முப்பதாவது அத்தியாயம்

     அன்று அவர்கள் 'பிக்னிக்'குக்காகப் புறப்பட்டு வந்திருந்த இடம் மல்லிகைப் பந்தலைச் சுற்றி இருந்த மலைப் பகுதிகளிலேயே மிகவும் அழகான இடம். சுற்றிலும் மலைச் சிகரங்களின் பசுமைச் செழிப்புக்கு நடுவே தற்செயலாக உதறிப் போட்ட பச்சை வெல்வெட் துணியில் நடுவே இரசம் பூசிய கண்ணாடி பதித்தது போல் கரடியாறு நீர்த் தேக்கம் அமைந்திருந்தது. மல்லிகைப் பந்தல் நகரிலிருந்து அரை மணி நேரப் பயணத்தில் போய்ச் சேர முடிந்த தொலைவிலேயே அந்த நீர்த்தேக்கப் பகுதி இருந்தாலும் அவர்கள் நடுநடுவே நின்றும், சிரித்தும், பேசியும், உல்லாசமாகவும், மெதுவாகவும் சென்றதால் நீர்த் தேக்கத்தை அடைய ஒரு மணி நேரம் ஆயிற்று. புறப்படும் முன்பாக எல்லாரும் வெறும் காப்பி மட்டுமே பருகியிருந்ததால் போய்ச் சேர்ந்ததுமே பசி தீரச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டார்கள். அப்புறம் மாணவர்களும் மாணவிகளும் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து பேச்சு, விளையாட்டு, பாட்டு, இசைக்கருவிகள், சீட்டாட்டம் என்று அவரவர்களுக்குப் பிடித்த காரியங்களில் ஈடுபடத் தொடங்கினர். அங்கே பக்கத்தில் ஓர் அருவியில் நிறையத் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. அதன் வெண்மை பச்சை நிற மலைமகள் வெளேர் என்று முத்து மாலை சூட்டிக் கொண்டிருப்பது போல் பார்ப்பவர் கண்களைக் கவர்ந்தது.

     கண்ணுக்கினியாளுக்கும் அவளோடு வந்திருந்த தோழிகள் இரண்டொருவருக்கும் அருவியில் குளிக்க வேண்டும் என்ற ஆசை வரவே இட்டிலிக்காகக் கொண்டு வந்த மீதமிருந்த நல்லெண்ணெயைத் தலையில் வைத்துக் கொண்டு நீராடப் புறப்பட்டு விட்டார்கள். அந்தப் பக்கத்தில் புல்வெளி நிறையப் புள்ளிமான்கள் உலாவிக் கொண்டிருந்தன. அவற்றில் ஈன்று சில நாட்களே ஆன மிகச் சிறிய புள்ளிமான் ஒன்று தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்தது. அருவியில் நீராடப் புறப்பட்ட பாண்டியன் அந்த இளம் மான் கன்றை இரு கைகளாலும் தூக்கி மார்போடு அணைத்தவாறே கண்ணுக்கினியாளின் முன்பு வந்தான். அவள் அவன் தன் எதிரே வந்த கோலத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அவனைக் கேட்டாள்:

     "ஏது மான்களைப் பிடிக்கத் தொடங்கி விட்டாற் போல் இருக்கிறதே!..."

     "என்ன செய்வது? இது சாது மான்! உடனே பிடிபட்டு விட்டது! வேறு சில மான்கள் இருக்கின்றன. அவை எவ்வளவு முயன்றாலும் பிடிபடுவதில்லை!"

     "இது சிலேடையாக்கும்...?"

     "நீ எப்படி எடுத்துக் கொள்கிறாயோ அப்படி..."

     "மாணவிகள் நீராடிப் போகும் இடத்துக்கு மாணவர்கள் வரக்கூடாது. ஞாபகமிருக்கட்டும்..."

     "இங்கு இருப்பது ஓர் அருவி தான்! அதில் தான் மாணவர்கள் மாணவிகள் எல்லாருமே நீராடியாக வேண்டும்..."

