14

     ஒரு வாரம் செத்து, மறுவாரம் பிறந்தது.

     எந்த நிலைக்கு ஒருவர் வந்தாலும், அந்த நிலைக்கு ஏற்ப ஐம்புலன்களும் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்கின்றன என்ற தத்துவத்தை அல்லது விஞ்ஞான உண்மையை, மல்லிகா நம்பத் துவங்கினாளோ இல்லையோ, உணரத் துவங்கினாள்.

     அந்தச் சூழல், அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், வெறுக்கவில்லை. ஆதரிக்க முடியவில்லை என்றாலும், அனுசரிக்க முடிகிறது. அவள் வந்த நான்கைந்து நாட்கள் வரை, செல்லம்மா மகளுக்குப் பிடித்தமான இடியாப்பத்தையும், ரவா தோசையையும், தினந்தோறும் ஒரு உடுப்பி ஓட்டலில் இருந்து வாங்கிக் கொடுத்தாள். பிறகு கையில் காசில்லாததால், அந்த வீட்டின் திண்ணையிலேயே, இட்லி கடை போட்டிருந்த ஒரு ஆயாவிடம், கல்லை விடக் கடினமான, கல்லை உடைக்கும் இட்லிகளை, அவளுக்கு வாங்கிக் கொடுத்துவிட்டு, கைகளைப் பின்னிக் கொண்டு ஒன்றோடொன்று மோதிய தாய்மையையும், இயலாமையையும் இணைக்கப் பார்த்து, அவை இணைபட முடியாமல் போகவே, வாசல்படியில் சாய்ந்து, வெளிக்கூரையை பற்றற்ற யோகி போல் உற்றுப் பார்த்தாள்.

     மல்லிகா புரிந்து கொண்டாள். மறுநாள், அம்மா இட்லி வாங்கக் கூட காசில்லாமல், தன் மூத்த மகள் சந்திராவிடம் “உன்கிட்ட ஏதாவது...” என்று இழுத்த போது மல்லிகா ஒரு ஈயத்தட்டை எடுத்து, பழைய பானையைத் திறந்து, பழையை கஞ்சியை போட்டு சிரித்துக் கொண்டே, ஒரு வெங்காயத்தைக் கடித்துச் சாப்பிட்டாள். செல்லம்மாவுக்கு அந்த வெங்காயம் படாமலே கண்ணீர் வந்தது. மல்லிகா அம்மாவை அதட்டினாள்.

     “என்னம்மா நீங்க! நேற்று உங்கள் கூட மார்க்கெட்டுக்கு வந்த போது எத்தனை ஜனங்கள் தெருவில் அடுப்பு வைத்திருக்கிறதைப் பார்த்தேன். மழை பெய்யும் போது தாங்கள் நனைந்தாலும் பரவாயில்லை. அடுப்பு நனையக் கூடாதுன்னு நினைத்து பாவாடையோட நின்னுக்கிட்டு புடவைங்களால அடுப்பை மூடுன எத்தனை பெண்களைப் பார்த்தேன். நாமாவது நாலு பேருக்குத் தெரியாமல் வறுமையை மறைக்க முடியுது. அவர்களால அது கூட முடியவில்லை. மழை பெய்தாலும் ஒண்டுவதற்கு ஒரு இடமும், ருசியா இல்லாவிட்டாலும் சாப்பிடுவதற்கு ஒரு உணவும் இருக்கிற நீங்கள், நான் பழைய கஞ்சியை குடிப்பதற்கா அழுவது? பழைய கஞ்சியிலும் ஊசிப் போன கஞ்சியாப் போன அந்த ஜனங்களை அவமானப் படுத்துறது மாதிரி இருக்கிறது.”

     செல்லம்மா, மகளைப் பார்த்து, ஈன்ற பொழுதினும் பெரிது உவந்தாள். உலகத்தில் பலர் கஷ்டப்பட்டாலும், தன்னை மாதிரி யாருமே கஷ்டப்படவில்லை என்று இதுவரை நினைத்து, அதனாலேயே அதிகமாகச் சோகப்பட்டு, அந்த சோகத்திலேயே ஒருவித சுகத்தைச் சுவைத்து வரும் அந்த அன்னைக்கு, மகள் சொன்ன சாதாரண உண்மை அசாதாரணமாகப்பட்டது. மகள் வந்த பிறகு, கணவன் குடிக்காமலேயே வருவதையும், வழக்கம் போல் பேச்சுக்குப் பேச்சு குதிரைகளை உதாரணமாகச் சொல்லாமல் இருப்பதையும், தன்னை அடிக்காமல் இருப்பதையும், சொல்லப் போனால், ஒரு நாள் தன் கன்னத்தைப் பிடித்து, ‘சொல்லத்தகாதபடி’ கொஞ்ச வந்ததையும், இவள், ‘இருந்த வயசுல எங்கேயோ போயிட்டு, இல்லாத வயசுல இப்படியா’ என்று சொல்லி, அவரை அப்புறப் படுத்தியதையும் நினைத்துக் கொண்டாள்.

