7. முடியாத கதை பட்டினத்தில் படித்துப் பட்டம் பெற்ற இளமையின் இலட்சிய ஆசையோடு கிராமம் சென்ற சுகுணாவின் கதை அவள் தாமரைக்குளத்திலிருந்து இரயிலேறியதோடு முடிந்து விடவில்லை. இந்த முடிவின்மையை இரண்டு விதமாகப் பிரித்துச் சொல்லலாம். அவள் கதை முடியவில்லை. அவளோடு மட்டும் முடியவில்லை - என்று சொல்லிவிட்டால் இரண்டு வகையான அர்த்தமும் கிடைத்துவிடும். வெள்ளை மனமும், மிக விரைவிலேயே இலட்சியத்துக்கு ஆசைப்பட்டுத் தவிக்கிற உணர்ச்சி வசமான எண்ணங்களும் உள்ள எந்தப் பெண்ணும் மனம் விரிவடையாத மனிதர்களிடையில் இத்தகைய அனுபவங்களைத்தான் அடைய முடியும். பொருளாதாரச் சூழ்நிலைகளும், படிப்பும் உலகத்தின் வளர்ச்சியைப் பற்றிய தெளிவான ஞானமும் நமது நாட்டுக் கிராமங்களில் அவை பதிகிறவரை தாமரைக் குளத்தைப் போன்ற சிறிய ஊர்களுக்குச் சமூக சேவை செய்யும் நோக்கத்தோடு எந்தப் பெண் சென்றாலும் அவளுக்கு இந்த முடிவுதான் ஏற்படும். குறுகிய மனம் படைத்த கிராமத்து மக்கள் வௌவாலைப் போன்றவர்கள். வௌவால் பறவையினமா, விலங்கினமா என்று தெரிந்து கொள்ளவிடாமல் பறவைக்குரிய பறக்கும் செயலையும், விலங்குக்குரிய பிற செயல்களையும் மேற்கொண்டிருப்பது போலப் புதுமையைப் புறக்கணிக்கவும் மனம் இன்றிப் பழமையை விட்டுவிடவும் விரும்பாமல் புதுமையில் விரைந்து பறப்பதும், பழமையின் இருளிலே தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதுமாக வாழ்கிறவர்களைப் புதிய தலைமுறையோடு சேர்ப்பதா, பழைய தலைமுறையோடு சேர்ப்பதா? இப்படி வாழ்வது இன்றைய பாரத நாட்டிலே இரண்டுங்கெட்டதில்லை. எதையும் செய்யத் துணிய முடியாத நிலை என்றும் இதைச் சொல்லலாம். இரயிலையும்,, தினப் பத்திரிகைகளையும், வானொலிப் பெட்டிகளையும், கிராமங்களுக்குள்ளே நுழைய வசதி செய்து கொடுத்து விட்டதனால் மட்டும் இந்த நாட்டு மக்களின் மனத்தில் சுதந்திரமான உணர்வுகளையும், புதிய அறிவுரைகளையும் பரப்பி விட்டதாக நாம் பெருமைப்பட முடியாது. இரயிலும், காரும், தினப்பத்திரிகைகளும், வானொலிப் பெட்டிகளும், சௌகரியமான வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதற்கு வேண்டிய வசதிகள் தாம். அவைகளால் சுகமான அநுபவங்களை அதிகமாக்க முடியலாம் என்பதை ஏற்க முடியும். ஆனால், அவைகளே பண்பாட்டையும், நேர்மையையும் வளர்க்க மனங்களை விரிவாக்கி விட முடியும் என்பதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது.
உடம்பில் நல்ல இரத்தம் சேர்வதற்குச் சத்துள்ள தூய உணவு தேவைப்படுவது போலச் சத்துள்ள சிந்தனைகளைக் கிராமங்களுக்கு அனுப்ப வேண்டும். தினப்பத்திரிகைகளும், இரயிலும், காரும், வானொலிப்பெட்டியும் இந்தச் சிந்தனைகளை நிறையச் சுமந்து கொண்டு கிராமங்களுக்குப் போவதாகச் சொல்ல முடியாது. ஓரளவு கொண்டு போவதாகக் கூறுவதை மறுக்கவும் முடியாது.
