ஐந்தாவது அத்தியாயம் துணைவேந்தர் தம்முடைய பதவியில் நீடிப்பதற்காக அரசாங்கத்திற்கும் அரசாங்கமாக இருந்து ஆளுகிற கட்சிக்கும் தொடர்ந்து நல்ல பிள்ளையாக இருக்க விரும்புகிறார் என்று தெரிந்தது. அதற்காகப் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் பகைத்துக் கொள்ளவும் அவர் தயாராக இருந்தார். தங்கள் இரண்டு பேரையும் குறிப்பிட்டுப் புகார் செய்து பல்கலைக் கழக எல்லைக்குள் போலீஸை வரவழைத்திருப்பதிலிருந்து அவர் எதற்கும் துணியக் கூடியவர் என்பதைப் பாண்டியனும், மோகன்தாஸும் புரிந்து கொண்டார்கள். எதிர்பார்த்ததுதான் என்றாலும் துணைவேந்தரின் மாணவர் விரோதப் போக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாயிருந்தது. "எங்களைக் கைது செய்வதற்கு 'அரெஸ்ட் வாரண்ட்' இருந்தால் காண்பியுங்கள்" என்று பாண்டியன் அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் வற்புறுத்திக் கேட்கத் தொடங்கினான். "நீங்கள் இருவரும் என்னோடு இப்போது ஸ்டேஷனுக்கு வந்தாக வேண்டும். இண்ட்டராகேஷனுக்காக ரிமாண்டில் வைப்பதற்கு வாரண்ட் ஒன்றும் அவசியமில்லை" என்றார் இன்ஸ்பெக்டர். அவர்கள் இருவரும் இன்ஸ்பெக்டரோடு ஸ்டேஷனுக்குப் புறப்படுவதற்கு முன் நடந்தவற்றை உடனே பொருளாதாரப் பேராசிரியரிடமும், மற்ற மாணவர்களிடமும், அண்ணாச்சியிடமும் தெரிவிக்கச் சொல்லி அருகிலிருந்த கண்ணுக்கினியாளிடம் கூறிவிட்டுச் சென்றார்கள். தன்னையும், மோகன்தாஸையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துக் கொண்டு போய் அரட்டி மிரட்டினால் அதன் மூலம் பல்கலைக் கழகத்திலேயே மாணவர் இயக்கம் ஒடுங்கிவிடும் என்று துணைவேந்தர் நினைப்பதை எண்ணி உள்ளூறச் சிரித்துக் கொண்டான் பாண்டியன். மழை மிகவும் கடுமையாக இருந்ததனால் ஜீப்பிற்குள் அமர்ந்திருந்தும் அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சேருவதற்குள்ளேயே முக்கால்வாசி நனைந்து போய்விட்டார்கள். மழை மூட்டத்தில் எதிரேயும், பக்கங்களிலும் எதுவுமே தெரியவில்லை. மேகக்குவியல்களின் நடுவில் ஜீப் மட்டும் முன் நோக்கி நகர்வது போலிருந்தது. இன்ஸ்பெக்டர் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு ஜீப்பிற்குள்ளேயே புகையை இழுத்து இழுத்து விட்டார். ஸ்டேஷனில் கான்ஸ்டேபிள்களோடு மாணவர்கள் இருவரையும் இறக்கி விட்டுவிட்டு இன்ஸ்பெக்டர் ஜீப்பிலிருந்து இறங்காமல் அப்படியே வேறெங்கோ புறப்பட்டுப் போய்விட்டார். அவர்களிடம் கான்ஸ்டேபிள்களோ, ஸ்டேஷன் ரைட்டரோ யாருமே கடுமையாக நடந்து கொள்ளவில்லை. அன்பாகவும், சுபாவமாகவுமே நடந்து கொண்டார்கள். ஸ்டேஷன் உள்ளறையிலிருந்த ஒரு நீள பெஞ்சைக் காண்பித்து, "இன்ஸ்பெக்டர் வர்றவரை இங்கே உட்கார்ந்திருங்க" என்று உட்கார வைத்துவிட்டார்கள். தங்களுக்காகத் தேநீர் வரவழைத்துக் குடித்தபோது பாண்டியனுக்கும், மோகன்தாஸுக்கும் கூடத் தேநீர் அளித்தார்கள் அவர்கள். ஆனாலும் பாண்டியனும், மோகன்தாஸும் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். 'அந்த இன்ஸ்பெக்டர் எதற்காக அப்படி அங்கே தங்களைக் கொண்டு வந்து உட்கார்த்தி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்?' என்பது புரியாமல் சிந்தித்துக் குழம்பிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். வெளியே மழை நின்று போயிருந்தது. கலைந்தும் கலையாமலுமிருந்த மேகங்களிடையே நீலமலைகள் மெல்ல மெல்லத் தெரியத் தொடங்கியிருந்தன. பாண்டியன் சொன்னான்: "வி.