முப்பத்து நான்காவது அத்தியாயம் செயற்குழு முடிந்த தினத்தன்று இரவு பதினொரு மணிவரை அவர்களுக்கு வெளியே அலைச்சல் இருந்தது. மகாநாட்டுப் பந்தலுக்குத் தீ வைத்ததை இராவணசாமியின் கட்சியைத் தவிர வேறு எல்லாக் கட்சித் தலைவர்களும் கடுமையாகக் கண்டித்துப் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருந்தார்கள். அதனால் நகரில் மாணவர்கள் மேல் அனுதாபம் ஏற்பட்டுப் பலர் தாங்களே தேடி வந்து நிதி உதவி செய்தார்கள். அன்றிரவு பாண்டியன் படுக்கச் செல்லும் போது ஒரு மணி. ஞாபகமாகக் காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தான் அவன். நாலே முக்காலுக்கே தூக்கம் விழித்து விட்டது. குளியலறையில் போய் ஹீட்டரைப் போட்டு வெந்நீர் தயாரானதும் நீராடி உடை மாற்றிக் கொண்டு பிள்ளையார் கோயிலுக்குப் புறப்பட்டான் அவன். புறப்படு முன் அறையில் படுக்கைக் கட்டிலுக்குக் கீழே இருந்த தனது பெட்டியைத் திறந்து அவன் எதையோ ஞாபகமாக எடுத்துக் கொண்டான். வெளியே குளிர் நடுங்கியது. மஞ்சு மூடிக் கட்டிடங்களும், மரம் செடி கொடிகளும் நீலப் பசுங் கனவுகள் போல் மலைகளும் வெள்ளை மஸ்லீன் துணியால் மூடி வைத்த ஓவியங்கள் போன்று இயக்கமற்று இருந்தன. விடுதிகளும், பல்கலைக் கழகமும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. எங்கோ தொலைவில் ஒரு கோழி கூவும் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. பாண்டியன் விடுதிகளின் நடுவே மைதானத்தில் இருந்த 'வரந்தரு விநாயகர் கோயிலை' நோக்கி நடந்தான். மாணவர்கள் இந்தப் பிள்ளையாருக்குச் சூட்டிய குறும்புப் பெயர் 'பரீட்சை விநாயகர்'. கண்ணுக்கினியாள் தூக்கம் விழித்து எழுந்து வந்திருப்பாளோ அல்லது மறந்திருப்பாளோ என்று சிந்தித்தபடியே அவன் கோவிலை நோக்கிச் சென்ற போது அவள் முன்னதாகவே எழுந்து வந்து அங்கே காத்திருப்பதைத் தொலைவிலிருந்தே காண முடிந்தது. அந்த அதிகாலையில் வைகறைக் கன்னியாகிய உஷையே எழுந்து வந்து காத்திருப்பது போல் அவள் மிக மிக வனப்புடன் தோன்றினாள் அப்போது. "எதற்காக இவ்வளவு அதிகாலையில் இங்கே வரச் சொன்னீர்கள்?" அவளுக்கு மறுமொழி கூறாமல் முதலில் பிள்ளையாரைக் கும்பிட்டு வலம் வந்தான் அவன். அவளும் அவனோடு சேர்ந்து இணையாகப் பிள்ளையாரை வணங்கி வலம் வந்தாள். இருள் பிரியாத பணி விலகாத அந்த வைகறையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வேறு நடமாட்டமே இல்லை. வலம் வந்து முடிந்ததும் தனது அதே கேள்வியை மீண்டும் அவள் அவனிடம் கேட்டாள். அவன் பதில் சொல்லாமல் அவளை ஏறிட்டுப் பார்த்தான்; சிரித்தான். அவன் பார்வை அவள் மேல் நிலைத்திருந்தது. அப்படியே வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போன்ற சுகமான கோலத்தில் அப்போது அவள் இருந்தாள். இடைவெளியின் பொன் நிறம், தங்க வாய்க்காலாய் மின்னும் முதுகின் கீழ்ப்பகுதி, செழுமையான