3. சுற்றுப் பயணம் சிற்றூர்களுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ்த் தாமரைக் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிராம சேவா தளத்தின் அலுவலகத்தில் ஒரு பகுதியைச் சுகுணாவுக்கு வீடாக ஒழித்துக் கொடுத்திருந்தார்கள். சுற்றிலும் பெரிய தோட்டத்தோடு கூடிய பழைய கட்டிடம் அது. சுகுணாவின் சேவாதளத்தில் அவளுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வேலை செய்ய நான்கு பெண் ஊழியர்களும், இரண்டு இளைஞர்களும், கிராமத்துத் தொண்டர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் சுற்றிப் பார்த்து அலுவல் புரிய வசதியாக சைக்கிள் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் நான்கு கிராமங்களாக வேலை பொறுப்புக்கள் பிரித்து விடப்பட்டிருந்தன. ஆனால் கிராமத் தொண்டர்களாக நியமிக்கப்பட்டிருந்த பெண்களும், ஆண்களும், சைக்கிளில் ஏறி மாந்தோப்புக்கும், தென்னந்தோப்புக்கும் உல்லாசப் பயணம் போவதுபோல் போய் இளநீரும், மாம்பழமும் சாப்பிட்டுவிட்டு ஊர் வம்பு பேசித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களால் உருப்படியாக ஒரு வேலையும் நடைபெறவில்லை. முதியோர் கல்விப் பள்ளிக்கூடமென்று கட்டப்பட்டு இருந்த ஓட்டுக் கட்டிடங்களின் உட்பக்கம் மண் தரையில் எருக்கஞ்செடியும், எமப்பூண்டும் முளைத்திருந்தன. அரசாங்கத்திலிருந்து பண உதவிபெறும் கோழிப் பண்ணைகளில் கசாப்புக் கடைக்கு அனுப்புவதற்கான ஆடுகளை வளர்த்துக் கொண்டு கோழிகள் வளர்ப்பதாக ஏமாற்றி மான்யம் வாங்கிக் கொண்டிருந்தார் வடமலைப் பிள்ளை. இப்படி எத்தனையோ நடந்து கொண்டிருந்தது. தெரிந்தும் நடந்ததும், தெரியாமலும் நடந்தது. தாமரைக்குளம் கிராமத்துக்கு வந்த ஒரு வாரத்துக்குள் நிலவரத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள் சுகுணா. அவள் நினைத்துக் கொண்டு வந்தது போலவோ, பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் அந்தப் பேரறிஞர் கூறியது போலவோ, கிராமத்தில் எவருடைய அகக்கண்களையும் அவ்வளவு விரைவாகத் திறந்து விட முடியாதென்று அவளுக்கு இப்போது நன்றாகத் தெரிந்தது. மற்றவர்களுடைய அகக்கண்கள் திறப்பதற்கு மாறாக அவளுடைய அகக்கண்கள் தாம் முன்பிருந்ததை விட இப்போது இன்னும் நன்றாகத் திறந்து கொண்டன. “இந்த ஊர் நன்றாயிருக்கிறதடீ பெண்ணே! தயிரும், பாலும் வேண்டிய மட்டும் கிடைக்கிறது! காய்கறிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆற்றில் படிகமாகத் தண்ணீர் ஓடுகிறது” - என்று சுகுணாவின் அம்மா தாமரைக்குளத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்டாள். பாலும் தயிரும் கிடைத்தால் போதுமா? நல்ல