13

     தியாகராய நகர் வீட்டுக் கதையும், இதே கதை தான்.

     மல்லிகா, தந்தையுடன் வெளியேறிவிட்ட செய்தியை, கடைப் பையன் ஒருவன் மூலம் கேள்விப்பட்ட சொக்கலிங்கம், கல்லாவில் போடப் போன காசுகளை, சிறிது நேரம் அப்படியே வைத்துக் கொண்டிருந்தார். பின்பு கடையில் இருந்து, மேலே ஒரு கம்பி வட்டத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்று வளையத்தைப் பிடித்துக் கொண்டே, கீழே இறங்கி ஓடாக் குறையாக நடந்தார்.

     வாசலுக்கு வந்ததும், “என் மகளை துரத்திட்டியாடி பாவி எங்கே இங்கே... இங்கே வாடி... அவள் போன பிறகு உனக்கென்னடி இங்கே வேல...” என்று குரல் கொண்ட மட்டும் கத்திக் கொண்டே, படியேறினார். இப்படி மனைவியை, அவர் எப்போதும் பேசியதில்லை. ‘கடைப்’ பயல், விவகாரத்தை ‘ஊர்ப்பய பிள்ளை’ என்று தன்னை அடிக்கடி திட்டும் பார்வதிக்குப் பாதகமாகச் சொன்னதால், சொக்கலிங்கம் மனைவியைத் தீர்த்துக் கட்டிவிடுவது என்ற உறுதியுடன் தான் கத்தினார். பார்வதி, வெளியே வரவில்லை. பயங்கரமான நிசப்தம். களையான ஒன்று, அங்கே இல்லை என்பதைக் காட்டுவது போல் ஒரு வெறுமை. நடக்கக் கூடாதது ஒன்று நடந்து, அப்படி நடந்ததை மாற்ற முடியாதபடி இன்னொன்று புகுந்து விட்டது என்பது போல், ராமன், தன் தோள்களை வளைத்துக் கொண்டே, அங்கே நின்றான். சின்ன ‘நாய்னா’வைப் பார்த்ததும், ஒரு பக்கமாக ஒதுங்கிக் கொண்டான்.

     ஊஞ்சல் பலகையில், மல்லிகா விட்டு விட்டுப் போன ஸ்கேலை எடுத்துக் கொண்டே, வாயில் தகாத வார்த்தைகளை வீசிக் கொண்டே, சொக்கலிங்கம் சமையலறைக்குள் போனார். போனவர், வாயடைத்துப் போய் நின்றார். பார்வதி சமையலறை மூலையில், தலையை வைத்துப் புரண்டு கொண்டே, “போயிட்டியாடி... போயிட்டியாடி... என் ராசாத்தி போயிட்டியாடி... எங்களை விட்டுட்டுப் போக உனக்கு எப்படியடி மனம் வந்தது” என்று புலம்பிக் கொண்டிருந்தவள், கணவனைப் பார்த்ததும், கட்டிப் பிடித்து அழுதாள். ஒரு நாளும் தரக் குறைவாகப் பேசாத கணவன், இன்று, கடந்த இருபத்தைந்தாண்டு கால தாம்பத்திய வாழ்க்கைக்கு ஒட்டு மொத்தமாக, வட்டியும் முதலுமாக திட்டித் தீர்க்க, சுரணை இல்லாதவளாய், அவரது காலில் தலைபட புரண்டாள். மனைவி நடிக்கிறாளோ என்று கூட சொக்கலிங்கம் முதலில் நினைத்தார். இல்லை நடக்கவில்லை. அப்படி இருந்தால், இப்படிப் பித்துப் பிடித்தவளாய் இருக்க மாட்டாள். இப்படி காலில் புரண்டு கதற மாட்டாள். அவளையே சிறிது நேரம் பார்த்துவிட்டு ‘அவள் மெய்யும், மெய்மையும், உடலும் உள்ளமும் ஒருங்கிணைய அழுகிறாள்’ என்பதை அவருக்குரிய அனுகூலங்களாக வைத்து, “என்னடி நடந்தது, எதுக்காக அந்த குடியன் கூட போயிட்டாள்” என்று படபடப்பாகவும், அதே சமயம் மனைவி மீது பரிதாபம் சொட்டும் படியாகவும் கேட்டார். மனைவியை, இந்த மாதிரி அழவைக்கிற நிலைமைக்கு, அடித்துப் புரள்கிற அளவுக்கு, மல்லிகா கொண்டு போய் விட்டு விட்டாளே என்று அவருக்கு தன் வளர்ப்பு மகள் மீதும் கோபம் ஏற்பட்டது.

