![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
சங்கமருவிய எட்டுத்தொகை நூல்களுள் ஏழாவதாகிய அகநானூறு ... தொடர்ச்சி - 26 ... 251. தோழி கூற்று தூதும் சென்றன; தோளும் செற்றும்; ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும்; வீங்கு இழை நெகிழச் சாஅய், செல்லலொடு நாம் படர் கூரும் அருந் துயர் கேட்பின், நந்தன் வெறுக்கை எய்தினும், மற்று அவண் 5 தங்கலர் வாழி, தோழி! வெல் கொடித் துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில், இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெம் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் 10 பணியாமையின், பகை தலைவந்த மா கெழு தானை வம்ப மோரியர் புனை தேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர், மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை 15 வாயுள் தப்பிய, அருங் கேழ், வயப் புலி மா நிலம் நெளியக் குத்தி, புகலொடு காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை நிரம்பா நீள் இடைப் போகி, அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே. 20 தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,தோழி சொல்லியது.
பாலை
மாமூலனார் 252. தலைமகள் கூற்று இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி, வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப் பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி, 5 தனியன் வருதல் அவனும் அஞ்சான்; பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட, எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்; யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத் துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் 10 தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல், எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப் பெருங் குளம் காவலன் போல, அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே? தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது.
குறிஞ்சி
நக்கண்ணையார் 253. தோழி கூற்று ''வைகல்தோறும் பசலை பாய, என் மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென; அன்னையும் அமரா முகத்தினள்; அலரே, வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி, நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன் 5 பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான் சில நாள் உய்யலென் போன்ம்'' எனப் பல நினைந்து, ஆழல் வாழி, தோழி! வடாஅது, ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய, 10 பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய், கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து, இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத் தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த 15 துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி, கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம் நேரா வன் தோள் வடுகர் பெரு மகன், பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து 20 உள்ளுபதில்ல தாமே பணைத் தோள், குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின், நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல், மாக விசும்பின் திலகமொடு பதித்த திங்கள் அன்ன நின் திரு முகத்து, 25 ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே. தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
பாலை
நக்கீரர் 254. தலைமகன் கூற்று ''நரை விராவுற்ற நறு மென் கூந்தற் செம் முது செவிலியர் பல பாராட்ட, பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி மணல் மலி முற்றத்து நிலம் வடுக் கொளாஅ, மனை உறை புறவின் செங் காற் சேவல் 5 துணையொடு குறும் பறை பயிற்றி, மேல் செல, விளையாடு ஆயத்து இளையோர்க் காண்தொறும் நம்வயின் நினையும் நல் நுதல் அரிவை புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல, வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி, 10 வந்து வினை முடித்தனம்ஆயின், நீயும், பணை நிலை முனைஇய, வினை நவில், புரவி இழை அணி நெடுந் தேர் ஆழி உறுப்ப, நுண் கொடி மின்னின், பைம் பயிர் துமிய, தளவ முல்லையொடு தலைஇ, தண்ணென 15 வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் நெடி இடை பின் படக் கடவுமதி, என்று யான் சொல்லிய அளவை, நீடாது, வல்லென, தார் மணி மா அறிவுறாஅ, ஊர் நணித் தந்தனை, உவகை யாம் பெறவே! 20 வினை முற்றி வந்து எய்திய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
முல்லை
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 255. தலைமகள் கூற்று உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம் புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ, இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி, விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட, கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான் 5 மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய, ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல கழியாமையே, அழி படர் அகல, வருவர்மன்னால் தோழி! தண் பணைப் பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண், 10 கருவிளை முரணிய தண் புதல் பகன்றை பெரு வளம் மலர அல்லி தீண்டி, பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல் கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க, அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை 15 கடி மனை மாடத்துக் கங்குல் வீச, ''திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய, நிரை வளை ஊருந் தோள்'' என, உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே. பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது.