எவளோ ஒரு கேடுகெட்ட நட்சத்திரத்திற்கு சுவிட்ஸர்லாந்தில் குழந்தை பிறந்த சேதியைத் தலைப்பில் போட்டு ஏந்திக் கொண்டு கிராமத்துக்குப் போகும் நாளிதழும், மாடி வீட்டு மரகதத்தைக் கோடிவீட்டுப் பையன் காதலித்த தொடர் கதையோடு கிராமத்துக்குப் போகும் வாரப் பத்திரிகைகளும், எந்த அறிவை வளர்த்து விட முடியும்? தாய்மொழிக்கு நல்ல நிலையளிக்காத தாய்நாட்டு வானொலிப் பெட்டியும், தினம் கவிழ்ந்து கொண்டிருக்கிற நேர்மையற்ற இரயிலும், ஒருவகையில் வசதிகள் தாம். அவைகளே பண்பாடுகள் ஆவதில்லை. பண்பாடுகளை வளர்ப்பதும் இல்லை. வாழ்க்கையை வேண்டுமானால் வசதி நிறைந்ததாக ஆக்கலாம். புதுமைகள் நிறைந்ததாகவும் மாற்றலாம். தாமரைக்குளத்திலே சுகுணாவின் ஆர்வமும் தோற்றுப் போனதற்கு அன்று அவளுடைய பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிய பேரறிஞர் மட்டும் காரணமில்லை. அவருடைய பேச்சும் காரணமில்லை. அவருடைய பேச்சைக் கேட்டு ஆவேசமும் துடிப்பும் அடைந்த சுகுணாவின் இளமை மனமும் காரணமில்லை. அந்தப் பேரறிஞருடைய மேடைப் பேச்சு அபினியைப் போல் மயக்க மூட்டுவதாயிருந்தது. பலரைக் கெடுத்துவிட்டதாகச் சுகுணா நினைத்தது தனக்கு ஏற்பட்ட மாறுபாடுள்ள அநுபவத்தினாலும் இப்போதுதான் அவர் மேற்கொண்ட ஆத்திரத்தினாலுமே ஆகும். அந்த அறிஞர் தாம் கூறிய இலட்சியங்ன்கள் நல்லவை என்று சொல்லியபோது அவை நடைமுறையில் அசாத்தியமானவை என்பதையும் சேர்த்துத்தான் கூறியிருந்தார். அவர் முதலில் கூறிய இலட்சியங்களை மட்டும் மனத்தில் பதித்துக் கொண்டு விட்ட சுகுணா அவற்றின் சாத்திய அசாத்தியங்களைப் பற்றியும் அவர் கூறியதை நினைக்கவே இல்லை. நம்பிக்கை மயமாக இருந்த அவள் மனம் அந்த இளமையில் சாத்தியம் என்பதைப் பற்றித்தான் அதிகமாக நினைத்தது. அசாத்தியங்களைப் பற்றிச் சிறிதளவும் நினைக்கவே இல்லை. பக்குவப்படாத இளம் மனங்களுக்கு எதைப் பற்றியும் நாலைந்து கோணத்தில் மாற்றி மாற்றிச் சிந்திக்கத் தோன்றாது. தனக்கு ஏற்றதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதுமான ஒரே கோணத்தில் மட்டும் ஒன்றைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் பயங்கரமானது. ஒரு நாடு சிந்தனையினால் அடிமைப்படத் தொடங்கிவிட்டது என்பதற்கு முதல் அடையாளம் இப்படி ஒரே திசையில் சிந்திக்கப் பழகிக் கொள்வதுதான். சக்கரம் போல் எல்லாத் திசையிலும் சுழன்று சுழன்று அழுத்திப் பதிகிற சிந்தனையோட்டம் வேண்டும். மார்க்ஸில் இருந்து