     "மாணவிகள் நீராடி முடிகிற வரையில் நீங்கள் இந்தப் பக்கமே வரக்கூடாது..."

     "நான் மானைத் தேடிக் கொண்டு வந்தேன்."

     "இது ரொம்பவும் பழைய 'வள்ளி திருமண டெக்னிக்'. வேறு ஏதாவது புதிதாகப் பேசுங்கள். காப்பியடிக்காதீர்கள்..."

     "நான் ஒன்றும் 'காயாத கானகத்தே' பாடவில்லையே?"

     "நீங்கள் அதையும் பாடினால் நான் இங்கே நிற்க முடியாது."

     சொல்லிவிட்டு அவள் சிரித்தாள். அவன் மானைக் கீழே புல்தரையில் விட்டு விட்டு அவளிடம் வலது உள்ளங்கையைக் குழிவாக நீட்டித் தலைக்கு வைத்துக் கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் வாங்கிக் கொண்டான்.

     அருவி நீராடலுக்குப் பின் உடம்பு சலவைக்குப் போட்டு எடுத்தது போல் இலேசாகிப் பசி வயிற்றைக் கிள்ளியது. காலையில் கொண்டு வந்திருந்த சிற்றுண்டிப் பொட்டலங்கள் எல்லாம் தீர்ந்திருந்தன. அணைக்கட்டு ஊழியர் குடியிருப்பையும் இன்ஸ்பெக்ஷன் பங்களாவையும் ஒட்டியிருந்த காண்டீனில் பகல் உணவுக்காக ஏற்பாடு செய்யலாமா அல்லது மல்லிகைப் பந்தலுக்கே திரும்பி விடலாமா என்று பாண்டியன் முதலிய மாணவர்கள் சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருந்த போது அண்ணாச்சி எதிர்பாராத விதமாக அங்கே ஒரு ஜீப்பில் வந்து இறங்கினார்.

     "சைக்கிள்களை எல்லாம் நீங்க இங்கே எடுத்துக்கிட்டு வந்துட்டதாலே கடையிலேயும் வேலை எதுவும் இல்லே. நீங்க கொண்டாந்த டிபன் பொட்டலம் போதாதுன்னு தோணிச்சு. மறுபடியும் சங்கர் பவன் அய்யருகிட்டச் சொல்லிப் புளியோதரை, தேங்காய்ச் சாதம் மசால் வடை எல்லாம் போடச் சொல்லிச் சுடச்சுட வாங்கியாந்திருக்கேன். நியூஸ் பேப்பர் பார்ஸலுக வந்து வாடிக்கைக்காரங்களுக்குப் பேப்பர் கொண்டு போய்ப் போட்டானதும், நேரே சங்கர் பவனுக்கு வந்து இதெல்லாம் ஏற்பாடு பண்ணி ஒரு தெரிஞ்ச பார்ட்டி கிட்டே ஜீப்புக்கு வழி செஞ்சப்புறம் பொறப்பிட்டு வந்தேன்" என்றார் அண்ணாச்சி.

     "நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படணும் அண்ணாச்சி?" என்று பாண்டியன் அவரைக் கடிந்து கொள்ளத் தொடங்கிய போதே அவருக்கு அவன் மேல் கோபமே வந்து விட்டது.

     "நீ சும்மா இரு தம்பீ! சிரமம் என்ன பெரிய சிரமம்? என்னோட வாழ்க்கையிலே சந்தோஷமே இதுதான். மல்லிகைப் பந்தல்லே கடையின்னு ஒண்ணைத் திறந்த நாளிலே இருந்து அங்கே படிக்க வார புள்ளைங்களுக்கு உபகாரம் பண்றதுதான் எனக்குச் சந்தோஷமாயிருந்திருக்கும். பணம் இல்லாமே ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட முடியாமத் திண்டாடியிருக்கிற எத்தினி பசங்களுக்கு என் கையிலேருந்து பணம் கட்டியிருப்பேன் தெரியுமா? அதை எல்லாம் சிரமம்னு நினைச்சா நான் செஞ்சிருக்க முடியுமா?"