     உண்மைதான். மல்லிகா. அந்த புறச் சூழ்நிலைக்கு ஏற்ப மாறியும், மாற்றியும் வந்தாள். அவள் தந்தை பெருமாள், இப்போது வீட்டுக்கு இரண்டு ரூபாய் அதிகமாகக் கொடுப்பதைக் கேள்விப்பட்டு அகமகிழ்ந்தாள். தந்தை, தனக்கு இரவில் வந்ததும் ரகசியமாகக் கொடுக்கும் ‘கேக்’குகளையும் இதர ஸ்வீட்டுகளையும், அவள் பகிரங்கமாக, பிள்ளைத் தாய்ச்சியான சந்திராவிற்கும், இதர பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்தாள். “என்னால் இது கட்டுப்படியாகாதுப்பா சாமீ! இந்த முட்டாப் பய மக்களும், மிட்டாய் தின்ன ஆரம்பித்தால் யானைக்கு அல்வா வாங்கிட்டு வந்த கதையாத்தான் முடியும்” என்று பெருமாள் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, எங்கேயோ போனார். நிச்சயமாக, வாய்க்குப் ‘பட்டை’ தீட்ட அல்ல.

     ஞாயிற்றுக்கிழமைகளில், ஆண்களும், பெண்களுமாகச் சேர்ந்து ‘தாயப் பாஸ்’ ஆடுவதை முதலில் தொலைவில் இருந்தும், பிறகு பக்கத்தில் இருந்தும், ரசித்து விட்டு, இப்போது மல்லிகாவும் சேர்ந்து ஆடத் துவங்கினாள். சாப்பிடுவதற்கு மட்டும் ‘போர்ஷன்களை’ வைத்துவிட்டு, மீதி சகலத்திற்கும் களத்தை (முற்றம் : பொதுத்தளம்) பயன்படுத்தும் ஏழை எளியவர்கள், இளம் பெண்கள், இளைஞர்கள் முதலியோர் ஆயிரக்கணக்கான சினிமாக்களின் காதல் காட்சிகளை அலசிவிட்டு, அருகருகே படுத்தாலும், எந்த வித இச்சைக்கும் தங்களை விருந்தாக்காத பெரும் பண்பு, அவளைப் பெரிதும் கவர்ந்தது. கல்லூரிகளில் பெண்களைப் பார்த்தவுடனேயே ‘விசிலடிக்கும்’ பையன்களையும், மாணவிகள் மொத்தமாகப் போகும் போது தனியாக அகப்படுபவனைப் பார்த்துப் பேசும் கிண்டல் கேலிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கப் பார்க்க, இந்த நாகரிக மைனர்களும், ‘மைனி’களும், அவளுக்கு நாட்டின் எச்சங்கள் போலத் தோன்றின.

     மல்லிகா பார்வையாளராக மட்டும் நிற்கவில்லை. அந்த ஏழைபாளைகளின் பிரச்சினைகளில் பங்காளியாகவும் மாறினாள்.

     ‘இட்லிக்கடை’ ஆயா தங்கம்மாவுக்கு இட்லிக் கணக்கை எழுதிக் கொடுத்தாள். கொத்தனார் வேலைக்குப் போகும் ராக்கம்மாவுக்கு கடிதங்களை எழுதிக் கொடுத்தாள். வாங்கும் சம்பளத்தில் பத்தில் ஒன்றை ஊரில் இருக்கும் சொந்தக்காரர்களுக்கு கடிதங்களாகச் செலவழிப்பவள், அந்தப் பெண். தபால்காரர், குடித்தனக்காரர்களுக்கு கொடுக்கும் கடிதங்களைப் படித்துக் காட்டி, இப்போது, துறைமுகத்தில் மூட்டை சுமக்கும் கந்தசாமி, ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டும் ஆறுமுகம், கோணி தைக்கும் அருணாசலம், சுக்குகாபி விற்கும் சுந்தரம், பீடி சுற்றும் மாரியம்மாள் முதலியோரின் குடும்ப விவரங்கள் அவளுக்கு அத்துபடியாகிவிட்டது. முதலில் பள்ளிக்கூடம் போகும் தம்பிக்கு, பாடம் சொல்லிக் கொடுத்த போது, சிம்மாட்டுடன் வந்த ராக்கம்மா, “எங்களுக்கும் கையெழுத்துப் போடயாவது சொல்லிக் கொடும்மா” என்றாள்.

     அன்றே, ஒரு போர்டில்லாத முதியோர் கல்வித் திட்டம் துவங்கியது. பல பெண்கள், அவளைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டு, ‘ஆனா ஆவன்னா’ எழுதத் துவங்கினார்கள். கணவன்மார்களை நச்சரித்து, சிலேட்டு, ‘பல்பங்களை’ வாங்கிக் கொண்டார்கள். மத்தியானம் பானையில் இருப்பது வயிற்றுக்குள் போனதும், மல்லிகாவின் மூளைக்குள் இருப்பது, அவர்களின் செவிக்குள் போகத் துவங்கியது.

     எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்திலேயே கூடிக் கொள்ளும் குடித்தனக்காரர்களையும், குடித்து விட்டு உதைக்கும் ஆம்புடையான்களுக்கு கால் பிடித்து விடும் பெண்களையும் பார்க்கப் பார்க்க, அவளுக்கு புதியதோர் உலகைக் கண்டுவிட்ட உவகை ஏற்படத் துவங்கியது. ஆனால், இந்த ‘வீட்டுக்கார அம்மாவின்’ போக்குதான் அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆரம்பத்தில், மல்லிகாவை மாடிக்கு வரவழைத்து பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பாள். ஒரு நாள், மல்லிகாவிற்கு ஒரு ஆர்லிக்சைக் கலந்து கொடுத்துக் கொண்டே, “இந்த வீட்டுல இருக்கறது எல்லாம் பீடைங்க. அதுங்ககிட்ட எதையும் வச்சுக்காதே” என்றாள். ஆனால் மறுநாளே, மல்லிகா அந்த பீடைங்களுக்கு எழுத்தறிவைப் புகட்டுவதைப் பார்த்ததும், அவள், மல்லிகாவுடன் பேசுவதை அடியோடு நிறுத்திக் கொண்டாள். அப்புறம் அவளைப் பார்த்து, முணுமுணுக்கத் துவங்கினாள். எதிர்க்கேள்வி போட முடியாத முணுமுணுப்பு. தான் ஒருத்தி தான் பெண் என்கிற அகங்கார முணுமுணுப்பு. இது போதாதென்று, அவள் தம்பி ஒருவன் பெயர் ரமணனாம். இருபத்தோறு வயது முண்டம். ‘டுட்டோரியல்’ காலேஜில் படிக்கிறானாம். மாடியில் நின்று கொண்டே, மல்லிகாவைப் பார்த்த பார்வை, பாதகப் பார்வை. வயதுக்கேற்ற பார்வை என்றால் தொலைந்து போகிறான் என்று விட்டுவிடலாம். மல்லிகா கூட விட்டிருப்பாள். ஆனால், அவன் பார்வையோ, அவள் குடியிருக்கும் வீடு எப்படிச் சொந்தமோ அது போல் அவளும் தனக்குச் சொந்தம் என்பது போல் பார்க்கும் பழைய காலத்து ஜமீன் பார்வை. அற்பத்தனமான அவனது உரிமைப் பார்வையையும், அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

     அன்றும் அப்படித்தான்.

     சேலையை மார்புவரைக்கும் கட்டிக் கொண்டு, வீட்டின் ஒரு மூலையில் இருந்த குழாய்க்கருகே, மல்லிகா குளித்துக் கொண்டிருந்தாள். ஒரு ஈயப்பாத்திரத்தி, பாதி தண்ணீர் இருந்தது. அவள் அக்காள் சந்திரா, குழாயருகே போய் ஒரு தவலைப் பாத்திரத்தில் தண்ணீர் பிடிக்கப் போனாள்.

     மாடியில், ரமணன், மல்லிகாவை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வையை தடுக்க முடியாத ஆதங்கத்தில், தன் உடம்பைத்தான் மறைக்க முடியாது, முகத்தையாவது மறைக்கலாம் என்று நினைத்தவள் போல், மல்லிகா, ஈயப்பாத்திரத்தில் இருந்த தண்ணீரைத் தலையில் ஊற்றி காலியாக்கிவிட்டு, கண்களை மூடி, முகத்திற்கு சோப்புத் தேய்த்துவிட்டு, பின்பு எரிச்சல் தாங்க முடியாமல் “சீக்கிரமாய் தண்ணீர் பிடிக்கா, முகமெல்லாம் எரியுது” என்று சொல்லிக் கொண்டிருந்த போது, திடீரென்று, ‘தவலை’யுடன் ‘தவலை’ மோதும் சத்தம் கேட்டது.

     அப்போது, காலைப் பொழுது மணி சரியாக எட்டரை. இந்த எட்டரை மணி, அங்கே ‘ஏழரை நாட்டான்’ சனி மாதிரி ‘வீட்டுக்கார அம்மாவின்’ குடங்களுக்கு, குடித்தனக்காரக் குடங்கள் வழிவிட வேண்டும். அரைகுறையாக இருந்தாலும் சரி, அப்போதுதான் நீர் பிடித்துக் கொண்டிருந்தாலும் சரி, குடங்கள் எடுக்கப்படவில்லையானால், படிக்கட்டுகளில் தூக்கி, ‘டங்’கென்ற சத்தத்துடன் வைக்கப்படும். கேட்டால் “காலிபண்ணு.”

     அந்த வழக்கமான பழக்கப்படி, வீட்டுக்கார அம்மா மாடியில் உதட்டைப் பிதுக்கிக் கொண்டே உலா வந்த போது, வீட்டு வேலைக்காரப் பெண், மடமடவென்று குழாய்ப் படிகளில் இறங்கி, சந்திரா பிடித்துக் கொண்டிருந்த தவலைப் பாத்திரத்தைத் தூக்கி, அங்கிருந்தபடியே சுவருக்கு மேலே தூக்கி, மேல் தளத்தில் வைத்துவிட்டு, எஜமானியின் எவர்சில்வர் தவலைப் பாத்திரத்தை வைத்துவிட்டு, இன்னும் இரண்டு மூன்று சாதாரண தவலைப் பாத்திரங்களைக் கொண்டு வரப் போனாள். சந்திராவோ வாயடைத்து, நெஞ்சடைத்து நின்றாள். அந்த வேலைக்காரப் பெண், உடம்பால் ‘ரூபி’ என்றாலும் குணத்தால் ‘அரூபி.’

     “இன்னுமா தண்ணீர் பிடிக்கவில்லை?” என்று சொல்லிக் கொண்டே கண் திறந்த மல்லிகா, எஜமானி பாத்திரங்களால், தங்கள் தவலைப் பாத்திரம் ஒதுக்குப்புறமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, தவித்தாள்.

