பத்தாவது அத்தியாயம்

     பாண்டியனையும் மோகன்தாஸையும் கண்டதும் மாணவர்களின் உற்சாகம் அதிகமாயிற்று. வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தாலும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருந்தாலும் 'கியூ'வில் நகர்ந்து கொண்டிருந்தார்கள் மாணவர்கள். அப்போது எதிர்த்தரப்பைச் சேர்ந்த அன்பரசன், வெற்றிச்செல்வன் முதலிய சிலர் தங்கள் சார்பை அடையாளம் காட்டும் நீண்ட மேல் துண்டுகளோடு வந்து கியூவின் முன்னால் நிற்க இடம் தேடினார்கள். உடனே பெருவாரியான மாணவர்கள், விசில், கூப்பாடு, எதிர்ப்புக் குரல்கள் மூலம் அவர்கள் பின்னால் தாமதமாக வந்து முன்னால் நிற்பதை எதிர்த்தனர். ஆனால் பாண்டியனும், மோகன்தாஸும் மிகவும் பெருந்தன்மையாக அன்பரசன், வெற்றிச்செல்வன் ஆட்களை வணங்கி வரவேற்று முன்னாலேயே தங்களோடு சேர்ந்து கியூவில் நிற்கச் செய்து கொண்டார்கள்.

     பல்கலைக் கழக எல்லைக்குள் ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தப்பட்ட தென்மணி லாரிகளைச் சுற்றிச் சில நூறு மாணவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். முன்னால் வோட்டுப்போட்ட மாணவர்கள் போய் அவர்கள் செய்து கொண்டிருந்த காவலை ஒப்புக் கொண்டு அவர்களை வோட்டுப் போட அனுப்ப வேண்டியிருந்தது. காலையில் விடிந்ததுமே அந்த லாரிகளையும், அதில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், கற்குவியல்கள், மண்ணெண்ணெய் நிரப்பிய டின்கள் ஆகியவற்றோடு 'தென்மணி லாரி' என்ற பெயர் முகப்பையும் புகைப்படம் எடுத்திருந்தார்கள் மாணவர்கள்.

     பிரதம தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றிய பூதலிங்கமும் அவரைச் சேர்ந்தவர்களும் கட்டுப்பாடாகச் செயலாற்றியதாலும், பெரும்பான்மையான மாணவர்கள் ஒற்றுமையாக இருந்ததாலும், கலவரம் நிகழ்த்த விரும்பியவர்களின் சதி எதுவும் பலிக்கவில்லை. தென்மணி லாரி உரிமையாளரும், சட்டமன்ற உறுப்பினருமான இராவணசாமி போலீசில் புகார் எழுதிக் கொடுத்திருந்தார். லாரிகளைச் சாலையோரம் நிறுத்தி வைத்துவிட்டுத் தம்முடைய டிரைவர்கள் டீக்கடைக்குப் போயிருந்த போது மாணவர்கள் அநியாயமாக அவற்றைக் கடத்திக் கொண்டதாக இராவணசாமியின் புகாரில் எழுதப்பட்டிருந்தது. அக்கடித நகல் துணைவேந்தருக்கும் கொடுத்தனுப்பப் பட்டிருந்தது. பாண்டியன் முதலிய மாணவர்கள் இன்னொரு பிரிவு மாணவர்களைத் தாக்கவும், அவர்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு நெருப்பு வைக்கவும் தம்முடைய லாரிகளில் பயங்கர ஆயுதங்களையும் கெரோஸின் டின்களையும் நிரப்பிக் கொண்டு சென்றதாகக் கயிறு திரித்து அந்தப் பழியையும் மாணவர்கள் தலையிலேயே சுமத்தப் பார்த்திருந்தார் இராவணசாமி. தேர்தல் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியே அவருக்கும் கோட்டம் குருசாமிக்கும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாயிருந்தது. பதினொன்றரை மணிக்குள் கலைப் பிரிவு, நுண்கலைப் பிரிவு, ஆசிரியர் பயிற்சி, கீழ்த்திசைப் பட்டப் பிரிவு ஆகிய துறைகளைச் சேர்ந்த எல்லா மாணவர்களும் வோட்டளித்து முடிந்து விட்டது. சிறிது தொலைவு விலகியிருந்த மருத்துவக் கல்லூரி, பொறியியற் பிரிவு, வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் தான் இன்னும் வோட்டளிக்க மீதம் இருந்தனர். கியூவில் அவர்கள் வரிசை தான் நீண்டிருந்தது. அதுவரை அலுவலகத்துக்கு வராமலிருந்த துணைவேந்தர் அப்போதுதான் அலுவலகத்துக்கு வந்தார். அவர் வீட்டிலிருந்து புறப்படும் முன் பண்புச் செழியன் வந்து முதல் நாளிரவு 'தம்மை மாணவர்கள் சிரமப்படுத்தியது பற்றிப் புகார் செய்திருந்தார். அது போதாதென்று காலை பத்தரை மணிக்கே துணைவேந்தரின் வீட்டுக்குப் போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு மூன்று முறை 'தென்மணி லாரி' விஷயமாக ஃபோன் செய்து பல்கலைக் கழக எல்லைக்குள் வர அநுமதி கேட்டு விட்டார். ஆனாலும் துணைவேந்தர் எதற்கும் பிடி கொடுக்கவில்லை. பயந்தார்.

