முப்பத்து ஒன்றாவது அத்தியாயம்

     வழக்கமாகப் பல்கலைக் கழக விடுதிகளுக்குத் தினசரிப் பத்திரிகைகளும், பிற சஞ்சிகைகளும் போட வரும் சைக்கிள் கடைப் பையனுக்குப் பதில் அன்று காலை அண்ணாச்சியே பத்திரிகை விநியோகிக்க வந்தவுடன் பாண்டியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏதாவது தலை போகிற காரியம் இருந்தாலொழிய அண்ணாச்சி பல்கலைக் கழக எல்லைக்குள் தாமே புறப்பட்டு வரமாட்டார் என்பது பாண்டியனுக்குத் தெரியும். கையில் பிரித்த பத்திரிகையோடும் "கதிரேசன் மோசம் போய்விட்டான் தம்பீ!" என்ற சொற்களோடும் பாண்டியனின் அறைக்குள் நுழைந்தார் அண்ணாச்சி. தன் முன் பிரித்து நீட்டிய செய்தித்தாளில் அவர் சுட்டிக் காட்டிய பகுதியைப் படித்ததுமே பாண்டியனுக்குப் பகீர் என்றது. அவன் அதிர்ச்சி அடைந்தான். திகைத்தான்.

     பத்திரிகைகளில், 'எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டார். தீவிரவாதிகளைப் போலீஸார் தேடுகின்றனர். இரத்த வெள்ளத்தில் தீவிரவாதிகளின் பிரசுரங்கள் சிதறப் பட்டிருந்தன' - என்று நாலு பத்திக்குத் தலைப்பு இட்டச் செய்தியைப் பிரசுரித்திருந்தார்கள். மல்லிகைப் பந்தலிலிருந்து பத்தாவது மைலில் இருந்த அந்த எஸ்டேட் அதிபரை அவருடைய எஸ்டேட் விருந்தினர் விடுதியில் வைத்துக் கொலை செய்த தீவிரவாதிகள் - 'புரட்சிப் பூக்கள் இரத்த வெள்ளத்தில் தான் பூக்க முடியும்' - என்ற தங்கள் பிரசுரத்தைக் கொலையுண்டவரின் உடலைச் சுற்றிலும் தூவிவிட்டுத் தப்பி ஓடித் தலைமறைவாகி விட்டார்கள் என்றும் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கருதப்படும் கதிரேசன், வடிவேல், மலையாண்டி ஆகிய பல்கலைக் கழக மாணவர்களையும், பிச்சைமுத்து என்கிற டிரில் மாஸ்டரையும் போலீஸார் தேடி வருகிறார்கள் என்றும் செய்தி கூறியது.

     "இன்னிக்கி விடியக் காலம்பற ராயல் பேக்கரி மாடிக்குத் தேடி வந்து அந்த ஆர்டிஸ்ட் குமரப்பன் அறையைச் சோதனை போட்டுப் போலீஸ்காரங்க அவரைப் பிடிச்சுக்கிட்டுப் போயிட்டாங்க..."

     "கதிரேசனும், பிச்சைமுத்துவும், மத்தவங்களும் யூ.ஜி. (அண்டர் கிரௌண்ட்) ஆயிட்டாங்க போலே இருக்கு..."

     "தப்பிக்கிறது கஷ்டம்! எப்பிடியும் பிடிச்சுடுவாங்க... போலீஸ்காரங்க மலையை வலை போட்டுத் தேடிக்கிட்டுருக்காங்க..."

     "கொலை செய்யப்பட்ட எஸ்டேட் அதிபர் ஆளும் கட்சிக்கு ரொம்பவும் வேண்டியவர். பெரிய லட்சாதிபதி. மல்லை இராவணசாமிக்குச் சொந்தக்காரர்..."

     "ஆனா அவர் ரொம்ப மோசமான ஆளுதான். யூனியன் கீனியன்னு புறப்பட்டு வேலை செஞ்ச தொழிலாளிகளையெல்லாம் காதும் காதும் வெச்சாப்பிலே ஆள ஏவித் தீர்த்துக் கட்டியிருக்காரு. தேயிலைக் கொழுந்து பறிக்க வார பொம்பிளைகளிலே சின்னஞ்சிறுசுகளைப் படாத பாடு படுத்தியிருக்காரு... ஆனாலும்...?"

     "நியாயமும், தீர்ப்பளிக்கும் பொறுப்பும், தங்கள் கைகளில் இருப்பதாகக் கதிரேசன் குழுவினர் தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது..."

