இருபத்தொன்பதாவது அத்தியாயம்

     நேரு விழாக் கூட்டத்தன்று மாலை தன்னையும் அருகில் வைத்துக் கொண்டு அண்ணாச்சி பாண்டியனைக் கண்டித்த போது, 'உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படும் பொறுப்பு உன்னைவிட இந்தத் தங்கச்சிக்குத்தான் அதிகம்' என்று தன்னைச் சுட்டிக்காட்டிப் பேசியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தங்களுடைய அன்பும் நேசமும் தங்களோடு பழகும் பிறரால் புரிந்து கொள்ளப்பட்டுச் சரியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டு விட நேரும் போதெல்லாம் இப்படித்தான் மனம் பூரித்தாள் அவள். விடுதி விதிகள் கடுமையாக்கப்பட்டிருந்தும் கூட அன்று முன்னிரவில் அண்ணாச்சியின் கடை முன்பாக நடந்த நேரு விழாக் கூட்டத்தில் பாண்டியன் பேசுகிற வரை இருந்து கேட்ட பின்பே அவளும் மற்ற மாணவிகளும் விடுதிக்குத் திரும்பினர்.

     மறுதினம் காலை வகுப்புக்கள் தொடங்குவதற்கு முன் பல்கலைக் கழக மைதானத்தில் அவளைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த போது "உனக்காகவாவது நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உன்னையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே அண்ணாச்சி சொல்லிவிட்டார். அதனால் இப்போதெல்லாம் உன்னைப் பார்க்கும் போதே எதிரே 'எச்சரிக்கை'யைப் பார்க்கிற பயம் வந்து விடுகிறது" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் பாண்டியன். அவள் அருகே நின்ற தோழிகளும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

     "நல்லவேளை! அபாயம் என்று சொல்லாமல் 'எச்சரிக்கை' என்று சொன்னீர்களே?"

     "எச்சரிக்கை என்று சொல்லிவிட்டதனால் அபாயம் இல்லை என்று ஆகிவிடாது. ஒவ்வொரு பெண்ணும் ஓர் அபாயம் என்பதனால் தான் ஆண்கள் அவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது..."

     "ஆண்கள் மட்டும் அபாயமே இல்லாத பரம சாதுக்களோ?"

     "ஒரு பட்டிமன்றம் நடத்தி முடிவு செய்ய வேண்டிய விவாதம் இது. இப்போது எனக்கு அதற்காக நேரமில்லை."

     "ஏன்? நேரு விழாப் பட்டிமன்றத்தில் தோற்றது போதாதா? மறுபடியும் தோற்க ஆசையா?"

     கண்ணுக்கினியாள் சார்பாக அவளுக்குப் பரிந்து கொண்டு வந்து பேசிய எல்லாப் பெண்களும் கேள்விக் கணைகளைத் தொடுத்த போது முதற் பாட வேளைக்கான மணி அடித்து அவனைக் காப்பாற்றியது. எல்லோருமே அவரவர்களுடைய வகுப்புக்களுக்காக விரைந்தார்கள். மைதானத்தில் வகுப்புக்காக விரைந்து கொண்டிருந்த பாண்டியனை நடன சுந்தரம் என்ற பெயரையுடைய கீழ்த்திசைப் பட்டப் பிரிவு மாணவர் அவசரமாகத் தேடி வந்து எதிர் கொண்டார்.

