3

     வடசென்னையில், ‘வண்ணாரப்பேட்டை’ என்று வாயாலும், ‘வண்ணையம்பதி’ என்று எழுத்தாலும் அழைக்கப்படும் பகுதி; அதில் நெருக்கமான வீடுகள் கொண்ட ஒரு சுருக்கமான தெரு. அந்தத் தெருவை, கிராமத்துப் பாணியில் சொல்வது என்றால், ‘முக்கடி முடங்கடி’ என்று சொல்லலாம். சென்னைத் ‘தமிழில்’ சொல்வது என்றால் ‘முட்டுச் சந்து’. உள்ளே போகிற காரும் வண்டிகளும் நேராக, அந்தத் தெருவின் இரண்டு பக்கத்தையும், குறுக்காக அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு வீட்டில் போய்த்தான் முட்டவேண்டும். அந்த வீட்டை முட்டாமல் வண்டிகள் திரும்பவும் முடியாது. இந்த இலட்சணத்தில், அங்கே, ஒரு லாரியும், இரண்டு மூன்று ‘டிரக்’ வண்டிகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

     முகவரி தெரியாமல், மெயின் ரோட்டில் இருந்து வருபவர்களை, இங்கே கொண்டு வந்து, “இந்தா, முட்டு”, என்பது மாதிரி, செயலற்றதாக்கும் வல்லமை, இந்தத் தெருவுக்கு உண்டு. இந்தப் பகுதி மக்களுக்கும் உண்டு. “செல்லும் செல்லாததுக்கு செட்டியார்” என்பது போல் முகவரியில் உள்ள தெருவின் விவரம் தெரியாமலும், அதே சமயம் விவரம் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் மனப்பான்மையுடனும், கேட்பவரிடம், “லெப்ட்ல கட்பண்ணி... ரைட்ல திரும்பி... அப்புறம் ‘சீரா’ போய்... ரைட்ல திரும்பி...” என்று சொல்பவர் சொன்னதும், அப்படிக் கேட்டுத் தொலைத்தவர்கள், இறுதியில் இங்கே வந்து தங்களைத் தாங்களே தொலைத்தவர்கள் போல், தடுமாறியது உண்டு.

     என்றாலும், எப்போதும் கலகலப்புக்குப் பெயர் போன அந்த அதாவது, அந்த முனுசாமித் தோட்டத்தின் மூன்றாவது சந்து, இப்போது கலகலப்பான கலகலப்புடன் காட்சியளித்தது. குறுக்கே மறித்து நின்ற அந்த வீட்டின் வாசலில், மாவிலைத் தோரணம் கட்டப்பட்டு இருந்தது. (வாழை விலை அதிகம். வாங்கி கட்டப்படவில்லை) ஒலிபெருக்கியில், “ஓரம் போ... ஓரம் போ” என்று பாடல் ஒலித்தது. எந்த ஓரத்திலும் இடம் இல்லாத அளவுக்கு, அளவுக்கு மீறிய மக்கள் நெரிசல். மணமகளின் தந்தையும் சொக்கலிங்கத்தின் தங்கை கணவனுமான பெருமாளும், எதைச் சம்பாதிக்கவில்லையானாலும், நண்பர்களை சம்பாதித்து, தானும், அவர்களின் சம்பாதனைக்கு உட்பட்டவர் போல் தோன்றியது.

     மணமேடையில் மணமக்கள், ஒருவரை ஒருவர் ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டார்கள். சுற்றி நின்றவர்கள், ஏதாவது சத்தங்கேட்டு, வேறு பக்கமாகத் திரும்பும் போதெல்லாம், இவர்கள், தைரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மணமகன் பேசக் கூடப் போனான். மணமேடைக்கு முன்னால், இவர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்ப்பதற்காகவே, சினிமாவை ‘தியாகம்’ செய்து விட்டு அங்கே, முட்டிக்கால் போட்டு அமர்ந்திருந்த ‘ரெண்டாங்கெட்டான்’ வயதுப் பயல்கள் சிரித்துக் கொண்டார்கள்.

