சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய

அகநானூறு

... தொடர்ச்சி - 30 ...

291. தலைமகன் கூற்று

வானம் பெயல் வளம் கரப்ப, கானம்
உலறி இலை இலவாக, பல உடன்
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப,
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப் 5
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப் பரல்,
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த் 10
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப,
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
உவலை சூடிய தலையர், கவலை
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின், யாவதும்
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர 15
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று,
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி,
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம் 20
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப்
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
நல் எழில், மழைக் கண், நம் காதலி
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண் கவினே. 25

பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
பாலை பாடிய பெருங் கடுங்கோ

292. தலைமகள் கூற்று

கூறாய், செய்வது தோழி! வேறு உணர்ந்து,
அன்னையும் பொருள் உகுத்து அலமரும்; மென் முறிச்
சிறு குளகு அருந்து, தாய் முலை பெறாஅ,
மறி கொலைப் படுத்தல் வேண்டி, வெறி புரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத் 5
தூங்கும்ஆயின், அதூஉம் நாணுவல்;
இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல்; புலம் படர்ந்து,
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால் வல் இயக்கம் ஒற்றி, நடு நாள்,
வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் 10
கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல்
உடு உறு கணையின் போகி, சாரல்
வேங்கை விரி இணர் சிதறி, தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலை கெழு நாடன் மணவாக்காலே! 15

வெறி அச்சுறீஇ, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
குறிஞ்சி
கபிலர்

293. தலைமகள் கூற்று (அ) தோழி கூற்று

இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை
வலை வலந்தனைய ஆக, பல உடன்
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்,
துகில் ஆய் செய்கைப் பா விரிந்தன்ன
வெயில் அவிர்பு நுடங்கும் வெவ் வெங் களரி, 5
குயிற் கண் அன்ன குரூஉக் காய் முற்றி,
மணிக் காசு அன்ன மால் நிற இருங் கனி,
உகாஅய் மென் சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ் சுரம் தமியர் தாமே,
செல்ப என்ப தோழி! யாமே, 10
பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த
நெஞ்சு அமர் குழவி போல, நொந்து நொந்து,
இன்னா மொழிதும் என்ப;
என் மயங்கினர்கொல், நம் காதலோரே?

பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் குறிப்பு அறிந்து, தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியதூஉமாம்.
பாலை
காவன்முல்லைப் பூதனார்

294. தலைமகள் கூற்று

மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கி,
துள்ளுப் பெயல் கழிந்த பின்றை, புகைஉறப்
புள்ளி நுண் துவலை பூவகம் நிறைய,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர் வார் கண்ணின் கருவிளை மலர, 5
துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை
நெய்த் தோய்த்தன்ன நீர் நனை அம் தளிர்
இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம் பூப் பயில, அகல் வயல்
கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்ச, 10
சிதர் சினை தூங்கும் அற்சிர அரை நாள்,
''காய் சின வேந்தன் பாசறை நீடி,
நம் நோய் அறியா அறனிலாளர்
இந் நிலை களைய வருகுவர்கொல்?'' என
ஆனாது எறிதரும் வாடையொடு 15
நோனேன் தோழி! என் தனிமையானே.

பருவ வரவின்கண் வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
முல்லை
கழார்க்கீரன் எயிற்றியார்

295. தோழி கூற்று

நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப,
குன்று கோடு அகைய, கடுங் கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய் படு நனந்தலை,
நிலவு நிற மருப்பின் பெருங் கை சேர்த்தி,
வேங்கை வென்ற வெரு வரு பணைத் தோள் 5
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பி,
பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்தி,
கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர்
உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து 10
அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல்
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும்,
புடையல் அம் கழற் கால் புல்லி குன்றத்து,
நடை அருங் கானம் விலங்கி, நோன் சிலைத்
தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர், 15
பிழி ஆர் மகிழர், கலி சிறந்துஆர்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர்ஆயினும்,
பழி தீர் மாண் நலம் தருகுவர்மாதோ
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும்
அம் கலுழ் கொண்ட செங் கடை மழைக் கண், 20
மணம் கமழ் ஐம்பால், மடந்தை! நின்
அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
பாலை
மாமூலனார்

296. தோழி கூற்று

கோதை இணர, குறுங் கால், காஞ்சிப்
போது அவிழ் நறுந் தாது அணிந்த கூந்தல்,
அரி மதர் மழைக் கண், மாஅயோளொடு
நெருநையும் கமழ் பொழில் துஞ்சி, இன்றும்
பெரு நீர் வையை அவளொடு ஆடி, 5
புலரா மார்பினை வந்து நின்று, எம்வயின்
கரத்தல் கூடுமோ மற்றே? பரப்பில்
பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும்
பேர் இசைக் கொற்கைப் பொருநன், வென் வேல் 10
கடும் பகட்டு யானை நெடுந் தேர் செழியன்,
மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர் ஆகின்று, அது பலர் வாய்ப் பட்டே.

வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்கு வாயில் மறுக்கும் தோழி சொல்லியது.
மருதம்
மதுரைப் பேராலவாயார்

297. தலைமகன் கூற்று

பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி, 5
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் 10
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
எழுதியன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம் 15
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம், நம்மொடு,
''வருவல்'' என்றோள் மகிழ் மட நோக்கே?

பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
மதுரை மருதன் இளநாகனார்

298. தலைமகள் கூற்று

பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர், வலன் ஏர்பு விளங்கி,
மல்கு கடல் தோன்றியாங்கு, மல்கு பட,
மணி மருள் மாலை, மலர்ந்த வேங்கை
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெருஞ் சினைத் 5
தண் துளி அசைவளி தைவரும் நாட!
கொன்று சினம் தணியாது, வென்று முரண் சாம்பாது,
இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது,
பெரும் பெயற் கடாஅம் செருக்கி, வள மலை
இருங் களிறு இயல்வரும் பெருங் காட்டு இயவின், 10
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி,
தாழ் பூங் கோதை ஊது வண்டு இரீஇ,
மென் பிணி அவிழ்ந்த அரை நாள் இரவு, இவண்
நீ வந்ததனினும், இனிது ஆகின்றே
தூவல் கள்ளின் துனை தேர், எந்தை 15
கடியுடை வியல் நகர் ஓம்பினள் உறையும்
யாய் அறிவுறுதல் அஞ்சி, பானாள்,
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
யான் நின் கொடுமை கூற, நினைபு ஆங்கு,
இனையல் வாழி, தோழி! நத் துறந்தவர் 20
நீடலர் ஆகி வருவர், வல்லென;
கங்குல் உயவுத் துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே!

இரவுக்குறிக்கண் தலைமகற்குத் தலைமகள் சொல்லியது.
குறிஞ்சி
மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்

299. தலைமகன் கூற்று

எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
முன்னம், முன் உறுபு அடைய உள்ளிய
பதி மறந்து உறைதல் வல்லினம் ஆயினும்,
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடு வளி எடுத்த கால் கழி தேக்கிலை 5
நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்தாங்கு,
விசும்பு கண் புதையப் பாஅய், பல உடன்
அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்,
கவலை கரக்கும் காடு அகல் அத்தம்,
செய் பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்தென, 10
வைகு நிலை மதியம் போல, பையென,
புலம்பு கொள் அவலமொடு, புதுக் கவின் இழந்த
நலம் கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண்
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப, 15
கால் நிலைசெல்லாது, கழி படர்க் கலங்கி,
நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல் மருள் கூந்தலின் மறையினள்,'' திறல் மாண்டு
திருந்துகமாதோ, நும் செலவு'' என வெய்து உயிரா,
பருவரல் எவ்வமொடு அழிந்த 20
பெரு விதுப்புறுவி பேதுறு நிலையே.

இடைச் சுரத்துப் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
பாலை
எயினந்தை மகனார் இளங்கீரனார்

300. தோழி கூற்று

நாள் வலை முகந்த கோள் வல் பரதவர்
நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
பறி கொள் கொள்ளையர், மறுக உக்க
மீன் ஆர் குருகின் கானல் அம் பெருந் துறை,
எல்லை தண் பொழில் சென்றென, செலீஇயர், 5
தேர் பூட்டு அயர ஏஎய், வார் கோல்
செறி தொடி திருத்தி, பாறு மயிர் நீவி,
''செல் இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை'' எனச்
சொல்லியஅளவை, தான் பெரிது கலுழ்ந்து,
தீங்கு ஆயினள் இவள்ஆயின், தாங்காது, 10
நொதுமலர் போலப் பிரியின், கதுமெனப்
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
சேணின் வருநர் போலப் பேணா,
இருங் கலி யாணர் எம் சிறு குடித் தோன்றின்,
வல் எதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇ, 15
''துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
ஓதம் மல்கலின், மாறு ஆயினவே;
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்'' என,
எமர் குறை கூறத் தங்கி, ஏமுற,
இளையரும் புரவியும் இன்புற, நீயும் 20
இல் உறை நல் விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே.

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது.
நெய்தல்
உலோச்சனார்
மணி மிடை பவளம் முற்றும்