இருபத்து நான்காவது அத்தியாயம் யாழ்ப்பாணத்து மாணவி பாலேஸ்வரிக்கும், இரசாயனப் பேராசிரியர் ஸ்ரீராமனுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்துப் போராட முடிவு செய்த தினத்தன்று இரவு பாண்டியன் அண்ணாச்சியை சந்திக்க பதினொரு மணிக்கு மேலாகிவிட்டது. வெளியே சென்றிருந்த அண்ணாச்சி அப்போதுதான் திரும்பி வந்திருந்தார். தேயிலைத் தோட்டங்கள் அதிகமாயிருந்த பக்கத்து மலைப்பகுதி ஒன்றிற்கு அன்று அதிகாலையிலேயே புறப்பட்டுப் போயிருந்த அவர் இரவு திரும்பி வந்து கூறிய செய்திகளும் நிகழ்ச்சிகளும் கவலை அளிக்கக் கூடியவையாக இருந்தன. அங்கே நடைபெற்ற தொழிற்சங்கத் தேர்தல் ஒன்றில் போலீஸார் பாராமுகமாக நடந்து கொண்ட விதமும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களின் வன்முறைகளும் பற்றி அண்ணாச்சி கதை கதையாகச் சொன்னார். தேசியத் தொழிற் சங்கத்தின் சார்பாகத் தொழிற்சங்கத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவரை ஒடுக்க நடந்த முயற்சிகளையும் மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்புள்ள தொழிற்சங்கம் மேற்கொண்ட கொலை கொள்ளை முயற்சிகளையும் அவ்வளவுக்கும் பின்னாலும் தேசிய தொழிற் சங்கத்தார் வெற்றி பெற்றதையும் அவர் விவரித்தார். பாண்டியன் அவரைக் கேட்டான்: "நாட்டில் உள்ள தொழிலாளிகள், விவசாயிகள், மாணவர்கள் எல்லாரையும் பகைத்துக் கொண்டு, எல்லாருக்கும் கெடுதல்களைச் செய்து கொண்டு எப்படித்தான் இந்த ஆட்சி இன்னும் நீடிக்கிறதோ?" "உன்னைப் போலொத்தவங்க இப்பிடிக் கேட்கிறப்ப எல்லாம் 'இது சாமான்யர்களின் ஆட்சி, மேட்டுக்குடி மக்கள் இதைக் கவிழ்க்கப் பார்க்கிறாங்க'ன்னு அமைச்சர் கரியமாணிக்கம் குய்யோ முறையோன்னு அலறி ஒரு ஒப்பாரி வைப்பாரு. இப்படி ஒப்பாரி வச்சே அவராலே எதிலேருந்தும் தப்பிட முடியுது பாண்டியன்!" "நீங்க சொல்வது சரிதான் அண்ணாச்சி! 'மாணவர்கள் அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்து படிப்பைக் கவனிக்க வேண்டும். கலவரங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது' என்று இப்போது அமைச்சர் கரியமாணிக்கம் எங்களுக்கு அறிக்கைகள் விட்டு உபதேசம் செய்து கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் இதே அமைச்சர், 'செம்டம்பர் போனால் மார்ச், மார்ச் போனால் செப்டம்பர். பரீட்சையும் படிப்புமா முக்கியம்? முதலில் தமிழ்த் துரோகிகளை எதிர்த்துப் போரிடுங்கள்' என்று அறிக்கைவிட்டு இரயில் பெட்டிகளை எரிக்கவும், பஸ்களைக் கொளுத்தவும் தூண்டினார்." "அன்னைக்கு அவர் ஆட்சியிலே இல்லே. இன்னைக்கு அவரே ஆட்சியிலே இருக்காரு. ஆட்சியைப் பிடிக்கிறவரை போராடச் சொன்னாரு. ஆட்சியைப் பிடிச்சப்புறம் உங்களையெல்லாம் அமைதியாயிருந்து தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாத்தச் சொல்றாரு." "போராட வேண்டிய காலங்களில் அமைதியைப் பற்றி