உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
17 ஒரு வாரம், சொல்லாமல் கொள்ளாமல் ஓடியது. எதிரிகள் ஒட்டு மொத்தமாகச் சேரும்போது, அவர்களில் மிகவும் ஏலாத ஏழை மீது தான், அதிகமாகக் கோபம் வரும் என்பார்கள். இதுபோல், வீட்டுக்காரிக்கும், ஊசிப்போன இட்லிபோல் தோன்றும், ‘இட்லி ஆயா’, தங்கம்மா மீதுதான் அளவுக்கு மீறி ஆத்திரம் வந்தது. சமயத்தை எதிர்பார்த்திருந்தாள். அந்த வீட்டின் வெளித் திண்ணையில், ஆயா கடை போட்டிருந்தாள். கரிப்புகையாலேயே கறுத்துப் போன ஒரு ஸ்டவ் அடுப்பில் நெருப்பு மூட்டி, வாணலியில் உளுத்தம் பருப்பு மாவை, பிடித்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவை, ‘கடுக்கண்கள்’ கழட்டப்பட்ட காதுகள் மாதிரி, ‘மெது’ வடைகளாக மலர்ந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே சுடப்பட்ட இட்லிகள், ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்தன. கூடத்தின் வளைவில் கட்டப்பட்டிருந்த கோணி, பாதி தூரம் தொங்கிக் கொண்டிருந்தது. நான்கைந்து கண்ணாடிப் பாத்திரங்களில் பல்பம், நிலக்கடலை மிட்டாய் போன்ற வகையறாக்கள் நிரம்பி இருந்தன. சில பெண்கள் இட்லிகளை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஒருசில சிறுவர்கள், வேர்க்கடலை மிட்டாய்களையும், கையில் இருந்த காசுகளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். காலையில் எட்டு மணிக்கு எழும் வீட்டுக்காரி, அன்று சீக்கிரமாக துயில் கலைந்திருக்க வேண்டும். திண்ணைக்கு அருகே வந்து, அதனுடன் ஒட்டிப் போட்டிருந்த கம்புத் தூணைப் பிடித்துக் கொண்டே, முதலில் செருமினாள். ஆயா, திரும்பிப் பார்த்ததும் கர்ஜித்தாள். “ஆயா... ஒன்கிட்ட எத்தன தடவ சொல்றது... போன வாரமே... இனுமேல் திண்ணையில்... கடை போடப்படாதுன்னு சொன்னோமுல்ல? ஒன் செவிட்டுக் காதுல விழலியா... நான் சொல்லியும்... திண்ணையை பிடிச்சிட்டு இருந்தால் என்ன அர்த்தமின்னேன்... ஒன்னால திண்ணையக் காலி பண்ண முடியுமா... முடியாதா? எனக்கு இப்போவே தெரியணும்...” ஆயா, அவளையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தாள். மலர்ந்த வடைகள் வாணலியில், கருகிக் கொண்டிருந்தன. “ஒன்னத்தான்... சொல்றது காதுல விழல? ஒனக்குல்லாம் சொல்றதோட நிறுத்திக்கிறது தப்பு...” ஆயா மன்றாடினாள். “குயந்தே... நீ சின்னப் பிள்ளையா இருக்கும்போதே போட்ட கடை குயந்தே... ஒனக்குக் கூட அப்போ ஓசில வடை தந்திருக்கேன் குயந்தே... ஒன் நயினா... இந்த வீட்டை வாங்குமுன்னால... இருந்த புண்ணியவான் தான்... நான் படுற கஷ்டத்தைப் பாத்துட்டு, ‘தங்கம்... பேசாம திண்ணையிலேயே... இட்லி