     "ஸ்டூடண்ட் கவுன்ஸில் தேர்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பல்கலைக் கழக மைதானத்தில் மாணவர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருக்கிறார்கள். இப்போது நீங்கள் உள்ளே நுழைந்தால் வீண் கலகம் வரும். அன்று கல்லெறி சம்பந்தமாகத் தேடிக் கொண்டு இங்கே மாணவர்களை அரஸ்ட் செய்ய உள்ளே வருவதற்கு உங்களை அநுமதித்தற்கே மாணவர்கள் என்மேல் கடுங் கோபத்தோடிருக்கிறார்கள். இன்றும் நீங்கள் உள்ளே வந்தீர்களானால் அதனால் கலகம் தான் மூளும். எதற்கும் நான் போய்ப் பார்க்கிறேன். அவசரப்படாதீர்கள். எம்.எல்.ஏ.யோ கட்சிச் செயலாளரோ கூட இங்கே வர வேண்டாம். மாணவர்கள் அவர்கள் மேல் ரொம்பக் கோபமாயிருக்கிறார்கள். லாரிகள் இருந்தால் நானே அவற்றை வெளியே அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன்" என்று சொல்லிவிட்டுத்தான் துணைவேந்தரே அலுவலகத்துக்குப் புறப்பட்டு வந்து சேர்ந்திருந்தார். தம்முடைய அறைக்குள் சென்று ஜன்னல் வழியே கீழே மைதானத்தைப் பார்த்த போது, நூல் நிலைய வாயிலில் வோட்டுப் போட மாணவர்களின் கியூ நிற்பதையும் தொலைவில் விடுதிகளின் அருகே பெருங்கூட்டமாக மாணவர்கள் சூழ லாரிகள் நிறுத்தப்பட்டிருப்பதையும் துணைவேந்தர் பார்த்தார். அவர் நிலைமை இருதலைக் கொள்ளி எறும்பு போலிருந்தது. இராவணசாமி, போலீஸ், கட்சிச் செயலாளர் ஆகியவர்கள் சொல்கிறபடி கேட்காவிட்டால் இன்னும் சில ஆண்டுகள் இந்தப் பதவியில் நீடிக்க முடியாது. அவர்கள் சொல்கிறபடி கேட்டுவிட்டாலோ, இளமையும், கோபமும், நியாய உணர்வும் உள்ள பல ஆயிரம் மாணவர்களை விரோதித்துக் கொள்ள நேரிடும். ஏற்கெனவே ஓரளவு மாணவர்களை விரோதித்துக் கொண்டும் ஆயிற்று. இராவணசாமியின் லாரிகளை ஒரு காரணமும் இன்றி மாணவர்கள் உள்ளே ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்கள் என்றோ, மாணவர்களே அதில் ஆயுதங்களையும் கற்களையும் நிரப்பியிருப்பார்கள் என்றோ அவர் நம்புவதற்குத் தயாராயில்லை. ஆனால் அதிகாரத்துக்கும் அரசியல் செல்வாக்கிற்கும் அவர் பயப்பட்டார்.

