![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 17 ... 161. தோழி கூற்று வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி வடியாப் பித்தை, வன்கண், ஆடவர் அடி அமை பகழி ஆர வாங்கி; வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை, 5 படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும் வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக் கேட்டனள் கொல்லோ தானே? தோள் தாழ்பு 10 சுரும்பு உண ஒலிவரும் இரும்பல் கூந்தல், அம்மா மேனி, ஆய் இழை, குறுமகள் சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த நல்வரல் இள முலை நனைய; பல் இதழ் உண்கண் பரந்தன பனியே. பிரிவுணர்த்திய தோழி, தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே உணர்ந்தாள், நம் பெருமாட்டி' என்று, தலைமகனைச் செலவு விலக்கியது
பாலை
மதுரைப் புல்லங் கண்ணனார் 162. தலைமகன் கூற்று கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து அளப்பு அரிது ஆகிய குவை இருந் தோன்றல, கடல் கண்டன்ன மாக விசும்பின் அழற்கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க, 5 கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி, விளிவு இடன் அறியா வான் உமிழ் நடு நாள், அருங் கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி, பனி மயங்கு அசைவளி அலைப்ப, தந்தை நெடு நகர் ஒரு சிறை நின்றனென்ஆக; 10 அறல் என அவிர்வரும் கூந்தல், மலர் என வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண், முகை நிரைத்தன்ன மா வீழ் வெண் பல், நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய், கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி, 15 கால் உறு தளிரின் நடுங்கி, ஆனாது, நோய் அசா வீட முயங்கினள் - வாய்மொழி நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய நசை பிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன் கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் 20 வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய, வில் கெழு தானைப் பசும் பூண் பாண்டியன் களிறு அணி வெல் கொடி கடுப்ப, காண்வர ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி, நேர் கொள் நெடு வரைக் கவாஅன் 25 சூரர மகளிரின் பெறற்கு அரியோளே. இரவுக் குறிக்கண் தலைமகளைக் கண்ணுற்று நீங்கிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
குறிஞ்சி
பரணர் 163. தலைமகள் கூற்று விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய, தண் மழை பொழிந்த தாழ்பெயல் கடை நாள், எமியம் ஆக, துனி உளம் கூரச், சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ, 5 பெரு நசை உள்ளமொடு வருதிசை நோக்கி விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை முளரி கரியும் முன்பனிப் பானாள், குன்று நெகிழ்பு அன்ன குளிர் கொள் வாடை! 10 எனக்கே வந்தனை போறி! புனற் கால் அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழ, கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது இனையை ஆகிச் செல்மதி; வினை விதுப் புறுநர் உள்ளலும் உண்டே! பிரிவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச் சொல்லியது
பாலை
கழார்க் கீரன் எயிற்றியார் 164. தலைவன் கூற்று கதிர் கையாக வாங்கி, ஞாயிறு பைது அறத் தெறுதலின், பயம் கரந்து மாறி, விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின்; 5 பொறி வரி இன வண்டு ஆர்ப்ப, பல உடன் நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற. வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம், 'எவன்கொல் மற்று அவர் நிலை?' என மயங்கி, இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு, ஆங்கு 10 இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் இது நற் காலம்; கண்டிசின் பகைவர் மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின், கந்து கால் ஒசிக்கும் யானை, வெஞ் சின வேந்தன் வினை விடப்பெறினே! பாசறைக்கண் இருந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
முல்லை
மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார் 165. கண்டார் கூற்று கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென, களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ, ஒய்யென எழுந்த செவ்வாய்க் குழவி தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண், 5 எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் நாடு பல இறந்த நன்ன ராட்டிக்கு ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும் 'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என, கண்ணும் நுதலும் நீவி, தண்ணென, 10 தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ, தாழிக் குவளை வாடு மலர் சூட்டி, 'தருமணற் கிடந்த பாவை என் அருமகளே' என முயங்கினள் அழுமே! மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது
பாலை
பெயர் தெரியவில்லை 166. பரத்தை கூற்று 'நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின், மயங்குமழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், 5 நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, பொறி வரி இன வண்டு ஊதல கழியும் உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம், புனை இருங் கதுப்பின் நீ கடுத்தோள்வயின் அனையேன்ஆயின், அணங்குக, என்!' என 10 மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின், யார்கொல் வாழி, தோழி! நெருநல் தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ, வதுவை ஈர் அணிப் பொலிந்து, நம்மொடு, புதுவது வந்த காவிரிக் 15 கோடு தோய் மலிர்நிறை, ஆடியோரே? பரத்தையொடு புனலாடிய தலைமகன் தலைமகளிடைப் புக்கு, 'யான் ஆடிற்றிலன்' என்று சூளுற்றான் என்பது கேட்ட பரத்தை, தன் பாங்காயினார் கேட்ப, சொல்லியது
மருதம்
இடையன் நெடுங்கீரனார் 167. தலைமகன் கூற்று வயங்கு மணி பொருத வகைஅமை வனப்பின் பசுங் காழ் அல்குல் மாஅயோளொடு வினை வனப்பு எய்திய புனை பூஞ் சேக்கை, விண் பொரு நெடு நகர்த் தங்கி, இன்றே 5 இனிது உடன் கழிந்தன்று மன்னே; நாளைப் பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் சேக்குவம் கொல்லோ, நெஞ்சே! சாத்து எறிந்து அதர் கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ, 10 ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ், முருங்கை மேய்ந்த பெருங்கை யானை வெரிந் ஓங்கு சிறு புறம் உரிஞ, ஒல்கி இட்டிகை நெடுஞ் சுவர் விட்டம் வீழ்ந்தென, மணிப் புறாத் துறந்த மரம் சோர் மாடத்து 15 எழுது அணி கடவுள் போகலின், புல்லென்று ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன் திணைப் பால் நாய் துள்ளிய பறைக்கட் சிற்றில், குயில் காழ் சிதைய மண்டி, அயில் வாய்க் கூர் முகச் சிதலை வேய்ந்த 20 போர் மடி நல் இறைப் பொதியிலானே? தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியது
பாலை
கடியலூர் உருத்திரங் கண்ணனார் 168. தோழி கூற்று யாமம் நும்மொடு கழிப்பி, நோய் மிக, பனி வார் கண்ணேம் வைகுதும்; இனியே; ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப! பல் ஆன் குன்றில் படு நிழல் சேர்ந்த 5 நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் கொடைக் கடன் ஏன்ற கோடா நெஞ்சின் உதியன் அட்டில் போல ஒலி எழுந்து, அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின்; ஈன்றணி இரும் பிடி தழீஇ, களிறு தன் 10 தூங்குநடைக் குழவி துயில் புறங்காப்ப, ஒடுங்கு அளை புலம்பப் போகி, கடுங் கண் வாள் வரி வயப் புலி கல் முழை உரற, கானவர் மடிந்த கங்குல்; மான் அதர்ச் சிறு நெறி வருதல், நீயே? இரவுக்குறி வந்த தலைமகனை இரவுக்குறி விலக்கி, வரைவு கடாயது
குறிஞ்சி
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் 169. தலைமகன் கூற்று மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட, அலங்குகதிர் வேய்ந்த அழல் திகழ் நனந்தலை, புலி தொலைத்து உண்ட பெருங் களிற்று ஒழி ஊன் கலி கெழு மறவர் காழ்க் கோத்து ஒழிந்ததை, 5 ஞெலி கோல் சிறு தீ மாட்டி, ஒலி திரைக் கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும் சுரம் பல கடந்த நம் வயின் படர்ந்து; நனி பசலை பாய்ந்த மேனியள், நெடிது நினைந்து, 10 செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை மெல் விரல் சேர்த்திய நுதலள், மல்கிக் கயல் உமிழ் நீரின் கண் பனி வார, பெருந் தோள் நெகிழ்ந்த செல்லலொடு வருந்துமால், அளியள், திருந்திழை தானே! தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
பாலை
தொண்டி ஆமூர்ச் சாத்தனார் 170. தலைவி கூற்று கானலும் கழறாது; கழியும் கூறாது; தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது; ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே; இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் 5 கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ, தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து, பறைஇய தளரும் துறைவனை, நீயே, சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால் கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம் 10 கடற் சிறு காக்கை காமர் பெடையொடு கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து, 'நின் உறு விழுமம் களைந்தோள் தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே. தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது
நெய்தல்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|