பாலை
மதுரை மருதன் இளநாகனார் 256. தோழி கூற்று பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப் பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின் நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு 5 தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர! பொய்யால்; அறிவென், நின் மாயம். அதுவே கையகப்பட்டமை அறியாய்; நெருநை மை எழில் உண்கண் மடந்தையொடு வையை 10 ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து, பரத்தை ஆயம் கரப்பவும், ஒல்லாது கவ்வை ஆகின்றால், பெரிதே; காண்தகத் தொல் புகழ் நிறைந்த பல் பூங் கழனி, கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர், 15 திரு நுதற் குறுமகள் அணி நலம் வவ்விய அறனிலாளன்,''அறியேன்'' என்ற திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய், முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி, நீறு தலைப்பெய்த ஞான்றை, 20 வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே. தோழி தலைமகற்கு வாயின் மறுத்தது.
மருதம்
மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் 257. தலைமகன் கூற்று வேனிற் பாதிரிக் கூனி மா மலர் நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம், அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப, எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின் பொம்மல் ஓதி பொதுள வாரி, 5 அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச் சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின் தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை 10 மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி, வல்லுவைமன்னால் நடையே கள்வர் பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார், மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து, நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து, 15 களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல் கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும், துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ, வெள் அரா மிளிர வாங்கும் 20 பிள்ளை எண்கின் மலைவயினானே. உடன் போகாநின்ற தலைமகட்குத் தலைமகன் சொல்லியது.
பாலை
உறையூர் மருத்துவன் தாமோதரனார் 258. தலைமகன் கூற்று நன்னன் உதியன் அருங் கடிப் பாழி, தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்னினும் அருமை நன்கு அறிந்தும், அன்னோட் துன்னலம்மாதோ எனினும், அஃது ஒல்லாய் தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக் 5 கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து மாய இருள் அளை மாய் கல் போல, மாய்கதில் வாழிய, நெஞ்சே! நாளும், மெல் இயற் குறுமகள் நல் அகம் நசைஇ, அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி, 10 இரவின் எய்தியும் பெறாஅய், அருள் வரப் புல்லென் கண்ணை புலம்பு கொண்டு, உலகத்து உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக, காமம் கைம்மிக உறுதர, ஆனா அரு படர் தலைத்தந்தோயே! 15 அல்லகுறிப்பட்டுப் பதிப்பெயர்ந்த தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
குறிஞ்சி
பரணர் 259. தோழி கூற்று வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்; தாரும் தையின; தழையும் தொடுத்தன; நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக் குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர் 5 வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன் தேம் படப் பொதுளின பொழிலே; கானமும், நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள், பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப் போது வந்தன்று, தூதே; நீயும் 10 கலங்கா மனத்தை ஆகி, என் சொல் நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி! தெற்றி உலறினும், வயலை வாடினும், நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும், நின்னினும் மடவள் நனி நின் நயந்த 15 அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர் புலி மருள் செம்மல் நோக்கி, வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே! உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது.
பாலை
கயமனார் 260. தலைமகள் கூற்று மண்டிலம் மழுக, மலை நிறம் கிளர, வண்டினம் மலர் பாய்ந்து ஊத, மீமிசைக் கண்டற் கானல் குருகினம் ஒலிப்ப, திரை பாடு அவிய, திமில் தொழில் மறப்ப, கரை ஆடு அலவன் அளைவயின் செறிய, 5 செக்கர் தோன்ற, துணை புணர் அன்றில் எக்கர்ப் பெண்ணை அக மடல் சேர, கழி மலர் கமழ் முகம் கரப்ப, பொழில் மனைப் புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ, எல்லை பைப்பயக் கழிப்பி, எல் உற, 10 யாங்கு ஆகுவல்கொல் யானே? நீங்காது, முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் கதுமெனக் குழறும், கழுது வழங்கு, அரை நாள், நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த அன்பிலாளன் அறிவு நயந்தேனே. 15 இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தோழியால் சொல் எடுக்கப்பட்டு, தலைமகள் சொல்லியது.
நெய்தல்
மோசிக் கரையனார் அகநானூறு : 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
|