16

     இரவு வந்தது. வேலைக்குச் சென்ற எல்லோருமே வந்து விட்டார்கள்.

     வெளியே உள்ள களத்தில் பாய்விரித்து, உட்கார்ந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். மல்லிகா, சந்திரா, ராக்கம்மா முதலியவர்கள் இன்னொரு பக்கத்தில் கும்பலாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பெருமாளும் இருந்தார்.

     “என்ன நாய்க்கரே... எத்தனை நாளைக்கு... இந்த சைக்கிள் ரிக்‌ஷாவ வச்சிக்கிட்டு அவஸ்தப்படப் போகிறீர்? பேசாம ஒரு ஆட்டோ ரிக்‌ஷா வாங்கப்படாதா?”

     “ரிக்‌ஷா மேல இருக்க ‘டாப்பையே’ மாற்ற முடியல. ஆட்டோவுக்கு எங்க போறது? ‘கேக்கேன்னு நீங்க தப்பா நினைக்கப்படாது... உம்ம கூட மெட்ராசுக்கு வந்தவங்கெல்லாம் இன்னைக்கு வீடு வாங்கிட்டான். நீர் இன்னும் அந்த கந்தல் கோணி வியாபாரத்துலேயே கீறது நாயமா... குதிரையைக் குறையும்.”

     “குறைக்கிறதாவது, அடியோட விட்டுட்டேன். அப்படியும் கட்டல. பேசாம நம்ம செட்டியார் மாதுரி... துணி வாங்கி ஏலத்துல போட்டு விக்கலாமான்னு பார்க்கிறேன்” என்றார் பெருமாள்.

     அதைத் தொடர்ந்து ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக பேச்சு நடந்தது. தேர்தல், அரசியல்வாதிகள், சினிமா, எதையும் விடவில்லை.

     ‘வீட்டுக்காரம்மா’ மாடியில் இருந்து பார்த்தாள். வசதியே இல்லாத இந்த அசதிகாரர்களால், எப்படி சிரிக்க முடிகிறது? எப்படி ஒற்றுமையாக இருக்க முடிகிறது? அவள் வயிறு எரிந்தது. அப்போது, சில சின்னப் பிள்ளைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ‘இட்லி’ ஆயா, தன் நொள்ளைக் கண்ணுக்கு மருந்து போடப் போனாள். மல்லிகா, தோழிகளுக்கு ஒரு கைக் குட்டையை வைத்து, அதில் எப்படிப் பூ போடுவது என்பதை விளக்கிக் கொண்டிருந்தாள்.

     திடீரென்று விளக்குகள் அணைந்தன. வீட்டுக்காரி, மாடியில் இருக்கும் ‘மெயின் ஸ்விச்சை’ ‘ஆப்’ செய்தாள். அனைவரும் வாயடைத்துப் போய் நின்றார்கள். ஏதோ பேசப் போன ராக்கம்மா கூட, வம்பு வேண்டாம் என்பது போல், பேசாமல் இருந்தாள். வயிற்றில் எரிந்ததை, விளக்கை அணைத்து, வீட்டுக்காரி ஆற்றிக் கொண்டாள். அப்படியும் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததால், அவள் வயிறு, மீண்டும் எண்ணெய் இல்லாத திரி போல் எரிந்தது. அவள் உள்ளே போனாள். தகர டப்பா மச்சான் வெளியே வந்தார்.

     “தூங்குங்களேய்யா... இப்படிப் பேசினால் எப்படி? நானு தூங்க வேண்டாமா...”

     எதிர்ப்புக் குரல் கொடுக்காமலே, எல்லோரும் தூங்காமலே படுத்தார்கள். இருக்கிற பிரச்சினைகள் ஏராளம். இவன் பிரச்சினை வேறா? வேண்டாம். வீட்டைக் காலி பண்ணச் சொல்லுவான். அப்புறம், வீடு தேடி, தெருத் தெருவாச் சுத்தணும். அவன் வீட்ல ரேடியோ பாடும் போதே நம்மை பேசக் கூடாதுன்னு சொல்றான். ஒழிஞ்சி போறவன்.

