உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உறுப்பினர் கட்டணம் : ரூ.354 (1 வருடம்) | GPay Ph: 9176888688 | UPI ID: gowthamweb@indianbank |
5 சொக்கலிங்கமும், பெருமாளும் ஒரு காலத்தில் பிராண சிநேகிதர்கள். ஒரே ஊர்க்காரர்கள். ஒன்றாகவே சுவரேறிக் குதித்தவர்கள். நெல்லை மாவட்டத்தில் இருந்து, இருபது வயதிலேயே, ‘பஞ்சம்’ பிழைப்பதற்காக, ஒரே ஒரு டிக்கெட்டை எடுத்து, டிக்கெட் பரிசோதகரிடம் எப்படியோ மாற்றி மாற்றிக் காட்டி, சென்னை வந்தவர்கள். இரண்டாவது உலகப் போர் நடந்த சமயம் அது. அந்த சமயம் கொடுத்த சமாச்சாரங்களால், பல்வேறு வியாபாரங்களைச் செய்த இருவரும், பலமாகச் சம்பாதித்தார்கள். சொக்கலிங்கம், பெருமாளின் சார்பில், பல இடங்களுக்குப் போய், அலைந்து அவருக்கு இரண்டு வீடுகளை வாங்கிக் கொடுத்தார். பெருமாள், சொக்கலிங்கத்திற்காகச் சுற்றியலைந்து, மூன்று வீடுகளை வாங்கிக் கொடுத்தார். இப்போது சொக்கலிங்கத்திடம் இருக்கும் அரவை மிஷினுக்கு முன்பணம் கொடுத்தது கூட இந்தப் பெருமாள் தான். நட்பை, உறவுக் கயிற்றால் நன்றாகக் கட்ட வேண்டும் என்று கருதிய சொக்கலிங்கம், கிராமத்தில் இருந்த தன் ஒரே தங்கை செல்லம்மாவின் கழுத்தில், பெருமாள், மஞ்சள் கயிற்றை கட்டும்படி செய்தார். சொக்கலிங்கமும், சென்னையில், ஓரளவு முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்த பார்வதியைக் கட்டிக் கொண்டார். சொல்லப் போனால், இந்தப் பார்வதியை கட்டிவைத்த பெருமையோ அல்லது சிறுமையோ, இந்தப் பெருமாளுக்குத்தான் சேரும். கால வேகத்தில், பெருமாள், குதிரை வேகத்தைக் கணக்கிடப் போனார். தொழிலில் மட்டும் குறியாக இல்லாமல், எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் அவருக்கு, பல்வேறுபட்ட சகவாசங்கள் கிடைத்தன. குதிரைக்கு பந்தயம் கட்டுபவன், அவருக்கு நெருங்கிய நண்பன். கள்ளுக்கடை கந்தப்பன், இவரிடம் நிஜமான அப்பன் மாதிரியே பழகினான். பருத்திச் சூதாட்டக்காரன் ஒருவன், இவர்மேல் வேட்டி மாதிரி பின்னிக் கொண்டான். போதாக் குறைக்கு சோடா பாட்டல்களை எடுத்து வீசும் ‘சோமாறிகளின்’ பேரன்பும் இவரைப் பிடித்துக் கொண்டது. இந்தப் பிடியில், இரண்டு வீடுகளும், போடு போடென்று ஓடிக் கொண்டிருந்த எண்ணெய் கடையும், எண்ணூர் நிலமும், இவர் பிடியை விட்டு, மீண்டும் பிடி கொடுக்காத அளவுக்குப் போய்விட்டன. பெருமாள், தெருவுக்கு வந்தார். சொக்கலிங்கமும், எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். அவ்வப்போது, தங்கையிடம், மனைவிக்குத் தெரிந்தும், தெரியாமலும், பணம் கொடுத்தார். ஆனால் அந்தப் பணத்தை, பெருமாள், மனைவியை உதைத்துப் போட்டுவிட்டு, எடுத்துக் கொண்டு போகிற செய்தி, அவருக்குக் கேளாமலே போய்ச் சேர்ந்தது. தங்கை அடிபடக்கூடாது என்கிற ஒரு காரணத்தோடு, இன்னும் பல காரணங்களும் சேர, அவர் பணத்தை நிறுத்தினாரே தவிர பாசத்தை நிறுத்தவில்லை. அந்தப் பாசத்திற்கும் ஒரு சமயம் கண்டம் வந்தது. தங்கையின் வீட்டுக்குப் போயிருந்த அவரை, அப்போது குடித்துவிட்டு வந்த பெருமாள், “ஏண்டா... சோமாறி... என் பெண்டாட்டிக்கிட்ட வத்தி வைக்கவாடா வந்தே...” என்று சொல்லி, கையைக் காலை ஆட்டியபோது, சொக்கலிங்கம், மச்சானின் அடிகளுக்காக அங்கே