     அன்றைக்கு வேலைக்குப் போகாத ராக்கம்மா, அந்தப் பக்கமாக வந்து “இந்த அநியாயத்தைக் கேட்டுதான் ஆகணும்” என்று சொல்லிக் கொண்டே, முந்தானைச் சேலையை இடுப்பில் செருகிய போது, மல்லிகா அவளைக் கண்களால் கெஞ்சி, கால்களைப் பிடித்து இழுத்துத் தடுத்துவிட்டாள். இன்னும் இரண்டு மூன்று பெண்கள், ஏதோ கேட்கப் போனார்கள். பிறகு தங்கள் வாடகைப் பாக்கியை நினைத்தவர்களாய், வாய்க்குள்ளிருந்து வரப்போன வார்த்தைகளை அவை உதித்த நெஞ்சங்களுக்குள்ளேயே உலர்த்திக் கொண்டார்கள்.

     எப்படியோ ஒரு வழியாகக் குளித்துவிட்டு, அக்காள் கொடுத்த ஒரு அச்சடிப் புடவையை, உடம்பைக் காட்டிய ஈரப் புடவைக்கு மேலே சுற்றிக் கொண்டே, மல்லிகா வீட்டுக்குள் போகப் போன போது, இன்னும் அதே மாடியில், அதே இடத்தில், அதே ‘போசில்’ அதே பார்வையுடன் நின்ற ரமணன், “என்னக்கா நீ, அவங்க குளிக்கிறது வரைக்காவது பொறுக்கக் கூடாதா” என்றான். அவன் சொன்னது அக்காள்காரிக்குக் கேட்கவில்லை. மல்லிகாவிற்குக் கேட்டது. அக்காளுக்கு, தான் சொன்னது கேட்கவில்லை என்பதும், கேட்கக் கூடாது என்பதும் அவனுக்குத் தெரியும். தப்பித் தவறிக் கேட்டிருந்தால், அக்காள், அங்கேயே அவனை வரட்டியைக் காய வைப்பது மாதிரி காய வைத்து விடுவாள் என்பதும் அவனுக்குப் புரியும்.

     ‘அடடே, இவனுக்குக் கூட மனிதாபிமானம் இருக்கே’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டு, நினைப்பில்லாமலே அவனை ஒரு கணம் பார்த்துவிட்டு, மல்லிகா உள்ளே போனாள். அப்படிப் பார்த்தது தப்பாய்ப் போயிற்று. பல சினிமாக்களிலும், கதைகளிலும், கதாநாயகன், பலரை அடித்துப் போட்டுவிட்டு, அவர்களிடம் சிக்கிக் கொண்ட அபலைப் பெண்ணை காப்பாற்றிய பெருமிதத்தில் பார்ப்பானே ஒரு பார்வை - அந்தப் பார்வை தோற்கும்படி ரமணன் ஒரு பார்வை பார்த்தான். பிறகு ‘முதலில் சினிமாவுக்குக் கூட்டிப் போகணும். அப்புறந்தான் மகாபலிபுரம்’ என்று கணக்குப் போட்டுக் கொண்டான்.

     கணக்குப் போட்டதோடு அவன் நிற்கவில்லை. கணக்கு நோட்டில் ஒரு தாளைக் கிழித்து, காதல் காவியம் ஒன்றை வரைந்தான். மேல்நாட்டுக் கதையைக் காப்பியடித்து ஒரு எழுத்தாளர் எழுதிய காதல் வரிகளை, அப்படியே அசல் காப்பியடித்து, கடைசியில், “கண்ணே... கலங்காதே. உனக்கு நான். எனக்கு நீ. இருவருக்கும் இடையே யாருமில்லை. யாருமில்லாத சமயத்தில் பேசுவதற்கு நீ துடிப்பது போலவே நானும் துடிக்கிறேன்” என்று எவனோ ஒருவன், எவளோ ஒருத்திக்கு எழுதி, அவள் படிக்கும் முன்பே, இவனுக்குப் படித்துக் காட்டிய வரிகளையும், எழுத்துப் பிழைகளோடு எழுதி, சிலாக் சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டான்.

     மாலை மயங்கி, மையிருட்டு வந்ததும், வீட்டுக்கார அம்மா மெயின் ஸ்விச்சை போடாத சமயத்தில் எதற்கோ நடைவாசலுக்கு வந்த மல்லிகாவின் அருகே போய், அவள் கைக்குள் கடிதத்தைத் திணித்துவிட்டு, வெளியே போய் விட்டான். அநேகமாக சினிமாவுக்கு டிக்கட் ‘ரிசர்வ்’ செய்வதற்காக இருக்கலாம்.

     முதலில் திகைத்துப் போன மல்லிகா, எதுவும் புரியாமல் குழம்பிப் போனாள். அதை தெருவிளக்கருகே போய்ப் படிக்கலாமா என்று நினைத்தாள். பிறகு, அதைப் படிக்காமலே, ‘அந்தப் பயல், பகவத்கீதையைப் பற்றி எழுதியிருக்கவா போகிறான்?’ என்று நினைத்து, அவன் என்ன எழுதியிருப்பான் என்பதை அனுமானித்து, அவன் வீட்டுக்குள் வந்ததும், எல்லோரிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டி, அவனைக் கிழித்துப் போட வேண்டும் என்று நினைத்தாள். அவனை, பாதி காயாத சாயவரட்டிகளாலேயே அடிக்க வேண்டும் என்று நினைத்தாள். அவன், தனக்கு கடிதம் எழுதியிருக்கிறான் என்பதை விட, கஷ்டப்படுகிற ஒரு பெண், பணக்காரப் பையன் கூப்பிட்டால் போய்விடுவான் என்பது போல் அவன் நினைக்கிறான் என்று உணர உணர, அவள் ஒரு பத்ரகாளியாகிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் தனக்கு இவ்வளவு கோபம் இருக்கிறதா என்று கூட ஆச்சரியப்பட்டு அசந்து போனாள்.