தோள்கள், குறுகுறுப்பான பார்வை எல்லாமாக அவள் அவனருகே நின்றாள். "என்ன காரியமாக இந்தக் குளிரில் வரச் சொன்னீர்கள்?" "காரியத்தை நான் முன்கூட்டியே சொல்லியிருந்தால் ஒரு வேளை நீ இங்கே வந்திருக்க மாட்டாய்...!" "நீங்கள் கூப்பிட்டீர்கள் என்பதே போதுமானது. நீங்களே கூப்பிட்ட பிறகும் என்ன காரியம் என்று தெரிந்து கொண்டு வர வேண்டிய அளவு நான் உங்களுக்கு அந்நியமில்லை. என்றாலும்..." "காரியத்தைச் சொல்லட்டுமா?" கண்களில் ஒளி மின்ன, முகமலர்ச்சியோடும் ஒரு புன்முறுவலோடும் அவன் சொல்வதை வரவேற்கக் காத்திருப்பது போல் கைகட்டி நின்றாள் அவள். கைகளைக் கட்டிக் கொண்டு சிரித்தபடி நிமிர்ந்து நின்ற அந்தக் கோலத்தில் அவள் உடல் அழகின் செழுமையும், வளப்பமும் கோடிட்டுக் காட்டினாற் போல் நன்கு தெரிந்து அவனை மயக்கின. "இந்த அதிகாலையில் நீ மிகவும் அழகாயிருக்கிறாய். யூ ஆர் லுக்கிங் ஸோ நைஸ்!" "போதும். இதைச் சொல்வதற்குத்தான் இந்தப் பனியிலும் குளிரிலும் வரச் சொன்னீர்களா?" "இல்லை, வேறு காரியமும் இருக்கிறது! இந்த அதிகாலையில் பிள்ளையார் சாட்சியாக நான் உன்னைக் கொள்ளையிடப் போகிறேன்..." "நீங்கள் சொல்வது பிழை! விரும்பாதவர்களிடமிருந்து ஒருவன் தான் விரும்பியதை அடைய முயல்வதுதான் கொள்ளை. நானே ஏற்கனவே உங்களிடம் தான் இருக்கிறேன். என்னிடம் நீங்கள் எதையும் கொள்ளையிட முடியாது! ஞாபகம் இருக்கட்டும்..." அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவளது சந்தன நிறக் கைகளைப் பற்றி அதிலிருந்த இரண்டு ஜதைப் பொன் வளையல்களையும், வலது கை மோதிர விரலிலிருந்த வைர மோதிரத்தையும் சிரித்தபடியே, மெல்லக் கழற்றினான் பாண்டியன். அவள் அதைத் தடுக்கவில்லை. சிரித்த முகத்தோடு அவனை அதைச் செய்ய அனுமதித்திருந்தாள். "ஒரு நிமிஷம்... இதோ இன்னும் ஒன்று மீதம் இருக்கிறது..." என்று கூறியப்டியே தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியையும் கழற்றி அவன் கைகளில் வைத்தாள் அவள். "இந்தச் சங்கிலியும் வளைகளும் ஏன் இவ்வளவு பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது தெரியுமா?" "ஏனாம்?" "தன்னைவிடப் பிரகாசமான ஒரு மேனியில் இவை இதுவரை பிணைத்திருந்தது தான் காரணம்." அவள் முகம் சிவந்தது. புன்முறுவலுடன் அவனைத் தலையைச் சாய்த்து ஒயிலாகப் பார்த்தபடி, "வர்ணனை எல்லாம் போதும்! என்ன செய்யப் போகிறீர்கள் இதை?" என்று கேட்டாள் அவள். "உனக்கே இதற்குள் புரிந்திருக்க வேண்டும்! மகாநாட்டைப் பிரமாதமாக நடத்திவிட்டு பாக்கி நிற்கிறவர்களுக்குப் பணம் தர முடியாமல் மணவாளன் மிகவும் சிரமப்படுகிறார். பந்தல் எரிந்து போனதால் பந்தல்காரருக்கும், மின்சார காண்ட்ராக்ட் ஆளுக்கும், பரினிச்சர் விநியோகம் செய்தவர்களுக்கும் நிறையப் பணம் நஷ்ட ஈடு தரவேண்டியதாகிவிட்டது. அண்ணாச்சி சைக்கிள்களை விற்றுப் பணம் கொடுத்திருக்கிறார். பூதலிங்கம் பணம் கொடுத்திருக்கிறார். நான் கூட