சி. இவ்வளவு தந்திரமாகவும், கேவலமாகவும் நடந்து கொள்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை." "நான் எதிர்பார்த்தேன். இந்த வி.சி.யைப் பொறுத்த வரை வி.சி. என்பதற்கே 'வெரிக் கிளவர்', 'வெரி கன்னிங்' என்பதுதான் அர்த்தம் என்று கடந்த சில ஆண்டு அனுபவங்களில் நான் தீர்மானமாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் பாண்டியன்." "நாளைக்கு மாலை பழைய மாணவர் தலைவன் மணவாளனுக்குப் பிரிவுபசார விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு நாம் இருவரும் போக முடியுமோ, முடியாதோ?" "நாம் போக முடிந்தாலும் முடியாவிட்டாலும் நம் மாணவத் தோழர்கள் அதைப் பிரமாதமாக நடத்தி விடுவார்கள். அண்ணாச்சி பார்த்துக் கொள்வார். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் மணவாளனை நாம் சந்தித்துப் பேசுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்." "அதனால் தான் நானும் அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் என்னடா என்றால் இங்கே கொண்டு வந்து உட்கார வைத்துக் கொண்டு கழுத்தறுக்கிறார்கள். அரெஸ்ட் வாரண்ட் கிடையாது. விசாரணை கிடையாது. கேள்வி முறை இல்லாமல் எதற்காக இங்கே கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை?" "ஒன்றுமே இல்லாமல் சும்மா மிரட்ட வேண்டும் என்பதற்காகக் கூடக் கொண்டு வந்து உட்கார வைத்திருப்பார்கள். மணி ஒன்றாகிறது. நம்முடைய பகல் சாப்பாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்களோ?" பாண்டியனும், மோகன்தாஸும் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே அண்ணாச்சி ஒரு பெரிய டிபன் கேரியரோடு வந்து சேர்ந்தார். "ஒன்றும் கவலைப்பட வேண்டாம். முதலில் சாப்பிடுங்க. இங்கேயிருந்து சீக்கிரமாப் போயிடலாம். அதுக்கு ஏற்பாடு நடக்குது" என்றார் அண்ணாச்சி. கான்ஸ்டேபிள்களில் இரண்டொருவர் அண்ணாச்சிக்கு நன்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். ஸ்டேஷன் பெஞ்சிலேயே இலை போட்டுச் சாப்பிட்டு முடித்தார்கள். அவர்களுக்கு போலீஸ்காரர்கள் குடிப்பதற்குத் தண்ணீர் எடுத்துத் தருவது பரிமாறுவது போன்ற உதவிகளைக் கூடச் செய்தனர். அண்ணாச்சி எல்லாம் விவரமாகச் சொன்னார்: "பேராசிரியர் பூதலிங்கம் சாரிடத்தில் போய் நம்ம 'கண்ணு'வும் மற்ற மாணவர்களும் உங்க ரெண்டு பேரையும் போலீஸ் கூட்டிக்கிட்டு வந்ததைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டிருக்காங்க. பூதலிங்கம் சார் உடனே அவங்க கூடவே புறப்பட்டுப் போய் வி.சி.யைப் பார்த்திருக்காரு. வி.சி. 'யுனிவர்சிடி எல்லைக்குள்ளாற போலீஸை நான் கூப்பிடவே இல்லையே! எப்பிடி வந்தாங்க அவங்க'ன்னு நாடகம் ஆடினாராம். கடைசிலே, 'சரி! பையங்க ரெண்டு பேரையும் விடச் சொல்லிடறேன். சாயங்காலம் 'ஓரியண்டேஷன் லெக்சருக்கு எல்லாப் பையன்களும் அமைதியா மைதானத்திலே கூடுகிறதா உறுதியளிக்க முடியுமா?'ன்னு கேட்டாராம். உடனே பையங்க எல்லாருமாச் சேர்ந்து, 'அது முடியாது! நிபந்தனை இல்லாமலே நீங்க அவங்க ரெண்டு பேரையும் விடச் சொல்லணும்'னு வற்புறுத்தியிருக்காங்க. வி.சி. உடனே இன்ஸ்பெக்டர் வீட்டுக்குப் ஃபோன் பேசினாராம். விசாரிச்சு முடிஞ்சதும் மூணு மூணரை மணிக்குள் உங்க ரெண்டு பேரையும் அனுப்பிடு வாங்கன்னு வி.சி. மாணவர்களுக்கு உறுதி கூறியிருக்கிறாராம்." "வி.