மனிதர்கள் கிடைக்க வேண்டுமே? கோழிக்கும், ஆட்டுக்கும் பண்ணை வைத்து வளர்ப்பதற்கு முன்பு அங்கு மனிதர்களுக்காக பண்ணை வைத்து வளர்க்க வேண்டும் போலிருந்தது. கிராமத்து மக்கள் ஒரேயடியாக அப்பாவிகளாக இருந்தார்கள். பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் மட்டுமே மனிதர்களை மதிக்கத் தெரிந்து கொண்டிருந்தார்கள். குணத்துக்காகவும் மனிதத் தன்மைக்காகவும் மதிக்கப் பழகிக் கொள்ளவில்லை. சிலவற்றைத் தப்பாகக் கணிப்பதில் அளவுக்கு அதிகமான கூர்மையும் வேறு சிலவற்றை நன்றாகப் புரிந்து கொள்ள முடியாத மந்தமும் உடையவர்களாக இருந்தனர் கிராமத்து மக்கள். தனது அலுவலகத்தில் பணிபுரியும் மணமாகாத கிராம சேவகிகள் ஆண் தொண்டர்களுடன் கும்மாளமிட்டுச் சிரித்துப் பேசுவதும், ஏதோ ஊர்வலம் போவது போல் சைக்கிளில் சேர்ந்து போவதும், பண்புக் குறைவாக நடந்து கொள்வதும் சுகுணாவுக்கு ஆற்றிக் கொள்ள முடியாத வருத்தத்தை அளித்தன. கிராமத்தைச் சீர்திருத்த வந்தவர்கள் கிராமத்தார் கண் முன்பே சீர்கேடாக நடப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் தன்னிடம் பணிபுரியும் நான்கு கிராம சேவகிகளையும் கூப்பிட்டுத் தன்மையாகவும், நயமாகவும், விவரமாகவும் உபதேசம் செய்தாள் அவள். அந்தச் சகோதரிகளும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு தான் அவள் அந்த உபதேசத்தைச் செய்தாள்:
“பெண்ணுக்குத் தன் அழகே பகை. அதுவே நண்பன். பெண்ணின் அழகு கவர்ச்சியினால் மற்றவர்களை அழிக்கும் போது ஆயுதம். அடக்கத்தினால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் போது அதுவே கவசம். ஊருக்கெல்லாம் எளிமையை உபதேசிக்கிற நீங்கள் இப்படி உடல் தெரிகிற மாதிரி வாயில் புடவையும் ஒற்றை மேலாக்குமாக எல்லாரும் காணும்படி அலைந்தால் நன்றாக இருக்கிறதா? எளிமையைக் கற்பிக்க அலைந்தால் நாமே ஆடம்பரத்தைக் கடைப்பிடிக்கலாமா? கிராமத்தை வளர்க்க முடியாவிட்டாலும் கெடுத்து விடாமல் இருக்க வேண்டாமா?” - என்று அவள் இதமான முறையில் சகோதரிகளிடம் பேசுகிறாற் போல் பேசியும் அந்தப் பெண்கள் அதை நல்ல முறையில் எடுத்துக் கொள்ள வில்லை. ‘இவள் யார் நமக்கு அறிவுரை கூறுவதற்கு?’ - என்ற முறையில் அலட்சியம் செய்தார்கள் அவர்கள்.
“உடம்பு தாங்க முடியாமல் படுதாவைக் கட்டிச் சுமப்பது போல் கெட்டிக் கதரைக் கட்டிச் சுமப்பதற்கு எங்கள் உடம்பில் சத்து இல்லையம்மா” - என்று சற்றுத் துணிச்சலான பெண்ணொருத்தி சுகுணாவை எதிர்த்தே பேசிவிட்டாள். அவள் துடுக்குத்தனமாக இப்படிப் பேசியதைக் கேட்டதும் முதலில் சுகுணாவுக்கு ஆத்திரம் பொங்கியது. சுகுணா நினைத்திருந்தால் அப்போதே மேலதிகாரிக்கு எழுதி அந்தப் பெண்ணைச் சீட்டுக் கிழித்து அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவளால் உடனே அப்படிச் செய்து விட முடியவில்லை. கெடுதல் செய்து அன்பை வளர்க்க முடியாதென்பதில் அவளுக்கு எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை. சிரித்த முகத்தோடும், எதையும் பொறுத்துக் கொள்ளும் நிதானமான மனத்தோடும் அவள் எல்லாவற்றையும் சமாளித்தாள். “இவள் வேறு வக்கு இல்லாமல் சாமியாரிச்சி மாதிரிச் சாயம் மங்கின கதர்ப் படுதாவைக் கட்டிக் கொண்டு திரிகிறாள் என்பதற்காக நாமும் அப்படிச் செய்யணுமோ?” என்று கிராமசேவகிகள் தனியே தன்னைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொள்வதும் அவள் காதுக்கு வந்தது. அப்போதும் சுகுணா பொறுமையிழக்கவில்லை. குமாரசம்பவத்தில் பரமசிவனுக்காகப் பரமசிவனையே நினைந்து உயர்ந்தோங்கிய பனிமலைக் கொடுமுடிகளிலே தவம் செய்த பார்வதியைப் போல் அந்த மலையடிவாரத்துக் கிராமத்தில் இலட்சிய தெய்வத்தின் வரத்துக்காகத் தவம் செய்தே தீருவது என்று உறுதியாக இருந்தாள் அவள். ஆரம்பத்திலேயே அவநம்பிக்கை அடைவது நோயை வலுவில் வரவழைத்துக் கொள்வது போல என்றெண்ணினாள் அவள். தாமரைக்குளம் வட்டாரத்தில் தன்னுடைய பிர்க்காவைச் சேர்ந்த எல்லாக் கிராமங்களுக்கும் தானே சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து பார்த்து வரத் தீர்மானம் செய்து கொண்டாள் சுகுணா. மற்றவர்களைத் திருத்த முயன்று கொண்டே தான் தனது கடமைகளில் தவறிவிடவில்லை அவள். நினைவோடும், பொறுப்புடனும் தன் கடமைகளைச் செய்யத் தொடங்கினாள். “இது கிராமாந்தரம். ஒண்டி சண்டியாக நீ மலைக்காட்டு கிராமங்களிலும் மற்ற இடங்களிலும் துணையில்லாமல் தனியே சுற்றக் கூடாது பெண்ணே! பட்டினக்கரையைப் போல என்ன கெடுதல் செய்யலாம் என்று யோசித்து யோசித்து மனத்துக்குள்ளேயே மிகப் பெரிய கெடுதலாகத் தீர்மானித்துக் கொண்டு அப்புறம் கெடுதலைச் செய்கிற அளவு இங்கே மனிதர்கள் உணர்ச்சி மரத்துப் போயிருக்க மாட்டார்கள். ஓர் ஆளைத் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் முன் பின் யோசிக்காமல் அரிவாளைக் கையில் தூக்கி விடுவார்கள். பார்த்து நிதானமாக நடந்து கொள். யாரிடமும் ஆத்திரத்தில் முன் கோபப்படாதே” என்று சாது பெண்ணுக்கு அம்மாவாக வாய்த்த பரமசாது மேலும் அவளுக்கு அறிவுரை கூறியிருந்தாள். நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்ற கடமையுணர்வினால் வேலையேற்றுக் கொண்டு வந்ததும் வராததுமாகத் தன்னுடைய பெண் பலபேரைப் பகைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அம்மாவுக்கும் தெரிந்திருந்தது. தன் பெண் நியாயமாக நடந்து கொள்கிறாளே என்பதில் அவளுக்குப் பெருமை. அதே