வடை போடு... நீ போட்டால்... திண்ணையிலே வழக்கமா உட்காருற ரௌடிப் பசங்களையும் பகைக்காமலே விரட்டிப்பிடலா’முன்னு சொல்லி அந்த மவராசன் தான் கடைபோட காசு கூட கொடுத்தார்... ஒன் நயினாவும் கண்டுக்கல... முப்பது முப்பத்தஞ்சு வருஷமா... இங்கேயே கடை போட்டிருக்கேன் குயந்தே... நீ காலி பண்ணச் சொல்றது நாயமா குயந்தே...” ‘குயந்தே’ இப்போது, கூப்பாடு போட்டது. “ஒன் மனசில என்னதான் நினைச்சிகிட்டே... திண்ணைய... அசிங்கமா வைக்க முடியாது... மரியாதியா... இப்பவே... கீழே இறங்கு... இறங்குறியா... இல்ல இறக்கட்டுமா?” “இப்படிச் சொன்னா எப்படி குயந்தே... இந்த தள்ளாத வயசுல... எங்கே குயந்தே போவேன்...” “எங்கேயாவது போ... எனக்கென்ன... தெருவுல போற நாய்க்கெல்லாம்... நான் இடம் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா...” “எனக்கு எதுக்கு மரியாதி கொடுக்காட்டாலும்... வயசுக்காவது மரியாதி கொடு குயந்தே... நாயி நரியின்னு வாய்க்கு வந்தபடி பேசாத குயந்தே... அப்புறம் ஒன் வாய்தான் அழுவிப் போயிடும் குயந்தே...” “அந்த அளவுக்கு திமுறு வந்துட்டா ஒனக்கு... பாத்துப்புடலாம்...” வீட்டுக்காரி, பயங்கரமாக பல்லைக் கடித்துக் கொண்டு கோணியை அறுத்தாள். ஆயாவின் ஸ்டவ் அடுப்பை தரதரவென்று இழுத்து, திண்ணைக்குக் கீழே போட்டாள். இந்த முயற்சியில், வாணலியில் கொதித்த எண்ணெய், ஆயாவின் கை காலில் விழுந்தது. அவள் சதையை வேகவைத்து கொதித்தது. ஆயா, வலி பொறுக்க முடியாமல் கத்தினாள். “அய்யோ... மாரியாத்தா... இந்த அநியாயத்த கேட்க ஆளில்லையா... ஆளில்லையா? குயந்தே... வீட்டுக்கார குயந்தே... இந்த எண்ணைய எடுத்து என் மேல வாணுமுன்னாலும் கொட்டு... ஆனால் என்னோட... ‘பொயப்ப’ கெடுத்திடாத குயந்தே... கெடுத்திடாதே...” வீட்டுக்காரி விடவில்லை. ஆயாவின் இட்லி தட்டையும் எடுத்துக் கீழே போட்டுவிட்டு, கண்ணாடிப் பாத்திரங்களையும் இறக்கிவிட்டு, ஆயாவின் கைகளைப் பிடித்து “மொதல்ல கீழே இறங்கு... ஒங்களுக்குல்லாம் வாயால சொன்னால் பத்தாது” என்று கீழே இழுத்த போது, ராக்கம்மா வந்தாள். வீட்டுக்காரியின் கை போகிற இடமெல்லாம் ஆயாவின் உடம்பு முழுவதும் ஒட்டு மொத்தமாக, பூசணிப்பழம் மாதிரி அலைக்கழிவதைப் பார்க்கப் பார்க்க, அவளுக்குத் தான் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை. வீட்டுக்காரியின் கையைப் பிடித்து, மடக்கித் தள்ளினாள். அந்த வேகத்தில், வீட்டுக்காரி எதிரே இருந்த குறுந்திண்ணையில் நெற்றி மோத, அலங்கோலமாக விழுந்தாள். அதை விட, அதிக அலங்கோலமாக சத்தம் போட்டாள். “என்னையாடி... அடிச்சிட்டே... என்னையாடி... அடிச்சிட்டே... அய்யோ... எனக்குத் தலை