     கெட்டிமேளம் முழங்கியது. ஒரு தாம்பாளத் தட்டில் வெற்றிலை, தேங்காய் வகையறாக்களுக்கு மேலே இருந்த தாலியை, கூட்டத்திற்கு இடையே கொண்டு போய் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றுவிட்டு, மணமேடைக்குப் போய், தாலியை, பெருமாள், மணமகனுக்குக் கட்டப் போவது போல், அவன் கழுத்துப் பக்கமாக எதேச்சையாகக் கொண்டு போய்விட்டு, பிறகு மருமகனாகப் போகிறவனின் கையில் கொடுக்க, கூட்டம் சிரிக்க, மேளம் ஒலிக்க, மணமகள் கழுத்தை ஒருவர் பிடித்து நீட்ட தாலி கட்டப்பட்டு விட்டது.

     அது, ஒரு சீர்திருத்தக் கல்யாணம். ராகுகாலம், எமகண்டம் பார்த்து, பக்குவமான சமயத்தில் நடத்தப்படும். அப்படியும் ஆகாமல், இப்படியும் ஆக முடியாமல் போன ஒரு ‘கலப்படக்’ கல்யாணம். நெல்லை மாவட்டத்தில், அருகு அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் பேர் குடியிருக்கும் இந்தப் பகுதியில், இப்படிப்பட்ட கல்யாணங்கள் தான் நடக்கின்றன. இருப்பினும் இந்தக் கல்யாணம், ஓரளவு வேறுபட்டது.

     பெருமாளின் பூர்வீகக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உறவு முறைச் சங்கம் என்று ஒன்றை உருவாக்கி யிருக்கிறார்கள். பணக்காரர்கள் ஆட்டிப் படைக்கும் இந்தச் சங்கத்தில், ஏழைகள் வீட்டுத் திருமணங்களில், சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கியாக வேண்டும். இது, ஒரு கட்டாய ‘இன்வைட்டேஷன்’. இல்லையானால், அந்த ஏழைகள், தள்ளி வைக்கப்பட்டு விடுவார்கள்.

     நிர்வாகிகள், ஆளுக்கொரு வார்த்தை பேசுவதில், அதுவும் வாழ்த்திப் பேசுவதில் என்ன கோளாறு என்று கேட்கலாம். கோளாறே, அங்கே தான் இருக்கிறது. முதலாவதாக ஆளுக்கொரு வார்த்தை பேசாமல் ‘ஊமைக்கு ஊறுவாயன் சண்டைப் பிரசண்டன்’ என்பது போல், ஒவ்வொரு பணக்கார நிர்வாகியும், தன் பவுன்கார மோதிரங்களையும், டெர்லின் சட்டைப் பைகளுக்குள் தெரியும் நூறு ரூபாய் நோட்டுக்களையும், ஏழை பாழைகள் தொடாமலே பார்க்க வேண்டும் என்பது போல், அரைமணி நேரமாவது பேசுவார். இந்த அரை மணிக்குள், “அதாவது... அதாவது” என்ற வார்த்தை மட்டும் ஆயிரந்தடவை வரும். இரண்டாவதாக, நிர்வாகிகளின் எண்ணிக்கை அதிகம். பணக்காரர்கள் மட்டும் நிர்வாகிகளாக இருப்பதா என்று ஒரு பேச்சு வந்த போது, அந்த தந்திரக்கார நிர்வாகிகள், ‘போர்ட் ஆப் ரெவின்யூ’ என்பது மாதிரி, வருவாய்க் குழு, மலர்க் குழு என்று இரண்டு குழுக்களைப் போட்டு, சில வாயாடி ஏழைகளை அவற்றில் போட்டு விட்டார்கள். ஆக, அந்த வ.கு.உ. (வருவாய்க் குழு உறுப்பினர் - இப்படித்தான் அழைப்பிதழில் போட்டிருந்தது), ம.கு.உ. (மலர்க் குழு உறுப்பினர்) செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், உதவிச் செயலாளர், நிர்வாகச் செயலாளர், தலைவர், துணைத் தலைவர், இணைத் தலைவர், உதவித் தலைவர், நிர்வாகத் தலைவர், பொருளாளர், துணைப் பொருளாளர், இணைப் பொருளாளர், நிர்வாகப் பொருளாளர் என்று இருபது பேர் பேசி, நேரம் இருந்தால் இன்னும் பத்துப் பேரும் பேச வேண்டும்! இவர்கள் பேசி முடிப்பது வரைக்கும் காத்திருப்பது என்றால் மணமக்களுக்கு, முதல் இரவு வருவதற்கே மூன்று மாதம் ஆகும்.

