17. விவேகானந்த மூர்த்தியின் அன்பு பொதுக்கூட்டம் முடிந்து நான் மேடையிலிருந்து கீழே இறங்கியதும் ‘ஆட்டோகிராபில்’ கையெழுத்து வாங்குவதற்காக ஒரு கூட்டம் சூழ்ந்தது. அந்தக் கூட்டத்தைத் திருப்தி செய்து அனுப்பிவிட்டு நான் நிமிர்ந்த போது, “என் பெயர் விவேகானந்த மூர்த்தி! நான் இந்த ஊர்க் கலைக் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ‘குறிஞ்சி மலரி’ல் எனக்கு நிறைந்த ஈடுபாடு உண்டு. நான் இப்போது என்னுடைய ஆட்டோகிராபில் கையெழுத்து வாங்குவதற்காக மட்டும் வரவில்லை. எனக்கு உங்களோடு சிறிது நேரம் பேச வேண்டும்” - என்று சொல்லிக் கொண்டே ஆட்டோகிராபை நீட்டினார் அந்த இளைஞர். என்னுடைய முதற் பார்வையிலேயே சுறுசுறுப்பும் ஆர்வமும் நிறைந்தவராகத் தோன்றினார் அந்த இளைஞர்; சின்னஞ்சிறு கையெழுத்து நோட்டுப் புத்தகத்தில் நான் கையெழுத்துப் போடவேண்டுமென்று அவர் காண்பித்த இடத்துக்கு மேலே ஏதோ எழுதியிருக்கவே அதில் எழுதியிருப்பது என்ன என்று தெரிந்து கொண்டு அப்புறம் கையெழுத்துப் போடக் கருதினேன். ‘குறிஞ்சி மலரைப் படித்த கைமலர்’ - என்று எழுதியிருந்ததைப் படித்ததும் அந்த மிகைப்படுத்திய புகழ்ச்சிக்கு நாணி மெல்லச் சிரித்துக் கொண்டே கையெழுத்திட்டேன் நான். “நீங்கள் பேச வேண்டியதையும் இங்கேயே பேசலாமே?” - என்றேன். அதற்கு அந்த இளைஞன் இணங்கவில்லை. “இல்லை! தனியாகப் பேச வேண்டும். நிறையவும் பேச வேண்டும்.” “அப்படியானால் என்னோடு நான் தங்கியிருக்கும் ஓட்டல் அறைக்கு வாருங்கள். வேண்டிய மட்டும் பேசலாம். நாளை இரவு இரயிலுக்குத் தான் மறுபடியும் நான் மதுரை திரும்ப எண்ணியிருக்கிறேன்.” அந்த இளைஞர் என்னோடு நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வரச் சம்மதித்துப் புறப்பட்டார். கூட்டத்துக்கு ஒழுங்கு செய்து என்னைக் கோவைக்கு அழைத்திருந்தவர்கள் எனக்கு ஏற்பாடு செய்திருந்த காரில் நானும் அந்த மாணவரும் ஓட்டலுக்குச் சென்றோம். அறையைத் திறந்து மின்விசிறியைச் சுழலச் செய்த பின் அந்த மாணவரை உட்காரச் சொல்லிவிட்டு நானும் உட்கார்ந்து கொண்டேன். “உங்களுடைய ‘குறிஞ்சி மலர்’ நாவலின் முடிவில் அரவிந்தன் இறந்து விட்டதாகவும் பூரணி தன்னை அவனுடைய விதவையாகத் தனக்குத் தானே பாவித்துக் கொண்டு திலகவதியாரைப் போன்று வாழ்வதாகவும் எழுதியிருக்கிறீர்கள். இந்த முடிவில் ஆழ்ந்த சோகத்தின் தொனி கேட்கிறது. இந்த முடிவில் உள்ள உயர்தரமான காவிய அழகை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஆனால் உங்கள் முடிவைச் சிறிது மாற்றி வைத்து நான் ஒரு கேள்வி கேட்க என்னை நீங்கள் அனுமதிப்பீர்களா?” “தாராளமாக அனுமதிப்பேன். உங்களுடைய கேள்வியில் நியாயமும் ஆக்கப்பூர்வமான நோக்கமும் இருந்தால் எனக்கு