     அந்தச் சமயத்தில், அவள் தந்தை பெருமாள் வந்தார்.

     “என்னம்மா இங்கே நிற்கே? இன்னைக்கு வியாபாரத்துக்குப் போன இடத்துல, ஒரு பயல் என்கிட்ட கேட்காமலே என் கோணி மூட்டையை பஸ்ல ஏத்திட்டான். கோபத்துல லேசாத்தான் ஒரு தட்டு தட்டுனேன். ஒரு பல்லு கீழே விழுந்துட்டுது. கழுதைப் பயலுக்கு, நான் அடிக்கு முன்னாலேயே பல்லு ஆடிக்கிட்டு இருந்திருக்குமுன்னு நினைக்கிறேன். அந்தச் சமயம் பார்த்து, ஒரு போலீஸ்காரன் ஓடி வந்தான். கோணிக் கட்டை அப்படியே போட்டுட்டு, எங்கெல்லாமோ ஓடி, எதிர்ல வந்த பஸ்ல ஏறி எப்படியோ வந்துட்டேன். கடைசில, அவனுக்கு, பல் டாக்டருக்கு இருபது ரூபாய் கொடுக்காத அளவுக்கு லாபம். எனக்கு நூறு ரூபாய் கோணி நஷ்டம். காலத்தைப் பாரு. நாம எட்டடி பாய்ந்தால், நம்ம தரித்திரம் பத்தடி பாயுது. ரேசுக்குப் போகும் போது கூட இப்படி நஷ்டம் வரல” என்றார்.

     ஒரு குழந்தை, பள்ளியில் நடப்பதை அம்மாவிடம் சொல்வது போல், தன்னிடம் சொல்வதைக் கேட்டு, அவர் நூறு ரூபாய் நஷ்டப்பட்டதற்காக ஆறுதல் சொல்வதா அல்லது ரமணன் பயல் கொடுத்த கடிதத்தைக் காட்டி, ஆறுதல் பெறுவதா என்பது புரியாமல், அவள் தவித்தாள். இறுதியில், ஒரு முடிவுக்கு வந்தாள்.

     ‘வேண்டாம். இந்த லெட்டரை பெரிசாக்க வேண்டாம். அப்பா அவனை கொலை பண்ணினாலும் பண்ணிடுவார். அதோடு எதிர்வீட்ல இருக்கவங்க, “இவள் வாங்காமலா அவன் கொடுப்பான்னு” கூட கூசாமல் சொல்லலாம். விஷயத்தை அப்படியே விட்டு அவன் மேலும் மேலும் எழுதினால் அப்போ பார்த்துக்கலாம். இப்போ வேண்டாம்.’

     மல்லிகா கைக்குள் கசங்கியிருந்த கடிதத்தை, அப்பாவுக்குத் தெரியாமல் இடுப்பில் வைத்து, ஒரு கையால் அதைப் பிடித்து, மறு கையால் அதைக் கிழித்து, பிறகு இரண்டு கரங்களையும் பின்னால் வளைத்து, முதுகுப் பக்கமாகக் கொண்டு போய், கிழிசல்களை மேலும் கிழித்து, கிழே போட்டுவிட்டு, அப்பாவிற்குப் பின்னாலேயே வீட்டிற்குப் போனாள்.

     இரவு ஏறிக் கொண்டே இருந்தது.

     எல்லோரும் தூங்கி விட்டார்கள். உண்ட களைப்பில் தூங்குபவர்களை விட, உழைத்த களைப்பில் தூங்குபவர்களே அதிகம். படுத்துக் கிடந்த அந்த உழைப்பாளிகள், மூட்டைப் பூச்சிகள் கடிக்க முடியாத அளவிற்கு இறுகியிருந்த அந்த உடம்புகள், உயிர் வேறு, உடல் வேறாய் போனவர்கள் போல் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நூறு ரூபாய் கோணிக்கட்டை பறி கொடுத்த பெருமாள், துண்டை முகத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டே, தூக்கத்தில் கூட வெளியே தலைகாட்ட விரும்பாதவர் போல், ஒருவித தப்பிப்பு மனோபாவத்தில், தூங்கிக் கொண்டிருந்தார்.

     மல்லிகாவால் தூங்க முடியவில்லை. ரமணன் கடிதத்தைக் கிழித்துப் போட்டவள், இப்போது, தன் நெஞ்ச அணுக்கள் கிழிவது போல் புரண்டு கொண்டிருந்தாள். திடீரென்று அவளுள்ளே ஒரு நினைவு. இந்த சரவணன் ஒரு இளைஞன் தான். இவனை மாதிரி எப்போதாவது, இப்படிக் காட்டுத் தனமாகப் பார்த்திருக்கிறாரா? அவரோடு ஒன்றாக நடந்திருக்கிறேன். கை படும்படியாய் நடந்திருப்பாரா?