     இதற்குள் செய்தி விடுதியில் மற்ற அறைகளுக்கும் பரவி விடவே அண்ணாச்சி, பாண்டியன், பொன்னையா ஆகியவர்களை மற்ற அறைகளின் மாணவர்கள் வந்து சூழ்ந்து மொய்த்துக் கொண்டு விட்டார்கள்.

     "கதிரேசன் முதலியவர்கள் செய்ததில் தவறு என்ன? தீயவாள் அழியவேண்டியதுதானே நியாயம்?" என்று கேட்டான் ஒரு மாணவன்.

     "நம்முடைய சமூக நியாயங்களைக் காப்பாற்றும் முறைகளும் நியாயமானவையாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம். முறைகேடான வழியில் போய் முறைகளைக் காப்பாற்ற முடியாது. ஒரு சத்தியாக்கிரகிக்குத் தன்னைக் கொன்று போட்டாலும் பொறுத்துக் கொள்ளும் மனோதிடமும் பொறுமையும் வேண்டும் என்கிறார் காந்தி" என்று பாண்டியன் அவனுக்கு மறுமொழி கூறினான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின் மற்ற விடுதி அறைகளுக்கும், வாடிக்கைகாரர்களான விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் வீடுகளுக்கும் தினசரிகள், சஞ்சிகைகளைப் போட்டுவிட்டுக் கடைக்குத் திரும்பினார் அண்ணாச்சி. மனம் கவலையில் ஆழ்ந்து எந்த வேலையிலும் லயிக்காமல் இருந்தார் அவர். கதிரேசன் இப்படி வேகமாக மாறுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய வாலிபத்தில் காந்தி என்ற பேரொளி தன்னை மாற்றிப் பண்படுத்தியது போல் அல்லாமல், அடுத்த தலைமுறையாகிய இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களை வேறு கடுமையான வழிகளே கவர்ந்து மாற்றுவதற்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி அவர் மனம் விரைந்து சிந்தித்தது. இளைஞர்களில் ஒரு சாரார் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்பது போல் ஹிப்பிகளாக மாறுவதையும், மற்றொரு சாரார் இரத்த வெள்ளத்தை ஓடச் செய்துதான் சமூகத்தைத் திருத்த முடியும் என்கிற அளவு கடும் புரட்சிக்காரர்களாக மாறுவதையும், இரண்டு எல்லைக்கும் நடுவே ஸைலண்ட் மெஜாரிட்டியாகப் பல இளைஞர்கள் நிதானமாக இருப்பதையும் அவர் கண்ணாரக் கண்டார். அவருக்கு ஆச்சரியமாகக் கூட இருந்தது. கதிரேசனின் குடும்பமும் ஒரு பரம்பரைப் பணக்காரக் குடும்பந்தான். ஊரிலேயே பெரிய ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடையும் வேறு இரண்டொரு ஏஜென்ஸி வியாபாரங்களும் கதிரேசனின் தந்தை அர்த்தநாரிக் கவுண்டருக்குச் சொந்தமாக இருந்தது. அர்த்தநாரிக் கவுண்டர் மல்லிகைப் பந்தல் நகரின் பரம்பரைப் பணக்காரராகவும், பெரிய மனிதராகவும் விளங்குகிறவர். அவருடைய மகனை அவருக்கே பிடிக்காத தீவிர சித்தாந்தங்கள் வசியப்படுத்திக் கொள்ள முடிந்திருக்கிறது என்பதை நினைத்தாலே புதுமையாகவும், வியப்பாகவும் இருந்தது. வங்காளத்திலும், ஆந்திராவிலும், கேரளத்திலும் கூடப் பல பெரிய குடும்பத்துப் பிள்ளைகள் தான் சமூகத்தின் மேல் உள்ள கோபங்களால் இப்படி மாறியிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்ததை நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. தமக்குத் தெரிந்து அந்தப் பல்கலைக் கழக மாணவர்களிடையே திறக்கப்படாமல் இருந்த ஒரு புதிய வாயில் இப்போது திறக்கப்படுவதை வருத்தத்தோடும், கழிவிரக்கத்தோடும் புரிந்து கொண்டு கண்கலங்கிய அண்ணாச்சி, கடை முகப்பில் யாரோ வந்து நிற்கவே கவனம் கலைந்து திரும்பினார்.

