உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
20 அப்பாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது சரிதானா என்று யோசித்து யோசித்து, மல்லிகாவிற்குத் தலை குழம்பியது. அப்போது, மல்லிகாவின் தம்பி பரமசிவத்திடம், சரவணன் ஒரு காகிதத்தை நீட்டி, விசாரித்துக் கொண்டிருந்தான். மல்லிகாவிற்கு, நாடி நரம்பெங்கும் ஏதோ ஒன்று வியாபித்தது. சொல்ல முடியாத, சொன்னாலும் விளங்காத அச்சத்தையும், அதே சமயம் அஞ்சாமையையும், துன்பத்தையும், அதேசமயம் இன்பத்தையும் ஏக்கத்தையும், அதே சமயம் எதிர்ப்பையும், பலமுனைப் பார்வையும், அதே சமயம் ஒரு முனைப்பட்ட உள்ள உணர்வையும் கொடுக்கும், ஏதோ ஒரு சுகம்... ஏதோ ஒரு... சரவணனிடம், உள்ளத்தை முன்னால் விட்டு, உவகை முட்ட அவள் பின்னால் நடந்தாள். மெல்ல மெல்ல நடந்தாள். இருபதடி தூரத்தில், குடித்தனத் தோழிகளை பத்துத் தடவை திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே, போனாள். பிறகு, “வக்கீல் அப்பா அனுப்பி இருப்பாங்க... இல்லன்னால் வரவா போறீங்க...” என்று அவனுக்குக் கேட்கும்படியாகப் பேசுவதாய நினைத்து, தனக்கே கேட்காமல் பேசினாள். சரவணன், அவளையே பார்த்தான். உல்லி உல்லிப் புடவைக்குப் பதிலாக, சின்னாளப்பட்டி காதில் ‘ரிங்’ இல்லை. கழுத்தில் செயின் இல்லை. கையில் வளையல்கள் இல்லை. ஆனால் இவற்றை விட மேலான ஏதோ ஒன்று அவளிடம் இருப்பது போல் தோன்றியது. காதலா... கனிவா... சேவை கொடுக்கும் திருப்தியா... தட்டுத்தடுமாறி சரவணன் ஏதோ பேசப் போன போது, குடித்தனப் பெண்கள் ‘ஏதோ இருக்கு’ என்பது போல் பார்த்த போது, மல்லிகாவின் அம்மாள் செல்லம்மா, “அய்யோ... கடவுளே... எங்க அண்ணனுக்கா... என் உடன்பிறப்புக்கா” என்று தலையில் அடித்துக் கொண்டே வந்தாள். மல்லிகா துடித்துப் போய், அம்மாவின் கரங்களைப் பற்றிய போது, அவள் “உங்க அப்பாவ... தண்டையார்பேட்டையில்... மணிக்கூண்டுக்குப் பக்கத்தில் இருக்கிற நர்சிங்ஹோமில் சேர்த்திருக்காம். பிழைக்கிறது கஷ்டமாம்... அய்யோ... அண்ணா” என்று அரற்றினாள். பிறகு “‘மல்லிகா... மல்லிகா...’ன்னு சொல்லுக்குச் சொல்லு புலம்புகிறாராம்” என்று சொல்லிப் புலம்பினாள். மல்லிகா விக்கித்து நின்றாள். கல்லாகி, மீண்டும் பெண்ணான அகலிகை, உடனே கல்லானது போல, குளிர்ச்சியை விரும்புவளை, கொட்டும் உறைபனிக் காலத்தில் பனிக்கட்டிக்குள் போட்டதுபோல், மலர்க்காடு பிணக்காடாய் ஆனது போல், துவண்டு நின்றாள். “மல்லிகா மல்லிகான்னுதான் புலம்புகிறாராம்” என்று அம்மா சொன்ன வார்த்தைகள், மலைப்பாம்பாய் மாறி, அவளை விழுங்கிக் கொண்டிருந்தது. புலியாய் மாறி, அவள் மீது பாய்ந்து கொண்டிருந்தது. மல்லிகா, சரவணனை ஏறிட்டுப் பார்த்தாள், கேட்டாள்: “சைக்கிளில் தானே வந்தீங்க...” “இல்ல, ஸ்கூட்டரில்...” “என்னை ஸ்கூட்டரில் கொண்டு விட முடியுமா?” சரவணன், செல்லம்மாவைப் பார்த்தான். அவள், அந்தச் சமயத்திலும், ஊர் வாய்க்குப் பயந்தவளாய் “நாம ரெண்டு பேரும் போகலாம் மல்லிகா” என்றாள். மல்லிகா, வெறி பிடித்தவள் போல் கத்தினாள். “என்னால்... ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது சரவணன்! உங்களால் என்னைக் கொண்டு போய் விட முடியுமா... முடியாதா... இவ்வளவுதானா நீங்கள்...” மல்லிகா, வெளியே ஓடினாள். எந்தக் கால்களைப் பிடித்து, தத்தித்தத்தி நடந்தாளோ, அந்தக் கால்களைப் பிடித்துக் கதற வேண்டும். பெறாமலே பெற்று, கண்படும் என்று கட்டுப்படுத்தியும், கட்டுப்படுத்தினால் துவள்வாள் என்று விட்டுப் பிடித்தும், உயிரிலும் உயிராய் வளர்த்த அப்பாவை, உடனே பார்த்தாக வேண்டும். மல்லிகா, தலைவிரி கோலமாக ஓடிக் கொண்டிருந்தாள். அருகே வேகமாக வந்து நின்ற சரவணன் ஸ்கூட்டரைப் பாராமலே ஓடினாள். பிறகு அந்த ஸ்கூட்டர் சற்று முந்திப் போய், வழிமறிப்பது போல் நின்ற போது, பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அவன் தோளைப் பிடித்துக் கொண்டாள். ஆனால், அதில் எந்தவித ஸ்பரிசமும் ஏற்படவில்லை. முதன் முதலாக, கண்ணெல்லாம் நிறைந்தவன் மேல் கைபட்ட நாணம் இல்லை. ஓடிக்கொண்டிருக்கும் ஸ்கூட்டருக்கு முன்னால், சொக்கலிங்கம் நின்று கொண்டிருப்பது போன்ற பிரமை. இதனால் “பார்த்து... பார்த்து” என்றாள். சொக்கலிங்கம், அந்த ஸ்கூட்டருக்கு முன்னாலேயே ஓடுவது போன்ற இன்னொரு பிரமை இதனால் “சீக்கிரம் சீக்கிரம்” என்றாள். சொக்கலிங்கத்தின் கால் பக்கம், பார்வதி சோகமாக உட்கார்ந்திருந்தாள். “எதுக்கும் ஒரு உயில் எழுதி வச்சிடுங்க” என்று மைத்துனன்மார்கள், சுற்றி நின்று உபதேசம் செய்து விட்டு, பார்வதியைக் கூட்டிக் கொண்டு வெளியே எங்கேயோ போயிருந்தார்கள். வாசலில் வழி மறிக்கப் பார்த்த நர்சை தள்ளி விட்டுவிட்டு மல்லிகா உள்ளே ஓடினாள். “அப்பா... அப்பா... என் அப்பா!” மல்லிகா, அப்பாவின் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டே விம்மினாள். அவர் காலில் தலை வைத்துப் புரண்டாள். கன்னத்தைத் தடவி விட்டுக் கதறினாள். “அப்பா... அப்பா... என் அப்பா!” மேகத்தைக் கீறிய இடியைப் போல், இடியைக் கீறிய மின்னலைப் போல், மின்னலைக் கீறிய ஒளியைப் போல், அவள் தன்னைக் கீறி, தன் இதயத்தையே வெளியே எடுத்து வைப்பவள் போல், “அப்பா... அப்பா...” என்றாள். சொக்கலிங்கம் மல்லிகாவின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். “வந்திட்டியாம்மா... வந்திட்டியாம்மா” என்று அவரது வாய், வார்த்தைகளைத் தோற்றுவித்த போது, அவர் “என்னை விட்டுட்டு... உன்னால் எப்படிம்மா இருக்க முடிஞ்சுது? என்னால் முடியல... அதனாலதான் இந்த கதி” என்று அவர் அடம்பிடிக்கும் சிறுவனைப் போல் கோபமில்லாதக் கோபத்துடன், மிஞ்சுவது போல் கெஞ்சியும், கெஞ்சுவது போல் மிஞ்சியும் எழுந்து உட்கார்ந்தார். கட்டில் விளிம்பில் சாயப் போன அவரை, மல்லிகா தன் மார்போடு அணைத்துக் கொண்டார். இதற்குள் உள்ளே வந்த டாக்டர், “கொஞ்சம் பேசலாம் என்று சொன்னால் இப்படியா பேசறது” என்றார். ஆனால், ‘பேஷண்ட்’ கொலாப்ஸ் ஆகாமல், குத்துக் கல்லாய் ஆனதில் - அவரை அப்படி ஆக்கியதில் பெருமைப்பட்டார். “மல்லி... மல்லிகா” என்று சொல்லிக் கொண்டே பார்வதி உள்ளே ஓடி வந்தாள். இருவரில், யார் முதலில் அணைத்தது என்று தெரியாமல், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள். “அம்மா... அம்மா...” “ஏண்டி