உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
7 இந்த நேரத்தில் ஒரு நாள் சொக்கலிங்கத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர், உடனே வந்துவிட்டதால், ஈமப்பத்திரிகைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. என்றாலும் மனிதர் ஆடிப் போய் விட்டார். இது, இரண்டாவது முறை. மூன்றாவது எப்படி இருக்குமோ... பார்வதியும், மல்லிகாவும், அவரை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டார்கள். உறவினர்கள் வந்த வண்ணமாக இருந்தார்கள். செல்லம்மாவும் வந்து பார்த்தாள். கல்யாணமாகி கர்ப்பம் தரித்திருக்கும் சந்திராவும், அவள் புருஷனும் வந்தார்கள். எல்லோரும் வந்தார்கள். ஆனால் பெருமாள் மட்டும் எட்டிப் பார்க்கவில்லை. எப்படியோ, சொக்கலிங்கம் தேறி வந்து கொண்டிருந்த போது, ஒரு நாள் பார்வதி, தேம்பி அழுது கொண்டிருந்தாள். கணவர் பதறிப் போனார். “ஏம்மா அழுவுறே... எனக்குத்தான் சுகமாயிக்கிட்டே வருதே!” “ஏதோ ஆண்டவன் புண்ணியத்தால, இந்தத் தடவை என் தாலி கெட்டியாய் இருக்கு... இன்னொரு தடவை இப்படி வந்து, நடக்கக் கூடாதது நடந்துவிட்டால், என் கதியை நினைத்துப் பார்த்தேன். நாய் கூட திரும்பிப் பாராது.” “பைத்தியம்... அப்படியெல்லாம் பேசப்படாது. உனக்கு ஒரு குறையும் வராது. மல்லிகா நல்ல பொண்ணு.” “மல்லி நல்லவள் தான்... அவளுக்கு வாய்க்கிறவன் நல்லவனாய் இருக்கணுங்கறது என்ன கட்டாயம்? அவள் அப்பன்... என்னை மிரட்ட மாட்டான் என்கிறது என்ன நிச்சயம்?” “சரி, கவலைப்படாதே... உடம்பு சுகமானதும், அவளுக்கு நல்ல பையனாய் பார்க்கிறேன்!” “கையில வெண்ணெயை வைத்துக்கிட்டு எதுக்காக நெய்க்கு அலையணும்?” “என்ன சொல்றே?” “நம்ம ராமன்...” “நெஞ்சு லேசா வலிக்குது... மருந்தை எடு.” “என்னை குழந்தை மாதிரி வச்சிருக்கிங்க... இனிமேல் வேலைக்காரியாய் ஆகப் போறேன்.” சொக்கலிங்கம், நான்கைந்து நாட்களாக தலையை உருட்டிக் கொண்டு யோசித்தார். மனைவி சொல்வதில் ஓரளவு நியாயம் இருப்பது போல் அவருக்குத் தோன்றியது. அவர் காலத்திற்குப் பிறகு, அவள் காலம் எப்படி ஆகுமோ... அவள் சொல்வது மாதிரி... பெருமாள் ஏடா கோடம் செய்தால்...? போன உயிரை டாக்டர் மீட்டுயிருக்காரு... ஆனால் இந்த பெருமாள் ‘இருக்கியா செத்தியான்னு’ கூட கேட்கல... போதாக்குறைக்கு, “உன் மச்சான் மண்டையை போடட்டும். அப்புறந்தான் விவகாரமே இருக்கு” என்று இரண்டாவது மைத்துனன் கிட்ட சொல்றானாம். சொன்னபடி செய்றவனாச்சே... பார்வதிக்கு பாதுகாப்பு இல்லாமல் போயிடக் கூடாதே... நமக்கோ இந்த மாரடைப்பு எப்போ வேணுமுன்னாலும் வரலாம்... நீரிழிவு... இரத்த அழுத்த நோய்... இதுல ஒவ்வொண்ணும் முறை வைத்தது மாதிரி, நெஞ்சை அடைக்குது... திடீர்னு செத்து... விவகாரம் தீராமல் போனால், எல்லோருக்குமே தொல்லை... இந்த மல்லிகா வேறு... வர வர ஒதுங்கி ஒதுங்கிப் போறாள். இவளையும் நம்ப