இருபதாவது அத்தியாயம் கொலுப் பொம்மைகளுக்கு முன்னால் உயிருள்ள இரண்டு பதுமைகள் போல் பாண்டியனும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்ற அந்த மௌனத்தை வாசலில் வந்து குரல் கொடுத்த தந்தி போஸ்ட்மேன் தான் கலைத்தான். தந்தியை வாங்கச் சென்ற கண்ணுக்கினியாள் சிரித்துக் கொண்டே திரும்பி வந்தாள். "இப்போதெல்லாம் தந்திகள் கடிதங்களை விடத் தாமதமாகவும், அவசரத் தந்திகள் புக்-போஸ்ட்களை விடத் தாமதமாகவும் கிடைக்கின்றன." "ஏன்? நான் நேற்றுக் கொடுத்த தந்தியே இப்போது தான் வருகிறதா?" "இப்போதாவது வந்திருக்கிறதே?" "புறப்பட்டு வருவதாகச் செய்தி அறிவித்துக் கொடுக்கப்படும் பெரும்பாலான தந்திகள் அவற்றைக் கொடுத்தவர்களே புறப்பட்டு வந்து சேர்ந்த பின் தங்கள் கைகளாலேயே தான் வாங்க வேண்டும் போலிருக்கிறது." தபால் தந்தி இலாகாவின் 'திறமை'களைப் பத்து நிமிஷம் விமர்சனம் செய்து இருவரும் இரசிக்க முடிந்தது. நாயுடு எங்கேயோ வெளியில் போயிருந்தார். உள்ளே இருந்து தன் தாயைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து அந்த அம்மாளையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் கண்ணுக்கினியாள். அறிமுகம் என்ற நாகரிகச் சடங்கிற்கே கூசினாற் போல் சிறிது வெட்கமும் கூச்சமும் கலந்த மலர்ச்சியையும், வரவேற்பையுமே அந்தப் பழுத்த சுமங்கலியின் முகத்தில் காண முடிந்தது. இன்னொருவர் எடுத்துச் சொல்லும் முகமன் வார்த்தைகள், அறிமுகங்கள் எல்லாம் பழைய தலைமுறை மனிதர்களுக்குத் தேவையே இல்லை. அறிமுகமும் பரிச்சயமும் இல்லாமலேயே மனிதர்களிடம் பழகவும் பேசவும் அவர்களால் மறைக்க முடியாது. கண்ணுக்கினியாளின் தாய் நாச்சியாரம்மாள், மகள் பாதி அறிமுகத்தைச் சொல்லி முடிப்பதற்குள்ளேயே, முதலில் இருந்த வெட்கமும் கூச்சமும் நீங்கி, "இவளோட நாயினா சொல்லியிருக்காரு... தம்பியை உட்காரச் சொல்லும்மா... காப்பி எதினாச்சும் கொடு! உங்க நாயினாவும் இப்ப வந்திடுவாங்க" என்று சுபாவமாக ஏற்கெனவே அறிமுகமான ஒருத்தரிடம் பேசுவது போல் பாண்டியனிடம் பேசத் தொடங்கிவிட்டாள். பாண்டியனுக்குக் கொடுப்பதற்காகச் சிற்றுண்டியை எடுத்து வர உள்ளே சென்றாள் கண்ணுக்கினியாள். நாற்காலியில் உட்கார்ந்துவிட்ட பாண்டியனைப் பார்த்து, நிலைப்படி ஓரமாக எதிரே நின்றவாறே பேசிக் கொண்டிருந்தாள் கண்ணுக்கினியாளின் தாய். "அந்த நாளிலே பாரு... அறை ரூபாய்க்கு கொத்துக் கடலை வாங்கி வேக வச்சா... கொலுவுக்கு வாரவங்க போறவங்களுக்குக் கொடுத்தது போக அதுக்குப் பெறகும் பத்துப் பேர் சாப்பிடறாப்பில மீந்து கிடக்கும். இப்ப என்னடான்னா எத்தினி ரூபாய் கொடுத்து எது