உபதேசிக்கிறவர்களும், அமைதியாயிருக்க வேண்டிய காலங்களில் போராட்டங்களைப் பற்றி உபதேசிக்கிறவர்களுமாக இங்கே சில சுயநலத் தலைவர்கள் சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற் போல் நடந்து கொள்கிறார்கள். இது எல்லாரையுமே குழப்பிவிடுகிறது, அண்ணாச்சி!" "எஸ்டேட் தொழிலாளர் யூனியன் தேர்தலிலே மல்லை இராவணசாமியின் கட்சிக்கு எதிராக வேலை செய்த ஆட்கள் எல்லாம் சைக்கிள் செயினால் மூக்கு முகரை தெரியாமல் அடிக்கப்பட்டு ஆஸ்பத்திரியிலே கிடக்கிறாங்க. தொழிலாளர் குடியிருப்புக்களிலே ஆம்பிளை ஆளுங்க வெளியிலே போயிருக்கிற நேரத்திலே வீட்டுக்குள் புகுந்து பொம்பிளைகளை மிரட்டறாங்க. கன்னாபின்னான்னு பேசறாங்க. கீழ் மட்டத்திலே தங்கள் கட்சி ரௌடிகளைத் தூண்டிவிட்டு இவ்வளவு காலித்தனங்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு மேல் மட்டத்திலே இருக்கிற அமைச்சருங்க, 'அமைதி பேணுவீர், தமிழ்ப் பண்பாடு காப்பீர்' அப்பிடின்னு அடிக்கொரு தரம் அறிக்கை வேற விட்டுக்கிட்டிருக்காங்க... கையைப் பிடிச்சு இழுக்க வந்தவங்களோட சண்டை போட்ட பொண்ணு மேலே விபச்சார வழக்குப் போடுறதும், நியாயம் கேட்கப் போன புரொபஸரைப் போலீஸ்காரர் அடிக்கிறதும் நடக்கிற ஊர்லே இனிமே எந்த அக்கிரமும் நடக்க முடியும் தம்பீ!" "கொஞ்ச நாளைக்கு முன்னே திடீர் திடீர்னு ஸ்லம் ஏரியாவிலே நூறு குடிசை, இருநூறு குடிசைன்னு தீப்பிடிச்சதாகவும், அப்படித் தீப்பிடிச்ச குடிசைகளுக்குத் தீவச்சவங்க தேர்தலிலே தோற்றுப் போன கட்சியைச் சேர்ந்தவங்கதான்னு சொன்னாங்க பாருங்க, அதனோட இரகசியத்தை இப்பத்தான் மணவாளன் சொல்லித் தெரிஞ்சிக்கிட்டேன். குடிசைவாசிகளுக்குத் தேர்தலில் தோற்றுப் போன கட்சிகள் மீது வெறுப்பு உண்டாக்கவும், தங்கள் மேல் விருப்பு உண்டாக்கவும் என்று சிலர் திட்டமிட்டுச் செய்த அரசியல் சதி அது. 'அவர்கள் உங்கள் குடிசைகளை எரித்தார்கள், நாங்கள் கட்டித் தருகிறோம், பாருங்கள்' - என்பது போல் பிரசாரம் செய்ய வசதி பண்ணிக் கொண்டே இவை அனைத்தும் செய்யப்பட்டதாக மணவாளன் சொல்றாரு. முதல் தரமான மனிதர்கள் தங்கள் புகழைக் கூட விரும்புவதில்லை. இரண்டாம் தரமான மனிதர்கள் தங்கள் புகழை மட்டுமே விரும்புகிறார்கள். மூன்றாம் தரமான மனிதர்கள் தங்கள் புகழ் என்பது அடுத்தவர்களை அவமானப்படுத்துவதன் மூலமாகவே வரவேண்டும் என்று கருதுகிறார்கள். குடிசைகளுக்கு நெருப்பு வைத்தவர்கள் இந்த மூன்றாவது வகைப் புகழைப் விரும்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இட்லர் தோற்றுப் போகணும் இவங்ககிட்டே." "அது மட்டுமில்லே தம்பீ? தொழிலாளிங்க போராடினா உடனே 'ஐயோ! இது தொழிலாளியின் அரசு. இதை எதிர்த்தா போர்க்கொடி பிடிக்கிறீங்க'ன்னு கேட்பாங்க. மாணவர்கள் போராடினா, 'அந்தகோ! இது மாணவர்களின் அரசு. இதை எதிர்த்தா போர்?'