9

     கல்லூரி மாணவ மாணவிகள் அந்த அறையில் கூடி விட்டார்கள்.

     மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி அங்கே நடைபெறப் போகிறது.

     சரவணன் பேச்சியில் அப்படியொரு மயக்கம் ஏற்படும். அதில் சொல்லோசை இருக்காது. மொழியடுக்கு இருக்காது. ஏற்ற இறக்கம் இருக்காது. எதுவுமே இல்லாதது போலத் தோன்றும் எளிய சாதாரண வார்த்தைகள், இயல்பான குரல், கைகளை நீட்டி முழக்காத நளினம், யாரோ நெருங்கிய சிநேகிதர் ஒருவர் நம்மிடம் மனம் விட்டுப் பேசுவது போன்ற பாணி, இதயமே வாயாக வந்திருப்பது போன்ற நேர்த்தி, பரிசுக்காக பரபரப்படையாத இயற்கைத்தன்மை, இத்தனையும் நிறைந்த அவனுக்கு, முதற் பரிசு கிடைக்கும் என்பது முடிவான விஷயம். அவன் பேசுவதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சில ‘வண்ணப் பூச்சிகள்’ மேடையில் நாக்காடுவதைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் பெருந்திரளாகக் குழுமினார்கள்.

     கல்லூரிப் பேராசிரியர் ஒருவர், நடுவர்களை அறிமுகம் செய்துவிட்டு, ‘பெண்ணுரிமை’ என்ற தலைப்புதான் போட்டியின் தலைப்பு என்று சொன்ன பிறகும், அவர் மைக்கை விட மனமில்லாமல், பெண் என்றால் என்ன என்று விளக்கம் கொடுத்து விட்டு ‘உரிமைக்கு’ வந்த போது “உக்காருய்யா சுக்குத் தண்ணி” என்றது ஒரு குரல். ஆசிரியர் குரலடங்கி உட்கார்ந்தார்.

     போட்டிக்கு முதலாவதாகப் பேச வந்த பையன் ஒருவன், “பெண்ணுக்கு விடுதலை இல்லையென்றால்” என்று பாரதியாரை மேற்கோள் காட்டியபோது, “ஆஹாஹா... ஆஹாஹா... அப்பனே பாரதி பேரா... அடச்சீ” என்றது இன்னொரு குரல். உடனே மாணவிகள் கூட்டத்தில் பலத்த சிரிப்பு. அந்த சிரிப்பு மேலும் பலக்க வேண்டும் என்பதற்காக பல தடவை “அடச்சீக்கள்”. ‘பட்டறிந்த’ பேச்சாளன் பட்ட மரமானான்.

     மூன்றாவதாக வந்த மாணவி “பெண்கள் என்றால்...” என்று தொடங்கவும், “அது நீ இல்லே, நீ... இல்லே...” என்று அந்தப் பெண்ணை டபாய்த்தார்கள். அவளும் ஓய்ந்த பிறகு நடுவர் “மல்லிகா” என்றார்.

     மல்லிகா எழுந்திருக்கவில்லை. கோர்ட்டில் அழைப்பது போல இரண்டாவது தடவையாக “மல்லிகா!” என்ற போது, கூட்டத்தின் கண்கள், அவளை மொய்த்தன.

     மல்லிகா மரியாதையாக எழுந்து, “நான் பேசப் போவதில்லை” என்று சைகை செய்தாள். அவளைக் கோட்டா செய்யப் போன மாணவர்கள், அவள் முகத்தில் படர்ந்திருந்த துயரத்தையும், கலைந்திருந்த முடியையும், கவிழ்ந்திருந்த தலையையும் பார்த்து, பரிதாபப்பட்டது போல் சும்மா இருந்தார்கள். ஒரே ஒரு ஆகாதவன் மட்டும், “சரவணின் பியூட்டியே... அடிமே உன் லூட்டியை” என்று சொன்ன போது, “மக்குப் பையா... கொக்குத் தலையா... மரியாதி போயிடும், சும்மா இருய்யா” என்றான் இன்னொரு பையன். அவனுக்கு மல்லிகா தன்னைக் காதலிப்பதாக ஒரு பிரமை. அப்படியே காதலிக்கவில்லை என்றாலும், இப்படிச் சொன்னதால், இனிமேலாவது காதலிப்பாள் என்கிற தன்னம்பிக்கை. காதல் பாதி நிறைவேறிவிட்டதில், அவனுக்கு ஒரு திருப்தி. அதாவது அவன் ரெடி.