     எப்படி ஒரு சூதாட்டத்தில் முதலில் வெல்ல வேண்டும் என்ற தவிப்பும், வெற்றியடைய ஆரம்பித்த பின் இனி மேல் தோற்கக் கூடாதே என்ற தவிப்பும் மாறி மாறி வருமோ அப்படியே அதிகாரத்திலும் பதவியிலும் கூடத் தவிப்புகள் இருந்தன. துணைவேந்தர் பதவியை அடைகிற வரை அதை அடையத் தவித்தவர் அவர். இப்போது தம்மை விட்டு அது போய்விடாமல் இருக்க வேண்டும் என்ற தவிப்பில் அதற்கு ஏற்ப அவர் செயல்பட வேண்டியிருந்தது. மேலே உள்ளவர்களின் நிர்ப்பந்தத்துக்குத் தாளம் போட வேண்டியிருந்தது.

     பகலுணவு நேரமும் ஆகிவிட்டது. கியூவில் நின்றவர்கள் தவிர மற்ற மாணவர்கள் உணவு விடுதிக்குப் போவதும் வருவதுமாக இருந்தனர். துணைவேந்தர் தம் அறையிலிருந்தே நூல் நிலையத்திலிருந்த ஃபோனில் பேராசிரியர் பூதலிங்கத்தைக் கூப்பிட்டு இராவணசாமி கொடுத்திருக்கும் புகாரைப் பற்றிச் சொல்லி அவரிடம் விளக்கமும் விவரமும் கேட்டார். பூதலிங்கத்தின் நிலை தெளிவாக இருந்தது.

     "அவர்கள் ஏதாவது வம்பு செய்திருந்தால் தான் நம் பையன்கள் லாரிகளை உள்ளே கொண்டு வந்திருப்பார்கள். இவர்களாகத் தவறு செய்திருக்க மாட்டார்கள். ஆயுதங்களையும், கற்களையும், மண்ணெண்ணெய் டின்களையும் மாணவர்கள் லாரிகளில் நிரப்பிக் கொண்டு வந்ததாகக் கூறுவது அபாண்டம். அப்படி நடந்திருக்காது. அதை நான் ஒரு போதும் நம்ப மாட்டேன். நீங்களும் நம்பக்கூடாது" என்றார் பூதலிங்கம்.

     ஃபோனை வைத்துவிட்டுச் சிந்தித்த போது, இந்தப் பூதலிங்கத்தால் மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக மாணவர்களை நேசிக்கவும் மாணவர்களால் நேசிக்கப்படவும் முடிகிறதென்று வியப்பாயிருந்தது. துணைவேந்தருக்கு.

     இலாபம் கருதாமல் பிறரை நேசிக்கவும், பிறரால் நேசிக்கப்படவும் முடிந்தவர்கள் யாரோ, அவர்கள் உலகத்தை மிகவும் அர்த்தம் உள்ளதாகச் செய்து விடுகிறார்கள். ஆனால் அதைச் செய்யத் தம்மால் முடியவில்லையே என்று ஏங்கிப் பெருமூச்சு விட்டார் தாயுமானவனார்.

     அறையில் ஃபோன் மணி அடித்தது. வட்டாரப் பெரிய போலீஸ் அதிகாரி பேசினார். எம்.எல்.ஏ.யின் லாரிகளை மீட்பது சம்பந்தமாகப் போலீஸைப் பல்கலைக் கழக எல்லைக்குள் வரவிடுமாறு வேண்டினார் அந்த அதிகாரி. அவருக்கு உடனே தீர்மானமாக ஒரு பதிலும் சொல்ல முடியாமல் அவரைத் தவிர்த்து விடவும் முடியாமல் திணறினார் துணைவேந்தர். அப்போது பல்கலைக் கழக மணிக்கூண்டில் பகல் இரண்டு மணி அடித்தது. மாணவர்கள் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து நூல் நிலைய முகப்புக் கதவுகள் உட்புறமாகத் தாழிடப்பட்டன.

