18. விநோதமான வாசகன் என்னுடைய கேள்வி அந்த இளைஞருடைய முகத்தில் அப்போது ஏற்படுத்தும் உணர்ச்சிகளைக் கவனிப்பது அவசியமென்று கருதினேன் நான். அதனால் கவனிக்க வேண்டியதைக் கூர்ந்து கவனித்தேன் அப்போது. அந்த இளைஞர் மிக உறுதியான குரலில் எனக்கு மறுமொழி கூறினார். “என்னைப் பொறுத்தவரை உங்களுடைய எந்த அறிவுரையையும் நான் வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தயாராயிருக்கிறேன் சார். இதை நான் வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்லுகிறேன். உங்களுடைய கற்பனையில் உதயமான சுகுணாவின் அழகை மட்டும் நான் காதலிக்கவில்லை. உண்மை உலகத்தில் நீங்கள் ஒரு சுகுணாவைக் காண்பித்து ‘இவளுடைய கணவனாகத் தான் நீ இருக்க வேண்டும்’ என்று எனக்குக் கட்டளையிட்டால் அந்தக் கட்டளைக்கு நான் ஆட்படுவேன். அவ்வளவு துணிவும் தன்னம்பிக்கையும் எனக்கு உண்டு.” “இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சத்தியமும் உறுதியும் உள்ளவைதாம் என்று நான் நம்புகிற மாதிரி நீங்கள் ஏதாவது செய்து நிரூபித்துக் காண்பிக்க முடியுமா மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி?” “கட்டாயம் செய்து காண்பிப்போம் சார்! ‘என்னால் செய்ய முடியுமோ?’ என்று நீங்கள் திகைத்து மலைப்படைகிற காரியத்தைக் கூட நான் உங்களுக்காகச் செய்யத் தயார். உங்கள் எழுத்து என்னை அப்படி ஆக்கி வைத்திருக்கிறதே!” “நன்றாகச் சிந்தித்து பதில் சொல்லுங்கள். நான் உங்களை மிரட்டுவதற்காகவோ, வெறும் விளையாட்டுப் பேச்சுக்காகவோ வேலை மெனக்கெட்டு இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. என் மனதில் உருவாகிவிட்ட தீர்மானம் ஒன்றை அடித்தளமாக வைத்துக் கொண்டு தான் இவற்றைக் கேட்கிறேன்!” “அப்படி ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளத் துணிந்து தான் நானும் இப்படி ஒப்புதல் தருகிறேன்.” “நல்லது இவ்வளவு உறுதியாக நீங்கள் பேசும் போது உங்களிடம் நேரடியாகவே இனி நான் கூற வேண்டியதைக் கூறலாம். சற்று முன் நான் கூறினேன்; பட்டுப்பூச்சியின் உண்மைக் கதாநாயகி அல்லியூரணியில் கிராம சேவகியாக இருக்கிறாள். கற்பனைச் சுகுணாவைக் காட்டிலும் இந்த உண்மைச் சுகுணாவின் அழகு அதிகம். கற்பனைச் சுகுணாவை விட இலட்சியப் பைத்தியமும் அதிகம். கற்பனைச் சுகுணாவை விட அதிகமான துன்பங்களை இவள் வாழ்வில் இதுவரை அனுபவித்திருக்கிறாள். எட்டு வயதிலோ, ஏழு வயதிலோ பொம்மைக் கலியாணம் போல நடந்த நிஜக் கலியாணத்தில் தாலி கட்டின கணவனை இழந்த பிள்ளைப் பருவத்துக் கொள்ளைப் பேரிடியைத் தாங்கி நிற்கிறாள். கிராம சேவகியாக வேலை ஏற்றுக் கொண்டு வாழும் இவள் இப்படியே கட்டுக் காவலில்லாத