வாங்கினாலும் காணாமப் போகுது. பத்தமாட்டேங்குது... பண்டமும் காணலே, ரூவாயும் காணலே... எல்லாமே ஆனைவெலை குதிரை வெலை விக்கிது... ஒத்த ரூவாயைக் கொடுத்துப் பதினாறுபடி அரிசி வாங்கின கையாலே இப்பப் பதினாறு ரூவாயைக் கொடுத்து ஆறுபடி அரிசி வாங்க வேண்டியிருக்கு... விலைவாசி ரொம்பக் கொடுமையா ஏறிப்போச்சு தம்பீ!" "அதான் ரூபாய்க்கு மூணுபடி அரிசி தரோம்னு தெருவெல்லாம் கத்தினாங்க, சுவரெல்லாம் எழுதினாங்க... அதைப் பார்த்துத்தானே நீங்க ஓட்டெல்லாம் போட்டீங்க..." தட்டில் சிற்றுண்டியோடு வந்த கண்ணுக்கினியாள், "வீட்டுக்குள்ளே வந்ததும் வராததுமா இவரிடம் விலைவாசி ஏற்றத்தைப் பற்றிப் பேசாதே அம்மா! உடனே ஓடிப் போயிடப் போறாரு. நாலஞ்சு வருஷமா நீ எல்லாரிட்டவும் பேசிட்டிருக்கிற ஒரே விஷயம் இதுதான்னு இவருக்குத் தெரியாது. இவருக்காகவே பேசறயோன்னு தோணும். தப்பா நினைக்கப் போறாரு..." என்று தாயிடம் சொல்லிவிட்டுப் பாண்டியன் பக்கம் திரும்பி, "உங்களுக்குத் தெரியுமோ?... விலைவாசிகள் ஏறியிருப்பதைப் பற்றி எங்க அம்மாவிடம் இருக்கிற புள்ளி விவரங்களைப் பயன்படுத்தினால் அப்படிப் பயன்படுத்துகிற கட்சி வருகிற தேர்தலிலே நிச்சயமா ஜெயிச்சிடும்..." என்று சொல்லிச் சிரித்தாள். அதைக் கேட்டுப் பாண்டியனும் முகம் மலர்ந்தான். "கொஞ்சம் தைரியமாகச் சொல்லலாம் என்றால் இன்றைக்குப் பல எதிர்க்கட்சிகளிடம் இருக்கிற புள்ளி விவரங்களை விட உன் அம்மாவின் புள்ளி விவரங்கள் தெளிவாகவும் புரியும்படியாகவும் இருக்கு. நாளாக நாளாக எதிர்க்கட்சிகளுக்கு எதை எதிர்க்க வேண்டும் என்பது கூட மறந்து போயிடுது. தீப்பற்றி எரியறாப்பலே விலைவாசிகளின் கொடுமை பத்தி எரியுது... அதை யாரும் கவனிக்க மாட்டேங்கறாங்க." "அதில்லே, தம்பீ! ஒவ்வொரு கட்சித் தலைவருங்களும் ஒரு மாசமாவது மளிகைக் கடைக்குப் போயி அவங்கவங்க வீட்டுப் பாட்டுக்குப் பலசரக்குச் சாமான் வாங்கிப் போடறதுன்னு வச்சிக்கிட்டா எதை எதிர்க்கணும்குற ஞானம் அவங்களுக்கு அந்தக் கடை வாசல்லியே கிடைச்சிடும்..." "தப்பா நினைச்சுக்காதீங்க... அம்மாவுக்கு எல்லாரிடமும் பேச முடிந்த 'காமன் ஸப்ஜெக்டே' இதுதான்! இதைக் கேட்கப் பயந்துகிட்டுத்தான் நாயினா முக்கால்வாசி நேரம் வெளியிலே போயிடறாரு... பக்கத்திலே கோயிலுக்குள்ளே தெற்கு ஆடிவீதியிலே 'திருப்புகழ்ச் சங்கம்'னு ஒண்ணே இருக்கு. அதிலே நாயினாவோட பழைய நாடகக் கம்பெனிக் காலத்து சிநேகிதர் ஒருத்தரு இருக்காரு. நாயினா அங்கே போயிடுவாரு..." "அதாவது உங்க வீட்டிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ரெண்டும் இருக்குன்னு சொல்லு! இதிலே நீ எந்தப் பக்கம்? எது பவர்ஃபுல்?" "நான் எப்பவுமே