     அனைவரும் தூங்கி விட்டார்கள். அப்படியே தூங்கிப் போனார்கள். ஆனால், ‘வீட்டுக்காரி’யால் தூங்க முடியவில்லை. இவர்களுக்கு நாம் யாரென்று காட்டணும்! ஒருத்தியையாவது தொலைத்துக் கட்டணும். மல்லிகா சிக்கினால்... நல்லது.

     இரண்டு நாட்களில், ரமணன் வந்து விட்டான். அவனைக் காணாமல் கண்ணீர் விட்டு, கலங்கிக் கொண்டிருக்கும் மல்லிகாவை நிம்மதியில் ஆழ்த்துவது போல் வந்து விட்டான். அதே சமயம், தான் எழுதிய கடிதத்தை, அவள் யாரிடமாவது காட்டி, நிலைமை எக்கச்சக்கமாக ஆகியிருக்குமோ என்று உள்ளூர உதறலுடன் வந்தான். எல்லோரும் அவனை உதாசீனம் செய்ததில் அவனுக்குச் சந்தோசம். மல்லிகா சொல்லவில்லை. ஏன் மல்லிகா சொல்லவில்லை? இன்றைக்கு அவளிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும். எப்படியாவது...

     மத்தியான வேளை. ‘ஹார்பார்’ கந்தசாமி வேலைக்குப் போகவில்லை. அங்கே வேலை நிறுத்தமாம். படுத்துக் கிடந்தான்.

     மல்லிகா, அவன் மனைவிக்கும், இதர பெண்களுக்கும், சிலேட்டில், ‘க,ங,ச’ வை எழுதிக் காட்டிவிட்டு, பிறகு ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக் காட்டிக் கொண்டிருந்தாள். இட்லி ஆயாவும் “பலமா படி குயந்தே... ஆயா காதுல நுழையல...” என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டிருந்தாள்.

     வீட்டுக்காரி பார்த்தாள். பாடத்தைக் கேட்டாள் அவளும். மல்லிகாவைப் போல், ‘பாடம்’ புகட்ட நினைத்தாள். திடீரென்று ரேடியோவைப் போட்டாள். பலமாக அதைக் கத்த விட்டாள். அவள் படிப்பது கேட்காதபடி உச்ச நிலையில் வைத்தாள். எல்லாப் பெண்களும், முணுமுணுத்துக் கொண்டார்களே தவிர, அவளை முறைக்கவில்லை.

     மல்லிகா, சலிப்போடு எழுந்தாள். எழுந்தவள், நடை வாசல் பக்கமாகப் போனாள். எதிரே, ரமணன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் போய்விட்டாள். இளித்துக் கொண்டே வந்த ரமணன், அவளிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. எப்படி நடந்து கொண்டானோ புரியவில்லை. திடீரென்று மல்லிகா கத்தினாள்.

     “முட்டாள்! என்னைப் பற்றி என்னடா நினைத்தாய்? எருமை மாடு... செருப்பு பிஞ்சிடும்... ராஸ்கல்...”

     எல்லாப் பெண்களும், அங்கே ஓடினார்கள். ரமணன் எந்தப் பக்கமும் ஓட முடியாமல், ஒளியவும் முடியாமல், எதிர்பார்த்த இனிமை, எருக்கம்பால் போல் அரிக்க, அவன் திணறிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்களைப் பார்த்ததும் மல்லிகா விம்மினாள். இதற்குள் செல்லம்மாவும், சந்திராவும் பதறிக் கொண்டே வந்தார்கள். ‘ஹார்பார்’ கந்தசாமியும், கண்ணைக் கசக்கிக் கொண்டே வந்தான். ஓடப்போன ரமணனை, ஒருத்தி பிடித்துக் கொண்டிருந்தாள். வீட்டுக்காரி இறங்கிக் கொண்டிருந்தாள்.