     பார்வதி அவரைப் பார்த்து அழுது கொண்டே விளக்கினாள்.

     “ராமனைக் கட்டிக்க முடியாதுன்னாள். உன் அம்மா வீட்டுக்குப் போயிடுடின்னு, ஒரு பேச்சுக்கு சொன்னேன். எங்கேயாவது போயிடுன்னு, ஒரு தாய்க்காரி கோபத்துல சொல்றது மாதிரி சொன்னேன். சொல்லியிருக்கக் கூடாதுதான். நான்.... பாவி... எந்த நேரத்துல அப்படிச் சொன்னேனோ... அந்த நேரத்துல... அந்த குடிகாரப் பாவி வந்திருக்கான். என் செல்லக்கண்ணை கூட்டிக்கிட்டு போயிட்டான். போயேண்டி, போயேண்டி, நான் செத்தாடி போயிடுவேன். அய்யோ, என் மனசு கேட்க மாட்டேங்குதே... கேட்க மாட்டேங்குதே...!”

     “இப்ப அழுது என்னடி பிரயோஜனம்... இந்த புத்தி அப்பவே இருந்திருக்கணும்...”

     “என் புத்திதான், இரப்பாளப் புத்தி. நான் படிக்காத முண்டம். அவளுக்குப் புத்தி... எங்க போச்சு? ‘இது என் வீடு, நீ வேணுமுன்னா போ. நான் போகமாட்டேன்’னு அவள் சொல்லக்கூடாதா? இது, அவள் வீடுதானே. அவள் எப்படிப் போகலாம்? எப்படிப் போகலாமுன்னேன்...”

     “சரி எழுந்திரு. எல்லாம் இந்த ஓணான் பயலால் வந்த வினை. நாம ரெண்டு பேரும் போய், அவளைக் கூட்டிக்கிட்டு வருவோம். முகத்தைக் கழுவுடி. ராமனுக்கு உன்னைக் கொடுக்க மாட்டோமுன்னு சொல்லி, கூட்டிக்கிட்டு வரலாம், கிளம்புடி...”

     பார்வதி, பெருமூச்சு விட்டுக் கொண்டே எழுந்தாள். அவள் முகம் திடுக்கிடுவதைப் பார்த்து சொக்கலிங்கம், அந்த முகத்திற்கு எதிர் திசையைப் பார்த்தார். அவளின் மூத்த அண்ணன் ராமசாமி பல்லைக் கடித்துக் கொண்டு நின்றார். இருவரும், தன் பிரசன்னத்தைப் பார்த்து விட்டார்கள் என்பது நிச்சயமானதும், வில் போல் கோணியிருந்த தன் வாய் வழியாக சொல்லம்புகளைத் தொடுத்தார்.

     “ஏய்... பார்வதி... அவருக்குத்தான் அறிவில்லை, உனக்குமா இல்லை? உங்க சொந்த மகளாய் இருந்தால் வாசல்படியைத் தாண்டுவாளா? சரி... போனதே போனாள், தோளோடு தோளாய் வளர்த்த மச்சான் கிட்ட சொல்லாமல் போவாளா? சரி, அப்படியே போகட்டும்; போற வழியில், இவருகிட்ட சொல்லிட்டுப் போகலாமில்ல? ஏன் போகலே? எல்லாம் திட்டம். அப்பனும் அவளும் போட்ட திட்டம். ஏதாவது சாக்கு சொல்லி வெளியேறி, அப்புறம் வழக்குப் போட்டு, சொத்தைப் பிடுங்கி, என் தங்கச்சியை மொட்டையடிக்கணும் என்கிற திட்டம்.”