     அப்போது அண்ணாச்சியை எதிர்த்துப் பேச முடியாமல் அவருடைய அன்புக்குக் கட்டுப்பட்டு நின்றான் பாண்டியன். பிறருக்காகச் சிரமப்படுவதிலேயே தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொள்ளும் சிலரும், பிறரைச் சிரமப்படுத்துவதிலேயே தங்கள் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையும் அழியும்படி செய்கிற சிலரும் நிறைந்த உலகில் அண்ணாச்சி முதல் வகைக்கு முதல் உதாரணமாயிருந்தார். தொண்டு செய்வதையே ஒரு தவம் போல் பழகியிருந்த அவரால் சும்மா இருக்க முடியாதென்று அவனுக்குப் புரிந்தது. வைரம் பாய்ந்த அந்த முரட்டு உடம்புக்குள் இருக்கும் மலர் போன்ற இதயத்தை அவன் வியந்தான். மாணவர்களை உட்கார வைத்து அண்ணாச்சியும் அவரோடு வந்திருந்த ஜீப் டிரைவரும் உபசரித்து உணவு பரிமாறினார்கள். அது முடிந்ததும் அண்ணாச்சியையும் டிரைவரையும் உட்கார வைத்து மாணவர்கள் உணவு பரிமாறினார்கள். போட்டி போட்டுக் கொண்டு அன்பாக அண்ணாச்சியை உபசரித்தாள் கண்ணுக்கினியாள்.

     சிறிது நேரம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு ஜீப்பில் திரும்பினார் அண்ணாச்சி. புறப்படுவதற்கு முன்னால், "ரொம்ப நேரம் தங்க வேணாம்; பொழுது சாயறப்ப அணை ஓரமாத் தண்ணி குடிக்க யானைக் கூட்டம் இறங்கும். அதுக்குள்ளே திரும்பிடுங்க" என்று பாண்டியனிடம் எச்சரித்து விட்டுப் போனார் அவர்.

     மாலை மூன்று மணி வரை கரடியாறு நீர்த்தேக்கத்தில் பொழுது போக்கிவிட்டுத் திரும்பினார்கள் அவர்கள். திரும்பும் போது இறங்கு முகமாகையினால் போகும் போதில் ஆன நேரத்தில் சரிபாதி நேரத்துக்குள்ளேயே வேகமாகத் திரும்பி விட்டாற் போலிருந்தது.

     அந்தப் 'பிக்னிக்'கில் கதிரேசன் கலந்து கொள்ளவில்லை. 'பிக்னிக்' முடிந்த தினத்துக்கு மறுநாள் மாலை நிலக்கோட்டை டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து மல்லிகைப் பந்தலுக்கு வந்திருந்தார். அவர் கதிரேசனுடன் தங்கினார். அன்றிரவு கதிரேசன், அவரைச் சந்திப்பதற்காகச் சில முக்கிய மாணவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தான். பாண்டியன், மோகன்தாஸ், பொன்னையா, நடன சுந்தரம் - எல்லாரும் போயிருந்தார்கள். பிச்சைமுத்து கூறினார்: "நம்மிடையே வர்க்க பேதத்தை ஒழித்துச் சுரண்டல் அற்ற சமுதாயத்தை அமைக்கிற வரை ஏகாதி பத்தியம் எந்த உருவிலாவது இருந்தே தீரும். இரத்த வெள்ளத்தில் தான் புரட்சிப் பூக்கள் மலர வேண்டும். மாணவர்களாகிய நீங்கள் இன்னும் தீவிரமாக மாறித்தான் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். எந்த வகையிலாவது நமது இலட்சியத்தை அடைந்தே ஆக வேண்டும்! முடிவே முக்கியம். வழிகள் அல்ல! வழிகளை முடிவு நியாயப்படுத்தி விடும்..."