அப்போது ஒதுங்கிக் கொண்டது போல், தங்கையின் குடும்பத்திடம் இருந்து, கிட்டத்தட்ட அடியோடு ஒதுங்கிக் கொண்டார். போதாக்குறைக்கு, பார்வதியின் அண்ணன்கள், “‘கழுதை கூட சேர்ந்தால், கவரிமானும் எதையோ தின்னும்’ என்கிறது மாதிரி ஆயிடப் போகுது. பெருமாள் உங்களை மாதிரி ஆக முடியாட்டாலும் கவலை இல்லை. நீங்க அவனை மாதிரி ஆகிடக்கூடாது பாருங்க. அதனால...” என்று மேற்கொண்டு பேசாமல் விட்ட போது, சொக்கலிங்கம், “அதனால” என்பதற்கு உண்டான அர்த்தங்களைப் புரிந்து கொண்டார். பார்வதியும் ஒத்துப் பாடினாள். சொக்கலிங்கம், தங்கை வீட்டை எட்டிப் பார்ப்பதே இல்லை. உயிருக்குயிராய் நேசித்த தன் தங்கையை, தன் உயிருக்குள்ளேயே சங்கமித்துக் கொண்டவர் போல், அவளிடமும், அவர் பாராமுகமாய் இருந்தார். செல்லம்மா தான் எப்போதாவது, அண்ணனின் நினைவு வரும்போதெல்லாம், அவர் வீட்டுக்குப் போவாள். அதுவும், அவளுக்கு குழந்தை குட்டிகள் அதிகமாக அதிகமாக, அவள் வரவும் குறைந்து கொண்டே வந்தது. பத்தாண்டு கால தாம்பத்திய வாழ்க்கையில், சொக்கலிங்கம் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருந்த போது, பெருமாள், பிள்ளைகளைச் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ‘துள்ளி’ விளையாட பிள்ளை பிறக்காததில், சொக்கலிங்கம் அதிர்ந்து போனார். சிலர், அவருக்கு மறுமண யோசனையைத் தெரிவித்தார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்ட, அப்போதைய இளம்பெண்ணான பார்வதி, தூக்கில் தொங்குவதாகச் சபதம் போட்டதோடு நில்லாமல் ஒரு கயிற்றில் - அவள் தொங்கினால் அறுந்து விழக்கூடிய ஒரு சின்னஞ்சிறு கயிற்றை கையில் வைத்துக் கொண்டாள். அவள் அண்ணன்மார்கள், “அடிப்பேன் பிடிப்பேன்” என்றார்கள். இவ்வளவுக்கும், அவருக்கு, மறுமண ஆசை ஏற்படவே இல்லை. யாரோ சொன்னார்கள். இவரும் யாருக்கோ என்பது மாதிரி கேட்டார். இவ்வளவுதான். டாக்டர்கள் தனது கர்ப்பப்பையில் கோளாறு இருப்பதால் குழந்தை பிறக்காது என்று சொல்லிவிட்டாலும், பார்வதி அசரவில்லை. ஓர் ஆயுர்வேத டாக்டரின் யோசனைப்படி, கணவனுக்கு, பாயாசத்தில், பச்சை முட்டையை உடைத்தும், பாதாம் பருப்பைப் பாலில் கலந்தும் கொடுத்தாள். விளைவு, சொக்கலிங்கம் வெளியே எட்டிப் பார்க்கத் துவங்கினார். இந்த விவகாரங்களை ஜன்னல்களை எட்டிப் பார்த்துப் புரிந்து கொண்ட பார்வதி, கணவனுக்கு, பாதாம் பருப்பு வசதிகளை நிறுத்தியதோடு, இரவில் தலைவலி என்று சாக்கு சொல்லி, புருஷனை பட்டினி போட்டாள். சொக்கலிங்கம் சரியானார். ஆனால் எப்படியாவது ஒரு பிள்ளை வேண்டும் - எந்தப் பிள்ளையையாவது எடுத்து வளர்க்க வேண்டும் என்று விரும்பினார். விவகாரத்தை, தங்கை சொல்வதற்கு முன்பாகவே, ‘அரவை மில்’ ஒற்றர்கள் மூலம் புரிந்து கொண்ட, பார்வதியின் சகோதரர்கள், தத்தம் பிள்ளைகளைக் காட்டி, “இந்தா பிடி” என்றார்கள். யார் பிள்ளை தத்துக்குப் போவது என்ற விவகாரத்தில் அந்த சகோதரர்களே, ஒருவருக்கொருவர் மனங்கோணி, அடிக்காத குறையாகப் பேசிக் கொண்டார்கள். இறுதியில், தங்களுக்குள்ளேயே சமாதானப்பட்டு, தங்களின் அக்காள் பிள்ளையான ஆறு வயது ராமனைக் காட்டி “இந்தாங்க...” என்றார்கள். சொக்கலிங்கம் யோசித்தார். மைத்துனன்மார்கள், தனது திரண்ட சொத்துக்களைத் திரட்ட