சி. ஃபோன் பண்ணி அதற்கப்புறம் வந்ததாகத் தானே அந்த இன்ஸ்பெக்டர் எங்களிடம் சொன்னார். அப்படியிருக்கும் போது போலீஸ் வந்தது தமக்குத் தெரியாதென்று அவரே ஏன் சொல்ல வேண்டும் அண்ணாச்சி?" "ஏதோ அவர் இதுவரை பொய்யே சொல்லாதவர் போலவும் இப்போதுதான் முதல் முதலாக சொல்பவர் போல் ஆச்சரியப்படுகிறாயே, பாண்டியன்? எப்போது அவர் நிஜத்தைச் சொல்லியிருக்கிறார்?" என்றான் மோகன்தாஸ். சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த பின் அண்ணாச்சி புறப்பட்டுப் போனார். போகும் போது மறுநாள் மாலை மணவாளனுக்குப் பிரிவுபசார விருந்து இருப்பதை அவரும் ஞாபகப்படுத்திவிட்டுப் போனார். "மணவாளன் மதுரையிலிருந்து எப்போது வரக்கூடும் என்பதைப் பற்றி ஏதாவது தகவல் தெரியுமா?" என்று பாண்டியன் அண்ணாச்சியிடம் வினவிய போது, "அநேகமா இன்னிக்கு ராத்திரி கடைசி பஸ் அல்லது நாளைக்குக் காலையிலேயே முதல் பஸ்ஸிலே வந்திடுவாரு" என்று அண்ணாச்சி புறப்படுமுன் அவர்களிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தார். ஒரு வேளை இன்ஸ்பெக்டர் விசாரணைக்குப் பின் தங்களை விடுதலை செய்துவிட்டாலும் துணைவேந்தரின் 'ஓரியண்டேஷன்' சொற்பொழிவைப் புறக்கணிப்பது என்ற முடிவை எக்காரணம் கொண்டும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்று தீர்மானித்தார்கள் அவர்கள். துணைவேந்தர் இந்தத் தேர்தலையும் இதில் தொடர்புடைய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினரையும் ஒடுக்க முயல முயல இது மகத்தான வெற்றிகளை அடந்தே தீரும் என்று அவர்கள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். பகல் இரண்டரை மணிக்கு இன்ஸ்பெக்டர் திரும்பி வந்தார். மோகன்தாஸையும், பாண்டியனையும் விசாரணை என்ற பேரில் ஏதோ கேள்விகள் கேட்டார். அவை அனைத்துமே ஏனோ தீவிரமாக இல்லை. அரை மணி நேரத்துக்குப் பின், "நீங்கள் இருவரும் போகலாம். படிப்புத்தான் முக்கியம். கலகத்தினால் படிப்பு வராது. யுனிவர்ஸிடியும், அதை ஒட்டிய இந்த நகரமும் லா அண்ட் ஆர்டரோடு - பீஸ்ஃபுல்லா இருக்க ஒத்துழையுங்க" என்று சிரித்துக் கொண்டே கூறியபடி இருவரோடு கை குலுக்கி விடை கொடுத்தார் இன்ஸ்பெக்டர். கைது செய்ய வந்த போது இருந்த வேகமும் மிடுக்கும் இப்போது அவரிடம் இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள். புறப்படு முன் மோகன்தாஸ் அவரைக் கொஞ்சம் வம்புக்கு இழுத்தான். "சார்! நீங்கள் இன்று காலையில் பல்கலைக் கழகத்துக்குள் எங்களைக் கைது செய்ய வந்த போது எங்கள் வி.சி. ஃபோன் செய்ததின் பேரில் வந்ததாகக் கூறினீர்கள். கேன் ஐ ஸீ தி எஃப்.ஐ.ஆர்.?" "நீங்கள் ஒன்றையும் பார்க்க வேண்டாம். போய் நல்ல பிள்ளையாக லட்சணமாய்ப் படியுங்கள்" என்று அவர் மழுப்பிவிட்டார். அவர்களும் சிரித்துக் கொண்டே வெளியேறினார்கள். மழை பெய்து முடிந்த பின் சாலைகள் கழுவி விட்டது போல் பளிச்சென்றிருந்தன. மழை பெய்து முடிந்த பின்புதான் சில நகரங்களில் சாலைகள் சேறும் சகதியுமாய் அசிங்கமாகிவிடும். ஆனால் மல்லிகைப் பந்தல் நகரில் மேடும் பள்ளமுமான மலைச் சாலைகளாகையால் எவ்வளவு மழை கொட்டினாலும் மழை நின்ற அடுத்த கணமே சாலைகள் பளிச்சென்றிருக்கும். போலீஸ் ஸ்டேஷன் வாசலிலிருந்து கால் மணி நேரம் நடந்து கடை வீதிக்கும், பல்கலைக் கழகத்திற்கும் சாலைகள் பிரியும் இடத்தை அடைந்த போதுதான் இன்ஸ்பெக்டர் ஏன் அவ்வளவு அவசரப்பட்டுத் தங்கள் இருவரையும் வெளியே அனுப்பி வைத்தார் என்பது பாண்டியனுக்கும், மோகன்தாஸுக்கும் புரிந்தது. பல்கலைக் கழகச் சாலையிலிருந்து 