அம்மா கட்சிதான். அதுதான் எதிர்க்கட்சி. அதுதான் பவர்ஃபுல்! அப்பா கட்சி ஆளும் கட்சி. குற்றச்சாட்டுக்களைக் காதில் போட்டுக் கொள்ளாமலே மெல்ல நழுவித் திருப்புகழ் சங்கத்துக்குத் தப்பி ஓடி விடுவார் நாயினா..." "பாவம்! அருணகிரிநாதர் திருப்புகழை இதற்காக எழுதியிருக்க மாட்டார்..." இந்த சமயத்தில் கையில் ஒரு குடையும் மற்றொரு கையில் தடிமனான திருப்புகழ்ப் புத்தகமுமாகக் கந்தசாமி நாயுடு உள்ளே நுழைந்தார். பாண்டியனைப் பார்த்ததும், "அடடே, வா தம்பீ! எப்போது வந்தே?" என்று வரவேற்று விட்டு, "என்ன வந்ததும் வராததுமா தம்பிகிட்டே அருணகிரிநாதரு தலையை உருட்டறீங்க?" என்று மனைவியையும் மகளையும் பார்த்துக் கேட்டார் நாயுடு. பேசிக் கொண்டே சிற்றுண்டியை முடித்திருந்த பாண்டியனுக்குக் காப்பி கொண்டு வந்து கொடுப்பதற்காக உள்ளே சென்ற கண்ணுக்கினியாள் திரும்பி, "நாயினா! உங்களுக்குக் காப்பி கொண்டாரட்டுமா?" என்று தந்தையைக் கேட்டாள். 'கொண்டு வா' என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்து விட்டுப் பாண்டியனுக்கு அருகே மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார் நாயுடு. "என்ன தம்பீ, உங்க யுனிவர்ஸிடியிலே மந்திரி கரியமாணிக்கத்துக்கு டாக்டர் பட்டமில்லை தர்ராங்களாம்? இதென்னப்பா கயவாளித்தனம்? எனக்கு தெரிஞ்சு உ.வே.சாமிநாத ஐயருக்குத்தான் அந்த நாளிலே மொதமொதலா இப்பிடி ஒரு ஹானரரி டிகிரியைக் கொடுத்தாங்க... அவரு பட்டிதொட்டி எல்லாம் அலைஞ்சு கார் போகாத ஊரு, ரயில் போகாத ஊருக்கெல்லாம் கட்டை வண்டியிலும், நடந்தும் போயி ஏட்டையும், சுவடியையும் தேடிக் கொண்டாந்து இப்படி இவனுக 'வால்க' போடற தமிழை எல்லாம் அச்சுப் போட்டுக் கொடுத்தாரு, பதிப்பிச்சாரு. ஐயமாருலே வேற யாரும் தமிழுக்கு இவ்வளவு பாடுபடலே... முக்கால்வாசி ஐயமாருங்க டாக்டரு, வக்கீல், சர்க்கார் உத்தியோகம்னு, போய்க்கிட்டிருந்த காலத்திலே அவரு தமிழைக் கட்டிக்கிட்டு உசிரை விட்டாரு. அது ரொம்ப ரொம்ப பெரிய காரியம். அப்பிடி இந்த மாதிரி பெரிசா என்ன செய்துபிட்டாரு தமிழுக்கு? இவருக்கு எதுக்கு டாக்டரு?" "இப்போதெல்லாம் சாதனைகளுக்காகக் கௌரவங்கள் வழங்குவதும் பெறுவதுமே சாதனைகளாகக் கருதப்பட்டுப் பெரிய மனிதர்கள் அவற்றுக்காகத் தவித்துப் பறக்கிற காலம் இது." காப்பி வந்தது. பாண்டியனும், நாயினாவும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கண்ணுக்கினியாள் காலையில் செய்தித் தாளில் படித்த டாக்டர் பட்ட விவகாரம் நினைவுக்கு வந்து அதைப் பற்றி பாண்டியனிடம் விசாரித்தாள். மணவாளனையும், வேறு மாணவர் தலைவர்களையும் கலந்து பேசி