     திடீரென்று, அந்த நினைவுள்ளே இன்னொரு நினைப்பு. இப்படி ஒரு கடிதத்தை, இந்த சரவணன் எழுதியிருந்தால் எப்படியிருக்கும்? எழுதாத ஒன்றை எழுதியதாய் நினைக்கையில், மேனியெங்கும் இப்படிப் பரவசமானாள். அவர் எழுதியிருந்தால்... எழுதியிருந்தால்... எழுதவில்லையே. சொல்ல வேண்டியதை, சொன்ன பிறகு கூட அவர் எழுதவில்லையே. அவர் எப்படி, எழுதுவார் அந்த விஷயத்தை? இலை மறைவு காய் மறைவாய் சொன்ன பிறகு, அவர் என்னையோ நான் அவரையோ பார்க்கவில்லையே. நான் எங்கே இருக்கிறேன் என்பதை அவர் விரும்பியிருந்தால் கண்டுபிடிக்க முடியாதா? என்ன இது. ஏதோ பீச்சுக்குப் போனது மாதிரியும், சினிமாவுக்குச் சேர்ந்து போனது மாதிரியும், அவர் கையிலடித்து சத்தியம் செய்து கைவிட மாட்டேன்னு சொன்னது மாதிரியும்...

     அப்படியும், இப்படியுமாக... நினைத்துக் கொண்டிருந்த மல்லிகா, எப்படியும் அவனைப் பார்க்க வேண்டும் என்று துடித்தாள். எப்படிப் பார்ப்பது? எப்படியாவது பார்க்க வேண்டும். அவனை மட்டுமல்ல. அவள் அப்பாவையும், அம்மாவையும் பார்க்க வேண்டும். ‘அவரை’ப் பார்க்கக் கூட வேண்டாம். ‘அவரைப்’ பார்க்க வேண்டும்.

     காலையில் எழுந்ததும், அப்பா எழுவது வரைக்கும், அவள் தளத்திற்கும், வீட்டிற்குமாக நடந்து கொண்டிருந்தாள். அவரோ, நூறு ரூபாய் போனதுக்கு, நூறு மணி நேரம் தூங்கப் போகிறவர் போல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்பாவை எழுப்பலாமா? சீ, கூடாது. அம்மாவிடம் சொல்லிவிட்டு, அவங்களையே அப்பாவிடம் சொல்லும்படி சொல்லிவிட்டுப் போகலாமா?

     ஒரு மாதமாகப் பொறுத்திருந்தவள், அந்த ஒரு மணி நேரமும் பொறுக்க முடியாதவளாய் தவித்தாள். அப்பா அனுமதி கொடுப்பார் என்ற தைரியத்தில், அதிகாலையிலேயே குளித்தாள். அக்காளின் கல்யாணப் புடவையை வாங்கிக் கட்டிக் கொண்டாள். தம்பியின் கைக்குட்டையை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.

     பெருமாள் எழுந்தார். ‘டீ’ குடித்தார். சிகரெட் பிடித்தார். மல்லிகா பக்குவமாகச் சொல்வதாக நினைத்து, படபடவென்று பேசினாள்.

     “அப்பா, காலேஜுக்குத்தான் போக முடியாமல் போச்சு. அங்கே போய் என்னோட பி.யூ.சி. சர்டிபிகேட்டையும், டிரான்ஸ்பர் சர்டிபிகேட்டையும் வாங்கிட்டு வந்து விடுகிறேன். அப்பா லட்டர் கொடுத்தால் தான் பிரின்ஸ்பால் சர்டிபிகேட் கொடுப்பார். அதனால், அப்பா கிட்ட போய் ஒரு லட்டரை வாங்கிட்டு உடனே - உடனேயே புறப்பட்டு காலேஜில் போய் சர்டிபிகேட்டை வாங்கிட்டு வந்துடுறேன். பி.யூ.சி.யில் முதல் வகுப்பில் வந்த சர்டிபிகேட் என்கிட்ட இருந்தால் எப்போதாவது பிரயோஜனப்படும் இல்லியாப்பா?”

     பெருமாள், மகளையே பார்த்தார். சரஸ்வதியே அவதாரம் எடுத்திருபப்து போன்ற தோற்றம். முதல் வகுப்பில் பாஸ் பண்ணியவன், அந்த ‘அற்பப் பயல்’ வீட்டிலிருந்தால் பி.ஏ. முடிச்சிட்டு, எம்.ஏ. படித்துவிட்டு கலெக்டரா கூட போயிருப்பாள். முதல் வகுப்பு வாங்கியவள், முதல் வகுப்பு மட்டும் படித்த சொந்த அப்பன் கிட்ட வந்ததால் படிப்பு சொந்தமில்லாமல் போயிட்டுது. ஏன், நான் அவளைப் படிக்க வைத்தாலென்ன? அது எப்படி முடியும்? அதுல வேற ஒரு மாசம் ஆயிட்டுதே. இந்த கோணிக்கட்டு போனதுக்கே நான் இவ்வளவு வருத்தப்படுறேனே, அவள் கண்முன்னால படிப்பு போனதுக்கு எவ்வளவு வருத்தப்படுவாள்? அப்பனுக்கும் மகளுக்கும் எவ்வளவு பொருத்தம். நான் போலீஸ்காரனுக்குப் பயந்து கோணியை விட்டேன். இவள், ராமனுக்குப் பயந்து படிப்பை விட்டாள். கண்முன்னாலேயே, இரண்டு பேரும் கண்ணாய் நினைத்ததை கைவிட்டு விட்டோம். கோட்டை கட்டி ஆள வேண்டிய என் மகள், படிப்பையே ’கோட்டை’ விட்டுட்டாள்! எப்படி இருந்த மகள். எப்படி இருந்த என் ராசாத்தி. என்னோட ரேஸ் பைத்தியத்தால் அவளுக்கு உதவ முடியாமல் ஆயிட்டு. கடவுளே நீ பயங்கரமான ஜாக்கிடா, உன்னை நம்பி வாழ்க்கைக் குதிரையில் பந்தயம் வைக்க முடியாது.

