12. அவள் அழுத கதை கையில் மணிக்கட்டின் மேல் கடிகாரம் ஓடிக் கொண்டு இருந்தது. அப்படித்தான் வாழ்க்கையும் தெருவில் யாரோ சாவி கொடுத்து முடுக்கி விட்ட மாதிரி ஓடிக் கொண்டிருந்தது. நவராத்திரிக் கொலுவுக்கு வீட்டுக்கு வீடு போகும் பெண்கள், பட்டுப்பூச்சி மாதிரித் தெருவில் அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தனர். பூக்காரப் பையன்கள், ரிக்ஷா வண்டிகள், கார்கள், பாதசாரிகள், தெரு அதிர ஓடும் லாரிகள் எல்லாம் என் கண்களுக்கு முன் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன. “டீச்சர்! டீச்சர்! கதவைத் திறங்க டீச்சர்” அப்போதுதான் செடியிலிருந்து கொய்து கொண்டு வந்த ரோஜா மலர் போல, ஆறு வயதுச் சிறுமி ஒருத்தி கையில் குங்கும்ச் சிமிழோடு என் வீட்டுக் கதவைத் தட்டினாள். என் தோளிலிருந்து நழுவிய வெள்ளைப் புடவையை நேர் செய்து கொண்டு, ஜன்னலோரத்திலிருந்து எழுந்து போய் வாசற் கதவைத் திறந்தேன். “குங்குமம் எடுத்துக்குங்க டீச்சர்! எங்க வீட்டிலே கொலு... நான் கிருஷ்ணர் வேஷம் போட்டுக் கொண்டு டான்ஸ் ஆடப் போகிறேன்... நீங்க அவசியம் அதைப் பார்க்க வரணும்...” என்னைக் குங்குமம் எடுத்துக் கொள்ளச் சொல்லி அந்தக் குழந்தை கூறியதும் எனக்குச் சுரீரென்று இதயம் அடி வாங்கியது போல வலித்தது. கண்ணோரங்களில் ஈரமும் கசிந்து விட்டது. “நான் குங்குமம் வைத்துக் கொள்ளக்கூடாது குழந்தே! உன் டான்ஸைப் பார்க்கிறதுக்குக் கட்டாயம் வரேன். நீ சமர்த்தோ இல்லியோ! அடுத்த வீட்டிலே போய்க் குங்குமம் கொடு!... எனக்கு வேண்டாம்...” “ஐயய்யோ! இதென்ன டீச்சர்! எங்க அம்மா ஒங்க மாதிரித் தானே இருக்காங்க! அம்மா ரெண்டு மூணு தரம் முகத்தைச் சோப்புப் போட்டு அலம்பி விட்டு குங்குமப் பொட்டி வச்சுக்கறாங்களே? நீங்க மட்டும் ஏன் வச்சுக்கப் படாது?” “நான் அதுக்குக் கொடுத்து வைக்கலியே அம்மா! என்ன செய்யறது?” “குங்குமப் பொட்டு வச்சிக்கிட்டா உங்க முகத்துக்கு எவ்வளவு நல்லாயிருக்கும் தெரியுமா? கொஞ்சம் உக்காருங்க டீச்சர்! நானே வச்சு விட்டுடறேன்...” துறுதுறு வென்று இருந்த அந்தக் குழந்தையின் மலர்ந்த விழிகள், அகன்று விரிந்து ஆவலோடு என் முகத்தைக் கெஞ்சுகிற பாவனையில் ஊடுருவி நோக்கின. அதன் ஆசைக்கு இணங்காமல் ஏமாற்றுவது பெரிய பாவம் போலத் தோன்றியது எனக்கு.
நான் பூவையும், மஞ்சளையும், குங்குமத்தையும் இழந்தவள். அந்தக் குழந்தை அவற்றின் நிறைவான, மங்கலமயமான பவித்திரம் செறிந்த வாழ்வை நோக்கி மெல்ல வளர்ந்து கொண்டிருப்பவள். என் பயங்கரத்தை - என் சோகத்தை - என் அமங்கலத்தை அதற்குப் புரிய வைக்க முயற்சி செய்வதை விட, அதன் கெஞ்சுதலுக்குத்தான் தாற்காலிகமாக நான் பணிந்து விட்டால் என்ன? குழந்தையையும் தெய்வத்தையும் ஏமாற்றக் கூடாது. அப்படி ஏமாற்றும் போது நாம் நம்மையே நமக்குத் தெரியாமல் ஏமாற்றிக் கொள்கிறோம் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன்.