     மணமக்களை வாழ்த்தி, தலைவரும், இதர நிர்வாகிகளும் பேசி முடித்த பின்னர், ஒரு வ.கு.உ. பேச எழுந்தார். மணமக்களுக்கு, தாங்க முடியாத எரிச்சல். பேசி முடித்தவர்களுக்கும், பேசப் போகிறவர்களுக்கும் அதே எரிச்சல். பேசுகிறவர் மட்டும், எவரையும் கண்டு கொள்ளவில்லை. கூட்டத்தினருக்கோ பசித் தொல்லை. சாப்பாடு பக்கத்திலேயே இருந்த போதும், பசி, வயிற்றுக்கு வெளியேயே வந்த போதும், ஒரு பேச்சை - அதுவும் உருப்படாத பேச்சைக் கேட்பது என்றால்...

     செவிக்கு உணவு திகட்டியதால், வயிற்று உணவை தியாகம் செய்துவிட்டு, ஒரு சிலர் வெளியே வந்த போது, சொக்கலிங்கம் மனைவி - மகள் சகிதமாக காரில் இருந்து இறங்கினர்.

     உள்ளே இருந்து ஓடி வந்த அவருடைய தங்கை செல்லம்மா, “வாங்கண்ணா... கொஞ்சம் முன்னாலேயே வரப்படாதா...” என்று கெஞ்சுவது போலக் கேட்டாள். அண்ணனின் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

     பார்வதியல் பொறுக்க முடியவில்லை. “இவரு என்ன மேடையிலா உட்காரப் போறாரு. சீக்கிரமாய் வாரதுக்கு” என்ற போது, மல்லிகா சிரித்துக் கொண்டே, “மேடையில் பேசுறவங்க தான் கடைசியில வரணும். அப்பா... நீங்கள் லேட்டா வந்ததனால, தலைவரா ஆயிட்டிங்க! அதனாலே மேடைல போய் உட்காரணும், இடம் இருந்தால்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தாள்.

     “ஆமாண்ணா... அவரு அப்போதே உங்களைப் பார்த்துக்கிட்டே இருந்தார்” என்றாள், செல்லம்மா.

     செல்லம்மா அவர்களை வரவேற்பது போல், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே, முன்னால் நடக்க, மூவரும் உள்ளே போனார்கள். கூட்டத்தில் லேசான பரபரப்பு. சொக்கலிங்கத்தின் உதவி தேவைப்படலாம் என்று கருதிய இரண்டு பேரும், அவர் ஒரு காலத்தில் செய்த உதவியை இன்னும் நன்றியுடன் பாராட்டும் ஒருவரும், நாற்காலிகளில் இருந்து எழுந்தார்கள்.