ன்னு கேட்பாங்க. விவசாயிங்க போராடினா, 'இது விவசாயிகளோட சொந்த அரசு. இதை எதிர்த்தா போராடறீங்க'ன்னு நீலிக்கண்ணீர் வடிப்பாங்க. நரிக்குறவர்கள் போராடினாலும், 'அந்தகோ! இது நரிக்குறவர்களின் சொந்த அரசு. இதை எதிர்த்து நீங்களே போரிடலாமா?' என்று தயாராக ரெடிமேட் ஒப்பாரி வைப்பாங்க. இட்லர் இத்தினி கெட்டிக்காரனா இருந்திருப்பானான்னு எனக்குச் சந்தேகம்தான் பாண்டியன்." "நாளைக்கு காலையில் யுனிவர்ஸிடி திறந்ததும் நாங்கள் வகுப்புக்களுக்குச் செல்லப் போவதில்லை. பாலேஸ்வரிக்கும் இரசாயன பேராசிரியர் ஸ்ரீராமனுக்கும் போலீஸ் இழைத்த அநீதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யப் போகிறோம். மல்லிகைப் பந்தல் சரித்திரத்திலேயே முதல் முறையாக துணைவேந்தரைத் தவிர மற்றெல்லா ஆசிரியர்களும் எங்களுடைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளப் போகிறார்கள். துணைவேந்தரும், டாக்டர் பொழில் வளவனாரும், பண்புச் செழியனும், வேறு சிலரும் மாணவர்களின் ஊர்வலத்திலோ ஆர்ப்பாட்டத்திலோ கலந்து கொள்ளக் கூடாது என்று நினைக்கிறார்களாம். மற்ற எல்லா ஆசிரியர்களும் பேராசிரியர் ஸ்ரீராமன் போலீஸ் இன்ஸ்பெக்டரால் தாக்கப்பட்டது பற்றி ரொம்பவும் ஆத்திரமா இருக்கிறார்கள், அண்ணாச்சி!" "பொழில் வளவனாருக்கு எப்பிடித் தம்பி ஆத்திரம் வரும்? அவருதான் 'அமைச்சர் கரியமாணிக்கம் பிள்ளைத் தமிழ்'னு அமைச்சர் மேலே பிள்ளைத் தமிழே பாடியிருக்கிறாரே? அது போதாது? உனக்கு எந்த அளவு இங்கே நடந்ததை அப்ப்டியே சொன்னாங்களோ சொல்லலியோ எனக்குத் தெரியாது. கதிரேசனோ புரொபஸரோ, உங்க கிட்ட நடந்ததையெல்லாம் சொல்லியிருக்க மாட்டாங்க. வெளியிலே நாம் கேள்விப் படறதை விட அதிகக் கொடுமைகள் போலீஸ் ஸ்டேஷனில் நடந்திருக்குது. "'யாரிடமும் சொல்லிடாதீங்க அண்ணாச்சி! உங்க மனசோட இருக்கட்டும்'னு ஸ்டேஷன் ரைட்டர் எங்கிட்டச் சொன்னான். இராவணசாமியோட தூண்டுதலாலே தான் இன்ஸ்பெக்டரு பொய்யா அந்தப் பொண்ணு மேலே 'விபச்சாரத்துக்கு அழைத்ததாக'க் குற்றம் சாட்டி எஃப்.ஐ.ஆர். எழுதச் சொன்னாராம். வாத்தியாரு ஸ்ரீராமன் இதைப் பற்றி விசாரிக்கப் போன போது இன்ஸ்பெக்டரு அவரைக் கழுத்தை பிடிச்சு வெளியிலே தள்ளினதாக மட்டும்தான் நீ கேள்விப்பட்டிருப்பே. ஆனால் அதை விட மோசமானதெல்லாம் நடந்திருக்கு. சாதிப் பேரைச் சொல்லித் திட்டிக்கிட்டே பெல்ட்டைக் கழட்டி வாத்தியாரை அடிச்சிருக்காங்க. அவரை ரொம்ப அவமானப் படுத்தியிருக்காங்க..." "இனிமே இன்னின்ன சாதிக்காரங்க நியாய அநியாயங்களைப் பற்றிப் பேசக்கூடாதுன்னு நம்ம அரசியல் சட்டத்தையே மாத்திக்க வேண்டியதுதான் போலிருக்கு." "அப்படியில்லே தம்பீ! இன்னிக்கு நாட்டிலே இருக்கிறதே ரெண்டு சாதிதான். கொடுமைப்படுத்தறவங்க, கொடுமைப்படறவங்கன்னு ரெண்டே ரெண்டு சாதிதான் கண்ணுக்குத் தெரியுது. வேறு சாதிகள் எதுவுமே இருக்கிறதாத் தெரியிலே." இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் அண்ணாச்சியும் கதிரேசனும் போய் ஏரிக்கரைச் சாலையிலிருந்த