     "இலட்சியம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாகவும், நியாயமாகவும் அதை அடையும் மார்க்கமும் இருக்க வேண்டும் அல்லவா?" என்று பாண்டியன் அவரைக் கேட்டான். அவர் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துச் சிரித்தார். ஓரிரு நிமிஷங்களுக்குப் பின், "மணவாளனைப் போன்றவர்கள் உங்களுக்கு அப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கலாம். அந்தக் கருத்தை நீங்கள் மாற்றிக் கொள்ளப் பழக வேண்டும். முடிவுகள் மார்க்கங்களை நியாயப்படுத்தி விடும்" என்றார் பிச்சைமுத்து. மணவாளனை விடத் தம்மை முற்போக்கானவர் என்று காட்டிக் கொள்ள அவர் முயல்வது பாண்டியனுக்குப் புரிந்தது. அதை ஒட்டி அவருக்கும் பாண்டியனுக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. அவர் தர்க்க ரீதியாகப் பதில் சொன்னாலும் அதிலிருந்த அளவு மீறிய வேகம் அவனுக்குப் புரியவில்லை. கதிரேசனும், வேறு சில மாணவர்களுமோ பிச்சைமுத்து சொல்வதுதான் சரி என்றார்கள். பாண்டியன் அதில் கருத்து வேறுபட்டுத் தயங்கினான். பிச்சைமுத்து தங்கியிருந்த இரு நாட்களும் கதிரேசன் தனித்தனியே பல விடுதி அறைகளுக்கு அவரை நடு இரவிலும், அதிகாலையிலும் அழைத்துச் சென்று ஒற்றையாகவும், குழுக்களாகவும் மாணவர்களைச் சந்திக்க வைத்தான். வேளாண்மைப் பட்டப் பிரிவிலும், பொறியியல் பட்டப் பிரிவிலும் நிறைய மாணவர்களைச் சந்தித்தார் அவர். அவர் மல்லிகைப் பந்தலுக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய தினத்திலிருந்து கதிரேசன் பாண்டியனைப் பார்ப்பதை நிறுத்திவிட்டான். தனக்கும் கதிரேசனுக்கும் நடுவே இடைவெளி வளர்வது பாண்டியனுக்குப் புரிந்தது. பிச்சைமுத்து வந்து போன பின் கதிரேசனும் வேறு சில மாணவர்களும் இரவு பதினோரு மணி, ஒரு மணி என்று வேளை கெட்ட வேளைகளில் தனித்தனியே இரகசியமாக சந்திப்பதாகவும், பேசுவதாகவும் பாண்டியன் கேள்விப்பட்டான். கதிரேசன் தலைமையில் ஒரு குழு தங்களிடமிருந்து பிரிந்திருப்பது பாண்டியனுக்குப் புரிந்தது. கதிரேசனும் அவன் நண்பர்களும் இப்போதெல்லாம் அண்ணாச்சிக் கடைப் பக்கம் வருவதை நிறுத்திவிட்டார்கள் என்பதும் தெரிந்தது.

     "ஒட்ட வெட்டிய கிராப்பும், மீசையுமா அடையாளம் தெரியாத மாற்றத்துடன், முதல் நாள் அந்தத் தம்பி கதிரேசன் இந்தப் பாதையா சிகரெட் பிடிச்சுக்கிட்டே நடந்து போனப்போ நானே கைதட்டிக் கூப்பிட்டேன். காது கேக்காதது போலப் போயிடிச்சு அது" என்று அண்ணாச்சியே பாண்டியனிடம் ஒருநாள் கூறிய போது அதை எப்படி அவருக்குச் சொல்லி விளக்குவது என்று பாண்டியனுக்குப் புரியவில்லை.

