பதினாறாவது அத்தியாயம் மேரி தங்கத்தின் தற்கொலை பற்றியும், மாணவர்களின் உண்ணாவிரதம் பற்றியும், கோரிக்கைகள் பற்றியும் மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் வெளி வருகிற எல்லாத் தினசரிகளிலுமே விரிவாகச் செய்திகள் பிரசுரிக்கப்பட்டு விட்டதால் பிரச்னை தமிழ் நாடளாவியதாக மாறிவிட்டது. மல்லிகைப் பந்தலைச் சேர்ந்த மாணவர்களின் கோரிக்கைகளை ஆதரித்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களின் மாணவர்களும், அநுதாப ஊர்வலங்களும், கூட்டங்களும் நடத்தினார்கள். மிகவும் துணிவுள்ள சில பத்திரிகைகள், 'மேரி தங்கத்தின் தற்கொலைக்கு மந்திரியின் உறவினரான ஒரு விரிவுரையாளர்தான் காரணம் என்று மல்லிகைப் பந்தல் மக்களிடையே பரவலாக ஒரு பேச்சு இருப்பதை' மறைக்காமல் முன் வந்து பிரசுரித்திருந்தன. பல்கலைக் கழகத்தைக் காலாண்டுத் தேர்வுக்கும் முன்பே மூடி, விடுமுறையும் விட்டுவிட்டதால் பெரும்பாலான வெளியூர் மாணவர்கள் மூடிய ஐந்தாறு தினங்கள் வரை விடுதிகளுக்கு வெளியே அலைக்கழிக்கப்பட்டு ஊர் திரும்பி இருந்தனர். மாணவர்களின் உண்ணாவிரதம் மிகவும் தந்திரமாகவும் சமயம் பார்த்தும் ஒடுக்கப்பட்டதை எதிர்க்கப் போதுமான எண்ணிக்கை பலமுள்ள அளவு மாணவர்கள் அப்போது அங்கே அந்தப் பல்கலைக்கழக நகரத்துக்குள் இல்லை. ஐ.பி.ஸி. முந்நூற்றொன்பதாவது செக்ஷன் படி கைது செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு இன்ஜெக்ஷன் மூலம் உணவுச் சத்து அளித்து அவர்களுடைய உண்ணா நோன்பை அரசாங்கமே முறித்து விட்டது. ஐ.பி.ஸி. 309-ன் படி பல்கலைக் கழக வாயிலில் உண்ணா விரதம் இருந்தவர்கள் கைது செய்யப்பட்ட மாலை வேளையில் உடனே நகரப் பொதுமக்களிடமும், பெற்றோர்கள், தொழிலாளர்களிடமும் ஏற்பட்ட குமுறலையும் கொதிப்பையும் கூடப் போலீசார் தடையுத்தரவின் மூலம் ஒடுக்கிவிட்டார்கள். தடையை மீறியும் அவர்கள் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தத் துணிந்திருந்தார்கள். 'கட்சிச் சார்புள்ள அரசாங்கத்தினர் சட்டங்களையெல்லாம் தீயவர்களிடமிருந்து நல்லவர்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்துவதை விடத் தங்கள் கட்சியையும், ஆட்சியையும் எதிர்ப்பவர்களிடமிருந்து தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்ளப் பயன்படுத்தி விடுகிறார்கள். பெரும்பாலான சமயங்களில் சட்டங்களால் பொதுமக்கள் பாதுகாக்கப் படுவதில்லை. ஆட்சிகளும் ஆள்பவர்களுமே பாதுகாக்கப்படுகிறார்கள்' என்ற உணர்வு அப்போது மல்லிகைப் பந்தல் நகர் முழுவதும் பரவியிருந்தது. அந்த நகரத்தில் அப்போது ஏற்பட்டிருந்த குமுறலையும் கோபத்தையும் போலீசாரின் தடையுத்தரவு மட்டுமின்றி இயற்கையும் வேறு சேர்ந்து கொண்டு தடுத்து விட்டது. மாணவ மாணவிகள் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்ட தினத்தன்று இரவு மழை