8

     மல்லிகா, ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து, ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். காலை நேரம். கல்லூரிக்குப் போக, இன்னும் நேரம் இருந்தது. புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, அன்று கல்லூரியில் நடக்க இருந்த பேச்சுப் போட்டி நினைவுக்கு வந்தது. பெயரைக் கொடுத்து விட்டாள். முதல் பரிசு சரவணனுக்கே போய்ச் சேரும். சந்தேகமே இல்லை. இரண்டாவது அல்லது மூன்றாவது பரிசாவது அவள் வாங்கியாக வேண்டும்.

     இரண்டு நாட்களுக்கு முன்பு, கல்லூரி வாசலில் சைக்கிள் பெடலில் ஒரு காலை வைத்துக் கொண்டு நின்ற சரவணனிடம், அவன் நண்பன் ஒருவன் “எங்கேடா புறப்பட்டுட்டே?” என்று கேட்டதும், அதற்கு அவன், “தி.நகரில் எங்க மாமா வீட்டுக்குப் போய்விட்டு வரணும்” என்று சொன்னதும், அவளுக்கு நினைவுக்கு வந்தது. உடனே, ‘என் வீடும் அங்கேதான் இருக்கு’ என்று அவனிடம் சொல்லவேண்டும் என்பது போல் துடித்தாள். துடித்தது, வாயில் வராத வார்த்தையாகி, இதயத்துள் எழுந்து, இனம் புரியாத இன்ப துன்ப எல்லையைக் கடந்த ஒரு வித மோன உணர்வாய் முகிழ்த்தது.

     மல்லிகா, ஊஞ்சல் பலகையில், இரண்டு நாட்களாக வந்து உட்காருவதற்குக் காரணமே இந்த சரவணன் தான். ஒரு வேளை அவனது மாமா வீடு, இந்தத் தெருவிலேயே இருக்கலாம். மாமாவீடு என்றாரே... அந்த மாமாவுக்கு பொண்ணு எதுவும் இருக்கலாமோ? அவளைக் காதலித்துத் தொலைத்திருக்கலாமோ?

     மல்லிகாவிற்கு தாபமாக இருந்தது. அவனை அப்போதே பார்க்க வேண்டும் என்பது போல் தோன்றியது. அடுத்த தெருவிலேயே ஒரு கூட்டம் நடந்து, அது எப்படிப்பட்ட கூட்டமாக இருந்தாலும், அவன் அதில் பேச வேண்டும்; அவள் முன் வரிசையில் உட்கார்ந்து, முன்பல் தெரியச் சிரித்து கைதட்ட வேண்டும் என்று நினைத்தாள். திடீரென்று அவள் மனதில் இன்னொரு எண்ணம்; சீச்சீ இந்த மாதிரி எண்ணம் வரக்கூடாது. அவரே பேச முயற்சி செய்யாதபோது, நான் ஏன் அவரைப் பற்றி நினைக்க வேண்டும்? எனக்கேன் தன்மானம் தலைகீழாகப் போகவேண்டும்?

     மல்லிகா, சரவணனை, மனதிலிருந்து வலுக்கட்டாயமாக விலக்கிக் கொண்டு, கையில் இருந்த புத்தகத்தில், கண்களைப் படரவிட்டாள்.

     வாசலில் சத்தம் கேட்டு, புத்தகத்தில் இருந்த கண்ணை விலக்கிய மல்லிகா வாசல் பக்கம் தயக்கத்துடன் நின்ற செல்லம்மாளைப் பார்த்துவிட்டு, பின்னர் சமையலறைக்குள் சரசமாடிக் கொண்டிருந்த பார்வதியை நோக்கி, கண்களை வீசிக்கொண்டே, “அம்மா... உன் நாத்தனார் வந்திருக்காங்க...” என்று கூறிவிட்டு, மீண்டும் புத்தகத்தின் முனையில் முன் தலை மோத, குனிந்தாள்.