சமயத்தில் வந்த இடத்திலே பலரைப் பகைத்துக் கொள்கிறாளே என்பதில் கவலையும் இருந்தது அவளுக்கு. தாமரைக்குளத்துக்கு வந்து அப்படி இப்படி என்று மாதம் ஒன்று கழிந்து விட்டது. சுகுணாவுக்கு முதல் மாதச் சம்பளம் வந்த போது, “மூளிக் கைகளோடு இருக்கிறாயே; நாலு பவுனில் கைக்கு ரெண்டு தங்க வளையல்கள் பண்ணிக் கொள்ளேன். என்னிடமும் அப்பளம் வடாம் விற்றுச் சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் கையில் இருக்கிறது. இப்போது அதையும் தருகிறேன்” என்று கெஞ்சினாள் அம்மா. சுகுணாவா கேட்கிறவள்? கண்டிப்பாகத் தனக்கு வேண்டாமென்று மறுத்துச் சொல்லிவிட்டாள். “பெண்களின் நகை ஆசையால் இந்தத் தேசத்தின் பொருளாதாரமே கெட்டுக் கிடக்கிறது அம்மா! மகோன்னதமாக நாகரிகமடைந்த நாடுகளில் கூடப் பெண்கள் இப்படித் தங்கத்தையும் வெள்ளியையும் சுமந்து கொண்டு திரியவில்லை! இதோ பார்! இதுதான் எனக்கு நகை” என்று கூறிவிட்டுத் தன் அன்னைக்கு முன்னால் மலர்ந்த முகத்தோடு அழகாக வாய் நிறையச் சிரித்துக் காண்பித்தாள் சுகுணா. “போடி அசடு” என்று சுகுணாவுக்கு அழகு காட்டினாள் அம்மா. அன்றுமாலை தாமரைக்குளத்தின் சேரிக்குப் போயிருந்தாள் சுகுணா. ஏழை அரிசனக் குழந்தைகள் பிறந்த மேனியாய் மாதக் கணக்கில் குளிக்காமல் புழுதி படிந்த உடம்போடு பன்றிக் குட்டிகள் போல் திரிவதைக் கண்ட போது அவள் நெஞ்சம் கொதித்தது. இந்த நாட்டுக்கு ஒரே ஒரு மகாத்மா மட்டும் போதாது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மகாத்மாக்கள் பிறக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. எல்லா குழந்தைகளையும் ஒன்று சேர்த்துப் பன்னீர் ஆற்றுக்கு அழைத்துப் போய்த் தன் கைகளாலேயே சோப்புத் தேய்த்துக் குளிப்பாட்டி அழைத்துக் கொண்டு போய் சேரியில் விட்டு வந்தாள் அவள். மறுநாள் அதே வேலையைச் செய்யுமாறு தன் கீழ்ப்பணி புரியும் கோமளா என்ற கிராமசேவகிக்குச் சுகுணா உத்தரவிட்டபோது, அவள் முகத்தில் அறைந்தாற் போல் அதைச் செய்வதற்குத் தன்னால் முடியாது என்று மறுத்துச் சொல்லிவிட்டாள். “நீங்கள் வேண்டுமானால் செய்யுங்கள்! எங்களுக்கு மாடு குளிப்பாட்டி பழக்கமில்லை அம்மா!” என்று திமிராகச் சுகுணாவுக்குப் பதில் கூறினாள் கோமளா. இப்போதும் சுகுணா அரிய முயற்சி செய்து தன் மனம் ஆத்திரமடைந்து விடாதபடி பார்த்துக் கோண்டாள். “நான் உன்னை மாடு குளிப்பாட்டச் சொல்லவில்லை கோமளா! குழந்தைகளைத் தான் குளிப்பாட்டச் சொல்கிறேன்.” “அவர்களைக் குளிப்பாட்டுவதும், மாடு குளிப்பாட்டுவதும் ஒன்றுதான்.” “சரி! உனக்குச் சிரமம் வேண்டாம். அந்த மாடுகளை நானே தொடர்ந்து குளிப்பாட்டிக் கொள்கிறேன்” என்று நிதானமாகப் பதில் சொல்லிக் கோமளாவை