முடியாது போலிருக்கு... எப்படியாவது பார்வதிக்கும் பாதுகாப்பு வேணும்... மல்லிகாவுக்கும் பாதுகாப்பு வேணும். ராமனை மாதிரி ரவுடியாலதான் சொத்துக்களைக் காப்பாற்ற முடியும்... அதுக்காக மல்லிகாவை... அவனுக்கு... ஒருநாள் பார்வதி அவருக்கு ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்த போது, அவர் சில சந்தேகங்களைக் கேட்க, பார்வதி அவற்றைத் தீர்த்து வைத்தாள். “ராமன் படிக்காதவனாச்சே...” “படித்தவங்க மட்டும் என்னத்த கிழிச்சிட்டாங்க... நம்ம எதிர்வீட்டு கமலா டாக்டருக்குப் படித்தவள். புருஷன் எஸ்.எஸ்.எல்.சி. பெயில். அவங்க குடும்ப உறவு எப்போதாவது பெயிலாகி இருக்கா? மூணாவது தெருவுல இருக்காளே... முனுசாமி மகள் சரோஜா... பி.ஏ. படித்துவிட்டு ஆபீசரா வேலை பார்க்கிறாள். ஒரு பஸ் கண்டக்டரை கல்யாணம் செய்துக்கிட்டு சந்தோஷமாத்தானே இருக்கிறாள். எப்பவாவது அந்த கண்டக்டர், பஸ்ல முறைக்கது மாதிரி அவளை முறைக்கிறானா... படிப்பு... இந்தக் காலத்தில் தண்ணி பட்டபாடு. மரியாதை கிடையாது.” “அதிகமாய் குடிக்கானடி...” “இப்போ நாட்டுல எவன் குடிக்கல? குடிக்கிறது பெரிய பாவமா? நான் கூட ஜுரத்துல துடிக்கையில்... எங்க டாக்டர் சொன்னார்னு, இரண்டு ஸ்பூன் விஸ்கியையோ கிஸ்கியையோ கொடுக்கலியா... அதோட இப்போ ராமன் கொஞ்சம் கொஞ்சமாய் குடிக்கிறதை விட்டுக்கிட்டு வாரான். கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பழக்கத்தையும், மல்லிகாவைக் கட்டுனதும் மறந்துடுவான். அவளும் அவனைத் திருத்திடுவாள்.” “அவள் கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கிறேன்.” “நாம வளர்த்த பொண்ணு நம்மை மீறிப் போவாளா... ஒரு தடவை, ஒரு கிழவர் ‘யாரையாவது காதலிக்கியாமா’ என்று கேலியாகக் கேட்டதுக்கு ‘காதலாவது... கீதலாவது... அப்பா எவனையாவது காட்டி கட்டுன்னால் கட்டுவேன். வெட்டுன்னால் வெட்டுவேன்னு’ அவள் சொன்னது ஞாபகம் இருக்கா?” “எதுக்கும் நானே ஒரு வார்த்தை...” “நீங்க கேட்க வேண்டாம். வெட்கப்படுவாள். நானே கேக்கிறேன். அப்புறம் அவள் இஷ்டம்.” “சரி. எனக்கு மூளை குழம்புது. நாலையும் யோசித்து, நீயே ஒரு முடிவுக்கு வா... எனக்கு நீங்க எல்லாரும் நல்லா சந்தோஷமாய் இருக்கணுங்கிறதுதான்.” “நீங்க நினைக்கிறது மாதிரியே நடக்கும்.” பார்வதி ஆனந்தப் பரவசமாக வெளியே வந்தாள். அப்போது, அத்தானைப் பார்க்க அங்கே வந்த இரண்டாவது அண்ணன் சுப்பையாவிடம் “அவரு... ராமனுக்கு, மல்லிகாவை கொடுக்க சம்மதிச்சுட்டாரு. பெரியண்ணன் போட்ட குறி பலித்துவிட்டது” என்றாள். சுப்பையா வெளியே ஓடினார். பெரியண்ணன் போட்ட குறி பலித்தால், அவர் எப்படி பெரிய மனிதனாவது? அவர் பொறுப்பில் கல்யாணம் நடக்க வேண்டாமா? அவரை ‘குள்ளப் பயலே’ என்று சொல்லி அடிக்கப் போன ராமனுக்கா மல்லிகா? கூடாதுய்யா கூடாது. சுப்பையா ஓடினார். பெருமாள் வீட்டைப் பார்த்து ஓடினார். |