பிடித்துக் கொண்டு விட்டது. மற்ற நகரங்களில் வரும் மழைக் காலத்துக்கும், மல்லிகைப் பந்தலைப் போன்ற மலை நாட்டு நகரம் ஒன்றில் வரும் மழைக் காலத்துக்கும் மிகுந்த வேறுபாடு இருந்தது. மல்லிகைப் பந்தல் நகரில் வரும் மழைக்காலம் என்பது தொடர்ந்து சில மாதங்களுக்கு நகரின் பொது வாழ்க்கையையே அடங்கச் செய்துவிடக் கூடியது. புறாக்கூடுகளில் ஒடுங்கும் புறாக்களைப் போல் மக்கள் கம்பளிப் போர்வைகளிலும், உல்லன் கோட்டுகளிலும், நனையாத மழை அங்கிகளிலும், கணப்புகள் கதகதப்பாக எரியும் வீடுகளிலும், வெதுவெதுப்பான அறைகளிலுமே தங்கிவிடக்கூடிய காலம் அது. இந்த மாதங்களில் பல்கலைக் கழகத்திலிருந்து நகருக்குள் வருவதும், பல்கலைக் கழகத்துக்குள் போவதும் குறைந்து விடும். பல்கலைக் கழகம் மிகமிக அமைதியானதொரு தனி நகரம் போல் விலகித் தெரியும். போராட்டங்கள், பூசல்கள் அதிகம் நடத்த முடியாத மாதங்கள் இவை. பல்கலைக் கழக மைதானமும், பூங்காக்களும், ஏரியும், படகுத்துறையும், மரத்தடிகளும் ஆளரவமின்றி - மௌனமாக அடை மழையில் குளித்துக் கொண்டிருக்கக் கூடிய இந்தக் குளிர்ந்த மாதங்களில் வகுப்பறைகளில், பரிசோதனைக் கூடங்களில், நூல் நிலையங்களில் எங்கும் ஒருவித அமைதி தென்படும். இந்த மழைக் காலத்து மாதங்களில் பல்கலைக் கழகமும், நகரமும், ஆரவாரமோ, கலகலப்போ இன்றி மிகவும் 'ஸீரியஸ்ஸாக' இருப்பது போல் தோன்றுவதை முதற் பார்வையிலேயே யாரும் சுலபமாகப் புரிந்து கொண்டு விட முடியும். அங்கே மழைக்காலத்தின் அடையாளமே இதுதான். ஆனால் இந்த ஆண்டிலோ மழையே சில வாரங்கள் தாமதமாகத் தான் தொடங்கியிருந்தது. இதே மழை நான்கைந்து தினங்களுக்கு முன்னதாகவே தொடங்கியிருக்குமேயானால் பாண்டியனும் மற்ற மாணவ மாணவிகளும் உண்ணாவிரதத்துக்காக கொட்டகைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கவே முடியாமற் போயிருக்கும். போலீஸார் அவர்கள் மேல் 'தற்கொலை செய்து கொள்ள முயற்சி' என்று குற்றத்தைச் சுமத்திக் கைது செய்த இரவு மழை பிடித்துக் கொண்டதனால் அடுத்த இரண்டு தினங்களில் அதை எதிர்த்து யாரும் அங்கே எதுவும் செய்ய முடியவில்லை. மூன்றாம் நாள் துணைவேந்தர் சென்னையிலிருந்து திரும்பி இருந்தார். பல்கலைக் கழக 'சிண்டிகேட்' அந்த வாரத்திற்குள் மிகவும் முக்கியமாகச் சந்திக்கப் போகிறது என்ற செய்தியும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. துணைவேந்தர் அவசர அவசரமாகப் பல்கலைக் கழகத்தை மூடியதும், விடுதிகளைக் காலி செய்து மாணவர்களை விரட்டியதும் உடனே மாநிலத் தலைநகருக்குச் சென்றதும், திரும்பிய உடன் வரப்போகிற பட்டமளிப்பு விழாவுக்கு முன்பாக நல்ல மழைக் காலத்தில் அங்கே சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டியிருப்பதும் சந்தேகத்துக்கு உரிய காரியங்களாக மற்றவர்களுக்குத் தோன்றின. பொது மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் பல