     செல்லம்மாளுக்குப் பற்றி எரிந்தது. ஒட்டிப்போன வயிற்றின் ஓரமாகக் கிடந்த ‘அச்சடி’ புடவையை இழுத்து வயிற்றை மூடிக் கொண்டாள். வயிறாரப் பெற்ற மகள், மூணாவது மனுஷியைச் சொல்வது போல், ‘உன் நாத்தனார்’ என்றதுமே, அவள் ஒரு கணம் செத்துப் போனாள். மறுகணம் “ஆமாண்டி... நான் நாத்தனார் தான். பெத்த தாயையே நாத்தனாரா ஆக்கின உனக்கு ஒரு பிள்ளை பிறந்தால் தான், உனக்கு என் நிலைமை புரியுண்டி” என்று சொல்லப் போனாள். பிறகு, தான் பெற்ற பிள்ளைக்கு, தன்னைப் போன்ற நிலைமை வரக்கூடாது என்று நினைத்தவள் போலவும், மகளைத் திட்ட நினைத்ததர்கு அபராதம் செலுத்துபவள் போலவும், “மல்லிகா, உங்க அப்பாவை... எங்கம்மா?” என்று கேட்டாள்.

     மல்லிகா, அவளை நிமிர்ந்து பார்த்தாள். அந்த நடுத்தர வயதுக்காரியின் உதட்டுத் துடிப்பும், உட்குழி கண்ணும், அவளை என்னவோ செய்தது. ஊஞ்சல் பலகையில் இருந்து இறங்கி, “உள்ளே வாங்க” என்று சொல்லிக் கொண்டே, அவள் மீது கண்களை கருணையாய் பாய்த்துவிட்டு உள்ளே போய் விட்டாள்.

     ‘நீ உள்ளே வாங்கன்னு சொல்லாமல், வெளியே போங்கம்மான்னு ஒரு தடவையாவது சொன்னாலும் நான் சந்தோசப் பட்டிருப்பேனடி’ என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டு செல்லம்மாள் உள்ளே வந்தாள். பார்வதி செல்லம்மாளை வழக்கம் போல் எதிர்கொண்டு அழைக்கவில்லை.

     செல்லம்மா சமையலறைக்குள் போய் கொதித்துக் கொண்டிருந்த பாலை இறக்கப் போன பார்வதியிடம், “நான் இறக்குறேம்மா” என்று சொல்லிவிட்டு மட்டும் நிற்காமல் பாத்திரத்தையும் இறக்கி வைத்தாள். பின்னர், நாத்தனாரிடம் செயலில் பேச நினைத்தவள் போல், பக்கத்தில் கிடந்த துடைப்பத்தை எடுத்து சமையலறையைப் பெருக்கினாள். எச்சிக் காபி தம்ளர்களை துப்புறப்படுத்தி குலுக்கி அவற்றைக் கழுவி வைத்தாள். ஜொலித்துக் கொண்டிருந்த எவர்சில்வர் தம்ளர்களை, தன் புடவையை வைத்துத் துடைக்கப் போனாள். அந்த அழுக்குப் புடவையால் எவர்சில்வர் அழுக்காகும் என்று நினைத்தோ அல்லது எவர்சில்வர் அதில் ஒட்டிக் கொண்டு எடை குறையும் என்று எண்ணியோ, “தம்ளருங்க நல்லாத்தானே இருக்கு” என்று பார்வதி முகத்தை அந்தப் பெயருக்குரிய லட்சணம் இல்லாமல் சுருக்கிக் கொண்டே கேட்டாள்.

     பெருமாள் பேசிய பேச்சு, அவளுக்கு அப்போது முழுதாகக் கேட்டது.

     சிறிது நேரம் மௌனம்.

     செல்லம்மா திக்கித் திணறிப் பேச்சைத் துவக்கினாள்.

     “பார்வதி... நான் கேள்விப்பட்டது நிசந்தானா...?”

     பார்வதிக்கு, எரிச்சலுக்கு மேல் எரிச்சல் தமாஷாசுப் பேசுவது போல், திமிராகச் சொன்னாள்...

     “நீங்க எதைக் கேள்விப்பட்டீங்கண்ணு, நான் என்ன கனவா கண்டேன்...?”

     “இல்ல... நம்ம மல்லிகாவிற்கு... மாப்பிள்ளை...”

     “ஆமாம், பார்த்துகிட்டு இருக்கோம்...”

     “முடிச்சுட்டதா கேள்விப்பட்டேன்...”

