8. கதாநாயகி வந்தாள் 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினெட்டாந் தேதி மாலை நேரம். கோடை வெயிலின் கொடுமை சற்றே தளர்ந்து அந்திக் காற்று வீசத் தொடங்கியிருந்த போது அது வண்ண விதங்கள் படைத்து வான்வெளி மீது உமை கவிதை செய்கின்ற கோலம் மேற்கே பசுமலைக்கும் மேலே தோற்றமளித்துக் கொண்டிருந்தது. எதிரே சாலையில் கார்களும் குதிரை வண்டிகளுமாக திருப்பரங்குன்றத்துக்குப் போகும் கூட்டம் கலகலப்பாயிருந்தது. மதுரையில் பசுமலையில் எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்து பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றும் நெட்டைக்கனவின் நிகழ்ச்சிகளில் மனம் செலுத்தி வீற்றிருந்தேன். வீட்டுக்குப் பின்புறம் இரயில் பாதை. அதில் குறுக்கு வழியாகச் சென்னை எழும்பூர் செல்லும் தூத்துக்குடி விரைவு வண்டி ஓடிய ஓசையில் நெட்டைக் கனவுகள் சில விநாடிகள் கலைந்து மீண்டன. தபால்காரர் வந்து கடிதங்களைக் கொடுத்து விட்டுச் சென்றார். அன்று பிற்பகல் தபாலில் சென்னையிலிருந்து ரீடைரெக்ட் செய்யப்பட்டு மதுரை வந்த நாலைந்து கடிதங்கள் மேசை மேல் கிடந்தன. அந்த வாரம் வெளிவந்திருந்த தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றின் புத்தாண்டு மலரின் பிரசுரமான ‘பட்டுப்பூச்சி’ என்னும் எனது குறுநாவலைப் பற்றிய கடிதங்கள் அவை. அந்தக் குறுநாவலின் முடிவில் நான் எழுதியிருந்த கருத்துக்கள் வாசகர்களின் மனங்களில் வெவ்வேறு விதமாக எதிரொலித்திருந்தன போலும். வாரப் பத்திரிகையின் தேவைக்காக, அந்தத் தருணத்தில் தோன்றிய ஒரு சமூகப் பிரச்சினையைக் கதையாக்கிப் பத்திரிகையின் தேவையினை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்ட காரணத்தால் எழுதிய சிறு நாவல் ஒன்று இத்தனை எதிரொலிகளைப் பிறப்பிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை தான். கற்பனையின் குரலைக் கேட்டு உருகும் உள்ளங்களிலிருந்து உண்மைக் குரல் எழுந்தால் அதே குரல் முதலில் கற்பித்தவன் திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? ‘சீதையை இராவணன் கொண்டு போனான்’ - என்று கதைக் கேட்டுக் கொண்டிருந்த போதே ‘நான் கேட்பது என்றோ நிகழ்ந்த கதை’ - என்பதையும் மறந்து இராவணனை எதிர்த்துப் படை திரட்டுவதற்காகக் குமுறி எழுந்த குலசேகரரைப் போலக் கதையில் வருகிறவர்களுக்கும் தீமை வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத உணர்ச்சி மிக்க வாசகர்கள் எந்தக் காலத்திலும் இருக்க முடியும் என்பதைத்தான் அன்று எனக்கு வந்த கடிதங்கள் நிரூபித்துக் கொண்டிருந்தன. என்னுடைய கதையாகிய பொய்க் கற்பனையிலிருந்து உண்மைகள் பிறந்திருந்தன.
