4. புளியமரச் சாலையிலே தன்னுடைய பொறுப்பின் கீழ் விடப்பட்டிருந்த அந்தக் கிராமங்களின் வளர்ச்சி நிலையை அறிவதற்காகச் செய்த அந்தச் சுற்றுப்பயணத்தின் போது சுகுணாவுக்குப் பலப்பல புதிய அநுபவங்கள் ஏற்பட்டன. பல புதிய உண்மைகள் தெரிந்தன. தாமரைக் குளத்துக்கருகில் இருந்த மேற்குத் தொடர்ச்சி மலை மேல் பள்ளத்தாக்கில் சந்தனக்காடு என்று இயற்கை வளமிக்க ஒரு சிற்றூர் இருந்தது. மலைகளினிடையே உள்ள கணவாய்ப் பாதையாக அதற்குப் போவதற்குச் சமதரைச் சாலையும் உண்டு. அந்த ஊரில் காட்டு வாசிகளாகிய இருபது முப்பது மலைப்பளிஞர்களின் குடும்பங்கள் இருந்தன. சந்தனக்காடு கிராமத்தில் ஒரு முதியோர் கல்விக் கூடமும், ஒரு புதிய பிரசவ விடுதியும் பணி செய்து வருவதாக அவளுடைய ஆபீஸ் விவரப் புத்தகத்தில் இருந்தது. ஆனால் அங்கே விசாரித்துப் பார்த்த போது அப்படி ஒன்றும் இருப்பதாக யாருமே சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் கூர்ந்து விசாரித்துப் பார்த்ததில் இந்தியா என்கிற உலகத் தொடர்பு இல்லாத அந்த மலைப்பளிஞர்களில் பலர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இதை அறிந்ததும் சுகுணாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆடம்பர ஆணவ வெளிச்சம் போடுகிற நகரங்களிலும், பெரிய பெரிய ஊர்களிலும், பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் வைத்துவிட்டுத் தேசமெல்லாம் நிறைவான அறிவு வளர்ச்சி ஏற்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பது எத்தனை பேதமை என்பது அவள் உணர்ந்தாள். இந்த நாட்டில் இன்னும் சில இடங்களில் அறிவு வளரவில்லை. சில இடங்களில் பண்பு வளரவில்லை. இன்னும் சில இடங்களில் இரண்டுமே வளரவில்லை. இரண்டு வளர்ந்திருக்கிற இடத்தில் மூன்றாவதாக வறுமையும் வளர்ந்திருக்கிறது. கல்லூரிகளையும் சர்வகலாசாலைகளையும் அழகிய கிராமங்களிலும் மலைநாட்டு இயற்கையழகுகளினிடையேயும் படிப்பதைத் தவிரக் கவனத்தை வேறுபுறம் திருப்ப முடியாத சின்னஞ் சிறு ஊர்களிலும் அமைத்தால் இந்த நிலை சிறிது மாறலாமென்று அவளுக்குத் தோன்றியது. மனம் வறண்ட மனிதர்களையும், இலட்சியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறவர்களையும் பார்த்துப் பார்த்துச் சுற்றுப் பயணமே அலுத்துப் போயிருந்த சுகுணாவுக்குக் கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் மட்டும் ஓர் அதிசயம் காத்திருந்தது. தன்னைப் போலவே இலட்சியப் பைத்தியம் பிடித்த அபூர்வ மனிதர் ஒருவரை, அவள் அந்தக் கன்னிகாபுரத்தில் சந்தித்தாள். கள்ளிக்காட்டுக்குள்ளே ஒரே ஒரு கற்பக விருட்சத்தையும் அரிதாகப் பார்த்திட வாய்த்தது போல் அந்த மனிதரின் சந்திப்பு அவளுக்குக் கிடைத்தது. அந்தச் சந்திப்பிலேயே அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கிடைத்தன. கன்னிகாபுரத்தில் தன்னுடைய