     “முடிஞ்சது மாதிரிதான்...”

     “நம்ம ராமன் தான் மாப்பிள்ளையாமே...”

     “ராமனே தான்...”

     செல்லம்மா லேசாகக் கூனிக் குறுகினாள். மேற்கொண்டு பேசினால் அவள் பத்ரகாளியாவாள் என்று தெரியும். அவள் தன் உணர்வுகளை ‘பத்திரமாக’ வைக்க நினைத்தாள். இருந்தாலும் பெற்ற பாசம் கேட்கவில்லை.

     “நான் சொல்றேன்னு தப்பா நினைக்கப்படாது...”

     “நீங்க முதல்ல விஷயத்தை சொல்லுங்க... தப்பா நினைக்கக் கூடிய விஷயமா என்கிறதை சொன்ன பிறகு... சொல்றேன்...”

     “உனக்கு இல்லாத உரிமை இல்ல... நான் பெத்துத்தான் போட்டேன். அப்புறம் வளர்த்ததெல்லாம் நீதான். இருந்தாலும்... எனக்குக் காபி வேண்டாம்மா... வர வர... காபி குடிச்சால் வாந்தி வந்துடுது... இருந்தாலும்... ராமனுக்குக் கொடுக்கிறதுன்னா...”

     “ஏன் ‘இன்னா’ போடுகிறீங்க. அவனுக்கு என்ன குறைச்சல்?”

     “உனக்கே தெரியும். இவள் படித்தவள். அவன் படிக்கல. படிக்காட்டியும் பரவாயில்ல. குடிக்கறான்... குடித்தாலும் பரவாயில்ல... பட்டச் சாராயமா குடிக்கறான்...”

     “உங்க புருஷன் குடிக்காததையா இவன் குடிக்கறான்?”

     “என் நிலைமை... என் பொண்ணுக்கும் வரக்கூடாதுன்னுதான் உன்கிட்ட பிச்சை கேட்க வந்தேன். என் வீட்டுக்காரர் குடிச்சதும் அப்படியே படுத்துக்கிறார். ஆனால், உன் ராமன், குடிச்சிட்டு சோடா பாட்டில் எடுக்கறான். இதுக்குள்ள மூணு தடவை... ஜெயிலுக்கு வேற...”

     பார்வதியால் மேற்கொண்டு கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. கழுத்தில் கிடந்த நெக்லசை, நைலக்ஸ் புடவையின் முனையால் துடைத்துக் கொண்டு, உள்ளத்து உணர்வுகளையும் துடைப்பவள் போல், வார்த்தைகளைப் பெருக்கிக் கொண்டே போனாள்.

     “நீங்க காலங்காத்தால... வந்ததை பார்த்தவுடனே நினைச்சேன். இந்தக் கல்யாணத்துல தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது. பிறந்ததுல இருந்து, வளர்த்தது வரைக்கும் கவனிக்கிறவள் நான். பெத்துடுறது பெரிசல்ல. பெத்ததை வளர்க்கிறதுதான் பெரிசு. நாங்க யாருக்குக் கொடுத்தால் உங்களுக்கென்ன?”

     “நான்... எதுக்கு சொல்றேன்னா...?”

     “நீங்க... எதுக்கும் சொல்ல வேண்டாம். அவள் என் வீட்ல இருக்கிற வரைக்கும் என் பொறுப்பு. மல்லிகா உங்க பொண்ணு இல்லன்னு நான் சொல்லல்ல. மகராசியா, உங்க மகளை வேணுமுன்னா உங்க வீட்டுக்கே கூட்டிக்கிட்டுப் போய், எந்த அர்ச்சுன ராசதுரைக்கு வேணுமுன்னாலும் கொடுங்க. ஆனால் ஆத்துல ஒரு காலு சேத்துல ஒரு காலு கதை வேண்டாம். இப்பவே வேணுமுன்னாலும் கூட்டிக்கிட்டுப் போங்க. இவள் பண்ற கூத்துக்கு நான் ஒருத்திதான் சரிக்கட்டிக்கிட்டுப் போக முடியும்...”