நினைத்தே, இப்படி உருப்படாத பிள்ளைகளைக் காட்டுவது போல் தோன்றியது. அதோடு, மறுமணம் என்ற யோசனையை யாரோ சொல்ல, இவரையே, “அடிப்போம் - பிடிப்போம்” என்ற பயல்கள். இவன்களிடம் தத்துகித்து எடுத்தால், அப்புறம் கழட்டிக்க முடியாது. ஜென்மாந்திர தண்டனைக்குச் சமமானது. அவருக்குத் தங்கையை கண்ணால் பார்க்காமல் இருக்க முடிந்ததே தவிர, உள்ளத்தால் நேசிக்காமல் இருக்க முடியவில்லை. அவளது இரண்டாவது மகளான இந்த மல்லிகா மீது அவருக்கு அளவற்ற பாசம். அவள் பிறந்த பிறகு தான், ஜோதிடர் ஒருவர் சொன்னது போல், தாய் மாமனான தனக்கு, யோகத்திற்கு மேல் யோகம் அடிப்பதாக நம்பினார். தங்கையின் வீட்டுக்குப் போய் மூன்று வயதுக்கேற்ற லாவகத்துடன், மான் குட்டி மாதிரி கவர்ச்சியாய், மீன் குட்டி மாதிரி சுறுசுறுப்பாய் விளங்கிய மல்லிகாவைக் கேட்டார். தங்கைக்காரியோ, தன் மகளைத் தர முடியாது என்பதை தயக்கத்தோடு வெளியிட்ட போது, “உன் பிள்ளை என் பிள்ளை இல்லியா? எப்படியோ... ஒருவரை ஒருவர் பாராமல் இருக்கும்படியாய் ஆயிட்டுது. உன் பிள்ளையைப் பார்த்தாவது, உன்னைப் பார்க்கிற ஆறுதல், எனக்கு வேண்டாமா?” என்று அவர் கேட்டபோது, செல்லம்மாவால், தாள முடியவில்லை. “இவள் பிறக்கதுக்கு முன்னாலேயே நாம் பிறந்தவங்க அண்ணா” என்று சொல்லிக் கொண்டே மல்லிகாவை, அவரிடம் நீட்டினாள். சொக்கலிங்கம், நேராக வீட்டுக்கு வந்து, மனைவியிடம் குழந்தையை நீட்டினார். அப்புறந்தான், அவளுக்கு விஷயமே புரிந்தது. ஆரம்பத்தில் எதிர்ப்புத் தெரிவித்தாள்; அசந்து போன அண்ணன்களின் பேச்சைக் கேட்டு, சில சமயம் குழந்தையை அடித்திருக்கிறாள். சொக்கலிங்கம் குழந்தையை வைத்துக் கொஞ்சும் போது, பொறாமை கூட ஏற்பட்டிருக்கிறது என்றாலும் குழந்தையின் மேலான சிரிப்பில், கள்ளங்கபடமற்ற கையாட்டும் லாகவத்தில், அவள், தன் எரிச்சலை அடக்குவது தெரியாமலே அடக்கினாள். அந்தக் குழந்தை அவளை, ஒரு சமயம் “அம்மா அம்மா...” என்று சொல்லி கன்னத்தைத் தொட்டது, அவள் இதயத்தைத் தொட்டது. ஒரு சமயம், கணவனிடம் ஏதோ மனத்தகராறில் சாப்பாட்டுத் தட்டை முன்னால் வைத்துக் கொண்டே, சாப்பிடவும் முடியாமல், சாப்பிடாமல் இருக்கவும் முடியாமல், அவள் கோபத்தாலும், அந்தக் கோபத்தை மீறிய பசியாலும் சுவரில் தலையைத் தேய்த்துக் கொண்டே இருந்த போது, இந்தக் குழந்தை, தன் வெள்ளரிப் பிஞ்சு விரல்களால், சோற்றை எடுத்து, அவள் வாயில் ஊட்டிய போது, பார்வதியின் வயிறு நிறைந்ததோ இல்லியோ, இதயம் நிறைந்தது. அன்றில் இருந்து இன்றுவரை, குழந்தை எங்கிருந்து வந்ததோ, அங்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற ஆசைக்கு, நிராசை கொடுத்துவிட்டு, இயல்பான தாய்மையினால் உந்தப்பட்டு, மல்லிகாவை, அவள், தாய்க்குத் தாயாக வளர்த்து வருகிறாள். சகோதரர்களின் சகவாசத்தால், அவ்வப்போது அவளுக்கு “நான் அனாதையாயிடுவேனோ... மல்லிகா கை விட்டுடுவாளோ” என்கிற எண்ணமும், பீதியும் எட்டிப் பார்த்தனவே அன்றி, இதுவரை, அவை எகிறவில்லை. அப்படியே, அண்ணன்மார்களின் உபதேசத்தால், மல்லிகா கல்யாணம் ஆனதும் மாறினாலும் மாறலாம் என்ற எண்ண உளைச்சலில், அவள் சிக்கித் தவித்து, ஓரளவு சினந்தவளாய் இருப்பதுண்டு. கல்லூரிக்குப் போகும் மல்லிகா, எப்போதாவது “சும்மா இருங்கம்மா. உங்களுக்கு