     "அண்ணனைப் பார்க்கத்தான் வந்தேன்? ஒரு ஐந்து நிமிஷம் நின்னு நான் சொல்றதைக் கேட்டப்புறம் தான் போகணும். இரண்டு வாரங்களாக ஒரு பெரிய தகராறு. வகுப்பிலே உரைநடைப் பகுதி நடத்த வருகிற போதெல்லாம் பண்புச் செழியனார் ஒரு குறிப்பிட்ட கட்சியின் பெயரையும் தலைவரின் பெயரையும் சொல்லி, 'மேடைத் தமிழ், ஏட்டுத் தமிழ் எல்லாமே அவரால் தான் உயிர் பெற்றது. அவரே தமிழுக்கு உயிர் கொடுத்தார். அவரை வீர வணக்கம் செய்தே தமிழை வளர்க்க முடியும்' என்று வெளிப்படையாகக் கட்சிப் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். நானும் வேறு சில தேசிய மாணவர்களும் வகுப்பிலேயே குறுக்கிட்டு, 'வீர வணக்கத்தைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றி மோசம் போன காரணத்தால் தான் ஒரு தலைமுறையைச் சேர்ந்த பல்லாயிரம் தமிழ் இளைஞர்கள் யாரோ ஒருவர் மேடையில் பேசியது போலவே மூக்கால் பேசவும், யாரோ ஒருவர் எழுதியது போலவே 'பருவப் பாவை உரைநடை' எழுதவும் பழகிச் சீரழிந்தனர். தமிழ்ப் பேச்சிலும் எழுத்திலும் ஒரிஜினாலிடியும், இண்டுவீஜுவாலிடியும் வளராமல் வெறும் இமிடேஷன் மட்டுமே நோயாக வளர்ந்து பயங்கரமான தொத்து நோயான காலத்தைத் தான் நீங்கள் பொற்காலம் என்று பொய்யாகப் புனைந்து இங்கே சொல்கிறீர்கள் சார்!" என்று மறுத்தோம். உடனே பண்புச் செழியனாருக்கு ஆதரவான மாணவர்கள் வகுப்பிலேயே எங்கள் மேல் பாய்ந்து விட்டார்கள். கூப்பாடு போட்டார்கள். வகுப்பில் நடக்கும் பச்சையான இந்தக் கட்சிப் பிரசாரத்தை எப்படியாவது தடுக்க வேண்டும்" என்றார் நடன சுந்தரம்.

     மாலையில் தன்னை விடுதி அறையில் வந்து பார்த்தால் இதைப் பற்றிக் கலந்து பேசிச் செய்ய வேண்டியதைச் செய்யலாம் என்று கூறி அந்த மாணவ நண்பருக்கு விடையளித்தான் பாண்டியன். நடன சுந்தரமும் மாலையில் மற்ற நண்பர்களோடு வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். பகல் நேரம் முழுதும் சுறுசுறுப்பாக வகுப்புக்களில் கழிந்தது. நண்பகலில் மாணவ மாணவிகளுக்காக அறிவிக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கையில் மறுநாள் மாலை எல்லா விடுதிகளுக்குமான விடுதி நாள் விழாவும் தேநீர் விருந்தும் நடைபெறும் என்றும் அதில் கல்ந்து கொண்டு பேச ஒரு பெரிய நடிகரும், வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்புக்காக அவரோடு மல்லிகைப் பந்தலுக்கு வந்திருக்கும் ஒரு நடிகையும் வரப் போவதாகச் சுற்றறிக்கை கூறியது. பல்கலைக் கழகப் பாட ஆண்டின் மூன்று பகுதிகளும் இப்படி விடுதிகளுக்கான விழா அல்லது 'ஷோஷல் பிரேக் அப்' - ஒன்றைக் கொண்டதாக இருக்கும். மாணவர் பேரவைத் தேர்தல், வேறு பல பரபரப்பான நிகழ்ச்சிகள் எல்லாம் இருந்ததனால் முதற் பகுதியில் விடுதி விழா அவ்வளவு நன்றாக அமையவில்லை. எனவே இந்த இரண்டாவது பகுதியில் அதை ஏற்பாடு செய்து அந்தச் சமயத்தில் அங்கே படப்பிடிப்புக்காக வந்திருந்த இரு கலைஞர்களையும் அதில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்க அழைத்திருந்தார்கள். விடுதி சம்பந்தமான குழுக்களில் மட்டும் எப்படியோ மல்லை இராவணசாமியின் கட்சிச் சார்புள்ள மாணவர்களே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப் பெற்று வந்திருந்தார்கள். அதனால் இந்த விடுதி விழாவில் அவர்கள் ஏதாவது வம்பு செய்யக்கூடும் என்று பாண்டியனும் நண்பர்களும் எதிர்பார்த்தார்கள். அன்று மாலை நடன சுந்தரமும் அவரோடு சில ஓரியண்டல் பட்டப்படிப்பு மாணவர்களும் தன் அறைக்குத் தேடி வந்த போது அவர்கள் பிரச்னை பற்றிச் சிறிது நேரம் பேசிப் பாண்டியன் வழிவகைகளைக் கூறிய பின் மறுநாள் மாலை நடைபெற இருக்கும் விடுதி நாள் விழாவைப் பற்றிப் பேச்சு திரும்பியது.

