9. அழகிய சொற்கள் சொல்லை விட வேகமாக மனத்தில் உணர்ச்சிகள் ஓடும் போது சொல்லும் பொருளும் சக்தியற்றுப் போய் முடங்கி இருந்து விடுகின்றன. கொடி நிறைய தளிர்த்துப் பூத்தப் பசுமையும் வெண்மையுமாய் ஒசிந்து படரும் கார் காலத்து முல்லைக்கொடி எழுந்து நிற்பதைப் போல் அந்த அழகிய இளம் பெண் எழுந்திருந்து நின்று கொண்டு, ‘உங்களுடைய கதாநாயகி வந்திருக்கிறேன்’ - என்று சிரித்துக் கொண்டே கூறிய போது அவளிடம் என்ன பேசுவதென்று நான் என்னுள்ளேயே தீர்மானிக்க முயன்று நினைத்த சொற்களெல்லாம் நினைப்பில் தங்கும் விநாடி நேரத்துக்கு மட்டுமே சக்தியுள்ளவையாகத் தோன்றி அதன் பின் பேச்சாக வருவதற்கு முன்பே சக்தியற்றவையாகப் போய்விட்டன. அந்தப் பெண் எதிரேயிருந்து என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். “உள்ளே வந்து உட்காருங்கள். நான் இதோ வருகிறேன்” - என்று என்னுடைய அலுவலக அறையைக் காண்பித்து விட்டு உட்பக்கம் சென்றேன் நான். உள்ளே சமையலறையில் என் மனைவி முகத்தைத் தூக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கற்பனையில் ஆயிரம் பெண்களைப் பற்றி எழுதலாம். அவர்களுடைய அழகுகளைப் பற்றியும் விதம்விதமாக வருணிக்கலாம். அதை எந்த இலக்கிய ஆசிரியனுடைய மனைவியும் எதிர்க்க மாட்டார்கள். நேரில் அப்படி ஒரு பெண் புறப்பட்டு வந்து ‘நான் தான் உங்களுடைய கதாநாயகி’ - என்று சொல்லிக் கொண்டு நின்றால் என்ன ஆகும்? என்ன ஆக வேண்டுமோ அது ஆகியிருந்தது என் வீட்டில். “யாரோ தேடிக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?” என்று என்னைத் தேடி வந்திருக்கும் அந்தப் பெண்ணின் மேல் எனக்கே அக்கறை இல்லாதது போல நான் என் மனைவியிடம் பேச்சைத் தொடங்கினேன். நான் சாதுரியமாக நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு தொடங்கிய பேச்சுக்கு எதிராளியிடமிருந்து கிடைத்த பதில் என்னுடைய சாதுரியமின்மையையே எனக்குச் சொல்லியது. அவள் பதிலில் தான் அதிகமான சாதுரியம் இருப்பதாக எனக்குப் பட்டது. “என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? உங்களை யார் யாரோ எது எதற்காகவோ தேடிக் கொண்டு வருகிறார்கள். அதையெல்லாம் நான் கவனித்துக் கொண்டிருக்க முடியுமோ?” - என்று என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறவள் மட்டுமில்லாமல் நானே அவளுடைய அக்கறையைப் பெற முடியாதவன் என்று பேசுவது போல் என்னிடம் பதில் சொன்னாள் என் மனைவி. அந்த ஒரு கணத்தில் இந்த உலகத்தில் ஆண் குலமே பேசத் தெரியாமல் ஊமையாகி நிற்பது போல ஒரு தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தேன் நான். எதைப் பற்றிப் பேசினாலும் பெண்களுக்குப் பேச்சிலே திறன் உண்டு. அவர்கள் அழகாக இருப்பதனால் அவர்களுடைய சொற்களுக்கும் அந்த அழகு உண்டாகிறது. அவர்கள் குரல் இனிமையாகவும் மென்மையாகவும் இருப்பதனால் அவர்கள் பேசுகிற சொற்களும் இனிமையையும், மென்மையையும் அடைகின்றன. ஆண்கள் பேசும்போது முரட்டுப் பேச்சாகத் தொனிக்கிற சொற்கள் கூடப் பெண்கள் பேசும்போது அடங்கிய சொற்களாக மாறி விடுகின்றனவோ என்று நினைக்கலானேன் நான்.
