முன்னுரை தற்காலச் சூழ்நிலையைப் பிரதிபலிப்பவையும், நடைமுறையை அனுசரிக்கின்றவையும் ஆகிய எழுத்துக்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வருகின்றன என்ற பலருடைய மனத்தாங்கலை என்னுடைய இந்த நாவலின் மூலம் ஓரளவு போக்க முயன்றிருக்கின்றேன். சமகாலத்தின் சமூகப் பொருளாதார அரசியல் பாதிப்புகளால் தனி மனிதனும் மத்தியதர வர்க்கமும், மாணவர்களும் தொழிலாளர்களும் மத்தியதர வர்க்கத்துக்கும் கீழேயுள்ள ஏழைகளும், எப்படி எப்படி எல்லாம் அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பதும், அதிகாரம், பதவி, அரசியல் செல்வாக்கு, நிர்வாக இயந்திரங்கள் எல்லாம் எவ்வாறு பயன்படுத்தப் பெறுகின்றன என்பதும் கதைகளிலோ, கற்பனைகளிலோ, இங்கு நம் நாட்டில் மிகவும் குறைவாகவே இடம் பெறுகின்றன. அரசியலாலும், அதிகார துஷ்பிரயோகத்தினாலும் பாதிக்கப்படாத முனைகளே இன்று தேசத்தில் இல்லை என்றாலும், தமிழ் எழுத்தாளர்களில் பலர் அவற்றோடு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு படும் கதைகளையும் நாவல்களையும் புனைந்து எழுதத் தயங்குகிறார்கள். அப்படி எழுதுகிறவர்களையும் எழுத முயல்கிறவர்களையும் கூடப் பயத்தோடும், பரிதாபத்தோடும் நோக்குகிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. அரசியல் சமூக ப்ரக்ஞையுள்ள கேரள எழுத்தாளர்களோ, வங்க எழுத்தாளர்களோ, மராத்தி எழுத்தாளர்களோ இந்தப் பயமும், தயக்கமும் அற்றவர்களாக இருக்கிறார்கள். தமிழ் எழுத்துலகில் மட்டும் ஏன் இந்தத் தயக்க நிலை என்று தெரியவில்லை. கலையைப் படைப்பதற்கும், இரசிப்பதற்கும் நிர்ப்பயமான மனநிலை வேண்டும். அடிமை நாட்டில் கலை வளர்ச்சி இல்லாமற் போவதற்கு இதுதான் காரணமோ என்று தோன்றுகிறது. சுதந்திர இந்தியாவில் நிர்ப்பயமான கலை இலக்கிய வளர்ச்சி பெருக வேண்டும். எழுத்தாளனின் மனவுணர்கள் சுற்றுப்புறத்து அரசியல் பொருளாதார சமூக நிலைமைகளால் பாதிக்கப்பட வேண்டும். காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் அப்போதுதான் உருவாகும். அப்படி உருவான ஒரு துணிவான தீவிரமான சமகாலத்து நிலைமைகளால் பாதிக்கப்பட்ட சமூக நாவல்தான் 'சத்திய வெள்ளம்'. 1972 ஜூலை முதல் 1973 ஏப்ரல் வரை கல்கி வார இதழில் தொடராக வெளிவந்த இந்த நாவல் இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது. இந்த நாவலை, தொடர்கதையாக வேண்டி வெளியிட்ட கல்கி ஆசிரியர் திரு. சதாசிவம் அவர்களுக்கு, இப்போது என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாவலின் வாசகர்கள் வேறெந்தப் பொழுது போக்கு நவீனத்தாலும் அடைய இயலாத புதுவிதமான உணர்வுகளையும், அனுபவங்களையும் சிந்தனைக் கிளர்ச்சிகளையும் இதன் மூலம் நிச்சயமாக அடைய முடியும் என்ற நம்பிக்கையோடு இம்முன்னுரையை முடிக்கின்றேன். வணக்கம்.