     எதிரே இரண்டு சி.ஐ.டி.க்கள் வந்து நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் அண்ணாச்சிக்கு அவர்களைத் தெரிந்திருந்தது. கதிரேசன் அவருடைய கடைக்கு வருவது உண்டா என்றும், அவன் என்னென்னப் பத்திரிகைகள் வாசிப்பது வழக்கம் என்றும், எங்கெங்கே அவனுடைய நண்பர்கள் இருக்கிறார்கள் என்றும் அந்த இரகசியப் போலீஸார் விசாரித்தார்கள். அண்ணாச்சியிடம் அனுமதி பெற்ற பின் அவருடைய கடையின் உட்பகுதியிலும் புகுந்து சோதனையிட்டார்கள். கதிரேசன் சம்பந்தமான தடயம் எதுவும் அவர்களுக்கு அங்கே கிடைக்கவில்லை. சோதனைகளை முடித்துக் கொண்டு போவதற்கு முன் கதிரேசனும், பிச்சைமுத்துவும் மற்ற மாணவர்களும் தலைமறைவாகி இருக்கும் இடம் தெரிந்தால் சொல்லிவிடும்படி அண்ணாச்சியிடம் வற்புறுத்தினார்கள் அவர்கள்.

     "எனக்குத் தெரியாதுங்க! நான் காந்தி பக்தன். அந்தத் தம்பி என் கடைக்கு வாரது போறதை நிறுத்தி ரொம்ப நாளாகுதுங்க. நான் சாமி சத்தியமா நெஜத்தைச் சொல்றேன்" என்றார் அண்ணாச்சி. அவர் சொல்லியதை நம்பி ஏற்றுக் கொண்டது போன்ற பாவனையில் போகத் தொடங்கியவர்கள் மறுபடியும் ஏதோ சந்தேகம் கொண்டாற் போல் திரும்பியும் வந்தார்கள். கேட்டார்கள்.

     "பல்கலைக் கழக மாணவர்களுக்கு நீர் சிலம்பம் சுற்றச் சொல்லிக் கொடுக்கிற வழக்கம் உண்டா இல்லையா?"

     "உண்டுங்க! ஆனா எல்லா மாதத்திலேயும் இங்கே சிலம்பப் பள்ளிக்கூடம் நடக்காது. யுனிவர்ஸிடி திறந்ததும் ஒரு மாசம் ரெண்டு மாசம் நடக்கும். இப்ப பரீட்சை சமயம் ஆனதுனாலே பையன்க அதிகமா வரமாட்டாங்க. இந்தச் சிலம்பப் பள்ளிக்கூடத்தை நாங்க ஒரு 'ஜிம்னாஸியம்' மாதிரிதான் நடத்தறோமே தவிர, வேறொண்ணுமில்லே..."

     "பல்கலைக் கழக மாணவர் யூனியன் காரியதரிசிக்கும் கதிரேசனுக்கும் சிநேகிதம் எப்படி?"

     "யாரைக் கேட்கிறீங்க..."

     "அதான் அந்தப் பையன் பாண்டியனுக்கும் கதிரேசனுக்கும் நெருங்கிய பழக்கம் இருக்குமே?"

     "இருக்காதுங்க. பாண்டியனுக்கும் கதிரேசனுக்கும் மனசு பிடிக்காமே சிநேகிதம் விட்டுப் போயி ரொம்ப நாளாச்சு. ஒருத்தருக்கொருத்தர் பேச்சு வார்த்தை கூடக் கிடையாது. எனக்கு நல்லா தெரியும்..."

     "அதெப்படி? பாண்டியன் தானே மொதல் மொதல்லே பிச்சைமுத்துவைப் பார்க்கச் சொல்லி நிலக்கோட்டைக்கு கதிரேசனை அனுப்பிச்சான்? இல்லியா?"

     "எனக்கு அது தெரியாதுங்க... ஆனா சமீப காலமாகக் கதிரேசனுக்கும் பாண்டியனுக்கும் மனசு பிடிக்கலேன்னு மட்டும் தெரியுங்க..."