ஒண்ணுந் தெரியாது” என்று சொல்லுவாள். பார்வதி உடனே ஒன்றும் தெரியாது என்றும் ஒன்றும் தெரியாத தன்னை, மல்லிகா, சொந்த அப்பாவுடன் சேர்ந்து கொண்டு, ஏமாற்றப் போகிறாள் என்றும், இன்றைக்கே சொத்து பற்றி இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்றும், நாள் முழுதும் துடிப்பாள். என்றாலும் கல்லூரியில் இருந்து, மல்லிகா திரும்பியதும், நினைத்ததை மறந்து, “பக்கடா போடட்டுமாம்மா... ஆரஞ்சு வேணுமா... ஆப்பிள் வேணுமா...” என்று கேட்பாள். வாசல் அருகே நின்ற ஆட்டோ ரிக்ஷாவின் டிரைவர் உள்ளே எட்டிப் பார்த்தார். மல்லிகா இன்னும் வராதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையில், வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் ஆட்டோ அது. மல்லிகாவை கல்லூரியில் கொண்டு போய் விடவேண்டும். மாலையில் கூட்டிக் கொண்டு வர வேண்டும். குளியலறைப் பக்கமாய்ப் போன பார்வதி, ஆட்டோவைப் பார்த்ததும், மல்லிகாவின் அறைக்கு வந்தாள். மல்லிகா, எதுவுமே புரியாதவள் போல், மேஜையின் முன் கைகளை ஊன்றி, முகத்தை அவற்றில் வைத்து, நெற்றியை, கோடுகள் விழும் வண்ணம் சுழித்தாள், எங்கேயும் போகப் போவதில்லை என்பது போல். படுக்கும் போது உடுத்திருந்த பருத்தி ஆடையோடு இருந்தாள். பார்வதி, அவளருகே வந்து, முகத்தை நிமிர்த்தினாள். “பைத்தியம்... இன்னுமா அந்த மனுஷன் பேசினது மனசில நிக்குது? இதுக்கு வருத்தப்படுறவள், எதுக்குத் தான் வருத்தப்பட மாட்டே? சொந்த அப்பாதானே பேசினார்? பேசினால் பேசிட்டுப் போகட்டும். இனிமேல் வேணுமுன்னால், அங்கே போக வேண்டாம். சரி, ஆட்டோ வந்துட்டுது, புறப்படுடி.” “சொந்த அப்பா, சொந்தமில்லாத அப்பான்னு பேசுனிங்கன்னால், எனக்குக் கோபங்கோபமாய் வரும். அப்பா பேசிட்டார்னு நான் வருத்தப்படல... அந்த ஆள், நாலு பேரு மத்தியில், சனியன்னு பேசிட்டார்னு தான் வருத்தமாய் இருக்கு. ஏம்மா, படிக்காதவங்களுக்கு நாகரிகமாய் பேச வராதோ...” “நான் கூடத்தான் படிக்கல. நாகரிகமாய் பேசாமலா இருக்கேன்...” “நான் படிக்காத ஆண்களைச் சொன்னேன்.” சொக்கலிங்கம் உள்ளே வந்தார். “நான் கூடத்தான் படிக்கல... எப்போதாவது அநாகரிகமாய் பேசியிருக்கேனா? இழவு எடுத்த பயல், பேசினால் பேசிட்டுப் போறான். ஏதாவது பட்டச் சாராயம் போட்டிருப்பான். பன்னாடப் பயல்... அவனுக்காகவா இப்படி உட்கார்ந்திருக்கே? பெருமாள் மாதிரி ஆட்களையும், அவங்க பேசறதையும், நாம, அவங்களை மனுஷனாய் எண்ணி மதிப்புக் கொடுத்தால், அப்புறம் நாம எண்ணுறதுல்லாம் மனுஷத்தனமாய் இருக்காது. விடு கழுதையை... சீக்கிரமா புறப்படு... நானும் நுங்கம்பாக்கம் வரை, ஆட்டோவுல வரணும்... உம் புறப்படும்மா... நான் மட்டும் அவன் பேசும் போது இருந்திருக்கணும்... சரி... ஜல்தியாய் புறப்படும்மா...!” அந்த ஆளை மனதில் இருந்து கட்டாயமாக விலக்கிக் கொண்டே, மல்லிகா புறப்பட ஆயத்தமானாள். புடவையை எடுப்பதற்காக, அவள் பீரோவைத் திறந்த போது சொக்கலிங்கம் வெளியே வந்தார். சொக்கலிங்கமும் மல்லிகாவும் ஆட்டோவில் ஏறிய போது பார்வதியின் அண்ணன், அந்த ஆட்டோவை வழி மறிப்பது மாதிரி வந்து நின்றுவிட்டு, பிறகு “காலேஜுக்கா... இல்ல செட்டியார் வீட்டுக்கா... எப்படியோ... நீங்க காலேஜுக்கும் மல்லிகா