அன்புடன், நா. பார்த்தசாரதி ***** கதை முகம் இன்னும் சில நாட்களில் நம்முடைய இந்திய சுதந்திரத்திற்கு இருபத்தைந்து வயது நிறையப் போகிறது. அந்நியர்களிடமிருந்து விடுதலைப் பெற்றுக் கால் நூற்றாண்டு முடியப் போகிறது என்றாலும் நமக்காக நம்மிடையில் நம்மவர்களிடம் இருந்தே நாம் பெற வேண்டிய விடுதலைகள் இன்னும் பல உள்ளன. மகாத்மா காந்தியும், ஜவஹர்லால் நேருவும், சுபாஷ் சந்திர போஸும் தொடங்கிய போராட்டங்கள் முடிந்து விட்டது போல் தோன்றுகின்றன. ஆனால், இன்னும் அவை முடியவில்லை. அதிகாரம், ஆணவம், பதவி வெறி, சுயநல நஞ்சு, வறுமைப் பிடி ஆகியவற்றிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இங்கே இன்னும் விடுதலை பெறத் துடித்துக் கொண்டிருப்பது உண்மை. இது இளைஞர்களின் காலம். இளைஞர்கள் எதையும் ஆற்றவும், மாற்றவும் முடிந்த காலம். இளைஞர்களும் மாணவர்களும் தான் இன்று தீமைகளை எதிர்த்து, உள்நோக்கம் இன்றி நியாயங்களுக்காகப் போராடுகிற அளவற்ற யுவசக்தியைப் பெற்றிருக்கிறார்கள். அதிகார ஆசை, பதவிப் பித்து, சுரண்டல், ஆதிக்க வெறி, ஆகியவை நான்கு புறமும், பூத கணங்களைப் போல சூழும் போதெல்லாம் அவற்றை எதிர்த்துப் பொங்கும் சத்தியப் பெருக்கின் முதல் ஊற்றுக் கண் இன்று மாணவர் உலகிலும், கல்லூரிப் பல்கலைக் கழகங்களின் எல்லையிலும் தான் இருக்கிறது. அப்படித் தற்காலப் பல்கலைக்கழக எல்லையில் நடைபெறும் மாணவ வாழ்வைப் பற்றிய சமூக நாவல் இது. இந்த மண்ணில் எப்போதோ யுகயுகாந்தரங்களுக்கு முன் குருட்சேத்திரப் போர்க்களத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடுவே பாண்டவர்களுக்காகச் சத்திய வெள்ளம் பொங்கித் தணிந்தது. பின்பு நம் காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்கும், மகாத்மா, நேரு போன்ற தேச பக்தர்களுக்கும் நடுவே மற்றொரு சத்திய வெள்ளம் பொங்கி வடிந்து சுதந்திரப் புதுமை பூத்தது. இதோ இன்னொரு சத்திய வெள்ளத்தைத் தான் துடிப்பும், துணிவும், நெஞ்சுரமும், நேர்மையும், மிக்க மாணவ சமூகம் இந்த நாவலில் பொங்கச் செய்கிறது. இன்றைய இளைஞர்கள் எதையும் சுற்றி வளைத்து நினைப்பதில்லை. நேராக நினைக்கிறார்கள். நேராகப் புரிந்து கொள்கிறார்கள். நேராகப் பேசுகிறார்கள். 1940-க்கும் 52க்கும் இடையே இங்கு இருந்த இளைஞர்களின் மனநிலை வேறு. 52க்கும் 67க்கும் இடையே இருந்த இளைஞர்களின் மனநிலை வேறு. 67க்குப் பின்னர் வரும் இன்றைய இளைஞர்களின் மனநிலை வேறு. இன்றைய இந்திய இளைஞன் தன் நாட்டை விஞ்ஞான, சமூக, பொருளாதார வளர்ச்சி பெற்ற உலக நாடுகளோடு ஒப்பிட்டுச் சிந்திக்கும் வாய்ப்புக்களை அதிகமாகப் பெற்றிருக்கிறான். நேற்றைய மாணவன் ஒருவேளை தன் சொந்த எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றைய மாணவன் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்பட வேண்டி இருக்கிறது. சிந்திக்க வேண்டியிருக்கிறது. தன் எதிர்காலம் நாட்டின் எதிர்காலத்தையும் அதன் கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தையும் பொறுத்ததாக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் அளவு கூட அறிவும் சிந்தனையும் விசாலமடையாத எந்த அரசியல்வாதியும் இன்று அவனை ஏமாற்றி விட முடியாது. தங்கள் வசதிக்காக அவனைக் கிணற்றுத் தவளையாகவே இருக்கச் செய்ய இப்போது யார் முயன்றாலும் அது பலிக்காது. தலைமுறை இடைவெளி (ஜெனரேஷன் கேப்) கிணற்றுத் தவளை மனப்பான்மையை எதிர்க்கும் குணம், வேலையில்லாத் திண்டாட்டம், இவை இன்றைய இந்திய இளைஞனின் பிரச்சினைகள். இந்த மாணவருலகப் பிரச்சினைகளோடு வெகு நாட்களுக்கு முன் நீங்கள் எனது 'பொன் விலங்கு' நாவலில் கண்ட அதே மல்லிகைப் பந்தலைச் சில மாறுதல்களோடும், பல வளர்ச்சிகளோடும் இந்த நாவலில் மறுபடியும் காண்கிறீர்கள். இன்றைய மாணவர்கள் கற்கிறார்கள். பலவற்றை அவர்களே கற்பிக்கவும் செய்கிறார்கள். ஆசிரியர்களும், அரசாங்கங்களும், சமூகமும், பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும், இன்றைய இளைஞர்களுக்குத் தெரிவிப்பை தவிர இன்றைய இளைஞர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியவையே அதிகமாக இருக்கும் என்ற நினைவோடு இந்த நாவலைப் படிக்க வேண்டுகிறேன். நா. பார்த்தசாரதி
9, ஜூலை 1972சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|