     சொல்லப் போனால் ஒன்றே முக்கால் மணிக்கே பல்கலைக் கழக நூல் நிலையத்தின் முன் நின்ற 'கியூ' முடிந்து மைதானம் காலியாகிவிட்டது. குறிப்பிட்டுச் சொல்லியிருந்த நேரம் வரை திறந்திருக்க வேண்டும் என்ற முறைக்காகவே பகல் இரண்டு மணி வரை வாக்குப் பதிவுக்குத் திறந்து வைத்திருந்தார்கள். இருதரப்பு மாணவர்களுக்கும் பிரதிநிதிகளாக இரண்டிரண்டு மாணவர்களை உள்ளே அநுமதித்த பின் பகல் இரண்டரை மணிக்கே வாக்குகளை எண்ணிவிடவும் ஏற்பாடு செய்துவிட்டார் பூதலிங்கம். பாதுகாப்புக்காகவும், எதிர்பாராத அசம்பாவிதங்கள் எதுவும் நடந்து விடக்கூடாதே என்பதற்காகவும், வாக்குகளை எண்ணும் இடமான நூல் நிலையக் கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தும் கூட வெளியே அங்கங்கே விடுதிகளிலும், மெஸ்களிலும் முடிவைப் பற்றிய ஆவலும் தவிப்புமே நிலவின. நூல் நிலைய முகப்பும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் தான் வெறிச்சோடிக் கிடந்தனவே தவிர மற்ற இடங்களில் மாணவர்கள் சிறு சிறு குழுக்களாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். கூடி உட்கார்ந்து சிரிப்பொலி கிளறச் செய்து கொண்டிருந்தார்கள்.

     அங்கே கலகம் விளைவிக்க வந்த தென்மணி லாரிகள் மூன்றையும் வளைத்துக் கொண்டு கூடியிருந்த மாணவர்களின் எண்ணிக்கை வாக்குப் பதிவு முடிந்த பின் மேலும் அதிகரித்திருந்தது. லாரிகளை மாணவர்கள் கொண்டு வந்து வரிசையாக நிறுத்தியிருந்த இடங்களிலிருந்து வெளியே எடுத்து ஓட்டிச் செல்ல வேண்டுமானால் எந்தச் சாலையில் ஓட்டிச் செல்ல முடியுமோ, அந்தச் சாலையின் குறுக்கே, கண்ணுக்கினியாளின் தலைமையில் இரண்டு வரிசையாக மாணவிகள் வேறு மறியலுக்கு உட்கார்ந்து விட்டார்கள். வாக்குப் பதிவு முடிந்து மெஸ்ஸில் போய்ப் பகலுணவை முடித்துக் கொண்டு திரும்பி வந்து தோழிகளோடு இந்த மறியலைத் தொடங்கியிருந்தாள் கண்ணுக்கினியாள். எவ்வளவு நேரமானாலும் புத்தகங்களைப் படித்துக் கொண்டே அங்கு அமர்ந்து மறியல் செய்வதென்ற திட்டத்துடன் கையில் ஆளுக்கொரு புத்தகத்தோடு வந்திருந்தார்கள் அவர்கள். கண்ணுக்கினியாளிடம் ஏ.ஜே. கிரானின் எழுதிய 'சிட்டாடல்' நாவல் இருந்தது.

     துணைவேந்தர் தாயுமானவனார் இந்த எல்லா நிலைமைகளையும் மாடியிலிருந்தே, தம் அறை முகப்பில் நின்று காண முடிந்தது. காலை பத்து மணிக்கே பகலுணவை முடித்துக் கொண்டு அலுவலகத்துக்கு வரும் வழக்கமுடையவர் அவர். நடுப்பகலில் இரண்டு மணியிலிருந்து மூன்று மணிக்குள் சிற்றுண்டி வேளைக்காக ஒரு முறை வீடு சென்று திரும்புவது அவர் வழக்கம். இன்று அதற்காக வீடு செல்வதற்குப் பதில் வீட்டிலிருந்து சிற்றுண்டி காப்பி எடுத்து வருமாறு காரையும் டிரைவரையும் அனுப்பி வைத்திருந்தார். மாணவர்கள் பல்கலைக் கழக எல்லைக்குள்ளே ஓட்டிக் கொண்டு வந்து நிறுத்திவிட்ட லாரிகள் பற்றி அவருடைய கவலையும், பயமும், குழப்பமும் விநாடிக்கு விநாடி அதிகமாகிக் கொண்டிருந்தன. அவரால் எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாமல் இருந்தது. போலீஸைப் பல்கலைக் கழக எல்லைக்குள் வரச் சொல்லிவிட்டு மாணவர்களையும், நகரப் பொது மக்களையும், பத்திரிகைகளையும் பகைத்துக் கொள்ளவும் பயந்தார். போலீஸை வரச் சொல்லாமல் லாரிக்கு உரியவர்களை உள்ளே வந்து லாரிகளைத் திருப்பி ஓட்டிக் கொண்டு போகச் சொல்லவும் பயந்தார். இருவரில் யார் வந்தாலும் மாணவர்களோடு ஒரு மோதல் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது என்பதை அவர் உணர்ந்திருந்தார். அந்த நிலையில் அறையை விட்டு வெளியே செல்வதற்கே பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது அவருக்கு. போலீஸிலிருந்தும், இராவணசாமியிடமிருந்தும் மாற்றி மாற்றி ஃபோன்கள் வந்து கொண்டிருந்தன. எம்.எல்.ஏ. ஓரளவு மிரட்டுகிற தொனியிலேயே பேசிவிட்டார்.