     கணவன், மகளை அனுப்பி வைக்கத் தயங்குவதாக நினைத்து, செல்லம்மா “ஒரு மாதமாய் அடைந்து கிடக்காள். போயிட்டு வரட்டும்” என்றாள்.

     பெருமாள், மனைவி சொல்வதை மவுனமாகக் கேட்டுவிட்டு, பிறகு, “உன் இஷ்டம். போகணுமுன்னால் போயிட்டு வா. ஆனால் அந்த ‘அற்பன்’ கிட்ட அதிக நேரம் பேசாதே. அதுக்காக பேசாமலும் வந்துடாதே. ஆயிரந்தான் இருந்தாலும், அவன் உன்னை வளர்த்தவன். கேட்பார் பேச்சைக் கேட்டு கெட்டுப் போன பயல். ஆனால் ஒண்ணு... நீதான் அவனுக்கு எதையாவது வாங்கிட்டுப் போகணுமே தவிர, அவன் கொடுக்கிற எதையும் வாங்கப்படாது. இந்தா நாலு ரூபாய்தான் இருக்கு...”

     “ஒரு ரூபாய் ஐம்பது பைசா போதும்பா...”

     “பரவாயில்லை. இதுதான் நான் செய்யுற உருப்படியான செலவு. வச்சுக்கோ.”

     மல்லிகா, பணத்தை வாங்கிக் கொண்டாள். மீதிக் காசில் அப்பாவுக்கு ரசகுல்லா வாங்கிட்டுப் போகணும். அம்மாவுக்கு மசால் தோசை. நல்லா தின்பாங்க. மிச்சக் காசிருந்தால் சரவணனுக்கு ஒரு கைக்குட்டை.

     மல்லிகாவிற்கு வெட்கமாக இருந்தது. அவன் பதிலுக்கு என்ன கொடுப்பான்? என்ன கொடுக்கணும்? இந்த அப்பா, அந்த அப்பாகிட்ட எப்படி எப்படி நடந்துக்கணுமுன்னு சொல்றாரே. நான் சரவணனைப் பார்க்கப் போறதும் தெரிந்தால்... அவர் கிட்டேயும் எப்படி எப்படி நடக்கணுமுன்னு சொல்வாரா?

     அப்பா - அம்மாவைப் பார்க்கப் போகிற பாசத் துடிப்போடு, காதலித்தவனை காணப் போகிற நேச நெஞ்சோடு, அவள் புறப்பட்டாள். இதற்குள் விஷயத்தைப் புரிந்து கொண்ட ‘இட்லி’ ஆயா தங்கம்மா “வந்துடு கண்ணு. இருந்துடாதே” என்றாள். ராக்கம்மாள், “நீ மட்டும் இங்கே வர்ல... நான் வீட்டைக் காலி பண்ணிடுவேம்மா...” என்றாள்.

     மல்லிகா சிரித்துக் கொண்டே புறப்பட்டாள். பெருமாள் பஸ் நிலையம் வரைக்கும் வழியனுப்ப எழுந்தார். செல்லம்மா தன் வயிற்றை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, ‘அண்ணன் அவளை நாலு அடி அடித்தாவது அங்கேயே இருக்கச் சொல்லணும்’ என்று நினைத்துக் கொண்டாள்.

     பெற்றவனும், அவருக்குப் பிறந்தவளும், வாசலைத் தாண்டப் போகிற சமயத்தில் எதிர்ப்பக்கத்தில் இருந்து பெருமாளின் பதினேழு வயது மகன் பரமசிவன் படி வாசலைத் தாண்டினான். சொக்கலிங்கத்தின் அரிசி மண்டியில் வேலை பார்ப்பவன். வேளச்சேரியில் இருக்கும் அந்தக் கடையை கவனித்துக் கொண்டு, அந்த கடைக்கருகே உள்ள ஒரு சின்ன அறையிலேயே தூங்கிக் கொள்பவன். மல்லிகா வந்த பிறகும், இன்று வரை அங்கே தான் இருந்தான். சொக்கலிங்கமும், அவனைப் போகச் சொன்னதில்லை. பெருமாளும் அவனை வரச் சொன்னதில்லை.

     பெருமாள், மகனை செல்லமாய் அதட்டினார்:

     “என்னடா... காலங் காத்தால, இங்கே ஏதும் அரிசி மூட்டை கொண்டு வந்தியா...”

     “ஒரேயடியா வந்துட்டேன்.”

     “ஏண்டா?”

     ”நம்மளால் அங்கே இருக்க முடியாது.”