'மாணவர் தலைவர்களை விடுதலை செய்', 'அடக்குமுறை ஒழிக', 'துணைவேந்தரே! தீமைக்குத் துணை போகாதீர்' போன்ற கோஷங்களுடனும், அதே வாக்கியங்கள் எழுதிய அட்டைகளுடனும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி ஊர்வலமாகப் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். இருபுறமும் மரங்கள் அடர்ந்த நேரான அந்தச் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவது போல் மாணவர்கள் வருவது கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. ஊர்வலத்தின் முதல் வரிசையில் மாணவிகளின் அணி இருந்தது. அந்த அணிக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்த கண்ணுக்கினியாளின் வலது கரத்தில் மாணவர்களை விடுதலை செய்யக் கோரும் வாசகம் அடங்கிய அட்டை ஒன்றிருந்தது. தொடர்ந்து அலை அலையாக மாணவிகளும், மாணவர்களும் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். பாண்டியனையும், மோகன்தாஸையும் எதிரே பார்த்ததும் ஊர்வலத்தின் உற்சாகம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. ஓடி வந்து சூழ்ந்து கொண்ட மாணவர்கள் அவர்கள் இருவரையும் அப்படியே கட்டித் தூக்கிவிட்டார்கள். புறப்பட்ட ஊர்வலம் நோக்கமின்றி வீணாகிவிடக் கூடாது என்பதற்காக அதை அப்படியே துணைவேந்தர் மாளிகையை நோக்கி திருப்பிவிட்டுத் தங்கள் தலைமையில் அழைத்துச் சென்றார்கள் அவர்கள். விரைந்து சிந்தித்து உடனே அந்த முடிவுக்கு வரவேண்டியிருந்தது. மாலையில் நடத்தத் திட்டமிட்டிருந்த பாடத் தொடக்க நாள் சொற்பொழிவை நடத்தப் போகவிடாமல் துணைவேந்தரை அவர் மாளிகை வாசலிலேயே தடுத்து விட வேண்டும் என்பதும், முதலில் திட்டமிட்டபடி பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தேர்தல்களை உடனே நடத்தச் சொல்லி வற்புறுத்த வேண்டும் என்பதும் அப்போது அவர்கள் நோக்கமாயிருந்தது. காலையிலேயே அவர்கள் கைதானவுடன், பல மாணவர்கள் அந்தப் பல்கலைக் கழகத்தின் சான்ஸ்லராகிய மாநில கவர்னருக்குத் தந்தி கொடுத்திருந்தார்கள். அரசாங்கம், போலீஸ், துணைவேந்தர் எல்லாருமாகச் சேர்ந்து மாணவர்களை அநியாயமாக அடக்கி ஒடுக்க முயல்வதாகக் கவர்னருக்கு அனுப்பிய தந்திகளில் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். புரோ-சான்ஸ்லராகிய கல்வி அமைச்சரின் தூண்டுதலிலேயே துணைவேந்தர் இவ்வளவும் செய்வதாக அவர்கள் சந்தேகப்பட்டதனால் தான் தந்திகள் சான்ஸ்லராகிய மாநில கவர்னருக்குத் தரப்பட்டிருந்தன. இரண்டொருவர் தந்தி தகவல்களைக் கல்வி மந்திரிக்கும் அனுப்பியிருந்தார்கள். 'ஃபோன் மூலம் கவர்னரோ, கல்வி அமைச்சரோ நிலைமை கட்டுக்கு அடங்காமல் போய் மாணவர்களை கிளர்ந்து எழும்படி விட்டு விடாதீர்கள்' என்று துணைவேந்தரை எச்சரித்திருக்கலாம் என்று தெரிந்தது. பிற்பகலுக்கு மேல் துணைவேந்தரின் போக்கில் ஒரு தந்திரமான மாறுதல் தெரிந்தது. தமது போக்கை ஆதரிக்கும் மாணவர்கள் சில நூறு பேர் கூட இல்லை என்பதும், எதிர்க்கும் மாணவர்கள் பல ஆயிரம் பேர்கள் என்பதும் வீட்டு வாசலில் பிரத்தியட்சமாக வந்து நின்ற ஊர்வலத்திலிருந்து தெரிந்தது அவருக்கு. மாணவர்கள் ஊர்வலமாக அவர் மாளிகைக்குப் போன நேரத்தில் எல்லாப் பகுதிகளின் 'டீன்'களும் எல்லாப் பிரிவின் பேராசிரியர்களும் அங்கே கூடியிருந்தனர். நிலைமையைப் பற்றி அவர்களிடமும் கலந்து பேசியதில் அவர்களில் பலர் மாணவர் பேரவைத் தேர்தலைத் தள்ளிப் போட வேண்டிய அவசியமில்லை என்றே கருத்துத் தெரிவித்திருந்தார்கள். மாலை