புனித மலராக வாழ்ந்து கைம்மையைக் கடைபிடிக்கும்படி அநுமதிக்கவும் இன்றைய சமூகத்தில் காமுகர்களாக மறைந்து உலாவும் பிரமுகர்களும், பெரிய மனிதர்களும் விடமாட்டார்கள். அபவாதமும், பழிகளும் புனைவதையும் நிறுத்த மாட்டார்கள். தைரியமும் தன்னம்பிக்கையும், இலட்சியங்களில் பற்றுக் கொண்டு உங்களைப் போல் முற்போக்கான நினைவுள்ள ஒருவர் இவளுக்கு வாழ்வளிக்க முன் வந்தால் அந்தக் காரியத்துக்கு முன்னின்று முயன்ற நாட்கள் என் வாழ்விலேயே பயன்மிக்கனவாயிருக்கும். எனக்கு இ ப்படி ஒரு சகோதரி இருந்து அவளுக்கு இப்படிப்பட்ட துன்பங்களும் வாய்த்து விட்டால் நான் என்னைத் தேடி இலட்சியமும் சீர்திருத்தமும் பேசிக்கொண்டு வருகிற ஒவ்வொரு இளைஞனிடமும் இதே வேண்டுகோளைத் தான் விடுப்பேன். இந்தத் தாய்த்திருநாட்டில் இப்படி நிராதரவாகவும், பாதுகாப்பில்லாமலும் வாழ்கிற ஒவ்வொரு பெண்ணையும் என் உடன் பிறவாத சகோதரிகளாக எண்ணி நான் உழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த ஆசையின் முதல் வெற்றிக்கு நீங்கள் உதவி செய்ய இடமிருந்தால் நாளைக்குக் காலையில் உங்களுடைய புகைப்படத்தோடு என்னைப் பார்க்க வாருங்கள்.”
அந்த நேரத்தில் என்னுடைய பேச்சில் அவ்வளவு கண்டிப்பு எப்படி வந்து இணைந்ததென்று நான் பேசி முடித்த பின்பு எனக்கே வியப்பாக இருந்தது.
“நான் உங்கள் பேச்சுக்கு ஆட்படுகிறேன். நாளைக் காலையில் மறுபடி சந்திக்கலாம்” - என்று என் வலது கையில் சத்தியம் செய்வது போல் தம் வலது கையை வைத்து அழுத்திக் குலுக்கி விடைபெற்றுக் கொண்டு சென்றார் அந்த இளைஞர். வேலியற்ற தோட்டமாக இருக்கும் சுகுணாவுக்கு நல்ல கணவன் கிடைக்கப் போகிறான் என்று நம்பிக்கை கொண்டு அன்றிரவு நான் நிம்மதியாக உறங்கினேன். சொல்லியபடியே மறுநாள் காலை அந்த இளைஞர் விவேகானந்த மூர்த்தி புகைப்படத்தோடு என்னைத் தேடி வந்து விட்டார். என்னை இரயிலேற்றி ஊருக்கு வழியனுப்புகிறவரை என்னுடனேயே இருக்க வேண்டும் என்ற விருப்பத்தால் அன்று கல்லூரிக்கு லீவு வேறு சொல்லிவிட்டு வந்திருந்தார் அவர். “உங்கள் புகைப்படத்தைச் சுகுணாவுக்கு அனுப்பி விவரமும் எழுதுகிறேன். நான் கிழித்த கோட்டைத் தாண்டத் துணிய மாட்டாள் அந்தப் பெண். அவள் புகைப்படத்தை மறுதபாலில் உங்களுக்கு வாங்கி அனுப்புகிறேன். நீங்களும் அதைப் பார்த்து விட்டு உங்கள் அபிப்ராயத்தை எனக்கு எழுதுங்கள்” - என்று இரயில் நிலையத்தில் விடை பெற்றுக் கொள்ளும் போது நான் விவேகானந்த மூர்த்தியிடம் கூறினேன். “நான் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற அவசியமே இல்லை சார்! நீங்கள் அவளை உங்கள் பட்டுப்பூச்சியின் உண்மைக் கதாநாயகியாக வர்ணிக்கிறீர்கள். அந்த