செட்டியார் வீட்டுக்கும் தெரியாமல் போயிடப்படாது. டிரைவர், யார் யார் எங்கு இறங்கணும் என்கிறதை ஞாபகப் படுத்துங்க...” என்று சொல்லிக் கொண்டே, வாசல் படிக்கட்டில் கால் வைத்தார். வாசலில் நின்ற பார்வதி, “வாங்கண்ணா” என்றாள். சொக்கலிங்கம், திடீரென்று, ஆட்டோவில் இருந்து இறங்கி, “நீ போம்மா... நான் செட்டியார் வீட்டுக்குப் போகலை. இவரு முகத்துல விழித்த பிறகு எங்கேயும் போகப்படாது. நீ கூட ஜாக்கிரதையா போயிட்டு வா” என்று மல்லிகாவுக்கு மட்டும் கேட்கும்படியாக முனங்கிக் கொண்டே மச்சான்காரரைத் திரும்பிப் பாராமல் நடந்து, அரவை மில்லை நோக்கிப் போனார். ‘காலாங் காத்தால என்னடா சாமி இது... யாரை வேணுமுன்னாலும் அனுப்பு... ஆனால் இவரை மட்டும் அனுப்பாத...’ சொக்கலிங்கம் வெளியே போனபோது, பார்வதியும் அவள் அண்ணனும் வீட்டுக்குள் வந்தார்கள். ராமசாமி பெருமூச்சு விட்டுக் கொண்டே பேச்சைத் துவங்கினார். “உன்னை அடிக்கடி வந்து பார்க்கணும் போலத் தோணுது. அதே சமயம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டான்னு சொன்ன பழமொழியையும் நினைத்துப் பார்க்க வேண்டியதிருக்கு.” “என்னாண்ணா... புது மொழியாய் பேசுறீங்க...” “பின்ன என்னம்மா... மச்சான் என்னை நாயை பேசுனது மாதிரி பேசுறாரு. எத்தனை நாளைக்குத்தான் வாலைச் சுருட்டிக்கிட்டு வாரது?” “அவரைப் பற்றிதான் உங்களுக்குத் தெரியுமே. மனசில ஒண்ணுங் கிடையாது.” “மனசில ஒண்ணுமில்லாம இருக்கவங்களுக்கு தலையில் ஏதாவது இருக்கும். உன் வீட்டுக்காரருக்கு அங்கேயும் ஒண்ணுங் கிடையாது. இல்லன்னால், நோட்டிஸ்ல வெறும் பெயரைக் கூடப் போடாத வீட்ல போய், ஒரு பவுன் மோதிரமும், நூறு ரூபாயும் கொடுப்பாரா... என் வீட்ல ஒரு கல்யாணம் காட்சி நடந்து, நான் அவரு பெயரை போடலன்னு வச்சுக்கோ... மனுசன் சும்மா இருப்பாரா... நீதான் சும்மா இருப்பியா?” “எப்படியோ நடந்தது நடந்து போச்சு... இனிமேல் அவங்க படிவாசல் கூட மிதிக்கப் போறதுல்ல...” “அங்க தான் நீ தப்புப் பண்ற.” “எங்க?” “சின்னப் பிள்ளையில எப்படி இருந்தியோ... அப்படியே தான் இருக்கம்மா. பெருமாள் மல்லிகாவை திட்டி அனுப்புன பிறகு, அப்புறம் என்ன பேசுனான்னு தெரிந்தா, இப்படிப் பேசுவியா?” “என்ன பேசுனாராம்?” “நீ மல்லிகாவை மிரட்டி, அவங்க கூட பேசக்கூடாதுன்னு வைத்திருக்கியாம்... எல்லாம் சொக்கலிங்கம் மச்சானோட முகத்துக்காகப் பார்க்கானாம். அவரு மண்டையைப் போட்டதும், மல்லிகா மூலம் உன் கண்ணுல விரல் விட்டு ஆட்டுவானாம்.” “குடிகாரன்... அப்படித்தான் பேசுவான்... விட்டுத் தள்ளுங்க...” “விட்டுத் தள்ளக் கூடிய சமாச்சாரமில்லம்மா... நாளைக்கு மச்சானுக்கு ஏதோ ஒண்ணு ஆயிட்டுதுன்னு வச்சுக்கோ... பெருமாள் சொன்னபடி செய்ய மாட்டான்னு எப்படிச் சொல்ல முடியும்?” “மல்லிகா அதுக்கு இடம் கொடுக்க மாட்டாள். நல்ல பொண்ணு. என் மேல் உயிரையே வச்சிருக்காள். ஏண்ணா சிரிக்கிங்க?” “‘தான் பெறணும் பிள்ளை. தன்னோட பிறக்கணும் பிறவி’ என்கிறது பழமொழி. ஆயிரம் பிள்ளைகள் எடுத்து வளர்த்தாலும், ஒரு சொந்தப் பிள்ளைக்கு இணையாகிடுமா?” “அதுக்குத்தான் எனக்குக் கொடுத்து வைக்கலியே.” “கொடுத்து வைக்கலன்னு சொன்ன பிறகு... கெடுத்து வைக்காமலாவது இருக்கணுமில்லையா? நம் சொத்தை நாமே