     சொக்கலிங்கம் மைத்துனரை உதாசீனப்படுத்துபவர் போல் மனைவியிடம், “சரி, நேரமாகுது. உன் அண்ணன் பிரசங்கத்தை அப்புறமாய் கேட்கலாம். இப்போ புறப்படு” என்றார்.

     பார்வதி புருஷனையும் அண்ணனையும் மாறி மாறிப் பார்த்தாள். இடது காலை நகர்த்தாமல், வலது காலை மட்டும் நகர்த்தினாள். ராமசாமி உபதேசம் செய்பவர் போல் பேசினார்.

     “எனக்கென்ன, போகணுமுன்னா போங்க. அங்கே போனதும், அந்த குடிகாரன் வாயில வந்தபடி பேசப் போறான். அரிவாளத் தூக்கிக்கிட்டு இவரை வெட்டினாலும் வெட்டுவான். எனக்கென்ன, போயிட்டு வாங்க. உங்களுக்கெல்லாம் பட்டாத்தான் புத்தி வரும்...”

     இப்போது சொக்கலிங்கம் தயங்கினார். தங்கையின் கணவர் அவரை நேருக்கு நேராக நின்று திட்டமாட்டார். இருந்தாலும் இவரு சொல்றது மாதிரி, அரிவாளை கிரிவாளை தூக்கினால்? இவளை மானபங்கமாய் பேசிவிட்டால்...?

     சொக்கலிங்கத்தின் மனதில் உதித்த அச்சமும் சந்தேகமும் அவர் பேச்சில் நன்றாக ஒலித்தது.

     “என்ன பார்வதி... போகலாமா, வேண்டாமா... சொல்லு...”

     பார்வதி சொல்வதற்கு முன்னால், அண்ணனை நோக்கினாள்.

     “என்னை ஏன் பார்க்கறே? போறதுன்னால் போ. ஆனால் ஒண்ணு. அவள் கூட நீ சேருறதாய் இருந்தால் இனிமேல் என்னை அண்ணன்னு சொல்லப்படாது. உன்னை தூசி மாதிரி நினைச்சிட்டுப் போனவளை நீ கூட்டிக்கிட்டு வந்தால், எங்களை தூசின்னு நினைச்சதா அர்த்தம். அவளை சேர்க்கிறதாய் இருந்தால், எங்களை தள்ளி வச்சிடு. அவள் இனிமேல் இந்த வீட்டுக்குள்ள கால் வச்சால், நாங்க கால் வைக்க மாட்டோம். அப்புறம் உனக்கும் எங்களுக்கும் ஒட்டும் கிடையாது; உறவும் கிடையாது. இவரு காலத்துக்குப் பிறகு, ‘மல்லிகா திட்டினாள். அவள் அப்பன் அடிக்க வரான்’னு எங்க கிட்ட வந்து கண்ணைக் கசக்கக் கூடாது. நாங்க ஒண்ணும் கேட்கமாட்டோம். உன் தலையிலே என்ன எழுதியிருக்கோ, அதை என்னால மாத்த முடியுமா? வேணுமுன்னால் போ...”