     அவர்கள் கேட்டுவிட்டுப் போய்ச் சேர்ந்தார்கள். அண்ணாச்சி இப்போது பாண்டியனை நினைத்துக் கலங்கினார். பாண்டியன், கண்ணுக்கினியாள் ஆகியோர் மேல் மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் என்ற காரணத்தால் போலீஸ், இராவணசாமி, துணைவேந்தர் ஆகியோருக்கு இருக்கும் மனத்தாங்கல்களால் அவனுக்கு ஒரு சிறிதும் சம்பந்தமே இல்லாத இந்தக் கொலை வழக்கில் அவனை மாட்டி வைத்து விடுவார்களோ என்று அஞ்சினார் அண்ணாச்சி. பாண்டியனை உடனே எச்சரிக்க வேண்டியது அவசியம் என்று அவருக்குத் தோன்றியது. கதிரேசன் தீவிரவாதியாக மாறிப் பாண்டியன் முதலியவர்களை அலட்சியப்படுத்தத் தொடங்கிய பின்னரும் கூடப் பாண்டியனுக்குக் கதிரேசன் மேலிருந்த பழைய நட்பும் பிரியமும் விடவில்லை என்பது அண்ணாச்சிக்குத் தெரியும். பாண்டியனைக் காப்பாற்றவே அவர் போலீஸிடம் பொய் சொல்லியிருந்தார். இதே போலீஸார் பாண்டியனிடம் நேரில் போய் விசாரிக்கும் போது அவன் விவரம் தெரியாமல், "நானும் கதிரேசனும் கொள்கைகளில் வேறுபட்டாலும் இன்று கூட அவன் என் பிரியத்துக்குரிய நண்பன் தான்" என்பதாக ஏதாவது உளறி வைக்கப் போகிறானே என்றெண்ணிப் பயந்தார் அண்ணாச்சி. ஒரு தந்தையின் பாசத்தோடும் அக்கறையோடும் பாண்டியனைப் பற்றிக் கவலைப்பட்டார் அவர். கதிரேசன் பல நாட்களுக்கு முன் ஒரு மாலை வேளையில் பிச்சைமுத்து தனக்குக் கொடுத்திருந்த சேகுவேராவின் வரலாறு, கொரில்லா இயக்கம் பற்றிய சில புத்தகங்கள் ஆகியவற்றைத் தன் கடையில் வைத்துப் பாண்டியனிடம் கொடுத்து, "பாண்டியன்! இந்தப் புத்தகங்களை நீ அவசியம் படித்துப் பார்க்க வேண்டும்" என்று சொல்லியதை இப்போது நினைத்தார் அண்ணாச்சி. அப்படிக் கதிரேசன் கொடுத்த புத்தகங்களில் எதையாவது பாண்டியன் தன் அறையில் இன்னும் வைத்திருந்து அதன் காரணமாகப் போலீஸாரிடம் மாட்டிக் கொள்ள நேர்ந்து விடப் போகிறதோ என்று அண்ணாச்சியின் மனம் பதறியது. கடைப்பையன் மூலமாக முக்கியமான மாணவர்களையும் பாண்டியனையும் கண்ணுக்கினியாளையும் கடைக்கு வரவழைத்து எச்சரிப்பதற்காகச் சொல்லி அனுப்பினார் அவர். கதிரேசன் பாண்டியனிடம் பிச்சைமுத்துவின் புத்தகங்களைக் கொடுத்த தினத்தன்று அவனுக்கும் பாண்டியனுக்கும் நிகழ்ந்த உரையாடலைக் கூட மீண்டும் நினைவு கூர்ந்தார் அண்ணாச்சி. பாண்டியன் கதிரேசனிடம் புத்தகங்களை வாங்கிக் கொள்ளும் போது சொன்னான்: "எனக்கு உடன்பாடில்லாத நூல்களையும் நான் படிக்க முடியும். படிப்பதனாலேயே அவற்றை நான் ஏற்றுக் கொண்டு விடுவேன் என்று நீ நினைத்துக் கொண்டு விடாதே கதிரேசன்."

     "அதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை பாண்டியன்! சாத்வீகமும், காந்தியமும் இனி இந்த நாடுக்குப் பயன்படாத அளவு மூத்துத் தளர்ந்து விட்டன..."