     செல்லம்மா, அண்ணன் இல்லாத சமயத்தில், அவன் மனைவியிடம் மாட்டிக் கொண்டதற்காக வருந்தினாள். மீள வேண்டும் என்று நினைத்தவள் போல், அண்ணன் வருகிறாரா என்று வெளியே பார்த்தாள். போகலாமா என்று அடியெடுக்கப் போனாள். ஆனால் பாழும் கால்கள் நகர மறுத்தன. பெற்ற மனம் பெயர மறுத்தது. ‘அந்த நல்ல ராமனைக் கட்டியே சீதை படாத பாடுபட்டாள். இந்த ராமனை என் மவள் கட்டினால்? அட பகவானே... இதுக்கா அவளைப் பெத்தேன். இதுக்கா என் கிளியை, இவள் கிட்ட விட்டேன். இதுக்கா என் மாலையை... இவள் கையில் கொடுத்தேன்... அட கடவுளே...’

     செல்லம்மாவால் பேச முடியவில்லை. தொண்டை கட்டியது. கண்களும் கொட்டியது. விம்மல் சத்தம், வெடிச்சத்தம் போல் கேட்டதால், பார்வதியே சிறிது நேரம் திகைத்துப் போனாள். பிறகு சமாளித்துக் கொண்டாள்.

     “இந்தா பாருங்க... இந்த நீலி மாதிரி... அழுகுற வேலை வேண்டாம். நான் தான் சொல்லிவிட்டேனே... மல்லி என் வீட்ல இருக்கிற வரைக்கும்... என் அக்கா மகன் தான் மாப்பிள்ளை. உங்களுக்கு கஷ்டமா இருந்தால் இப்பவே, இந்த கணமே அவளை பெட்டி படுக்கையோடு கூட்டிக் கிட்டு போகலாம். ஏய் மல்லி... ஏய்...”

     செல்லம்மாள் நாத்தனாரின் வாயைப் பொத்தினாள். ஏற்கெனவே ஏழு பிள்ளைகளோடு அவதிப்படுகிறவள். ஒருத்தி கரையேறி விட்டாள். இன்னொருத்தி கரையேற வேண்டும். பையன்களில் கடைசிப் பையன் படிக்கிறான். ஒருவன் மாமாவுடைய மளிகைக்கடையில் வேலை பார்க்கிறான். இன்னொருவன் வெட்டி. கடைசியாக உள்ள பத்து வயது மகளும் ஏழு வயது மகளும் வீட்டில். இருபது குடித்தனங்கள் உள்ள காம்பவுண்டு வீட்டுக்குள், பத்தடி ஐந்தடி பரப்பிற்குள் கக்கூஸ் பக்கம் உள்ள முதல் அறையில் குடியிருக்கும் அவளால் மல்லிகாவை அங்கே கொண்டு போக முடியாது. இரவில், அறைக்குள் படுத்தால் மூட்டைப் பூச்சியோடு, புழுக்கம். வெளியே படுத்தால் கொதிக்கும் தரை. ஒன்று மாற்றி ஒன்றாக அழும் குழந்தைகள். குடித்துவிட்டு மனைவிகளை அடிக்கும் கணவன்மார்கள். குடிக்காமலே அந்த போதையைவிட அதிக போதையில் ஆம்படையான்களை திட்டும் சம்சாரங்கள். இந்த சகாரா சாகரத்துக்குள் அவளால் இருக்க முடியாது. இருக்கவும் மாட்டாள். நாற்காலியில் உட்கார்ந்தவளால் கழிநீர் ‘கால்வாய்’ திட்டில் உட்கார முடியாது. மெத்தையில் படுப்பவளால், மேடை போல் இருக்கும் அடுப்புத் திட்டில் படுக்க முடியாது. மின் விசிறிக்குள் அமர்ந்து, தலைமுடி ஒயிலாக ஆடி அசைய, ஒய்யாரமாக இருக்கும் அவளால், ஒண்டிக் குடித்தனத்தில் கை விசிறி கூட இல்லாத புழுக்க லோகத்தில் புக முடியாது. இவள் இங்கேயே இருக்கட்டும். இங்கேயே இருக்க வேண்டியவள். வேண்டியவளோ இல்லியோ இருக்க வேண்டும். அட... மாரியாத்தா... ஏழையின் பிள்ளை பணக்காரப் பிள்ளையாய் வாழ்ந்தாலும் அது ஏழை தானோ? ஏழையின் பிள்ளை ஏழையாக இருந்தால் தான் நல்லதோ?