சேவாதளத்து அலுவல்களை விசாரித்து முடித்துக் கொண்டு அவள் சைக்கிளில் ஏறித் தாமரைக் குளத்துக்குத் திரும்பிப் புறப்படுவதற்கிருந்த போது, “இங்கே ரகுராமன் என்றொரு கவி இருக்கிறார். அவர் சமூக சேவையில் ஆர்வமுள்ள இலட்சியவாதி. அவருக்கு ஒரு கால் ஊனம், நடந்து வர முடியாது. அவர் நீங்கள் இங்கே வந்திருப்பதைக் கேள்விப்பட்டு உங்களைப் பார்க்க விரும்புகிறார். தயவு செய்து நீங்கள் அவரைப் பார்க்க வரலாமோ?” - என்று அந்த ஊர்க் கர்ணம் வந்து கேட்டார். சுகுணா மகிழ்ச்சியோடு அவரைப் பார்ப்பதற்கு ஒப்புக் கொண்டு புறப்பட்டாள். இலட்சியவாதியைப் பார்க்கும் ஆசை மற்றொரு இலட்சியவாதிக்கு இருக்கும்தானே? ரகுராமன் என்ற அந்தக் கவிஞரின் இருப்பிடமே அவளை அவரிடம் பக்தி கொள்ளச் செய்தது. ஊரிலிருந்து ஒதுஞ்கினாற் போல அமைந்திருந்தது அவர் இருப்பிடம். கடல் போல அலை வீசிக் கொண்டிருந்த ஒரு பெரிய ஏரிக்கு நடுவில் தென்னை மரங்கள் அடர்ந்த பசுமைத் திடல் ஒன்றில் ஆசிரமம் போல் கூரைக்குடில் வேய்ந்து கொண்டு வசித்து வந்தார் ரகுராமன். ஏரிக்கரையில் சைக்கிளிலிருந்து சுகுணாவை இறங்கச் செய்து பரிசலில் அவளைத் திடலுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.
‘ரகுராமன்’ மிகவும் முதியவராக இருப்பாரென்று நினைத்துக் கொண்டு போயிருந்தாள் சுகுணா. ஆனால், அவர் முப்பது முப்பத்தைந்து வயது இளைஞராகவே இருந்தார். அங்கே அவருடைய குடிலில் மரப் பீரோக்களில் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் குவிந்திருந்தன. அவள் உள்ளே நுழைந்த போதும் அவர் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டு தான் இருந்தார். அவருடைய முகமே உடனே படித்துவிடத் தக்க ஒரு நல்ல புத்தகமாகத் தோன்றியது சுகுணாவுக்கு. கௌரவமான சாயல் தெரியும் முகம் அது.
ரகுராமன் காண்பதற்கு ஒளி நிறைந்து தோன்றினார். அவருடைய கண்கள் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் அழகாயிருந்தன. அந்தக் கண்களில் எப்போதும் உயர்ந்த எண்ணங்களின் சாயல் தெரிந்தது. “உங்கள் தகப்பனாரோடு அவருடைய கடைசிக் காலத்தில் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன் அம்மா! நானும அவரும் சுப்பிரமணிய பாரதியாருடைய தேசீயப் பாடல்களை எத்தனையோ மேடைகளில் சேர்ந்து பாடியிருக்கிறோம். சேர்ந்து அடி வாங்கியிருக்கிறோம். நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று யாரோ சொன்னார்கள். பார்க்க ஆசையாயிருந்தது” - என்றார் ரகுராமன். “நீங்கள் மட்டும் இங்கே தனியாயிருக்கிறீர்களா” - என்று சுகுணா அவரைக் கேட்டாள். அவர் கையிலிருந்த புத்தகத்தில் அடையாளம் சொருகி மேஜையில் வைத்துவிட்டு அவளுக்கு பதில் கூறினார். “இல்லை! பார்ப்பதற்கு ஆசிரமம் போலிருக்கிறதே என்று நினைத்து அப்படிக் கேட்காதீர்கள். இந்த