வதந்திகள் உலாவின. அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். உண்ணாவிரதப் பந்தலிலிருந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்ட பன்னிரண்டு பேரில் மாணவிகள் ஆறு பேரையும் இரண்டாம் நாளோ, மூன்றாம் நாளோ விடுவித்து விட்டார்கள். அதற்குள்ளேயே பத்திரிகைகளில் செய்திகளைப் பார்த்துவிட்டு உண்ணாவிரதம் இருக்கும் மகளின் நிலைமையை அறிவதற்காகக் கண்ணுக்கினியாளின் தந்தை கந்தசாமி நாயுடு மதுரையிலிருந்து புறப்பட்டு வந்திருந்தார். கந்தசாமி நாயுடு மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் வந்து இறங்கியவுடன் நேரே அங்கிருந்து அண்ணாச்சி கடைக்குத்தான் போய்ச் சேர்ந்தார். பழைய நாடகக் கம்பெனி முதலாளியைச் சந்தித்ததில் அண்ணாச்சிக்கு மகிழ்ச்சி தலைகால் புரியவில்லை. "உங்கள் தள்ளாத வயசிலே குளிர் காலத்திலே இந்த மலைக்காட்டு ஊரைத் தேடி நீங்கள் ஏன் அலையணும் நாயினா? எனக்கு ஒரு வரி எழுதியிருந்தீங்கன்னா செய்ய வேண்டியதை நானே செஞ்சிருப்பேனே?" என்று அவரை வரவேற்றார் அண்ணாச்சி. கந்தசாமி நாயுடு அதே சிவப்புக்கல் கடுக்கனும், கதர் மயில்கண் கதர் வேஷ்டியும், முக்கால் கைச்சட்டையும், ராஜபார்ட் முகக்களையும், முன் தலையில் வழுக்கையும், பிடரியில் சுருள் சுருளாக நரைத்த கிராப்புமாக முன்னை விடப் பத்து வயது முதுமையையும் ஏற்று, மாறாத புன்னகையோடு விளங்கினார். தன்னைக் கும்பிட்ட அண்ணாச்சியை வாழ்த்திவிட்டு, "ஏதோ உண்ணாவிரதம்னு பேப்பர்லே பார்த்தேன் தம்பீ! நவராத்திரி வேற வருது. 'கண்ணு'தான் வீட்டிலே கொலு வைக்கிறது வழக்கம். அதுக்கு நெனவு தெரிஞ்ச நாளிலேயிருந்து அதுதான் கொலு வைக்குது. இந்த வருஷம் இங்கே கொண்டாந்து சேர்த்துப் பிட்டோம்கிறதுக்காகக் கொலு இல்லாமல் போயிடக் கூடாது. லீவோ விட்டாச்சு. இனிமே இங்கே என்ன வேலை? அதனால நாமே கூட்டிக்கிட்டுப் போயிடலாம்னு புறப்பட்டு வந்தேன். அது என்ன பேப்பர்லே என்னென்னவோ போட்டிருந்தானே தம்பீ. அந்த நிலக்கோட்டைக்காரப் பொண்ணு ஏன் தண்ணீலே விழுந்து செத்துப் போச்சு...? அதுலே யாருமே சம்பந்தப்பட்டிருக்காங்க? என்ன சமாசாரம்? ஊர்லே பத்தும் பலதுமாப் பேசுகிறாங்களே?" என்று விசாரித்தார் நாயுடு. நடந்த விவரங்களை அண்ணாச்சி அவரிடம் தெரிவித்தார். "நீ சொல்றதைக் கேட்டாப் பயமாயில்ல இருக்கு! இந்த மாதிரி வாத்தியாருங்க இருக்கிற எடத்திலே வயசு வந்த பொண்ணுங்களைப் படிக்க விடறது கூடத் தப்புப் போலிருக்கே" என்று அலுத்துக் கொண்டார், அண்ணாச்சி கூறிய விவரங்களைக் கேட்ட நாயுடு. "எல்லா வாத்தியாருங்களையும் அப்படிச் சொல்லிட முடியாது நாயினா! இந்த யுனிவர்ஸிடியிலே மொத்தம் எண்ணூறு வாத்தியாருங்க இருக்காங்க. 