நாலரை மணிக்குப் பொருளாதார பேராசிரியரையும் உடன் அழைத்துக் கொண்டு மாளிகை முகப்பில் ஊர்வலமாக வந்து வளைத்துக் கொண்டு நிற்கும் மாணவர்களை எதிர் கொண்டார் துணைவேந்தர். அவரைக் கண்டவுடன் மாணவிகளின் கூப்பாடுகளும், கோபக்குரல்களும் அதிகமாயின. பேராசிரியர் பூதலிங்கம் கைகளை உயர்த்தி அமைதியாயிருக்கும்படி மாணவர்களை வேண்டவே, அவர் வேண்டுதலை மதித்து அவர்கள் அமைதி அடைந்தார்கள். "மாணவர்களே! ஏற்கெனவே அறிவித்திருந்தபடி இன்று மாலை 'ஓரியண்டேஷன்' நாள் நடைபெறாது. முன்னமே திட்டமிட்டபடி உங்கள் பேரவைத் தேர்தல்கள் முடிந்த பின் 'ஓரியண்டேஷன் நாளை' வைத்துக் கொள்ளலாம். இந்த முடிவு உங்களுக்கு எல்லாம் மகிழ்ச்சி அளிக்கும் என்று நினைக்கிறேன். இப்போது நீங்கள் அமைதியாக கலைந்து செல்லலாம்" என்று கூட்டத்தை நோக்கி அறிவித்துவிட்டு அவர்கள் கரகோஷம் ஓய்ந்ததும் அவர்கள் முன்னிலையிலேயே, "மிஸ்டர் பூதலிங்கம்! யூ கேன் கண்டக்ட் தி ஸ்டூடண்ட் கவுன்சில் எலெக்ஷன்ஸ் அஸ் ஷெட்யூல்ட்..." என்றும் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் துணைவேந்தர். "மோகன்தாஸ்! ஆஸ் யூ ஸெய்ட் அவர் வி.சி. இஸ் வெரி கிளவர்..." என்று பாண்டியன் மோகன்தாஸின் காதருகே சொல்லிச் சிரித்தான். "இவர் வரையில் வி.சி. என்பதற்கு எக்ஸ்பான்ஷனே வெரி கிள்வர்தான் பிரதர்." "ரொம்பக் கெட்டிக்காரர்தான்!" "கெட்டிக்காரராயிருக்கட்டும். ஆனால் அடுத்தவர்களை முட்டாளாக்க முயல்கிற அளவு கெட்டிக்காரராயிருக்க வேண்டியதில்லை. படித்தவனுடைய கெட்டிக்காரத்தனம் அடுத்தவனைப் புத்திசாலியாக்கப் பயன்பட வேண்டுமேயன்றி அடுத்தவனை ஏமாற்றப் பயன்படுத்தப் படக்கூடாது. இண்டெலக்சுவல் டிஸ்-ஹானஸ்டி ஷுட் கோ.." "அங்கங்கே பெரிய பொறுப்புக்களில் இருக்கும் பல அறிவாளிகள் தங்கள் நாணயமின்மையால் வேர்ப் புழுக்களைப் போல் சமூகத்தின் ஆணிவேரை மறைவாக அரித்துக் கொண்டிருக்கிறார்கள். இலைப் புழுக்களையும், கம்பளிப் பூச்சிகளையும் விட வேர்ப்புழுக்கள் அபாயகரமானவை." "இன்றைய இந்திய சமூகத்தில் எல்லாத் துறையிலும், எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் அப்படிப்பட்ட வேர்ப்புழுக்களின் அபாயம் இருக்கிறது..." பேசிக் கொண்டே குழுக்கள் குழுக்களாக மாணவர்கள் விடுதிகளுக்கும், கடை வீதிகளுக்கும், விளையாட்டு மைதானத்துக்கும், காப்பி சிற்றுண்டிக்கும் பிரிந்து சென்றார்கள். பாண்டியனும் கண்ணுக்கினியாளும், மோகன்தாஸும் வேறு சில மாணவர்களும் அண்ணாச்சி கடைக்குப் புறப்பட்டார்கள். பாண்டியன் கண்ணுக்கினியாளுக்கு நன்றி கூறினான். "உனக்கு நிறைய நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். ஓர் இக்கட்டான சூழ்நிலையில் உன்னிடம் குறிப்பாகச் சொல்லிவிட்டுப் போலீஸ் ஜீப்பில் ஏறிப் போய்விட்டோம். சில மணி நேரத்திற்குள் கவர்னருக்குத் தந்திகளைப் பறக்கச் செய்து எல்லா விடுதி மாணவர்களையும் கட்டுப்பாடாக ஊர்வலத்துக்கு வரச் செய்து காரியங்களை வெற்றிகரமாக்கி உன் செயல்களால் நீ பெரிதும் உதவியிருக்கிறாய்." "பிரமாதமாக அப்படி என்ன செய்துவிட்டேன்? உங்களில் ஒருத்தி என்ற முறையில் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்தேன். அதற்கு உடனே மிகவும் அந்நியமானவர்கள் சொல்லிக் கொள்வது போல் இப்படி நன்றி கூடவா சொல்லிக் கணக்குத் தீர்த்து விட வேண்டும்?" "உங்களைப் போல் ஜூனியராக, இந்த ஆண்டு தான் இங்கு வந்து சேர்ந்திருக்கும் ஒரு புதிய