என் கடிகாரம், மோதிரம் எல்லாவற்றையும் லேக் அவென்யூவிலுள்ள அடகுக் கடையில் வைத்துப் பணம் வாங்கியிருக்கிறேன். நீ இருநூறு ரூபாய் ஏற்கெனவே நன்கொடை கொடுத்திருக்கிறாய். இப்போது இவற்றையும் அடகு வைக்கப் போகிறேன்..." "நீங்கள் இதை எல்லாம் விற்று மணவாளனிடம் கொடுத்தாலும் எனக்குச் சம்மதம்தான்... நான் நாயினாவிடமும் அம்மாவிடமும் ஏதாவது பொய் சொல்லிக் கொள்வேன்..." "நான் அப்படிச் செய்ய மாட்டேன். அடகுதான் வைக்கப் போகிறேன். நானே இதை விரைவில் உன்னிடம் மீட்டுத் தருவேன். அதுவரையில் நீ என்னை மன்னிக்க வேண்டும்... நான் இப்படிச் செய்வது சரிதானா என்று எனக்கே தயக்கமாகவும் பயமாகவும் கூட இருக்கிறது..." "போதும்! வாயை மூடிக் கொள்ளுங்கள். இந்த மன்னிப்பும் புலம்பலும் தான் எனக்குப் பிடிக்கவில்லை. யாரிடம் யார் மன்னிப்புக் கேட்பது? யார் யாரிடம் தயங்குவது?" "இன்று வெள்ளிக்கிழமை! உன் கைகளில் உள்ள வளைகளைப் பறித்துக் கொண்டு உன்னை வெறும் கைகளோடு அனுப்ப எனக்கு விருப்பமில்லை" என்று கூறிக் கொண்டே தன் 'பேண்ட்' பாக்கெட்டில் கையை விட்டு எதையோ எடுத்தான் பாண்டியன். "உனக்கு மறந்திருக்காது என்று நினைக்கிறேன்! நான் மாணவர் பேரவைத் தேர்தலுக்கு நிற்கத் தயங்கிய போது அண்ணாச்சி கடையில் நீ என் முன் கழற்றி வீசிய வளையல்கள் இவை. எப்போது திருப்பித் தர வேண்டுமோ அப்போது திருப்பித் தருவதாக அன்று நானே உன்னிடம் வாக்களித்திருந்தேன்..." "ஆமாம்! ஆமாம்! நீங்கள் வாக்குறுதி வீரர் தான்... தெரியும்" என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு முன் கைகளை நீட்டினாள் அவள். அவனே அந்த வளையல்களை அவள் கைகளில் அணிவித்தான். அவள் அவனைக் கிண்டல் செய்தாள். "நன்றாக வளையல் அணிவிக்கிறீர்கள். ஒரு வளையல் கூட உடையவில்லையே? நீங்கள் வளையல் வியாபாரத்துக்குப் போகலாம் போலிருக்கிறது..." "இவ்வளவு அழகான கைகள் கிடைத்தால், அதையும் கூடச் செய்யலாம். உன் கைகளுக்கு வளையல்கள் அழகைத் தரவில்லை. எந்த வளையல்களுக்கும் உன் கைகளே அழகைத் தரும்..." "போதும்! போதும்! பெண்களைப் புகழ்கிற போது அசடு வழியாத ஆண்களே இருக்க மாட்டார்கள் போல் இருக்கிறது?" "அது எப்படி முடியும்? ஆண்களை அசடு வழியச் செய்வதே உன் போன்ற பெண்கள் தானே?" உடன் இருவருடைய சிரிப்பொலிகளும் இணைந்து ஒலித்தன. பொங்கலுக்கு ஊர் புறப்படுவதைப் பற்றி அவள் கேட்டாள். போகும் போது சேர்ந்து போகலாம் என்று சொன்னான். பனியும் இருளும் விலகி மெல்ல மெல்ல விடிந்து கொண்டிருந்தது. அவள் விளையாட்டாகக் கேட்டாள்: "புறப்படலாமா? அல்லது இன்னும் என்னிடம் நீங்கள் கொள்ளையிட ஏதாவது மீதம் இருக்கிறதா?" "இருக்கிறது. ஆனால் பெரியவர்கள் நாளும் கிழமையும் பார்த்துக் கொடுத்த பின்பு தான் சிலவற்றை ஒரு பெண்ணிடமிருந்து ஓர் ஆண் கொள்ளையிட முடிகிறது... என்ன? நான் சொல்வது