'டீச்சிங் ஸ்டாஃப்'ங்கிற இந்த எண்ணூறு பேரைத் தவிர 'நான் - டீச்சிங் ஸ்டாஃப்'னு மத்தவங்க ஒரு ஐநூறு பேர் தேறும். அப்பிடி இருக்கிற ஆயிரத்து முந்நூறு பேர்லே ஒரு பத்து இருபது பேர்தான் மோசமானவங்களா இருக்காங்க. மத்தவங்கள்ளாம் ரொம்பப் படிப்பு, மானம், மரியாதையோடு நல்லா இருக்கிறவங்கதான். மோசமாகவும், ஒழுக்கக் குறைவாகவும், அரசாங்கமும் தங்களுக்கு வேண்டியவங்க கையிலே இருக்குதுன்னுதான் எதுக்கும் துணிஞ்சிடறாங்க. எதையும் தங்களாலே மூடி மறைச்சிட முடியும்னுதான் தப்பாகப் போறாங்க... மத்தவங்க அத்தனை பேரும் தங்கள் படிப்பிலே மலையாக உயர்ந்தவங்கன்னா, இந்தப் பத்திருபது பேரும் அரசியல் சிபார்சிலே வேலைக்கு வந்தவங்களா இருப்பாங்க... இவர்களுக்குத் தொழில் திறமை குறைவாகவும், கட்சி அதிகார செல்வாக்கினாலே ஒரு மிருக பலம் அதிகமாகவும் வந்திடுது... இதுதான் நிலைமை" என்றார் அண்ணாச்சி. நல்ல வேளையாக மதுரையிலிருந்து நாயுடு வந்த தினத்தன்று காலை மழை இல்லை. கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகள் அறுவரும் விடுதலையாகி இருந்தனர். கண்ணுக்கினியாள் மல்லிகைப் பந்தல் நகரிலேயே ஒரு கல்லூரித் தோழியோடு அவள் வீட்டில் தங்கியிருந்தாள். நாயுடு வந்திருக்கும் செய்தியைக் கடைப் பையன் ஒருவன் மூலம் கண்ணுக்கினியாளுக்கு அண்ணாச்சி சொல்லி அனுப்பினார். கண்ணுக்கினியாள் பத்தே நிமிஷயங்களில் வந்து சேர்ந்தாள். தன் கடையிலிருந்து அண்ணாச்சி அவளைத் தேடி அனுப்பிய பையனைப் பின்னால் நடந்து வரச் சொல்லிவிட்டு அவன் வந்த சைக்கிளில் தானே ஏறிக் கொண்டு நாயினவைப் பார்க்க விரைந்து வந்திருந்தாள் அவள். "அடடே! நீயே சைக்கிளில் ஏறிக்கிட்டு அவனை நடந்து வரச் சொல்லிட்டியா தங்கச்சி...? தங்கச்சிக்கு சைக்கிள் விடத் தெரியும்கிறதையே இன்னிக்குத்தான் பார்க்கிறேன் நான்..." என்று அவளை வரவேற்றார் அண்ணாச்சி. அவள் பதில் கூறினாள்: "இந்த ஊர்லே காலார நடக்கிறதைப் போல சுகமான காரியம் வேறே எதுவும் இல்லே அண்ணாச்சி! நாயினாவை உடனே பார்க்கணும்கிற அவசரத்துக்காக இன்னிக்குச் சைக்கிளிலே வந்தேன். எனக்குச் சைக்கிள் நல்லா விடத் தெரியும். ஸ்கூட்டர் கூடப் பழகியிருக்கேன். இங்கே வந்தப்புறம் அதுக்கெல்லாம் வாய்ப்பில்லே..." என்று அண்ணாச்சியிடம் கூறிவிட்டுத் தன் தந்தையின் பக்கம் திரும்பி, "வாங்க நாயினா" என்றாள் அவள். "என்னம்மா? உன்னை ஊருக்குக் கூட்டிக்கிட்டுப் போகலாம்னு தான் வந்தேன். நவராத்திரிக் கொலு வருது. நீ என்னவோ உண்ணாவிரதம் கிண்ணாவிரதம்னு இங்கே ஊரையே கலங்கப் பண்ணிக்கிட்டிருக்கிறதா பேப்பர்லே பார்த்தேன். பயமாயிருந்தது. அதுதான் நானே புறப்பட்டு வந்திருக்கேன். இன்னிக்கே கடைசிப் பஸ்ஸிலே புறப்படலாமா? உன் சௌகரியம் எப்படி? எனக்கு இந்த ஊர் குளிரு தாங்க முடியலே" என்று அவள் தந்தை உடனே பிரயாணத்தைப் பற்றி கூறினார். "நாயனா! இப்பிடி அவசரப்பட்டீங்கன்னா எப்படி முடியும்? தங்கச்சி, சிநேகிதிங்க கிட்டச் சொல்லிட்டுப் புறப்படணுமில்லே? கொஞ்சம் டயம் கொடுங்க..." என்று