     "நீங்க இத்தினி மெத்தனமா இருந்தீங்கன்னா இந்தச் சமாசாரத்தை நான் மினிஸ்டர் காது வரை கொண்டு போக வேண்டியிருக்கும். அது உங்களுக்கே நல்லதில்லே. கோட்டச் செயலாளர் குருசாமியும் இதோ பக்கத்திலியே இருக்காரு. ஒண்ணு போலீஸை உள்ளே வரவிடுங்க. அல்லது எங்களையாச்சும் உள்ளாற வரவிடுங்க."

     "தயவு செய்து கோபிச்சுக்காதீங்க, மிஸ்டர் இராவணசாமி! நான் எப்படியும் உங்க லாரிகளைப் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைக்கிறேன். இன்னும் ஒரு ரெண்டு மணி நேரம் வரை எனக்காக பொறுத்துக்குங்க. அதுக்குள்ளே எப்படியாவது ஒரு வழி பண்ணிடலாம்."

     இராவணசாமி பதில் சொல்லாமல் மறுமுனையில் ஃபோனை உடைப்பது போல் வைக்கும் ஓசை துணைவேந்தரின் செவிப்பறையில் ஓங்கி அடிப்பது போல் ஒலித்தது. பதிவாளரைக் கூப்பிட்டு, 'உடனே வெளியாருக்குச் சொந்தமான அந்த லாரிகளை ஓட்டிக் கொண்டு போய்ப் பல்கலைக் கழகக் காம்பவுண்டுக்கு வெளியே விட்டுவிட வேண்டும்' என்று மாணவர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பவோ, மைக் மூலம் அறிவிக்கவோ செய்யலாமா என்று நினைத்தார் துணைவேந்தர். அப்போதிருந்த மனநிலையில் மாணவர்கள் அதற்குச் செவி சாய்க்க மாட்டார்களோ என்ற சந்தேகம் ஏற்படவே அந்த யோசனையையும் கைவிட்டார் அவர்.

     நண்பகல் மணி இரண்டே முக்கால். கார் டிரைவர், சிற்றுண்டிப் பொட்டலங்களையும், பிளாஸ்கில் காப்பியையும் கொண்டு வந்து வைத்துவிட்டுப் போனான். உடனே சிற்றுண்டி உண்ணவோ, காப்பி அருந்தவோ கூட அவர் மனம் ஈடுபாடு கொள்ளவில்லை. இன்னும் ஒரு மணி நேரத்தில் பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டால் மாணவர்களிடையே உற்சாக வெள்ளம் கரை புரண்டு ஓடும். அந்த உற்சாகப் பெருக்கில் காம்பவுண்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருக்கும் தென்மணி லாரிகளுக்கு என்ன நேரிடுமோ என்றும் அஞ்சினார் அவர்.

     துணைவேந்தர் பதற்றத்தோடும், பயத்தோடும் நூல் நிலையத்துக்கு ஃபோன் செய்து மறுபடியும் தாம் சொல்லுகிற வரை பேரவைத் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று கட்டளை பிறப்பித்தார். முடிவை அறிவிக்கிற வரை இருதரப்பு மாணவர்களின் பிரதிநிதிகளாக இருந்து எண்ணிக்கையைக் கண்காணிக்கிறவர்களையும், மற்றவர்களையும், யாரையுமே நூல் நிலையக் கட்டடத்துக்குள்ளேயிருந்து வெளியே விடவேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். தேர்தலில் தலையிடுவதில்லை என முன்பு நாம் செய்திருந்த முடிவிலிருந்து இப்போது அவரே மாறவேண்டியிருந்தது.