     “என்னம்மா... என்ன பண்ணினான்...”

     மல்லிகாவால், முதலில் பேச முடியவில்லை. முயன்றாலும் முடியவில்லை. திக்கித் திணறிவிட்டு துள்ளும் வெட்டுக் கிளிபோல், விட்டு விட்டுப் பேசினாள். பிறகு வேகமாகப் பேசினாள்.

     “இவன்... இந்த முட்டாள்... என்... கையைப் பிடித்துக் கொண்டு ‘பதில் லட்டர் எழுதிட்டியா’ன்னு கேக்குறான். இரண்டு நாளைக்கு முன்னால... ஒரு லட்டர் கொடுத்தான்... நான் படிக்காமலே கிழிச்சிட்டேன். அநாவசியமான ரகளை வேண்டாமுன்னு சும்மா இருந்துட்டேன். இன்றைக்கு காலையில் கூட, இவனைப் பார்த்து காறித் துப்பினேன். (அவள் காறித் துப்பியதை ரமனன், அவள் தனக்கு முத்தம் கொடுக்கப் போவதாக சமிக்ஞை செய்வதாய் நினைத்திருந்தான்...) அப்படியாவது இந்த தடிமாடு திருந்திடுவான்னு நினைத்தேன். கடைசியில, என் கையைப் பிடித்து... அப்பா... அம்மா... என்னை எதுக்காகப்பா இங்கே இருக்க வைக்கிறீங்க...? என்னை வந்து கூட்டிட்டுப் போங்கப்பா. என்னை கையை பிடிக்கலாமுன்னு ஒரு காலிப் பயல் நினைக்கிற அளவுக்கு ஆயிட்டேனே... ஆயிட்டேனே... அய்யோ... யாராவது என்னை... தியாகராய நகர்ல கொண்டு விட்டுடுங்களேன்... அப்பா... அம்மா என்னால இங்கே இருக்க முடியாதுப்பா... முடியாதும்மா... அம்மா... அம்மா...”

     சுற்றி நின்ற பெண்களால், கோபத்தை அடக்க முடியவில்லை. ஒருத்தி ரமணனின் சட்டைக் காலரையும், இன்னொருத்தி, அவன் கழுத்தையும் பிடித்துக் கொண்டு, “ஏழைப் பொண்ணுன்னால் என்ன வேணுமுன்னாலும் செய்யலாம் என்கிற நெனப்பாடா கஸ்மாலம். காண்டா மிருகம், கோயக் கண்ணா. இருக்க முடியாட்டி உன்னோட அக்காளை இழுக்க வேண்டியது தானடா...” என்று சொல்லிக் கொண்டே, பெண்கள், அவனை ஆளுக்கொரு பக்கமாக இழுத்த போது, ‘ஹார்பார்’ கந்தசாமி, “ஒத்திக் கங்கமே...” என்று சொல்லிக் கொண்டே, ரமணன் மீது பாய்ந்தான். பல பளுவான மூட்டைகளைத் தூக்கும் அவன், அவனை ஒரே தூக்காகத் தூக்கி, உள்ளே கொண்டு வந்து, வீட்டுக்கார அம்மாவின் முன்னால் போட்டான். போடப்பட்டவனை மீண்டும் தூக்கி நிறுத்தி, கன்னத்திலும், காதுகளிலும் கும்மாங்குத்துக்களை விட்டுவிட்டு, பிறகு “ஒயுங்கா இரு... இல்லன்னா... உயிர எடுத்துடுவேன்...” என்று சொல்லிவிட்டு, ஒரு தூணில் போய் சாய்ந்து கொண்டான்.

     தம்பி, அடிபடுவது வரைக்கும் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, பிறகு, அவன் விடுபட்ட பிறகு, வீட்டுக்காரி கத்தினாள்.