     பார்வதி பயந்து விட்டாள். தள்ளாத வயதில், மல்லிகா, தான் இப்போது அவளிடம் எப்படி நடந்து கொண்டாளோ, அப்படி தன்னிடம் அவள் நடந்து கொள்வது போலவும், அம்மா என்று சொல்லாமல் அத்தை என்று சொல்வது போலவும், அவள் அப்பா பெருமாள் தன்னை நாயே பேயேன்னு திட்டுவது போலவும், அழுது கொண்டு அண்ணன் வீட்டுக்குப் போனால் அங்கே கதவு சாத்தப்படுவது போலவும் கற்பனை செய்தாள். பயத்தில் அவள் உடம்பெல்லாம் ஆடியது. அண்ணனைப் பார்க்கும் போது, அதிகமாக ஆடியது. இறுதியில் திட்டவட்டமாகப் பேசினாள்.

     “எங்க... அண்ணியைப் பார்த்துட்டு வாரேன்... அண்ணி... வீட்லதான அண்ணா இருக்காங்க...”

     ராமசாமி, ‘பிளஸ்’ மாதிரி தலையாட்டினார். பார்வதி புறப்பட்டாள். அண்ணியிடம் நடந்ததைச் சொல்லி அழவேண்டும்! ராமசாமி, தங்கையுடன் போய் விட்டார்.

     சொக்கலிங்கம், தனிமையில் தவித்தார். கடைக்குப் போக மனமில்லை. யாருக்காக சம்பாதிக்க வேண்டும்?

     ஓரிரு நாட்கள் ஓடின.

     “இந்தாங்கப்பா” என்று சொல்லி, இரவில் மாத்திரையை நீட்டும் மகளில்லை. “இதை மருந்துன்னு நினைக்காமல், நாம் சாப்பிடுற ஆகாரத்தில் ஒன்றுன்னு நினையுங்கப்பா” என்று, தாயாக, மகளாக, பாட்டியாக, பரம்பொருளாகச் சுற்றி வந்து சொல்லும் மகளைப் பார்க்கத் துடித்தார். எப்படிப் போவது? பெருமாள் ஏதாவது பேசினால்... மகளின் செல்லக் கையில், செல்லமாகக் கொண்டு வரும் பாலை, ஆனந்தமாகக் குடித்த வாய், தானாக உளறியது. மாத்திரை கொடுத்த மல்லியை நினைத்து, அவர் வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையைக் கூட மறந்தார். விளைவு...

     சொக்கலிங்கம் படுக்கையில் விழுந்தார். ஆஸ்பத்திரியில் சேரும் அளவிற்கு, சீரியஸ் இல்லை. அதே சமயம் அரவை மில்லுக்குப் போகும் அளவிற்கு லேசாகவும் இல்லை. எப்படியோ தேறிக் கொண்டிருந்தார்.

     நண்பகலில் தூங்கிவிட்டு கண் விழித்த சொக்கலிங்கம், மனைவி, வியர்த்துக் கொட்ட வெளியில் இருந்து வருவதைப் பார்த்து விட்டு, “அண்ணன் வீட்டுக்குப் போனியா” என்று கேட்ட போது, பார்வதி அழுது விட்டாள்.

     “அவளைப் பார்க்காமல் இருக்க முடியல. அவள் முகத்தையாவது பார்த்துட்டு வரலாமுன்னு, அந்தத் தெரு வழியா நடந்தேன். வீட்டுக்குள்ள இருந்த வெளியில் வந்தவள், என்னைப் பார்த்துட்டு, முகத்தைத் திருப்பிக்கிட்டு போயிட்டாள். சொல்லுங்க நான் அந்த அளவுக்கு பாவியா...?”

     சொக்கலிங்கம் எதுவும் சொல்லவில்லை. கண்களை மூடிக் கொண்டார். அப்படியும் நினைவுகளை மூட முடியாததால், மீண்டும் கண்களைத் திறந்து சூனியமாகப் பார்த்தார். மல்லிகாவைப் பார்ப்பதற்காக, ‘தற்செயலாகப்’ போவது போல் போன பார்வதியின் கண்களில், மல்லிகா தட்டுப்பட்டது போல் மல்லிகாவின் கண்களில் பார்வதி அகப்படவில்லை. இது பார்வதிக்குத் தெரியாது. அது இருவருக்கும் தெரியாது.