மாணவி, கூச்சமும், பயமும் இல்லாமல் இதை எல்லாம் சாதித்து முடித்திருப்பது பெரிய காரியம் தான்" என்று மோகன்தாஸும் அவளைப் புகழ்ந்தான். "நீங்கள் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் இப்படி என்னைப் புகழ்ந்து கொண்டே இருந்தால் நான் உங்களோடு அண்ணாச்சிக் கடைக்கு வருவதைத் தவிர்த்து விட்டு விடுதிக்கே திரும்ப வேண்டியிருக்கும்..." "நான் வேண்டுமானால் புகழ்வதை நிறுத்திவிடுகிறேன். ஆனால் பாண்டியன் உரிமைகளை நான் கட்டுப்படுத்த முடியாது. அவன் பாடு, உங்கள் பாடு. ரொம்பவும் அந்நியோந்நியமானவர்களின் உரிமைகளில் மூன்றாம் மனிதர்கள் தலையிட முடியாது". "இந்த வம்பு தானே வேண்டாம்னேன்" என்று பாண்டியன் அவசர அவசரமாகக் குறுக்கிட்டான். மோகன்தாஸைப் பேச விடாமல் முந்திக் கொண்டு தடுத்த அந்த அவசரத்திலும், அவள் விழிகளில் தெரிந்த ஆவலையும், கன்னங்கள் சிவந்து இதழ்களில் அரும்பும் இள நகையையும் பாண்டியன் காணத் தவறவில்லை. அந்த விநாடியில் அவள் தன்னருகே தோளோடு தோள் நடந்து வருகிறாள் என்பதே அவனுடைய அந்தரங்கத்தின் பெருமிதமாக இருந்தது. இன்பகரமானதோர் இறுமாப்பாகவும் இருந்தது. அவர்கள் அண்ணாச்சிக் கடைக்குப் போய்ச் சேரும் போது மாலை ஆறு மணியாகிவிட்டது. மல்லிகைப் பந்தலின் அழகிய சாலைகளில் விளக்குகள் மின்னத் தொடங்கி விட்டன. மேடுகளிலும், உயரமாயிருந்த மலைப் பகுதிகளிலும் அங்கங்கே தெரிந்த விளக்கு ஒளிகள் அந்த மாலை நீலத்தின் சுகமான இருட் கனத்தினிடையே மிகவும் அழகாகத் தெரிந்தன. கடையில் சென்னையிலிருந்தும் மதுரையிலிருந்தும் வெளிவருகிற நாலைந்து தினசரிகளின் உள்ளூர் நிருபர்களை வரவழைத்து உட்காரச் செய்து இவர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அண்ணாச்சி. "தம்பீ! வாங்க. இவங்கள்ளாம் உங்களை எதிர்பார்த்துத்தான் காத்திருக்காங்க. எல்லாம் விவரமாகச் சொல்லுங்க" என்று மாணவர்களை வரவேற்று நிருபர்களோடு கடையின் உட்புற அறைக்கு அனுப்பி வைத்தார் அவர். பாண்டியனும், மோகன்தாஸும் நிருபர்களுக்கு எல்லா நிலைமைகளையும் விவரமாகச் சொல்லத் தொடங்கினார்கள். எதிர்ப்புறம் மருந்துக் கடைக்குப் போய் ஃபோன் மூலம் பெண்கள் விடுதி வார்டனிடம் பேசிச் சிறிது நேரம் தாமதமாக விடுதிக்குத் திரும்ப அனுமதி பெற்று வந்தாள் கண்ணுக்கினியாள். மதுரையிலிருந்து அவள் தந்தை நாயுடு தமக்கு எழுதிய ஒரு கடிதத்தை அவளிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார் அண்ணாச்சி. "நயினாவுக்குச் சதா என்னைப் பற்றிக் கவலைதான். உங்களை எனக்குக் 'கார்டியனா' நியமிச்சிருக்கிற மாதிரியல்லே எழுதியிருக்காரு?" என்று கூறியபடி வாசித்து முடித்த கடிதத்தை அண்ணாச்சியிடம் திருப்பிக் கொடுத்தாள் அவள். மாணவர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்து கொண்டு நிருபர்கள் புறப்பட்ட போது, "மற்றவங்க பேப்பரிலே எப்பிடி எப்பிடியோ நியூஸ் வரும். நம்ம பேப்பருங்களிலேயாவது நல்லப்டியா எழுதுங்க. நிஜத்தைப் போடுங்க" என்று அண்ணாச்சி அவர்களிடம் சொல்லி அனுப்பினார். சிறிது நேரம் மாணவர்களோடு முதல் நாளிரவு நிகழ்ந்த கல்லெறியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார் அவர். பாண்டியன் வேடிக்கையாக அதைப் பற்றி விவரித்தான்: "அன்பரசன் அடிக்கடி கூட்டத்திலே சொல்கிற ஒரு மேற்கோளுக்கு அவன் புரிந்து கொண்டிருக்கிற அர்த்தம் என்ன என்பதே நேற்று நள்ளிரவில் தான் எங்களுக்குத் தெரிந்தது அண்ணாச்சி! 