ஊரில் எங்கள் வீடே இதுதான். இந்தத் தீவும் இந்த ஏரியும் எங்கள் குடும்பச் சொத்து. நானும் என் அம்மாவும் இங்கேதான் வசிக்கிறோம். ஊருக்குள் நன்செய் நிலமும் கொஞ்சம் இருக்கிறது. நான் பழைய ஆகஸ்டு போராட்டத்தில் போலீஸாரிடம் அடி வாங்கிக் காலொடிந்து வீட்டோடு வந்து விழுந்தவன் தான். இன்று வரை இந்தப் புத்தகங்களும் சிந்தனையும் தான் கால்களும் இவைதான். மாதம் இருநூறு ரூபாய்க்காவது நான் புத்தகங்கள் வாங்குவேன். தாமரைக் குளத்துக்கும் கன்னிகாபுரத்துக்கும் அதிக தூரமில்லை. முடிந்தபோதெல்லாம் நீங்கள் இங்கே வந்தால் இலக்கிய விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கலாம்! எனக்கு இங்கே இந்தப் புத்தகங்களால் தான் பொழுது போகிறது. காலால் நடக்க முடியாத நான் இந்தப் புத்தகங்களைக் கொண்டு மனத்தினால் நடந்து கொள்ள முடிகிறது.” “நீங்கள் கவியெழுதுவீர்கள் என்று என்னை அழைத்துக் கொண்டு வந்தவர்கள் என்னிடம் சொன்னார்களே?” இதைக் கேட்டு ரகுராமன் மெல்ல நகைத்தார். பின்பு பதில் கூறினார்: “எழுதுவேன்! அடைந்து கிடக்கிற மனத்தில் எப்போதாவது அந்த ஆவேசம் வரும். அப்போது ஏதாவது கிறுக்குவேன். பரிபூரணமான கவிதை என்று இதுவரை நான் என் மனத்துக்கு நிறைவு தருகிற எதையும் எழுதியதாக எனக்கு நினைவில்லை.” இப்படி ரகுராமனும், சுகுணாவும் பேசிக் கொண்டிருந்த போது உள்ளேயிருந்து ஒரு வயதான் அம்மாள் இரண்டு டம்ளர்களில் மோர் கொண்டு வந்து வைத்தாள். திருமகள் விலாசம் ஒளிரும் மங்கலமான முகத் தோற்றத்தோடு விளங்கினாள் அந்த அம்மாள். “என் தாயார்” - என்று அந்த அம்மாள் பக்கம் கையைக் காட்டினார் ரகுராமன். சுகுணா அந்த அம்மாளை வணங்கினாள். “நன்றாக இரு அம்மா” - என்று வாழ்த்தி விட்டுச் சுகுணாவை அறிமுகம் செய்து ரகுராமன் கூறிய விவரங்களையும் கேட்டுக் கொண்டு சென்றாள் அந்த அம்மாள். மேலும் சில நாழிகைகள் இலக்கியச் சர்ச்சை செய்துவிட்டுச் சுகுணா ரகுராமனிடமும் அவருடைய தாயாரிடமும் விடைபெற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டாள். அந்த ஏரியும் தென்னை மரம் நிறைந்த திடலும், ரகுராமனின் அழகிய குடியிருப்பும் அவள் உள்ளத்தில் அழியா ஓவியங்களாகப் பதிந்து விட்டன. ‘காணி நிலம் வேண்டும்’ - என்று பாடிய மகாகவியின் சிறந்த பாட்டு அவளுக்கு நினைவு வந்தன. கன்னிகாபுரத்தில் கவிஞர் ரகுராமனுக்கு ஊர் மக்களிடம் நல்ல மதிப்பு இருந்தது. அவர் பேரைச் சொன்னாலே எதிரே நிற்பவர்கள் முகங்களில் அவரைக் கௌரவமானவராகக் கருதும் மதிப்பின் சாயல் படிந்தது. அந்தச் சுற்றுப் பயணத்திலேயே அவளுக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவமாக ரகுராமனின் சந்திப்பு இருந்தது. அவரிடம் நல்ல புத்தகங்கள் இருந்தன; அவ்வளவேன்? அவரே ஒரு நல்ல புத்தகமாகவும் இருந்தார். கடைசிநாள் சுற்றுப்பயணம் முடிந்தது. அவள் ஊர் திரும்பும் போது