பாவமோ புண்ணியமோ, ஆகுமோ ஆகாதோ? அவற்றை யெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்தக் குழந்தை ஏமாந்து போய் நிராசையோடு திரும்பக் கூடாது. அதுதான் எனக்கு முக்கியம். நான் அதன் விருப்பத்துக்கு இணங்கத் தீர்மானித்து விட்டேன். கீழே குனிந்து உட்கார்ந்தேன். என் நெற்றி அந்தப் புன்னகை நிறைந்த குழந்தையின் முகத்தை நோக்கி அண்ணாந்தது. தளதளவென்றிருந்த அந்தப் பிஞ்சுக் கையின் விரல்கள் ஆவலோடு குங்குமச் சிமிழில் நுழைந்தன. என் நெற்றி சிலிர்த்தது. பயங்கரமும் புளக்கமும் சமமாக விரவிய ஓர் உணர்வின் சலனம், என் உடல் முழுவதும் பரவியது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன! அந்த இளம் உள்ளத்தின் திருப்திக்காகவே முதிர்ந்து மரத்துப் போன என் மனத்தின் வேதனைகளை அடக்கிக் கொண்டு நான் அப்போது சிரிக்க முயன்றேன். தினம் தினம் நான் பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் படிக்க வரும் எண்ணற்ற குழந்தைகளைப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது காண்கிறேன். அப்போதெல்லாம் என்னுடைய மனத்தில் சாதாரணமாக வெறும் சாந்தி மட்டும் தான் நிலவுகிறது. ஆனால்...? இந்தக் குழந்தை!... இது தெய்வலோகத்தில் படைப்பின் திறன் எல்லாம் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஓர் அற்புதமான மலர். இதயத்தின் நிராசைகளையெல்லாம் அழித்து நெஞ்ச விளிம்பில் பொங்கும் ஆசைக் குமுறலை வளர்க்கும் நிர்மாலியம் இது! மாதுளை அரும்பு போன்ற அந்தப் பிஞ்சு விரல்கள், என் சூனிய நெற்றியை நெருடின. குங்குமம் என்னுடைய புருவங்களில் சிதறி விழுந்தது. “எப்படி டீச்சர்? கண்ணாடியிலே போய்ப் பாருங்க... நல்லாப் பொட்டு வச்சிருக்கேன்.” “ஆகட்டும்! கட்டாயம் நான் கண்ணாடியிலே பார்க்கிறேன். நீ... போயிட்டு வரியா?” “நீங்க கட்டாயம் கொலுவுக்கு வரணும்! மறந்துடப்படாது.” “அவசியம் வரேன். வந்து உன் டான்சைப் பார்க்க வேண்டாமா?” பூமியில் உருள்கிற சண்பகப் பூப்பந்து போல அந்தச் சிறுமி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே குங்குமச் சிமிழோடு படியிறங்கி அடுத்த வீட்டிற்குள் போனாள். வாசல் கதவைச் சாத்திவிட்டு, மறுபடியும் ஜன்னலோரத்து நாற்காலியில் போய்ச் சாய்ந்தேன். எதிரே நாற்காலி நிறையப் பள்ளிக்கூடத்துக் ‘காம்போஸிஷன்’ நோட்டுக்கள். அருகே சிவப்பு மை நிறைந்த மைக்கூடு! கட்டைப் பேனா! கைக்கடிகாரத்தில் ஏழு மணி ஆகியிருந்தது. வழக்கமாக ‘டியூஷனுக்கு’ வருகிற பெண்களை, இன்று இன்னும் காணவில்லை. இந்த உலகத்தில் எனக்கென்று வாழ எதுவும் இல்லை. வெள்ளை வாயில் புடவையைப் புரளப் புரளக் கட்டிக் கொண்டு கால் செருப்புத் தேயப் பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டு வரும் இந்த உத்தியோகந்தான், என்னுடைய ஆசையின் ஒரே சாதனம். வாழ்வு அழிந்து விட்டது; வருடங்கள் பல கழிந்து விட்டன; ஆனால், ஆசை அழியவில்லை. உள்ளத்தால் விதவையாக, உடம்பால் வாத்தியாரம்மாவாகக் காலம் போய்க் கொண்டிருக்கிறது. காலத்தோடு காலமாக நானும் போய்க் கொண்டிருக்கிறேன். ஏதோ சிறையிலிருப்பது போன்ற வாழ்வு. ஒருத்தி மட்டும் வசிக்கத் தேவையில்லாத பெரிய வீடு. ஒடுங்கிப் போன வாழ்வின் சிறிய பிம்பம் தான் நான். உயிரோடு பிணமாக உலாவி வருகிறேன். மனத்தின் சாந்தியை மங்காமல் காப்பாற்றும் இந்த உத்தியோகமும் இல்லை என்றால், என்றைக்கோ, தூக்குக் கயிறோ, கொல்லைக் கிணறோ, இந்த ஏழையின் உயிரினைப் பலி கொண்டு போயிருக்கலாம். இதில் வியப்பென்ன? பயங்கரமென்ன? வாழ முடியாதவர்களுக்கு, எல்லைக்கு அப்பால் பிடித்துத் தள்ளப்பட்டவர்களுக்குச் சாவு ஒரு சஞ்சீவி அல்லவா? வாசலில் மறுபடியும் யாரோ அழைக்கும் குரல் கேட்டது. “டீச்சர்! டீச்சர்!... கதவைத் திறங்க