“இந்தக் கதையில் வருகிற சுகுணாவை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் நீங்கள் உயரிய பணி புரிந்திருக்கிறீர்கள். அசட்டு இலட்சியங்களோடு கல்லூரி வாயிற்படிகளுக்குக் கீழே இறங்கி வரும் இளம் பெண்களுக்கு இதன் மூலம் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறீர்கள்.”
என் நோக்கத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாமலே இப்படி எழுதியிருந்தார் ஒரு வாசகர். இலட்சியங்கள் அசட்டுத்தனமானவை என்று விளக்கிவிட நினைத்து நான் சுகுணாவின் கதையை எழுதவில்லை என்பதை அந்த வாசகருக்கு விளக்க வேண்டுமானால் சுகுணாவின் கதையையே மேலும் வளர்க்க வேண்டும். நான் அந்தக் கதையை வளர்க்காமல் அப்படியே விட்டு விட்டாலோ இலட்சியங்கள் அசடுத்தனமானவை என்று நினைக்கிறவர்களுக்கு அதுவே உரமான காரணமாகிவிடும். அந்தக் கதையை பொன்முடி என்ற பெயரில் நான் எழுதியிருந்ததால் அதற்காக வந்திருந்த கடிதங்களும் அந்தப் பெயருக்கே வந்து சேர்ந்திருந்தன. “உங்கள் மலரில் பொன்முடி எழுதியிருந்த பட்டுப்பூச்சி என்று குறுநாவலைக் கிராம மக்களின் தரத்தையும் வாழ்க்கையையும் உயர்த்தி விட்டதாகச் சொல்லிப் பறைசாற்றுகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டும். தற்காலத்தில் கிராமங்களிலே நடைபெறும் அலங்கோலங்களையும் அக்கிரமங்களையும் படம் வரைந்தது போலக் குறுநாவலில் சொல்லியிருக்கிறார்” - என்று எழுதியிருந்தார் வேறொரு வாசகர். மற்றொருவர் இதையெல்லாம் விட ஒருபடி அதிகமாகவே கற்பனை செய்யப் புறப்பட்டுக் குறுநாவலை எழுதிய நானே ஒரு பெண்ணாயிருக்க வேண்டுமென்று தாம் அநுமானம் செய்வதாகத் தம்முடைய கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார். இதோ அவருடைய கடிதம்: “பொன்முடி என்ற பெயரில் பட்டுப்பூச்சி குறுநாவலை எழுதியிருப்பவர் ஒரு பெண்மணியாயிருந்து தாமே தமது சொந்த அநுபவத்திலே ஒரு கிராமத்துக்குப் போய்க் கிராம சேவகியாகச் சிறிது காலம் பணிபுரிந்து பெற்ற அநுபவங்களையே இக் குறுநாவலில் கூறுகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. இலட்சியம் இலட்சியம் என்று பறந்து கொண்டு கிராமத்துக்குப் போய் உழைத்த சுகுணாவுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள். இன்றைக்கு நூற்றிற்கு தொண்ணூற்றொன்பது கிராமங்களில் சுகுணா சந்தித்ததைப் போன்ற வடமலைப் பிள்ளைகளும், பிரமுகர்களும் தான் வாழ்ந்து கொண்டு திரிகின்றனர். அதிகாரத்திற்கு அடங்கித்தான் வாழ வேண்டியிருக்கிறது. நல்லவேளையாக இந்தக் கதையில் வருகிற சுகுணா தன் தூய்மையும் பண்பும் கெட்டு விடாமல் அங்கிருந்து தப்பினாள். ஏராளமான கிராமங்களில் தொண்டு செய்யும் நினைவோடு வருகிற அபலைகளின் தூய்மையே கெடும்படி இந்த ஓநாய்கள் கொடுமை புரிவதும் உண்டு. கடைசியாக ஒரு வார்த்தை. கதையில் வருகிற சுகுணாவுக்கு வரன் கேட்டிருக்கிறார்கள். ஆட்சேபணை இல்லை என்றால் நானே அவளை மணந்து கொள்ளத் தயார்” - என்று ஆசிரியருக்கு