     பல மாணவர்கள் கவர்ச்சியாகவும், கழுத்தையறுத்தும் பேசிய பிறகு, சரவணன் பேசினான். பொருளாதார உரிமை வந்தால் தான் பெண்ணுரிமை வருமென்றும், ‘பொருளா? தாரம்’ என்ற நிலை இருக்கும் வரை பெண்ணுரிமை வெறும் மேடைப் பேச்சே என்றும், ‘பண்’ செய்து அவன் பேசிய போது, பலத்த கைத்தட்டல். “தாய்மார்களே” என்று விழிக்கும் ஒவ்வொருவனும், பதினெட்டு வயதுப் பெண்ணைப் பார்க்கையில், “இந்த வயதில் என் அம்மாவும் இப்படித்தான் இருந்திருப்பாள்” என்றும், எண்பது வயதுக் கிழவியைப் பார்க்கையில், “என் அம்மாவும் இந்த வயதில் இப்படித்தான் இருப்பாள்” என்றும் நினைக்க வேண்டும். அப்படி நினைக்கும் காலந்தான் பெண்ணின் விடிவுக்காலம், உரிமையைப் பற்றிப் பேசத் தேவையில்லாத அளவிற்கு ஏற்படும் ‘பொற்காலம்’ என்று அவன் சாதாரணமாகப் பேசியபோது, கைதட்டிப் பாராட்டினார்கள்.

     இந்தத் தடவையும் முதற்பரிசு சரவணனுக்கே. வழக்கமாக இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசு பெறும் மல்லிகாவுக்குப் பதிலாக இன்னொருத்தி வாங்கினாள்.

     மல்லிகா, சக தோழிகள் “ஏன் பேசவில்லை” என்று கேட்டால் எப்படிப் பதிலளிப்பது என்று புரியாமல், அந்த தர்மசங்கடத்தைத் தவிர்ப்பதற்காக, தமிழ் உதவிப் பேராசிரியர், ‘நன்றி’ சொல்லிக் கொண்டிருந்த போது, அவள் கல்லூரி வாசலுக்கு வந்துவிட்டாள். ஆட்டோ ரிக்‌ஷாக்காரரை பன்னிரெண்டு மணிக்கு வரச் சொல்ல வேண்டும் என்று முந்திய இரவு நினைத்தவள், தான் ராமனுக்கு மனைவியாகலாம் என்ற அவலத்தில் அதை மறந்துவிட்டாள்.

     மெள்ள நடந்து கொண்டிருந்தாள்.

     “நீங்கள் ஏன்... இன்றைக்குப் பேசவில்லை...” என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

     சரவணன்!

     சைக்கிளை மெதுவாக விட்டுக் கொண்டு, பெடலை லேசாக அழுத்திக் கொண்டு, அவளுக்கு இணையாக வந்தான். பிறகு, அவளுக்கு மதிப்புக் கொடுப்பவன் போல், சைக்கிளை விட்டு இறங்கினான்.

     “சொல்லுங்க... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?”

     மல்லிகா, அவனை நிமிர்ந்து பார்த்தாள். மானசீகமாக அவனருகிலேயே அந்த ராமனை நிறுத்திப் பார்த்தாள். வேறு பக்கமாகத் திரும்பி, கண்ணீரை உதிர்த்துக் கொண்டாள். அவளுக்கு சரவணன் மீது எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அழகில் சாதாரணமானவன் தான். ஆனால் பேச்சாற்றலும், எல்லோரையும் தன்னைப் போல் நினைத்து மனம் விட்டுப் பழகும் சுயமரியாதையும், அவனுக்கு ஊன அழகு கொடுக்காத, ஒரு ஞான அழகைக் கொடுத்திருத்தது. குறைந்தபட்சம், அப்படி இருப்பதாக பல பெண்கள் நினைத்தார்கள். மிதவாதியான மல்லிகா, இந்த நினைப்பைப் பொறுத்த அளவில் ஒரு தீவிரவாதி. தன்னை மீறிய, தன்னையே அறியாத ஒரு தீவிரவாதி.

     “சொல்லுங்க... ப்ளீஸ்... எதற்காகப் பேசவில்லை? பையன்களின் கலாட்டாவுக்குப் பயந்துட்டீங்களா?”

     மல்லிகா பேசப் போனாள். அப்படிப் பேசப் போனால், அழுகை வந்திடும் போல் தோன்றியது. அடக்கிக் கொண்டாள். பிறகு, தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள். அவனிடம் ஓராண்டு காலமாக சாதாரணமாகப் பேசிப் பழகுபவள். அந்த உரிமையில் தான், அவனும் கேட்டான். ஆகையால் இப்போதும் சாதாரணமாக ஆனால் உள்ளர்த்தத்துடன் பேசினாள்.

