உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
4 பந்தி முடிந்து, பெரும்பாலானவர்கள், ‘ஐந்தோ பத்தோ’ மொய் எழுதிவிட்டுப் போய்விட்டார்கள். மணமக்களும், பார்வதியும், பெருமாளும், இந்தப் பிள்ளைகளும், அந்த ‘முக்கு வீட்டுக்குள்’ உட்கார்ந்து இருந்தார்கள். சின்ன அறை. சிக்கலான அறை. தட்டுமுட்டுச் சாமான்கள் மறைத்த இடம் போக, மற்ற இடத்தில் மூன்று ஆழ்வார்கள் பாடியது போல, அந்த மூவரும் உட்கார்ந்து இருந்த திண்ணையைப் போல, ‘மூவர் நிற்க, இருவர் உட்கார, ஒருவர் படுக்கும்படியான’ இடம். போதாக் குறைக்கு, அன்றைக்கு மழை பலமாகப் பெய்வது போல் தோன்றியது. வெளியே படுக்க முடியாது. எல்லோரும் உள்ளேதான் படுக்க வேண்டும். அப்படியானால், முதலிரவை எங்கே வைப்பது? மாப்பிள்ளை வீட்டிலும் வைக்க முடியாது. அங்கேயும், இதே மழை பெய்யும். இதே மாதிரியான சின்ன அறைதான்! இதே மாதிரியான குழந்தை குட்டிகள். போதாக்குறைக்கு, கிழடு கட்டைகள். பெருமாள், மோவாயைப் பிடித்து யோசித்துக் கொண்டு இருந்தார். மூத்த மகளின் திருமணத்தை நடத்தி விட்ட திருப்தி, அந்த முகத்தில் இல்லை. ஒன்றும் இல்லாத அவருக்கு, அவரைப் போலவே ஏழையாய் உள்ள, ரத்த உறவு இல்லாத நண்பர்கள், ரேஸ் சகாக்கள், பட்டைச் சாராயப் பங்காளிகள் வந்து ஆயிரம் ரூபாய்க்கு மேலேயே மொய் எழுதியிருக்கிறார்கள். இருந்தும் அவர் மனதில் தெம்போ, திராணியோ இல்லை. அந்தச் சமயத்தில் மட்டும், தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தார். எப்படியெல்லாம் வாழ்ந்தேன்... ஒரு வீட்டுக்கு மூன்று வீடு வைத்திருந்தேன். மோட்டார் பைக் ஓட்டினேன். சொந்த மோட்டார் பைக்... எண்ணூரில் பத்து ஏக்கர் நிலம்... எல்லாம் கிண்டிக் குதிரை மாதிரி ஓடிட்டு. என்னோட முதலிரவு வெல்வெட் மெத்தை போட்ட கட்டிலில், பங்களா மாதிரி இருந்த வீட்டில் நடந்தது. ஆனால், என் பொண்ணுக்கு, கட்டிலுக்குப் பதிலாக வெறும் பாய்தான். பாயாவது பரவாயில்லை - அந்தப் பாய் விரிக்க இடம் இல்லையே என்ன செய்யலாம்? - கையில் ரூபாய் இருக்கு. ஓர் ஏர்கண்டிஷன் லாட்ஜ் பார்க்கலாமா? சீச்சீ! இந்த சின்னஞ்சிறுசுகளுக்கு அங்கே நடக்கிற விவரங்கள் தெரியக்கூடாது. பெருமாள் தலையைப் பிடிக்காத குறையாக, சிந்தித்துக் கொண்டு இருந்தார். மணமகனை ரசித்துக் கொண்டு இருந்த சந்திரா, திடீரென்று ஏதோ நினைவில் பட்டவளாய் வெளியே வந்து, ஒரு நாற்காலியில் உட்கார்ந்து... மாடிப் போர்ஷனில் டி.