உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
2 சொக்கலிங்கம் டெலிபோனைச் சுழற்றினார். “அலோ... செட்டியாரா... சாரு ரெடியா... பரவாயில்ல. அரைமணி நேரம் கழித்தே அனுப்புங்க... அப்புறம் வேளச்சேரி விவகாரம் பழம்... நேர்ல பேசலாம்... சரி... காரை அரை மணிக்கு அப்புறமாவே அனுப்புங்க. மூவாயிரம் ரூபாய் குப்பன் கிட்டே கொடுத்து அனுப்புறேன்... அதை முடிச்சிடுங்க... வச்சிடட்டுமா... வச்சுடுறேன்.” சொக்கலிங்கம் டெலிபோனை வைத்தபோது, பார்வதி கண்ணாடி பொருத்திய பீரோவைத் திறந்து, வைர நெக்லஸ், ஏழு பவுன் இரட்டைவடச் சங்கிலி முதலியவற்றைக் கழுத்திலும், நான்கைந்து தங்கக் காப்புகளை கைகளிலும், மூன்று மோதிரங்களை விரல்களிலும் போட்டுக் கொண்டாள். நகைகளைப் போடப் போட, கல்யாண வீட்டிற்கு எப்போது போவோம் என்று அவளுக்கு அவசரம், ஆவேசமாகும் அளவிற்கு வளர்ந்தது. குளித்துவிட்டு வந்த மல்லிகாவிற்கு பார்வதி தலைவாரி விட்டாள். “போங்கம்மா நான் குழந்தையில்லே... எனக்கும் கையிருக்கு” என்று அந்தக் கல்லூரிக்காரி சிணுங்கியபோது, பார்வதி, “இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு எப்படி டிரஸ் பண்றது என்பதை விட, எப்படி எப்படிப் பண்ணாமல் இருக்கலாம் என்பதுதான் அதிகமாய் தெரியும். சும்மா தலையைக் கொடுடி. அப்படி இப்படி ஆட்டாதே!” என்று சொல்லிக் கொண்டு, அவளின் இடுப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டே, இரட்டைப் பின்னல் போட்டள். பிறகு கண்ணுக்கு மை போட்டாள். அதன் பின் பிரோவைத் திறந்து, நகைகளை நீட்டினாள். மல்லிகா திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாள்: “ஏ, அம்மா... முதுகில அடிக்கணுமுன்னு சொல்லுங்க... குனியுறேன். கன்னத்துல முத்தங் கொடுக்கணுமுன்னால், முகத்தை நிமிர்த்துறேன். ஆனால் நகை போடுறதுக்கு கழுத்தையோ கையையோ நீட்ட மாட்டேன். போங்கம்மா... எனக்கு இதெல்லாம் பிடிக்காது...” “உனக்குப் பிடிக்காவிட்டால் போகட்டும்... எனக்குப் பிடிக்கிறதுக்காவது போடக் கூடாதா... இன்னைக்கு மட்டும் போட்டுக்க ராஜாத்தி...” “இன்னைக்கு மட்டும் என்னை விட்டுடுங்கம்மா... ப்ளீஸ். இதுங்களை நீங்களே போட்டுக்கங்க... உங்கள் அழகை எடுப்பா காட்டும்...” பார்வதி யோசித்தாள். கணவனிடம் இருந்து இதுவரை வராத, “அழகு... எடுப்பாய் இருக்கும்” என்பன போன்ற வார்த்தைகளின் வசீகரங்களில் சிக்குண்ட அவள், மல்லிகாவுக்காகச் செய்யப்பட்ட நகைகளில் பெரும்பாலனவற்றை எடுத்துப் போட்டுக் கொண்டாள். தோளும், கழுத்தும் தொடும் இடத்தில் இருந்து, கிட்டத்தட்ட குரல்வளை வரைக்கும் நகையடுக்குகள். இதற்குள் குளியலறையில் இருந்து, “ரெடியாயிட்டீங்களா” என்று