இங்கர்சால் வரையில் சிந்தனைச் சுதந்திரத்தைத்தான் உலகத்துக்கு வற்புறுத்தினார்கள். எடுத்துக்காட்டி விளக்கினார்கள். “நாம் சுய பலத்தோடும் சுய சிந்தனையோடும் தனித்து வாழ்கிறோம்” - என்று பெருமைப்படுவதற்குக் காரணமாக ஒரு செயல் வேண்டுமானால் சுதந்திரமான சிந்தனைகளை இந்த நாட்டில் வளர்க்க வேண்டும். பழமையில் அழுந்தி நின்ற இடத்திலேயே நின்று விடாமல் புதுமை வேகத்தில் தறிகெட்டு ஓடியும் விழாமல், சுதந்திரமாகவும், நிதானமாகவும் சிந்திக்கிற மனங்களை பயிற்றி வளர்க்க வேண்டும். அப்படி வளர்ப்பதில் ஓரளவாவது வெற்றி பெற்ற பின்புதான் சுகுணாவைப் போன்றவர்கள் இந்தப் பாரத நாட்டில் உயிர்த் துடிப்புள்ள கிராமங்களில் நிர்ப்பயமாகப் போய் இருந்து கொண்டு சமூகத் தொண்டு புரிய முடியும். அதுவரை வேறு தொண்டுகளை அவள் செய்ய முடியாதென்றாலும் இந்த நாட்டின் மங்கலப் பெண் குலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்து வரும் புனிதமான காரியம் ஒன்றை அவளாலும் செய்ய முடியும்! அந்தப் புனிதமான காரியம் என்னவென்று கேட்கிறீர்களா? ‘குடும்ப வாழ்வு’ - என்று அதற்குப் பெயர். அவள் சமூகத்தை வாழ்விக்கப் புறப்படுவதற்கு இப்போதுள்ள சூழ்நிலை போதாது. ஆனால், இந்தச் சூழ்நிலையில் அவளே சமூகத்தில் ஒருத்தியாக வாழ முடியும். அதை இந்த நாட்டில் அவள் இனி வாழலாம்! எது வரையில் என்கிறீர்களா? கீழே கூறும் நிலை வருகிற வரையில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்:- நம்முடைய பாரத நாட்டுக்குக் கிராமங்கள் எல்லாம் தங்கச் சுரங்கங்கள் மாதிரி. ஆனால் அவற்றை வளர்க்கிறோம் என்ற பேரில் நாம் அமைத்துள்ள பிரதேச வளர்ச்சி, சமூக நலத் திட்டம், முதியோர் கல்வி, பண்ணைகள் இவையெல்லாவற்றையும் எந்த நோக்கத்தோடு செய்யத் தொடங்கினோமோ, அந்த நோக்கத்தோடு அவைகள் சரியாகப் பயன்படும் காலம் இன்னும் வரவில்லை. காரணம் கிராமங்களாகிய அந்தத் தங்கச் சுரங்கங்களில் உள்ள தங்கம் தெரியாதபடி கரிகள் மூடியிருக்கின்றன. இதை விளங்கிக் கொண்டது தவிரத் தாமரைக் குளம் கிராமத்தில் சுகுணாவுக்கு வேறு எந்தவிதமான ஆதரவும் கிடைக்கவில்லை. நாளைக் காலையிலிருந்து எனது கதாநாயகி கலகலப்பு நிறைந்த பட்டினப் பூச்சியாகிவிடுவாள். ஆனாலும் அவளுடைய அழகு என்றும் பட்டுப்பூச்சியாகவே இருக்க வேண்டும் என் ஆசை. தாமரைக் குளத்தில் வீணாக அவள் மேல் எழுந்த அபவாதம் நீங்கி அவளுக்கு நல்ல இடத்தில் திருமணமாக வேண்டும் என்பதும் என் ஆசை. ஒரு வரன், நல்லதாகப் பாருங்களேன். |