     செல்லம்மா நாத்தனாரிடம் மீண்டும் மன்றாடிப் பார்க்கலாமா என்று யோசித்தாள். அது வீண் என்பது போல் பார்வதி, “தராதரம் தெரியாத பய பிள்ளைகளை வீட்டுக்குள்ள சேர்க்கிறதே தப்பு... ஊர்ல சோறு தண்ணிகிடைக்காம... திரிஞ்ச... இந்த மாடசாமிப்பயல்... சாப்பிட்ட தட்டை கழுவாம போயிட்டான். வரட்டும். ஊருக்கே அவனை அடிச்சி விரட்டுனாத்தான் பன்னாட பயமவனுக்கு புத்திவரும். ஒவ்வொருத்தரையும் வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும்னு சொல்றது சரிதான்...” என்று தன்பாட்டுக்குப் புலம்பினான்.

     அவளின் பரிபாஷை செல்லம்மாவுக்குப் புரிந்து விட்டது. “கல்யாணத்துக்காவது என்னை கூப்பிடுவியாம்மா...” என்று சொல்லிக் கொண்டே அதற்குக் காரணமான பதில் வருமுன்னே, செல்லம்மா சமையலறையை விட்டு வெளியே வந்தாள். மல்லிகா, சமையலறைக்கு வெளியே அதிர்ச்சியோடு நின்று கொண்டிருந்தாள். கண்கள் மட்டுமில்லாமல், முகமே அழுது கொண்டிருப்பது போன்ற தோற்றம்.

     அம்மா, மகளை ஏறிட்டுப் பார்த்தாள். செவ்வாழை நிறத்தில், சிவந்திப்பூ நயத்தில், அளவெடுத்து வார்த்தெடுத்த சிலைபோல் விளங்கிய மேனியையும், ஆடாத வண்டுபோல் இருந்த கண்களையும், அசைகின்ற சங்கு போன்ற கழுத்தையும், முன் நெற்றி சுருங்க, முழுமேனி சுவரில் சாய, நின்ற மகளை அழாமல் அழுது கொண்டே பருகினாள். அவளருகே, உடம்பெல்லாம் பச்சை குத்தி, உடலெல்லாம் பட்டை போல், படைபடையாய் அடுக்கடுக்கான தோலோடு அருவருப்பான உருவத்தோடு, ஆடி இளைத்த பருவத்தோடு, ஆட நினைக்கும் கர்வத்தோடு உள்ள ராமனைப் பக்கத்தில் நிறுத்திப் பார்த்தாள். செல்லம்மாவால் அங்கே நிற்க முடியவில்லை. அழ முடியாமல் அழுதாள். ஓட முடியாமல் ஓடினாள்.

     மல்லிகா, இப்போது செல்லம்மாளை, போகிறாளே என்பது போல் பார்த்தாள். காய்ந்து, உலர்ந்து, தேய்ந்து போன சுரைக்காய் போல உள்ள அவள் மார்பில் தான், தான் பால் அருந்தியிருக்க வேண்டும்; இனிமேல் கிழிய முடியாது என்பது போல் கிழிந்து போன புடவை கொண்ட அவள் மடியில் தான், தான் புரண்டிருக்க வேண்டும்; வயிறெரிந்து ஓடும் அவள் வயிற்றில் தான், தான் ஜனித்திருக்க வேண்டும் என்ற சாதாரண உண்மை, இப்போது பேருண்மையாக, முதல் தடவையாக “அம்மா... அம்மா...” என்று லேசாகக் கேட்குமளவிற்குப் பேசினாள்.

     “ஏய் மல்லி” என்று ‘அம்மா’ கூப்பிட்ட போது அங்கே ஓடி வந்தவள், உள்ளே அடிபட்ட பேச்சு, தன்னை அடிக்கும் பேச்சு என்று தெரிந்ததும், அவள் இங்கே இந்த சுவரில் சாய்ந்தாள்.