கூவிக்கொண்டே வந்த சொக்கலிங்கம், மனைவியைப் பார்த்து, “இந்தக் கம்மலைக் கழட்டிட்டு அவளோட ரிங்கை போட்டுக் கோயேன்... கொப்பரைக்கு வளையம் போட்டது மாதிரி இருக்கும்...! வேணுமானால் காம்பவுண்டு கதவுச் சங்கிலியைக் கழட்டித் தரட்டுமா... அதையும் தங்கச் சங்கிலி மாதிரி போட்டுக்கோ! ஆளைப் பாரு நாற்பது வயதுக்கு மேல உடம்பைக் குறைக்கறதுக்கு பார்க்காமல், நகைகளை கூட்டப் பார்க்கறாள்...” “நான் வேணுமானால் தடியா இருந்துட்டுப் போறேன். உங்களுக்கு என்ன நஷ்டம்? ஏண்டி இப்படிச் சிரிக்கிற?” “சிரிக்கலம்மா, அப்பா... அம்மாவை நீங்கள் ஓவரா பேசுறீங்க...” “நாம இப்போ அவரு கண்ணுக்கு அப்படித்தாண்டி தெரியும்! இவரு இவ்வளவு பேசுறாரே, இவரு காலப் பாரு, குளிச்சாரம். காலுல தண்ணியே படல...” “தண்ணி போடுற உன் ராமனை விட நான் தேவலடி...” “என்னம்மா நீங்கள்... அப்பா தமாசுக்கு பேசுறாரு... நீங்கள் சீரியசா எடுத்தால் எப்படி?” “விளையாட்டு வினையாகும்னு சொல்லுடி.” “வினை கூட என்கிட்டே விளையாட்டாகும்ன்னு சொல்லும்மா...” “நான் ஒண்ணும் சொல்லப் போறதுல்ல. அதோ, கார் வந்துட்டு. போயிட்டு சீக்கிரமா வந்துடணும்...” மூவரும் காரில் ஏறினார்கள். மல்லிகா இருவருக்கும் நடுவில் உட்கார்ந்து கொண்டாள். உரித்த வாழைத்தண்டு போன்ற கால்கள். ஆமணக்குச் செடியைப் போன்ற சிவப்பும் ஊதாவும் ‘கலந்த’ நிறம். அது, ரத்தச் சிவப்பும் இல்லை; குங்குமச் சிவப்பும் அல்ல. அழகான சிவப்பு. தாமரைத் தண்டு போன்ற கழுத்து, நளினமும், கம்பீரமும் கலந்த பார்வை. எவர் சொல்வதையும், உண்மையிலேயே உன்னிப்பாகக் கேட்பது போல், முதுகை வளைத்து, முகத்தை முன்பக்கமாய் கொண்டு வரும் நேர்த்தி. குட்டையென்றோ, நெட்டையென்றோ சொல்ல முடியாத உயரம். பல்வேறு டிசைன்கள் போட்ட அந்த ‘மோஷி மோஷி’ சேலையில், இரட்டைப் பின்னல்களில் ஒன்று தோளின் முன்பக்கம் தொங்க, சேலைக் கடையின் முன்னால் நிற்கும் மெழுகுப் பெண்ணைப் போல, அதே சமயம் ஆபாசம் இல்லாத கவர்ச்சியுடன், பாலுணர்வைத் தூண்டாமல், கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்பது போன்ற பாங்குடன் மல்லிகா தோன்றினாள். அவளையே இமை விலகப் பார்த்த திரு-திருமதி சொக்கலிங்கங்கள், ஒருவருக்கு ஒருவர் புன்முறுவலைப் பரிமாறிக் கொண்டே புளகாங்கிதமானார்கள். டிரைவர் என்ஜினை ‘ஆன்’ செய்த போது, ராமசாமி வந்தார். பார்வதியின் பெரியண்ணன். அந்த உறவுக்கு ஏற்ற உருவம். உருவத்திற்கு ஏற்ற பணம் உள்ளவர். பணத்திற்கு ஏற்ற ‘பாவலா’ மனிதர். “கல்யாணத்துக்குப் புறப்பட்டாப் போல இருக்கு?” சொக்கலிங்கம் முகத்தைச் சுழித்தார். காலங்காத்தால வந்துட்டான்! இவன் வாடை