19. இப்படி நினைத்தோம் 1942-ம் ஆண்டிலேயே சீர்திருத்த மாநாட்டின் வரவேற்புக் குழுவுக்குக் காரியதரிசியாக இருந்தவனை 1961-ல் முட்டாளாக்கி விடுவதற்கு முயல்கிற மனைவியைப் பார்த்துக் கோபப்படாமல் வேறு என்ன செய்வது? பத்துப் பன்னிரண்டு நாட்கள் மனைவியோடு பேசுவதையே நான் நிறுத்தியிருந்தேன். சொந்த வீட்டிலேயே நம்முடைய சிந்தனைகளின் முற்போக்கு எதிர்ப்பை வைத்துக் கொண்டு உலகத்துக்குச் சிந்திக்க விஷயங்கள் தருவது துர்ப்பாக்கியமான நிலைதான். அதைப் பற்றிக் கூட அப்போது நான் சிறிதும் கவலைப்படவில்லை. என் முயற்சிகளில் நான் மிகவும் ஊக்கமாயிருந்தேன். அந்தப் புதுமையான மறுமலர்ச்சித் திருமணத்தை எப்படியும் நடத்தியே தீருவதென்ற உறுதியில் இரண்டு மாதக் காலமாக எனது வேறு வேலைகள் கூடத் தடைபட்டு நின்றன. இதற்கு நடுவே ஜூலையில் தொழிற்சங்கக் காரியமாக மறுபடி கோவைக்குப் போக நேர்ந்தது. அப்போதும் விவேகானந்த மூர்த்தியைச் சந்தித்தேன். அவர் தன் தந்தையைக் காண்பதற்கு என்னை அழைத்துக் கொண்டு சென்றார். அந்த இளைஞருடைய தந்தை என்னை விடத் தீவிரமான முற்போக்குவாதியாக இருந்தார் என்பது அவரோடு பேசிய போதுதான் எனக்குத் தெரிந்தது. “இதைச் செய்யுங்கள்! நன்றாக நடக்கட்டும். எங்கள் காலத்தில் இளமையில் இப்படி நினைப்பதே பாவமென்று வெறுக்கப்பட்டது. நான் கல்லூரி ஆசிரியனாகிய பின் புதிய துணிவுகள் நாட்டிலும் வந்த காலத்தில் இத்தகைய முயற்சிகள் சிலவற்றுக்கு நானே தலைமை தாங்கியிருக்கிறேன். நன்றி. என் மகன் சிறந்த சீர்திருத்தவாதியாக வரவேண்டுமென்று எனக்கு ஆசை. என் ஆசையால் வளராத அவனுடைய மனம் உங்கள் எழுத்தால் வளர்ந்திருப்பதை நான் காண்கிறேன். அவனை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். விருப்பம் போல வழி நடத்துங்கள்” - என்று ஆசி கூறிவிட்டார், அந்தக் கிழவர். இந்த வயதில் அவருடைய வேகத்தைப் பார்த்தால் இளமையில் கலப்பு மணத்தினாலோ, சீர்திருத்த மணத்தினாலோ, அவரும் தம் வாழ்விலேயே வேதனைப்பட்டு இருப்பார் போலத் தோன்றியது எனக்கு. அதை அவரிடமே தூண்டிக் கேட்காவிட்டாலும் நான் என் மனத்தில் நினைத்துக் கொண்டேன். ஆகஸ்டு பதின்மூன்றாந்தேதி காலையே மதுரைக்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று விவேகானந்த மூர்த்தியிடம் கூறிவிட்டு நான் ஊர் திரும்பினேன். பரீட்சைகள் முடிந்ததும் சித்திரையில் சுகுணா விவேகானந்த மூர்த்தி திருமணம் என்பது உறுதியான திட்டமாக்கப்பட்டு விட்டது.
“உன்னுடைய வருங்காலக் கணவனோடு ஆகஸ்டு 15-ந் தேதி அதிகாலையில் அல்லியூரணிக்கு வந்து சேருகிற முதல் பஸ்ஸில் நான் வந்து விடுவேன். இங்கே என் மனைவி திடீரென்று கோபித்துக் கொண்டு விட்டதால் அவள் என் உடன் வருவது சந்தேகம். நானும் விவேகானந்த மூர்த்தியும் கட்டாயம் வருகிறோம்” - என்று சுகுணாவுக்கும் தபால் எழுதி விட்டேன். அந்தப் பெண்ணின் மேல் எனக்கு இருந்த உரிமை அதிகமாக அதிகமாக ‘நீங்கள்’ ‘உங்களை’ என்பன போன்ற மரியாதைகளை எல்லாம் குறைத்து, ‘நீ’, ‘உன்னை’ என்று மாற்றிக் கொண்டேன். மரியாதையை அதிகமாகச் செலுத்திவிட்டுக் குறைவான பாசத்தைச் செலுத்துவதை விடத் தேவையற்ற மரியாதையை குறைத்துவிட்டுத் தேவையான ஆதரவுகளையும் பாசத்தையும் அதிகமாக அளிப்பது எவ்வளவோ சிறந்ததென்று தோன்றியது எனக்கு. அதையே செயலாக்கியிருந்தேன். அவ்வளவுதான்.
