சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 2 ...

11. தலைவி கூற்று

     வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
     நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு,
     இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
     கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
5   அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
     கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
     எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
     வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான் யாற்றுப்
     படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
10  மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
     அவரும் பெறுகுவர் மன்னே! நயவர,
     நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
     அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
     அழுதல் மேவல ஆகி,
15  பழி தீர் கண்ணும் படுகுவமன்னே!

தலைமகன் பொருள்வயிற் பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள், 'ஆற்றுவல்' என்பது படச் சொல்லியது
பாலை
ஔவையார்

12. தோழி கூற்று

     யாயே, கண்ணினும் கடுங் காதலளே;
     எந்தையும், நிலன் உறப் பொறாஅன்; 'சீறடி சிவப்ப,
     எவன், இல! குறுமகள்! இயங்குதி?' என்னும்;
     யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
5   இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
     ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்,
     கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ் சினை,
     விழுக் கோட் பலவின் பழுப் பயம் கொண்மார்,
     குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
10  வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம்
     புலி செத்து, வெரீஇய புகர்முக வேழம்,
     மழை படு சிலம்பில் கழைபட, பெயரும்
     நல் வரை நாட! நீ வரின்,
     மெல்லியல் ஓரும் தான் வாழலளே.

பகற்குறி வாராநின்ற தலைமகன், தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக் குறி வாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது
குறிஞ்சி
கபிலர்

13. தோழி கூற்று

     தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
     முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
     தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
     குறவர் தந்த சந்தின் ஆரமும்,
5   இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும்
     திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன்
     குழியில் கொண்ட மராஅ யானை
     மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது,
     வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்,
10  வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்
     பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின்,
     விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு,
     கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து,
     சாயல் இன் துணை இவட் பிரிந்து உறையின்,
15  நோய் இன்றாக செய்பொருள்! வயிற்பட
     மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை,
     கவவு இன் புறாமைக் கழிக வள வயல்,
     அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
     கழனி நெல்லின் கவைமுதல் அலங்கல்
20  நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வர,
     புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை,
     இலங்கு பூங் கரும்பின் ஏர் கழை இருந்த
     வெண் குருகு நரல, வீசும்
     நுண் பல் துவலைய தண் பனி நாளே!

பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்குவித்தது; உடம்பட்ட தூஉம் ஆம்
பாலை
பெருந்தலைச் சாத்தனார்

14. பாணன் கூற்று

     'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
     காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
     ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
     மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
5   அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ,
     திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
     முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்
     குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
     பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
10  வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற,
     கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
     மாலையும் உள்ளார் ஆயின், காலை
     யாங்கு ஆகுவம் கொல்? பாண!' என்ற
     மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன்,
15  செவ்வழி நல் யாழ் இசையினென், பையென,
     கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,
     அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே
     விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,
     கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
20  கார் மழை முழக்கு இசை கடுக்கும்,
     முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.

பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது
முல்லை
ஒக்கூர் மாசாத்தனார்

15. தாய் கூற்று

     எம் வெங் காமம் இயைவது ஆயின்,
     மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
     கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
     பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
5   தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
     வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
     செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
     அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
     தோழிமாரும் யானும் புலம்ப,
10  சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
     பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
     செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
     அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
     துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
15  கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
     வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
     இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
     குன்ற வேயின் திரண்ட என்
     மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!

மகட்போக்கிய தாய் சொல்லியது
பாலை
மாமூலனார்

16. தலைவி கூற்று

     நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
     தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
     மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
     நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
5   யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
     தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
     கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
     காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
     பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
10  'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
     கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
     'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
     நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
     கரைய, வந்து விரைவனென் கவைஇ
15  களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
     நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
     பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
     அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
     மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது
மருதம்
சாகலாசனார்

17. செவிலித்தாய் கூற்று

     வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்,
     இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
     'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ,
     மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
5   முயங்கினள் வதியும் மன்னே! இனியே,
     தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
     நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
     நொதும லாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
     சிறு முதுக் குறைவி சிலம்பு ஆர் சீறடி
10  வல்லகொல், செல்லத் தாமே கல்லென
     ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
     நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த,
     கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி
     நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
15  கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல்,
     பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
     அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
     நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்,
     விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்,
20  நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
     வைகுறு மீனின் தோன்றும்
     மை படு மா மலை விலங்கிய சுரனே?

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது
பாலை
கயமனார்

18. தோழி கூற்று

     நீர் நிறம் கரப்ப, ஊழுறுபு உதிர்ந்து,
     பூமலர் கஞலிய கடு வரற் கான் யாற்று,
     கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி,
     மராஅ யானை மதம் தப ஒற்றி,
5   உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்
     கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து,
     நாம அருந் துறைப் பேர்தந்து, யாமத்து
     ஈங்கும் வருபவோ? ஓங்கல் வெற்ப!
     ஒரு நாள் விழுமம் உறினும், வழி நாள்,
10  வாழ்குவள்அல்லள், என் தோழி; யாவதும்
     ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர்
     நீடு இன்று ஆக இழுக்குவர்; அதனால்,
     உலமரல் வருத்தம் உறுதும்; எம் படப்பைக்
     கொடுந் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை,
15  பழம் தூங்கு நளிப்பின் காந்தள்அம் பொதும்பில்,
     பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை
     வாங்கு அமைக் கண் இடை கடுப்ப, யாய்
     ஓம்பினள் எடுத்த, தட மென் தோளே.

தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது
குறிஞ்சி
கபிலர்

19. தலைவன் கூற்று

     அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே; வந்து நனி
     வருந்தினை வாழி, என் நெஞ்சே! பருந்து இருந்து
     உயா விளி பயிற்றும், யா உயர், நனந்தலை,
     உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும்
5   கடுங் குரற் குடிஞைய நெடும் பெருங் குன்றம்,
     எம்மொடு இறத்தலும்செல்லாய்; பின் நின்று,
     ஒழியச் சூழ்ந்தனை ஆயின், தவிராது,
     செல் இனி; சிறக்க, நின் உள்ளம்! வல்லே
     மறவல் ஓம்புமதி, எம்மே நறவின்
10  சேயிதழ் அனைய ஆகி, குவளை
     மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை,
     உள்ளகம் கனல உள்ளுதொறு உலறி,
     பழங்கண் கொண்ட, கலிழ்ந்து வீழ், அவிர் அறல்
     வெய்ய உகுதர, வெரீஇ, பையென,
15  சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை
     பூவிழ் கொடியின் புல்லெனப் போகி,
     அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக,
     இயங்காது வதிந்த நம் காதலி
     உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே!

நெஞ்சினாற் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது
பாலை
பொருந்தில் இளங்கீரனார்

20. தோழி கூற்று

     பெருநீர் அழுவத்து எந்தை தந்த
     கொழு மீன் உணங்கற் படு புள் ஓப்பி,
     எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇ,
     செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி,
5   ஞாழல் ஓங்கு சினைத் தொடுத்த கொடுங் கழித்
     தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி,
     கொண்டல் இடு மணல் குரவை முனையின்
     வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி,
     மணிப் பூம் பைந் தழை தைஇ, அணித்தகப்
10  பல் பூங் கானல் அல்கினம் வருதல்
     கவ்வை நல் அணங்கு உற்ற, இவ் ஊர்,
     கொடிது அறி பெண்டிர் சொற்கொண்டு, அன்னை
     கடி கொண்டனளே தோழி! 'பெருந்துறை,
     எல்லையும் இரவும் என்னாது, கல்லென
15  வலவன் ஆய்ந்த வண் பரி
     நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு' எனவே.

பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியது
நெய்தல்
உலோச்சனார்