அந்தப் பெண்ணுக்குத் தேநீர் கலந்து கொண்டு வரும்படியாக என் மனைவியிடம் கூறிவிட்டு எனது அலுவலக அறைக்குத் திரும்பிச் சென்றேன் நான். அங்கு நாற்காலியில் உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் நான் உள்ளே நுழைவதைக் கண்டதும் மரியாதையாக எழுந்திருந்து நின்றாள். “பரவாயில்லை! உட்காருங்கள்” - என்றேன் நான். அவள் கையிலிருந்தது பட்டுப்பூச்சி குறுநாவல் வெளிவந்த பத்திரிகையின் மலர் என்று தெரிந்தது. அவள் அதன் அச்சிட்ட பகுதிகளில் ஏதேதோ மையினால் அடிக்கோடிட்டுப் பக்கங்களில் குறிப்புக்களும் எழுதி வைத்திருந்தாள்.
“என்ன படிக்கிறீர்கள்?” - என்று நான் கேட்டேன். “உங்கள் கதைதான்! படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் குறித்து வைத்திருக்கிறேன். இதில் வருகிற எல்லாச் சம்பவங்களும் ஏறக்குறைய என்னுடைய வாழ்க்கையை ஒத்திருக்கிறது. அதனால்தான் உங்களைச் சந்தித்தவுடன் பாதி வேடிக்கையாகவும் பாதி உண்மையாகவும், ‘நான் உங்களுடைய கதாநாயகி’ - என்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். எனக்கு உங்கள் மேலும் உங்களுடைய இந்தக் கதையின் மேலும் ஏராளமான சந்தேகங்கள். என்னோடு ‘அல்லியூரணியில்’ கிராம சேவகிகளாக வேலை பார்த்தவர்களில் யாராவது உங்களைச் சந்தித்து உங்களிடம் என் கதையைச் சொல்லியிருப்பார்களோ என்று நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் சுகுணா என்று என் பெயரைக் கூடச் சிறிதும் மாற்றாமல் எழுதுவதற்கு எப்படித் தோன்றியிருக்க முடியும் உங்களுக்கு?” என்று வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவது போன்ற வேகத்தோடு பேசினாள் சுகுணா. இந்த வேகமான பேச்சைக் கேட்ட பிறகு அவளுடைய முகத்தை இன்னும் நன்றாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பினேன் நான். அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு அவளிடமே மீண்டும் கேட்டேன். “நீங்கள் என்னுடைய கதாநாயகி என்று சொல்லிக் கொண்டு என் மேலேயே சீற்றம் அடைகிறீர்கள். எனக்கு எத்தனையோ கதாநாயகிகள் உண்டு. அவர்கள் எல்லோரும் சாதுப் பெண்கள். நான் எழுதிய கதைப் புத்தகங்களிலும், அவற்றைப் படித்த வாசகர் மனங்களிலும் மட்டும் தங்கிக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறார்கள் அந்த கதாநாயகிகள். நீங்கள் மட்டும் தான் படைத்தவனைத் தேடிக் கொண்டு என்னிடமே திரும்ப வந்திருக்கிறீர்கள்.” “அப்படியானால் உங்களுடைய எல்லாக் கதாநாயகிகளையும் விட நான் தைரியசாலி என்பதை நீங்கள் உடனடியாக ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.” “தைரியத்தை எல்லாச் சமயங்களிலும் பாராட்டி விட முடியாது. அதுவும் உங்களைப் போன்ற பெண்கள் தைரியசாலிகளாக இருக்கக் கூடாத சமயங்களும் உண்டு. அந்தச் சமயங்களில் நீங்கள் தைரியமாக நடந்து கொண்டதை ஒரு திறமையாகக் கூறி மற்றவர்களுடைய பாராட்டுகளை எதிர்பார்ப்பதும் தவறு.” “நீங்கள் எழுத்தாளர், இலக்கிய ஆசிரியர், உங்களுக்கு முன்னால் வந்து