சுத்துதே... தலை சுத்துதே...” கீழே கிடந்த வீட்டுக்காரியை, ராக்கம்மா தூக்கி நிறுத்த முயற்சி செய்த போது, தரையில் தேய்த்ததால் சிராய்ப்பாகி, மரத்தின் பட்டையைக் கீறினால், செக்கச் செவேலென்று வரும் மரச்சதை மாதிரி ஆயாவின் சதைப் பகுதியில் ரத்தம் கசிந்தது. ஆயா அதை கையால் பிதுக்கிப் பார்த்துக் கொண்டே மௌனமாகப் பார்த்தாள். இதற்குள் சத்தங்கேட்டு, மல்லிகா உட்பட எல்லோரும் வந்தார்கள். ரமணன் அக்காவை வந்து தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீட்டுக்காரி, பிரளயப் புலம்பலை பிரசவித்தாள். “பிளான்போட்டாடி வந்திங்க? என்னை கை நீட்டியாடி அடிச்சே... அடிச்ச கையில... காப்பு மாட்டுறேனா... இல்லியான்னு பாரு. ஒரு அடிக்கு... ஒன்பது அடி வாங்கித் தராட்டால்... என் பேரு... என்... பேரு...” வீட்டுக்காரி, தன் பெயரையே ஞாபகப்படுத்த முடியாமல் திணறிவிட்டு, பிறகு “ஏ... ரமணா... போலீஸுக்கு... போன் பண்ணிட்டு வாடா... இன்னுமாடா நிக்கே... எருமை மாடு...” என்றாள். ரமணன் வெளியே ஓடினான். ராக்கம்மா, வீட்டுக்காரியை பயந்தவள் மாதிரியும், பயப்படுத்துபவள் மாதிரியும் பார்த்துக் கொண்டிருந்த போது, மல்லிகா, ஆயாவின் குருதி படர்ந்த கால் பகுதியை, கைக்குட்டையால் துடைத்து விட்டு, அக்காள் சந்திராவைப் பார்த்த போது, அவள் வீட்டுக்குள் போய், தேங்காய் எண்ணெய் கொண்டு வந்தாள். மல்லிகா, எண்ணெயை ஊற்றி, ஆயாவின் காலில் தேய்த்தாள். கட்டிய கணவனையும் பெற்ற பிள்ளைகளையும் ‘குண்டு’க்குக் கொடுத்து விட்டு, கடந்த முப்பதாண்டு காலத்திற்கும் மேலாக, அன்பின் பரிச்சயம் கிடைத்தாலும், அதன் அரவணைப்புக் கிடைக்காமல், உள்ளூர ஏங்கிக் கொண்டிருந்த ஆயா, மல்லிகாவின் அன்பில் நெகிழ்ந்து குழைந்து மேனியெங்கும் பரவசமாக, ஆனந்தமும், சோகமும் மறைந்து, அவை இரண்டிற்கும் அப்பாற்பட்ட ஞானிகளின் குறிக்கோள் போல் தோன்றும் அடையாளம் கண்டாலும் காட்ட முடியாத ஒரு பேருணர்வு ஆட்கொள்ளப் பட்டவளாய், ஆயா விம்மினாள். தன்னையறியாமலே, வீட்டுக்காரருக்குக் கூட நன்றி சொல்லிக் கொண்டாள். இதற்குள், ராக்கம்மாவும் கந்தசாமியின் மனைவியும் கீழே இருந்த ஸ்டவ்வை எடுத்து திண்ணையில் வைத்தார்கள். இட்லி தட்டை ஒழுங்கு படுத்தி வைத்தார்கள். ‘கோணிக் கதவை’ கட்டி முடித்தார்கள். வீட்டுக்காரி, அவளைத் தடுக்கப் போனாள். கந்தசாமியின் மனைவி “இனிமே... கொலை விழுண்டி” என்று அதட்டிய போது, வீட்டுக்காரி தெருவுக்கே வந்து, போலீஸ்காரர்களை எதிர்பார்த்து நின்றாள். தெருவெங்கும் கூட்டம். போலீஸ் வந்தது. ‘வானோடு’ வந்தது. ஒரு போலீஸ்காரர் ‘வான்’ கதவை