எப்படிப் போராடுவது என்று யோசித்துக் கொண்டிருப்பதாகப் பாண்டியன் அவளுக்கு மறுமொழி கூறினான். அப்போது கொலுவுக்காக நாலைந்து பெண்கள் அடங்கிய ஒரு கூட்டம் வீட்டுக்குள் நுழையவே கண்ணுக்கினியாளும் அவள் தாயும் அவர்களை வரவேற்றுக் கொலுவுக்கு முன் அழைத்துச் சென்றார்கள். "நீ மாடிக்கு வா, தம்பீ! நாம் அங்கே போயிப் பேசலாம். இனிமே இங்கே பொம்பிளை ராஜ்யம் ஆரம்பமாயிடும்..." என்று பாண்டியனை மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார் நாயுடு. "ராத்திரி இங்கேயே சாப்பிடலாம்... உனக்கு அவசரம் ஒண்ணுமில்லியே தம்பி?" என்று நாயுடு கேட்ட போது பாண்டியன் சற்றே தயங்கினான். "கொஞ்சம் நேரம் பேசிக்கிட்டிருக்கலாம். சாப்பாடு இன்னொரு நாளைக்கி வைச்சுக்கலாம்... இன்னிக்கி வேண்டாம். எட்டரை மணிக்குள்ளே நான் மறுபடியும் மணவாளன் வீட்டுக்குப் போகணும்... அங்கே நெறைய 'ஸ்டூடன்ஸ்' வந்து காத்திருப்பாங்க..." "எல்லாம் போகலாம், தம்பீ! சாப்பிட்டுவிட்டு அப்புறம் போயேன். நான் விட்டாலும் கண்ணுவிடாது... சாப்பிடாமே நீ இங்கிருந்து போக முடியாது..." சம்மதிப்பதைத் தவிர வேறு வழியின்றி அவன் மௌனம் சாதித்தான். அந்த மாடிப் பகுதி ஓர் அறையாக இல்லை. நீண்ட கூடமாக இருந்தது. நடுவே மேஜை நாற்காலிகள் இருந்தாலும் கூடத்தின் நான்கு சுவரோரங்களிலும், மர அலமாரிகளிலும் பலவிதமான நாடகப் பண்டங்கள் வைக்கப்பட்டிருந்தன. சுருட்டி வைக்கப்பட்ட ஸீன்கள், ஜிகினா, கண்ணாடிக்கல் பதித்த கீரிடங்கள், தங்க நிறத் தாள் ஒட்டிய கதாயுதம், திரிசூலம், வேல், வாள், பிளைவுட் பலகையில் வண்ணம் எழுதிய கதவு - பிளைவுட்டில் ஜன்னல் போல் வரைந்த நாடக மேடை வீட்டின் பகுதிகள், பூங்காக் காட்சி எல்லாம் தூசி படிந்திருந்தன. பச்சை, சிவப்பு, நீலம் என்று கண்ணாடித்தாள் ஒட்டிய டிராமா லைட்டுகள், மைக், ஒலி பெருக்கி, நாடக உடைகள் எல்லாம் கதவில்லாத மர அலமாரிகளில் காட்சி அளித்தன. "அதோ, அந்த அலமாரியிலே கிடக்குதே அந்தக் கதாயுதத்தைத் தூக்கிக்கிட்டுத் தான் உங்க 'அண்ணாச்சி' பீமசேனன் வேசத்திலே மேடையேறி அட்டகாசம் பண்ணிக்கிட்டிருந்தாரு... இப்ப கோபால்னு சினிமாவிலே ஹீராவா ஜொலிக்கிறானே, அவன் நம்ம கம்பெனியிலே, 'ஸ்திரீபார்ட்' கட்டிக்கிட்டு இருந்தவன் தான். 'முத்துக்குமார்'னு வசன கர்த்தாவா போடுபோடுன்னு வெளுத்து வாங்கிக்கிட்டிருக்கானே அவனும் இங்கே இருந்தவன் தான்..." "இவ்வளவு சாதனங்களையும் வச்சிக்கிட்டு ஏன் கம்பெனியை மூடிட்டீங்க?" பாண்டியனின் இந்தக் கேள்விக்கு உடனே மறுமொழி கூறாமல் தயங்கினார் நாயுடு. அவர் முகம் இருண்டது. சுற்றி இருந்த எல்லாவற்றையும் பார்த்துவிட்டு நெஞ்சு விம்மித் தணியப் பெருமூச்சுவிட்டார். அப்புறம் சொன்னார்: "இந்தக் கலை இன்னிக்கி வாழைமரம் போல ஆயிடிச்சு. குலை தள்ளி அந்தக் குலையிலே தார் முற்றிக் காய்கள் பக்குவப்பட்டதும் தாரை வெட்டி நல்ல விலைக்கு வித்துப்பிட்டு, அப்பாலே தாய் வாழையை அழிச்சிடுவாங்க. 