மறுப்பில்லை.” “பூரணி இறந்து போனதாகக் கதையை முடித்திருந்தீர்களானால் அரவிந்தன் திருமணம் செய்து கொள்ளாமலே சமூக சேவை செய்வதாக எழுதியிருப்பீர்களோ, அல்லது வேறு விதமாக எழுதியிருப்பீர்களோ? என்னுடைய கேள்வி போகாத ஊருக்கு வழியைக் கேட்கிற கேள்வியாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது. நான் இப்படிக் கேட்பதன் உள்ளர்த்தத்தை உங்களிடம் தெளிவாகவே சொல்லி விடுகிறேன். காதலுக்கும் தூய்மையான அன்புக்கும் ஒரு பெண்ணின் மனம் எவ்வளவு மரியாதையும் பக்தியும் செலுத்திப் பிடிவாதமாக இருக்க முடியுமோ அவ்வளவு பிடிவாதமாக ஆண்பிள்ளையால் இருக்க முடியுமோ? இந்த உலகத்தில் அன்புக்காகப் பிடிவாதமாயிருக்கிறவர்கள் பெண்கள் மட்டும் தான் என்று நான் நம்புகிறேன். வாழ்க்கையின் வேகமயமான போட்டிகளினாலும், வயிற்றுக் கவலையினாலும் ஆண் பிள்ளைகள் நாளாக நாளாக அன்பு செலுத்துவதற்குக் கூட இயலாத சோம்பேறிகளாய்ப் போய்விடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. பெண்ணின் மனத்தை முழுமையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஆட்டுவது போலக் காதல் என்ற இங்கிதமான உணர்வு ஆண்பிள்ளையைப் பற்றிக் கொண்டு ஆட்ட முடியுமா?”
“உங்களுடைய இந்தக் கேள்வியையே நீங்கள் வந்து என்னிடம் கேட்பதற்குப் பதில் ஒரு பெண் பிள்ளை வந்து கேட்டிருந்தால் நான் இன்னும் கோபத்துடன் பதில் சொல்லியிருக்க முடியும் மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி! ‘லைலா’வுக்காகக் காதல் பிடிவாதம் பிடித்து அலைந்து ‘மஜ்னுவாகிய கயஸ்’, சோழன் மகளுக்காக அன்புப் பிடிவாதம் செய்த அம்பிகாபதி, இவர்களையெல்லாம் நினைவிருக்கிறதா உங்களுக்கு?”
“நன்றாக நினைவிருக்கிறது! ஆனால் நீங்கள் சொல்கிற இந்தக் கதைகள் எல்லாம் சினிமாவுக்கும், பழைய புத்தகங்களில் பெரிய எழுத்திலே அச்சிடுவதற்கும் பயன்பட்டுச் செத்துப் போன தலைமுறையைச் சேர்ந்த விவகாரங்கள். நான் உங்களிடம் கேட்பது இந்த நூற்றாண்டின் வாழ்வுக்குரிய ஆண் பெண்களைப் பற்றித்தான்.” “அந்தக் கதைகள் செத்துப்போன தலைமுறைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். ஆனால் அவற்றில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் சாகாதவை என்பதை நீங்கள் மறுக்க முடியாது. உலகத்தில் எந்த தலைமுறை விஷயமும் அந்தத் தலைமுறையோடு அழிவதில்லை.” “இருக்கலாம். ஆனால் நான் கேட்பது உங்கள் கதையைப் பற்றித் தான். பூரணியின் சாவுக்குப் பின் உங்கள் அரவிந்தன் உயிரோடிருந்தால் நீங்கள் அவனைப் பூரணிக்குக் கணவனாக முன்பே மனத்தில் மட்டும் வாழ்ந்து விட்டதாக முடித்திருப்பீர்களா, அல்லது வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு புதிதாக