     "சொந்தப் பகை எதுவும் இல்லை அண்ணாச்சி! வெறும் சித்தாந்தப் பகை தான். தீமைகளை எதிர்த்துவிட்டுத் தீயவர்களை நம் வழிக்கு மாற்ற நினைக்கிறோம் நாம். அவர்களோ தீமைகளையும் தீயவர்களையும் சேர்ந்தே அழித்து விட நினைக்கிறார்கள்..." என்று மெல்ல அந்த மாறுதலைப் பாண்டியன் அண்ணாச்சிக்கு விளக்கினான். உடனே மணவாளனுக்குத் தந்தி கொடுத்து அவரை வரவழைக்கச் சொன்னார் அண்ணாச்சி. பாண்டியன் தந்தி கொடுத்தான். மறுநாள் பகலில் மணவாளன் மதுரையிலிருந்து வந்து சேர்ந்தார். மணவாளன் தலைமையில் தேசியத் தொழிலாளர் யூனியன் ஹாலில் பல்கலைக் கழக மாணவர் கூட்டம் நடந்தது. அப்போது தெரிந்த ஒரு கணக்கின் படி ஐந்து சதவிகிதம் மாணவர்கள் கதிரேசன் தலைமையில் தீவிரவாதிகளாக அணிவகுத்திருப்பதையும், பதினைந்து சதவிகிதம் மாணவர்கள் மல்லை இராவணசாமி கட்சியின் சார்பாக இருப்பதையும், எந்தச் சார்பும் இல்லாத உதிரிகளாகப் பத்து சதவிகித மாணவர்கள் இருப்பதையும், மீதியுள்ள எழுபது சதவிகிதம் தங்கள் பக்கம் இருப்பதையும் பாண்டியன் அறிந்தான்.

     மணவாளன் பாண்டியனுக்கு ஆறுதல் கூறினார்: "கவலைப்படாதே! பிச்சைமுத்துவும் நீண்ட நாள் தேசியவாதியாக இருந்து தான் சலிப்புற்றுத் தீவிரவாதியாகி விட்டார். அவரை வெறுக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல படிப்பாளி. சமூகக் கொடுமைகள் அவரைக் கோபக்காரராக்கி விட்டன. கதிரேசன் அவரால் கவரப்பட்டு விடுவான் என்பதை 'அவன் அவரை நிலக்கோட்டையில் சந்தித்தான்' என்று முதல் முதலாக அறிந்த போதே நான் எதிர்பார்த்தேன்."

     "அடைகிற மார்க்கம் முக்கியமில்லை. எய்துகிற இலட்சியமே முக்கியம் என்கிறார் அவர்."

     "நமக்கு மார்க்கத்திலும் நம்பிக்கை இருக்கிறது. பொய்கள் கரைய வேண்டும் என்பதோடு சத்தியம் பெருக வேண்டும் என்றும் சேர்ந்தே ஆசைப்படுகிறோம் நாம். சத்தியம் பெருகுவதாலேயே பொய்கள் கரைய வேண்டும் என்பது நம் ஆசையாக இருக்கிறது."

     "பிச்சைமுத்து உங்களை அப்பட்டமான பிற்போக்குவாதி என்கிறார்."

     "சொல்லட்டுமே! நான் அவரை அப்படிச் சொல்ல மாட்டேன். அவர் பிற்போக்குவாதியில்லை என்று புரிந்து கொள்கிற அளவு நான் முற்போக்குவாதி என்பதையாவது அவர் அறிந்து கொண்டால் நல்லது. நிதானத்தையே அவர் பழிப்பதற்கு தயாராக இருந்தால் என்னை மட்டும் அவர் எப்படிப் பழிக்காமல் விட்டு வைக்க முடியும்?" என்று பொறுமையாகப் பாண்டியனுக்குப் பதில் சொன்னார் மணவாளன்.

