2. தாமரைக் குளம் இலட்சியம், சமூகத் தொண்டு, சீர்த்திருத்தம், இந்த மாதிரி வார்த்தைகளை யாராவது பேச ஆரம்பித்துவிட்டாலே அம்மாவுக்குப் பயம் தான். இப்படிப் பேசிப்பேசித்தான் அவர் அல்பாயுசாய்ப் போயிருந்தார் என்பது அவளது ஆற்றாமை. இப்போது பெண்ணும் இதே வார்த்தைகளைப் பேசத் தொடங்கவே அவள் மனம் அஞ்சத் தொடங்கியது. எப்படியெப்படி ஆகுமோ என்று அம்மா பயந்தாள். “என்னவோ உனக்குத் தெரியாததில்லையம்மா! இவ்வளவு படித்த பெண்ணுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்? இப்போதைக்கு ஒரு வேலை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் தான். என்றைக்கும் அப்படியே வேலையும் நீயுமாகவே இருந்து விட முடியாது. நீ ஒரு பெண்! ஊர் உலகத்துக்கு ஒத்தாற்போல் உனக்கும் அதது ஆக வேண்டிய வயதில் அதது ஆக வேண்டும்.” அம்மா கூறியதைக் கேட்டுச் சுகுணா சிரித்தாள். “எனக்கு ஆட்சேபணையே இல்லையம்மா! பி.ஏ. படித்திருக்கிறேன் என்பதற்காக எல்லாச் செலவும் தானே போட்டுக் கலியாணம் பண்ணி என்னை அழைத்துக் கொண்டு போகிற நல்ல மாப்பிள்ளை யாராவது உனக்கு கிடைப்பானா? என் கலியாணத்துக்காகச் செலவழிக்க நீ என்ன சேர்த்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறாய்? உன்னிடம் டின் நிறைய அப்பளமும், வடாமும் தான் இருக்கிறது. உன் கவலை எனக்குத் தெரியாதா அம்மா? எல்லாம் தானே நடக்கும்! இன்னும் என்னைப் பச்சைக் குழந்தையாகவே நினைத்துக் கொண்டு பேசாதே” என்று பெண் கூச்சமில்லாமல் தெளிவாகப் பதிலுக்குத் தன்னைக் கேட்ட போது அம்மா அயர்ந்து போனாள். சுகுணா கேட்டது நியாயம்தான் என்பது அம்மாவுக்கும் புரிந்தது. கையில் கால் காசு இல்லாமல் கலியாணத்தைப் பற்றிப் பேசினால் சிரிக்க மாட்டார்களா? ‘என்ன இருந்தாலும் என் பெண் புத்திசாலிதான். இனிமேல் நான் சொல்கிறபடி அவள் கேட்பதை விட, அவள் சொல்கிறபடி கேட்டுக் கொண்டு நான் பேசாமல் இருந்து விடுவதுதான் நல்லது’ - என்று மனத்துக்குள் தீர்மானம் செய்து கொண்டாள் அம்மா. ஒரு மாதக் காலம் அலைந்து திரிந்து செத்துப் போன அப்பா வாழ்ந்த காலத்தில் செய்திருந்த தேசத் தொண்டுகளையும், தியாகங்களையும், நினைவுப்படுத்தி ‘அந்த அப்பாவுக்குப் பெண் தான் நான்’ என்பதையும் எடுத்துக் கூறித் தேசீய வளர்ச்சித் திட்டத்தில் தனக்கு ஒரு வேலை பெற்றாள் சுகுணா.
‘தாமரைக் குளம்’ - என்ற கிராமத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்காகச் சர்க்கார் அமைத்திருந்த தேசீய வளர்ச்சி பிர்க்காவுக்குத் தலைவியாக அவளை நியமனம் செய்திருந்தார்கள். அப்பப்பா! அந்த நியமனம் கிடைப்பதற்கே அவள் மந்திரி வரை பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அவளுடைய எடுப்பான தோற்றத்தையும் பி.ஏ. முதல் வகுப்புத் தேர்ச்சியையும் கண்டு, “உனக்கு எதற்கம்மா இந்த முரட்டு வேலையெல்லாம்? இதில் அலைச்சல் அதிகமாயிருக்குமே. பிர்க்காவைச் சேர்ந்த கிராமங்களுக்கு எல்லாம் சைக்கிளில் போய்ச் சுற்றிப் பார்க்க வேண்டும்! கோழிப் பண்ணையிலிருந்து, முதியோர் கல்வி வரை அலைந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் உன்னால் முடியுமா?” என்று மந்திரி புன்முறுவலோடு அவளைக் கேட்ட போது,
