19

     அடிமேல் அடியடித்தால் அம்மியே நகரும் போது, சொக்கலிங்கத்தை சொக்க வைப்பது, மைத்துனர்மார்களுக்குச் சிரமமாகவில்லை. ஏற்கெனவே சட்டாம்பட்டி இளம் பெண்ணுடன், தன்னை இணைத்துப் பார்த்து, லேசாகத் திருப்திப்பட்டுக் கொண்ட அவரிடம், “உமக்குன்னு ஒரு குழந்தை இருந்திருந்தால்... இந்த மல்லிகா மாதுரி நடக்குமா? தான் பெறணும் பிள்ளை... தன்னோட பிறக்கணும் பிறவி” என்று சொல்லும் போதெல்லாம், சொக்கலிங்கம் “போங்கப்பா” என்று சிணுங்கி மைத்துனன்மார்களின் வயிற்றில் நிஜமாகவே, ‘கிச்சுக் கிச்சு’ காட்டினார்.

     பிறகு, ஒரு சமயம் திருச்செந்தூர் கோவிலுக்குப் போகும் சாக்கில், அவரைச் சட்டாம்பட்டிக்குக் கூட்டிப் போய், பேச்சியம்மாவைக் காட்டினார்கள். “என்னை சித்திகிட்ட இருந்து காப்பாத்துங்க தாத்தா” என்பது மாதிரி பார்த்த பேச்சியின் பார்வையை, சொக்கு, காதல் சமிக்ஞையாக எடுத்துக் கொண்டார்.

     அப்புறம் சென்னைக்கு வந்த பிறகு, சொக்கலிங்கமே “எனக்குன்னு ஒரு பிள்ளை பிறக்க வேண்டாமா...” என்று சொல்வதும், உடனே, மைத்துனன்மார்கள் அவருக்கு ‘கிச்சு கிச்சு’ காட்டுவதும், கடைப் பையன்களுக்கே, தங்களையே யாரோ ‘கிச்சு கிச்சு’க் காட்டுவது போல் சிரிப்பைக் கொடுத்தது.

     பார்வதிக்கு, அண்ணன்மார்களின் திட்டம் புரியவில்லை. அவர்களிடமே, அவள் சொன்ன போது “ராமன், மல்லிகா இருந்தால் தான் உருப்படுவான். அவனை... சுவீகாரம் எடுத்தால், மச்சான் மண்டையப் போட்ட உடனே கோவிந்தா. சட்டாம்பட்டிக்காரியைக் கட்டினால்... உனக்கு அடக்கமாய் இருப்பாள். கிராமத்துப் பொண்ணு பாரு” என்றார்கள்.

     சொக்கலிங்கம் தன் சொந்தக்காரப் பெண்ணைக் கட்டிவிட்டால், அப்புறம் சொத்தை பரிபாலனம் செய்யலாம் என்று பார்வதியின் சின்ன அண்ணன் நினைத்தார்.

     பெரிய அண்ணன், இதைப் புரிந்து கொண்டு, “அது எப்படிடா?” என்றார். உடனே சின்னவர் “உன் பெண்ணை... என் மைத்துனன் என்ஜினியருக்கு முடிக்கலாமுன்னு நினைக்கேன். இப்போதான் ‘எப்படி’ன்னு யோசிக்கிறேன்” என்றார். அதனால், எதிர்ப்பை அகற்றிக் கொண்டே “எப்போடா... அந்தக் கல்யாணத்தை வைக்கலாம். எப்போடா இந்தக் கல்யாணத்தை வைக்கலாம்” என்றார் பெரியவர். பொது எதிரியான மல்லிகாவைக் கழித்துக் கட்டியாகிவிட்டது. இன்னொரு பொது எதிரியான ராமனையும் கழட்டி விட வேண்டும் என்ற பொது லட்சியம் அவர்களை ஒன்றுபடுத்தியது.

     பார்வதி, இதை படிப்படியாகப் புரிந்து கொண்டாள். கணவனிடம், கதறிப் பார்த்தாள். அண்ணன்மாரின் பாசம், வெறும் பாசாங்கு என்பதைப் புரிய வைக்கப் பார்த்தாள். ஆனால் சொக்கலிங்கம், அவளிடமே பல தடவை “நான் எதுக்கு சொல்றேன்னா பேச்சி...” என்று, பேச்சியம்மாவையே பேச்சுக்குப் பேச்சு சொன்னதால்... அது முற்றிவிட்ட பைத்தியம் என்பதைக் கண்டு கொண்டாள். சகித்துக் கொள்ளப் பார்த்தாள். ஒரு தடவை “என் மகள் மல்லிகா கிட்டேயே போயிடுறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டாள். சொக்கலிங்கம் அவளைப் பிடித்துக் கொண்டார். அவள், மார்க்கெட்டுக்குப் போகும் போது கூட கடைப்பையன்கள் மூலம் கண்காணித்தார். பார்வதியும் யோசித்தாள். எந்த முகத்தோடு என் மகளிடம் போக முடியும்? அவளை என்ன பாடு படுத்திவிட்டேன்... அவள் மனம் எப்படிக் கலங்கியிருக்கும்... அவள் இங்கே இருந்தால், இப்போ எப்படி இருக்கும்...!