     “பெண்கள்... பொருளாதார விடுதலை இல்லாததாலே... கணவன்மார் செய்யும் கொடுமையை... சகிச்சிக்கிறதாச் சொன்னீங்க... உண்மைதான். அதே சமயம்... கல்யாணம் ஆகாத பொண்ணுங்களும், பொருளாதாரப் பாதுகாப்புக்காக ஒரு... ஏதோஒரு இனம் புரியாத பாசத்தாலும், வேண்டப்படாத இடத்தைப் பிடிச்சுக் கிட்டே இருக்கலாம் இல்லையா?”

     “நீங்கள் என்ன சொல்றீங்கள்?”

     “நான் கேட்கிறது... பொருளாதார, சமூக நிர்ப்பந்தத்தால் கல்யாணம் ஆகாமல் இருக்கிற பெண்களுக்கும் ஏதாவது செயல் திட்டம் இருக்கா?”

     “நீங்கள் பேசுவதைப் பார்த்தால்... சொந்த அனுபவம் மாதிரி...”

     “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் கொடுத்து வச்சவள். எல்லாப் பெண்களுக்கும் ஒரு அப்பா அம்மா. எனக்கு ரெண்டு அப்பா அம்மா. என் பிரச்சினை கிடக்கட்டும், அது... வேண்டாம், விட்டுடுங்க. குறிப்பிட்ட ஒரு பழக்க வழக்கத்தில் ஆட்பட்ட பெண், அந்தப் பழக்க வழக்கமான சமூகத் தட்டுலே இருந்து தாழ்ந்து போகாமல் இருக்க, அவளோட உரிமையை மட்டும் கேட்டால் போதாது. ஒரு பணக்கார இளைஞன் அவளைக் கல்யாணம் பண்றதினாலும் முடிந்து விடாது. இதுக்கு வேறே வழி இருக்கா?”

     ”கொஞ்சம் யோசிக்கிறேன். ஒரு நிமிடம்... கொடுங்க வந்து... ஒரு பெண் சமுதாயத் தட்டில் இருந்து கீழே இறங்கிடுவோமோன்னு பயப்படாமல் இருக்கணுமுன்னா, கீழ் தட்டுன்னு ஒண்ணு இருக்கப்படாது. அதாவது, எல்லாம் பொருளாதார சமத்துவம் பெறணும். பெண்கள் பிரச்சினை தனிப்பிரச்சினை அல்ல. அரிஜனப் பிரச்சினையைப் போல அது ஒரு சமூகப் பிரச்சினை. சரி, ஓட்டலில் ஒரு காபி குடித்துக் கொண்டே பேசலாமே?”

     மல்லிகா, அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தாள். பயந்து போய் சிறிது விலகிக் கொண்டாள். சரவணன் புரிந்து கொண்டான்.

     “நான் நீங்க நினைக்கிற இனத்தைச் சேர்ந்தவன் இல்லை. வரதட்சணைக் கொடுமைன்னு அடிக்கிறாங்களே, அதைப் பேசலாமுன்னு எண்ணிக் கேட்டேன். உங்களிடம் தெரிஞ்சிக்க வேண்டியது நிறைய இருக்கு. நாளைக்கு கல்லூரிகளுக்கு இடையே நடக்கிற ஒரு பேச்சுப் போட்டிக்கு நீங்கள் பாயிண்ட்ஸ் கொடுத்தால், பரிசு வாங்கிடுவேன்.”

     “இங்கேயே நின்று பேசலாமே?”

     “வரதட்சணைக் கொடுமையால பல பெண்களுக்கு கல்யாணம் நடக்கலேன்னு மேடையில பேசறோம். இந்தப் பெண்கள், பெரிய பெரிய ஆபீசருக்கு மனைவியாய்ப் போகிற ஆசை நிறைவேறாமல் போவதைத் தான் வரதட்சணைக் கொடுமைன்னு சொல்றாங்க. இவங்க ஏன் ஒரு பியூனைக் கல்யாணம் பண்ணப்படாது? ஏன் ஒரு ரிக்‌ஷா தொழிலாளியைக் கல்யாணம் பண்ணப்படாது? நான் பண்ணணுமுன்னு சொல்லவில்லை... பண்ண முடியாதுன்னும் தெரியும்... ஏன் தெரியுமா?”

     “சொல்லுங்க...”

     “இந்த சமூக அமைப்பிலே... பியூனோட வாழ்க்கை முறை வேறே, ஆபீசரோட வாழ்க்கை முறை வேறே. ஏழையோட கலாச்சாரம் வேறே, பணக்காரன் கலாச்சாரம் வேறே. இவை போய்... கலாச்சார ஒருமையும் வாழ்க்கை முறையில் ஒருமையும் வந்தால்தான், தொழில் அந்தஸ்து, சமூக அந்தஸ்தோட இணைக்கப்படாத காலம் வந்தால் தான், வரதட்சணைப் பிரச்சினையும் தீரும். இல்லை என்றால், அது அன்பளிப்பு பிரச்சினையா மாறுவேடம் போடும்...”