அவள் கவலையை அந்தரங்கமாகப் புரிந்து கொண்டு அவள் சார்பாகத் தாமே நாயுடுவிடம் வேண்டினார் அண்ணாச்சி. அவரும் அவருக்கு இணங்கினார். தந்தையும் மகளும் அண்ணாச்சி கடையின் பின்புறம் இருந்த அறையில் அரை மணி நேரம் குடும்ப விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தார்கள். அண்ணாச்சி அங்கேயே நாயுடுவின் பகல் உணவிற்கு ஏற்பாடு செய்தார். "நாயினா! நீங்க சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ளே நான் சொல்ல வேண்டியவங்களைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு வந்திடலாம்னு பார்க்கிறேன். நான் சாப்பிட்டாச்சு. நீங்க சாப்பிட்டதும் பகல் மூணரை மணிக்கு நேரா மதுரைக்கு ஒரு எக்ஸ்பிரஸ் பஸ் இருக்கு. அதிலே போயிடுவோம்" என்று தந்தையிடம் கூறிவிட்டு, அண்ணாச்சியைத் தன்னோடு ஒரு நிமிஷம் வெளியில் வந்து போகுமாறு குறிப்புக் காட்டினாள் கண்ணுக்கினியாள். அண்ணாச்சியும் அதைப் புரிந்து கொண்டு நாயுடுவை உள் அறையிலேயே விட்டுவிட்டு அவளோடு கடை முகப்புக்கு வந்தார். இன்னும் விடுவிக்கப் படாமல் ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலிலேயே இருந்த பாண்டியனையும் மோகன்தாஸையும் மற்ற மாணவர்களையும் சந்திப்பது எப்படி என்று அண்ணாச்சியிடம் கவலை தெரிவித்தாள் அவள். ஆஸ்பத்திரியில் இருந்த போதும் கூட மாணவர்களும் மாணவிகளும் தனித்தனி வார்டுகளில் இருந்ததனால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது. போலீஸ் காவலும் கடுமையாக இருந்தது. மாணவிகளை மட்டும் விடுவித்த பின்பும் கூட பாண்டியன் முதலியவர்களை மற்ற மாணவர்களோ, அரசியல் தொடர்புடையவர்களோ வந்து சந்திக்க முடியாமல் போலீஸார் தடுத்திருந்தனர். "அங்கே ஆஸ்பத்திரியிலே வார்டில் காவலுக்கு இருக்கிற போலீஸ்காரங்க அவ்வளவாகக் கெடுபிடிக்காரங்க இல்லே. நான் போனப்ப அத்தனை தடையிருந்தும் என்னைப் பார்க்க விட்டாங்க. நீயும் போயிப் பாரு, தங்கச்சீ! முடியலேன்னா எங்கிட்ட வந்து நீ சொல்ல வேண்டியதை ஒரு லெட்டரா எழுதிக் குடுத்திட்டா நான் அதைத் தம்பிக்கிட்டச் சேர்த்திட முடியும்" என்றார் அண்ணாச்சி. அவளுக்கும் அதுதான் சரி என்று தோன்றியது. தோழியின் வீட்டுக்குச் சென்று அவளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மழைக்குப் பாதுகாப்பாகக் குடைகளோடு பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டுக்கு முதலில் போனாள் அவள். அவர் உதவி செய்தாலோ, உடன் வந்தாலோ ஆஸ்பத்திரியில் பாண்டியனைச் சந்திப்பது சுலபமாயிருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது. அவளும் அவள் தோழியும் பல்கலைக் கழக ஆசிரியர் வீடுகள் இருந்த பகுதிக்குள் சென்று பேராசிரியர் பூதலிங்கத்தின் இல்லத்தை அடைந்த போது அவருடைய மகள் கோமதிதான் ஹாலில் அமர்ந்து வீணை வாசித்துக் கொண்டிருந்தாள். அந்த மனத்துயரம் நிறைந்த வேளையில் வீணை வாசிப்பதைக் கேட்பது இதமாக இருந்தது. "அப்பா இல்லையா கோமதி? எனக்கு ஒரு முக்கியமான காரியமாக உடனே அவரைப் பார்த்தாக வேண்டும். சாயங்காலம் நான் ஊருக்குப் போகணும்கிறதாலே இப்பவே வந்தேன்" என்று கண்ணுக்கினியாள் வினவியதும் "வி.