     "விழாத் தேநீர் விருந்துக்கான உண்டி வகைகள் பற்றிய அட்டை (மெனு) புதுமையான முறையில் அச்சிடப் பட்டிருக்குமாம்! சிறப்பு விருந்தினர்களான நடிகமணி தங்கராஜுக்கும், நடிகை ஜெயபாலாவுக்கும் விடுதிகளின் சார்பில் வரவேற்பிதழ்கள் அச்சிடப்பட்டுப் படித்துக் கொடுக்கப்படுமாம்! இதுதான் நான் கேள்விப்பட்டது" என்றான் ஒரு மாணவன்.

     "இதன் அமைப்பாளர்கள் அத்தனை பேருமே சரியான பஃபூன்கள்! நாளைக்குப் போய் பார்ப்போம். இன்னும் நிறையக் கேலிக் கூத்துக்கள் இருக்கும்" என்று பாண்டியன் சொன்ன போது உடன் இருந்த மாணவர்கள் சிலர் அதை ஆமோதித்தனர். வேறு சிலர், "இதெல்லாம் உன் கற்பனை! ஒன்றுமே நடக்காது! எப்போதும் நடக்கிற சடங்கு இது. இப்போதும் அப்படி ஒரு சடங்காகவே இது நடந்து முடிந்து விடும். அவ்வளவு தான்" என்று அவன் கூறியதை மறுத்தார்கள்.

     "நாளை மாலை வரை பொறுத்திருங்கள்! யார் சொல்வது சரி என்பது தானே தெரிகிறது" என்று குறும்புத்தனமாக நகைத்தபடி சவால் விட்டான் பாண்டியன். அவன் கூறியது மறுநாள் மாலை பலித்தது. விடுதி நாள் விழாவின் தேநீர் விருந்தில் வருத்தப்படத் தக்க பல கேலிக் கூத்துக்கள் இருந்தன. விருந்து மேஜைகளில் உண்டிப் பட்டியல் (மெனு) 'தமிழ் வாழ்க!' என்ற தொடக்கத்துடன் இருந்தது. உணவு வகைகளில் 'தமிழ் வாழ்க' என்பதும் ஒன்றோ என்று அதைத் தவறாகப் புரிந்து கொண்டு எண்ணிய சில மாணவர்கள் பரிமாறத் தொடங்கிய சர்வர்களிடம், "இந்தாப்பா! முதலில் ஒரு 'தமிழ் வாழ்க' கொண்டு வா. வரிசைப்படி அதுதான் முதல் அயிட்டம் மறந்து விடாதே!" என்று வம்பு செய்தார்கள்.