நான் தைரியமாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, என்னவோ? ஆனால் நான் தைரியமாகப் பேசுவதனால் உங்கள் மேல் என்னுடைய மனத்தில் மதிப்பு வைக்கவில்லை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நவபாரதத்தின் புது யுகப்பெண் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாத கோழையாகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்களே கருதினால் நான் அப்படி இருப்பதற்குச் சம்மதிக்கிறேன்.” “அடடா! எதையோ சொன்னால் எப்படியோ தப்பாகப் புரிந்து கொள்கிறீர்களே? மகாகவி பாரதியிலிருந்து இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளன் வரை யாரும் பெண் கோழையாக இருக்க வேண்டுமென்று சொல்லமாட்டான். ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ - என்று குரல் எழுப்பியவர்கள் நாங்கள். எங்களையே நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்ய முடியும்? ‘பட்டுப்பூச்சி’ நாவலில் வருகிற சுகுணாவைக் கோழை என்றோ, தன்னம்பிக்கை இல்லாதவள் என்றோ எந்த இடத்திலும் நான் குறிப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. அழகும் நல்ல எண்ணங்களும் நிறைந்த பெண் ஒருத்தி சூழ்நிலைகளில் நீந்தி வெளியேறித் தன்னுடைய இலட்சியங்களைப் பதிய வைப்பதற்கு முடியாமல் திரும்பி விட்டாள் என்ற அளவில் தான் இந்தக் குறுநாவலை முடித்திருக்கிறேன். அந்தக் குறுநாவலில் எழுப்பப்பட்ட பிரச்சனை இன்னும் முடியவில்லை. மலரில் அந்தக் கதை முடிந்த மாதிரி அச்சிடப்பட்டிருந்தாலும் அதன் பிரச்னைக்கு இன்னும் முடிவில்லை. ஒவ்வொரு காவிய ஆசிரியனும் நமக்குப் பல தலைமுறைகளுக்கு முன்பே ஒவ்வொரு பிரச்னையை மையமாக வைத்துக் கொண்டு காவியம் எழுதியிருக்கிறான். அதே பிரச்னைகளை வைத்து இன்னும் நாம் கதை, நாவல், எல்லாம் எழுதுகிறோமா, இல்லையா? உலகத்தில் இலக்கியம், கவிதை, காவியம் என்ற பெயர்களில் இந்த விநாடி வரை அழகாகவோ, ஆழமாகவோ, எழுப்பப்பட்டிருக்கிற எந்த ஒரு பிரச்னையும் அடுத்த விநாடி தன்னைப் பற்றி எழவிருக்கும் முடிவையும் எதிர்பார்த்துக் கொண்டே நிற்கிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். என்னுடைய அநுமானம் சரியாயிருக்குமானால் பட்டுப்பூச்சியின் கதாநாயகியைப் போல நீங்களும் பட்டதாரிப் பெண்மணியாகவே இருக்கலாம். நீங்கள் பல்கலைக்கழகப் பட்டதாரியாயிருந்தும் உங்களால் இந்தச் செய்தியைப் புரிந்த கொள்ள முடியவில்லை என்பது வருத்தத்துக்குரியது.” “மன்னிக்க வேண்டும். அபிப்பிராய சுதந்திரத்துக்கு ஆசைப்படுகிறவர்கள் எல்லாரிடமும் நான் ஒரு குறையைக் காணுகிறேன். தங்களுக்கு அபிப்ராய சுதந்திரம் வேண்டுமென்று ஆசைப்படுகிற ஒவ்வொருவரும் இந்த நாட்டில் மற்றவர்களுக்கு அது இருக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அபிப்பிராயங்களை நான் ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய அபிப்பிராயத்தை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று