டீச்சர்.” எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தேன். என் மாணவிகள் குஞ்சுவும் ராஜமும் தான் வந்திருந்தார்கள். “என்னடீ இது? நீங்க டியூஷன் படிக்கப் புஸ்தகம் கொண்டு வரலியா?” “இல்லே டீச்சர்.” “இப்ப என்ன காரியமா வந்தீங்க ரெண்டு பேரும்?” ராஜமும் குஞ்சுவும் பதில் சொல்லாமல் என் முகத்தையே வெறித்து வெறித்துப் பார்த்தனர். பின்பு தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “என்னடீ? என் முகத்திலே ஏதாவது எழுதி ஒட்டியிருக்கா? கேட்டதுக்குப் பதில் சொல்லாமே ரெண்டு பேரும் இப்படிப் பார்க்கிறீங்க...?” “இல்லே டீச்சர்... நீங்க ஒரு நாளும் நெத்தியிலே குங்குமம் வச்சுக்க மாட்டீங்களே?... இன்னிக்கு மட்டும் வச்சிக்கிட்டிருக்கீங்களே...?” என் தவறு எனக்கு அப்போதுதான் புரிந்தது. அந்தக் குழந்தை போனதும் அதை நான் அழித்திருக்க வேண்டும். எனக்கு மறந்து போய்விட்டது. என்ன மறதி? - எனக்கு வெட்கமாயிருந்தது. “ஓ! இதைச் சொல்றீங்களா?... இது வந்து... இதை ஒரு குழந்தை விளையாட்டுக்காக வற்புறுத்தி இட்டுட்டுப் போச்சு...” என்று சொல்லிக் கொண்டே அவசர அவசரமாக நான் அதை அழித்தேன். “ஏன் டீச்சர் அழிச்சிட்டீங்க? உங்க நெத்திக்கு அழகா இருந்ததே?” “அது சரி, நீங்க வந்த காரியத்தைச் சொல்லுங்க.” “நவராத்திரி முடிகிற வரைக்கும் வீட்டில் கொலுவுக்கு இருக்கணுமாம். ‘டியூஷன்’ வேண்டாம்னு எங்க அம்மா சொல்லச் சொன்னாங்க...” “சரி! போயிட்டு வாங்க... அப்போ இன்னும் ஏழெட்டு நாளைக்கு ‘டியூஷனுக்கு’ வர மாட்டீங்க இல்லையா?” “ஆமாம்! டீச்சர்...” தலைநிறைய மல்லிகைப்பூ கொத்துக் கொத்தாக அசைய சடைக் குஞ்சலங்கள் ஆட ராஜமும் குஞ்சுவும் தெருத் திரும்பி நடந்து மறைந்தார்கள். என் நெற்றிப் பொட்டை நான் அழித்து விட்டேன். மீண்டும் ஒரு பிரமை! அந்தக் குழந்தையின் பட்டுக் கையிலுள்ள பிஞ்சு விரல்கள், என் நெற்றியில் அழுத்தி அழுத்திக் குங்குமத்தைத் தேய்ப்பது போல ஓர் உணர்வு. சுருட்டை சுருட்டையாக மயிர் புரளும் முன் நெற்றிக்கும் அடர்ந்த புருவங்களுக்கும் இடையே அந்த உணர்வின் விளைவாக ஒரு கிளுகிளுப்பு ஊடுருவிக் கொண்டிருந்தது. எண்ணங்களின் அடக்க முடியாத வேகம். சிறைப்பட்ட தண்ணீர் உடைத்துக் கொண்டு பெருகுவது போல, இதய வெளியில் பெருகிப் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு பெண் கல்யாணமாகாமல் அனாதையாக வாழ்ந்து விடலாம். கல்யாணம் ஆன பின் கணவனுக்கு முந்திக் கொண்டும் இறந்து விடலாம். ஆனால் வாழ வேண்டிய பருவத்தில், வாழ்கிறவர்களுக்கு நடுவே, வாழாதவளாக ‘விதவை’ - என்ற பேரில் உயிரோடிருப்பதைப் போலச் சித்திரவதை வேறில்லை. கதாசிரியர்கள் கதைகளில் எழுதுவதையும் விட நிஜமான அதிகத் துயரம் ஒரு விதவையின் வாழ்க்கை அனுபவத்தில் இருக்கிறது. பூக்குவியல்களுக்கு நடுவே கிடந்து புரளும் சுகம் போல், யௌவன மலர்களாகிய பெண்களின் பள்ளிக்கூடத்தில் படிப்பும் பாட்டும் சொல்லிக் கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொண்டேனோ இல்லையோ, நான் அதனால் தான் பிழைத்தேன்! மனம் வழி தவறிய ஆசைகளின் ஒழுங்கற்ற மார்க்கங்களிலோ ஆசைகளின் கொட்டத்துக்கும் முடிவு கட்டும் சாவிலோ சொல்லாமல், வாழப் பொறுத்துக் கொண்டு செல்வதற்குக் காரணம் இந்தக் குழந்தைகளின் முகம் தான். எனக்கு இன்னும் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்குப் பள்ளிக்கூடம் கிடையாது. தசரா