முற்றிலும் திறந்து கொண்டு வெளிப்படும் போதே, “யாரும்மே... ராக்கம்மா... யாரும்மே தங்கம்மா...” என்று அதட்டினார். “நான் தான் ராக்கம்மா...” என்றாள் அந்தப் பெயருக்குரியவள் கம்பீரமாக. “அந்த அம்மாவை எதுக்குமே அடிச்சே...” மல்லிகாவிற்கு, விஸ்வரூபம் எடுத்தது போலிருந்தது. கல்லூரி மேடையில் சிலிர்த்து நிற்பாளே அப்படி. “ஸார்... ஒரு விஷயம்... தெரியாமத்தான் கேக்குறேன்... சட்டம் எல்லோருக்கும் சமமுன்னா... சட்டத்தை அமல் செய்கிறவங்க... எல்லோரையும் சமமாய் நினைக்கணுமுன்னு அர்த்தம்... அவங்க... பணக்காரி... அதனால் அம்மா... இவங்க... ஏழை... இதனால ‘மே’. ஒரு வேளை... பணக்காரியை ஒரு மாதிரியும்... ஏழையை இன்னொரு மாதிரியும் கூப்பிடணுமுன்னு சட்டத்துக்கு ‘அமெண்ட் மெண்ட்’ எதுவும் வந்திருக்கா... தெரியாமத்தான் கேக்கேன்...” போலீஸ்காரர்கள், மல்லிகாவைப் பார்த்தார்கள். கம்பீரமாக நின்ற ராக்கம்மாவைப் பார்த்தார்கள். பரிதாபமாகப் பார்த்த ‘இட்லி’ ஆயாவைப் பார்த்தார்கள். இது... ஸ்டேஷன்ல கவனிக்க வேண்டிய விவகாரம்... இந்தப் பொண்ணு... இங்க... கலாட்டாவை உண்டு பண்ணினாலும் பண்ணிடுவாள். முன்கோபி என்று பெயரெடுத்த ஒரு போலீஸ்காரரே, இப்போது சாந்த சொரூபியாகப் பதிலளித்தார். “நாங்களும்... மனுஷங்கதாம்மா... விசாரிக்காம எதுவும் செய்ய மாட்டோம்... ராக்கம்மா... வேன்ல ஏறு... ஆயா... நீயும் ‘வேன்ல’ ஏறு...” “எக்ஸ்யூஸ் மி ஸார்... ஆயாவை... இந்த அம்மா காலைப் பிடித்து ‘வயலண்டா’ இழுத்ததுல... இதோ பாருங்க... ரத்தத்தை... இதோ பாருங்க... சதை பிஞ்சி வந்துருக்கதை... இந்த ராக்கம்மா மட்டும், சமயத்துல வராட்டால், எங்க ஆயா... கீழே விழுந்து... போக வேண்டிய இடத்துக்குப் போயிருக்கலாம்... ஆயாவை... பலாத்காரமாய் இழுத்த... இந்த வீட்டுக்கார அம்மாவையும்... நீங்க ‘வேன்ல’ ஏத்தணும்...” ஒரு போலீஸ்காரருக்குக் கோபம் வந்தது. “நீ லிமிட் தாண்டிப் போறேம்மா...” “இதை விட்டு லிமிட்டைத் தாண்டி... நீங்க கொண்டு போறதாய் இருந்தால்... எல்லாரையும் கொண்டு போகணும்...” “இல்லன்னா...” “நாங்க... எல்லாரும்... வேனுக்கு முன்னால... நிற்கப் போறோம்... எங்களை பிணமாக்கிட்டு வேணுமுன்னால்... ஒங்க வேன் போகட்டும்... இதுல எல்லாருமே ஏழை பாழைங்க... செத்துப்போனால்... தேரெடுக்கக் கூட காசில்லாதவங்க... அதனால... இந்த வேனாலயே... எங்களை மோதி கொன்னுட்டு... அப்படியே எங்க பிணத்தையும் எடுத்துப் புதைச்சுட்டுப் போயிடுங்க...” மல்லிகா, சொன்னதுடன் நிற்காமல், வேனுக்கு முன்னால் போய் நின்றாள். ‘இட்லி’ ஆயா, மெள்ள மெள்ள நடந்து, மல்லிகாவுடன் சேர்ந்து