     இப்படிப் பேசி ஃபோனை வைத்த கையோடு பேராசிரியர் பூதலிங்கத்தினிடமே இன்னோர் உதவியையும் கூடக் கோரலாமோ என்று தோன்றியது அவருக்கு. உடனே மறுபடியும் ஃபோன் செய்து, "மிஸ்டர் பூதலிங்கம்! முடிவை அறிவிக்கு முன் தயவு செய்து நீங்கள் மட்டும் மைதானத்துக்குச் சென்று, மாணவர்கள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கும் லாரிகளை விட்டுவிடச் சொல்லுங்கள். மாணவர்கள் உங்கள் வார்த்தையைக் கேட்பார்கள். எனக்குத் தெரியும்" என்று குழைந்தார்.

     துணைவேந்தரின் தவிப்பும் திண்டாட்டமும் பூதலிங்கத்துக்குப் புரிந்தன. மைதானத்துக்குப் போய் மாணவர்களின் மன நிலையை அறிந்து வந்து சொல்வதாக இசைந்தார் பேராசிரியர். அவர் அதற்கு இசைந்தது துணை வேந்தருக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது. பெரிய பாரத்தைத் தோளிலிருந்து இறக்கி வைத்தாற் போல் உணர்ந்தார் அவர். சிற்றுண்டி சாப்பிட்டார். காப்பி அருந்தினார். போலீசுக்கு ஃபோன் செய்து தாமே நிலைமையைச் சரி செய்து லாரிகளைத் திருப்பி அனுப்ப முடியும் என்றும் அவர்கள் பல்கலைக் கழகத்துக்குள்ளே வரவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்திருந்தார். லாரிகளின் உரிமையாளரான எம்.எல்.ஏ.க்கு ஃபோன் செய்தார். அவருடைய ஃபோன் 'என்கேஜ்ட்' ஆக இருக்கவே அவர் ஒருவேளை மந்திரியோடு 'டிரங்கால்' பேசிக் கொண்டிருக்கிறாரோ என்று சந்தேகமும் பயமும் ஏற்பட்டு விட்டது துணைவேந்தருக்கு. எது எப்படியிருந்த போதிலும் மாணவர்களைத் தாம் நேரே சந்திக்காமல் பூதலிங்கத்தினிடம் அந்த வேலையைத் தந்திரமாக ஒப்படைத்து விட்டது ஒரு சிக்கலிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டு விட்ட திருப்தியை அவருக்கு அளித்திருந்தது. தபாலில் வந்திருந்த 'யுனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன்' தலைவரின் ரிப்போர்ட் ஒன்றை எடுத்துப் படிக்கத் தொடங்கினார் அவர். படிப்பதை அரைகுறையாக விட்டு விட்டு மீண்டும் அவர் முயன்ற போது கூட எம்.எல்.ஏ.யின் தொலைபேசி எண் அவருக்குக் கிடைக்கவில்லை. 'என்கேஜ்ட்' ஆகவே இருந்தது.

     வாக்குகளை எல்லாம் எண்ணி முடித்துப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் பெயர்களையும், வாக்கு விவரங்களையும் எழுதி அதில் எண்ணியவர்கள், மாணவர் பிரதிநிதிகளின் கையெழுத்துக்களையும் வாங்கிய பின் தாமும் கையெழுத்துப் போட்டு வைத்துவிட்டு உதவிப் பேராசிரியர் ஒருவரை கவனித்துக் கொள்ளச் சொல்லியபின் மைதானத்துக்கு வந்தார் பேராசிரியர் பூதலிங்கம். அவர் வெளியே வந்த பின் நூல் நிலையப் பிரதான வாயில் மீண்டும் உட்புறமாகத் தாழிடப் பட்டுவிட்டது. லாரிகள் மறித்து நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தை அவர் அடைந்த போது மணி நான்கு ஆவதற்கு இருந்தது. அங்கே பேராசிரியர் பூதலிங்கம் வருவதற்குச் சற்று நேரத்துக்கு முன்பு தான் கண்ணுக்கினியாள், பாண்டியனின் அறை நண்பன் பொன்னையாவைக் கூப்பிட்டுப் பணம் கொடுத்து ஒரு பெரிய டின் நிறைய இனிப்பு மிட்டாய் வாங்கி வரச் சொல்லி அனுப்பியிருந்தாள். பல்கலைக் கழக எல்லைக்குள்ளேயே இருந்த ஸ்டூடண்ட்ஸ் கன்ஸ்யூமர் கோவாபரேடிவ் ஸ்டோர்சுக்கு விரைந்திருந்தான் பொன்னையா. நான்கு மணிக்குத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பார். உடனே தன் கையாலேயே எல்லாருக்கும் இனிப்பு வழங்கலாம் என்று தான் அவள் இதைச் செய்திருந்தாள்.