'சினிமா'ங்கற குலை தள்ளித் தார் முற்றியதும் அது நல்ல விலையாகி விற்குது. ஆனால் அந்தத் தாரை ஈன்ற தாய் வாழையாட்டம் நாடகக் கலை அழியுது. கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலம் நாடகத்தாலே வாழ்ந்த நான் இப்ப சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி நாடகங்களுக்கும், ஸ்கூல்கள், ரெக்ரியேஷன் கிளப்புகளின் நாடகங்களுக்கும் இந்த சீன், ஸெட், கிரீடம், டிரஸ், லைட்டு, மைக் இதையெல்லாம் அப்பப்போ வாடகைக்கு விட்டுக்கிட்டிருக்கேன், தம்பீ! இதைத் தவிர மேலூர் ரோட்டிலே 'ஒத்தக் கடை'யிலே முல்லைக்கால் பாசனத்திலே கொஞ்சம் நிலபுலன் இருக்கு. தெற்கு மாசி வீதியிலே ஒரு சின்ன வீடும் உண்டு. அதைப் பொடவைங்களுக்குச் சாயம் காய்ச்சற பட்டு நூல்காரரு ஒருத்தருக்கு வாடகைக்கு விட்டிருக்கேன். இதெல்லாம் இல்லாட்டி, கம்பெனி நடக்கிற காலத்திலே சிக்கனமாக இருந்து இப்பிடிக் கொஞ்சம் சேர்த்திருக்காம விட்டிருந்தேனின்னா, இன்னிக்கு நானே தெருவில் தான் நிக்கணும். ஏதோ அந்த அனுமாரு கிருபையிலே நான் தெருவிலே நிக்கலே, என்னை நம்பினவங்களையும் தெருவிலே நிக்கறாப்பல யாரையும் விடலே..." "உங்க பொண்ணுக்கு உங்க கம்பெனி நாடகங்களிலே நடிச்சுப் பழக்கம் உண்டா? சமீபத்தில் யுனிவர்ஸிடியிலே பாஞ்சாலி சபதத்துலே பிரமாதமா நடிச்சுது." "சின்னப் பொண்ணா இருந்தப்ப பால மீனாட்சி, பால லோகிதாசன், பாலகிருஷ்ணன், பாலமுருகன்னு அந்த வயசுக்கு ஏத்தாப்ல ஏதோ சிலதுலே நடிச்சிருக்கு. பத்து வயசுக்கப்புறம் நானே அதை நடிக்க விடலே. படிப்பிலே கவனம் கெட்டுப் போயிடுமோன்னு எனக்கே ஒரு பயம் வந்திடிச்சு. தவிர இந்த 'லயன்லே' வந்தாலே நடத்தை பிசகிப் போயிடும்மோன்னு ஒரு பயமும் அப்ப எனக்கு இருந்திச்சு. கடைசியிலே இத்தனை கவனத்தையும் மீறி இதிலேயே 'டிப்ளமா' வாங்கணும்னு கல்கத்தா போயி ரவீந்திர பாரதி யூனிவர்ஸிடியிலே சேரக் கிளம்பிடிச்சு அது. நல்லவேளையா மல்லிகைப் பந்தல்லேயும் அந்த 'டிப்ளமா' இருந்ததாலே அங்கேயே கொண்டாந்து சேர்த்தாச்சு..." "இது பரவாயில்லை... ஒண்ணைத் தொழிலா நடத்தறதுக்கும் ஒரு 'சயின்ஸா' படிக்கிறதுக்கும் நல்ல வித்தியாசங்கள் இருக்கும். உங்கள் பெண்ணுக்கும் இதிலே நல்ல டேஸ்ட் இருக்கிறதாகத் தெரியுது." "டேஸ்ட் இருந்து என்ன தம்பீ பண்ணப் போறோம் இனிமே? அவ என்ன தன்னந்தனியா 'ட்ரூப்' வச்சு