வாழச் செய்திருப்பீர்களா?” “ஒருவிதமாகப் படைத்து முடித்து நிறைந்து நிற்கிற கதையை இன்னொரு விதமாக மாற்றிக் கற்பித்துக் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது?” “உங்களுக்கு வருத்தமாக இருந்தால் என்னுடைய கேள்வியை உங்கள் கதையைப் பொறுத்த பிரச்னையாக மட்டும் வைத்துக் கொள்ளாமல் ஒரு பொதுப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு எனக்குப் பதில் சொல்லுங்கள்.” “பொதுப் பிரச்னையாக மாற்றி வைத்துக் கொண்டு பார்த்தாலும் இதற்கு நல்ல பதில் ஒன்றும் என்னிடம் இல்லை. மனைவியை குழந்தை பெறுகிற எந்திரமாகவும், பெறாத காலங்களில் வீட்டுக்காரியங்களையும் சமையல் வேலைகளையும் மொத்தமாகக் கவனித்துக் கொள்ளும் வேலைக்காரியாகவும் கருதுகிற கணவன்மார்கள் அப்படிப்பட்ட மனைவி இறந்து விட்டால் வேலைக்காரியாகவும், முதலில் சொன்ன காரியத்தைச் செய்வதற்கான எந்திரமாகவும் இன்னொரு பெண்ணைத் தேடிப் பிடித்து வாழ்க்கைத் தொழுவில் பூட்டுவதற்கு அடையாளமாகத் தாலியையும் கட்டி மனைவியாக்கிக் கொண்டு விடுவார்கள்.” “ஒரு பெண்ணைப் பற்றி நான் என்னுடைய மனத்தில் நினைத்து, ‘இவளைத் தான் திருமணம் செய்து கொள்வது’ - என்று உறுதிப் படுத்திக் கொண்ட பின் அவள் இறந்து போய் விட்டாலோ, வேறொருவனுக்கு மனைவியாகி விட்டாலோ - அப்புறம் இன்னொரு பெண்ணுக்கு நான் கணவனாவதில்லை என்ற வைராக்கியத்துடன் ஆண் பிள்ளையாக இருந்தே பெண்ணுக்காகக் கைம்மை நோன்பு நோற்பது போலாகி நான் வாழ முடியுமோ என்பதைத் தான் உங்களிடம் இப்போது கேட்கிறேன். பெண் ஒருத்தியால் அப்படி வாழ முடியும் என்பதை உங்களுடைய ‘குறிஞ்சி மலர்’ சொல்கிறது! ஆண் பிள்ளையால் முடியுமா என்று நான் இப்போது உங்களை வினாவுகிறேன். நிலைமை இதுதான்! இதைத் தெளிவு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு” - என்றார் அந்த மாணவ இளைஞர். “நீங்கள் யாரையாவது காதலித்து அவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதோ விவேகானந்த மூர்த்தி” - என்று நான் அந்த இளைஞரை நோக்கி சிரித்துக் கொண்டே, சிறிது குறும்பும் கலந்து கேட்டேன். “அப்படி எல்லாம் என் மேல் ஒரு பழியும் போடாதீர்கள் சார்! என் சிந்தனையில் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையைச் சேர்ந்ததாக உறுத்திக் கொண்டிருந்த கேள்வி இது. உங்களுடைய ‘குறிஞ்சி மல’ரைப் படித்த நாளிலிருந்து இந்தக் கேள்வி என் மனத்தில் வந்து பதிந்து விட்டது. தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலோடு மட்டும் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேனே தவிரச் சொந்தமாக இதைப் போன்ற எந்த அனுபவமும் எனக்குக் கிடையாது.” புத்திக் கூர்மை மிக்க விவேகானந்த மூர்த்தியின் இந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்லி விடாமல் சிறிது தயங்கினேன் நான். ‘ஒரு நல்ல பெண் வைராக்கியமான உள்ளத்தோடு அப்படி வாழ முடியும் என்று ‘குறிஞ்சி மல’ரில் நிரூபித்தாயிற்று. ஓர் ஆண் வாழ முடியுமா என்று சிந்திப்பதற்கு இன்னொரு நாவலை நான் எழுதுவதா? அல்லது வெறும் சிந்தனையாக மட்டும் இதை நிறுத்திக் கொண்டு விடுவதா?’ - என்று எனக்குள் எண்ணியபடியே மௌனமாக இருந்தேன். “என் கேள்விக்கு இப்போது நீங்கள் உடனடியாகப் பதில் சொல்லாவிட்டால் எப்போதாவது இதை நடு மையமான பிரச்னையாக வைத்து நீங்கள் ஒரு கதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ எழுத வேண்டும் என்பது என் விருப்பம்” - என்று விவேகானந்த மூர்த்தி மீண்டும் குறுக்கிட்டுச் சொல்லவே அந்தக் கேள்விக்கு அப்போதே பதில் சொல்லும்படி நான் வற்புறுத்தப் படவில்லை என்று புரிந்து கொண்டேன்; ஆனாலும் ஏதாவதொரு பதில் சொல்ல வேண்டும் என்று எனக்கே விருப்பமாக இருந்தது. ஆகவே நான் பதில் சொன்னேன். “மனைவிக்காக கைம்மை நோன்பு நோக்கும் இளம் பருவத்துக் கணவன் ஒருவன் என் பார்வையில் தென்படுவானாயின் ‘கற்பு நிலை என்றால் அதை இரு கட்சிக்கும் பொதுவாய் வைப்போம்’ - என்று புதுமைக் கவி பாரதி பாடிய இலட்சியம் மெய்யாகிவிட்டது என்பதை இன்று நான் புரிந்து கொள்வேன். புதுமையான கற்புக்கு வழிவகுக்கும் அந்த இலட்சியவாதியை வணங்கவும் செய்வேன்.” “உண்மை வாழ்வில் காண முடிகிறதோ இல்லையோ, நீங்கள் எழுதப் போகிற இலட்சிய நாவல்களில் ஏதாவது ஒன்றிலாவது இப்படிப்பட்ட புதிய கற்புக்கு முன்மாதிரியாகிய ஆண் மகன் ஒருவனைப் படைத்துக் காட்டுங்கள் சார்” - என்று எனக்கு வேண்டுகோள் விடுத்தார் அந்த இளைஞர். “மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி! நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஆனால் புதிய விதமான இலட்சியக் கதாபாத்திரங்களை உருவாக்குவதனால் நடைமுறையில் எவ்வளவோ தொல்லைகள் ஏற்படுகின்றன. கதையில் அந்தக் கதாபாத்திரங்களும் தொல்லைப் படுகிறார்கள். அவர்களை உருவாக்கி அளித்த கதாசிரியனையும் சேர்த்துத் தொல்லைப் படுத்துகிறார்கள். இந்த வருடம் பட்டுப்பூச்சி என்ற பெயரில் ஒரு குறுநாவல் எழுதி இருந்தேன் அல்லவா? அதில் வருகிற இலட்சியக் கதாபாத்திரமாகிய சுகுணாவுக்கு ஏற்பட்டதைப் போல் அல்லியூரணி என்ற கிராமத்தில் சமூக சேவகியாக உண்மையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கும் சுகுணா என்னும் அதே பெயரை உடைய வேறு ஒரு பெண்ணுக்குத் துன்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கதையில் வருகிற சுகுணாவை விட இந்த உண்மைச் சுகுணா பரிதாபமானவள். இவள் பால்ய விதவை. சமூக சேவகியாக வேலைக்கு வருவதற்கு முன் பயிற்சி பெற்ற பி.