களைப்பாக இருந்தது. சைக்கிள் பெடலை வேகமாக மிதிக்க முடியவில்லை. ஊர் எல்லை வருமுன்பே சாயங்காலமாகி விட்டது. சுகுணா தாமரைக்குளத்துக்கு நாலைந்து மைல்கள் அப்பால் வந்து கொண்டிருக்கும் போதே பொழுது சாய்ந்து இருட்டியும் விட்டது. அவள் அப்போது சைக்கிளில் வந்து கொண்டிருந்த இடத்திலிருந்து ஊர் வரையுள்ல வழியில் இருபுறமும் ஒரே அடர்ந்த புளிமரக்காடு. அதற்குக் கூட்டுப் புளித்தோப்பு என்று அந்த ஊரில் பெயர். அந்தப் புளிமரங்கள் யாவும் கோழிப் பண்ணை வடமலைப் பிள்ளைக்குச் சொந்தம். காடாந்தகாரமாக இருண்ட புளியந்தோப்பின் நடுவே வளைந்து வளைந்து செல்லும் புழுதிச் சாலையாகிய வண்டிப் பாதையில் தன் சைக்கிளைக் கூடியவரை விரைவாகச் செலுத்த முயன்றவாறு வந்து கொண்ருந்தாள் சுகுணா. அந்தப் பகுதியை விரைவில் கடந்து அப்பாற் போய்விட வேண்டுமென்றே அவள் வேகத்தை வரவழைத்துக் கொண்டாள். ஓரிடத்தில் பாதைத் திருப்பத்தில் வழியை மறித்துக் கொண்டு யாரோ சில ஆட்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. புளியந்தோப்பு காவலுக்காக அங்கே யாராவது உட்கார்ந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இரண்டு மூன்று முறை பாதையை விட்டு அவர்கள் எழுந்திருப்பதற்காக மணியை அடித்தாள் சுகுணா. ஆட்கள் எழுந்திருக்கவில்லை. மணி ஒலியைக் கேட்ட பின்னும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். “ஏ பொண்ணு! சைக்கிளை நிறுத்து” - என்று அதட்டுகிற குரல் கேட்டது. சுகுணாவுக்கு நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. தொண்டைக்குழி விரைவாக வறண்டது. அவள் எவ்வளவோ துணிச்சல்காரியாக இருந்தாலும் பயம் பயம்தான். தைரியத்தைக் கைவிடாமல் தன் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்டு போட்டுவிட்டுத் தானும் நின்றாள். அந்த இருளிலும் பளபளவென்று மின்னுகிற வளைந்த வெட்டரிவாளோடு ஒரு முரட்டு ஆள் முதலில் எழுந்திருந்து அவளருகே வந்தான். சிறிது நேரத்தில் இன்னும் நாலைந்து ஆட்கள் அதே கோலத்தில் வந்து அவளை வளைத்துக் கொண்டார்கள். அவள் முற்றிலும் தைரியத்தை இழந்துவிட்டாள். “ஏம்மா நீ வடமலை எசமானோட கோழிப் பண்ணையெப் பத்திச் சர்க்காருக்கு ஏதோ ரிப்போர்ட் எழுதினியாமே? நெசந்தானா?” - முதலில் வந்தவன் அவளைக் கேட்டான். அந்தக் கேள்வியில் முரட்டு வலிமையின் துணிவு ஒன்று மட்டுமே ஒலித்தது. “ஆமாம் எழுதினேன்” - என்று தெளிவாகப் பதில் சொன்னாள் சுகுணா. பயத்துக்காகப் பொய் சொல்லத் துணியவில்லை அவள். “அவுரு இந்த ஊருக்கு ராசா. அவரைப் பத்தி இப்படியெழுதினாத் தலை உருண்டிடும். உன்னிட்ட இப்பவே ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்னு தான் வந்தோம். போய் இனிமேலாவது ஜாக்கிரதையா நடந்துக்க” என்று மிரட்டியது