     தீஞ்சுவைத் துண்டம் (கேக்)
     வருவள் (சிப்ஸ்)
     உருள் மோதகம் (போண்டா)
     கலவை (மிக்ஸ்சர்)
     தேநீர் (டீ)
     தாம்பூல நறுஞ் சுருட்டு (பீடா)

     என்று உணவுப் பட்டியல் (மெனு) அச்சிடப்பட்டுத் தரப்பட்டிருந்தது. அதில் 'வறுவல்' என்பதை 'வருவள்' என்று பிழையாக அச்சிட்டு விட்டதால், "வருபவள் யார்? அவள் யாரானாலும் வரட்டும், வரவேற்போம்" என்று 'மெனுகார்டை'க் கையில் தூக்கிக் கொண்டு கூப்பாடு போட்டார்கள் பல மாணவர்கள். விருந்தில் வழங்கப்பட்ட கேக்கின் மேல்புறம் ஒரு கட்சியின் சின்னத்தைப் போல் ஒரு பாதி ஒரு நிறமும் மறு பாதி வேறொரு நிறமுமாக இரு வண்ணத்தில் கருமையும் செம்மையுமாக இருக்கவே மாணவர்களிடையே சலசலப்பு மூண்டது. சாக்லேட் கருப்பும் மறுபாதி 'செர்ரி' நிறத்திலும் அந்தக் கேக்குகள் இருந்தன. கோபத்தில் சில கேக்குகள் வழங்குவது நிறுத்தப்பட்டு மற்றவைகளை வழங்கத் தொடங்கியதன் மூலம் நிலைமை சமாளிக்கப்பட்டது.

     "இந்தாப்பா! 'தீஞ்சுவைத் துண்டத்'துக்குப் பதில் இன்னொரு 'கலவை' கொடு!" என்று சர்வரிடம் மேலும் ஒரு மிக்ஸ்சர் பொட்டலத்தைக் கேட்டு ஒரு மாணவன் எழுப்பிய குரலைத் தொடர்ந்து சிரிப்பொலிகள் வெடித்தன. மேடையில் வந்து அமர்ந்திருந்த நடிகர் மணியும், நடிகையும் பயத்தோடு உட்கார்ந்திருப்பது போலத் தோன்றியது. அவர்கள் நிலை பார்க்கப் பரிதாபகரமாக இருந்தது.

     நடிகரை வரவேற்று முடிந்த பின், நடிகையை வரவேற்று வரவேற்புரை படித்த மாணவன் வரவேற்பிதழில் அச்சிட்டிருந்தபடியே "நீங்கள் படத்துக்குப் படம் நன்கு தடித்து வளர்ச்சி பெற்று வருகிறீர்கள்" என்று படித்தவுடன் சிரிப்பொலிகள் அடங்க நெடுநேரமாயிற்று. படுபாவி அச்சகத்தில் வறுவலை வருவளாக்கியது போல் 'நன்கு நடித்து' என்பதை 'நன்கு தடித்து' என்று அச்சிட்டுத் தொலைத்திருந்தான். 'தடித்து' என்று பிழையாகப் படித்ததை ஒட்டி எழுந்த சிர்ப்போடு சிரிப்பாக, 'கரெக்ட்' என்றும், 'வெல் ஸெட்' என்றும் கூட்டத்திலிருந்து குரல்கள் ஒலித்தன. சிறைப்பட்டு விட்டது போல் கூனிக் குறுகித் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் அந்த நடிகை. வரவேற்புரை முடிந்ததும் நடிகர் பத்து நிமிஷங்கள் சுருக்கமாகப் பட்டும் படாமலும் பேசி முடித்து விட்டார். நடிகை மழலைத் தமிழில் பயந்து கொண்டே எண்ணி மூன்று வாக்கியங்களைப் பேசியதும் விழா முடிந்தது.

     "இது போல் அருமையான 'வெறைட்டி எண்டர்டெயின்மெண்ட்' நம்ம யுனிவர்ஸிடியில் சமீப காலத்திலே நடந்தது கிடையாது! என்ன நகைச்சுவை! எத்தனை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகள்?" என்று விடுதி விழா முடிந்து போகும் போது சக மாணவர்கள் பாண்டியனிடம் அந்த விழாவைப் பற்றிப் பேசிக் கொண்டு போனார்கள். அப்போது ஒரு மாணவன் கேட்டான்: "இவர்கள் எதைச் செய்தாலும் ஏன் இப்படிக் கேலிக் கூத்தாக முடிகிறது? எதனால் இவர்கள் இப்படிக் கோட்டை விடுகிறார்கள்?"