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே நாம் முன் தோன்றி மூத்தவர்கள்' என்று வெளியிலே நடக்கிற அவங்க கட்சிப் பொதுக் கூட்டமானாலும் சரி, பல்கலைக் கழகத்தில் நடக்கும் பாடனி அஸோஸியேஷன் கூட்டமானாலும் சரி, எங்கும் எதிலும் அன்பரசன் இதைக் கூறுவான். அவன் பேச்சில் அடிக்கடி கல் தோன்றிக் கொண்டிருந்தது. நேற்றிரவு செயலிலும் கல் தோன்றிவிட்டது..." இதைக் கேட்டு மோகன்தாஸ் சொன்னான்: "சே! சே! அவன் ஏதோ பொருத்தமில்லாமல் கிளிப் பிள்ளைப் போல் அந்த வரியை எல்லாக் கூட்டங்களிலும் 'கோட்' செய்கிறான் என்பதற்காக நீ அவனைக் கிண்டல் செய்! ஆனால் அந்த அழகான வீரப்பாடலைக் கிண்டல் செய்யாதே, பாண்டியன்! எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது!..." "நான் பாடலைக் கிண்டல் செய்யவில்லை மோகன்தாஸ்! லகர ளகர ழகர உச்சரிப்புக்கள் சரியாக வராமல் அன்பரசன் அந்தப் புறப்பொருள் பாடல் அடியைக் 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த தமிழ்க்குடி' என்பதற்குப் பதிலாக 'கள் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாலோடு முன் தோன்றி மூத்த தமில்க்குடி' என்று அழுத்தந் திருத்தமாய் தப்பாகச் சொல்லும் போது கேலிக் கூத்தாயிருக்கும். அவனுடைய பிரசங்கத்தில் இந்த ஸீரியஸ் கொட்டேஷனே நகைச்சுவையைப் போல்தான் வந்து போகும்..." "என்ன செய்யலாம்? தமிழ்நாட்டில் இன்று வரை வெறும் தமிழ் உணர்ச்சி மட்டுமே போற்றப்படுகிறது. தமிழ் அறிவையோ, சிந்தனை வளர்ச்சியையோ போற்றுவதற்குத் தமிழ் மக்கள் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. அறிவைப் பட்டினிப் போட்டுவிட்டு உணர்ச்சிக்கு விழா எடுக்கும் வரை நாம் உருப்பட மாட்டோம்." கண்ணுக்கினியாள் விடுதிக்குத் திரும்பும் நேரம் ஆகிவிட்டது என்று கைக்கடிகாரத்தைப் பார்க்கவே அவளை மட்டும் தனியே அனுப்பக் கூடாதென்று அவர்கள் எல்லாருமே அண்ணாச்சியிடம் சொல்லிக் கொண்டு பல்கலைக் கழகத்துக்குப் புறப்பட்டார்கள். "போற வழியிலே இன்னிக்கும் ஏதாவது 'கல் தோன்றாமே, மண் தோன்றாமே' பார்த்துப் பத்திரமாய்ப் போய்ச்சேருங்க தம்பிகளா...!" என்று எச்சரிக்கையோடு விடை கொடுத்தார் அண்ணாச்சி. "இன்றைக்கு இராத்திரியோ, காலையிலோ மணவாளன் மதுரையிலிருந்து வந்ததும் எனக்கு ஒரு வார்த்தை சொல்லியனுப்புங்க அண்ணாச்சி..." என்று போகும் போது ஞாபகப்படுத்திவிட்டுப் போனான் பாண்டியன். மணவாளன் என்ற மாபெரும் சக்தியினால் கவரப்பட்டுத்தான் பாண்டியன் போன்றவர்களுக்கு அந்தப் பல்கலைக் கழக மாணவர் இயக்கத்திலேயே அக்கறை ஏற்பட்டது. பாண்டியன் அந்தப் பல்கலைக் கழகத்துக்கு வந்த முதல் நாளிலேயே அண்ணாச்சி மணவாளனை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மாணவர்களை விடலைகளாகவும், விட்டேற்றிகளாகவும், சினிமா லோலர்களாகவும், எதுகை, மோனைப் பித்தர்களாகவும் ஆக்கி ஆண்டு வந்த ஒரு முரட்டுப் பிடியிலிருந்து விடுவித்துத் தேசிய நோக்கமுள்ள மாணவர் இயக்கம் ஒன்றை அங்கே உருவாக்கிய பெருமையே மணவாளனின் பெருமை தான். மணவாளன் அஞ்சாநெஞ்சன். தன் வழியில் அவன் பாண்டியனைத் தயார் செய்து ஆளாக்கிவிட்டுப் போயிருந்தான். அந்த நன்றி விசுவாசமும் அன்பும் தான் பாண்டியனை மணவாளனின் வரவை ஆவலோடு எதிர்பார்க்க வைத்திருந்தன. மறுநாள் காலை பாண்டியன் என்.சி.சி.