     பார்வதி, பொருமிக் கொண்டிருக்க, சொக்கலிங்கம் சூடான கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்க, அவள் அண்ணன் ராமசாமி இன்னொரு பணக்காரத் தம்பியான சுப்பையாவோடு அங்கே வந்தார். முதலில் அத்தானுக்கு வாழைப்பழத்தை உரித்துக் கொடுத்தார். அப்புறம்...

     “மல்லிகா வந்து பார்த்தாளா?” என்றார்.

     “அவள் என்ன எங்க பிள்ளையா, வர்றதுக்கு” என்றாள் பார்வதி.

     “ஒரு வேளை, எனக்கு சுகமில்லாதது அவளுக்குத் தெரிந்திருக்காது” என்றார் சொக்கலிங்கம்.

     இப்போது ராமசாமியையே தோற்கடிப்பதுபோல் சுப்பையா எகிறினார்.

     “‘தான் பெறணும் பிள்ளை, தன்னோட பிறக்கணும் பிறவி’ என்கிறது சும்மாவா? மல்லிகாவிற்கு தெரியாதுன்னு எங்களை நம்பச் சொல்றீங்களாக்கும். அவள் தம்பிகிட்ட, மூணு நாளைக்கு முன்னால கடைப் பயல்கள் சொன்னாங்களாம். அவன் சொல்லாமலா இருப்பான்? உம் மகளாய் இருந்தால் வராமல் இருப்பாளா? போதாக் குறைக்கு, உம் தங்கச்சி புருஷன் உம்மை கோர்ட்டில் நிறுத்தப் போறானாம்... கோர்ட்டுல நிக்கறதுக்கு உமக்கு பலம் வரதுவரைக்கும் காத்திருக்கப் போறானாம். அப்புறம் வழக்காம். மல்லிகாவும் நோட்டீஸ் அனுப்பறதுக்கு கையெழுத்து போடுறேன்னு சொல்லி விட்டாளாம்.”

     சொக்கலிங்கம் பேசவில்லை. பேச விரும்பவும் இல்லை. பெரிய மைத்துனர் ராமசாமி, முறையோடு பேசுபவர் போல் எல்லாரையும் முறைத்துக் கொண்டே பேசினார்.

     “எதுக்குப்பா வீணா கத்துறே? இன்னைக்கே ஒரு முடிவுக்கு வந்துடணும். அத்தானுக்கு ஒரு லாபத்தைப் போல, நஷ்டம் வந்துட்டால், பெருமாள், பார்வதியை கோர்ட்டுக்கு இழுக்கத்தான் போறான். இப்போதே ஒரு முடிவுக்கு வரணும்...”

     “அத்தானுக்கு ஆயுசு நூறு. அப்படிச் சொல்லாதே” என்றார் சுப்பையா.

     “நான் அந்த அர்த்தத்துல சொல்லலப்பா. பார்வதிக்கும் ஒரு துணை வேணும். ராமன் பயலை நம்ப முடியாது. முந்தா நாள் பாரு, என்னையே சோடா பாட்டிலை வச்சி அடிக்க வந்துட்டான். அதனால என் சின்ன மாமா பேத்தி இருக்காள் பாரு, கிராமத்துல, அவளை அத்தானுக்கு கட்டி வச்சிடலாமுன்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்றே?”

     யாரும் எதுவும் சொல்லவில்லை. பார்வதி பொங்கி வந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள். சொக்கலிங்கம், ‘முறைகெட்ட பயகிட்ட என்ன பேச்சு’ என்பது போல் குப்புறப் படுத்தார்.

     அப்படியும், ஒரு இளம் பெண்ணுடன், தன்னை இணைத்துக் கொள்ளும் இதயத் துடிப்பை, அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நினைக்க நினைக்க, அவருக்கு சுவையாக இருந்தது.