முடிவுரை கற்பனைக் கதையில் தொடங்கி நிஜவாழ்வில் முடிந்த இத்தனை துயர நிகழ்ச்சிகளுக்கும் அப்பால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தியின் போது கிராம சேவகிகளைப் பயிற்றி அனுப்பும் சமூக நலக்கல்லூரி ஒன்றில் சொற்பொழிவுக்காகப் போயிருந்தேன். சொற்பொழிவு முடிந்ததும் துடுக்கான பெண் ஒருத்தி என்னிடம் மேடையருகே வந்து ஒரு கேள்வி கேட்டாள். “பத்திரிகைக் காரியாலத்துக்கு எழுதிக் கேட்டதில் சமூக சேவகிகளின் தோல்வியைக் கூறும் ‘பட்டுப்பூச்சி’ என்ற கதையைப் புனைபெயரில் எழுதியவர் நீங்கள் தான் என்று தெரிந்தது. எங்களைப் போல் இதற்காக பாடுபடுகிறவர்களுக்கும், தன்னம்பிக்கை பெறுகிறவர்களுக்கும் உங்கள் கதையினால் பயம் உள்ளதே தவிரப் புதிய நம்பிக்கை எதுவும் கிடைக்காதே. மேலும் புதிய தன்னம்பிக்கைகளை அழிக்கும் கதையை எழுதுவதனால் தங்களுக்கு என்ன பயன்?” - அவள் கேள்வியில் குறும்புதான் அதிகம் இருந்தது. அவநம்பிக்கையை விளக்குவதன் மூலம் தன்னம்பிக்கையை பெறுவதுதான் பயன்! ஒரு காரியத்தைத் திறனாய்வு செய்து அதில் அவர்கள் தோற்றார்கள் என்று எடுத்துச் சொன்னால் அதன் மூலம் படிக்கிறவர்களுக்கு அதில் வருகிற திறமையின்மையால் ஏற்பட்ட தோல்வியே எச்சரிக்கும் புதுத் தூண்டுதலாகி வெற்றிக்கான புதிய துணிவுகளை அளிக்கும்! உங்களால் முடியுமானால் நீங்கள் வெற்றிக்கு முயலுங்கள்” - என்றேன் நான். “சுகுணா மறுபடி கிராம சேவகியாகப் பணிபுரிந்து வெற்றிகளைப் பெறுவதாக மாற்றி எழுதுங்களேன்” - என்று மறுபடியும் வெடுக்கென்று கேட்டாள் அந்தப் பெண். நான் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை. ‘உண்மைச் சுகுணாவின் கதையே இப்படி முடிந்து விட்ட போது கற்பனைச் சுகுணாவைப் பற்றி எழுத இன்னும் என்ன இருக்கிறது?’ - என்று எண்ணிக் கொண்டே மேடையிலிருந்து சோர்வுடனே கீழே இறங்கினேன். பட்டுப்பூச்சி கூட்டுக்குள்ளே இருக்கும்வரை அது தன்னைச் சுற்றி மென்மையான இழைகளைப் பின்னிப் பட்டு உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் அது தன்னுடைய பந்தத்தை அறுத்துக் கொண்டு ஒரு முறை வெளியே பறந்து விட்டால் அதைத் திருப்பி கூட்டுக்குள் அடைக்கவே முடியாது.
மெய்தான்! என்னுடைய கதையின் கற்பனைக் கதாநாயகி சுகுணாவோ கிராமத்தை விட்டே பறந்து போய்விட்டாள். நிஜநாயகி சுகுணாவோ வாழ்க்கையை விட்டே பறந்து போய் விட்டாள்.
முற்றும் |