அச்சகம் ஒன்றிலிருந்து மறுநாள் கடையடைப்பு, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் பற்றிய துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகளை எடுத்து வந்தார்கள். அண்ணாச்சி, பாண்டியன், கதிரேசன் ஆகியவர்களும் மற்றும் நூறு மாணவர்களும் குளிரைப் பொருட்படுத்தாமல் இரவோடு இரவாகச் சுவரொட்டிகளை ஒட்டுவதற்குப் புறப்பட்டார்கள். நகரை நான்கு பிரிவாகப் பிரித்துக் கொண்டு இருபத்தைந்து இருபத்தைந்து பேர்களாக அவர்கள் சுவரொட்டி ஒட்டுவதற்குச் சென்றிருந்தார்கள். கடை வீதியில் ஒவ்வொரு கடைக் கதவின் மீதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது. காலையில் கடையைத் திறக்க வருகிற போது கடையடைப்பை நினைவூட்டுவது போல் அங்கங்கே சுவரொட்டிகளை ஒட்டியிருந்தார்கள். கடை வீதியில் கம்பளிக் கோட்டும் பனிக்குல்லாயுமாகக் கரும் பூதங்கள் நடப்பது போல் ரோந்து சுற்றிக் கொண்டிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் சுவரொட்டி ஒட்டும் மாணவர்களைப் பார்த்தார்கள். சுவரொட்டிகளை அவர்களும் நின்று படித்தார்கள். ஆனால் மாணவர்கள் செயலில் அவர்கள் குறுக்கிடவில்லை. நகரத் தெருக்களிலும், பல்கலைக்கழக விடுதிச் சுவர்களிலும் போஸ்டர்களை ஒட்டி முடித்து அவர்கள் திரும்பும் போது இரவு மணி மூன்று. ஆசிரியர்கள், பல்கலைக் கழக ஊழியர்களும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ள இருந்ததனால் ஊர்வலத்தைக் காலை பத்தரை மணிக்குப் பல்கலைக் கழக வாயிலிலிருந்து தொடங்க வேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டார்கள் அவர்கள். மறுநாள் பொழுது விடிந்ததுமே கடைவீதி வெறிச்சோடிக் கிடந்தது. எப்படிப்பட்ட அசாதாரணமான நிலைகளிலும் கூடத் திறந்திருக்கும் பல டீக்கடைகளே மூடப்பட்டிருந்தன. மாணவர்களும், மாணவிகளும் அன்று காலையில் தான் ஊரிலிருந்து திரும்பி வரத் தொடங்கியிருந்தனர். விடுதி அறைகளில் போய்ப் பெட்டிப் படுக்கைகளை வைத்துவிட்டு உடனே பல்கலைக் கழக வாயிலில் கூடினார்கள் மாணவர்கள். பத்தேகால் மணிக்குக் கண்ணுக்கினியாள் மதுரையிலிருந்து வந்து மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் இறங்கிய போது அங்கே நின்று துண்டுப் பிரசுரம் வழங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் அவளை உடனே ஊர்வலத்துக்குப் போய் மாணவிகள் பிரிவுக்குத் தலைமை ஏற்கும்படி தெரிவித்தார்கள். அவள் அவசர அவசரமாக அண்ணாச்சி கடையில் கொண்டு போய்ப் பெட்டியை வைத்துவிட்டுப் பல்கலைக் கழக வாயிலுக்கு விரைந்தாள். காலை எட்டரை மணிக்கே துணைவேந்தர் தாயுமானவனார் பொருளாதாரப் பேராசிரியரையும் வேறு சில ஆசிரியர்களையும் கூப்பிட்டு, 'மாணவர்கள் நடத்தும் கண்டன ஊர்வலத்தில் ஆசிரியர்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது' என்று