பட்டாலே, மூச்சு முட்டும். இனிமேல் போன காரியம் உருப்பட்டாப்லத் தான்! ‘அண்ணன் கேட்டதுக்கு ஏதாவது சொல்லுங்களேன்’ என்பது மாதிரி, பார்வதி, கணவனின் இடுப்பை ரகசியமாக இடித்தபோது, சொக்கலிங்கம், தன் மூத்த மைத்துனருக்குப் பதில் சொல்லும் கட்டாயத்திற்கு உட்பட்டார். கனகச்சிதமாகவே பதில் சொன்னார். “பின்ன என்ன... உங்கள் தங்கை இவ்வளவு நகை நட்டு போட்டிருக்கும் போது, நான் இந்தப் பட்டு வேட்டியை கட்டியிருக்கும் போது, கல்யாணத்துக்குத்தான் போவோம்... கருமாந்தரத்துக்கா போவோம்?” ராமசாமி சளைக்கவில்லை. “அடடே... நம்ப மல்லிகா அக்காவோட கல்யாணமா? எனக்கு மறந்தே போயிட்டு! நானும் கார்ல ஏறிக்கிறேன்.” “இல்லத்தான், நாங்கள் வழில ஓர் இடத்துக்குப் போயிட்டு வரப்போறோம். நீங்கள் முன்னால போய் அங்க இருக்கவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசை பண்ணுங்க. டிரைவர்! அவரு மறிச்சிக்கிட்டு நிற்கிறாரேன்னு யோசிக்க வேண்டாம். வண்டியை எடு. அவரு தானா துள்ளுவாரு... வண்டிக்கு சேதம் வருமேன்னு பார்க்கியா? சீக்கிரமாய் எடுப்பா...” கார் சீறிக்கொண்டு புறப்பட்டது. ராமசாமி, அப்போதைக்கு ஒதுங்கிக் கொண்டார். பார்வதியால் தாளமுடியவில்லை. மல்லிகாவை விட்டு சிறிது விலகி உட்கார்ந்து கொண்டே, “எங்கள் அண்ணங்கன்னால் ஏன் உங்களுக்கு இப்படி பற்றி எரியுது?” என்றாள். “வத்தி வச்சால் பற்றித்தான் எரியும்.” “உங்கள் தங்கை புருஷனை விட எங்க அண்ணன் தம்பிங்க மோசமில்ல. கல்யாணம் நிச்சயிக்கிறதுக்கு முன்னால, உங்கள்கிட்ட பெண்ணுக்குத் தாய்மாமனாச்சேன்னு, ‘இந்த இடம் பிடிக்குதா அத்தான்னு’ ஒரு வார்த்தை கேட்டாரா? சரி, கேட்கல. கல்யாண நோட்டீசை நேரிலயாவது வந்து கொடுத்தாரா? சரி. கொடுக்கல. கல்யாண வீட்ல யார் யாருல்லாமோ வாழ்த்துரையோ மண்ணாங்கட்டியோன்னு போட்டிருக்கே, உங்கள் பெயரையும் போடுறது? சரி போடல. பெண் வீட்டார்னு சொல்லி, அண்ணன்மாருங்க பெயருங்களை போட்டிருக்காரு... பிள்ளைகளோட பெயருங்களை போட்டிருக்காரு... தாய்மாமா பெயரை ஏன் போடல? இவள் பெயரைக் கூட போட்டிருக்காரு. இவளை எடுத்து வளர்த்த உங்கள் பேரு எங்கேயாவது இருக்கா? ஏன் பேச மாட்டேங்கிறீங்க? அரவ மிஷின் மாதிரி கத்துவீங்களே, இப்போ ஏன் பேசமாட்டேங்கிறீங்க?” சொக்கலிங்கம் பட்டும் படாமலும் பதில் அளித்தார். “இதனால அவங்களுக்குத்தான் நஷ்டமே தவிர நமக்கில்ல. நாலுபேரு நாலுவிதமாய்ப் பேசப்படாதேன்னு போறோம். அவ்வளவுதான். உங்கள் அண்ணன்மாரு தாழ்த்தின்னோ, இல்லை என் மச்சான் உசத்தின்னோ எதுவும் கிடையாது. எல்லாருமே காலச் சுத்துன பாம்புங்க. டிரைவர், நீ ஏய்ய நாங்க பேசுறதக் கேட்கிறது மாதிரி வண்டியை மெதுவா