க்குப் போய் விட்டு மைதானத்திலிருந்து திரும்பி வந்ததும் அண்ணாச்சி கடையிலிருந்து ஒரு பையன் வந்து மணவாளன் வந்து சேர்ந்த தகவலைத் தெரிவித்துவிட்டுச் சென்றான். குளித்து உடை மாற்றிக் கொண்டு வேறு சில மாணவர்களையும் உடனழைத்துக் கொண்ட பின் பாண்டியன் மணவாளனைப் பார்க்கச் சென்றான். மணவாளன் மாணவ சகோதரர்களை உற்சாகமாக வரவேற்றார். "அண்ணாச்சியிடம் எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன் பாண்டியன்! நீங்கள் ஒற்றுமை குலையாமலிருக்கும் வரை உங்கள் இயக்கத்தை யாரும் அடக்கி விட முடியாது. இந்தப் பல்கலைக் கழகத்தில் அரும்பாடுபட்டு நான் ஏற்றிய ஒரு விளக்கை அவிந்துவிடாமல் காக்கும் பொறுப்பு இன்று உங்கள் அணியினரிடம் விடப்பட்டிருக்கிறது. இதை அப்படியே காத்து அடுத்த அணியினரிடம் தர நீங்கள் கடமைப் பட்டிருக்கிறீர்கள்" என்றார் அவர். அன்று பிற்பகல் வரை மாணவர்கள் மணவாளனுடனேயே இருந்தார்கள். அவரோடு அவர் சென்ற இடங்களுக்கு உடன் சென்றார்கள். சேர்ந்து உணவருந்தினார்கள். உரையாடி மகிழ்ந்தார்கள். ஆலோசனைகள் கேட்டார்கள். "சமூகப் பொருளாதார மாற்றங்களை உண்டாக்கி, ஏற்றத் தாழ்வுகளைப் போக்கி, எதிர்கால இந்தியாவை உருவாக்கும் பணியை இனி மாணவ சமூகம் தான் தொடங்கி நிறைவேற்ற முடியும்" என்பதை மணவாளன் உறுதியான நம்பிக்கையோடு அவர்களுக்குச் சொன்னார். "உலகின் மற்ற நாடுகளிலுள்ள ஏழைமைக்கும் நம் நாட்டு ஏழைமைக்கும் வித்தியாசம் உண்டு. அவ்வளவு ஏன்? ஆசியாவில் பின் தங்கிய நாடுகளின் ஏழைமை புது விதமானது. பணத்தினாலும் ஏழைகள், கல்வியின்மையினாலும் ஏழைகள், புரிந்துணர்வினாலும் ஏழைகள், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு இன்மையினாலும் ஏழைகள் என்ற பலவிதமான ஏழைகள் இங்கு இருக்கிறார்கள்" என்பதுபோல பல கருத்துக்களை இளைஞர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் மணவாளன் அவர்களிடம் எடுத்துக் கூறினார். அன்று மாலையில் லேக் வியூ ஹோட்டல் புல்வெளியில் நடைபெறவிருந்த விருந்துக்குப் பாண்டியனும் மோகன்தாஸும் மணவாளனை அழைத்துச் சென்றார்கள். அண்ணாச்சி ஏற்பாடுகளைக் கவனிக்க முன்னாலேயே அங்கு போயிருந்தார். அங்கே ஹோட்டல் முகப்பில் கண்ணுக்கினியாளும் வேறு சில மாணவிகளும் வருகிறவர்களை வரவேற்று ரோஜாப்பூவும் கல்கண்டும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் கண்ணுக்கினியாளை மணவாளனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். கல்கண்டு ரோஜாப்பூ எடுத்துக் கொண்டதும் மோகன்தாஸோடு முன்னால் நடந்து போய்விட்டார் மணவாளன். பாண்டியனுடைய கோட்டில் அவளே ஒரு ரோஜாப்பூவை எடுத்துச் செருக வந்த போது, அந்தக் கையை அப்படியே தடுத்து, "இதில் எது கை? எது ரோஜாப்பூ? இரண்டும் ஒரே நிறத்தில் இருப்பதால் புரியவில்லை" என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் தணிவான குரலில் கேட்டுவிட்டுக் குறும்பாகச் சிரித்தான் பாண்டியன். அவனுடைய அந்த வாக்கியம் தன்னுள் ஏற்படுத்திய இன்பச் சிலிர்ப்பை தனக்குள்ளே ஓர் இரகசியம் ஆக்கிக் கொண்டு, "மறுபடியும் எச்சரிக்கிறேன். பொருளாதாரம் படிக்கிறீர்கள். அதைக் கோட்டை விட்டுவிட்டுக் கவிஞராகி விடாதீர்கள்..." என்று பதிலுக்கு அவனை வம்புக்கு இழுத்தாள் அவள். "எதிரே தெரிகிற தோற்றம் ஊமையையும் கவிஞனாக்க முடிந்ததாக இருக்கும் போது நான் மட்டும் என்ன செய்வது? ஐ யாம் ஹெல்ப்லெஸ் மேடம்." "அப்புறம் வம்பளக்கலாம்! உள்ளே போய் விருந்து ஏற்பாடுகளைக் கவனியுங்கள்" என்று அவள் பாண்டியனை உள்ளே துரத்தினாள். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|