     சொக்கலிங்கம் குடும்பத்தினர் உட்கார்ந்த போது செல்லம்மா, அண்ணனைப் பெருமையாகப் பார்த்துக் கொண்டே, கணவனிடம் போய், “அண்ணன் வந்துட்டாரில்ல, போய், ‘வாங்கத்தான்’னு ஒரு வார்த்தை கேளுங்க... போங்க” என்றாள். “போடி! உன் அண்ணன்... தாலி கட்டுற நேரத்தில் வந்துட்டாரு பாரு... காலுல விழுந்து கும்பிடணும்! அவருகிட்ட பணம் இருந்தால் அவருவரைக்கும். நான், ஒரு குதிரை காலுல கட்டுன பணத்துக்குப் பெறுமா...?” என்றார். “அவரு பணக்காரருன்னு உங்களை கூப்பிடச் சொல்லல. உங்கள் பெண்டாட்டியோட கூடப் பிறந்த அண்ணன். என்னை வருஷத்துல முன்னூற்று அறுபத்தஞ்சு நாளைக்கும் அடிச்சி தொலைச்சிங்க. இன்னைக்காவது, நான் சொல்றத கேட்கப்படாதா? உங்களைத்தான். போய் கூப்பிட்டு, மேடையில் உட்காரவையுங்க. நீங்கள் பெத்த பெண் மல்லிகாவை, எவ்வளவு பேரும் புகழுமா வைத்திருக்கார், பார்த்தீங்களா. போங்க...”

     செல்லம்மா மன்றாடினாள்.

     பெருமாள், வேண்டா வெறுப்பாக, சொக்கலிங்கத்திடம் போனார்.

     “மேடைக்கு வாங்கத்தான்...” என்றார், இவர். “பரவாயில்லை... இங்கேயே இருக்கேன்” என்றார், அவர். பிறகு இவரும் வற்புறுத்தவில்லை. அவரும் எழவில்லை.

     “நம்ம மல்லி காலேஜ்ல பேசுறவள் தானே, இங்கே பேசச் சொல்லலாமா?” என்று சொக்கலிங்கம் சொன்ன போது, பார்வதி, அவரை சூடாகப் பார்த்தாள். சொக்கலிங்கம், அடங்கிப் போன போது, அடக்க ஒடுக்கம் இல்லாத பெருமாள், ‘சரிதான் போய்யா...’ என்பது போல் போய்விட்டார்.

     மணமகள் சந்திரா, தன் தங்கை மல்லிகாவையே பார்த்தாள். அவள் வருவது வரைக்கும், கணவன் தன்னை ஓரக்கண்ணால் பார்க்கிறானா என்று கவனித்துக் கொண்டு இருந்தவள், இப்போது, தங்கை தன்னை கவனிக்கிறாளா என்று பாசத்தோடு நோக்கினாள். கணவன், தன் முதுகைக் கிள்ளுவது தெரியாமலே - உணராமலே பார்த்தாள்.

     மல்லிகாவும், அக்காவையே பார்த்தாள். உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்த பாசத் துடிப்பு, அவள் நெஞ்சத் துடிப்பை அதிகமாக்கியது. பிறகு, மணமக்களின் இடத்தில், தானும், சரவணனும் அமர்ந்து இருப்பது போல் ஒரு பிரமை. அமர வேண்டும் என்ற ஓர் ஆசை. இங்கே இருந்த குண்டு குழி வீட்டில் அல்ல; ஆபர்ட்ஸ்பரியில் அல்லது, ராஜேசுவரி கல்யாண மண்டபத்தில் வேண்டாம், சரவணனோடு எந்த இடத்தில் வேண்டுமானாலும் உட்காரலாம்; உட்கார வேண்டும்.

     கூட்டத்தின் பெரும்பகுதி, மல்லிகாவையும் பார்வதியையுமே மாறி மாறிப் பார்த்தனர். மல்லிகாவை, கொஞ்சம் அழுத்தமாகப் பார்த்தனர். “எங்கே இருக்க வேண்டியவள், எங்கே இருக்கா... பார்த்திங்களா? ஆனாலும் நல்ல பொண்ணு... கர்வமே கிடையாது.”