     "அது உன் கருத்து. நான் அதை ஏற்கமாட்டேன். உண்மைக்கு என்றுமே மூப்பு இல்லை. உண்மை மூப்படைவதோ தளர்வதோ அழிவதோ கிடையாது. பொய்தான் மூப்படையும், தளரும், அழியும். உண்மையோ மூப்படைய மூப்படைய இளமை பெறும். அதனால் தான் பாரதியார் கூட 'மூத்த பொய்கள்' என்று பாடினார். நீ மனத்தினால் மூப்படைந்து விட்டாய். நீ மனத்தினால் தளர்ந்து விட்டாய்! அதனால் தான் காந்தியமே மூத்துவிட்டதாகவும், தளர்ந்து விட்டதாகவும் உனக்குப் படுகிறது கதிரேசன்!" என்று அப்போது பாண்டியன் கதிரேசனை மறுத்திருந்ததை நினைத்த போது அண்ணாச்சிக்குத் திருப்தியாக இருந்தது. கடைப்பையனை அனுப்பி விட்டுப் பழைய நிகழ்ச்சிகளை நினைத்தபடி பாண்டியனை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அண்ணாச்சி. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. பாண்டியன் இன்னும் வரவில்லை.

*****

     பல்கலைக் கழக எல்லையில் அன்று காலையிலிருந்தே கெடுபிடிகள் அதிகமாயிருந்தன. மைதானத்தில், வகுப்பறைகளில், நூல் நிலையத்தில், ஆசிரியர்களின் இலாகா அறைகளில், மெஸ்ஸில், காண்டீனில் எங்கும் சந்தித்துக் கொள்ளும் இருவரோ அல்லது பலரோ அந்த எஸ்டேட் அதிபரின் கொலையைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். அதில் சம்பந்தப்பட்டுத் தலைமறைவாகிவிட்ட கதிரேசன் முதலிய மாணவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். பெண்கள் விடுதியில் கண்ணுக்கினியாள் உட்படச் சில மாணவிகளின் அறைகள் கூடச் சோதனைக்கு ஆளாயின. மாணவர்கள் விடுதியில் பாண்டியன், மோகன்தாஸ் முதலிய பலருடைய அறைகள் போலீஸாரின் சோதனைக்கு உட்பட்டன. பொருளாதாரப் பேராசிரியர் பூதலிங்கத்தின் வீடும் சோதனை செய்யப்பட்டது. துணைவேந்தர் இந்த நிகழ்ச்சியைச் சாக்காக வைத்துத் தமக்கு வேண்டாத ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லோரையும் கதிரேசனுக்கு வேண்டியவர்கள் என்று இரகசியமாகப் பட்டியல் போட்டுப் போலீஸாரிடம் கொடுத்திருந்தார். பல்கலைக் கழக காம்பஸுக்குள் வரவும் சோதனையிடவும் விசாரிக்கவும் போலீஸுக்கு அனுமதியும் வழங்கியிருந்தார். பேராசிரியர் பூதலிங்கத்தின் வீட்டில் சோதனை நடந்த போது அவர் வீட்டில் இல்லை. பல்கலைக் கழகத்துக்குப் போயிருந்தார். 'ஆண்கள் யாரும் வீட்டில் இல்லை! அப்புறம் வாருங்கள்' என்று பூதலிங்கத்தின் மனைவி எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல் போலீஸார் உள்ளே நுழைந்து துணிமணிகள் வைத்திருந்த பீரோ உட்படக் கலைத்தெறிந்து விட்டுப் போயிருந்தார்கள். பூஜை அறையைக் கூட விடவில்லை. குடைந்து தள்ளித் தாறுமாறாக்கி இருந்தார்கள். மாணவர்களோடு கனிவாகப் பழகுகிறவர்கள் என்று பெயர் பெற்ற வேறு நாலைந்து பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் வீடுகளும் இதே கதிக்கு ஆளாயின. பகலுக்கு மேல் அன்று வகுப்புக்கள் நடக்கவில்லை. பிற்பகலில் துணைவேந்தர் செனட் ஹாலில் அவசர அவசரமாக எல்லாப் பிரிவு டீன்களும், பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் அடங்கிய ஸ்டாஃப் கவுன்சிலைக் கூட்டியிருந்தார். பகலில் வீட்டுக்குச் சென்றிருந்த பேராசிரியர் பூதலிங்கத்துக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் தங்கள் தங்கள் வீடுகளில் புகுந்த போலீஸார் செய்த அட்டூழியம் தெரிய வந்தது. அடக்க முடியாத ஆத்திரத்தோடு ஸ்டாஃப் கவுன்ஸில் கூட்டத்துக்குப் போயிருந்தார்கள் அவர்கள்.