     “அதுக்கு என்னடா அர்த்தம்? சொல்றதைச் சீக்கிரமாச் சொல்லித் தொலையேண்டா.”

     “ஒண்ணுமில்ல. வழக்கமா வாரது மாதிரி மாமா கடையில கணக்குப் பார்க்க வந்தார். கூட அந்த சகுனி ராமசாமியும் வந்தாரு. வந்ததும் வராததுமாய் அக்காளை, நன்றிகெட்ட நாயின்னும், கள்ளின்னும் கண்டபடி பேசினாரு. நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன். முடியல. ‘எங்க அக்காவை பேசினால், இடுப்பை ஒடிச்சுடுவேன்’ என்றேன். உடனே அவன் ‘உன் அக்காதான் போயிட்டாள், உனக்கு எதுக்குடா இங்கே வேலை? இங்கே நடக்கிறதை அங்கே சொல்றதுக்காக இருக்கியா? மானமுள்ளவனாய் இருந்தால் போயேண்டா’ன்னான். நான் ‘சரிதான் போய்யா’ன்னுட்டு வந்துட்டேன். சரி பசிக்குது, இட்லி இருக்கா?”

     செல்லம்மா, பதறிப் பதறிக் கேட்டாள்: “மாமா உன்னை பேசாத போது, நீ எதுக்குடா வந்தே...”

     “முதல்ல உன்னை உன் அண்ணன்கிட்ட அனுப்பணும்மா. அக்காளை ராமசாமி கண்டபடி பேசுறான். மாமா தட்டிக் கேட்கல. அப்புறம் என்னை போடாங்கிறான். அதுக்கும் அவரு பேசாமல் இருக்கிறார். மவுனம் சம்மதமுன்னு தானே ஆகுது? அப்படிப்பட்ட மனுஷன் கடையில் எனக்கென்ன வேலை? கட்டுனவனுக்கு ஒரு கடை, கட்டாதவனுக்கு எத்தனையோ கடை. எங்க அக்காளை அவன் பேசின பேச்சுக்கு, ஒரு நாளைக்கு... இந்த ராமசாமியை கவனிக்கத்தான் போகிறேன். என்னைப் பேசினால் பேசட்டும். அக்காவை எப்படிப் பேசலாம்? இவள் கால் தூசிக்கு அவன் பெறுவானா?”

     மல்லிகா, தம்பியையே வெறித்துப் பார்த்தாள். அவனைப் போகச் சொன்ன இடத்திற்கு, நான் போகக் கூடாது. தனக்காக வந்த தம்பியை, அவள் அழப் போகிறவள் போலவும், அழுது முடித்தவள் போலவும் பார்த்தாள்.

     அவள் சிந்தித்தாள். ‘அதோடு என்னையும் அந்த ராமசாமி எதையாவது பேசி, அதையும் அந்த அப்பா சம்மதத்தோட கேட்டுக்கிட்டு இருந்தால், என்னால தாங்க முடியாது. சரி, சரவணனையாவது பார்க்கலாமா... வேண்டாம். கூடாது. முடியாது. என்னை தோளோடு தோளாய் எடுத்து வளர்த்த அப்பாவே என்னை ஒருத்தர் திட்டும் போது சும்மா இருந்தார் என்றால், பாசமேது? பந்தமேது? இந்த சரவணன் மட்டும், என் புதிய நிலையை தெரிந்ததும், என்னிடம் பாராமுகமாய் இருக்கமாட்டார் என்கிறது என்ன நிச்சயம்? எதுவும் இல்லாத ஏழைகளுக்கு இருக்கக் கூடிய ஒரே சொத்து தன்மானந்தான். அதையும் விட்டால் எப்படி? நூறு ரூபாய் நஷ்டப்பட்டாலும், எனக்கு ஐந்து ரூபாய் நீட்டிய இந்த அப்பா... எனக்காக வேலையை விட்டுட்டு, அதுவும் முதலாளி மாதிரி தனியா நடத்தின கடையை விட்டுட்டு வந்த தம்பி... அங்கே போகாதே, என்று சொல்கிற ஆயா, ராக்கம்மாள் இவர்கள் பாசத்தையே என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அவங்க பாசத்தையும் வாங்கித் தின்னு வயிறு குமட்ட வேண்டாம்.’

     மல்லிகா வீட்டிற்குள் போய், பட்டுப் புடவையைக் கொடுத்து விட்டு, நூல் புடவையைக் கட்டிக் கொண்டாள். கண் மையை அழித்துக் கொண்டாள். அவளின் அலங்காரம் எதுவுமே உதவவில்லை. ஆனால் அங்கே போவதற்காக அவள் வைத்திருந்த ஒன்றே ஒன்றுதான் அவளுக்கு உதவியது. தம்பியின் கைக்குட்டை!

     இடுப்பில், இருப்பது தெரியாமல் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து, அவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள். அப்போதும் துக்கத்தைத் துடைக்க முடியாமல், தன் தொண்டையைப் பிடித்துக் கொண்டாள்.

     மல்லிகா, தன்னை மறப்பதற்காக, அந்த ஏழைக் குடித்தனக்காரர்களை அதிகமாக நினைத்து, சேவையில் செயல்பட்டாள்.

     ரமணனை, இரண்டு நாளாகக் காணவில்லை. அவளுக்கு, அது ஆச்சரியமாகவும், ஆனந்தமான ஆறுதலாகவும் இருந்தது.