     மணமேடையில் ‘ம.கு.உ.’ ஒருவர், இடம், பொருள், வயிறு தெரியாமல் பேசிக் கொண்டே போனார். எரிச்சல் தாங்க முடியாமல், மல்லிகா, சரவணனோடு, தன்னை இணைத்துக் கொண்ட இன்பக் கோட்டையைக் கூட சிறிது தகர்த்துக் கொண்டு, கைகளை நெறித்தாள். பேசுபவர் வார்த்தைகள் மோதாமல், முட்டாமல் இருப்பதற்காக காதுகளைக் கூட கைகளால் அடைத்துக் கொண்டாள். பிறகு மேடை அநாகரிகத்தை ஆட்சேபிப்பதற்கு, இது நாகரிகமான எதிர்ப்பு அல்ல என்று நினைத்தவள் போல், கைகளை எடுத்துவிட்டு முகத்தைச் சுழித்தாள்.

     அப்போது, ஒரு மாதத்துக்கு முன்புதான் வயதுக்கு வந்த அவளுடைய இரண்டாவது தங்கை, இரண்டு மூன்று தம்பிகள், அவள் அருகே வந்தார்கள். “அக்கா” என்று அந்த வார்த்தையை வாய் வழியாக மட்டும் விடவில்லை. முகமலர நின்று, கண்கள் விரிய அந்தப் பாசத்தை உதடு துடிக்கக் காட்டினார்கள். செல்லம்மாவும் அங்கே வந்து மகளை, மலைப்போடும், மலையில் ஏறிவிட்ட அலுப்பு கலந்த அமைதியோடும் பார்த்தாள். பெற்ற வயிற்றைத் தடவிக் கொண்டே பார்த்தாள்.

     மல்லிகா எல்லோரையும் பொதுவாகப் பார்த்துவிட்டு, லேசாகப் புன்முறுவல் செய்தாள். அம்மாவுக்கு மட்டும், சற்று அதிகமாகப் புன்முறுவல் செய்தாள். அவ்வளவு தான். ஆனால், அவளைப் பார்த்த அந்த ஏழைப் ‘பாசிகள்’ அவளது பாசத்தின் பதில் வெளிப்பாட்டை கண்டுபிடிக்கும் அளவுக்கு மனதைச் சிதறவிடவில்லை. அவளை முழுமையாகப் பார்த்ததால், மல்லிகாவின் பாசக் குறைவு, அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

     இந்தச் சமயத்தில், சொக்கலிங்கம் எழுந்தார். நேரே மேடையைப் பார்த்துப் போனார். வாழ்த்துரை வழங்கியவர், இவர் தாக்க வருகிறாரா, அல்லது மைக்கைப் பிடுங்க வருகிறாரா என்று பயப்படும் அளவுக்கு பாய்ந்து போனார். நேராகப் போய், மணமகளின் கையை எடுத்து, ஆள்காட்டி விரலைத் தூக்கி, ஒரு பவுன் மோதிரத்தைப் போட்டுவிட்டார். மணமகன் கையில், ஒரு நூறு ரூபாய் நோட்டைத் திணித்தார். இந்தப் பரிசை சற்றும் எதிர்பாராத மணமக்கள், மேடையிலேயே எழுந்து அவர் காலைத் தொட்டுக் கும்பிட்டார்கள். மணமக்கள் எழுந்ததும், இதுதான் சாக்கு என்று, கூட்டத்தினரும் சொல்லி வைத்தது போல் எழுந்தார்கள். “ஒரு வரைமுறை வேண்டாம்? எவ்வளவு நேரமய்யா வெறும் பேச்சைக் கேட்கிறது? ஒருவனாவது முன்னால் பேசுனவன் சொல்லாத விஷயத்தைச் சொல்றானா? சீச்சீ!”

     கூட்டம் எழுந்து, பந்தியில் உட்காரப் போன போது கூட, ம.கு.உ. பேசிக் கொண்டு இருந்தார். இறுதியில், மைக் வலுக்கட்டாயமாக ‘ஆப்’ செய்யப்பட்டது. அவரது பேச்சு, பாதியில் கோவிந்தா! இன்னும் பேச இருந்த பத்துப் பேர்வழியினர் அடியோடு கோவிந்தா.