     "நண்பர்களே! இந்தக் கூட்டத்தை மிகவும் அவசரமாக உங்கள் ஒத்துழைப்பை நாடிக் கூட்டியிருக்கிறேன். நம் பல்கலைக் கழகத்துக்கே ஓர் அபவாதத்தையும் கெட்ட பெயரையும் உண்டாக்கிவிட்டார்கள் சில தீவிர வெறி பிடித்த மாணவர்கள். இனியும் அப்படி நேரக்கூடாது. நீங்கள் பார்க்கும், பழகும் மாணவர்களில் இப்படிப்பட்ட தன்மைகள் யாரிடம் தெரிந்தாலும் நீங்கள் உடனே ரிஜிஸ்திராரிடமோ என்னிடமோ அந்த மாணவனைப் பற்றி இரகசியமாக ரிப்போர்ட் செய்ய வேண்டியது அவசியம். இன்று கூட நமது மாணவர்களில் இந்தக் கொலையோடு சம்பந்தப்பட்ட மாணவர்களைப் பற்றிய விவரங்களை அறிவதற்காகப் போலீஸார் சில ஸ்டாஃப் மெம்பர்களின் குவார்ட்டர்ஸிலும் சோதனை செய்திருக்கக் கூடும். அதற்காக நான் வருந்துகிறேன். இனி அப்படி நேராது என்றும் உறுதியளிக்கிறேன்" என்று துணைவேந்தர் பேசிக் கொண்டிருக்கும் போது பேராசிரியர் பூதலிங்கம் ஆத்திரத்தோடு எழுந்து குறுக்கிட்டார்.

     "இது அக்கிரமம்! வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை என்று சொல்லியும் கேளாமல் போலீஸார் என் வீட்டிலும் வேறு சில நண்பர்கள் வீட்டிலும் அத்துமீறி நுழைந்து சோதனை என்ற பேரில் எல்லா இடங்களையும் குடைந்திருக்கிறார்கள். உங்கள் அநுமதியின்றி இது நடந்திருக்க முடியாது. வரவர இந்த யுனிவர்ஸிடியில் வேலை பார்க்கிறோம் என்கிற ஒரே காரணத்திற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது..."

     "கோபித்துக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் பூதலிங்கம்! மாணவர்களோடு நெருங்கிப் பழகும் சில ஆசிரியர்கள் வீடுகளைப் போலீஸார் சோதனை செய்திருப்பார்கள்..."

     "மாணவர்களோடு சேர்ந்து பழகுவது அவ்வளவு பெரிய குற்றமென்று இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது சார்!" என்று உடனே குத்தலாகப் பதில் சொல்லிவிட்டு உட்கார்ந்தார் பூதலிங்கம். ஆசிரியர்கள் வீடுகளைக் காட்டுமிராண்டித் தனமாகச் சோதனையிட அனுமதி கொடுத்ததற்காகத் துணைவேந்தரைக் கடுமையாகக் கண்டித்து வேறு சில விரிவுரையாளர்களும் பேசினார்கள்.

     "பல்கலைக் கழக மாணவர்களைக் கூர்ந்து கவனித்துத் தீவிரவாதிகள் பற்றி உங்களிடமோ ரிஜிஸ்தாரிடமோ இரகசியமாக ரிப்போர்ட் செய்யச் சொல்லி எங்களுக்கு யோசனை கூறுவதற்காகவே இன்று ஸ்டாஃப் கவுன்ஸிலை அவசரமாகக் கூட்டியிருக்கிறீர்கள்! அதே சமயம் மாணவர்களை ஏற்கனவே கூர்ந்து கவனித்து அவர்களோடு நெருங்கிப் பழகுகிற ஆசிரியர்கள் வீட்டில் போலீஸார் 'ரெய்ட்' நடத்த அனுமதித்திருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதைக் கேட்க ஆரம்பித்தால் எல்லா ஆசிரியர்கள் வீட்டிலும் அப்புறம் போலீஸ் 'ரெய்ட்' நடந்தாலும் நடக்கும்..."