     "சிரத்தை இல்லாமல் வெறும் போட்டி மனப்பான்மையும் வெறியும் மட்டுமே இருந்தால் இப்படித்தான் ஆகும்! சிரத்தைதான் செயலுக்கு மூலவித்து."

     "நல்ல நகைச்சுவைதான் இது."

     "தவறு! இது நகைச்சுவையும் இல்லை. கேலிக் கூத்துக்கும் நகைச்சுவைக்கும் எங்கோ ஒரு மயிரிழை வேறுபாடு எல்லைக் கோடாக இருக்கிறது. நம்மைச் சிரிக்க வைப்பதெல்லாம் நகைச்சுவை அல்ல. நல்ல நகைச்சுவை என்பது சிரிப்பில் தொடங்குகிறது. ஆனால் அது சிரிப்போடு முடிந்து விடுவதில்லை. ஆழமான ஒரு சிந்தனையில் போய் முடிகிறது. முடியவேண்டும். தடுமாற்றங்கள் எல்லாமே நகைச்சுவை ஆகிவிடுமானால் அப்புறம் நகைச்சுவைக்கு ஒரு மரியாதை இருக்காது" என்று பாண்டியன் தன் கருத்தை வெளியிட்ட பின்புதான் உள்ளூற எவ்வளவு வருந்திப் பேசுகிறான் என்பது சக மாணவர்களுக்குப் புரிந்தது.

     அதற்குப் பின் ஒரு வாரம் வரை மாணவர்களுக்கு நடுவே இந்த விடுதி விழா நிகழ்ச்சிகள் சிரிக்கச் சிரிக்க விமர்சனம் ஆகிக் கொண்டிருந்தன. அந்த வார இறுதியில் சனிக்கிழமை பிற்பகல் அண்ணாச்சிக் கடையில் அமர்ந்து தற்செயலாகப் பேசிக் கொண்டிருந்த போது,

     "மழைக் காலம் ஏறக்குறைய முடிஞ்சு போச்சு. மலைகளில் எல்லாம் பசுமை கொஞ்சுகிறது. அருவிகளில் தெளிவாகவும் ஒரு சீராகவும் தண்ணீர் விழுகிறது. ஓடைகள் கலகலவென்று சிரிக்கின்றன. கரடியாற்று நீர்த்தேக்கம் வரை ஒரு 'பிக்னிக்' போய் வரலாமா?" என்று பாண்டியனிடம் கேட்டான் பொன்னையா.

     "போவதானால் நாளைக்கே போகலாம். அடுத்த ஞாயிற்றுக்கிழமை என்னால் முடியாது. சைக்கிள் விடத் தெரிந்தவர்களாக நாற்பது ஐம்பது பேர் மட்டும் போவோம். அதிகக் கூட்டம் வேண்டாம். காலையில் எட்டு மணிக்குப் புறப்படுவோம். இங்கேயே நம்ம 'சங்கர் பவனில்' சொல்லி நல்ல இட்டிலி, டிபன் எல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்டு போயிடலாம். மாலையில் அஞ்சு அஞ்சரைக்குள் திரும்பிடறதாயிருந்தாத்தான் மாணவிகளும் வருவாங்க..." என்றான் பாண்டியன். தம் கடையில் பத்து சைக்கிள்கள் மட்டுமே இருப்பதால் அதிகப்படி சைக்கிள்களுக்கு வேறு கடைகளில் சொல்லி ஏற்பாடு செய்து தருவதாக அண்ணாச்சி கூறினார். உடனே கண்ணுக்கினியாளுக்கு ஃபோன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. சைக்கிள் விடத் தெரிந்த மாணவிகள் மட்டுமே வரலாம் என்ற நிபந்தனையையும் கூறினான் பாண்டியன். சைக்கிள் வாடகை உட்படத் தலைக்கு ஐந்து ரூபாய் செலவாகும் என்ற விவரத்தை அவன் கூறிய போது, "தலைக்கு மட்டும் அஞ்சு ரூபாயின்னா கை கால் உடம்புக்கு எவ்வளவு ஆகுமோ? நீங்க சொல்றதைக் கேட்டா பயமாயிருக்கே?" என்று கேலியில் இறங்கினாள் அவள்.