முதலில் ஒலித்த பழைய குரல். அவள் பதில் பேசாமல் சைக்கிளில் ஏறிப் பெடலை மிதித்தாள். ஊர் எல்லையில் போய்த்தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது அவளால். வீட்டுக்குப் போய் அம்மாவிடம் கூட இதை அவள் கூறவில்லை. கூறவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றவில்லை. தாமரைக் குளத்திலும் அக்கம் பக்கத்திலும் இருந்த, ஆறு, ஏழு கோழிப் பண்ணைகளை வடமலைப் பிள்ளைதான் பாதுகாத்துப் பராமரிப்பதாகப் பேர் செய்து சர்க்காரிடம் உதவிப் பணம் வாங்கிக் கொண்டிருந்தார். சுகுணா எழுதியிருந்த ரிப்போர்ட்டின் பயனாக இந்த ஏழு கோழிப் பண்ணைகளையும் உடனே நிறுத்தி விடுமாறும் இனிமேல் அரசாங்க உதவித் தொகையை இவற்றிற்கு அளிப்பதற்கில்லை என்றும் ஐந்தாரு நாளில் வடமலைப்பிள்ளைக்குப் பாதகமாக மேலேயிருந்து உத்தரவு வந்துவிட்டது. ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த பிள்ளைவாள் இப்போது கனன்று சீறத் தொடங்கிவிட்டார். இறுதியில் வடமலைப்பிள்ளை எரிமலையானார். பஞ்சாயத்துத் தலைவரும், கிராம முன்சீப்பும் அந்த எரிமலைக்குச் சீற்ற மூட்டினார்கள். சுகுணாவுக்கு இப்போது விரோதிகள் அதிகமானார்கள். அலுவலகத்தின் உள்ளேயும் விரோதம், வெளியேயும் விரோதம். “இந்த பட்டுப்பூச்சியை எப்பாடு பட்டாவது இங்கிருந்து சிறகைப் பிய்த்துப் பறக்க விடாமல் திருப்பி அனுப்பிட வேண்டும்” என்று பிள்ளை, முன்சீப், பஞ்சாயத்துத் தலைவன் மூன்று பேரும் சேர்ந்து ஒரு கூட்டாக முயன்றார்கள். ஆனால் அது அவர்களுக்கு அவ்வளவு இலேசாக முடிகிற காரியமாகப் படவில்லை. சுகுணா தங்களிடம் வகையாக மாட்டிக் கொள்கிற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் அவள் என்ன செய்கிறாள், எங்கே போகிறாள் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். சுகுணா தவறியும் கூடத் தவறு செய்யாமல் கவனமாக இருக்கும் போது அவர்கள் எப்படி அவளை மாட்டி வைக்க முடியும்? பழி சுமத்த வேண்டும் என்று கங்கணம் கட்ட முயல்கிறவர்களுக்குப் பழியைப் படைக்கவா தெரியாது? அவர்கள் கிண்டலாகப் பேசியது போலன்றி நிஜமாகவே அவள் பட்டுப் பூச்சியாகத்தான் இருந்தாள். தன்னை யழித்துக் கொண்டே பிறருக்கு மேன்மையைக் கொடுக்கும் பட்டுப்புழுவைப் போல் சேரியிலும், தெருக்களிலும், மென்மையான நற்பணிகளைப் புரிந்து கொண்டே தன் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்தக் கிராமத்தின் வருத்தங்களுக்கு இடையே அவற்றைப் பொறுத்துக் கொண்டு இருந்தாள் அவள். அவளுடைய கைகள் முனைந்து முயன்ற இடமெல்லாம் அந்தக் கிராமத்தில் நிறைய நல்ல காரியங்கள் நடந்தன. ஆனால், வடமலைப் பிள்ளையின் ஆக்ரோஷம் சிறிதும் தணியாமல் உள்ளேயே கனன்று கொண்டிருந்தது. அவர் அவளைக் காலை வாரிவிடச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். |