கல்வி மந்திரி விரும்புவதாகத் தெரிவித்தார். "போலீஸார் ஓர் ஆசிரியரிடம் காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொண்டிருப்பதால் அதைக் கண்டித்து தாங்களும் கண்டன ஊர்வலத்தில் கலந்து கொள்ளப் போவது உறுதி" என்று ஆசிரியர் சார்பில் துணைவேந்தரிடம் தெரிவிக்கப்பட்டது. துணைவேந்தர் தாம் முதலில் கூறியதையே மீண்டும் வற்புறுத்திக் கூறினார். 'துணைவேந்தர் அரசாங்கத்திற்கும், ஆளும் கட்சிக்கும் ஏஜெண்டு போல் செயல்படுவதைத் தாங்கள் வெறுப்பதாகவும், ஓர் ஆசிரியர் தாக்கப்பட்டதைப் பற்றி அவர் வருத்தம் தெரிவிக்காமல் இருப்பதைக் கண்டிப்பதாகவும்' அவர்கள் பதில் கூறினார்கள். பத்தரை மணிக்கு ஆசிரியர்களும் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பல ஊழியர்களும் ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து மாணவர்களோடு சேர்ந்து கொண்ட போது பேராசிரியர் பூதலிங்கம் இதைப் பாண்டியனிடம் தெரிவித்திருந்தார். மாணவர்களையும் ஆசிரியர்களையும் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களையும் தவிர நகரின் பொதுமக்களும், தொழிலாளிகளும், மல்லை இராவணசாமியின் கட்சி தவிர ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும், ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காகப் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். போலீஸுக்கு எதிராகவும், எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராகவும் கொந்தளித்துக் குமுறும் மனநிலையோடு கூடியிருந்தது அந்தப் பெருங் கூட்டம். நகரைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள் கூட அன்று நடைபெறவில்லை. உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், எல்லாப் பள்ளிகளின் ஆசிரியர்களும் கூட ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்து விட்டார்கள். ஒரு பாவமும் அறியாத ஒரு வெளிநாட்டு மாணவியிடம் அநீதியாக நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை உடனே நீக்கக் கோரும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளும், மேரிதங்கத்தின் தற்கொலைப் பற்றிய வாசகங்களும், பேராசிரியரிடம் முறைகேடாக நடந்து கொண்டதைக் கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பானர்களும் ஊர்வலத்தில் நிறைய இருந்தன. தடை உத்தரவு அமுலில் இருப்பதால் ஊர்வலம் நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தெரிவித்துவிட்டு அதற்கு மாணவர்கள் என்ன பதில் கூறுகிறார்கள் என்று அறியும் முன்னேயே போலீஸ்காரர்கள் கூட்டத்தைக் கலைந்து செல்லுமாறு வேண்டத் தொடங்கிவிடவே மாணவர்கள் ஆத்திரம் அடைந்துவிட்டனர். "ஆயிரம் தடைகள் இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. ஊர்வலமும் ஆர்ப்பாட்டமும் நடந்தே தீரும்" என்று உரத்த குரலில் கூறினான் பாண்டியன். எல்லா