ஸி. திடீர்னு ஸ்டாஃப் கவுன்ஸில் எமர்ஜென்ஸி மீட்டிங்குக்குக் கூப்பிட்டனுப்பி அப்பா போயிருக்கார். வர எவ்வளவு நேரமாகுமோ தெரியலையே?" என்று பதில் சொன்னாள் கோமதி. இதைக் கேட்டதும் வெளியே யாருக்கும் தெரியாமல் பல்கலைக் கழக எல்லைக்குள் மாணவர்களின் இயக்கத்துக்கு எதிராக என்னென்னவோ நடந்து கொண்டிருப்பது போல் தோன்றியது. துணைவேந்தர் மிகவும் தந்திரமாகத் தம்மைக் காத்துக் கொள்ளும் காரியங்களில் முனைந்திருக்கிறார் என்பது புரிந்தது. இந்த வேளையில் பாண்டியன் முதலியவர்களோடு அங்கே தங்காமல் தான் மட்டும் ஊருக்குப் போகலாமா என்று அவள் மனம் மெல்லத் தயங்கியது. கோமதி மேலும் சில விவரங்களைக் கூறினாள். "உனக்குத் தெரியுமா கண்ணுக்கினியாள்? அந்த லெக்சரர் மதனகோபால் இங்கிருந்து பத்திரமாகத் தப்பிப் போவதற்கும் நம் வி.ஸி. சொல்லித்தான் போலீஸும் வேண்டிய உதவிகளைச் செய்ததாம். காலையில அப்பாவைத் தேடி ஜுவாலஜி டிபார்ட்மெண்ட் தங்கராஜ் சார் வந்திருந்தார். தங்கராஜிடம் அப்பா சொல்லிக் கொண்டிருந்த போது நான் கேட்டேன். 'ஒழுக்கமில்லாதவர்களைப் பாதுகாத்துத் தப்பச் செய்து கொண்டே மற்றவர்களுக்கு அமைதியையும் ஒழுக்கத்தையும் உபதேசித்தால் யார் தான் நம்புவார்கள்? இந்த வி.ஸி. இரகசியமாக மதுரைக்குப் போய் அங்கிருந்து விமானத்தில் சென்னைக்குப் பறந்து அமைச்சரின் பிறந்த தின நாளில் அவருக்கு மாலை சூட்டி மலர்க் கிரீடம் வைத்து விட்டுத் திரும்புகிறார். பல்கலைக் கழகம் என்ற சுதந்திர அமைப்பின் தலைவராக நடந்து கொள்ளாமல், மந்திரிகளின் ஏஜெண்டு போல் செயல்படுகிறார். தேர்தலில் வென்ற மாணவர்கள் அதைக் கொண்டாட அனுமதி கேட்டதற்குப் 'பல்கலைக் கழக எல்லைக்குள் கொண்டாடக் கூடாது' என்று மறுத்து விட்டார். இப்போது வென்ற மாணவர்கள் தோற்று, மந்திரிகளின் கட்சிக்கு வேண்டிய மாணவர்கள் வென்றிருந்தால் இவர் நிச்சயமாக இப்படி இடம் தர மறுத்திருக்க மாட்டார். இவரே இரகசியமாக ஒரு தரப்புக்கு ஆதரவாக இருந்து கொண்டு அப்புறம் எல்லாத் தரப்பு மாணவர்களின் தலைவராகவும் எப்படி விளங்க முடியும்? மேரி தங்கத்தின் தற்கொலைக்கு மதனகோபால்தான் காரணம் என்று தெரிந்த பின்பும் அவரை இவர் ஏன் பதவியிலிருந்து வெளியேற்றத் தயங்குகிறார்? தவறு செய்த ஒருவர் மந்திரிக்கு உறவினர் என்பதற்காக இவர் ஏன் தாட்சண்யப் படவேண்டும்? தவறு செய்தவர்களிடம் தாட்சண்யப்படுவது என்பது தவறுகளிடமே தாட்சண்யம் காட்டுவதற்குச் சமமானதுதான் என்பது இவருக்கு ஏன் புரியவில்லை? இவ்வாறு தவறுகளுக்கு நடுவே 'ஸ்டாஃப் கவுன்ஸிலை'க் கூட்டி மற்றவர்களிடம் பூசி மெழுக என்ன தான் இருக்கிறதோ தெரியவில்லை' என்று அப்பா தங்கராஜ் சாரிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன். அப்பாவுக்கு 'ஸ்டாஃப் கவுன்ஸில்' மீட்டிங்குக்குப் போகவும் வி.