     “எப்படியோ ஜோடிச்சி இல்லாததையும் பொல்லாததையும் பேசி, என் தம்பிய அடிச்சிட்டீங்க. அவன் கையை இவள் பிடித்தாளா... இவள் கையை அவன் பிடித்தானான்னு தெரியாமலே அடிச்சிட்டிங்க இல்ல? ஓரடிக்கு ஒன்பது அடி கொடுக்கலன்னா... நான் வீட்டுக்காரி இல்ல...”

     கந்தசாமிக்குப் போன கோபம் மீண்டும் வந்தது.

     “பேசாம போ... மே... பொம்மனாட்டியாச்சேன்னு பாக்கேன். அந்த கம்மனாட்டிய அடக்கத் தெரியல... பேசுறாள் பேச்சு...”

     “ஏய்... என்னையாடா... மேன்னு சொல்ற. நான் எருமை மாடாடா. இந்த மல்லிகா... அவனைக் கண்ணடிக்கிறது உனக்குத் தெரியுமா...”

     “இந்தா பாரும்மா, யாரை வேணுமுன்னாலும் பேசு. மல்லிகாவைப் பேசுன... வாய்... வெத்திலை பாக்கு போட்டுக்கும். பொம்மனாட்டியாச்சேன்னு பாக்கேன். நீ டா போட்டதக்கூட பொறுத்துக்கினேன்... மல்லியப் பேசுனே... நாறிப் போயிடுவே...”

     வீட்டுக்காரி, கீழே கிடந்த தம்பியைத் தூக்கிக் கொண்டே, மாடிக்குப் போய், அங்கிருந்து பேசினாள். ‘அம்மா’ ‘அம்மா’ என்று சொல்லும் ஒருவன், ‘மே’ என்று சொல்லிவிட்ட திகைப்பிலேயே சிறிது நேரம் தடுமாறி விட்டு, தாறுமாறாகப் பேசினாள்.

     “என் தம்பிய கைவச்சுட்டல்ல? பாரு வேடிக்கையை... டேய்... ரமணா... இன்ஸ்பெக்டர் அண்ணனுக்கு போன் பண்ணுடா. வக்கீல் அண்ணாவுக்கு டெலிபோன் செய்டா. பெரியப்பா மகனுக்கு தெரியப்படுத்துடா... ரெண்டுல ஒண்ணப் பார்த்துப்புடலாம். பழிக்குப் பழி வாங்காம விடப் போறதுல்ல...”

     ரமணன் வெளியே ஓடினான்.

     பத்து நிமிடத்தில் ஒரு ஆட்டோ வந்து அலறியது.

     இருவரும், ஆட்டோவில் ஏறினார்கள். கந்தசாமி அலட்சியமாக இருந்தான். அவன் மனைவி அழப்போனாள்.

     “அய்யோ... போலீஸ் வந்து உன்னைக் கூட்டிக்கினு போனால் நான் என்ன பண்ணுவேன். ஜாமீனுக்குக் கூட ஆளுங்க இல்லியே. போலீஸ்காரன் உதைப்பானே. உனக்கு வேற ஜுரமாச்சே. பூட்ஸ் காலால மிதிப்பானே.”

     “சும்மா இரும்மே... போலீஸ்னா கொம்பா...”

     மல்லிகா, கந்தசாமியையே பார்த்தாள். போலீஸ்ஆரர்கள் உதைத்தாலும் பரவாயில்லை என்பது போல் அவன் தைரியமாக இருந்தான்.

     “அண்ணா... அண்ணா...” என்று விம்மினாள் மல்லிகா. கந்தசாமி அதிர்ந்து போனான்.

     “என்னம்மா... நீ... பச்சைக் குழந்தை மாதிரி... இப்போ இன்னாதான் நடந்துட்டுது? உன் பேரு, அனாவசியமாய் கெடுமேன்னுதான் அந்த கம்மனாட்டிய அத்தோட விட்டேன். அயாதம்மா... இந்தாபாரு, நீ அயுறதப் பார்த்துட்டு... அம்மா அயுவுது, அப்பால எனக்கும் கண்ணீர் வருது...”