விடுமுறை. ராஜமும் குஞ்சுவும் கூட ‘டியூஷனுக்கு வருவதற்கில்லை’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்கள். தனிமை! தனிமை!! இந்தப் பெரிய வீட்டில், என் சிறிய உள்ளம் அலை மோதும் ஏக்கத்தினிடையே எப்படித்தான் தத்தளிக்கப் போகிறதோ? எண்ணங்களை எண்ணிப் பார்ப்பதற்கே நேரமில்லாமல், மனத்தை மற்றவர்களுக்கு நடுவே அவர்களுடைய கோலாகலத்தில் மூழ்கச் செய்து விட்டால், நம் வாழ்வின் அமங்கலமான பயங்கரம், தனிமையின் ஏக்கம் எல்லாம் மறைந்து விடும்; போர்வையால் உடலை மூடிக் கொண்டதும், அதுவரை வெடவெடக்கச் செய்து கொண்டிருந்த குளிர் மறைந்து விடுகிற மாதிரி! கண்களைச் சொருகிக் கொண்டு வந்தது. தூக்கம் இமை வழியே கனமாக இறங்கிக் கொண்டிருந்தது. மணி ஒன்பது கூட ஆகவில்லை. வழக்கமாகத் தூங்குகின்ற நேரமும் இல்லை அது! ஆனால் என்னவோ தெரியவில்லை! காரணத்தைச் சொல்லிக் கொண்டா வருகிறது தூக்கம்? அப்படியே நாற்காலியில் தலைமைச் சாய்த்தேன். சாப்பாடு?... இன்று அதைப் பற்றிய ஞாபகமே எனக்கு உண்டாகவில்லை. ஜன்னல் வழியே புகுந்த தெருவோரத்துப் பன்னீர் மரத்தின் குளுமையான வாசனை நிறைந்த காற்று, முகத்தில் ஜிலுஜிலுவென்று விளையாடியது. இந்தக் காற்றின் ஸ்பரிச சுகத்திற்கு வேறு உவமை சொல்ல வேண்டுமானால் அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்கள் என் நெற்றியில் அழுத்திக் குங்குமப் பொட்டு இட்டனவே; அந்த ஸ்பரிச சுகத்தைத் தான் சொல்ல வேண்டும்! ஏதேதோ நினைத்தபடியே இறுதியில் நினைவுகளும் சேர்ந்து நன்றாகத் தூக்கி விடுகிறேன் நான். தூக்கத்தில் எனக்கு ஒரு கனவு. ***** நெற்றியில் பளபளவென்று கருமை மின்னும் சாந்துப் பொட்டு வைத்துக் கொள்கிறேன். நாசித் துவாரங்களைக் கவர்ந்து தெய்வலோகத்திற்கே இழுத்துச் செல்லும் மணம் மிக்க குடை மல்லிகைச் சரத்தைப் பந்து பந்தாகச் சுருட்டித் தலையில் வைத்துக் கொள்கிறேன். ரோஜா நிற ஜார்ஜெட் புடவை என் உடலில் பட்டும் படாதது போல மென்மையாக ஒட்டிக் கொண்டிருந்தது. கையில் தேங்காய் பழக்கூடையை எடுத்துக் கொண்டு, கோயிலுக்குப் போய் அம்மன் சந்நிதிக்குள் நுழைகிறேன். கோவில் வாசலில் யாரோ ஒரு சிறுமி இரைந்து கத்தி என்னைக் கூப்பிடுகிறாள். திரும்பிப் பார்க்கிறேன். கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டு நிற்கிறாள். “டீச்சர்! டீச்சர்! இப்ப நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? எங்க அம்மா கூட இவ்வளவு நல்ல அழகு இல்லே.” என்னுடைய அழகின் அளவுக்கு வரம்பு கட்டி விடுகிறவளைப் போல, அந்தச் சிறுமி இரண்டு கையையும் நீட்டி விரித்து உதடுகளைக் குவிய வைத்துக் கொண்டு தன் மழலைச் சொற்களில் கூறும் அழகுக்கு நடிப்பே போல மலர மலரக் கண்களை விழிக்கிறாள். குழந்தை அப்படிக் கையை விரித்த போது, வலது கையிலிருந்த எண்ணெய்க் கிண்ணம் கீழே விழுந்து எண்ணெய் கொட்டி விடுகிறது. “ஐயையோ! எண்ணெய் கொட்டிடுச்சே டீச்சர்! எங்கம்மா கோவில் விளக்கிலே விட்டுட்டு வரச்சொன்னாளே... இன்னிக்கு நான் வீட்டுக்குப் போய் அடிதான் வாங்கப் போறேன்.” “வெளக்குலே விட்டுட்டேன்னு உங்க அம்மா கிட்டப் போய்ப் பொய் சொல்லிடேன்!” “பொய் சொல்லப்படாது டீச்சர்! அம்பாள் பொய் சொன்னாக் கண்ணை அவிச்சுப்பிடுவா! அப்புறம் பாவம்...” சிறுமியின் கண்களில் உலகெங்கும் தேடினாலும் காணக் கிடைக்காத