கட்டிக் காப்பாத்தணும் இல்லியா... பெருமாள்கிட்ட மாட்டி, செக்குமாடு சமாச்சாரமாய் ஆகி, சொத்து போயிடக் கூடாதே.” “அப்படியெல்லாம் ஆகாதுண்ணா... மல்லிகா சொத்துக்கு ஆசைப்படுகிறவள் இல்ல. நேத்து, கல்யாணத்துக்குப் போகும் போது கூட, நகைகளை போடமாட்டேன்னுட்டாள்.” “அப்படி நீ நினைக்கிற. நீ அவளை அருமை பெருமையாய் வளர்க்கிறது பிறத்தியாருக்குத் தெரியக் கூடாது என்கிறதுக்காக அப்படிச் செய்திருக்கலாம் இல்லியா... சும்மா பேச்சுக்குத்தான் சொல்றேன்; ஒரு வாரத்துக்கு முன்னால, செல்லம்மா, கல்யாணப் பெண்ணுக்குப் போட்டுட்டு, கழட்டித் தாரேன்னு சொல்லி, இவளோட நகையைக் கேட்டாள். நீ முடியாதுன்னு சொன்னே. இந்த மல்லிகா, ஒரு வார்த்தை, உன்னோட சேர்ந்து முடியாதுன்னு சொன்னாளா? கடைசில அவள் நல்லவளாயும், நீ பொல்லாதவளாயும் ஆகிப் போச்சு. ‘உங்களுக்கு ஒண்ணுந் தெரியாதும்மா’ன்னு அவள் அடிக்கடி சொல்றத நீ தாராளமா நினைக்கிற... எனக்கு அப்படிப் படல...” “இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியாது போலிருக்கே.” “இதுதான் உண்மை... யாரையும் நம்பக் கூடாது, என்னைக் கூட நம்பக் கூடாது. மச்சான் கூட... ஒரு பவுன் மோதிரம் வாங்குனாரு... மல்லிகாவைக் கூட்டிக்கிட்டுப் போய், கடை கடையாய் அலைந்து, இந்த மோதிரத்தை தேர்ந்தெடுத்திருக்காங்க... அவரோ... இல்ல இந்த மல்லிகாவோ... ஒரு வார்த்தை சொன்னாங்களா... எதுக்காக இந்த மூடுமந்திர வேலைன்னு கேக்குறேன். மல்லிகா எனக்கு என்னமோ... பசப்புக்காரியா தெரியுது.” “எனக்கு தலை குழம்புதுண்ணா... வேற விஷயத்தைப் பேசலாம். காபி போடட்டுமா, டீ போடட்டுமா...?” “நீ எதுவும் போட வேண்டாம். நான் இப்போ சொல்றதுதான். இனிமேல், என்கிட்ட நீ கேட்டாலும், நான் பேசப் போறதில்லை. சத்தியமாய் உட்கார்ந்த இடத்துல இருந்து சொல்றேன். நல்லா கேட்டுக்கோ. மல்லிகா, நல்ல பெண்ணாவே இருக்கலாம். ஆனால் பெண் புத்தி பின்புத்தி... நாளைக்கு மச்சானுக்கு ஏதோ ஒன்று ஆயிட்டுதுன்னு வச்சுக்கோ... சும்மா பேச்சுக்கு. இப்போ நல்லா இருக்கிற மல்லிகா, அப்போவும் நல்லா இருப்பாள் என்கிறது என்ன நிச்சயம்? நாளைக்கு, மல்லிகாவுக்குக் கல்யாணம் நடக்கப் போகுது; அவள் புருஷனோ இல்ல மாமன் மாமியாரோ, அவளை குரங்காய் ஆட்டிப் படைக்க மாட்டாங்க என்கிறது என்ன நிச்சயம்? இவள் பெருமாள்கிட்டே போகமாட்டாள் என்கிறது என்ன நிச்சயம்? தான் ஆடாட்டாலும், சதை ஆடாதோ, நான் உன்கிட்ட வைத்திருக்கிற பாசத்தை மாதிரி... நீ என்கிட்ட வைத்திருக்கிற பாசத்தை மாதிரி, இவளும், அப்பன்கிட்ட பாசத்தைக் காட்டமாட்டாள்னு எப்படிச் சொல்ல முடியும்? அப்படியே காட்டினாலும், அதுல என்ன தப்பு?” “நீங்க எப்பவுமே இப்படித்தாண்ணா... எதையாவது சொல்லிக் கோளாறு செய்வீங்க... ஆனால் வழி மட்டும் காட்டமாட்டீங்க.” “இதுக்கு ஒரே வழி இருக்கு.” “சொல்லுங்க... அவரு வந்துடப் போறாரு.” “உன்னால மல்லிகாவை விட்டுட்டு இருக்க முடியாது. அதே சமயம், மச்சானுக்குப் பிறகு உன் கையே ஓங்கி இருக்கணும். இதுக்கு ஒரே வழி, நம்ம ராமனுக்கு, மல்லிகாவை கட்டிப் போட்டால்தான் முடியும்.” “அது எப்படிண்ணா முடியும்? சின்ன வயசுலே உருப்படி இல்லாமல் போயிட்டான். நீங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் எட்டாவது