     எல்லோரும், ஒரு வித திடுக்கிடும் எதிர்பார்ப்புடன் இருந்த போது, ஒரு டாக்சியில் இருந்து, இரண்டு போலீஸ்காரர்களும், சப் இன்ஸ்பெக்டரும், வீட்டுக்காரியும், ரமணனும் இறங்கினார்கள். வீட்டுக்காரி, “இவன் தான். இவள் காலரைப் பிடித்தாள். அதோ அவள் கழுத்தை நெரித்தாள். இந்த செல்லம்மா தான் தூண்டி விட்டது. இவளத்தான் மொதல்ல உதைக்கணும்” என்றாள். இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு.

     சப் - இன்ஸ்பெக்டர், பேசாமல் கோபத்தோடு நின்ற போது, போலீஸ்காரர்களில் ஒருவர், கந்தசாமியை நெருங்கினார்.

     “ஏண்டா சோமாறி... நீ பெரிய ரவுடியா...”

     “நான் பெரிய ரவுடியும் இல்ல. சின்ன ரவுடியும் இல்ல. சாதாரண மனுஷன் சார்.”

     “எதிர்த்தா பேசுறே கயிதே.”

     “உன்னை என்ன பண்றோம் பாரு... இந்தாப்பா, இவன் கையை மடக்கிக் கட்டு” என்றார் சப்-இன்ஸ்பெகடர் கோபமாக.

     ஒரு போலீஸ்காரர், கந்தசாமியின் கைகளை வளைத்துப் பிடிக்கப் போனார்.

     மல்லிகா, நடப்பதைப் பார்த்துக் கொண்டு நின்றாள். பிறகு மூச்சை இழுத்துப் பிடித்தாள். ஏதோ ஒன்று, அவளுள் பிறந்து, அவளுள் வளர்ந்து, அவளுள் நின்று, அவளை விட பெரிதானது போல் தோன்றியது. கல்லூரி மேடைப் பேச்சின் போது நிற்பாளே... அப்படிப்பட்ட கம்பீரம்... அப்படிப்பட்ட அஞ்சாப் பார்வை.

     “எக்ஸ்க்யூஸ் மீ... நீங்க சப் - இன்ஸ்பெக்டர் தானே...”

     “பார்த்தால் எப்படித் தெரியுது?”

     “சார்... இந்த அகங்காரமான பேச்சு வேண்டாம். நீங்கள் நடந்ததை விசாரிக்காமலே ஒருத்தரை மட்டும் உதைக்கப் போகிறது சட்ட விரோதம். அந்த அம்மாவோட அண்ணன் இன்ஸ்பெக்டர். அவரோட செல்வாக்குல நீங்கள் வந்திருகீங்கன்னு தெரியும். இவன்... என்னைக் கெடுக்க வந்தான். என் அண்ணா அவனை தற்காப்புக்காக அடித்தது உண்மைதான். நான் இப்பவே புகார் எழுதித் தர்றேன். கெடுக்க முயற்சி செய்கிறவனை நீங்கள் பதினைந்து நாள் காவலில் வைக்கணும். நான் வேணுமுன்னாலும் ஸ்டேஷனுக்கு வாரேன். இப்படி இல்லாமல், அண்ணனை மட்டும் நீங்க கூட்டிக்கிட்டு போறதாய் இருந்தால், நான் போலீஸ் கமிஷனர் கிட்ட போயிட்டு, அப்படியே முதலமைச்சர் கிட்டயோ, கவர்னர் கிட்டயோ போக வேண்டியதிருக்கும்.” மல்லிகா ஆங்கிலத்திலேயே பேசினாள். தாய்மொழியில் பேசுவதை அதிகாரிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்ற அவல நிலையை உணர்கிறவள் போல.

     சப் - இன்ஸ்பெக்டர் சிறிது யோசித்துவிட்டு, “மிஸ்டர் ரமணன்... நீங்களும் ஸ்டேஷனுக்கு வாங்க. யோவ்! கந்தசாமியோட கையை விடுய்யா...” என்றார்.