     “நான் வரட்டுமா?”

     “போராடிக்கிறேனோ?”

     “இல்ல. சில பிரச்சினைகள், சில விஷயங்கள் புரியப் புரிய பயமாய் இருக்கு.”

     “என்னால உதவி பண்ண முடியுமா?”

     “பொருளாதார சுதந்திரம் இல்லாத உங்களாலே, எனக்கு சுதந்திரம் வராது. அதுக்காக, உங்கள் மூலம் வரக்கூடாதுன்னு நினைக்கவில்லை. சொல்லப் போனால், வரணுமுன்னு நினைக்கிறேன்.”

     சற்று நேரத்திற்கு முன்பு, ஓட்டலில் சும்மா காபி குடிக்கக் கூப்பிட்ட போது முகத்தைச் சுழித்து, கழுத்தை கேள்விக்குறி போல் வளைத்த இந்தப் பெண், ஏன் சரசத்துடன் தலை கவிழ்கிறாள் என்பது புரிய, அவன் மலைத்தும், மகிழ்ந்தும் நின்ற போது, மல்லிகா மெல்ல நடந்தாள். சரவணன் சிறிது நேரம் நின்றான். பிறகு சைக்கிளை வேகமாக உருட்டிக் கொண்டு, அவளருகே போய், “நான் ஓட்டலுக்குக் கூப்பிட்டதை தயவுசெய்து தப்பா நினைக்காதம்மா. எத்தனையோ பெண்கள் ‘போகலாமா காபிக்கு’ என்று சொல்வதை பொழுதுபோக்கா வைத்திருக்கிறாங்க. ஆனால் நீங்க அப்படிப்பட்ட இனம் இல்லை. உங்களைப் பார்த்தாலும் தப்பாக் கூப்பிடத் தோணாது” என்றான்.

     “பொழுதுபோக்கும் பெண்களைப் பற்றி நல்லாத்தான் தெரிந்து வச்சிருக்கீங்க. சொந்த அனுபவமா?”

     “உண்டு. பிறர் சொல்வதைக் கேட்ட அனுபவமும் உண்டு. உங்ககிட்ட பேசிட்டேனா... இனிமேல் நாலு நாளைக்கு எந்தப் பெண் கூடேயும் காபி குடிக்கப் போக மாட்டேன். போகத் தோணாது. செக்ஸ் கிளாமரை, ஒரு குடும்பப் பெண்ணாலதான் விரட்ட முடியும். நான் வரேன்.”

     சரவணன் சைக்கிளை சுற்றி வளைத்துக் கொண்டு அவளுக்கு எதிர்திசையில் உருட்டினான். ‘கடவுளே... இவரு நாலு நாளைக்கு மட்டுமல்ல, எப்போதும் காபி குடிக்க நாலு பேரோடு தான் போகணும். ஜதையாய் போகப்படாது’ என்று மனதுக்குள்ளேயே பிரார்த்தித்துக் கொண்டு மல்லிகா நடந்தாள். இனிமேல் திரும்பி வந்தாலும் வருவாரோ? சூதுவாது இல்லாதவர்... வந்தாலும் வருவார். அய்யோ, அப்படி வந்தால், நாலு பேர் தப்பா நினைப்பாங்களே?

     சரவணன் ‘வரக்கூடாது’ என்று வெளிமனம் ஒப்புக்குச் சொல்ல, ‘இன்னும் ஒரு தடவை வரப்படாதா? சைக்கிள் தான் இருக்கே’ என்று உள்மனம், அவளை மீறித் துடிக்கும்படி நடந்து கொண்டிருந்த அவளை, பல தடவை பின்னால் திரும்ப வைத்தது. பிறகு அவள் மடமடவென்று நடக்கத் துவங்கினாள். சரவணனுடன் பல தடவை பேசியிருக்கிறாள். ஆனால் இன்று அவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் புதுப்பொருள் இருப்பது போல் இருந்தது... எட்டாவது வகுப்பில் படித்த அதே குறளை, கல்லூரியில் வேறு கோணத்தில் படிப்பது மாதிரி...

     திடீரென்று போதாக்குறையாக தன்னருகே ஒரு சைக்கிள் நடனமிட்டுக் கொண்டு வருவதைப் பார்த்து, அவள் மகிழ்ச்சியோடும் நாணத்தோடும் ஏறிட்டுப் பார்த்தாள்.