விடுற? சீக்கிரமா விடுப்பா... இன்னொன்னும் சொல்றேன் கேளுடி. அண்ணன் தம்பிங்களானாலும் சரி, அக்கா தங்கைகளானாலும் சரி, அம்மா வயித்துல இருந்து ஒருவரோடு ஒருவர் சொல்லிட்டுப் பிறக்கல. ஒண்ணா பிறக்கறதுனாலேயே ஒண்ணா ஆயிட மாட்டாங்க. கூடப்பிறக்கறதுனாலேயே கூடி வாழ்ந்துட மாட்டாங்க. உறவை விட, நட்பு இருக்கே, அதுலயும் பால்ய சிநேகிதம் இருக்கே, அதுக்கு இணையாய் எதுவும் ஆக முடியாது. சொந்தக்காரங்கிட்ட உடம்புல ஓடுற ரத்தம் துடிக்கலாம். ஆனால், சிநேகிதங்கிட்ட அந்த உடம்புக்குள்ள இருக்கிற ஆன்மா துடிக்கும். இந்தச் செட்டியாரையே எடுத்துக்கோ... அவரு எங்கே பிறந்தாரோ, நான் எங்கே பிறந்தேனோ, அவரு செட்டியார்ல நாட்டுக்கோட்டையா, வாணியச்செட்டியா, ‘வளையல் செட்டியா’ன்னு கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும், அவரை விட, எனக்கு நெருக்கமான மனுஷன் யாருமே இல்ல...” “ஆயிரம் சொல்லுங்க, என் கூடப் பிறந்தவங்க... உங்கள் தங்கை புருஷன் மாதிரி நடக்க மாட்டாங்க... எங்கள் அண்ணனை நாயை நடத்துறதவிட மோசமாய் நடத்துனிங்க. கார்ல ஏறப்போனவரக் கூட முகத்துல அடிச்சதுமாதிரி பேசுனிங்க. அப்போ கூட அவரு கோபப்பட்டாரா? சிரிக்கிறத விட்டாரா...?” “கோபப்பட வேண்டிய இடத்துல சிரிக்கிறவன் ஆபத்தான மனுஷண்டி. அதோட, ரோஷம் இருந்தால் தான் கோபம் வரும். வேஷம் இருந்தால் சிரிப்புத்தான் வரும்!” “சரி சாமீ! எங்கள் ஆட்கள் ரோஷங்கெட்டவங்கதான், ஆபத்தானவங்கதான். இவள் அப்பாதான் ரோஷக்காரர், யோக்கியர், போதுமா...?” “உனக்கு அறிவு இருக்காடி? இவள் நம்ம பொண்ணு. நம்மைத் தவிர வேற யாரையும் நினைக்காத பொண்ணு. நம் மடியிலேயும், தோளுலேயும் புரண்ட பொண்ணு. இவளையும், அந்த குடிகாரனையும் எதுக்காகடி சம்பந்தப்படுத்திப் பேசுற? பாரு, அவள் முகம் போற போக்கை...” பார்வதி அப்போதுதான் உணர்ந்தவள் போல் திடுக்கிட்டு, மல்லிகாவைப் பார்த்தாள். அவள் அருகே நெருங்கி உட்கார்ந்து கொண்டு, அவளை தனது வலத்தோளில் படும்படியாய் அணைத்துக் கொண்டாள். மல்லிகா, சிரித்துக் கொண்டே, “நான் ஒண்ணும் கோபமும் படல, வருத்தமும் படல. நீங்கள் யாரைப் பேசினாலும், எப்படிப் பேசினாலும், எனக்குக் கவலையில்லை. என் கவலையெல்லாம் நீங்கள் சண்டை போடக் கூடாது என்கிறதுதான்” என்று சொல்லிக் கொண்டே, அவர்கள் இருவரின் கைகளையும், தன் இரு கரங்களால் பலமாகப் பிடித்துக் கொண்டாள். அந்தப் பிடியின் பலத்தை கணக்கில் வைத்துப் பார்த்தால், மல்லிகா, ஏதோ பலவீனப்பட்டுக் கொண்டு இருப்பது போல் தோன்றியது. அவர்களின் கைகளைப் பிடித்திருப்பது, “என்னை கைவிட மாட்டீர்களே” என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது. |