     பேச வேண்டியவர்களைத் தவிர, மற்றவர்கள் நிம்மதிப் பெருமூச்சை விட்டபோது, சொக்கலிங்கம் மனைவியிடம் வந்து “சரி... நான் டாக்சியில் போறேன். செட்டியார் காத்திருப்பார். நீங்கள் சாவகாசமா சாப்பிட்டுட்டு, கார்ல வாங்க” என்று சொல்லிக் கொண்டே, சட்டைப் பித்தானைப் பூட்டினார். புறப்படுகிறாராம்.

     மல்லிகாவும் எழுந்தாள்.

     “நானும் வரேம்பா. எனக்கு போரடிக்குது. நாளைக்கு காலேஜ்ல டெஸ்ட் இருக்கு. பிளீஸ்... நானும்...”

     சொக்கலிங்கம், சிறிது யோசித்துவிட்டு, அப்புறம் யோசிக்காமலே பேசினார்.

     “என்னம்மா நீ, சின்னப்பிள்ளை மாதிரி பேசுற? நாலு பேரு என்ன நினைப்பாங்க? அம்மா, அப்பாவோட கொஞ்ச நேரம் பேசிட்டு, அப்புறமா வா. நீ செய்யுறது தப்பு. அவங்க தான் உன்னைப் பெத்தவங்க. உன்னைப் பார்த்து, அவங்க மனசும் குளிரணும்; கொதிக்கப்படாது. பார்வதி, நான் வரட்டுமா? இவள் அவசரப்படுத்துறாள்னு நீயும் அவசரமாய் வந்துடாதே. நகை பத்திரம். எவனாவது கத்தரி போட்டுடப் போறான்...”

     சொக்கலிங்கம் போய்விட்டார்.

     மல்லிகாவிற்கு, லேசாகக் கண்ணீர் கூட வந்தது. எவ்வளவு நேரம் இந்த வீட்டில் இருப்பது? ஒரே புழுக்கம்... ஒரே வாடை ஒரே எரிச்சல்... சீ...

     மல்லிகாவும், பார்வதியுடன் பந்தியில் உட்கார்ந்தாள். அவளால் சாப்பிட முடியவில்லை. இந்நேரம், தியாகராய நகர் வீட்டில், இடியாப்பம் - குருமா சாப்பிட்டு இருப்பாள்! மிக்சியில் ஆரஞ்சுப் பழங்களையோ அன்னாசிப் பழங்களையோ பிழிந்து ஒரு கிளாஸ் சாறு குடித்து இருப்பாள். சாப்பாடா இது? உருளைக்கிழங்கு அளவிற்கு அரிசி! அதுவும் பாதி வேகாத அரிசி. காம்பு போகாத கத்தரிக்காய் - பொறியலாம். ரசமாம்... சரியான குழாய்த் தண்ணீர்.

     மல்லிகாவால் சாப்பிட முடியவில்லை. பார்வதி சாப்பிடுவது போல் பாசாங்கு செய்து கொண்டும், மற்ற பந்தி ரசிகர்கள் முண்டியடித்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டும் இருந்த போது, மல்லிகா, அத்தனை கண்களும் தன்னை மொய்க்கும்படியாக எழுந்தாள். அவள் அம்மா செல்லம்மாவுக்கு, என்னவோ போலிருந்தது. இருந்தாலும், எங்கே போய் கைகழுவுவது என்று தெரியாமல் மல்லிகா திகைத்து நின்ற போது, செல்லம்மா, அவளுக்கு அருகே இருந்த அண்டாப் பாத்திரத்தில் நீர் மொண்டு கொடுத்தாள். பிறகு தன் முந்தானையால், மகளின் வாயைத் துடைக்கப் போனாள். மல்லிகா, முகத்தைச் சுழித்துக் கொண்டே, ஒதுங்கிக் கொண்டாள்.