ஸி.யைப் பார்க்கவுமே பிடிக்கவில்லை. தங்கராஜ் சார்தான், 'நாம் நாலு பேர் போகாமல் விட்டால் எதிர்க் குரல் கூட இருக்காது. அவர்கள் விருப்பம் போல் எல்லாவற்றையும் முடிவு செய்து விடுவார்கள். அது நடக்காமல் இருக்கவாவது நாம் போக வேண்டும்' என்று வற்புறுத்தி அப்பாவைக் கூப்பிட்டுக் கொண்டு போயிருக்கிறார். அநேகமாகத் திரும்பி வருகிற நேரம் தான். நீ இன்னும் அரை மணி நேரம் காத்திருந்தால் அப்பாவைச் சந்தித்து விடலாம்" என்றாள் கோமதி. கண்ணுக்கினியாளும் அவளுடைய தோழியும் காத்திருந்தார்கள். பகல் இரண்டரை மணிக்குப் பேராசிரியர் பூதலிங்கமும் தங்கராஜ் சாரும் திரும்பி வந்தார்கள். வரும் போதே அவர்கள் இருவரும் எதற்காகவோ துணைவேந்தரைக் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள் உள்ளே நுழையவும் காலையிலிருந்து சற்று வெளிவாங்கியிருந்த வானம், மூடிக் கொண்டு மழை மீண்டும் கொட்டத் தொடங்கவும் சரியாக இருந்தது. கண்ணுக்கினியாளும், அவளுடைய தோழியும் பேராசிரியர்களுக்கு எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தார்கள். "வா அம்மா! நீ இன்னும் ஊருக்குப் போகவில்லையா? மாணவிகளைத்தான் விடுதலை செய்து விட்டார்களே? நீ அன்றைக்கே ஊருக்குப் போயிருப்பாய் என்றல்லவா நினைத்தேன்?" என்று கண்ணுக்கினியாளைக் கேட்டார் பூதலிங்கம். தந்தை ஊரிலிருந்து வந்திருப்பதையும் மாலையில் தான் அவரோடு ஊர் திரும்ப இருப்பதையும் கண்ணுக்கினியாள் அவரிடம் கூறினாள். போலீஸ் காவலில் இருக்கும் மாணவர்கள் ஆறு பேரையும் எப்படி விடுவித்து வெளியே கொண்டு வருவது என்பது பற்றியும் ஆஸ்பத்திரிக்குப் போய் அவர்களைச் சந்திப்பது பற்றியும் யோசனை கேட்டாள். "பெய்லில் வருவதோ மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வருவதோ மாணவர்களுக்குப் பிடிக்காது அம்மா! பாண்டியனே அப்படி எல்லாம் செய்ய விரும்ப மாட்டான்... இப்போதிருக்கிற நிலைமையைப் பார்த்தால் அவர்களைச் சீக்கிரம் விடுதலை செய்யவும் மாட்டார்கள் போலிருக்கிறது. ஏதேதோ பொய்க் குற்றச் சாட்டுக்களை மாணவர்கள் மேல் சுமத்தவும் இரகசிய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. என்ன செய்யலாம்? தேவதைகள் நிதானமாக நுழைய அஞ்சும் இடங்களில் முட்டாள்கள் சரேலென்று அவசரமாகவே நுழைந்து விடுகிறார்கள். அதிகாரச் செல்வாக்கு உள்ளவர்களின் தலையீடு இந்த நாட்டின் பல்கலைக் கழகங்களை எப்படி எப்படியோ ஆக்கிவிட்டது. சர்க்கார் அதிகாரிகளை நண்பர்களாகவும் மாணவர்களை விரோதிகளாகவும் நினைக்கும் மனப்பான்மை உள்ள வரை, நம் வி.ஸி.