     பார்வதி யோசித்துக் கொண்டிருந்த போது, பின் யோசனை இல்லாமலே, சொக்கலிங்கத்திற்கும் பேச்சியம்மைக்கும் கல்யாணம் நிச்சயமாகி, தேதியும் குறித்தாகி விட்டது. சட்டாம்பட்டியில் இருந்து, சித்திக்காரி வந்து, வாயெல்லாம் பல்லாகப் பேசி, பணத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டாள். இனிமேல் பேச்சியைப் பிடித்துக் கொடுக்க வேண்டியது தான் பாக்கி.

     விஷயத்தைக் கேள்விப்பட்ட ராமன் கொதித்தான். ‘ஒரு நாள் சின்ன மாமா கடையில், ஏதோ ‘தமாஷா’ சோடா பாட்டில் வீசினால், சோமாறி மாமன்கள் இப்படியா பண்றது. அந்த ‘கிழவன்’ இன்னாதான் நினைச்சிருக்கிறான். ஒரே பூடு பூட்டாத்தான் புத்தி வரும்! எனக்கு சொத்து தாரதாய் சொல்லிட்டு, என்னான்டயே, வேலையைக் காட்டுறான் கஸ்மாலம்’ என்று கொதித்து எழுந்தான். வயிறு முட்டக் குடித்து விட்டு, சொக்கலிங்கத்தின் முன்னால் வந்து கத்தினான்.

     “கிழவா... அந்தப் பெண்ணோட வயசென்ன ஒன்னோட வயசென்ன... யோசித்துப் பாருடா... அப்பாவிப் பொண்ணை ஏண்டா கெடுக்கிறே கஸ்மாலம்? மவனே... இப்போ சொல்றது தான், எப்போ சொல்றதும்... நீ எனக்கு சொத்து தராட்டியும் பரவாயில்லே... பேசாம மல்லிகாவை... கூட்டிக்கினு வா... அவள் எனக்கு வேண்டாம். ரீசண்டான மாப்பிள்ளையாப் பார்த்து கல்யாணம் செய்து வை. இல்லே... ஏண்டா கஸ்மாலம் பேச மாட்டே? சாவுற வயசுல ஆசயப் பாரு... ஏய்... டேய்... ஏய்...”

     சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். அந்த ரவுடி சொன்ன வார்த்தை என்னும் சேற்றுக்குள்ளும், மனிதாபிமானம் என்ற செந்தாமரை பூத்திருப்பதைக் கண்டார். வீணான அவப்பெயருக்கு ஆளாகிவிட்டோமே என்று வருந்தினார். அதே சமயம், பேச்சியம்மாவையும் அவரால் மறக்க முடியவில்லை. இப்படி, என்ன செய்வதென்று அவர் தவித்துக் கொண்டிருந்த போது, மல்லிகாவிடம் இருந்து சொத்துக்கு உருமை கோரி நோட்டீஸ் வந்தது. அது அவருக்கு, தனது ஈமச் சடங்கிற்கான பத்திரிகை போல் தெரிந்தது. அதில் கறுப்பு பார்டர் போட்டிருக்கும்! இதை, கறுப்புக் கவுன் போட்ட வக்கீல் அனுப்பியிருக்கிறார்.

     “என் மகளா... இப்படிச் செய்துவிட்டாள்? என் மகள் என்றால் இப்படிச் செய்வாளா... செல்லக்கிளியே... இதுக்கா உன்னை வளர்த்தேன்... இதுக்கா உன்னை தத்து எடுத்தேன்? இதுக்கா... இதுக்காம்மா?” அவருக்கு அழுகையே வந்துவிட்டது.

     ஓரிரு நாட்கள் ஓடின. சட்டாம்பட்டியில் இருந்து, கல்யாணம் கிடையாது என்று வந்த கடிதத்தை, பார்வதி, பிரித்துப் படிக்குமுன்னாலேயே, அந்தக் கடிதம், எங்கிருந்து வந்தது என்ற விவரம் தெரியும் முன்னாலேயே, சொக்கலிங்கம் மார்பைப் பிடித்துக் கொண்டே கத்தினார்.

     “எய்யா... எம்மா... நெஞ்சை வலிக்கே... நெஞ்சு...”

     சொக்கலிங்கம், மார்பைப் பிடித்துக் கொண்டே படுக்கையில் விழுந்தார். “என்னாங்க... என்னாங்க” என்று சொல்லிக் கொண்டே ஓடி வந்த பார்வதியின் வார்த்தைகள் தன் காதில் விழும் முன்பே, அவர் படுக்கையில் விழுந்தார்.