நாடகமா நடத்தப் போறா?" "நடத்த முடியாதுன்னு இப்பவே நீங்க எப்படிச் சொல்லிவிட முடியும்? மலையாளத்திலேயும், வங்காளத்திலேயும் கதை, நாவல், கவிதை, இலக்கியம் எல்லாம் இந்தக் காலத்தினாலே பாதிக்கப்பட்டு இக்கால நவீன மாறுதல்களையும், யதார்த்தத் தன்மைகளையும் அடைந்திருக்கிற மாதிரி நாடகமும் மாறுதல் அடைந்து வளர்ந்திருக்கு. தமிழ் நாடகமும் அப்படி ஆகணும்னா இந்த 'டிப்ளமா' வாங்கறவங்க அதற்கு முன் முயற்சி செய்துதான் ஆகணும்..." "எனக்கு இதிலே அவ்வளவு நம்பிக்கை எல்லாம் இல்லே, தம்பீ! 'அது'னோட முகம் கோணறாப்பல மறுத்துப் பேசிப் பழக்கப்படாதவன் நான். ஒத்தைக்கு ஒரே பொண்ணு. இதைத்தான் படிப்பேனின்னு ஒத்தக் கால்லே நின்னுது. சரிதான்னிட்டேன். 'டிப்ளமா' வாங்கி அதை வச்சு நாடகக் கலையை பெரட்டிப்பிடலாம்னு நான் நம்பலை..." கடந்தகால அனுபவங்களால் அவருக்கு இருந்த கசப்பே இந்த மறுமொழியில் தெரிந்தது. சில விநாடிகளில் அவரே பேச்சை வேறு திசைக்கு மாற்றினார். "உங்க ஊருக்கும் மதுரை வந்துதான் போவணும்னு அன்னைக்கு மல்லிகைப் பந்தல்லே அண்ணாச்சி கடையிலே பேசிக்கிட்டிருந்தப்ப நீ சொன்னியே தம்பீ! உங்க ஊரு எந்த ஊருன்னே இன்னும் சொல்லலியே...?" "பாலவந்தம். அருப்புக்கோட்டைக்குப் பக்கத்திலே இருக்கு." "தெரியும், தம்பீ! பாண்டித்துரைத் தேவரு ஊராச்சே அது...! எங்க மதுரையிலே நாலாவது தமிழ்ச் சங்கத்தை வச்ச புண்ணியவானோட ஊர்க்காரன் நீ... இல்லியா" அப்புறம் சிறிது நேரம் அவனுடைய பெற்றோர், தொழில், சொத்து, சுகம் பற்றிச் சுற்றி வளைத்து பழைய தலைமுறை மனிதருக்குரிய சிரத்தையுடன் ஒவ்வொன்றாக விசாரித்தார் நாயுடு. அவனும் சலிக்காமல் எல்லாவற்றுக்கும் பதில்கள் சொன்னான். பேசிக் கொண்டிருக்கும் போதே கீழே கொலுவில் கண்ணுக்கினியாளின் இனிய குரல் அசாவேரி ராக கீர்த்தனை 'ரா ராம இண்டி தாக' ஒலிக்கத் தொடங்கியது. 'ராமா நீ வீட்டுக்கு வரவேண்டும்' என்று அர்த்தமுள்ள அந்தக் கீர்த்தனையை ஏன் அப்போது அவள் தேர்ந்தெடுத்துப் பாடினாள் என்று நினைத்துச் சிரித்த போது அந்த நினைப்புக்கும் சிந்தனைக்கும் உல்லாசமான அநுமானம் ஒன்று பதிலாகக் கிடைத்துப் பாண்டியனைப் பூரிக்கச் செய்தது. தான் அன்று மாலையில் அந்த வீட்டுக்கு வந்திருப்பதைக் கொலுவில் பாடி சங்கீதத்தின் மூலமாகவும் அவள் வரவேற்பது அவனுக்குப் புரிந்தது. "எல்லா வீட்டிலேயும் கொலுவுக்கு வர்றவங்க பாடுவாங்க. கொலு வச்சிருக்கிறவங்க வர்றவங்களைப் பாடச் சொல்லிக் கேட்டுத் தொந்தரவு பண்ணுவாங்க... நம்ம கண்ணுவுக்கு நல்லாப் பாட வருமுங்கிறதுனாலே எல்லாமே இங்கே நேர்மாறா நடக்குது. வர்றவங்க நச்சரிச்சு