பயபக்தியின் சாயல் மின்னுகிறது. சத்தியம் தெரிகிறது. “அழாதே! வாசலிலே எண்ணெய்க் கடை இருக்கு இந்தா; இந்தக் காசைக் கொண்டு போய்க் கொடுத்து கிண்ணத்திலே எண்ணெய் வாங்கிக் கொண்டு வா... அது வரை உனக்காக நான் இங்கேயே நிற்கிறேன்.” ஒரு முழு ஓரணா நாணயத்தை அந்தக் குழந்தையின் கையில் எடுத்து வைக்கிறேன். தங்கக் குத்துவிளக்கு ஒன்று, கையும் காலும் பெற்று ஓடுகிற மாதிரி ‘குடுகுடு’ வென்று கிண்ணத்தோடு கோயில் வாசலிலிருந்து கடையை நோக்கி ஓடுகிறாள் அந்தச் சிறுமி. அவள் கிண்ணத்தில் எண்ணெயை வாங்கிக் கொண்டு திரும்பி ஓடி வருகிறாள். சிறுமியின் கையைப் பிடித்துக் கொண்டு அம்மன் சந்நிதிக்குள் நுழைகிறேன். கோவில் மணி பாவத்தின் மேல் விழும் சவுக்கடியைப் போலக் கணீர் கணீரென்று முழங்குகிறது. இவ்வளவில் அந்தக் கனவும் கலைந்து விடுகிறது. ***** தூக்கம் கலைந்து நான் விழித்துக் கொண்டு விட்டேன். தொலைவிலிருந்த மாதாகோவில் கால அறிவிப்பு மணி, பன்னிரண்டு முறை அடித்து ஒலி அலைகள் சுழன்று சுழன்று ஒடுங்கி ஓய்ந்து கொண்டிருந்தன. மணியடித்து ஓய்ந்த பின்பும், ஒலியின் அலைகள் சிறிது நேரம் ஓயாமல் ‘செவித்துளைகளில் கிணு கிணு’த்துக் கொண்டிருந்தன. என் கனவு கலைந்து விட்டது. கனவைப் பற்றிய இனிய நினைவுகள் மட்டும் மனத்திலிருந்து இன்னும் கலையவேயில்லை! ஓசை ஓய்ந்து விட்டது. ஆசை ஓயவில்லை! மனம் மரத்தும் போய்விட்டது. நினைவுகள் மரத்துப் போகவில்லை விந்தைதான்!... நான் மயக்கமான மனநிலையோடு இருந்தேன். விளக்குகளை அணைத்து விட்டுப் படுக்கையை விரித்துப் படுத்தேன். சுற்றிலும் நித்திரைக்கு நடை பாவாடை விரித்து வைத்தது போல ஒரே இருட்டு. ஜன்னலுக்கு வெளியே தெரு விளக்குகள் உறங்காமல் ஒடுங்காமல் கடமை வீரர்களைப் போல, எரிந்து கொண்டிருந்தன. என்னைச் சுற்றிலும் இருட்டு. இருட்டைச் சுற்றிலும் நான்! இருளில் உறங்கும் இருளைப் போல வராத உறக்கத்தை வரவழைக்க முயன்று வலியக் கண்களை மூடிக் கொண்டு தூங்கி விடப் பார்த்தேன். கவலைக்கும் உறக்கத்திற்கும் என்ன பகைமையோ, தெரியவில்லை! உறக்கம் வருவதற்கு மறுத்தது. மறுநாள் காலை பொழுது விடிந்தது. விடிந்த வேகத்தில் வளர்ந்தது. காலை நண்பகலாகி, நண்பகள் பிற்பகலாகி, பிற்பகல் மாலை என்று பெருங்கிடங்கில் வந்து தேங்கியது. “டீச்சர்!... டீச்சர்!... கதவைத் திறங்க டீச்சர்!” வரத்தை நாடி ஓடும் பக்தனைப் போல நான் ஓடிப் போய்க் கதவைத் திறந்தேன். அந்தத் தெய்வீக குழந்தை கையில் குங்குமச் சிமிழோடு எனக்கு எதிரே வந்து நின்று கொண்டிருந்தாள். நான் நேற்றுப் போலவே மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டேன். சிறுமி சிரித்துக் கொண்டே என் புருவங்களுக்கிடையே குங்குமம் தோய்ந்த தன் பிஞ்சு விரல்களை வைத்து அழுத்தினாள். என் நெற்றி நரம்புகளுக்குள் ‘குபுகுபு’வென்று மின்சாரத்தை அள்ளிப் பாய்ச்சியது அந்த ஸ்பரிசம். அவளுக்குச் சந்தோஷம் நிலை தாங்கவில்லை. பிஞ்சு உதடுகளில் சிரிப்பு மலர்ந்தது. அவளோடு சேர்ந்து கொண்டு நானும் சிரித்தேன். மீண்டும் என்னைக் கொலுவுக்கு வரச் சொல்லி வற்புறுத்தி விட்டுப் போய் சேர்ந்தாள் அந்தச் சிறுமி. திறந்த கதவை அடைந்தேன்! இதயத்தையும் நினைத்த போதெல்லாம் இப்படி அடைத்து விட முடியுமானால், எவ்வளவு நன்றாக இருக்கும்? ஜன்னலோரத்து நாற்காலிக்கு