ஒரு தகுதி போதும் எனக்கு. ஏனென்றால் பட்டுப்பூச்சியின் கதாநாயகியான சுகுணாவை எழுத்தில் படித்தே நான் காதலித்திருக்கிறேன். கனவு கண்டிருக்கிறேன். என் தந்தை ஓர் ஓய்வு பெற்ற ஆங்கில புரொபஸர். தாய் காலமாகி இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. சகோதரிகள் எல்லாம் திருமணமாகிக் கணவர் வீடுகளில் சுகமாக வாழ்கிறார்கள். அப்பாவுக்கு நான் செல்லப்பிள்ளை போலத்தான். அவரே தம்முடைய கல்லூரி நாட்களில் இப்படிச் சீர்திருத்தத் திருமணங்களை ஆதரித்து நிறையக் கூட்டங்களில் பேசியிருக்கிறார். சில திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியும் இருக்கிறார். ஆகவே என் விருப்பத்துக்குத் தடைகளே இல்லை. சந்தேகம் சிறிதும் இன்றி நீங்கள் முயற்சி செய்யலாம். மார்ச் இறுதியில் எனக்கு எல்லாப் பரிட்சைகளும் முடிந்து விடுகின்றன. ஏப்ரலில் எனக்கு விடுமுறை தொடங்குகிறது. திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போது நீங்களே என் தந்தையைச் சந்தித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்” - என்று தைரியம் கூறி என்னை வழியனுப்பினான் அந்தத் தீரன். விநோதமான அந்த வாசகன் என்னிடமிருந்து அன்று வரை படித்துக் கொண்டது. அதிகமா அல்லது அந்தச் சில மணி நேரங்களில் நான் அவனிடமிருந்து படித்துத் தெரிந்து கொண்டு திரும்புவது அதிகமா என்று மருண்டது என் மனம். நான் ஊருக்குப் போனதும் முதல் வேலையாக அந்தப் படத்தோடு விவரமான கடிதம் ஒன்று எழுதிச் சுகுணாவுக்கு அனுப்பி வைத்தேன். ‘கிராமசேவகி உத்தியோகத்தில் உங்களுக்குக் கிடைக்கிற அபவாதங்களும், பழிகளும் உங்கள் உடம்பை நினைத்து வட்டமிடுகிற மனிதக் கழுகுகளும், விலகி ஓடும்படிக்கு ஒரு காவலனை கண்டுபிடித்திருக்கிறேன். என் சொற்களை மீறாமல் நீங்கள் இந்தப் படத்தில் புன்னகை பூத்துக் கொண்டிருக்கும் இலட்சியவாதியை மணந்து கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வேலையை விட்டு விட வேண்டும். இந்த இளமையில் அழகையும், இலட்சியங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு உங்களைப் போல் ஒரு பெண் தனிக்கட்டையாக எந்தக் காரியம் செய்யப் புகுந்தாலும் அங்கே ஏதாவதொரு விதத்தில் பழிகள் தான் காத்துக் கிடக்கும். உங்களுக்குத் திருமணமானால் நீங்கள் மறுமணம் செய்து கொண்டதை எதிர்த்துச் சிறிது காலம் கசுமுசுவென்று பேசிக் கொள்வார்கள். ஆனால் வேறு பழிகள் குறையும் போது நாளடைவில் இந்த மறுமணமும் அங்கீகாரம் பெற்ற நியாயமாக மாறிவிடும். உங்களைக் கைப்பற்றி மணக்க ஆசைப்படும் ஒரு சீர்திருத்தவாதிக்குக் கைகொடுக்கத் தயங்காதீர்கள்’ - என்று கடிதத்தில் வற்புறுத்தி