உண்மைதானே?" "ஆகா! ஒரு நோபல் பரிசே கொடுக்க வேண்டிய அளவுக்குப் பேருண்மைதான்! போய் வாருங்கள். ஒரு விஷயம் ஞாபகம் இருக்கட்டும். அடகுக் கடைக்குத் தனியே போகாதீர்கள். போன மாதம் இங்கே ஆண்டாள் விடுதியில் தங்கியிருக்கும் என் சிநேகிதி ஒருத்தி மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தன் காதலன் ஹாஸ்டல் ஃபீஸ் கட்ட நகைகளை உதவியிருக்கிறாள். அவன் தனியாக அடகுக் கடைக்குப் போக, 'ஒரு மாணவனுக்குப் பெண்களின் நகை ஏது?' என்ற சந்தேகத்தோடு அடகுக் கடை சேட் போலீஸுக்குப் ஃபோன் செய்து கேலிக் கூத்தாகி அப்புறம் அவளே நேரில் போய் உதவ வேண்டியதாகி விட்டது. போகும் போது சொல்லுங்கள் நானும் கூட வருகிறேன்" என்றாள் கண்ணுக்கினியாள். காலை பதினொரு மணிக்கு அண்ணாச்சி கடைக்கு அவளை வரச் சொன்னான் பாண்டியன். அவள் விடைபெற்றுக் கொண்டு சென்றாள். அவள் நடந்து செல்லும் அழகைச் சிறிது நேரம் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் அவன். பின்னால் யாரோ வருகிற காலடி ஓசை கேட்கவே திரும்பியவன் பூதலிங்கம் சார் பனியனும் துண்டுமாகக் கோயிலுக்கு வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கையிலிருந்த வளையல்களையும் செயினையும், மோதிரத்தையும் 'பேண்ட்' பாக்கெட்டில் அவசரம் அவசரமாகத் திணித்துக் கொண்டு நிமிர்ந்து அவரை வணங்கினான். "பாண்டியன்! அப்புறம் மறந்து விடாமல் என்னை வீட்டில் வந்து பார்! ஜுவாலஜி புரொபஸர் தங்கராஜு உங்கள் மகாநாட்டு நிதிக்காக என்னிடம் நூறு ரூபாய்க்கு ஒரு செக் கொடுத்திருக்கிறார். சோஷியாலஜி வீரராகவன் ஒரு ஐம்பது ரூபாய் தந்திருக்கிறார். அதையெல்லாம் வாங்கிக் கொண்டு போ. இன்னும் சிலரிடம் சொல்லியிருக்கிறேன். ஏதாவது கிடைக்கலாம்... பாவம்... உங்களுக்கு எல்லாம் ரொம்பச் சிரமமாயிருக்கும். பந்தல் தீப்பிடித்திராவிட்டால் இத்தனை பணத்தட்டுப்பாடு வந்திருக்காது..." என்றார் அவர். தங்களுக்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தையைப் பாராட்டி நன்றி சொன்னான் பாண்டியன். அவர்கள் கோயிலிலிருந்து திரும்பும் போது விடுதிக்கும் ஸ்டாஃப் குவார்ட்டர்ஸுக்கும் வழி பிரிகிற இடத்தில் அவன் விடைபெறும் போது, "பாண்டியன்! நான் சொல்வது நமக்குள் இருக்கட்டும். கீப் இட் இன் யுவர் மைண்ட் அண்ட் பீ கேர் ஃபுல்! வி.சி. பொங்கல் முடிந்து பல்கலைக் கழகம் திறந்ததுமே ஒரு வாரத்துக்குள் அநேகமாகக் கான்வகேஷனை நடத்தி விடுவார் என்று தெரிகிறது. கான்வகேஷனுக்குள் எதையாவது குற்றம்சாட்டி உன்னையும் வேறு சில 'ஆக்டிங்' ஸ்டூடன்ஸையும், பல்கலைக் கழகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்துவிடக் கூட வி.சி. தயாராயிருப்பார். இது யுனிவர்ஸிடிக்குள்ளே உள்ள விரோதம். யுனிவர்ஸிடிக்கு வெளியிலேயோ இராவணசாமியின் ஆட்கள் அண்ணாச்சியின் மேல் கடுங்கோபத்தோடு கறுவிக் கொண்டிருக்கிறார்கள். ஜாக்கிரதை. டோண்ட் அண்டர் எஸ்டிமேட் எனிதிங்..." என்று பாசத்தோடு எச்சரித்தார். தம்மைப் பற்றியும் அவர் பாண்டியனிடம் கூறினார். "என் மேல் கூட வி.