என் உடம்பை அடைக்கலமாகக் கொடுத்தேன். தெருவோரத்துக் காட்சிகளை என் கண்கள் காண்பதற்குப் பிடித்துக் கொண்டன. சாரிசாரியாக நகைகளும் புதுப் புடவைகளும் மின்ன, நெற்றி நிறையத் திலகமும், தலைநிறையப் பூவுமாகக் கொலு வீடுகளுக்குப் போய் விட்டு வரும் பெண்கள், தெருவை நிறைத்துச் சென்று கொண்டிருந்தனர். தெரு நிறையப் பட்டுப்பூச்சிகள் பறப்பது போல, ராஜமும் குஞ்சுவும் வந்து கதவைத் தட்டினார்கள். ஏதோ கல்யாணப் பெண்கள் மாதிரி உடலெல்லாம் மினுமினுக்க, அலங்காரம் செய்து கொண்டு தலைநிறையப் பூவோடு வந்து நின்றார்கள் அந்த மாணவிகள். தங்கள் வீட்டில் கொலுவுக்குச் செய்தது என்று ஏதோ தின்பண்டங்களைக் கொண்டு வந்து உள்ளே வைத்துவிட்டு அவர்கள் விடை பெற்றுக் கொண்டு போனார்கள். தெருவில் பூ விற்றுக் கொண்டு வருகிறவனின் குரல் ஒலித்தது. “மல்லிகைப்பூ! மல்லிகைப்பூ! முழம் அரையணாத்தான்...” என் இதயத்தில் அந்தரங்கமான மூலை யொன்றில் வெட்கத்தை மறந்து விட்ட தனிமையின் துணிவில் ஒரு சிறு ஆசை துளிர்ந்தது. “ஏய், பூ! இங்கே கொண்டா...” எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு துணிச்சல் வந்ததோ எனக்கே தெரியவில்லை! அவனைத் தைரியமாகக் கூப்பிட்டு விட்டேன். “யாரும்மா? நீங்களா கூப்பிட்டீங்க?” “ஆமாம், வா...” பூக்காரன் என்னை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே கூடையை என் வீட்டு வாசலில் கொண்டு வந்து இறக்கினான். “நாலு முழம் நல்ல மல்லிகைப் பூவாப் பார்த்துக் கொடு...” அவன் பூவைக் கொடுத்தான். நான் காசைக் கொடுத்தேன். வியாபாரம் முடிந்த மாதிரித்தான். ஆனால், முடியவில்லை. அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான். “ஏம்மா! உங்க வீட்டுக்கு வேறே யாராச்சும் வந்திருக்காங்களா?” “ஏன்? எதற்காக இப்படிக் கேட்கிறே நீ...?” “இல்லே! என்னைக்கு மில்லாத வழக்கமா, இன்னைக்கி நீங்க பூ வாங்கினீங்களே, அதனாலே தான் கேட்டேன். நீங்க தான் பூ வச்சுக்க மாட்டீங்களேம்மா?” - இதைக் கேட்டு விட்டு அவன் போய்விட்டான்! பூவோடு ஓர் அர்த்தம் நிறைந்த கேள்விகளையும் என்னிடம் தொடுத்துக் கொடுத்து விட்டுப் போய்விட்டான். என் இதயத்தின் அடி விளிம்பில் ஜிலுஜிலுவென்று ஆடிக் கொண்டிருந்த ஆசையின் இளந்தளிர், வெடவெடவென்று நடங்கியது. அவன் கொடுத்த இந்தப் பூவை வைத்துக் கொள்ள இடமுண்டு. தலையிருக்கிறது! அதுவும் இல்லாவிட்டால் தரை இருக்கவே இருக்கிறது. அவன் கேட்டானே அந்தக் கேள்வி?... அதை வைத்துக் கொள்ள என்னிடம் இடம் ஏது? எங்கே வைத்துக் கொள்வேன்? இதயத்தில் வைத்துக் கொண்டால் அந்தக் கேள்வியின் சூட்டிலே இதயம் வெந்து போய்விடுமே! சிறிது நேரம் இப்படி என்னுள் மனப் போராட்டம் ஒன்று நிகழ்ந்தது. முடிவில் என் ஆசைக்குத்தான் வெற்றி! தொலை தூரத்தில் ஒலி மங்கிப் போய்க் கொண்டிருந்த, ‘மல்லிகைப்பூ, மல்லிகைப்பூ...’ என்னும் அவனுடைய குரலில் ஒடுங்கிய தொனியைப் போலவே, அவன் என்னைக் கேட்டிருந்த அந்தக் கேள்வியும் ஒடுங்கிப் போய் அழிந்து விட்டது. என் வீட்டுக் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன். உள்ளே போய் அலமாரியைத் திறந்தேன். மழைக் காலத்து அருவியின் பிரவாகத்தைப் போலக் கள்ளத்தனமான அந்த ஆசை என்னுடைய உள்ளத்தைச் சிறியதாக்கி விட்டுத் தான் மட்டும் அடங்காப்பிடாரித் தனமாகப் பெரிதாகிக் கொண்டிருந்தது. நானோ, என்னுடைய மனமோ முயன்றாலும் அடக்க முடியாதபடி பெரிதாகிக் கொண்டிருந்தது அந்த ஆசை. எனக்கு எதிரே இருந்த பெரிய நிலைக் கண்ணாடி, வஞ்சகமில்லாமல் என்னுடைய இருபத்தெட்டு வயது வாலிபத்தின் பெண்மை அழகை அப்படியே எனக்குக் காட்டியது. என்றோ நடந்து, என்றோ பாழாகவும் போன எனது கல்யாண கூறைப் புடைவையை, நடுங்கும் கைகளால் பிரித்துக் கட்டிக் கொண்டேன். அலமாரிக்குள் கைப்பெட்டி நிறைய அடைபட்டுக் கிடந்த எல்லாப் பொன் நகைகளும் என் உடலில் தத்தமக்குரிய பதவிகளை அடைந்தன. என் காதுகளில் வைரத்தோடுகள் மின்னின. கழுத்தில் ‘நெக்லெஸ்’ இரட்டை வடம் சங்கிலி, காசுமாலை, கை நிறைப் பொன் வளையல்கள், மூக்கில் சுடர் தெறிக்கும் மூக்குத்தி, நெற்றியில் அந்தக் குழந்தை கீறி விட்டுப் போன மெல்லிய குங்குமக் கீறல், தலையை வட்டமாக முடிந்து கட்டிப் பிச்சோடப் போட்டு, நாலு முழம் மல்லிகைப் பூவையும் சந்திர பிறை போல் அழகுறச் சூட்டிக் கொண்டேன். நான் சுமங்கலியாக மாறி நிற்கிற என் உருவத்தைக் கண்ணாடி எனக்கே பிரதிபலித்தது. பூச்சூட்டிக் கொள்ளும் போது மட்டும் கைகள் கொஞ்சம் நடுங்கின! பூக்காரன் கேட்டு விட்டுப் போன அந்தக் கேள்வி...? சாட்டையைச் சொடுக்கி உதறியது போல அது மனத்தில் ஒரு மின்வெட்டாகப் பாய்ந்து வெட்டியது! இந்த நிலைக்கண்ணாடி வாழ்க! வெள்ளைப் புடவையும் மூளிக் காதுகளுமாக இதுவரை பாலைவனம் போலிருந்த என்னைப் பத்தே நிமிஷங்களில் யௌவனம் ததும்பி வழியும் பருவ அழகு நிரம்பிய சுமங்கலியாகக் காட்டி விட்டதே? இப்படியே தெருவில் இறங்கி நடந்தால் நான் விதவை என்று சத்தியம் செய்தால் கூட அதை யாரும் நம்ப மாட்டார்களே? கனமான பட்டுப் புடவை, வழுக்கலும் மொட மொடப்புமாக என் உடம்பை யாரோ மென்மையாய்க் கட்டித் தழுவுகிற மாதிரி எவ்வளவு இதமாக இருக்கிறது! என்னை யறியாமலே என் வாய், தானாக ஒரு புன்னகையை மலரச் செய்து இதழ்களின் ஓரங்களிடையே நளினமாய் நழுவ விட்டது! கண்ணாடியில் பார்க்கிற போது, அந்தப் புன்னகை அதைப் படைத்துக் கொண்டவளாகிய என்னையே ஒரு மயக்கு மயக்கிக் கிறங்க வைத்தது. அலமாரியைச் சாத்திவிட்டுக் கண்ணாடிக்கு முன்பிருந்து கூடத்துப் பக்கம் வந்தேன்! கையில் லேடீஸ் வாட்ச்சின் - சிறிய மணி எண்கள் தெரியவில்லை. விளக்கைப் போட்டு மணிக்கட்டை உயர்த்திக் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தேன். ஏழரை மணி ஆகியிருந்தது. சில நிமிஷங்களுக்குள் வாழ்க்கையின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த அல்லது ஒதுக்கப்பட்டிருந்த என்னுடைய எல்லா அமங்கலங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதாக ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது. அதற்குப் பதிலாக இதுவரை எனக்குக் கிடைக்காமல் இருந்த அல்லது கிடைக்க விடாமல் தடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சகல சௌபாக்கியங்களும் பூரணமாகக் கிடைத்து நான் சுமங்கலியாக வாழ்வின் பசுமையான மலையுச்சியில் நிற்பதாக ஒரு எண்ண மிதப்பில் நீந்திக் கொண்டிருந்தேன். உடல் முழுவதும் - உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இன்னதென்று இனம் கூறும் வரம்பில் அடங்காத - அடக்கவும் முடியாத ஒரு பூரிப்புக் கிளுகிளுத்துக் கொண்டிருந்தது. நானோ முயன்று விரும்பி ஏற்படுத்திக் கொண்ட சௌபாக்கியங்களோடு