மாணவர்களும், மாணவிகள் மக்களும் அதே குரலைத் திருப்பி முழக்கினார்கள். எல்லாவற்றையும் விடக் கொடுமை போலீஸ் ஜீப்பிலேயே குருசாமியும் அங்கே ஏறிக்கொண்டு வந்திருந்ததுதான். "இவர்கள் எப்போது சார், போலீஸ் அதிகாரிகளாகச் சேர்ந்தார்கள்" என்று மாணவர்களில் சிலர் போலீஸ் அதிகாரிகளை நோக்கிக் கேட்டனர். போலீஸ் ஜீப்பருகே அலைமோதும் மாணவர் கூட்டத்தைப் பார்த்து இராவணசாமியும் குருசாமியும் மிரண்டனர். தோளில் ஆறு கெஜம் புடவை போல் புரண்டு கொண்திருந்த இரட்டைக் கரைத் துண்டுகளை மெல்லக் கீழே நழுவவிட்டு மறைத்துக் கொள்ள முயன்றார்கள். மாணவர்களோ அவர்கள் காது கேட்கும்படியே அவர்களை ஏளனம் செய்து பேசத் தொடங்கினர்.
'விலைவாசி நிலவரம் - இந்த ஆட்சியில் கீழ்க்கண்டவற்றின் விலைகள் ஏறியுள்ளன' - என்று எழுதிய ஓர் அட்டையில் : 1. மெடிகல் காலேஜ் ஸீட் - ரூபாய் பதினையாயிரம் 2. குமாஸ்தா வேலை - ரூபாய் மூவாயிரம் + சிபாரிசு 3. ஆசிரியர் வேலை - ரூபாய் இரண்டாயிரம் 4. துணைவேந்தர் பதவி நீடிப்புக்கு - மந்திரிக்கு டாக்டர் பட்டம் என்று வரிசையாக எழுதப்பட்டிருந்தது. அந்த அட்டையை ஜீப்பின் அருகே கொண்டு வந்து, 'உங்களால் ஏறியிருக்கும் விலைவாசி உயர்வைப் பாருங்கள்' என்று சொல்லிக் கொண்டே இராவணசாமிக்கும், குருசாமிக்கும் காட்டினான் ஒரு மாணவன்.
'விலைவாசிகள் இறக்கம்' - இந்த ஆட்சியில் கீழ்க்கண்டவற்றின் விலைகள் படு மலிவாகியுள்ளன. 1. நீதி 2. நேர்மை 3. பெண்களின் கற்பு 4. மக்களின் உரிமைகள் என்று வரிசையாக எழுதப்பட்டிருந்தது. இந்த வாசக அட்டைகளைப் போலீஸ் ஜீப் அருகே மாற்றி மாற்றிக் காட்டி விசிலடித்துக் கேலி செய்து இராவணசாமியையும் கோட்டம் குருசாமியையும் மடக்கி வளைத்துக் கொண்டார்கள் மாணவர்கள்.
'தோளில் பரிவட்டம்- தொங்கும் தரை மட்டும்- இதுதான் மாவட்டம்' என்று அங்கேயே இயற்றிய ஒரு கவிதையை கோட்டம் குருசாமியை நோக்கி அப்போதே உரத்த குரலில் மற்ற மாணவர்களின் சிரிப்பொலிகளுக்கு இடையே அரங்கேற்றினான் ஒரு மாணவன். அங்கிருந்த போலீஸ் வேனில் போய் வயர்லெஸ் மூலம் யாரையோ கலந்து பேசிவிட்டுத் திரும்பி வந்து ஊர்வலத்துக்கு அனுமதி தர முடியும் என்றும் செல்லும் வழியை விளக்கி அனுமதி கேட்டு எழுதித் தர வேண்டும் என்றும் மாணவர்களிடம் தெரிவித்தார் ஒரு பெரிய போலீஸ் அதிகாரி. பாண்டியன் அப்படியே எழுதிக் கொடுத்தான். மல்லை இராவணசாமியும், கோட்டச் செயலாளர் குருசாமியும் போலீஸ் ஜீப்பில் ஏறி வந்து நோட்டம் பார்த்தது மாணவர்களைக் குமுறச் செய்திருந்தது. போலீஸ் அதிகாரிகள் கட்சிச் செயலாளர், கட்சி எம்.எல்.