யை யாரும் திருத்த முடியாது அம்மா! இன்னிக்கு 'ஸ்டாஃப் கவுன்ஸிலி'லேயும் ஒரே தகராறு தான். எங்களைப் போன்ற ஆசிரியர்கள் எல்லாரும் மாணவர்களுக்காக அனுதாபப் படுகிறோம். ஆனால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. இப்போது நான் உன்னோடு ஆஸ்பத்திரிக்கு வந்தால் கூட என்னைக் கூப்பிட்டு, 'நீ ஏன் ஆஸ்பத்திரிக்குப் போய் மாணவர்களைப் பார்த்தாய்?' என்று கேட்பார்கள் போலிருக்கிறது. நீங்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்த போது நான் வந்து பார்த்தேன் இல்லையா? அதுவே வி.ஸி.க்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கு ஸ்டாஃப் கவுன்ஸில் மீட்டிங்கில், 'நம்மில் சில ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களைத் தூண்டிவிடுவது போல் அடிக்கடி போய்ப் பார்க்கிறார்கள். அது எனக்குத் தெரியும்' என்று என்னை மறைமுகமாகக் குத்திக் காட்டிப் பேசினார் வி.ஸி. டாக்டர் பொழில்வளவனாரும், பண்புச் செழியனும் நாள் தவறாமல் வி.ஸி.யிடம் என்னைப் பற்றி கோள் சொல்லுகிறார்களாம். இதற்கெல்லாம் நான் பயப்படவில்லை என்றாலும், நிலைமையை உணர்ந்து எச்சரிக்கையாயிருக்கிறேன்" என்றார் பேராசிரியர் பூதலிங்கம். பேராசிரியர் தங்கராஜும் கூட இருந்ததால் பூதலிங்கத்திடம் மேலும் அதிகமாக எதையும் பேச முடியாமல் போகவே சொல்லி விடை பெற்ற பின் மழையோடு மழையாய்த் தன் தோழியோடு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள் கண்ணுக்கினியாள். ஆஸ்பத்திரியில் பாண்டியனை அவளால் சந்திக்க முடியவில்லை. வேறு எந்த வெளி மாணவர்களும் உள்ளே காவலில் இருக்கும் அந்த ஆறு மாணவர்களைச் சந்திக்க முடியாமல் போலீஸ் காவல் விதிகள் கடுமையாக்கப்பட்டிருந்தன. உடனே அவசரமாக அண்ணாச்சி கடைக்குத் திரும்பிப் பாண்டியனுக்கு ஒரு சுருக்கமான கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு அண்ணாச்சியையும் பஸ் ஸ்டாண்டு வரை உடனழைத்துக் கொண்டு நாயினாவோடும், வழியனுப்ப வந்த தோழியோடும் ஊர் புறப்பட பஸ் ஸ்டாண்டுக்குச் சென்றாள் அவள். மழை கடுமையாயிருந்ததால் பஸ் ஸ்டாண்டுக்குப் போய்ச் சேருவது சிரமமாயிருந்தது. எப்படியோ குடைகளைக் கொண்டு சமாளித்து பஸ் ஸ்டாண்டை அடைந்து விட்டார்கள். நாயினாவையும், கண்ணுக்கினியாளையும், அவள் தோழியையும், மழைக்கு நனையாமல் நிற்க வைத்து விட்டு டிக்கட் வாங்கச் சென்ற அண்ணாச்சி கால் மணி நேரம் கழித்து வெறுங் கையோடு திரும்பி வந்து, "இருபத்தேழாவது மைலில் ஆடுகாத்தான் பாறைக்குப் பக்கத்திலே மலை சரிந்து பதினைந்து இருபது கெஜ தூரத்துக்கு ரோடு மண் மூடிப் போச்சாம்! நாளைச் சாயங்காலம் வரை பஸ் போகவோ வரவோ முடியாதாம் தங்கச்சீ! நாளன்னிக்குத்தான் பார்க்கணும். நாயினாவுக்கு இந்த ஊர்க் குளிரை இன்னும் கொஞ்சம் அனுபவிக்கணும்னு தலையிலே எழுதியிருக்கிறப்ப என்ன பண்ணலாம்?" என்றார். சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|