எழுதியிருந்தார் அவர். “நாவலின் அடிப்படைக் கருத்து இந்த நாட்டில் இனி வளர வேண்டிய ஒரு புதிய தலைமுறையின் சிந்தனையை வளர்க்கும் இயல்பினதாக வந்திருக்கிறது. இந்தக் கருத்து நாட்டு மக்களின் அகக் கண்களைத் திறக்கும். சமுதாயத்தில் உள்ள குறைகளை இந்த நாவலின் மூலம் விளக்கியுள்ள விதம் போற்றத்தக்கது” என்பதும் ஒரு கடிதத்தின் கருத்து. “இந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் 1953-54ம் ஆண்டுகளில் நான் என்னுடைய சொந்த அநுபவத்தில் அடைந்தபடியே ஒத்து வருகின்றன. சமூக சேவையில் மெய்யான ஆசை கொண்ட பெண்கள் இப்படிப்பட்ட அநுபவங்களை அடைந்த பின் ஆசையையே இழந்து விடுகின்றனர்” - என்ரு சொந்த அனுபவத்தை எழுதியிருந்தார் தமிழறிந்த மலையாளத்து நேயர் ஒருவர். “பாரத நாட்டுக் கிராமங்கள் கரிமூடிய தங்கச் சுரங்கங்கள் என்றும் நீங்கள் கதையில் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. அந்தக் கரி கிராமத்துப் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் பதுங்கிக் கிராம அலுவல்களைத் தங்களுக்குச் சாதகமாக நடத்திக் கொண்டு போகிற சுயநலவாதிகள் தாம் அத்தகையவர்கள் செய்யும் கொடுமைகளே இவை என எண்ணுகிறேன். இவர்களுடைய ஊழலை அம்பலப்படுத்தி உண்மை ஊழியர்கள் அவ்விடத்திற்கு வந்தால் தான் மென்மையும் தூய்மையும் கொண்ட கிராம மக்களின் மனம் என்கிற தங்கத்தை எடுத்து நமக்கு வேண்டிய முறையில் அணிகலன்களாகச் செய்து நாட்டிற்கு அளிக்கலாம்! இதோ நான் தங்களுடைய சுகுணாவை மீண்டும் தாமரைக்குளத்துக்கு அனுப்புவதற்கு முயல்கிறேன். அங்கு அவளுக்காகக் காத்துக் கிடக்கும் அலுவல்கள் ஏராளம்.” - என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருந்தார் ஒரு நேயர். இந்தக் கடிதங்களை எல்லாம் படித்து முடித்த போது அந்தக் குறுநாவலைப் பற்றி மேலும் பல புதிய சிந்தனைகள் என்னுடைய மனத்தில் கிளைத்து எழுந்தன. குறிப்பிட்ட கதை எந்த மலரில் வெளியானதோ அந்தக் காரியாலத்திலிருந்து எல்லாக் கடிதங்களையும் எனக்கு ரீடைரெக்ட் செய்திருந்தார்கள். முதல் வாசகர் எழுதியிருந்ததைப் போல் இலட்சியங்கள் அசட்டுத்தனமானவை என்று விலக்கி விடுவதற்காகவோ, கல்லூரிப் படிகளிலிருந்து படிப்பை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் பெண்கள், வாழ்க்கையின் நடைமுறைத் தொல்லைகளைப் புரிந்து கொள்ளாமல் தவறாக எடைபோட்டு வம்புகளில் போய் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள் என்று சொல்வதற்காகவோ இந்தக் குறுநாவலை நான் எழுதவில்லை. இன்று நிலவும் இந்த நாட்டு வாழ்க்கைச் சூழ்நிலையில் கிராம மக்கள் இப்படி இப்படி இருக்கிறார்கள் என்பதை உள்ளபடி படம் பிடித்துக் காட்டவே இதைச் செய்தேன். இப்போது இந்தக் கடிதங்களை எல்லாம் பார்க்கும் போது என்னுடைய பொறுப்பு அதிகமாயிருப்பதாக