சி.க்கு ஒரு கண் இருக்கிறது அப்பா! நான் மாணவர்களுக்கு வேண்டியவனாக இருப்பதும் தன்மான உணர்வுள்ள பல லெக்சரர்களையும், பேராசிரியர்களையும் வி.சி.க்கு எதிரான அணியில் திரட்டியிருப்பதும் அவருக்குப் பிடிக்கவில்லை. கதிரேசன் விவகாரத்தில் அநாவசியமாக என் வீட்டில் 'போலீஸ் ரெய்ட்' நடத்தத் தூண்டியது வி.சி.தான். இதற்கெல்லாம் நான் பயந்து ஒடுங்கி விட மாட்டேன். மிகப் பெரிய பாவம் படித்தவர்களின் அடிமைப் புத்திதான். படித்தவர்களே அடிமைப்படுகிற தேசத்தின் தலைவிதியைக் கடவுள் கூட நேராக்க முடியாது. இந்த வேலையை உதறிவிட்டு லேக் அவின்யூவில் 'பூதலிங்கம் டுட்டோரியல் காலேஜ்' என்ற ஒரு போர்டு மாட்டிக் கொண்டு உட்கார்ந்தேன் என்றால் என் குடும்பத்தை நான் காப்பாற்றிக் கொள்ள முடியும். அப்படி ஒரு நாள் வரத்தான் போகிறது. அறிவுள்ளவர்களிடம் பணிவாக நடப்பது வேறு. புத்தியில்லாதவர்களிடம் அடிமைகளாக இருப்பது வேறு. இந்தப் பல்கலைக் கழக நிர்வாகத்தை இன்று வி.சி. நடத்தவில்லை. மறைமுகமாக இராவணசாமியும், கோட்டச் செயலாளர் குருசாமியும், அமைச்சருக்கு டாக்டர் பட்டம் வாங்கிக் கொடுக்கத் தரகு வேலை பார்க்கும் எஸ்டேட் அதிபர் ஆனந்த வேலுவும் தான் வி.சி.யை ஆட்டிப் படைக்கிறார்கள். ஸீ! வீ காண்ட் பௌ அவர் ஹெட்ஸ் பிஃபோர் அப்ஸ்ஸர்ட்ஸ்... அண்ட் பிம்ப்ஸ்..." "எங்களுக்காகவாவது நீங்கள் பல்கலைக் கழகத்தில் இருக்க வேண்டும் சார்! பல நூறு ஆசிரியர்கள் வேலை பார்க்கும் ஒரு பெரிய பல்கலைக் கழகத்தைப் பெருமைப் படுத்தும் உண்மை ஒளி உங்களைப் போல் யாராவது ஒருவர் இருவரிடம் தான் இருக்க முடியும் சார்" என்றான் பாண்டியன். "இங்கே பயிலும் உன் போன்ற மாணவர்களை எண்ணித்தான் ராஜிநாமாச் செய்யும் எண்ணத்தை ஒவ்வொரு தடவையும் நான் ஒத்திப் போடுகிறேன் பாண்டியன்..." என்று கூறிவிட்டு ஸ்டாஃப் குவார்ட்டர்ஸை நோக்கி நடந்தார் அவர். பாண்டியன் விடுதி அறைக்குத் திரும்பினான். ஒரு மோசமான அரசாங்கத்தை கல்விக் கூடங்களிலிருந்து களத்து மேடு வரையில் எல்லா இடங்களிலும் அதிகாரத்தில் உட்கார்த்தி வைத்து விட்ட கொடுமையைச் சிந்தித்த போது மணவாளன் அடிக்கடி சொல்லும் அந்த வாக்கியங்களைப் பாண்டியன் நினைவு கூர்ந்தான். 'ஒரு பெரிய சத்தியப் பெருக்கில் இந்தப் பொய்கள் எல்லாம் கரைந்து விடும். கரைந்தாக வேண்டும்! அது வரையில் பொறுமையாக இருப்போம்.' இரண்டாம் தடவையாக எண்ணிய போது மணவாளனின் இந்தப் பொறுமையை விடக் கதிரேசனின் அந்த அவசரம் தான் சரியோ என்று கூட பிரமை உண்டாயிற்று அவனுள். அதிகாலையில் கண்ணுக்கினியாளிடம் பேசி அனுப்பிய பின்னர் பிள்ளையார் கோயிலில் பேராசிரியர் பூதலிங்கத்தையும் சந்தித்துப் பேசி