அழுவுறே... ஏண்டி இப்படி இளைச்சிட்டே. என்னை நினைச்சியா... இனிமேல்... என்னை விட்டுப் போவியா... போவியாடி...?” “அழாதிங்கம்மா... அழாதிங்கம்மா...!” மீண்டும், இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டார்கள். பார்வதி, மகளின் தலையை கோதிவிட்டுக் கொண்டே, “டாக்டர், இனிமேல் உங்கள் மருந்து கூட தேவையில்லை. இவர் இப்பவே நடப்பார்” என்றாள். உடனே டாக்டர் “ஆனந்தத்திலேயும் அதிர்ச்சி வரப்படாதும்மா” என்றார். “மருந்து வேண்டாம் என்றால் எப்படி?” இதற்குள், பெருமாளும், செல்லம்மாவும் பிள்ளை குட்டிகளோடு வந்து நின்றார்கள். பெருமாள், உணர்ச்சி வசப்பட்டு, சொக்கலிங்கத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “எந்த பயலுவளோ... நீங்கள்... சாகணுமுன்னு நான் சொன்னதாய் கோள் சொன்னாங்களாமே. சத்தியமாய் சொல்லுகிறேன்... உங்கள் சொத்துக்கு நான் ஆசைப்படல. அந்தப் பொருந்தாத கல்யாணத்தால... பேச்சியும்... என் தங்கை பார்வதியும் அவஸ்தப்படக் கூடாதுன்னு தான் நோட்டீஸ் அனுப்பினேன். மற்றபடி...” சொக்கலிங்கம் சிரித்துப் பேசினார். “அதெல்லாம் எதுக்குடா பேசுற... ஆமாம்... உன்னை குடிக்கக் கூடாது... குதிரைகிட்ட போகக் கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருப்பேன். அப்போ... நான் சொல்லும்போது கேட்கல. இப்போ மல்லி சொல்லாமலே நிறுத்திட்டியாம். என்னடா நியாயம்...” பெருமாள் மகிழ்ந்து போனார். சின்ன வயதிலேயே ‘டா’ போட்டுப் பேசியவர்கள். கல்யாணம் ஆன பிறகும் ‘டா’ போட்டவர்கள். சொக்கலிங்கம், பகையை மறந்துட்டார். “அந்தப் பெருமை உனக்குத்தானடா... மல்லி உன்னோட பொண்ணுதானடா...” இருவரும், ‘டாட்டா’ காடாமல், ‘டா’ போட்டுப் பேசியதைக் கேட்ட பார்வதியின் அண்ணன்மார்கள், முகஞ் சுழித்தார்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்தால், அருமைத் தங்கை என்னாவது? பெரியவர், அதட்டிக் கூப்பிட்டார். “பார்வதி... கொஞ்சம் வெளியில் வாரீயா... உன்கிட்ட தனியாய் பேசணும்.” மல்லிகாவையே பார்த்துக் கொண்டிருந்த பார்வதி, எரிச்சலோடு பதிலளித்தாள். “நான் உயிரோட இருக்கும் போதே, இன்னொருத்திக்கு ஏற்பாடு பண்ணுனவங்க... என்ன அண்ணன்? என்ன தம்பி? நான் வெளியில வரவும் வேண்டாம். நீங்கள் உள்ளே நிற்கவும் வேண்டாம்.” அண்ணன்மார்கள் அதிர்ச்சியுடன் போனார்கள். சொக்கலிங்கம், அப்போதுதான் ஒரு மூலையில் ஒதுங்கி நின்ற சரவணனையும், ஒரு பெண் பட்டாளத்தையும் பார்த்து விட்டு, மல்லிகாவை அர்த்த புஷ்டியாகப் பார்த்தார். மல்லிகா நாணிக்கொண்டே, “அவர் பெயர் சரவணன். என்னோட நண்பர். அவங்க... என்னோட... அந்த வீட்டுல இருக்கிற சகோதரிங்க... அக்காளுங்க...” சொக்கலிங்கம், சரவணனைப் பார்த்துவிட்டு பேசாமல் நின்று கொண்டிருந்த பெண்களைப் பார்த்தார். மாயையால், கடவுள் தன்னை அலங்கரித்துக் கொண்டாலும், அந்த மாயை எப்படி கடவுளாகாதோ, அது போல், அரவை மில்லும், மளிகைக் கடையும் வாழ்க்கைக்குத் தேவையென்றாலும், அவையே வாழ்க்கையாகாது என்பதை மரண விளிம்பில் நின்ற போது புரிந்து கொண்ட சொக்கலிங்கம், “உட்காருங்கம்மா” என்றார். |