     "உன்னோட கேலி பேச இப்போ எனக்கு நேரமில்லே. வர்ரதாயிருந்தால் உடனே சொல்லு..."

     "அது சரி! நான் தான் தீரப்படாதேன்னு நீங்க கூப்பிடற இடத்துக்கெல்லாம் வந்தாகணும். மத்தவங்களைக் கேட்காம எப்படிச் சொல்ல முடியும்?" என்றாள் கண்ணுக்கினியாள்.

     "ஏன் முடியாது? அந்த மத்தவங்களுக்கும் ஒவ்வொருத்திக்கு ஒரு தீரப்படாதவன் இருப்பான். உனக்கு வேணும்னா அது தெரியாம இருக்கும்!"

     "ஏதேது? ரொம்பக் குஷியாப் பேசறாப்லே இருக்கே?"

     "ஆமாம்! அது யாரோடப் பேசறேன் என்பதைப் பொறுத்து வருகிற குஷி."

     "அப்பிடியா?... நான் விசாரிக்கிறேன். மறுபடியும் ஃபோன் பண்ணிச் சொல்லிடறேன். வார்டனையும் கேட்டுக்கணும்."

     "கேட்டு முடிவு பண்ணினதும் மறுபடியும் என்னைக் கூப்பிட்டுச் சொல்லு. அதுவரை இங்கே ஃபோனடியிலேயே இருக்கேன்" என்று ஃபோனை வைத்து விட்டு அண்ணாச்சி கடைக்கு எதிர்ப்புறமிருந்த மருந்துக்கடையில் காத்திருந்தான் பாண்டியன்.

     இருபது நிமிஷங்களுக்குப் பிறகு மறுபடியும் அவள் ஃபோன் வந்தது. தானும் வேறு சில மாணவிகளும் வருவதாகத் தெரிவித்தாள் அவள். காலை ஏழு மணிக்கே அண்ணாச்சி கடை வாசலுக்கு வந்து விட வேண்டும் என்று நிபந்தனை போட்டான் அவன். அவள் ஒப்புக்கொண்டு ஃபோனை வைத்தாள். அவளோடு பேசி விட்டு அவன் அண்ணாச்சி கடைக்குப் போவதற்குள் கலைப் பிரிவில் இருபது பேர் கீழ்த்திசைப் பட்டப் பிரிவில் பத்துப் பேர், பொறியியலிலிருந்து மூவர், வேளாண்மைக் கல்லூரியிலிருந்து ஐந்து பேர், மருத்துவக் கல்லூரியிலிருந்து நான்கு பேர் என்பதாக ஓர் பட்டியலோடு தயாராக இருந்தான் பொன்னையா. நாலைந்து கடைகளில் சொல்லி எல்லாருக்குமாகச் சைக்கிள் ஏற்பாடு செய்யப் போனார் அண்ணாச்சி.