“கண்டிப்பாகச் சுதந்திர தினத்தன்று வந்து விடுங்கள். பருப்பு வடை பாயாசத்தோடு பண்டிகைச் சாப்பாடு போலத் தேசீயப் பண்டிகையான சுதந்திர தின விருந்து உங்களுக்கு இங்கே காத்திருக்கும்” - என்று சுகுணாவிடமிருந்தும் எங்கள் வரவை அமோகமாக அங்கீகரித்துப் பதில் கடிதம் வந்து விட்டது. அல்லியூரணிக்குப் போனால் அங்கே சுகுணாவோடு இருக்கும் அவளுடைய கர்நாடகமான அம்மாவிடம் இந்த விஷயங்களை எப்படி எப்படி எடுத்துச் சொல்லி வழிக்குக் கொணரலாம் என்பதைப் பற்றியும் நான் சிந்திக்கத் தொடங்கினேன். என் மனைவியும் என்னோடு ஒத்த கருத்து கொண்டவளாக இருந்து அல்லியூரணிக்கு உடன் வந்து சுகுணாவின் தாயை மனம் மாற்றி அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டால் என் வேலை எவ்வளவோ சுலபமாயிருக்கும். pஎண்களைச் சீர்திருத்தி மனம் மாற்றப் பெண்களின் பேச்சு முறையே மிகவும் சரியானது. அதை ஆண்கள் ‘இமிடேட்’ செய்வது கடினமான செயல்தான்? செய்து தான் பார்க்கலாமே? ஆனால் பெண்கள் செய்வதைப் போலக் கலை நுணுக்கம்பட அதை நான் செய்ய முடியாது. வேறு வழியும் இல்லை. என் மனைவி இதில் என்னோடு வந்து நிச்சயமாக ஒத்துழைக்க மாட்டாள் என்று எனக்குத் தெரிந்து விட்டது. இனிமேல் நான் அவளை எதிர்பார்ப்பதில் பயன் இல்லை. நானே முயன்று பேசித்தான் சுகுணாவின் தாயை மனம் மாறும்படி செய்ய வேண்டும் என்று எண்ணும்படி பொறுப்பு முழுவதும் என் தலையில் விழுந்து விட்டது. பதின்மூன்றாந் தேதி காலையே கோயம்புத்தூரிலிருந்து விவேகானந்த மூர்த்தி மதுரை வந்து சேர்ந்துவிட்டார். நான் அவருடைய முன் கடிதப்படி அவரை இரயில் நிலையத்தில் போய் அழைத்துக் கொண்டு வந்திருந்தேன். உஷ்ணமானியில் உச்சநிலைக்கு வந்திருக்கும் டெம்ப்ரேசரைப் போல என் மனைவி அப்போது என் மேல் தாங்கிக் கொள்ள முடியாத கோபத்தைக் கொண்டிருந்தாள். பதினான்காம் தேதி முழுவதும் நான் கோயம்புத்தூர் இளைஞருக்கு மதுரையைச் சுற்றிக் காண்பித்தேன். பதினைந்தாம் தேதி காலை நாலரை மணிக்கு அல்லியூரணி செல்லும் முதல் பஸ்ஸில் இரண்டு டிக்கெட்டுக்கும் சொல்லி வைத்தாயிற்று. பதினாலாந்தேதி இரவு பன்னிரண்டு மணிக்கு என் மனைவி என்னை எழுப்பித் ‘தந்தி வந்திருக்கிறது’ - என்று எதையோ நீட்டினாள். தூக்கக் கலக்கத்தில் ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் தடுமாறிய பின் நான் அவள் கொடுத்த தந்தியைப் பிரித்துப் படித்தேன். அந்தத் தந்தியை நான் படிக்கும் போது மறுநாள் பயணத்துக்காக என்னோடு வந்து தங்கியிருந்த இளைஞர் விவேகானந்த மூர்த்தி என் அறைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தார். தந்தியின் வாசகம் என்னைத் திகைக்க வைத்ததோடு அமையாமல் கோபப்படவும் வைத்தது. அல்லியூரணியில் மாலை ஏழு மணிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்தத் தந்தியில், ‘நாளைக்கு நீங்கள் இங்கே வரவேண்டாம். அப்புறம் என்றைக்குமே வர வேண்டிய அவசியமில்லை.’ - சுகுணா. என்று பொருள்படும்படியான தந்திக்குரிய ஆங்கில வாசகம் அமைந்திருந்ததைக் கண்டதும் எனக்கு ஏற்பட்ட கோபத்துக்கு எல்லையே இல்லை. ‘என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தப் பெண்? இவள் நினைத்தபடி எல்லாம் என்னை ஆட்டி வைக்கலாம் என்று பார்த்தாளா?’ ‘சமூகத்தின் மனத்துக்கும் எண்ணங்களுக்கும் வருகிற நோய்களை நீங்கள் தான் போக்க வேண்டும். நான் ஏமாறிவிடாமலும் தவறி விடாமலும் வாழ நீங்கள் என்ன மருந்து சொல்கிறீர்களோ அதை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையாகிய நோய்க்கு நிலையான நிம்மதியளிக்க சமூகத்தின் டாக்டராகிய நீங்கள் மருந்து சொல்லித்தான் ஆக வேண்டும்’ - என்று முதல் முதலாக இவள் என்னைச் சந்தித்த போது சொன்ன வார்த்தைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டாளா?’ ‘எண்ணங்களிலும், துன்பங்களிலும் நெருக்குண்டு பல முறை மாறி மாறி நினைப்பிலேயே தற்கொலை செய்து கொண்டு செத்துப் போயிருக்கிறேன் நான். இனியும் அப்படிச் சாக நேராமல் நான் வாழ்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள்’ - என்று இவள் என்னிடம் மன்றாடிக் கதறியது எல்லாம் இப்போது என்ன ஆயிற்று? ‘பெண் புத்தி பின் புத்தி’ - என்று பழமொழி சொல்லியவன் முன் புத்தியோடு தான் சொல்லியிருக்க வேண்டும். ‘நான் ஏன் வேலையற்றுப் போய் இவளுக்காக அங்கும் இங்கும் அலைந்து நல்ல கணவனின் கைகளில் இவளை ஒப்படைக்கப் பாடுபட்டேன்?’ - என்று என் மேலேயே கோபமாயிருந்தது எனக்கு. தந்தி அல்லியூரணியிலிருந்து வந்திருக்கிறது என்று தெரிந்ததுமே அதில் இருக்கும் சேதி என்ன என்று கூடத் தெரிந்து கொள்ளவும் ஆவல் காண்பிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்ப் படுத்து விட்டாள் என் மனைவி. எனக்குத் தூக்கம் வரவில்லை. என் எழுத்தறைக்குப் போய் மேஜை விளக்கைப் போட்டுக் கொண்டு சுகுணாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். கோபத்தோடு எழுதியதனால் கடிதம் காரசாரமாக வந்திருந்தது. ‘உன் தந்திக்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. உடனே புறப்பட்டு வா. அல்லத் விவரமாக பதில் எழுது. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக ஆகிவிட்டது. இங்கே நேற்று காலையிலேயே என் வீட்டில் வந்து தங்கியிருக்கும் விவேகானந்த மூர்த்திக்கு நான் இப்போது என்ன பதில் சொல்வது?’ என்று என் கடிதத்தின் கடைசி வாக்கியங்கள் அமைந்திருந்தன. அடக்க முடியாத பெரிய ஆத்திரத்தோடு தொடங்கிச் சுகுணாவுக்கு எழுதிய கடிதத்தை முடித்து உறையிலிட்டுத் தபாலில் போடுவதற்குத் தயாராக வைத்தபோது விடியற்காலம் மூன்றரை மணி ஆகியிருந்தது. ‘அல்லியூரணி பஸ் புறப்படும் நேரத்துக்கு ஒரு மணி முன்னதாகவே விழித்து எழுந்திருக்க வேண்டும்’ - என்று கருதி நான் முதல் நாள் இரவு வைத்திருந்த கடிகாரத்தின் அலாரமணி ஒலிக்கத் தொடங்கியது. அலாரத்தின் மணியொலியைக் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த விவேகானந்த மூர்த்தி எழுந்திருந்தார். “பஸ்ஸுக்குப் புறப்பட நேரமாகிவிட்டது போலிருக்கிறதே. நாம் போகலாமா?” - என்று அவர் என்னை கேட்ட போது நான் ‘இன்று பயணம் இல்லை’ - என்று மட்டும் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுச் சிறிது நேரம் கழித்து அவருக்கு சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, “மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி! சுகுணாவுக்கு ஏதோ அசௌகரியம் போலிருக்கிறது. ‘இன்றைக்கு வர வேண்டாம்’ என்று அவள் நேற்றிரவு தந்தி கொடுத்திருக்கிறாள். தந்தி மிகவும் தாமதமாகி