வகுப்புக்கு மேல தாண்டல. தாகம் எடுக்கும் போதெல்லாம் பட்டைச் சாராயத்தைப் போடுறான். இதுல வேற ரவுடித்தனம்.” “இந்தக் காலத்துல ரவுடித்தனம் இருக்கவன் தான் இந்த மெட்றாஸ்ல பிழைக்க முடியும். பட்டச் சாராயம் இப்போ குடிக்கான். நாளடைவில் அதையே காய்ச்சி, கார் பங்களா வாங்க மாட்டான்னு எப்படிச் சொல்ல முடியும்? அதோட உன்னோட சொந்த அக்காள் மகன். ரத்தத்துக்கு ரத்தம். உன்னோட கடைகண்ணிகளை கட்டிக் காப்பாத்த இப்படிப்பட்டவன் தான் லாயக்கு. பெருமாள் இவன்கிட்ட வாலாட்ட முடியுமா? அவன் கேடிதான். ஆனால், நம்ம பயல் ரவுடி!” “நூறாண்டுப் பயிருண்ணா.” “என்னவோ... இப்பவே கல்யாணத்துக்கு நிச்சயமானது மாதிரி பேசுறியே. என் மூத்த மகளை ராமனுக்கு கொடுக்கலாமுன்னு நினைத்தேன். ராசிப் பொருத்தம் இல்ல. இரண்டாவது பெண்ணை கொடுக்கலாமுன்னு நினைக்கிறேன். ஒரு வாரம் டயம் கொடுக்கிறேன். யோசித்துச் சொல்லு. உன் அக்காள் மகன் மேல உனக்கில்லாத பாசமா? உனக்கில்லாத பொறுப்பா? ஒரே ஒரு வாரந்தான் டயம். நீ, மல்லிகாவை கொடுக்கலன்னா, நான் என் இரண்டாவது மகள் நளினியை கொடுக்கப் போறேன். அப்புறம் என் மேல வருத்தப்படப்படாது. நான் வரட்டுமா?” பார்வதி, அண்ணனைப் ‘போய் வாருங்கள்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு, பித்துப்பிடித்தவளாய் இருந்தாள். ராமசாமி போய்விட்டார். ஆனால், அவர் சொன்ன வார்த்தைகள் போகவில்லை. அவள், தன் உள்ளத்தையே போர்க்களமாக்கி விட்டாள். ‘மல்லி ஒருவேளை... அவருக்குப் பிறகு, அப்பா கூட சேர்ந்திடுவாளா... அந்த குடிகாரன் சொன்னபடி எல்லாம் ஆடுவாளோ? அப்படியானால் என் கதி, என் கதி? அனாதையாக ஆயிடுவேனோ? சொத்தெல்லாம் போயிடுமோ? மல்லி நல்லவளாய் இருந்து, அவள் புருஷன் மோசமாய் இருந்தால் என் கதி என்னாகிறது? என்கிட்ட சூதாய் பேசமாட்டாரு... என் நன்மைக்காகத்தான் பேசுவாரு... அதோட இந்த ராமன், என்னோட சொந்த அக்காள் மகன். ஊரில் ரவுடித்தனம் செய்தாலும், என்னை ‘சித்தி’ன்னு வாய் நிறையக் கூப்புடுற பிள்ளை. அவனும் நல்லா இருக்கணும், மல்லிகாவும் நல்லா இருக்கணும். குடிகாரன் பெருமாள் கிட்டே வரப்படாது. அதுக்காக, பொருத்தம் இல்லாத கல்யாணத்தைப் பண்ண முடியுமா? முடியணும். எப்படியோ முடியணும். இந்த மல்லிகா பெருமாள் பெண் தானே... அப்பன் புத்தியில் கால்வாசியாவது இருக்காதா?’ ராமசாமி போனதில் இருந்து மல்லிகா கல்லூரியில் இருந்து திரும்புவது வரைக்கும் பார்வதிக்கு ஒன்றும் ஓடவில்லை. வயிற்றுக்கு எப்போதும் வஞ்சகம் செய்யாத அவள், அன்று சரியாகச் சாப்பிடக் கூட இல்லை. துள்ளிக் குதித்துக் கொண்டு உள்ளே வந்த மல்லிகா, “அம்மா, நான் கட்டுரைப் போட்டியில் இரண்டாவதாக வந்திருக்கேன் அம்மா” என்றாள். பார்வதி அப்போதைக்கு, அண்ணனையும், அவர் சொன்னதையும் மறந்து விட்டாள். “என்ன போட்டிம்மா...?” “கட்டுரைப் போட்டி...” “அப்படின்னா?” “சும்மா கிடங்கம்மா... உங்களுக்கு ஒண்ணுந் தெரியாது. உங்ககிட்ட சொன்னதே தப்பு. துளைத்து எடுத்துடுவீங்க. கட்டுரை என்றாலே என்னன்னு தெரியாது. அதை விளக்கிட்டு, அப்புறம் போட்டியைப் பற்றி விளக்க இரவு மணி பன்னிரண்டாயிடும். பசிக்குதம்மா. அப்பா வரும் போது விவரமாய் சொல்றேன். நீங்கள் அப்போ கேளுங்க. இப்போ பசிக்குது.” பார்வதிக்கும், இப்போது மனதுக்குள் பசியெடுத்தது. அண்ணன் சொன்னது சரிதான். நான் தான் ஒண்ணும் தெரியாதவளாய் வெளுத்ததை எல்லாம் பாலுன்னு நினைக்கிறேன். பார்வதி சற்று காரமாகவே பதில் சொன்னாள்; “இப்போ நான் உன் கண்ணுக்குப் பிடிக்குமா? என்னைப் பார்த்தால் உனக்கு மனுஷியாய்த் தெரியுமா? எல்லாம் தலைவிதி.” பார்வதி சொல்லிவிட்டு, சமையலறைக்குள் போய் விட்டாள். மல்லிகா, அவளை விரோதமாகப் பார்த்தாள். ஏன் இப்படிப் பேசுறாங்க? அவள் உள்ளே போய் அவளின் கையைப் பிடித்துக் கொண்டு, “உடம்புக்கு எதுவும் பண்ணுதாம்மா?” என்று கேட்டாள். அவளையே பார்த்தாள் பார்வதி. அண்ணன் சொன்னதை எல்லாம், அவளிடம் சொல்லலாமா என்று கூட நினைத்தாள். பிறகு அந்த அருமை அண்ணன், “எனக்கென்னமோ மல்லிகா பசப்புக்காரியா தெரியுது” என்று சொன்னது அவளுக்கு நினைவுக்கு வந்தது. பார்வதி எதுவும் பேசாமல், அவளுக்கு இடியாப்பத்தைக் கொடுத்தாள். மல்லிகாவும் மறுபேச்சுப் பேசாமலே, எந்திரம் போல் தந்ததை வாங்கிக் கொண்டாள். இரவு சொக்கலிங்கம் வந்தார். மல்லிகாவால் தன் வெற்றி விவரத்தை அடக்கி வைக்க முடியவில்லை. அப்பாவிடம் கட்டுரைப் போட்டியின் விவரத்தை விவரமாகச் சொன்னாள். அவள் சொல்லிக் கொண்டிருந்த போதே, பார்வதி தன் தாம்பத்ய அறைக்குள் போய் விட்டாள். முன்பெல்லாம் காது விரியக் கேட்கும் அம்மா இப்படிப் போவதில் மல்லிகாவிற்கு வருத்தந்தான். தன்னையே ஆறுதல் படுத்திக் கொண்டாள். அம்மாவுக்கு உடம்புக்குச் சுகமில்லை போலும். உடம்பு சரியில்லன்னா மனசும் சரியா இருக்காது. அம்மாகிட்ட போய் பேசலாமா? வேண்டாம், எரிச்சல் இருக்கிற சமயத்தில் போனால் தப்பு. காலையில் பார்த்துக்கலாம். சொக்கலிங்கம் மகளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு மனைவியிடம் வந்தார். “என்னடி ஒரு மாதிரி இருக்கே?” “ஒண்ணுமில்ல.” “ஓ... உன் அண்ணன் வந்துட்டுப் போனாரோ... இன்னும் ஒரு வாரத்துக்கு அப்படித்தான் இருப்பே. அடுத்துக் கெடுக்குறதுல்ல நிபுணனாச்சே.” “ஆமாம்... அவரு அடுத்துக் கெடுக்கவரு. நீங்க அரிச்சந்திர பிரபு. ஒரு பவுன் மோதிரம் வாங்குனதை சொன்னீங்க பாருங்க.” “தற்செயலாய் வாங்குனேன்டி. அதுல அர்த்தம் பார்க்காதே.” “நான் நடக்கிறதை எல்லாம் கவனிச்சிட்டுதான் பேசுறேன். மல்லிகா மேல் உங்களை விட எனக்குப் பாசம் அதிகம். அதனால்தான் கேக்குறேன். என் அக்காள் மகன் ராமனுக்கு நம்ம மல்லிகாவை கல்யாணம் பண்ணலாமுன்னு நினைக்கேன்.” “என்னடி இது. காது கொடுத்தால், எதையும் பேசலாமுன்னு நினைக்கிறியா? பேசறதுக்கும் ஒரு வரைமுறை வேண்டாம்? உனக்கு அறிவிருக்கா... அந்த ஓணான் பயலுக்கா இவளை கொடுக்கச் சொல்ற... இனிமேல், இப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்டால், நான் பொல்லாதவனாய் மாறிடுவேன். ஜாக்கிரதை.” பார்வதி புரண்டு படுத்தாள். மல்லிகா ஆரம்பத்தில் குழந்தையாக இருக்கும் போது, அவள் மீது ஏற்பட்ட வெறுப்பு, இதுவரை அவளுக்குத் தெரியாமலே அடி மனதில் பதிந்து இருந்தது. அந்த உளைச்சல் இப்போது விஸ்வரூபம் எடுத்தது. ராமன் இருக்க வேண்டிய இடத்தில், இன்னொருத்தியின் மகள், ஒரு குடிகாரன் பெற்ற பெண் இருக்கிறாள் என்று நினைத்து நினைத்து அவள் பேயாக மாறிக் கொண்டிருந்தாள். |