டி. ஆசிரியையாகப் பள்ளிக்கூடத்தில் வாத்தியாரம்மா வேலையும் பார்த்திருக்கிறாள் இவள். என்னுடைய கதையான பட்டுப்பூச்சி வெளிவந்ததோ இல்லையோ, அந்தக் கதையால் இவளுடைய வாழ்வில் அனுதாபங்கள் அதிகமாகி யிருக்கின்றனவாம். மதுரைக்குப் புறப்பட்டு என் வீடு தேடி வந்து என்னிடம் வருத்தப்பட்டு விட்டுப் போனாள். நேற்று மாலை இங்கே கோவைக்குப் புறப்பட்டு வருவதற்கு முன்னால் கூட இவளிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதற்கும் இங்கிருந்து இன்று பகலில் தான் மறுமொழி எழுதினேன். பட்டுப்பூச்சி என்கிற கதையை எழுதியதனால் இப்படி விளைவுகள் ஏற்பட்டிருப்பதை அறிந்த பின் எனக்கு நிம்மதியே இல்லை. இந்தச் சமயம் பார்த்து நீங்கள் பிரச்னைக்கு உரிய மற்றொரு கதையை எழுதச் சொல்கிறீர்களே?” - என்று விவேகானந்த மூர்த்தியிடம் கேள்வி கேட்டேன் நான். “சார்! நீங்கள் இவ்வளவும் மனம் திறந்து சொல்லிய பின் நானும் உங்களிடம் மனம் விட்டுப் பேசலாம் என்றே நினைக்கிறேன். பட்டுப்பூச்சி என்ற கதையை நானும் படித்தேன். அதை எழுதியவர் நீங்கள் என்பது இன்று தான் எனக்குத் தெரிகிறது. அந்தக் கதையின் முடிவில் உங்கள் கதாநாயகிக்கு மணம் செய்து வைப்பதற்காக நீங்களே வரன் கேட்டிருந்தீர்களே; அதைப் படித்து விட்டு அந்தக் கதையை எழுதியவருக்கு உடனே கடிதம் எழுதத் தவித்தவர்களில் நானும் ஒருவன். உங்கள் கதைகளில் வருகிற சில அழகிய பெண்கள் இளம் வாசக வாலிபர்களை எல்லாம் தங்களைக் காதலிக்கும்படி செய்து கொண்டு விடுகிறார்கள். உங்களுடைய மலைச்சிகரத்தில் வருகிற நளினி, கோபுர தீபத்தில் வருகிற சுசீலா போன்ற பெண்களைப் பற்றிப் படிக்கும் போது பதினெட்டில் இருந்து முப்பது வயதுக்குள் உள்ள எந்த இளைஞனும் அவர்களை மனைவியாக்கிக் கொள்ளும் நினைப்பைக் குறைந்த பட்சம் ஒரே ஒரு முறையாவது நினைக்காமல் தப்பி விட முடியாது. உங்கள் பட்டுப்பூச்சியின் கதாநாயகியை மணந்து கொள்ள ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை இப்போது உங்களிடம் சொல்வதற்கு அதிகமாக வெட்கப்பட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை” - என்று விவேகானந்த மூர்த்தி கூறிய போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு ஓர் அளவே இல்லை. அந்த ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு மிகவும் தந்திரமாக அவரிடம் வேறு ஒரு கேள்வி கேட்டேன். “இப்போது நீங்கள் கூறியதைப் போலவே ஆசைப்பட்டு எனக்கும் சில கடிதங்கள் வந்தன. இந்தக் கடிதம் எழுதியவர்கள் எல்லாம் கற்பனைச் சுகுணாவின் மேல் காதல் கொண்டிருக்கிறார்கள். அல்லியூரணியிலிருக்கும் உண்மைச் சுகுணாவை மணக்குமாறு இவர்களை நான் வேண்டினால் என்ன பதில் சொல்வார்களோ?” |