     மல்லிகா தலையைப் பிடித்துக் கொண்டாள்.

     ராமனுக்கா அவள்? தெரு முழுதும் புரண்டு கொண்டு போவானே அவனுக்கா நான்? குடித்துக் கொண்டு புரள்வது மோசம் என்று நினைத்து புரண்டுகொண்டே குடிப்பானே, அந்த ராமனுக்கா நான்? கெட்டை வார்த்தை தவிர, எந்த வார்த்தையும் பேசாத அந்த கெட்டவனுக்கா நான்? முடியாது முடியவே முடியாது.

     என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்று யோசித்தவாறு அவள், தலையை சுவரில் உருட்டிய போது பார்வதி வெளியே வந்து, “சுவர்ல தலைய வைக்கிறியே அறிவிருக்கா உனக்கு? இந்தா பாரு சுவருல்லாங்... எண்ணெய்க்கசடு... உன் அம்மா புத்திதானே உனக்கும் இருக்கும். வேணுமுன்னா அவள் கூட போயேண்டி ஏண்டி... அழுவுறாப்போல நிக்கறே?” என்று அதட்டினாள்.

     ராமனை, அவள் கல்யாணம் செய்து கொள்ள மாட்டாள் என்ற உள்ளுணர்வு, அவளை, இதுவரை பேசாத வார்த்தைகளைப் பேச வைத்தன.

     மல்லிகா திடுக்கிட்டாள். என்னதான் அம்மா என்றாலும், முகம் பார்த்துப் பேசியறியாத அந்த அன்னை வாழும் வீட்டுக்குள் அவளால் போக முடியாது. அவளால் எப்படிப் போக முடியும்? போனாலும், எப்படி இருக்க முடியும்? அந்த வீட்டை விட அந்த ஜனங்களை விட ராமன் தேவலையோ... ஒவ்வொருத்தர், அண்ணன் தங்கைன்னா உயிரை விடுறாங்க. சினிமாவுல கூட காட்டுறாங்க. நம்மால் அப்படி இருக்க முடியலியே... இந்த வீட்டையும் சில சமயம் சொந்த வீடாய் நினைக்க முடியலியே... ஏன்... ஒரு வேளை... நான் தனிப் பிறவியோ... இல்ல தனிப்படுத்தப்பட்ட பிறவியோ...

     மல்லிகா தன் வசப்பட்டு நின்றபோது, பார்வதி உணர்ச்சிவசப்பட்டாள்.

     “ஏண்டி... பித்துப் பிடித்து நிக்கறே? உன் அம்மா... மருந்து தடவிட்டுப் போயிட்டாளோ? வேணுமுன்னா போயேண்டி... நான் வேணுமுன்னா... கொண்டு விடட்டுமா?”

     அந்த சின்னஞ்சிறிசுக்கு, சுய உணர்வு வந்தது. அந்த வீட்டுக்கு அனுப்பி விடுவாளோ? அந்த ‘ஆளிடம்’ பேச்சு வாங்க வேண்டியது வருமோ?

     மல்லிகாவுக்கு என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை.

     திடீரென்று பார்வதியைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். அவள் இவளை விலக்க முடியாதபடி கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, அவள் மார்பில் தலை சாய்த்துக் கொண்டு புரண்டு, “என்னை அங்கே அனுப்பிடாதீங்கம்மா... அனுப்பாதீங்க... அம்மா... அம்மா” என்று அரற்றினாள். விம்மினாள்.

     பார்வதிக்கு என்னவோ போலிருந்தது. அவள் தாய்மைப் பேறு அடையவில்லையானாலும், இப்போது அது பெயர் சொல்லும்படி விழித்துக் கொண்டது. மல்லிகாவின் தலைமுடியை கோதிவிட்டுக் கொண்டே, “அழாதடி... நானிருக்கையில ஏண்டி அழுவுறே? ராமன் உனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டான்...” என்றாள்.

     இப்போதும் மல்லிகா அழுதாள். ‘என்னை ராமன்கிட்ட அனுப்புறதை விட ‘அவங்க’ வீட்டுக்கே அனுப்பிடுங்கம்மா’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே, வெளியே மறுமொழி கூறாமல் தனக்குள்ளேயே அழுதாள்.