியே நின்ற சைக்கிள் ரிக்ஷாக்காரர் உள்ளே வந்தார். அவரும் மேனியெங்கும் ‘பச்சை’க்காரர். ராமனை நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டே, “ஏண்டா... சோமாறி... சின்ன மனுஷன் பெரிய மனுஷன் வித்தியாசம் வாண்டாம்? அவரோட பொண்ணை அவரு கூட்டிக்கினு போனா, உனக்கென்னடா கயிதே. இன்னொரு வாட்டி அவரைத் திட்டு பார்க்கலாம். மவனே, நெஞ்சில் கீறி, மஞ்சாச் சோத்தை வெளில புட்டுப் பூட்றேன்” என்று கர்ச்சித்த போது, “படா கில்லாடிங்க தாய்யா... பிளான்ல வந்திருக்கீங்கோ” என்று கூறிவிட்டு, ராமன் ‘சைட்’ வாங்கிய போது பெருமாளும், மல்லிகாவும், ரிக்ஷாவிற்கு அருகே வந்து விட்டார்கள். “ஏறும்மா” என்றார் அவர். மல்லிகா வீட்டுக்குள் திரும்பிப் பார்த்தாள். உள்ளே ஊடுருவிப் பார்த்தாள். வாசல் படிக்கட்டில் பார்வதி திபிரமையுடன், பின் தலையில் இரண்டு கைகளையும் பின்னி, விழி ஆடாமல், வெறித்த பார்வை மாறாமல், பைத்தியக்காரி போல் நின்றதைப் பார்த்த மல்லிகாவால் தாள முடியவில்லை. “அம்மா... அம்மா...” என்று கேவிக் கொண்டே அழுதாள். அந்த அழுகையைப் பார்த்ததும், பார்வதியும், நெருங்கி வந்து நின்று கொண்டு அவளைப் பார்த்தாள். ‘வந்திடும்மா, வந்திடும்மா’ என்று இதயம் வாய்க்கு ஆணையிட, மூளை அதற்குத் தாளிட்டது. ஆனால் கண்கள் மட்டும் யாருடைய ஆணைக்கும் கட்டுப்பட விரும்பாதது போல், நீரைக் கொட்டின. எப்படி இருந்த மகள், எப்படியெல்லாம் இருக்கப் போகிறாளோ என்று கடந்த காலமும் எதிர்காலமும் நிதர்சனமான நிகழ்காலத்தில் சந்திக்க, பெருமாள், மகளை கைத்தாங்கலாக ரிக்ஷாவில் அமர்த்தி விட்டு, “நீ ஏம்மா அழுவுறே? உன்னை இந்த கதிக்கு விட்டவங்களை, நான் சும்மா விடப் போறதில்லை. மளிகைக்கடையும் அரிசி மாவு மில்லும் உன் பேர்ல தான் இருக்கு! வழக்குப் போட்டு வாங்குறேனா இல்லியான்னு பாரு” என்று சபதம் போட்டு விட்டு, ரிக்ஷாவில் ஏறினார். ரிக்ஷாக்காரர் பெடலை மிதிக்கப் போனார். மல்லிகா, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “நீங்கள் அப்பா மேல வழக்குப் போடுறதா இருந்தால் நான் உங்களோடு வரமாட்டேன் வரமாட்டேன்” என்று குழந்தை போல் விம்மினாள். பெருமாள், தன் மகளை பெருமையோடு பார்த்து விட்டு, அவள் முதுகில் தட்டினார். பிறகு “பிச்சைக்காரப் பயலுவ காசு, நமக்கெதுக்கும்மா” என்று சொன்னார். அதற்கு அவள், “அப்பாவை அப்படியெல்லாம் திட்டப்படாது” என்று கலங்கியவாறே சொன்ன போது, பெருமாள் குழந்தையானார். குலுங்கி அழுதார். “இன்னாய்யா... நீ குயந்த மாதிரி, அழலாமா? சரியான ஆளய்யா?” என்று சொல்லிக் கொண்டே, ரிக்ஷாக்காரரும் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். ரிக்ஷா நகர்ந்தது. பதினாறு ஆண்டு காலமாக அவள் பார்த்து உணர்ந்து உய்த்த இடத்தைவிட்டு நகர்ந்தது. ரிக்ஷா சக்கரங்கள் சுழலச் சுழல, பார்வதியின் தலையும் அதே வேகத்தில் சுழன்றது. |