     அடுத்த நாள் காலை ஏழரை மணிக்குப் பனி விலகுவதற்குள்ளேயே அண்ணாச்சிக் கடை முகப்புக் கோலாகலமாக இருந்தது. பல நிறங்களில் ஸ்வெட்டர்களும் கம்பளிச் சட்டைகளும் அணிந்து, காமராக்கள், டிரான்ஸிஸ்டர்கள், பைனாகுலர்கள், மௌத் ஆர்கன், கிட்டார், தபேலா என்று பல பொருள்கள் சகிதமாகப் பட்டுப் பூச்சிகள் மொய்த்தாற் போல் மாணவ மாணவிகள் கூட்டம் கூடியிருந்தது. புஸு புஸுவென்று முகத்திலும் காதோரங்களிலும் கலைந்த கூந்தலோடு தூங்கி எழுந்த அழகுடனும் மாணவிகள் மிக வனப்பாகக் காட்சியளித்தனர். கண்ணுக்கினியாள் கிளிப்பச்சை நிறத்தில் ஒரு முழுக்கை ஸ்வெட்டர் அணிந்திருந்தாள். பாண்டியன் அவளைக் கேலி செய்தான்.

     "ஏதேது! இன்று பசுமைப் புரட்சி செய்கிறாற் போலிருக்கிறதே?"

     "நாம் திடீரென்று 'பிக்னிக்' கிளம்புவதே ஒரு புரட்சிதான்."

     சரியாக எட்டு மணிக்கு அவர்கள் புறப்பட்டார்கள். சங்கர் பவனில் வாங்கிய டிபன் பொட்டலங்களை ஈவு வைத்து அவரவர் பொட்டலங்களை அவரவரே சுமந்து கொண்டு வரச் செய்து விட்டார்கள். மலைச்சாலையின் பசுமை மணத்தை நுகர்ந்தபடியே பச்சை நிறத்திலும் பொன்னிறத்திலும் தாமிர நிறத்திலுமாகத் தளிர்த்திருந்த வர்ணக் கலவையான மலைகளின் பசுமை அடர்த்தியினிடையே சைக்கிள்களில் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறினார்கள்.

     'ஹேண்ட் பார்' இரண்டையும் விட்டுவிட்டு மௌத் ஆர்கனை எடுத்து வாசிக்கத் தொடங்கிய ஒரு மாணவனைச் சுட்டிக் காட்டி, "அடேடே! நம் பழநி எப்போது இவ்வளவு தைரியமாகச் சைக்கிள் விடக் கற்றுக் கொண்டான்?" என்று பாண்டியன் கேட்ட போது,

     "பழநியின் தைரியம் அதோ அவனது பக்கத்தில் மற்றொரு சைக்கிளில் கூடவே வருகிறது பார்" என்று பழநியின் அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு மாணவியைச் சுட்டிக் காட்டிப் பொன்னையா கூறியவுடன் சிரிப்பொலிகள் மலைச்சாரலில் ஒரு சேர ஒலித்தன. திடீரென்று கண்ணுக்கினியாளும், பாண்டியனும் சேர்ந்து கீழ்த்திசைப் பட்டப் பிரிவு மாணவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார்கள்.

     "மிஸ்டர் நடன சுந்தரம்! புலவர் வகுப்புத் தேர்வில் உங்களுக்கு 'வெர்ஸிஃபிகேஷன்' (செய்யுளியற்றல்) என்று ஒரு தேர்வு உண்டு. இப்போது எங்களுக்காக நீங்கள் உடனே ஒரு செய்யுள் இயற்ற வேண்டும். கடைசி வரியை இப்போது நான் சொல்லி விடுவேன். இதோ நமக்கு எதிரே, 'கரடியாறு நீர்த்தேக்கம் ஆறு கிலோமீட்டர்' என்ற கல் தெரிகிறது. அடுத்த கல்லாகிய ஐந்தாவதற்குரிய கிலோமீட்டர் கல் வருவதற்குள், 'இட்டிலிக்(கு) உண்டோ இணை' என்ற கடைசி வரியைப் பூர்த்தி செய்து யார் முதலில் வெண்பா இயற்றிச் சொல்கிறார்களோ அவர்களுக்குப் பத்து ரூபாய் பந்தயம். யாருமே இயற்ற முடியாமற் போய் விட்டால் - புலவர் வகுப்பு மாணவர்களாகிய நீங்கள் பத்து பேரும் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டு என்னிடம் தந்து விட வேண்டும். ஒருவரோ இருவரோ இயற்றிவிட்டால் நாங்கள் தருகிற பத்து ரூபாயை வாங்கி நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். போட்டிக்கு தயாரா நீங்கள்... ஒன்... டூ... த்ரீ..." என்றான் பாண்டியன். அடுத்த மூன்றாவது நிமிஷமே 'கோதை மார்பன்' என்ற புலவர் முதுநிலை வகுப்பு மாணவர்,

