சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 39 ...

381. தலைமகன் கூற்று

ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் 5
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி, 10
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானை,
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய 15
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து,
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன் 20
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!

தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
மதுரை இளங்கௌசிகனார்

382. தோழி கூற்று

''பிறர் உறு விழுமம் பிறரும் நோப;
தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம்;
கடம்பு கொடி யாத்து, கண்ணி சூட்டி,
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம்
காடு கெழு நெடு வேட் பாடு கொளைக்கு ஏற்ப, 5
அணங்கு அயர் வியன் களம் பொலிய, பையத்
தூங்குதல் புரிந்தனர், நமர்'' என, ஆங்கு அவற்கு
அறியக் கூறல் வேண்டும் தோழி!
அருவி பாய்ந்த கரு விரல் மந்தி
செழுங் கோட் பலவின் பழம் புணையாக, 10
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும்
வறன் உறல் அறியாச் சோலை,
விறல் மலை நாடன் சொல் நயந்தோயே!

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லியது.
குறிஞ்சி
கபிலர்

383. நற்றாய் கூற்று

தற் புரந்து எடுத்த எற் துறந்து உள்ளாள்,
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ,
காடும் கானமும் அவனொடு துணிந்து,
நாடும் தேயமும் நனி பல இறந்த
சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என, 5
வாடினை வாழியோ, வயலை! நாள்தொறும்,
பல் கிளைக் கொடிக் கொம்பு அலமர மலர்ந்த
அல்குல்தலைக் கூட்டு அம் குழை உதவிய,
வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக்
கமஞ்சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு, 10
ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கி,
பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள், வைகலும்,
ஆர நீர் ஊட்டிப் புரப்போர்
யார் மற்றுப் பெறுகுவை? அளியை நீயே!

மகட் போக்கிய தாய் சொல்லியது.
பாலை
கயமனார்

384. உழையர் கூற்று

''இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென,
புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்
ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த
ஆறு நனி அறிந்தன்றோஇலெனே; "தாஅய்,
முயற் பறழ் உகளும் முல்லை அம் புறவில், 5
கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்,
மெல் இயல் அரிவை இல்வயின் நிறீஇ,
இழிமின்" என்ற நின் மொழி மருண்டிசினே;
வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ? 10
உரைமதி வாழியோ, வலவ!'' என, தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி,
மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை;
விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.

வினை முற்றிய தலைமகனது வரவு கண்டு, உழையர் சொல்லியது.
முல்லை
ஒக்கூர் மாசாத்தியார்

385. செவிலித்தாய் கூற்று

தன் ஓரன்ன ஆயமும், மயில் இயல்
என் ஓரன்ன தாயரும், காண,
காவிரிப் படப்பை உறந்தை அன்ன
பொன்னுடை நெடு நகர், புரையோர் அயர, 5
நல் மாண் விழவில் தகரம் மண்ணி,
யாம் பல புணர்ப்பச் சொல்லாள், காம்பொடு
நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன்,
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்திக் குறங்கில் திருந்த உரிஞ, 10
வளையுடை முன்கை அளைஇ, கிளைய
பயில் இரும் பிணையல் பசுங் காழ்க் கோவை
அகல் அமை அல்குல் பற்றி, கூந்தல்
ஆடு மயில் பீலியின் பொங்க, நன்றும்,
தான் அமர் துணைவன் ஊக்க, ஊங்கி, 15
உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ,
அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே.

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
பாலை
குடவாயிற் கீரத்தனார்

386. தோழி கூற்று (அ) தலைமகள் கூற்று

பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து
வாளை நாள் இரை தேரும் ஊர!
நாணினென், பெரும! யானே பாணன்
மல் அடு மார்பின் வலி உற வருந்தி,
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் 5
நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த
திறன் வேறு கிடக்கை நோக்கி, நல் போர்க்
கணையன் நாணியாங்கு மறையினள்
மெல்ல வந்து, நல்ல கூறி,
''மை ஈர் ஓதி மடவோய்! யானும் நின் 10
சேரியேனே; அயல் இலாட்டியேன்;
நுங்கை ஆகுவென் நினக்கு'' என, தன் கைத்
தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர,
நுதலும் கூந்தலும் நீவி,
பகல் வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே. 15