வந்தது” - என்றும் கூறினேன். அந்த இளைஞர் நான் கூறியதைக் கேட்டுவிட்டுப் பதறாமல் அமைதியாக என் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார். “அதற்கென்ன? இன்னும் ஒரு வாரம் மதுரையில் உங்களோடு தங்கியிருக்கிறேன். அதற்குள் அல்லியூரணியிலிருந்து கடிதம் வந்தால் அதற்கு ஏற்ப நம்முடைய பயணத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம்” - என்று விவேகானந்த மூர்த்தி புன்னகையோடு என்னிடம் கூறினார். விடிந்ததும் முதல் வேலையாக அந்தக் கடிதத்தைச் சுகுணாவுக்குத் தபாலில் அனுப்பின பின்பே என் ஆத்திரம் தணிந்தது. நான் அல்லியூரணிக்குப் போகவில்லை என்று தெரிந்ததுமே என் மனைவிக்கு நிம்மதி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அவள் முகத்திலிருந்தே எனக்குத் தெரிந்தது. சுகுணாவின் தந்தியால் முதல் நாள் இரவு நல்ல உறக்கத்தைப் பாதியில் இழந்திருந்தேன். மறுநாள் காலை என் உடல்நலம் கெட்டிருந்தது. ஆனால் நான் அதை விவேகானந்த மூர்த்தியிடம் சொல்லவில்லை. “நீங்கள் அழகர் கோவிலுக்குப் போய்ச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டீர்களே விவேகானந்த மூர்த்தி? இன்று காலையில் தல்லாகுளத்திலிருந்து என் நண்பர் ஒருவரைக் காரோடு வரவழைக்கிறேன். அவர் உங்களை அழைத்துக் கொண்டு போய் எல்லாம் சுற்றிக் காண்பிப்பார். நீங்கள் மாலையில் திரும்பி வருவதற்குள் நான் என்னுடைய எழுத்து வேலையைக் கொஞ்சம் கவனிக்கிறேன்” - என்று வேண்டுகோள் விடுத்தேன். அவர் என்னுடைய மனக்குறிப்பைப் புரிந்து கொண்டவராக அதற்கு இணங்கினார். உடனே மதுரை நகரத்துச் செல்வர் சீமான்களின் ஐசுவரியபுரக் கோட்டையாகிய தல்லாக்குளத்துக்கு டெலிபோன் செய்து என் நண்பர் மணியைக் காரோடு பசுமலைக்கு வரவழைத்தேன். மணி விவேகானந்த மூர்த்தியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காண்பிக்கப் புறப்பட்டார். அயர்ச்சி தாங்க முடியாமல் நான் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டே தூங்கிப் போனேன். அப்புறம் எனக்குச் சுயநினைவே இல்லை. தூக்கம் கலையப் பெற்று மறுபடி நான் கண் விழித்த போது, “வாசலில் தபால்காரன் வந்து நிற்கிறான். ஏதோ பார்சல் வந்திருக்கிறதாம் உங்கள் பேருக்கு. போய்க் கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்று ‘யாருக்கு வந்த இழவோ’ என்பது போல் அசிரத்தையாக வந்து என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள் என் மனைவி. அந்தப் பாழாய்ப் போன பார்சலில் இழவுதான் வந்திருந்தது. எவ்வளவு பெரிய இடி அது? அன்று எனக்கு நல்ல பொழுதாக விடியவில்லை. எனக்கு மட்டுமென்ன? உலகத்துக்கே நல்ல பொழுதாக விடியவில்லை போலிருக்கிறது. படிப்பும், சிந்தனையும், அநுபவங்களும் என்னை மரத்துப் போகும்படி செய்திராவிட்டால் அப்போது நான் கோவென்று கதறி அழுதிருப்பேன். ஆனால் அழுகை வரவில்லை. என்னென்னவோ எண்ணிக் குமுறினேன். கொதித்தேன். இப்படிப்பட்ட சமுதாயக் கொடுமையிலிருந்து அபலைகளுக்கும், அநாதை மனிதர்களுக்கும் நிஜமான சுதந்திரம் கிடைக்கிற வரை பாரத நாட்டின் ஒவ்வொரு சுதந்திர தினமும் ஒரு துக்க தினம் தான்’ - என்று எண்ணி எண்ணித் தவித்தேன். அந்தப் பார்சலில் இருந்த சுகுணாவின் கடிதங்களும் பத்திரிகைப் பிரதிகளும் என் முன் பயங்கரமாகச் சுழன்றன. |