     "ஐ யாம் ஸாரி... நீங்கள் இதற்கு இப்படி வியாக்கியானம் செய்ய ஆரம்பித்தால் நான் என்ன செய்ய முடியும்?" என்று கேட்டுவிட்டு மழுப்பலாக நாலு வார்த்தைகள் சொல்லி ஸ்டாஃப் கவுன்சில் கூட்டத்தையே முடித்துவிட்டார் துணைவேந்தர். பகல் மூன்றரை மணிக்கு ஸ்டாஃப் கவுன்சில் கூட்டம் முடிந்ததும், மாணவர் பிரதிநிதிகள், மாணவர் பேரவைத் தலைவன் மோகன்தாஸ், செயலாளன் பாண்டியன் முதலியவர்களைத் தம் அறைக்குக் கூப்பிட்டனுப்பினார் துணைவேந்தர். அப்போது துணைவேந்தரோடு மதுரையிலிருந்து வந்திருந்த டி.ஐ.ஜி., இரண்டு ரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரும் உடனிருந்தார்கள். பாண்டியன், மோகன்தாஸ் மற்ற மாணவர்கள் பிரதிநிதிகள் எல்லோரும் உள்ளே வந்தவுடன் துணைவேந்தரே பாண்டியனையும் மோகன்தாஸையும் கேள்விகள் கேட்டார்.

     "போலீஸ் கதிரேசன் வீட்டில் கைப்பற்றிய அவனுடைய டைரியில் பல இடங்களில் உன் பெயரும், மோகன்தாஸ் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். உங்களைக் கதிரேசன் அடிக்கடி சந்திப்பது உண்டென்றும் அந்த டைரியிலிருந்து தெரிகிறது என்கிறார்கள். அந்தத் தீவிரவாதிகளின் தலைவர் பிச்சைமுத்துவைக் கதிரேசன் முதலில் சந்திக்கும்படி செய்தது நீங்கள் தானே?" என்று துணைவேந்தர் கேட்டார்.

     "இன்று இரவு டைரி எழுதும் போது நான் கூட என் டைரியில் உங்களைச் சந்தித்ததாக எழுதுவேன் சார்! அதற்கு அர்த்தம் நீங்கள் செய்கிற காரியங்களுக்கெல்லாம் நான் பொறுப்பு என்றோ, நான் செய்கிற காரியங்களுக்கு எல்லாம் நீங்கள் பொறுப்பு என்றோ ஆகி விடாதே? நிலக்கோட்டைக்கு நாங்கள் கதிரேசனை அனுப்பும் போது பிச்சைமுத்துவைச் சந்திக்க என்று அனுப்பவில்லை. தற்கொலை செய்து கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி மேரிதங்கத்தின் பெற்றோரைச் சந்திக்கத்தான் அனுப்பினோம். அங்கே தற்செயலாக அவன் பிச்சைமுத்துவைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது..."

     "அந்த பிச்சைமுத்து கனு சான்யால், சாரு மஜும்தார் போன்றவர்களோடு தொடர்பு உடையவர். சென்ற கோடை விடுமுறையில் அவர் மேற்கு வங்காளத்தில் நடந்த ஒரு தீவிரவாதிகளின் முகாமுக்கு இரகசியமாகப் போய் வந்தவர் என்பதெல்லாம் உனக்குத் தெரியுமா?"

     "எனக்குப் பிச்சைமுத்துவையே அப்போது தெரியாதே. அவரைத் தெரிந்தால் அல்லவா இதெல்லாம் தெரியும். நிலக்கோட்டைக்குப் போயிருந்த போது கதிரேசன் தான் அவரைத் தற்செயலாகச் சந்தித்து விட்டு வந்தான். அப்புறம் கடை வீதியில் ஒருமுறை தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த போது அவரைக் கதிரேசன் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அப்படி அறிமுகப்படுத்திய போது அவர் நிலக்கோட்டையில் உடற்பயிற்சி ஆசிரியராக இருப்பதை மட்டுமே நான் அறிந்து கொண்டேன். வேறு எதுவும் அப்போது எனக்குத் தெரியாது..."

     "சமீபத்தில் அவர் இங்கே வந்து கதிரேசன் வீட்டிலும் யுனிவர்ஸிடி விடுதி அறைகளிலும் நடத்திய இரகசியக் கூட்டங்களுக்கு நீங்கள் போனதுண்டா?" - டி.ஐ.ஜி.யே இதைக் கேட்டார்.

     "கதிரேசன் வீட்டில் அவரைச் சந்திக்க நானும் நண்பர்களும் போயிருந்தோம். அவர் கூறிய சில கருத்துக்கள் எங்களுக்கு உடன்பாடாக இல்லாததால் திரும்பிவிட்டோம். அதன்பின் அவர் இங்கே எப்போது எந்த விடுதியில் யாரை எதற்காகப் பார்த்தார் பேசினார் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது" என்று பாண்டியன் பதில் சொன்னான்.