வி. காட்சியாக வாழும் வீட்டுக்கார அம்மாவுடன் பேசிக் கொண்டு இருந்த மல்லிகாவின் கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக எழுப்பி, வீட்டுக்குள் வந்தாள். வீட்டுக்கார அம்மா ‘என்கிட்ட பேசிக்கிட்டு இருந்த படித்த ‘ரீசண்டான’ பொண்ணையா, முகத்துல அடிக்கறது மாதிரி கூட்டிக்கினு போற... இரு இரு... உன்ன கவனிச்சுக்கிறேன்’ என்று மனதுக்குள் கருவிக் கொண்டே, அந்த மதயானை மாடிப் படிகளில் ஏறியது. மல்லிகாவிற்கு, அந்த வீட்டிற்குள் இருக்க பிடிக்கவில்லை. மூட்டைப்பூச்சிகள், கடித்த இடங்களை விட்டு விட்டு, ‘பிடித்த’ இடங்களைக் கவ்வின. சந்திரா மல்லிகாவைப் பார்த்துக் கொண்டே, தன் கணவனையும் பார்த்தாள். “நானும் பெரிய இடந்தான்... பெரிய இடத்துக்காரியோட அக்காவாக்கும் நான்” என்று, அவனிடம் சொல்வது போல், கண்கள் விரிந்தன. உதடுகள் லேசாகப் பிரிந்தன. மூத்த மகளின் பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருந்த பெருமாளும், மல்லிகாவை பெருமிதத்துடன் பார்த்தார். “இவளாவது நல்லா இருக்கட்டும். எல்லோருக்கும் சேர்த்து இவள் ஒருத்தியாவது நல்லா வாழணும். கடவுளே! அவளை நல்லா வாழ வை.” அங்கே, எதுவுமே நன்றாக இல்லாததுபோல் தோன்றியதாலோ என்னமோ, மல்லிகா, பார்வதியைப் பார்த்து “வீட்டுக்குப் போகலாம்மா...” என்றாள். பார்வதி, அதைப் பொருட்படுத்தாதது போல, மாப்பிள்ளைப் பையனிடம் குசலம் விசாரித்துக் கொண்டு இருந்தாள். விசாரித்துப் பார்த்ததில், அவன் அவளுக்கு, தொலைவாய்ப் போன நெருங்கிய உறவு என்பது தெரிய வந்தது. அதில் அவளுக்கு மகிழ்ச்சி. மல்லிகாவுக்கோ அதற்கு எதிர்மாறான உணர்ச்சி. மற்றவர்கள் கேள்விக்குப் பதிலையும், பதிலுக்குக் கேள்வியையும் போட்டுப் பேசிக் கொண்டு இருந்த போது, நொடிக்கு ஒரு தடவை, “வீட்டுக்குப் போகலாம்மா; வீட்டுக்குப் போகலாம்” என்று சிடுசிடுப்புடன், செல்லக் கிறுக்குபோல் முணுமுணுத்துக் கொண்டு இருந்த மல்லிகா, திடீரென்று எழுந்து, “சரி நீங்கள் இருந்துட்டு காலையிலே வாங்க. நான் பஸ்ல போறேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்படப் போனாள். உடனே, செல்லம்மா, கண்ணில் பெருக்கு எடுத்து விழப்போன நீரை நிறுத்தி வைத்துக் கொண்டே, “நீயும் இந்த வீட்லதாம்மா பிறந்தே. இங்க இருக்கவங்கெல்லாம் உன் கூடப் பிறந்தவங்கம்மா. கொஞ்ச நேரம் இருக்கப்படாதா” என்றாள். அப்படியும் மல்லிகா புறப்படப் போனபோது, அவள் கையை கீழே உட்கார்ந்து கொண்டே பார்வதி இழுத்த போது, பெருமாள், தன்னை மீறிவிட்டார். ‘குழந்தைங்க எல்லாம் எவ்வளவு பாசமாய் பார்க்குதுங்க. மருமகப் பிள்ளை கூட எவ்வளவு மரியாதையாய்ப் பார்க்கிறார். இவளைப் பார்த்ததும், எதுக்கும் மசியாத என் மனங்கூட எப்படி கலங்குது? இவளுக்கு ஏன் புரியல...? புரியாட்டால் போகட்டும்.’ இயல்பிலேயே துடிப்புக்காரரான, நாற்பத்தெட்டு வயது பெருமாள் கத்தினார்: “இவள் எனக்குப் பிறந்திருக்க மாட்டாள். சனியன் போனால் போகட்டும். அவள் கையை விடு, அக்கா. மூதேவி போனால் போகட்டும்...!” எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். மேற்கொண்டு ஏதோ பேசப்போன பெருமாள், ஆவேசத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக, வெளியே போய் நின்றார். பார்வதி, பிரமித்தவளாய், ஆகாயத்தையே பார்த்தாள். செல்லம்மாள் கைகளை நெறித்தாள். பிள்ளைகள் கலங்கிப் போய் நின்றன. எவரிடம் இருந்தும், இந்த மாதிரியான வார்த்தைகளையோ, அதட்டல்களையோ கேட்டு அறியாத மல்லிகாவிற்கு, முதலில் ஒன்றும் ஓடவில்லை. ஏன்... இந்த ‘ஆளு’ இப்படிப் பேசுறாரு... ஏன் இப்படி மூதேவின்னு சொல்றாரு...? மல்லிகா, தன் கைகளைப் பிடித்த உண்மை அம்மாவை உதறிக் கொண்டே, மடமடவென்று வெளியே வந்து, காரில் உட்கார்ந்து கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள். உள்ளே இருந்த பார்வதி, அது வரைக்கும் சிரித்துக் கொண்டே பேசியவள், “அவள் போன பிறகு, எனக்கு மட்டும் என்ன வேலை இருக்கு? நாகரிகம் தெரியாத வீட்டுக்கு வந்தால் அவமானந்தான் கிடைக்கும். அவள் வரமாட்டேன்னுதான் சொன்னாள். நான் தான் நாலுபேரு தப்பா நினைப்பாங்களேன்னு கூட்டி வந்தேன். கடைசில, நாலு பேரு முன்னாலேயே அவளை அவமானப் படுத்திட்டிங்க...” என்று சொல்லிக் கொண்டே காருக்குள் வந்து, மல்லிகாவை தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டாள். “காரை எடு தம்பி... இந்த இடத்துக்கு வாரது இதுதான் கடைசித் தடவை...” என்று அவள் கத்த, கார், கத்திக் கொண்டே ஓடியது. நடைவாசலில் நின்று, நடப்பதை நம்பாதவர்கள் போல் கவனித்துக் கொண்டு இருந்த செல்லம்மாவும், அவள் பெண்டு பிள்ளைகளும், கட்சி பிரிந்து விவகாரத்தை வாதாடப் போனார்கள். இதற்குள், குழாய்ப் பக்கமாக நின்ற பெருமாள் அங்கே வந்து, “எல்லாம் உன்னால வந்த கோளாறுடி. தத்து கொடுக்காதடி... கொடுக்காதடின்னு எவ்வளவோ தடவை சொன்னேன்; நீதான் கேட்கல. இப்போ நான் பெத்த மகளே... ஏன் பெத்தோம் என்கிறது மாதிரி நடந்துக்கிறாள். இனிமேல், மகளைப் பார்க்கப் போறோம்னு போ... அப்புறம் பாரு வேடிக்கையை... ஒரு கையையாவது, காலையாவது ஒடிக்காட்டால் ‘என்னடா நாயே’ன்னு கேளு...” என்றார். தொலைவில் போன காரையே செல்லம்மா வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள். கணவனைப் பற்றி அவளுக்கு நன்றாகத் தெரியும். மீறிப் போனால், சொன்னபடி செய்யக்கூடிய அரிச்சந்திரன், அவர். செல்லம்மா மனதுக்குள்ளே புலம்பினாள். ‘நான் பெற்ற என் செல்ல மகளோட பழகத்தான் முடியல. இனிமேல் பார்க்கவும் முடியாதோ? கண்ணை கண்ணே பார்க்க முடியாதாம். இனிமேல், என் கண்ணை என் கண்ணால பார்க்கக் கூட முடியாதோ... முடியாதோ...’ |