“இந்த வேலைக்கு நான் தகுதி இல்லை என்கிறீர்களா? இந்த வேலை எனக்குத் தகுதி இல்லை என்கிறீர்களா? பிழைப்புக்காக நான் இதைக் கேட்கவில்லை. பிழைப்புடன் எனக்குச் சமூக சேவையில் ஆர்வமும் இருக்கிறது. அதனால் தான் கேட்கிறேன். ‘சமூக சேவையில் சிறிதுமே ஆர்வமில்லாதவர்கள் தான் இந்த வேலைக்குச் சரியானவர்கள்’ என்று நீங்கள் ஆர்வமில்லாமையையே தகுதியாக நினைப்பதாயிருந்தால் இது எனக்கு வேண்டாம்” - என்று சிரித்துக் கொண்டே வெடிப்பாகப் பதில் சொன்னாள். இதைக் கேட்டு மந்திரிக்குக் கோபம் வரவில்லை. அவர் சிரித்துவிட்டார். சுகுணாவுக்கு அப்படி ஒரு தனித்தன்மை. அவள் யாரிடம் எடுத்தெறிந்து பேசினாலும் பதிலுக்கு அவர்கள் அவளை எடுத்தெறிந்து பேச மாட்டார்கள். அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அப்படிப் பேசவும் முடியாது. சிரித்துக் கொண்டே கேட்பார்கள். அவளுடைய தோற்றத்தின் கவர்ச்சியைக் கண்ட பின்பு எந்தக் கிராதகனாலும் அவளோடு இரைந்து பேசவோ, சினந்து பேசவோ முடியாது. கவர்ச்சியா, குளுமையா, அழகா அதை எந்த வார்த்தையால் சொன்னாலும் அது அவளுக்கு வாய்த்திருந்தது. “வேலை கிடைத்து விட்டது! தாமரைக்குளம் என்ற ஊரில் போட்டிருக்கிறார்கள். நாம் புறப்பட வேண்டும்” - என்று சுகுணா வந்து சொன்னவுடன் அம்மா மறு பேச்சுப் பேசாமல் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டாள். “எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு! அப்பளம் போட்டிருக்கிற வீட்டிலெல்லாம் பாக்கி வசூல் பண்ணிக் கொண்டு இனிமேல் வேறு யாரிடமாவது வாங்கிக் கொள்ளச் சொல்லி விவரம் கூறிவிட்டு வந்து விடுகிறேன்” என்றாள் அம்மா. இருபது வருஷப் பழக்கத்தையும், பழகியவர்களையும் பிரிவதென்றால் இலேசா? ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாள் சுகுணா. “உன் சுபாவத்திற்கு இந்த வேலை ஒத்துவருமடீ சுகுணா. நீதான் கல்லூரிக்கே கதர்ச் சேலை கட்டிக் கொண்டு வருவாயே” - என்று பாராட்டிய தோழிகள் சிலர். “எதற்காக இந்த வம்பில் போய் மாட்டிக் கொள்கிறாய்? அழகான பட்டணத்தை விட்டுப் பட்டிக்காட்டுக்கு, ஓ - என்ன குருக்ஷேத்திரமோ? நீ எப்போதுமே இப்படித்தான். ஏதாவது அசட்டுத் தனமாகச் செய்து வைப்பாய்” - என்று அவளை ஏளனம் செய்த தோழிகள் சிலர். “இந்த பட்டினமும் இதில் இருக்கிற நீங்களும் அழகாயிருப்பதாக நீங்களே தான் சொல்லிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் துணிந்து அதைச் சொல்ல மாட்டார்கள்” - என்று அவர்கள் முகத்திலறைந்தாற் போல் பதில் சொல்லிவிட்டு வந்தாள் சுகுணா. அவளுக்கு எப்போதும் இப்படி ஏற்ற சந்தர்ப்பங்களில் அழகும் ஆற்றலுமுள்ள நல்ல வாக்கியங்களைப் பதிலாகப் பேச வரும். “பெண்ணுக்கு வேலையாகியிருக்கிறது. வேறு ஊருக்குப் போகிறோம்” - என்று தன் வாடிக்கை வீடுகளில் எல்லாம் சொல்லி விடைபெற்றுக் கொண்டிருந்தாள் அம்மா. தாமரைக் குளத்தில் இரயில்வே ஸ்டேஷன் உண்டு. ஆனால் அந்த ஸ்டேஷனுக்கு எக்ஸ்பிரஸ் வண்டிகள் நிற்கிற கௌரவம் மட்டும் கிடையாது. எல்லார் கையிலும் இரண்டிரண்டாக விழுகிற பஜனை மடத்துச் சுண்டல் போல எல்லா ஸ்டேஷன்களிலும் நிற்கிற சாதாரண வண்டிகளே தாமரைக் குளத்திலும் நிற்கும். ஒவ்வொரு நாளும் சாயங்காலம் அந்தி மயங்குகிற சந்தி வேளையில் தாமரைக்குளம் ஸ்டேஷன் பாஸ்ட் பாஸஞ்சர் வண்டி வந்து நிற்கிற போது ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட நாலு பேர் நிச்சயமாய் அங்கு நிற்பார்கள். யார் வந்தாலும் வராவிட்டாலும் தாமரைக் குளம் நியூஸ் ஏஜெண்டு றாமலிங்க மூக்கனார் கண்டிப்பாக வந்திருபபர். என்னடா ‘றாமலிங்க’ என்று எழுதியிருக்கிறதே எனத் திகைக்கிறீர்களா? ஒரு சமயம் எவனோ தமிழ் உணர்ச்சியுள்ள பத்திரிகைக்காரன் பார்சலில் ‘இராமலிங்க மூப்பனார்’ - என்று கை தவறிப் பேரைச் சரியாக எழுதிவிட்டு அவரிடம் பட்டபாடு ஊரெல்லாம் பிரசித்தம். நியூஸ் ஏஜெண்டுக்கு வருகிற எல்லாப் பத்திரிகைப் பார்சல்களும் அந்த மாலை இரயிலில் தான் வரும். அவரையும், ஸ்டேஷன் மாஸ்டரையும் தவிர, ஒரு பாயிண்ட்ஸ் மேன், இரயிலில் வருகிறவர்களுக்குத் தாகசாந்தி செய்து அனுப்பவும் ஒரு ‘வாட்டர்மேன்’ - ஆக மொத்தம் நாலு பேர் தான் தாமரைக் குளம் ஸ்டேஷன். அல்லது நாலுபேருக்காக என்றும் வைத்துக் கொள்ளலாம். தாமரைக்குளம் ஸ்டேஷனுக்கு ரயில் வந்து கொண்டிருக்கிற இரகசியம் இந்த நாலு பேருக்கும் ஒருவிதமாகத் தெரியும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ஆனால், அன்று மாலையென்னவோ தாமரைக் குளம் ஸ்டேஷன் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான கலகலப்போடு இருந்தது. ஸ்டேஷனுக்கு வெளியே இரட்டைமாடு பூட்டிய வில் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. இரயிலை எதிர்பார்த்து வழக்கமான நாலு பேரைத் தவிரப் பஞ்சாயத்து போர்டுத் தலைவர், கிராம முன்சீப், கோழிப்பண்ணை வடமலைப் பிள்ளை, கதர்க்கடை ராஜலிங்கம் ஆகியவர்களும் வந்து நின்று கொண்டிருந்தார்கள். அன்று பௌர்ணமியாதலால் கிழக்கே பூர்ணசந்திரன் பேருருவாக எழுந்து கொண்டிருந்தான். நிலாவின் கீழே ஸ்டேஷனும், ஊரும் மிக அழகாகத் தோன்றின. தென்னை, மாமரத் தோப்புகளும் சுற்றிச் சுற்றி ஓடும் பன்னீர் ஆற்றின் அழகும் சந்திரோதயத்தில் குளித்து மோகன மெருகு ஏறி எழில் மயமாய்த் தோன்றின. பன்னீர் மாதிரியிருக்கும் தண்ணீரையுடையதாக இருந்ததனாலோ என்னவோ அந்த ஊர் ஆற்றுக்கு இப்படிப் பெயர் தொன்று தொட்டு ஏற்பட்டிருந்தது. அடக்கமாகவும் அழகாகவும் அமைந்திருக்கிற ஊரை ஒட்டினாற் போல மேற்குத் தொடர்ச்சி மலை, மலைச்சரிவில் பழத் தோட்டங்கள், கொடி முந்திரி, மாதுளை, மா, கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி எல்லாம் அந்த மண்ணுக்கு மிக நன்றாக வளரும். நீலமலைத் தொடரும் பசுமையான தோட்டங்களும் ஊரும், ஏதோ பாற்கடலில் முழுகி எழுந்தாற் போலப் பூர்ண சந்திர ஒளியில் அற்புதமாக காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த அழகிய நேரத்தில் தான் சுகுணாவும், அவள் அம்மாவும் மூட்டை முடிச்சுக்களோடு தாமரைக் குளம் ஸ்டேஷனில் இறங்கினார்கள். இறங்கி நின்று சுற்றிலும் பார்த்த முதற் பார்வையிலேயே சுகுணாவுக்கு அந்த ஊர் பிடித்துவிட்டது. சுகுணாதேவி பி.