     நாலைந்து நாட்கள் மல்லிகைப் பந்தலில் தங்கியிருந்த பின் மறுபடியும் பட்டமளிப்பு விழாவுக்கு முன்னர் வருவதாகக் கூறிவிட்டு மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் மணவாளன். அவர் திரும்புவதற்குள் பலமுறை கதிரேசனைச் சந்திக்க முயன்றும் முடியவில்லை. அவன் அவர் பார்வையில் சிக்கவேயில்லை. அவர் ஊருக்குப் போன மறுநாள் பகலில் பல்கலைக் கழக காண்டீனில் தேநீர் அருந்துவதற்காகப் பாண்டியனும் கண்ணுக்கினியாளும் நுழைந்த போது, உள்ளேயிருந்த கதிரேசன் நாலைந்து மாணவர்களோடு தேநீர் அருந்திவிட்டு எதிரே திரும்பி வந்து கொண்டிருந்தான். குறுகிய வாயிலருகே ஒருவரையொருவர் தவிர்க்க முடியாமல் பாண்டியனும் கதிரேசனும் சந்தித்துக் கொள்ள நேர்ந்து விட்டது. "ஹலோ கதிரேசன்!" என்று பாண்டியன் எதிரே வழி மறித்ததும் கதிரேசன் நின்றான். "என்னப்பா உன்னைக் காணவே முடியறதில்லை! மணவாளன் அண்ணன் வந்து நாலைந்து நாள் தங்கியிருந்தாரு. உன்னைப் பார்க்கணும்னு தவியாய்த் தவிச்சாரு. முடியலை..." என்று பாண்டியன் தொடங்கியது, "நான் நிலக்கோட்டைக்குப் போயிருந்தேன்" என்றான் கதிரேசன். முகமலர்ச்சியே இல்லாமல் மணவாளனைப் பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல் அவன் அசட்டையாகப் பதில் கூறிய விதம் பாண்டியனுக்கு என்னவோ போலிருந்தது.

     அந்தக் கடுமையைத் தவிர்க்க விரும்பி, "நான் கூட 'சாரை'ப் பார்த்து ரொம்ப நாளாச்சு" என்று கண்ணுக்கினியாள் சிரித்துக் கொண்டே தொடங்கியதும், "நான் இப்பல்லாம் யாரையுமே பார்க்க விரும்பறதில்லை" என்று கத்தரித்தாற் போல் பதில் சொல்லிவிட்டு உடனிருந்தவர்களோடு மேலே நடந்து விட்டான் கதிரேசன். பாண்டியனுக்கும், கண்ணுக்கினியாளுக்கும் அந்தப் பதில் முகத்தில் அறைந்தாற் போல் ஆகிவிட்டது.

     "ரொம்ப மாறிவிட்டான்" என்று கண்ணுக்கினியாளிடம் கூறினான் பாண்டியன்.

     "மாற்றம் அப்படி இப்படி இல்லை. அபாயகரமான அளவு மாறியிருக்கிறார். நான் இன்னும் என்னென்னவோ கேள்விப்படுகிறேன்" என்றாள் அவள். கதிரேசன் நடந்து கொண்ட விதம் அவர்களுக்குக் கவலை அளித்தது.

     "லேக் அவென்யூவில் ராயல் பேக்கரி 'பில்டிங்'கில் குமரப்பன்னு ஒரு ஆர்ட்டிஸ்ட் இருக்காரு. அவர் தான் உள்ளூரில் கதிரேசனுக்குக் குரு" என்றாள் கண்ணுக்கினியாள்.

     "உனக்கெப்படி தெரியும் அது?"

     "எங்க விமன்ஸ் ஹாஸ்டல்லே இருந்து கூட ஒரு மலையாளிப் பெண் அவங்க ஸெல் மீட்டிங்குகளுக்குப் போக வர இருக்கா... வார்டன் அம்மாள் அவளைப் பற்றி ரொம்பவும் பயப்படுகிறாள்."

     "அந்தக் குமரப்பன் பெரிய ஜீனியஸ்! அவரைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனா அவர் இவ்வளவு தீவிரமானவர்னு இன்னிக்கு நீ சொல்லித்தான் தெரியும்..."

     "அறிவாளிகள் ஒடுக்கப்பட ஒடுக்கப்பட, அப்படி ஒடுக்கப்படும் சமூகத்தில் இப்படியெல்லாம் தான் நடக்கும் போலிருக்கிறது."