அனுப்பிவிட்டாள் சுகுணா. கோமளாவும் ஏதோ ஒரு கல்லூரியில் இண்டர் வரை படித்த பெண் தான். ஆனால் படிப்பு அகங்காரத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அகங்காரத்தை வளர்க்கிறதற்கே பயன்படுகிறதென்பதற்கு நிதரிசனமாக இருந்தாள் அவள் அழுக்குப் படாமல் வேலை செய்து பணம் சேர்த்து விட ஆசைப்படுவதைத் தவிரப் படித்தவர்களில் பெரும்பாலோருக்கு இந்தக் காலத்தில் வேறு ஆசை ஒன்றுமில்லை என்பது சுகுணாவுக்குப் புரியலாயிற்று. அது புரிந்த போது நாகரிகயுகத்தின் முதன்மையான துக்கமொன்றைப் புரிந்து கொண்ட வேதனையை அவள் அடைந்தாள். தாமரைக் குளத்திலிருந்து தன்னுடைய பிர்க்காவைச் சேர்ந்த இருபத்து நாலு கிராமங்களையும் சுற்றிப் பார்த்து வருவதற்காக அன்றைக்கு சைக்கிளில் புறப்பட்ட போது அவள் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்வதையே அந்த ஊரில் ஒரு பெரிய அதிசயமாகப் பாவித்துத் தெருவின் இருபுறமும் பார்த்த கண்கள் எத்தனையென்று அளவிட முடியாது. அவ்வளவு அழகான பெண் சைக்கிள் ஏறிப் போவது கூட அங்கே அந்தக் கிராமத்தில் அதிசயம்தான். சுகுணா தனது சைக்கிள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த போது ஊர்ச் சாவடியில் உட்கார்ந்து வம்பு பேசிக் கொண்டிருந்த தாமரைக்குளம் கிராம முன்சீப்பும் கோழிப்பண்ணை வடமலைப்பிள்ளையும் தங்களுக்குள் கீழ்க்கண்டவாறு உரையாடினார்கள். அந்தச் சாவடி என்கிற பொதுமேடையில் பேசப்படுகிற பேச்சுக்கு எல்லா நாளிலும் மாறாத நிரந்தரமான தலைப்பு வம்பு ஒன்று தான். “என்னவோய், பட்டுப் பூச்சி சைக்கிளேறிப் பறக்கத் தொடங்கிவிட்டதே?” என்றார் வடமலைப் பிள்ளை. சுகுணா அப்போது அந்தச் சாவடி அமைந்திருந்த பிரதான வீதி வழியாகச் சைக்கிளில் ஏறிப் போய்க் கொண்டிருந்தாள். “பறக்கும்! பறக்கும்! சிறகு உதிர்கிற வரை பறந்துதானே ஆகணும்” என்று குத்தலாகப் பதில் கூறினார் தாமரைக் குளம் கிராம முன்சீப். “உமக்குத் தெரியுமா? என்னுடைய கோழிப் பண்ணையில் ஊழலும் ஏமாற்றும் நிறைந்திருப்பதால் எனக்குச் சர்க்காரிடமிருந்து வரும் உதவித் தொகை நிறுத்தப்பட வேண்டுமென்று ‘பட்டுப் பூச்சி’ ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறதாம் ஐயா!” என்று வயிற்றெரிச்சலோடு பேசினார் வடமலைப்பிள்ளை. “அதுமட்டுமா? சேரிப்பக்கத்தில் தண்ணீர், விளக்கு வசதி சரியாகச் செய்து தரப்படவில்லை என்று பஞ்சாயத்து போர்டைப் பற்றிக் கூட மேலிடத்துக்கு எழுதியிருக்கிறாளாம் ஐயா!” “சரி தான் பூச்சி பறப்பதோடு கொட்டவும் ஆரம்பித்திருக்கிறது.” “இதை இப்படியே சுதந்திரமாகப் பறக்கவிடக் கூடாது! ஏதாவது செய்யணும்” என்று மீசையை முறுக்கினார் கிராம முன்சீப். |