கொண்டாள். கந்தசாமியின் மனைவி, ஓடிப் போய் நின்றாள். தயங்கி நின்றபடி, கைகளை நெறித்துக் கொண்டிருந்த செல்லம்மாவை, சந்திரா தள்ளிக் கொண்டே போய், வேனுக்கு முன்னால் போய் நின்றாள். அந்த வீட்டின் அத்தனைப் பெண்களும், வழி மறிப்பது போல் நின்ற போது, வழியெங்கும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெருங் கூட்டத்தின் ஒரு பகுதியும், வேனுக்கு முன்னால் போய் நின்றது. போலீஸ்காரர்கள், வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்டார்கள். அதாவது யோசிக்கத் துவங்கினார்கள். ஒருவர், ஒயர்லஸ் மூலம், கமிஷனர் அலுவலகத்திடம் தொடர்பு கொண்டார். ‘லத்தி சார்ஜ் பண்ணலாமா’ என்பது மாதிரி கேட்டார். ஆனால் அங்கிருந்து, டெப்டி கமிஷனர் வந்து பார்க்கப் போவதாக தகவல் வந்தது. போலீஸ்காரர்களின் முகங்களிலும், கரங்களிலும் முறையே ஈயும், லத்திக் கம்பும் ஆடவில்லை. ‘வேன்’ முன்னால் நின்ற கூட்டம், நேரம் ஆக ஆக, கம்பீரப் பட்டுக் கொண்டு வந்தது. கால் மணி நேரத்திற்குள், வெளியே ஒரு கம்பியை நீட்டிக் கொண்டு, ஜீப் வந்தது. டெப்டி - கமிஷனர் இறங்கினார். போலீஸ்காரர்களின் சல்யூட்டுக்கள், அவரின் நடைக்குத் தாளமாக இருந்தது. மல்லிகா, டெப்டிக்கு முன்னால் நின்று கொண்டு “நீங்களே விசாரிங்க ஸார்... இதோ... இந்த ஆயாவைப் பாருங்க ஸார்... முப்பது வருஷமா... இந்தத் திண்ணையில... கடை போட்டு... வாழ்கிறவள்... இந்தம்மா... ஆயாவை... கீழே இழுத்துப் போட முயற்சி செய்த போது... இந்த ராக்கம்மா, ஆயா அடிபடாமல் இருக்க இந்த அம்மாவை தள்ளியிருக்காள்... இந்த அம்மா மேலே பட்ட காயம் தற்செயலானது... ஆயா மேலே பட்டது அடாவடித்தனமானது... ஆனால் ஒங்க போலீஸ்காரங்க... ஆயாவையும், ராக்கம்மாவையும் ‘வேன்ல’ ஏறச் சொல்றாங்க... இந்த அம்மா ஏறக்கூடாதாம்... என்ன ஸார் நியாயம்? அதனால தான் சொல்றோம்... ஒண்ணு... எங்களையும் கூட்டிக்கிட்டு போங்க... இல்லேன்னா கொன்னுட்டுப் போங்க... இதைத் தவிர... ஏழை பாழைகளால என்ன செய்ய முடியும்... ஏழைகள் ஒற்றுமையாய் இருக்கக் கூடிய ஒரே விஷயம்... இந்த மாதிரியான அவல நிலையில்தான்...” டெப்டி கமிஷனர், தன் பெல்ட்டைப் பிடித்துக் கொண்டே யோசித்தார். இரண்டு தரப்பையும், ‘வேனில்’ ஏற்றாத போலீஸ்காரர்கள் மீது அவருக்குக் கோபம் வந்தது உண்மைதான். ஆனாலும், அந்த உண்மையை முகத்தில் கோர தாண்டவமாட விடவில்லை. அமைதியாகப் பேசினார். “நடந்தது நடந்துட்டு... இனிமேல் ஒற்றுமையாய இருக்கதாய்... இரண்டு தரப்பும் எழுதிக் கொடுத்தால்... இதோடு விட்டுடுறோம்... இல்லன்னா...” மல்லிகா... பதிலளித்தாள். “ஸார்... எலியும், பூனையும் சண்டைப் போடுதுன்னு சொல்வது மாதிரி