     "ஒரேயடியா நீ அப்படிச் சொல்லிவிட முடியாது. உன் வாதம் தவறானது. அறிவாளிகளிலும் நம் பூதலிங்கம் சார் இருக்கிறார். அவர் இன்னும் சமூக நியாயங்களுக்காகப் போராடுகிற குணமுடையவர் தான். ஆனால் போராடும் மார்க்கத்தையும் நியாயமானதாக எதிர்பார்க்கிறார். படிக்காதவர்களில் நம் அண்ணாச்சி இருக்கிறார். அவரும் சமூக நியாயங்களுக்காகப் போராடுகிற குணம் உடையவர் தான். ஆனால் போராட்ட மார்க்கத்தையும் நியாயமானதாகத்தான் எதிர்பார்த்துப் போராடுகிறவர். இளைஞர்களில் நம் மணவாளன் அண்ணன் இருக்கிறார். அவரும் இலட்சியத்தை அடையத் துடிப்பதோடு அடையும் மார்க்கத்திலும் ஒரு நியாயத்தை எதிர் பார்க்கிறார்."

     "இந்தக் குமரப்பனே ரொம்ப நாளைக்கு முன்னே இந்த ஊர்லே யுனிவர்ஸிடி வர்றதுக்கு முந்தி இங்கே காலேஜில் தமிழ் லெக்சரராக இருந்த சத்தியமூர்த்திங்கிற அவரோட சிநேகிதருடன் தான் இங்கே வந்தாராம். அப்ப இவர் அவ்வளவு தீவிரம் இல்லியாமே?"

     "காலங்களுக்கும் சித்தாந்த மாறுதல்களுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. பழம் கனிவதற்கும் அழுகுவதற்கும், வற்றுவதற்கும் காலமே காரணம். அளவோடு நின்றால் கனிவு, அளவு மீறினால் அழிவு. அழிவு எல்லை மீறினால் வற்றுதல் என்று பல நிலைகள் இருக்கும் போது யார் தான் அந்த நிலையிலிருந்து தப்ப முடியும்?"

     "அதாவது பழம் கனிவதற்குத் தேவையான காலம் கடந்து மேலும் விடப்படுகிற காலம் அழுகவும் அதற்கு மேலும் விடப்படுகிற காலம் வற்றவும் செய்யும் என்கிறீர்கள் இல்லையா?"

     "ஆம்! வற்றிய கனியில் மீண்டும் கனிவைக் கொண்டு வர முடியுமா?"

     "கதிரேசன் மாறமாட்டான் என்கிறீர்கள் இல்லையா?"

     "அவன் ரொம்ப அவசரப்படுகிறான். இன்னும் அவன் மேலுள்ள அன்பையும் பிரியத்தையும் விட முடியாமல் நான் தவிக்கிறேன். அவனோ எல்லா அன்பையும், எல்லாப் பிரியத்தையும் வற்றச் செய்து கொண்டு விட்டான்..."

     "எங்கே அன்பு வற்றுகிறதோ, அங்கே வெறுப்பும் விரக்தியும் உடன் நிகழ்ச்சியாக உற்பத்தியாகின்றன. வெறுப்பில் அழிவுகள் கிளைக்கின்றன. அழிவுகளால் எதைத்தான் வளர்க்க முடியும்?" அவள் கேட்டாள்.

     "நீ நினைப்பது போல் எதையும் செய்ய முடியாதவன் என்று அவனைப் பற்றியோ அவன் சார்பைப் பற்றியோ நான் நினைக்கவில்லை. அவன் இனி எதைச் செய்ய முடியுமோ அதைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன்."

     "அந்தக் கவலை அவருக்கு இல்லையே என்ன செய்யலாம்?"

     இப்படிப் பாண்டியனும், கண்ணுக்கினியாளும் கவலைப்பட்டுப் பயப்பட்டதும், பதறியதும் எதற்காகவோ அது அடுத்த நாலைந்து தினங்களிலேயே அங்கே நடந்துவிட்டது.