     எதிர்பாராமல் திடீரென்று பேராசிரியர் பூதலிங்கம் எதிர்ப்படவே, லாரி செல்ல வேண்டிய பாதையை மறித்துக் குறுக்கே உட்கார்ந்திருந்த கண்ணுக்கினியாளும் தோழிகளும் உடனே மரியாதையாக எழுந்து நின்று அவரை வணங்கினர். லாரிகளைச் சூழ்ந்து இருந்த மாணவர்களும் விரைந்து வந்து அவரை வணங்கியதோடு உடனே கூட அழைத்துச் சென்று லாரிகளில் குவிக்கப்பட்டிருந்த கற்கள், இரும்புத் தடிகள், சோடா பாட்டில்கள், கடப்பாறைகள், அரிவாள், சைக்கிள் செயின்கள் எல்லாவற்றையும் அவருக்குக் காட்டினர். அந்த லாரிகளைத் தாங்கள் கைப்பற்றி ஓட்டி வர நேர்ந்த சூழ்நிலையை மீண்டும் அவரிடம் விவரித்தனர். லாரிகளின் உரிமையாளரும், சட்டமன்ற உறுப்பினருமான மல்லை இராவணசாமியே நேரில் வந்து தம் செயல்களுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டால் தான் லாரிகளைத் திருப்பித் தர முடியும் என்று மாணவர்கள் சார்பில் பாண்டியன் பேராசிரியரிடம் தெரிவித்தான்.

     "சார்! உங்கள் வார்த்தைகளுக்கு நாங்கள் எப்போதுமே கட்டுப்படுவோம். ஆனால் இது எங்கள் கௌரவப் பிரச்னை. எங்கள் ஒற்றுமைக்கு ஒரு சவாலாக வந்த லாரிகள் இவை. குறைந்த பட்சம் லாரிகளின் உரிமையாளர் வந்து மன்னிப்புக் கூடக் கேட்காவிட்டால் நாங்கள் பிடிவாதமாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை! இதற்காக நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும் சார்..."

     பேராசிரியர் பூதலிங்கம் உடனே துணைவேந்தரிடம் சென்று மாணவர்களின் கோரிக்கையை விளக்கினார். துணைவேந்தர் உடனே இராவணசாமிக்கு ஃபோன் செய்தார். நல்ல வேளையாக இராவணசாமி அப்போது ஃபோனில் கிடைத்தார். துணைவேந்தர் கூறிய நிபந்தனை இராவணசாமிக்கு எரிச்சலூட்டியது. கோபத்தை வெளிக்காட்டாமல் 'தேர்தல் வெற்றிகள் யார் பக்கம்?' என்பதை மிகவும் தந்திரமாக ஃபோனிலேயே விசாரித்தார் இராவணசாமி. "இன்னும் எண்ணி முடியவில்லை! உங்கள் லாரிகள் பத்திரமாக வெளியேறிய பின்பு தான் முடிவுகளை அறிவிப்போம். முடிவுகள் எப்படி இருந்தாலும் அதன் உற்சாகமோ கோபமோ உள்ளே நிற்கும் உங்கள் லாரிகளைத் தான் முதலில் பாதிக்கும். அதனால் தான் உங்களை அன்போடு வேண்டுகிறேன். தயவு செய்து உடனே டிரைவர்களோடு இங்கே என் அறை முகப்புக்கு வாருங்கள். நான் உங்களைத் தகுந்த துணையோடு மாணவர்களிடம் அனுப்பி வைக்கிறேன். 'ஏதோ எனக்குத் தெரியாமல் எல்லாம் நடந்து விட்டது. அதற்காக வருந்துகிறேன். இனி இப்படி எதுவும் நடக்காது' என்று நாலு வார்த்தை இதமாகப் பேசி லாரிகளை மீட்டுக் கொண்டு போவதுதான் இப்போது உசிதமாக இருக்கும். கௌரவம் பெரிதா, சொத்துப் பெரிதா என்று யோசித்து நீங்கள் இனி ஒரு முடிவுக்கு வர வேண்டும்" என்பதாக இராவணசாமிக்கு மறுமொழி கூறினார் துணைவேந்தர்.