எழுதியிருந்தேன். அவளுடைய புகைப்படத்தை அனுப்பும்படியும் கேட்டிருந்தேன். விவேகானந்த மூர்த்தியின் புகைப்படத்தையும் என் கடிதத்தையும் சுகுணாவுக்கு அனுப்பி வைத்த அன்று இரவில் என் மனைவியிடம் அவள் பதற்றமோ ஆத்திரமோ அடைந்து விடாதபடி பக்குவமாகவும், நிதானமாகவும், என்னுடைய இந்த முயற்சிகளைப் பற்றிக் கூறினேன். அவள் இவற்றை வரவேற்காததுடன் அடியோடு வெறுத்தாள். “உங்களைப் போன்றவர்களுக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது. சீர்திருத்தம் சீர்திருத்தம் என்று சொல்லிப் பேரைக் கொடுத்துக் கொண்டு வீணா பழி சுமக்கத் தான் போகிறீர்கள். கோயம்புத்தூரில் அந்தப் பையனின் தந்தை உங்களைத் திட்டப் போகிறார். அல்லியூரணியில் இந்தப் பெண் சுகுணாவின் வயதான தாய் உங்களைத் தூற்றப் போகிறாள். நடுவில் ஊர் உலகத்து பழிகள் வேறு தெருவில் முகம் காட்ட முடியாதபடி காதில் விழும்” - என்று என் முயற்சிக்கு இரங்கற்பாப் பாடினாள். “இந்த விஷயத்தை உன்னிடம் நான் சொல்லியிருக்கக் கூடாது. தயவு செய்து இதைப் பற்றி நீ ஒன்றும் பேசாதே” என்று அவளை அடக்கி விட்டு எனக்குள் நானே என் ஏற்பாடுகளின் விளைவுகளைச் சிந்திக்கலானேன். இடையூறுகளை எதிர்பார்க்க வேண்டியது தான். ஆனால் நான் பயப்படவில்லை. துணிவோடு கொள்கையில் திடமாக நின்றேன். அதற்கு ஒரு வாரம் வரை சுகுணாவிடமிருந்து என் கடிதங்களுக்குப் பதிலே இல்லை. நான் கோவையிலிருந்து எழுதிய கடிதத்துக்கும் பதில் இல்லை. மதுரை திரும்பி அவளுடைய மறுமணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்துக்கும் பதில் இல்லை. நான் மிகவும் அவசரப்பட்டு விட்டேனோ என்று எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அந்தச் சந்தேகத்துக்குச் சிறிதும் அவசியமில்லை என்பது போல் சரியாகப் பத்தாவது நாள் காலை சுகுணாவிடமிருந்து எனக்குச் சாதகமான பதிலும், புகைப்படமும் வந்து சேர்ந்து விட்டன. கடிதத்தில், “வளையல்காரன் வளையல்களை அணிவிப்பது போல் பொருளும் அழிந்து விடாமல் இடமும் நோகாமல் சீர்திருத்தங்கள் நிதானமாகச் செய்ய வேண்டுமென்று நீங்களே எனக்கு அறிவுரை கூறிவிட்டு என் சொந்த வாழ்க்கையில் நான் அடைய வேண்டிய சீர்திருத்தத்தை மிகவும் வற்புறுத்தி அவசரப் படுத்தியிருக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் ஏற்பாட்டுக்கு நான் இணங்குகிறேன். உண்மையில் என் மனநிலையையும் புரிந்து கொண்டு தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். என்னால் இப்படியே வாழ்ந்து என்னை நானே காத்துக் கொண்டு போக முடியும் என நம்ப முடியவில்லை. சூழ்நிலையையும் சிந்தித்து எனக்கு