ஏ. என்ற பெயரைப் பார்த்து விட்டு யாரோ ஐம்பது வயது அம்மா கிராம சேவாதளத்துக்குத் தலைவியாய் வரப் போகிறாளென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பஞ்சாயத்து போர்டுத் தலைவரும், பிறரும் வெள்ளைக் கதருடையில் இரயிலிலிருந்து மின்னல் இறங்கி வந்து நிற்பது போல் எதிரே வந்து நின்று கைகூப்பிய சுகுணாவைப் பார்த்து ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள். என்ன அழகு! என்ன அழகு! இந்தப் பெண்ணின் பாதங்கள் நடந்தால் தாமரைக் குளமே இன்னும் அழகாகி விடுமே என்று தான் எண்ணுவதற்குத் தோன்றியது அவர்களுக்கு. “சரியான பட்டுப்பூச்சி ஐயா” - என்று முன்சீப்பின் காதில் மெல்ல முணுமுணுத்தார் கோழிப் பண்ணை வடமலைப் பிள்ளை. கையோடு கொண்டு வந்திருந்த ரோஜாப்பூ மாலையைச் சுகுணாவின் அம்மாவின் கையிலேயே கொடுத்துச் சுகுணாவுக்குப் போடச் சொன்னார் பஞ்சாயத்து போர்டுத் தலைவர். பெண்ணுக்கு மாலை போடும்போது அவளைப் பெற்ற அம்மாவுக்கு மனம் பூரித்தது. உடன் வந்திருந்தவர்களையும் தம்மையும் அறிமுகம் செய்து கொண்டார் பஞ்சாயத்துத் தலைவர். அவர்களுக்குத் தன் தாயை அறிமுகம் செய்து வைத்தாள் சுகுணா. சாமான்களை வில் வண்டியில் ஏற்றியதும், “நீங்கள் இருவரும் இதில் ஏறிக் கொள்ளுங்கள் அம்மா! நாங்கள் பின்னாலேயே நடந்து வந்துவிடுகிறோம்” - என்று பணிந்த குரலில் வேண்டிக் கொண்டார் கிராம முன்சீப். “ஏன்? எல்லாருமே சேர்ந்து நடந்து போகலாமே” என்றாள் சுகுணா. “உங்களுக்கு அதிகமாக நடந்து பழக்கமிருக்காது. நாங்களெல்லாம் தினசரி கிராமத்தில் நடந்து நடந்து பழகி விட்டோம். அதனால் எங்களுக்கு இது சிரமமாக தோன்றாது.” “இந்தச் சிரமங்களைப் பழகிக் கொள்ளத்தான் நான் வந்து இருக்கிறேன்” - என்று சொன்னாள் சுகுணா. அவர்கள் மேலும் விடாமல் வற்புறுத்தியதன் பேரில் அம்மாவை மட்டும் வண்டியில் ஏறிப் போகச் சொல்லிவிட்டுத் தான் அவர்களோடு நடந்தாள் சுகுணா. தனியாக நடந்து போனால் அந்த நாலு ஆண் பிள்ளைகளும் சிரித்துப் பேசிக் கொண்டு போவார்கள். அவள் உடன் வந்ததனால் அளவாகச் சுருக்கமாய் மட்டும் தங்களுக்குள் அவர்கள் பேசிக் கொண்டார்கள். அநாவசியமாகச் சிரிக்கவில்லை. சில பெண்களுக்கு அப்படி ஒரு சக்தி. தாங்கள் உடன் வருவதனால் தங்களோடு சேர்ந்து வருகிற மற்றவர்களையும் கௌரவமாக நடந்து கொள்ளச் செய்யும் புனித நிலை சிலருக்கு உண்டு. சுகுணாவுக்கும் அத்தகைய பண்பு வாய்ந்த அழகு அமைந்திருந்தது. அரசகுமாரியைச் சூழ வரும் ஊழியர்களைப் போல் அடக்க ஒடுக்கமாகச் சுகுணாவோடு நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். |