ஏ. ஆகியோரின் எடுபிடிகள் போல் நடப்பதைக் கண்கூடாகக் கண்டார்கள் மாணவர்கள். போலீஸ் ஜீப்பில் வந்திருந்த காரணத்தால் இராவணசாமியும், குருசாமியும் மாணவர் கூட்டத்திலிருந்து தப்ப முடிந்தது. "ஊர்வலத்துக்கு அனுமதி பெறுகிறீர்கள்! வன்முறைகள் எதுவும் இன்றி அமைதியாக ஊர்வலம் நடக்க வேண்டும்" என்று தெரிவித்துவிட்டு உடனிருந்த கட்சிப் பிரமுகர்களோடு புறப்பட்டுப் போய்விட்டார் போலீஸ் அதிகாரி. ஊர்வலத்தினர் இரண்டு இரண்டு பேராக அணிவகுத்துச் செல்லுமாறு பாண்டியனும் மற்றவர்களும் ஒழுங்கு செய்தார்கள். முதலில் கண்ணுக்கினியாள் தலைமையில் மாணவிகள் அணிவகுத்து நின்றனர். 'பாலேசுவரியைப் பழி வாங்கிய போலீஸ் ஒழிக' 'பொய்வழக்குப் போடும் போலீஸ் ஒழிக' 'மேரிதங்கத்தைக் கொன்ற நிர்வாகம் திருந்தட்டும்' 'பேராசிரியரை அவமானப்படுத்திய போலீஸ் ஒழிக' என்றெல்லாம் வாசகங்கள் எழுதிய அட்டைகள், பானர்கள், மாணவிகளிடம் இருந்தன. மாணவிகளை அடுத்து மாணவர்கள் அணிவகுத்து நின்றனர். மாணவர்களைத் தொடர்ந்து பல்கலைக் கழக ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களும், ஊழியர்களும் நின்றனர். பொதுமக்களும் தோட்டத் தொழிலாளர்களும் பின் வரிசையில் நின்றனர். பல்கலைக் கழகம் திறக்கின்ற தினத்தன்று மல்லிகைப் பந்தலுக்கு வந்து இறங்கியதும் இறங்காததுமாக ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்திருந்த மாணவிகளுக்குக் கூட அவர்களிடம் அளிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தின் மூலம் எல்லா விவரங்களும் தெரிவிக்கப்பட்டிருந்ததன் காரணமாக உணர்ச்சிக் குமுறல் அதிகமாக இருந்தது. துணைவேந்தர் பல்கலைக் கழகத்தை திடீரென்று மூடி விடுதிகளைக் காலி செய்ய உத்தரவிட்ட போது மேரிதங்கத்தின் தற்கொலை நிகழ்ச்சியால் மாணவர்களிடையே எவ்வளவு உணர்ச்சிக் குமுறல் இருந்ததோ அதே உணர்ச்சிக் குமுறல் மாணவி பாலேஸ்வரி மீது பொய் வழக்குப் போட முயன்ற போலீஸாரின் கொடுமையாலும் பேராசிரியர் ஸ்ரீராமன் தாக்கப்பட்ட அக்கிரமத்தாலும் பல்கலைக் கழகம் திறக்கிற தினமாகிய அன்றைக்கும் ஏற்பட்டிருந்தது. இரு பக்கங்களிலும் ஊர்வலத்தின் முன்னும் பின்னும் போலீஸ் வந்து கொண்டிருந்தது. கடை வீதிகளில் எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பாதை ஓரங்களில் தென்படும் பூக்கடை, பழம், காய்கறி விற்கும் தள்ளுவண்டிகள் கூடக் காணப்படவில்லை. விண்ணதிர முழங்கும் கோஷங்களுடன் அந்த மிகப்பெரிய ஐந்தாறு மைல் நீள ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது. ஊர்வலத்தின் முடிவில் பாலேஸ்வரியிடமும், பேராசிரியரிடமும் காட்டு மிராண்டித்தனமாக நடந்த கொண்ட இன்ஸ்பெக்டரை உடனே நீக்குமாறு கோரி ஆர்.டி.ஓ.விடம் ஒரு மனுவைக் கொடுப்பதாக இருந்தார்கள் அவர்கள். ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு முன்பாகவே நூறு கெஜம் இப்பால் தலைமைப் போலீஸ் அலுவலகம் இருந்தது. ஊர்வலத்தைப் போலீஸ் அலுவலக வாயிலிலேயே தடுத்து நிறுத்தி விடுவதாகவும் அதற்கு மேல் மாணவர்களின் பிரதிநிதிகள் ஐவர் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்குச் சென்று சந்தித்து மனுவைக் கொடுக்கலாம் என்றும் போலீஸ் தரப்பிலிருந்து முதலிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களும் அதற்கு இணங்கியிருந்தார்கள். 