     "இனி இவர்கள் போகலாம்! இவர்களிடம் கேட்க ஒன்றுமில்லை..." என்று டி.ஐ.ஜி. குறிப்புக் காட்டிய பின்பே மாணவர்களைப் போகச் சொன்னார் துணைவேந்தர். மாணவர்கள் துணைவேந்தர் அறையை விட்டு வெளியேறு முன் பாண்டியனே அவர்கள் சார்பில் டி.ஐ.ஜி.யிடம் காலையில் விடுதி அறைகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது போலீஸார் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும், அதற்கு மிகவும் வருந்துவதாகவும் கூறினான்.

     "என்ன செய்யலாம்? எங்களுக்குச் சில கடமைகள் இருக்கின்றன. அவற்றைச் செய்ய வேண்டிய அவசரத்திலும் அவசியத்திலும் எங்களால் கூடச் சில தவறுகள் நேர்ந்து விடலாம். பெரிய தவறுகளைப் பற்றிய உண்மைகளைக் கண்டுபிடிக்கும் அவசரத்தில் நாங்களும் சில சிறிய தவறுகளைச் செய்ய நேரிட்டு விடும். அவற்றை மறந்து விடுங்கள்" என்று அன்பாகவும் கனிவாகவும் அந்த டி.ஐ.ஜி. மறுமொழி கூறிய போது பாண்டியன் ஆச்சரியம் அடைந்தான். அவன் அவ்வளவு கனிவை அவரிடம் எதிர்பார்க்கவில்லை. நாலரை மணிக்கு அவர்கள் துணைவேந்தர் அறையை விட்டு வெளியேறினார்கள். பகலுக்குள் மூன்று முறை அண்ணாச்சிக் கடையிலிருந்து பையன் தேடி வந்தும் பாண்டியன் போக முடியவில்லை. மெஸ்ஸில் மாலைச் சிற்றுண்டி காபியை முடித்துக் கொண்டு அவனும் நண்பர்களும் அண்ணாச்சிக் கடைக்குப் போய்ச் சேர்ந்த போது மாலை ஐந்தேகால் மணி ஆகியிருந்தது. அங்கே அவனை எதிர்பார்த்துக் கண்ணுக்கினியாள் காத்திருந்தாள். பாண்டியனைப் பார்த்ததும் அண்ணாச்சி பதற்றத்தோடு கேட்டார்:

     "தம்பீ! கவனம். அந்தக் கதிரேசன் எழுதின லெட்டர், கொடுத்த பொஸ்தகங்கள் எதினாச்சும் உன் அறையிலே இருந்து நீ போலீஸ்லே மாட்டிக்கப் போறே!"

     "கவலைப்படாதீங்க! கதிரேசன் கொடுத்த புத்தகங்களை எல்லாம் அவன் கொடுத்த மறு வாரமே படிச்சிட்டுத் திரும்பக் கொடுத்தாச்சு. காலையிலேயே நீங்க அங்கே வந்திட்டுப் போனப்புறம் போலீஸ்காரங்க வந்து அறையைத் துருவிட்டாங்க. ஒண்ணும் கிடைக்கலே..."

     "என் அறையிலே கூட வந்து பார்த்தாங்க" என்றாள் கண்ணுக்கினியாள். அப்போது ஓர் ஆள் பரபரப்பாக ஓடி வந்து, "அண்ணாச்சி! கதிரேசனையும் மற்ற ரெண்டு பையன்களையும் கண்டுபிடிச்சு அரெஸ்ட் பண்ணிட்டாங்க. பிச்சைமுத்து வாத்தியார் மட்டும் அகப்படலியாம். இந்தத் தெருக் கோடியிலே இருந்த மரக் கடையிலேயே தான் ஒளிஞ்சிக்கிட்டிருந்திருக்காங்க" என்றான்.

     இப்படி அவன் கூறிய சிறிது நேரத்துக்கெல்லாம் போலீஸார் துப்பாக்கி ஏந்தி இருமருங்கும் வர விலங்கு பூட்டியக் கரங்களுடன் கதிரேசன் முதலிய மாணவர்கள் மூவரையும் அதே பாதை வழியாக ஸ்டேஷனுக்கு நடத்திச் சென்றார்கள். கதிரேசனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் பாண்டியனுக்குக் கண் கலங்கியது. 'வீணாகச் சீரழிந்து விட்டான்' என்று பாண்டியன் அனுதாபத்தோடு கூறிய வாக்கியம் கண்ணுக்கினியாளுக்குக் கேட்டது.