நான் உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால், என் அபிப்பிராயங்களைக் கேட்பதற்காகவாது நீங்கள் பொறுமையுள்ளவராக இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்.” “நல்லது! உங்களுடைய அபிப்பிராயங்களைச் சொல்லுங்கள். மிக்க மகிழ்ச்சியோடு அவற்றை நான் கேட்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறேன். பிறருடைய அபிப்ராயங்களால் தான் நாங்கள் வளர்கிறோம். பிறருடைய அபிப்ராயங்களைக் கண்டெடுக்கிற தங்கக் காசுகள் போல் முயற்சியின்றியே அதிர்ஷ்டத்தினால் கிடைத்த செல்வமாக நாங்கள் நினைக்கிறோம். அவை எங்களுடைய செலவில்லாத இலாபக் கணக்கிலே வரவு வைக்கப்படுகின்றன. பிறருடைய அபிப்பிராயங்கள் எங்களைச் சீர்திருத்தவும் செய்யலாம். உலகத்திலேயே பிறருடைய அபிப்பிராயத்தைத் தெளிவாக எதிர்பார்த்துத் துணிவாகச் செய்கிற படைப்பு ஒன்றுதான். இலக்கியத்துக்கு இரண்டு முனைகள் உண்டு. ஒன்று படைக்கிறவனுடைய ஆத்மதிருப்தி. இரண்டாவது அநுபவிக்கிறவனுடைய அபிப்பிராயம். முதல் முனை ஆரம்பம் தான். இரண்டாவது முனை தான் இலக்கியத்தினுடைய சரியான முடிவு. இரண்டாவது முனையிலிருந்துதான் அந்தப் படைப்பின் இலாப நஷ்டமே தெரிகிறது. என்னுடைய இலாப நஷ்டத்தை அறிந்து கொள்வதற்கு நான் ஆசைப்படாமல் இருப்பேனா? தாராளமாகச் சொல்லுங்கள்” - என்று கூறிக் கொண்டே நான் அந்தப் பெண்களின் அழகிய கண்களை நோக்கினேன். அப்போது அவளுடைய இதழ்களும் கண்களும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தன. “உங்களுக்குக் கோபம் உண்டாக்கி விட்டு விட்டால் அழகாகப் பேச வருகிறது. உங்களிடமிருந்து எதையாவது தெரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் உங்களுக்குக் கோப மூட்டிவிட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது” - என்று அவள் கூறிய போது எனக்குச் சற்றே கூச்சமாக இருந்தது. அவள் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னோடு பேசத் தொடங்கியதிலிருந்து ஒரு விஷயத்தை நான் நன்றாகக் கவனித்துக் கொண்டு வந்தேன். அவளுடைய சொற்கள் முழுமையாக அழகாகக் கனிந்து ஒலித்தன. சிலரைப் போல் சொற்களின் உருவத்தைச் சிதைப்பதோடு அதை ஒலிக்கும் அழகையும் சிதைத்துக் கொண்டு அவள் பேசவில்லை. விதையில்லாத திராட்சைப் பழங்களைப் போல அவளுடைய சொற்கள் கனிந்து சுவை நிறைந்து முழுமை பெற்று அழகுற ஒலித்தன. “நீங்கள் நன்றாகவும் அழகாகவும் பேசுகிறீர்கள்! இதைச் சொல்வதற்குஎ நக்கு அபிப்பிராய சுதந்திரம் உண்டு அல்லவா?” - என்று கேட்டுக் கொண்டே நான் அவளை நோக்கி முறுவல் பூத்த போது முதல் முறையாக அவளிடம் வெட்கத்தைக் கண்டேன். தேநீர்க் கோப்பையுடன் என் மனைவி அறைக்குள் வந்தாள். சுகுணாவுக்கு அவளை அறிமுகம் செய்தேன். சுகுணா எழுந்து நின்று என் மனைவியை வணங்கினாள். “நீயும் உட்கார்ந்து கொள், உங்கள் பெண் இனத்தைப் பற்றிய பிரச்னை ஒன்றிற்கு இப்போது உடனே முடிவு கண்டு பிடித்தாக வேண்டும். நீயும் கூட இருந்தால் என் கட்சிக்குப் பலம் அதிகம்” - என்று நான் என் மனைவியை வேண்டிக் கொண்டேன். அவள் சிரித்துக் கொண்டே போய்விட்டாள். |