இதைப் பாடவச்சுக் கேடுகிட்டுப் போறாங்க" என்றார் நாயுடு. பாடி முடித்த பின்னும் வெகு நேரம் வரை அந்த இனிய குரலும் அதைவிட இனிய அர்த்தமும் பாண்டியன் செவிகளிலும் உள்ளத்திலும் ஒலித்துக் கொண்டே இருப்பது போல் தோன்றியது. கீழ் வீட்டில் கொலுவுக்கு வந்து போகிறவர்களின் நடமாட்டம் குறைந்ததும் கண்ணுக்கினியாள் மாடிக்கு வந்து அவர்களைச் சாப்பிட அழைத்தாள். சாப்பாடு முடிந்து சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பின் அவன் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். "லீவு முடிஞ்சு மறுபடியும் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படறப்ப வந்திட்டுப் போ தம்பீ..." என்றார் நாயுடு. வாயில் வரை அவள் மட்டும் வழியனுப்ப வந்தாள். அவன் மெல்லிய குரலில் அவளைக் கேட்டான்: "அது ஏன் அந்தக் கீர்த்தனையைத் தேர்ந்தெடுத்துப் பாடினே? வேணும்னே குறும்புதானே?" "அதுதான் குறும்புன்னு புரிஞ்சிருக்கே? அப்புறம் ஏன் கேட்கிறீங்க?" சிரித்தபடி விடை கொடுத்தாள் அவள். மனம் கொள்ளாமல் குறுகுறுக்கும் மகிழ்ச்சியோடு பெருமிதமாகத் துள்ளிப் பாய்ந்து நடந்து சென்றான் பாண்டியன். மேலக் கோபுர வாசல் வழியே போகும்போது கல்விக் கூடங்களுக்கான ஸ்போர்ட்ஸ் சாமான்கள் விற்கும் ஒரு பெரிய கடை அருகே கதிரேசன் யாருடனோ நின்று பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்ததும் பாண்டியனின் நடை தயங்கியது. "வா பாண்டியன்! உலகம் ரொம்ப சிறியதுங்கறதை நம்ம பிச்சைமுத்து சார் நிரூபிக்கிறார். காலையிலே தான் நிலக்கோட்டையிலே இவர்கிட்ட சொல்லிக்கிட்டுப் புறப்பட்டோம். மறுபடியும் இன்னிக்குச் சாயங்காலமே இவரை இங்கே எதிர்பாராமல் சந்திக்கும்படி ஆயிடிச்சு... மாணவர்கள் எல்லோரும் வந்து அங்கே மணவாளன் வீட்டிலே காத்துக்கிட்டிருக்காங்க... உன்னைக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லி மணவாளன் என்னை அனுப்பிச்சாரு. நடுவழியிலே சாரைப் பார்த்தேன். பேசிக்கிட்டிருந்தோம். நல்ல வேளையா நீயே வந்திட்டே..." என்றான் கதிரேசன். தாம் வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்துக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கத் திடீரென்று தலைமை ஆசிரியரோடு புறப்பட்டு வர நேர்ந்ததாகப் பிச்சைமுத்து கூறினார். அத்தோடு அமைச்சர் கரியமாணிக்கத்துக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட இருக்கிற செய்தியை முதல் நாளிரவு அவர்கள் மூலம் கேள்விப்பட்டிருந்தது தவிர காலையில் பத்திரிகையில் பார்த்ததாகவும் கூறி வருத்தப்பட்டார். "நாங்கள் அதைச் சும்மா விடப் போவதில்லை. எப்படியும் எதிர்த்துப் போராடப் போகிறோம். அதற்காகத்தான் இன்று