நின்றேன் நான். என் கைகளில் வளைகள் குலுங்கின. காதுத் தோடுகளின் ஒளிச் சிதறல் சுனைநீரில் சூரிய ஒளிபோல் டாலடித்தது. நடந்து போய் அப்படியே ஜன்னலருகே நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தேன். வீடு நிறைய எல்லா மின்சார விளக்குகளும் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. தெருவைப் பார்த்து இருந்த பெரிய ஜன்னல், முழுமையாகத் திறந்து கிடந்தது. அந்த ஒளி வெள்ளத்தின் இடையே மங்கலமயமான எண்ணத் தோணியின் மிதப்பில், எங்கோ கண் காணாத வாழ்வின் பூரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, ஒரு சொப்பன - அவஸ்தையில் நினைவுள்ள போதே அமுங்கி ஆழ்ந்து கீழே, கீழே கீழுக்கும் கீழே சௌபாக்கியத்தின் அதலபாதாளத்தை நோக்கி இறங்கிப் போய்க் கொண்டிருந்தேன் நான். நெஞ்சின் ஆழத்தில், எங்கோ ஒரு கோடியைத் தவிர, மற்றெல்லா இடங்களிலும் ‘நான் சௌபாக்கியவதி’, ‘நான் சௌபாக்கியவதி’ - என்று மௌனத்தின் ஓசையில்லாத குரலில், பாஷையில்லாத சொற்களில், அர்த்தமில்லாத குறிப்பு ஒன்று கிளர்ந்து கொண்டிருந்தது. பாதத்தின் அடிப்புறம் முள் தைத்து வீங்கினால், செங்கலைச் சுட வைத்து ஒத்தடம் கொடுக்கும் போது அந்தச் சூடு உள் காலுக்கு வெது வெதுப்பாய் இதமாக இருக்குமல்லவா? அது மாதிரித்தான் இந்த சௌபாக்கிய சொப்பனாவஸ்தையில், என் உடம்பு புளகித்துக் கொண்டிருந்தது. நான் மகிழ்ச்சியின் எல்லையில் போய் அதற்கப்பால் போக இடமின்றி நின்று கொண்டிருந்தேன். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் விழிப்புமில்லாமல் சொப்பனமுமில்லாமல் மதுவுண்ட வண்டு போலத் தெருவைப் பார்த்தும் பார்க்காமலும் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தேன்... ஜன்னலோரமாகத் தெருவில் தன் போக்கில் நடந்து வந்து கொண்டிருந்த இருவர் எதைப் பற்றியோ தங்களுக்குள்ளே இரைந்து பேசிக் கொண்டு போனார்கள். “அட! நீ ஒண்ணு... அவ அறுத்த முண்டையா லட்சணமாவா வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறா?... பூவும் பொட்டும், புடவையுமாகக் குலுக்கி மினுக்கிக்கிட்டுல்ல திரியுறா!” யாரைப் பற்றியோ, கூட வந்தவனிடம் கத்திக் கொண்டு போனான் அவன். என் நெஞ்சு ஒரு குலுக்குக் குலுக்கி ஓய்ந்தது. தலை நிறைய நெருப்பை வாரி வைத்த மாதிரி ஒரு வலி. நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தேன். குபீரென்று பாய்ந்து, மின் தொடர்பான மெயின் சுவிட்சை அமுக்கினேன்! வீடு இருண்டது. என் கழுத்தில் காசு மாலை பாம்பு மாதிரி நெளிந்தது. பட்டுப்புடவை உடம்பில் ஒட்டவே இல்லை. ‘சுளீர் சுளீர்’ என்று சவுக்கடிகள் விழுகின்ற மாதிரி, உடம்பில் ஒரு வேதனை. எனது தற்காலிகமான சௌபாக்கியம் என்ற சொப்பனாவஸ்தை படகு, சில்லுச் சில்லாக உடைந்தது. உள்ளத்தில் அமங்கலி, உடலாலே மட்டும் சுமங்கலியாகி விட முடியுமா? புடவையை அவிழ்த்து எறிந்தேன். நகைகள் மூலைக்கு ஒன்றாகச் சிதறின. இருண்ட வீட்டின் ஒடுங்கிய மூலையில் ஆசைப்பட்டுத் தேடிய எனது தாற்காலிக சௌபாக்கியத்தைக் கலைத்த அவன் யார்? யாரோ தெருவோடு போனவன்! இந்தக் கதையைப் படித்த சுகுணா அழுதிருக்கிறாள். ‘முத்துச் சாவடி’ என்ற என்னுடைய இன்னொரு கதையோ அவளைத் தற்கொலை செய்து கொள்ளவே தூண்டியிருக்கிறது. அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தூண்டிய அந்தக் கதையை இனிமேல் பார்க்கலாம். |