'ஊர்வலமே நடக்க விடாமல் செய்துவிட வேண்டும்' என்று தான் மேலேயிருந்து போலீஸ், ஆர்.டி.ஓ., துணைவேந்தர் எல்லாருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஊர்வலத்தையும், கடையடைப்பையும் ஒடுக்க மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளுக்குமே ஆளும் கட்சியின் பிரமுகர்களும், கோட்டச் செயலாளர்களும், கட்சிச் செயல்வீரர்களும் ஒத்துழைப்புத் தருவார்கள் என்றும் அமைச்சர்களே பகிரங்கமாக அறிக்கை விட்டிருந்தார்கள். இருந்தும் பொதுமக்கள், மாணவர்களின் எழுச்சியையும் கூட்டத்தையும் பார்த்துத் தயங்கி மறுபடியும் மேலிடத்தை வற்புறுத்தி வேண்டிய பின்பே போலீஸ் அதிகாரிகள் ஊர்வலத்தை அனுமதித்திருந்தார்கள். மிகப்பெரிய அந்த ஊர்வலம் பஜார் ரோட்டில் போய்க் கொண்டிருந்தது. பஜார் ரோடு மல்லிகைப் பந்தல் நகரின் வீதிகளிலேயே மிகவும் நீளமானதாகும். வில்லின் முதுகு போல் தெருவின் நடுப்பகுதி மேடாகவும் மற்ற இரு முனைகள் தாழ்வாகவும் அமைந்த வீதி அது. நகரின் முதுகெலும்பு போல் இலங்கிய அந்தத் தெருவில் தான் குண்டூசி முதல் மோட்டார் சைக்கிள் வரை எல்லா வியாபாரங்களும் இருந்தன. மாணவர்களின் கோரிக்கையைச் சாக்கிட்டு ஆட்சியின் மேல் தங்களுக்கு இருக்கும் வர்த்தகர்களின் கடும் எதிர்ப்பும் சேரவே பஜார் ரோடு அன்று கடைகள் மூடப்பட்டு வெறிச்சோடிக் கிடந்தது. பஜார் ரோட்டில் நடுப்பகுதிக்குச் செல்லுகிற வரை கோஷங்களின் முழக்கம் தவிர வேறு எதுவும் சலசலப்போ பரபரப்போ இல்லை. பஜார் ரோடின் நடுப்பகுதியில் கோட்டச் செயலாளர் குருசாமிக்கு சொந்தமான 'அறிஞர் கலைஞர் சுவை நீர் அங்காடி' (டீ ஸ்டால்) என்ற ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டு நடந்து கொண்டிருந்தது. மாணவிகள் அந்த வாயிலைக் கடந்த போது கண்ணுக்கினியாள் ஒரு துண்டுப் பிரசுரத்தை எடுத்து நீட்டி, "தயவு செய்து கடையை மூடிவிடுங்கள். எங்களுக்காகச் செய்யாவிட்டாலும் எங்களுடைய கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை மதித்து மற்றெல்லாக் கடைக்காரர்களும் மூடியிருக்கும் போது நீங்கள் மட்டும் திறந்திருப்பது சரியில்லை" என்று அமைதியாகவே கோரினாள். கடையிலிருந்த ஆட்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. "அந்தப் பருப்பெல்லாம் இங்கே வேகாதும்மா! இது யார் கடை தெரியுமில்லே...? கொள்கைக்காகவாவது வியாபாரமே இல்லாவிட்டாலும் நாங்கள் திறந்து வைத்திருப்போம்" என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள் அவர்கள். அதைக் கேட்ட மாணவிகள் 'அந்த முரடர்களோடு வம்பு வேண்டாம்' என்று அமைதியாகத் தலைமைப் போலீஸ் அலுவலகத்தை நோக்கி முன்னேறினர். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|