இங்கே உள்ள வேறு கல்லூரி மாணவர்கள் தலைவர்களையும் சந்திக்கிறோம். இந்தச் சந்திப்பில் ஒரு போராட்டத் திட்டம் உருவாகும்" என்றான் பாண்டியன். "ஒரு குறையா, இரண்டு குறையா? ஆயிரம் குறைகளும் ஊழல்களும் அவற்றை எதிர்த்துப் போராட யாருமின்றி இங்கே இன்று இந்த நாட்டில் கொழுத்துப் போயிருக்கின்றன. உங்கள் போராட்டம் எப்போதும் ஓயவே வழியில்லை. ஓயவும் கூடாது." பிச்சைமுத்து அமைதியான சுபாவமுள்ளவரைப் போலத் தோன்றினாலும் அவருடைய உள்ளார்ந்த சிந்தனைகள் மிகவும் தீவிரமாயிருந்தன. மாணவர்களின் படிப்பைப் பற்றி அக்கறை காட்டிப் பேசும்போது அவர் ஆசிரியர் பிச்சைமுத்துவாகத் தோன்றினார். சமூகப் புரட்சிகளையும், போராட்டங்களையும் பற்றிப் பேசும் போது அவர் தீவிரவாதி பிச்சைமுத்துவாகத் தோன்றினார். மாணவர்கள் முதல் முதலாக நிலக்கோட்டையில் அவரைச் சந்தித்த போது புரிந்து கொண்டதை விட இப்போது அதிகமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. 'மாற்றங்களை எல்லாம் சாத்வீக முறையில் கொண்டுவர ஆசைப்படுகிறவர்' - என்று தான் முதற் பார்வையில் கதிரேசன் அவரைப் பற்றி நினைத்திருந்தான். உண்மையில் அப்படியில்லை. அவர் தீவிரவாதி என்பது போகப்போக விளங்கிற்று. பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர் உத்தியோகத்திற்காகத் தம்மோடு பழகுகிறவர்களிடம் தம்மைத் தெளிவாக இனங்காட்டிக் கொள்ளாமல் பழகும் திறனை ஓரளவு பிச்சைமுத்துவே கடைப்பிடித்து நடிக்கிறாரோ என்று கூடத் தோன்றியது. ஆனாலும் கதிரேசனுக்கு அவர் மேல் ஏற்பட்டிருந்த மதிப்பு ஒரு சிறிதும் குறையவில்லை. 'நான் ஒரு தீவிரவாதி. புரட்சியில் விருப்பமுள்ளவர்கள் என் பின்னால் வாருங்கள்' என்று தன்னை ஒருவர் வெளிப்படையாக இனங்காட்டிக் கொண்டு வந்து முன்னால் நிற்பதற்கு இன்று இந்தச் சமூகம் ஏற்றதாக இல்லை. அப்படி ஒரு பக்குவமும் தெளிவும் சமூகத்திற்கு வருகிற வரை இலட்சியவாதிகளும் கூடத் தந்திரமாகத்தான் இருக்க வேண்டும். வேறு வழி இல்லை - என்று கதிரேசனே எண்ணியதனால் அவன் பிச்சைமுத்துவின் நிலையைத் தவறாக எண்ணவில்லை. அவர் கொடுத்திருந்த புத்தகங்கள் வேறு அவனுக்கு அவரை ஓரளவு அடையாளம் காட்டியிருந்தன. இளமைத் துடிப்பும், சுறுசுறுப்பும் அந்த நூல்களின் மேல் ஒரு பற்றையும் கவர்ச்சியையும் ஊட்டி அவனைக் காந்தம் போல் இழுத்தன. அவன் அதை இன்னும் பலருக்குப் படிக்கக் கொடுத்து அவர்கள் மனத்தையும் அந்த நூல்கள் கவர்ந்து வசீகரிக்கப்படுவதை ஆவலோடு எதிர்பார்க்கும் அளவு அவற்றில் ஒரு மயக்கமே அடையத் தொடங்கியிருந்தான். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|