தோழி வாயில் மறுத்தது; தலைமகள் தகுதி சொல்லியதூஉம் ஆம்.
மருதம்
பரணர்

387. தோழி கூற்று

திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய்,
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்!
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப் 5
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல்,
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப்
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ,
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை 10
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட்
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண்,
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி,
நல் இசை நிறுத்த நாணுடை மறவர்
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது, 15
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி
சிறிய தெற்றுவதுஆயின், “பெரிய
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும்,
நின்றாங்குப் பெயரும் கானம்
சென்றோர்மன்” என இருக்கிற்போர்க்கே. 20

தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது.
பாலை
மதுரை மருதன் இளநாகனார்

388. தலைமகள் கூற்று (அ) தோழி கூற்று

அம்ம வாழி, தோழி நம் மலை
அமை அறுத்து இயற்றிய வெவ் வாய்த் தட்டையின்,
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத
உளைக் குரல் சிறு தினை கவர்தலின், கிளை அமல்
பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி, 5
ஓங்கு இருஞ் சிலம்பின் ஒள் இணர் நறு வீ
வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்து,
பொன் மருள் நறுந் தாது ஊதும் தும்பி
இன் இசை ஓரா இருந்தனமாக,
''மை ஈர் ஓதி மட நல்லீரே! 10
நொவ்வு இயற் பகழி பாய்ந்தென, புண் கூர்ந்து,
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும்
புனத்துழிப் போகல் உறுமோ மற்று?'' என,
சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆட,
சொல்லிக் கழிந்த வல் விற் காளை 15
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து,
ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள்,
நன்னர் நெஞ்சமொடு மயங்கி, ''வெறி'' என,
அன்னை தந்த முது வாய் வேலன்,
''எம் இறை அணங்கலின் வந்தன்று, இந் நோய்; 20
தணி மருந்து அறிவல்'' என்னும்ஆயின்,
வினவின் எவனோ மற்றே ''கனல் சின
மையல் வேழ மெய் உளம்போக,
ஊட்டியன்ன ஊன் புரள் அம்பொடு
காட்டு மான் அடி வழி ஒற்றி, 25
வேட்டம் செல்லுமோ, நும் இறை?'' எனவே?

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி தலைமகட்குச் சொல்லியதூஉம் ஆம்.
குறிஞ்சி
ஊட்டியார்

389. தலைமகள் கூற்று

அறியாய் வாழி, தோழி! நெறி குரல்
சாந்து ஆர் கூந்தல் உளரி, போது அணிந்து,
தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும்,
பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறு பட
நல் இள வன முலை அல்லியொடு அப்பியும், 5
பெருந் தோள் தொய்யில் வரித்தும், சிறு பரட்டு
அம் செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்,
எற் புறந்தந்து, நிற் பாராட்டி,
பல் பூஞ் சேக்கையின் பகலும் நீங்கார்,
மனைவயின் இருப்பவர்மன்னே துனைதந்து, 10
இரப்போர் ஏந்து கை நிறைய, புரப்போர்
புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள் வேட்டம் எண்ணி, கறுத்தோர்
சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட,
நல் இசை தம் வயின் நிறுமார், வல் வேல் 15
வான வரம்பன் நல் நாட்டு உம்பர்,
வேனில் நீடிய வெங் கடற்று அடை முதல்,
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற,
கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும்
பெருங் களிறு தொலைச்சிய இருங் கேழ் ஏற்றை 20
செம் புல மருங்கில் தன் கால் வாங்கி,
வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்ப,
படு மழை உருமின் முழங்கும்
நெடு மர மருங்கின் மலை இறந்தோரே!

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது.
பாலை
நக்கீரனார்

390. தலைமகன் கூற்று

உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி,
அதர் படு பூழிய சேண் புலம் படரும்
ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக்
கண நிரை வாழ்க்கைதான் நன்றுகொல்லோ?
வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள, 5
ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த
பல் குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி,
““நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!
கொள்ளீரோ” எனச் சேரிதொறும் நுவலும்,
அவ் வாங்கு உந்தி, அமைத் தோளாய்! நின் 10
மெய் வாழ் உப்பின் விலை எய்யாம்” என,
சிறிய விலங்கினமாக, பெரிய தன்
அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி,
“யாரீரோ, எம் விலங்கியீஇர்?” என,
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற 15
சில் நிரை வால் வளைப் பொலிந்த
பல் மாண் பேதைக்கு ஒழிந்தது, என் நெஞ்சே!

தலைமகன் பாங்கற்குச் சொல்லியது; நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்.
நெய்தல்
அம்மூவனார்