இது... ஏன்னா... சண்டையைத் துவக்குனது இந்த அம்மா... அதனால அதை முடிக்க வேண்டியதும் அவங்க தான்... இருந்தாலும் பரவாயில்லை. பெரியவரான ஒங்கள் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நாங்க தகராறை முதலில் துவக்க மாட்டோமுன்னு எழுதிக் கொடுக்கோம்... சந்திராக்கா... ஒரு பேப்பர் கொண்டுவா...” மல்லிகா, சந்திரா கொடுத்த காகிதத்தில் மடமடவென்று எழுதினாள். எல்லோரும் கையெழுத்துப் போட்டார்கள். ஆயாவால் தான் முடியவில்லை. “குயந்தே... நீ சொல்லிக் கொடுத்த கையெழுத்து இதுக்கா பயன்படணும் குயந்தே...” “இதுக்குத்தான் பயன்படணும். படிச்சுப் பட்டம் பெற்ற பலர், தங்கள் கையெழுத்தை... எது எதுக்குல்லாமோ போடும் போது, நீங்க உரிமையை நிலை நாட்டற போராட்டத்துக்காகப் போடுறதுக்கு பெருமைப் படணும் ஆயா.” வீட்டுக்காரம்மா, பேசாமல் நின்றாள். இன்ஸ்பெக்டர் அண்ணன் பெயரைச் சொல்லி, எழுதாமல் இருந்து விடலாம் என்று தான் நினைத்தாள். ஆனால் இங்கிதம் தெரியாத ரமணன், அக்காவுக்கு உதவி செய்வதாக நினைத்து, ஒரு காகிதத்தை எடுத்து எதையோ எழுதி, அவளிடம் கையெழுத்துப் போட நீட்டினான். மல்லிகா இடைமறித்தாள். “ஸார்... ஆயாவோட... திண்ணைக் கடையை ஒன்றும் செய்ய மாட்டேன்னு எழுதிக் கொடுக்கச் சொல்லுங்க சார்.” டெப்டி - கமிஷனர், தலையாட்டிக் கொண்டே பேசினார். “ஆமாம்மா... அதையும் எழுதிடுங்க... வேணுமுன்னா ஸிவில் கேஸ் போட்டு கடையை எடுங்க... கிரிமினலா போகாதீங்க...” வீட்டுக்காரி, எழுதமாட்டாது எழுதியதில், ஆயா கடைக்குப் பாதுகாப்பு அங்கீகாரம் கொடுத்து எழுதி, முக்கி முணங்கி கையெழுத்துப் போட்டாள். டெப்டி - கமிஷனர், அதை வாங்கிக் கொண்டு, ஜீப்பில் ஏறப் போனார். ஆயா பேசாமல் இருப்பாளா? “போலீஸ் குயந்தைங்கா... என் கையால சுட்ட இந்த வடையைத் தின்னுட்டுத்தான் நீங்க போகணும்...” டெப்டி - கமிஷனர் சிரித்துக் கொண்டே சொன்னார்: “பரவாயில்லை ஆயா... வடைகளை விற்று... பணம் பண்ணு ஆயா” அப்பாவித்தனமாகப் பதிலளித்தார். “இனிமேல் யாரும் வாங்க மாட்டாங்க... குயந்தே... நாழியாயுட்டுது.” டெப்டி - கமிஷனர் சிரித்துக் கொண்டே, மெதுவடைகளை சைகை காட்ட, போலீஸ்காரர் அதை பொட்டணமாக்கினார். டெப்டி, ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து, ஆயாவின் மடியில் போட்டு விட்டு, ஜீப்பில் ஏறினார். வாங்குகிறவர்கள், கொடுத்து விட்டுப் போவதைப் பார்த்து கூட்டம் ஆச்சரியப்பட்டு, ஆனந்தப்பட்டது. வீட்டுக்காரி, மாடிக்கு ஓடினாள். சிறிது நேரத்தில் ரமணனும் பின்னால் ஓடினான். அவனை அவள் திட்டுவது இன்னும் கும்பல் கலையாமல் இருந்த கூட்டத்திற்கு நன்றாகக் கேட்டது. |