     ரமணன், அக்காளுக்குப் பின்னால் ஒளிந்தான். “அண்ணா போன் போட்டு சொன்ன பிறகும்... இவனையா கூப்பிடுறீங்க...” என்று வீட்டுக்காரி சொன்ன போது, மல்லிகா, பிடிக்க வேண்டிய இடத்தைப் பிடித்தாள்.

     “பார்த்தீங்களா சார்... என் அண்ணா அவரை அடிச்சார்னு நீங்கள் வரவில்லை. யாரோ போன் பண்ணினாங்கன்னு, நீங்கள் வந்திருக்கீங்க...”

     சப்-இன்ஸ்பெக்டருக்கு, வீட்டுக்காரி மீது கடுமையான கோபம். துப்புக்கெட்ட மூதேவி! அப்பன், குடிலுக்குள் இல்லைங்கிறது மாதிரி... போன் சமாச்சாரத்தை சொல்றாளே...”

     பிறகு, சப்-இன்ஸ்பெக்டர், வந்தவேகம் எங்கேயோ போக, சிரித்துக் கொண்டே பேசினார்.

     “நீங்கல்லாம் பெரியவங்க... ஒற்றுமையாய் இருக்கணும். ஒரு தாய் மக்கள் மாதிரி பழகணும். ரமணன் உங்களுக்கு சிஸ்டர் இருக்கிறது அல்லவா! அதே மாதிரி இந்த பாப்பாவையும் பார்க்கணும். மல்லிகா நீங்களும், அவர் தற்செயலாப் பார்க்கிறதையும் தப்பா நினைக்கப் படாது. கந்தசாமி இனிமேல் கைநீட்டுற வேலையை வச்சுக்காதே. நாங்கள் எதுக்காக இருக்கோம்? இனிமேல் இந்த மாதிரி ரகளை வந்தால், லாக்கப்பில் தள்ளிடுவேன்.”

     “எல்லோரையுந்தானே சார்” என்றாள் மல்லிகா.

     “ஆமாம்... எல்லோரையுந்தான்... யாராய் இருந்தாலும்... எங்களுக்கு ஒரே மாதிரிதான்.”

     சப்-இன்ஸ்பெக்டர், கீழே விழுந்தாலும் மண்படாத லத்திக் கம்பை தட்டிக் கொண்டே, போலீஸ்காரர்களுடன் போய்விட்டார். எல்லோரும் மல்லிகாவைப் பெருமிதத்துடன் பார்த்தார்கள். என்னமாய்... இங்கிலீசுல விளாசுகிறாள்... அடேயப்பா.

     வீட்டுக்காரி, அடைகாக்கும் கோழி மாதிரி, வீட்டுக்குள் அடைந்து கொண்டாள். வெளியே தலைகாட்டவில்லை.

     அதே சமயம், ‘இட்லி’ ஆயா பேசுவது, காதுக்குள் விழுகிறது.

     “நீ நிசமாவே... ராசாத்தி குயந்தே... ராசாத்தி... நீ காட்டியும் இல்லாட்டா நம்ம கந்தசாமியை... போலீஸ்காரங்க... கந்தலி கோலமா ஆக்கியிருப்பாங்க... நீ... தியாகராய நகர்ல... பெரிய வீட்ல இருந்து இங்கே வந்தப்போ... ஆயா அழுதேன் குயந்தே... அழுதேன்... ஆனால் ஆண்டவனாப் பாத்துத்தான் ஒன்னை... அனுப்பி இருக்கிறார் குயந்தே... அனுப்பி இருக்கார்.”

     மாலையில் வீட்டுக்கு வந்ததும், விஷயத்தைக் கேள்விப்பட்ட பெருமாள் “எடுடி... கத்தியை” என்றார். பரமசிவம் பாயப் போனான். செல்லம்மா புருஷனையும், மல்லிகா தம்பியையும் பிடித்துக் கொண்டார்கள்.