     "மங்காப் புகழ்படைத்த மல்லிகைப் பந்தலினிற்
     சங்கர் பவன் தரும் சாம்பாரும் - வெங்காயச்
     சட்டினியும் இங்கிருக்க ஏழுலகில் தேடிடினும்
     இட்டிலிக் குண்டோ இணை."

     என்று விரைந்து பாடிவிட்டார். அவர் பாடி நான்கு நிமிஷங்களுக்குப் பின்,

     "வட்ட நிலாப் போல் வாகான இட்டிலியும்
     தொட்டுக்கொள் தொட்டுக்கொள் என்றழைக்கும் - இட்டமுள்ள
     சட்டினியும் சேர்ந்திருக்கும் இந்நிலையில் இவ்வுலகில்
     இட்டிலிக் குண்டோ இணை."

     என்று நடன சுந்தரமும் மெல்ல மெல்ல வெண்பாவைப் பாடினார். அடுத்த எட்டுப் புலவர் மாணவர்களும் பாடுவதற்குள் ஐந்தாவது கிலோமீட்டர் மைல் கல் வந்து விட்டது. அந்த எட்டுப் பேரிடமும் தலைக்கு ஒரு ரூபாய் வசூல் செய்து தானும் கண்ணுக்கினியாளும் மற்றவர்களும் சில்லறையாக இரண்டு ரூபாய் சேர்த்துப் பத்து ரூபாயை இரண்டு ஐந்தாகப் பிரித்துக் கோதை மார்பனிடமும், நடன சுந்தரத்திடமும் கொடுத்தான் பாண்டியன். "ஜாக்கிரதை! பிக்னிக் முடிந்து திரும்புவதற்குள் வேறு ஏதாவது ஒரு பந்தயத்தில் இதை உங்களிடமிருந்து பறித்து விடுவோம். அதுவரை இந்த ரூபாய் நோட்டுக்களைப் பத்திரமாக வைத்திருக்கிற சந்தோஷம் மட்டுமாவது உங்களுக்குக் கிடைக்கட்டும்" என்றாள் கண்ணுக்கினியாள்.

     "சரியாகச் சொல்கிறாய்! ரூபாயைச் செலவழிப்பது சந்தோஷமா? கன்னிப்பெண் கன்னியாகவே மூப்பது போல் வைத்திருப்பது சந்தோஷமா? என்பது புரியாமல் தான் பலர் இந்த நாட்டில் இன்று திகைக்கிறார்கள்" என்றான் பாண்டியன்.

     அவன் கூறிய கன்னிப் பெண் உவமைக்காக அவனைப் பொய்க் கோபத்தோடு முறைப்பது போல் பார்த்தாள் அவள்.

     "பிக்னிக் என்பது கோபங்களை விலக்கிவிட வேண்டிய காரியம்."

     "குறும்புகளையும் சேர்த்துக் கொள்ளுங்களேன். அதற்கு மட்டும் விதிவிலக்கா, என்ன?"

     "பிக்னிக்கின் விதியே குறும்புதானே? அதை விலக்கி விட்டால் அப்புறம் எதற்கு 'பிக்னிக்'?" என்று பாண்டியன் பதிலுக்குக் கேட்டதும், "ஆம்! ஆம்! குறும்பு வாழ்க! நீடுழி வாழ்க!" என்று மாணவர்களின் ஒன்றாக இணைந்த குரல்கள் முழங்கின.