நல்லதைத்தான் நீங்கள் சொல்லுகிறீர்கள். என் படம் அனுப்பியுள்ளேன். உங்கள் சகோதரி சுகுணா நீங்கள் சுட்டிக் காட்டுகிற வழியில் வாழ்வதற்குக் காத்திருக்கிறாள். நீங்கள் சுதந்திர தின விழாவுக்காக இங்கே வரும் போது என் அம்மாவிடம் விவரமாக எடுத்துக் கூறி சம்மதிக்கச் செய்ய முயலுங்கள். முடிந்தால் நீங்களும், உங்கள் மனைவியும் இங்கு வரும் போது கோவையிலிருந்து அவரையும் வரவழைத்து இங்கே கூட்டி வாருங்கள். இதற்கு மேல் நான் என்ன எழுதுவதென்று எனக்குத் தெரியவில்லை” - என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தாள் அவள். அதைப் படித்ததும் நான் ஒரு காரியம் செய்தேன். அந்தக் கடிதத்தையும் அதனோடு இருந்த அவள் புகைப்படத்தையும் சேர்த்து உடனே விவேகானந்த மூர்த்திக்கு அனுப்பி வைத்தேன். அவள் எனக்கு எழுதிய கடிதத்தையும் படித்தால் அவனுக்கு உற்சாகமாயிருக்கும் என்று தோன்றியதால் தான் நான் அப்படிச் செய்தேன். என் செயல் நல்ல விளைவை அளித்தது. நான்காவது நாளே விவேகானந்த மூர்த்தி கோவையிலிருந்து எனக்கு மிக ஆர்வமாகக் கடிதம் எழுதியிருந்தார். தன்னுடைய சீர்திருத்தத் திருமண நோக்கத்தை எல்லாம் விவரமாக ஒரு கடிதம் போல எழுதித் தந்தையின் மேஜையில் வைத்ததாகவும் அவர் அதை முழுவதும் படித்து விட்டுச் ‘செய்து கொள்’ - என்று இரண்டே வார்த்தையில் சம்மதம் கொடுத்து விட்டதாகவும் எல்லா விவரமும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. ஆகஸ்டு மூன்றாம் தேதியே தானும் மதுரை வந்து விடுவதாகவும் அதன் பின் எல்லாரும் சேர்ந்து சுகுணாவைப் பார்ப்பதற்கு அல்லியூரணி கிராமத்துக்குப் போகலாம் என்றும் அந்த இளைஞர் எழுதியிருந்தார். என் எண்ணங்கள் அநுகூலமான வழியில் பயன் தருவதைக் கண்டு எனக்கு ஆயிரம் யானைப்பலம் வந்து விட்டாற் போலிருந்தது. என் மனைவியைத் திணறச் செய்ய வேண்டுமென்ற ஆசையினால் விவேகானந்த மூர்த்தியின் கடிதத்தை அவளிடம் கொண்டு போய்க் காண்பித்தேன். அவளை அந்தக் கடிதம் திணறச் செய்வதற்கு பதில் அவள் தான் என்னைத் திணறச் செய்தாள். “உங்களுக்கு என்று இப்படி விநோதமான வாசகர்கள் எல்லாம் வந்து வாய்க்கிறார்களே? தங்களையும் கெடுத்துக் கொண்டு உங்களையும் கெடுப்பதற்கென்றே இந்த வாசகர்கள் இதற்கெல்லாம் சம்மதிக்கிறார்கள் போலிருக்கிறது. இதெல்லாம் நல்லபடி முடியும் என்று நான் ஒருகாலும் நம்ப மாட்டேன்” - என்று கொடுமையாகத் துணிந்து பதில் கூறி என் உற்சாகத்தையே தவிடு பொடியாக்கினாள் என் மனைவி. “என் வாசகர்கள் விநோதமானவர்கள் இல்லை! நீதான் விநோதமானவள். உன் நம்பிக்கைகளும் விநோதமானவை. நீ என்னோடு பேசுவதே எனக்குப் பிடிக்கவில்லை. பேச்சை விட்டு விட்டு” என்று அவளைக் கோபித்துக் கொண்டேன் நான். |