எனக்குத் தோன்றியது. சுகுணாவின் கதையை மேலும் வளர்த்து எழுதி நிறைவு செய்யாமல் அரைகுறையாக நானே விட்டு விடுகிற பட்சத்தில் அதைப் படித்தவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நினைத்துக் கொண்டு அந்தக் கதையைப் பற்றிச் சுயமாக எண்ணுவதற்கு இடமிருக்கிறது. ‘நாளைக் காலையிலிருந்து என்னுடைய கதாநாயகி கலகலப்பு நிறைந்த பட்டினப்பூச்சியாகி விடுகிறாள். அவள் எங்கிருந்தாலும் அவளுடைய அழகு பட்டுப்பூச்சியாகவே இருக்கவேண்டுமென்பது என்னுடைய ஆசை. தாமரைக்குளம் கிராமத்தில் அவளுக்கு ஏற்பட்ட அபவாதங்கள் நீங்கி நல்ல இடத்தில் என் ஆசை, உங்களால் முடிந்தால் நல்லதாக ஒரு வரன் பாருங்களேன்’- என்று கதையின் முடிவில் நான் எழுதியிருந்த புதிரை நானே விடுவித்து விட வேண்டும். அவளுக்கு ஏற்பட்டதாக நான் எழுதியிருக்கும் அபவாதங்களையும் நானே போக்கிவிட வேண்டும் என்று எனக்குப் புது ஆர்வம் பிறந்தது. கடிதங்களை எடுத்து வைத்துவிட்டு வழக்கம் போல மாலையில் உலாவி வரப் புறப்பட்டேன். வீட்டுக்குப் பின்புறம் நீண்டு செல்லும் இருப்புப்பாதை ஓரமாக நடந்து திருப்பரங்குன்றம் வரை காற்றின் சுகத்தையும், மேற்கு மலைகளுக்குக் கதிரவன் மறைவினால் பிறக்கும் அழகிய செம்மை நிறத்தையும் அனுபவைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். காலையிலும், மாலையிலும், இந்தப் பாதையோரமாக வயல் வெளிகளையோ அவற்றின் நுனி முடிகிற இடத்தில் தொடு வானத்தையோ அல்லது ஏதாவது ஒரு கண்மாய்க் கரையையோ, பார்த்தபடி நடந்து போகும் போதுதான் நான் நிறையச் சிந்திப்பேன். இதைத்தான் சிந்திக்க வேண்டும் என்று எல்லை போட்டுக் கொள்ளாமல் சிந்திப்பேன். சுதந்திரமான சிந்தையாகவும் இருக்கும் அது. ஆனால், இன்று மாலை என்னுடைய எல்லாச் சிந்தனைகளுக்கும் தானாகவே ஓர் எல்லை ஏற்பட்டிருந்தது. அது அன்று நான் உலாவப் புறப்படுவதற்கு முன்னால் எனக்குக் கிடைத்த கடிதங்களைப் பற்றிய சிந்தனையாக இருந்தது. பட்டுப்பூச்சி குறுநாவலின் கதாநாயகி சுகுணாவைப் பற்றிய சிந்தனையாக இருந்தது. அந்தச் சிந்தனைகளோடு உலாவி விட்டு நான் வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டில் எனக்காக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. இருபது இருபத்தைந்து வயதுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ, மதிக்க முடியாத அழகிய பெண் ஒருத்தி சூட்கேசும் கையுமாக என் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து வணங்கினாள். அவள் முகம் மலர்ந்திருந்தது. நான் கேட்டேன்: “நீங்கள்... யாரென்று சொல்லலாமோ!” “வேறு யாருமில்லை! உங்களுடைய கதாநாயகி” - அவள் சிரித்துக் கொண்டே மறுமொழி கூறிய போது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. சில விநாடிகள் வியப்பு வெள்ளத்தில் மூழ்கி ஒன்றும் பேச வராமல் திணறிப் போனேன். |