விட்டுப் பாண்டியன் அறைக்குத் திரும்பிய போது நன்றாக விடிந்து விட்டிருந்தது. அறையில் அவன் இல்லாதபோது கதவு இடுக்கு வழியாக மல்லை இராவணசாமியின் கட்சியினர் போட்டிருந்த ஒரு துண்டுப் பிரசுரம் கிடந்தது. அதில் பாண்டியனையும், அண்ணாச்சியையும் 'சாதிப்பித்துப் பிடித்தவர்கள்' என்று வர்ணித்திருந்தார்கள் அவர்கள். சாதிகளை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டே மல்லை இராவணசாமியின் கட்சியினர் புதிய புதிய சாதிகளை உண்டாக்கியிருக்கிறார்கள். 'இந்த நாட்டில் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று மேற்போக்காகப் போராடும் ஒவ்வொருவரும் தங்கள் சாதிகளைத் தவிர மற்ற எல்லாச் சாதிகளையும் ஒழிக்கவே அப்படிப் போராடுவது போல் தெரிகிறது. சாதி பேதங்களை ஒழிப்பது வேறு. சாதிகளை ஒழிப்பது வேறு. இங்கே பேதங்களை அழிப்பதற்குப் பதில் மனிதர்களையே அழிக்க முயல்கிறார்கள்' என்று மணவாளன் ஒரு முறை சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்தான் பாண்டியன். சாதி பேதங்களை ஒழிக்கும் இயக்கங்கள் சிலவற்றின் பக்குவமில்லாத பிரசாரகர்கள் அவற்றை ஒழிக்கும் முயற்சிகளின் மூலமாகவே அவற்றை நன்றாக ஞாபகப்படுத்தியும், வற்புறுத்தியும் வளர்த்தும் விடுகிறார்கள். பிரசாரங்கள் என்பவை இருமுனையும் கூரான அரிவாள் போன்றவை. அவற்றை அளவாகப் பயன்படுத்தாவிட்டால் அவை அழிக்க வேண்டியவற்றை விட்டுவிட்டு வளர்க்க வேண்டியதை அழித்து விடவும் கூடும். ஒருவர் செய்யும் நன்மை தீமைகளை அவருடைய சாதியை இணைத்துப் புகழவும் பழிக்கவும் தொடங்குவது கூட ஒரு வகையில் பேதங்களை வளர்க்கவே உதவும் என்பது புரியாமல் தன்னையும் அண்ணாச்சியையும் மணவாளனையும் தாங்கள் ஒரு மாணவர் மகாநாட்டை வெற்றிகரமாக நடத்திவிட்டதைப் பார்த்து அடைந்த வயிற்றெரிச்சலுடன் இராவணசாமி கட்சியினர் பழி கூற முற்படுவது பாண்டியன் மனத்தை மிகவும் வருத்தியது. ஆனால் அந்தப் பொய்ப் பிரசாரத்தில் அவன் அயர்ந்து விடவோ, தளர்ந்து விடவோ இல்லை. நவீன காலத்தில் சாதிபேதங்கள் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளால் தான் வருகின்றன என்பதை அவன் உணர்ந்திருந்தான். சிறுபான்மை வகுப்பார் எதைப் பற்றிப் பேச எழுந்தாலும் உடனே அவர்களைச் சாதிப்பேரைச் சொல்லித் திட்டி விடுவதன் மூலம் சாதி பேதம் தான் வளருமே ஒழிய சமத்துவம் வளராது. எல்லாச் சாதி பேதமும் ஒழிய வேண்டும் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு சிலரைச் சாதிப் பேர் சொல்லி ஞாபகமாக வசைபாடும் நாகரிகமான தந்திரம் மல்லை இராவணசாமி கட்சிக்குக் கை வந்த கலையாகி இருந்தது. கீழ் சாதிக்காரர்களை உயர்த்துவதாக மேல் சாதிக்காரர்களையும் மேல் சாதிக்காரர்களை உயர்த்துவதாகக் கீழ்ச் சாதிக்காரர்களையும் ஏமாற்றி மிரட்டி நடுவே பிழைப்பு நடத்தினார்கள் அவர்கள். பொருளாதாரத் திட்டம் எதுவும் இல்லாமல், 'இது சாமான்யர்களின் ஆட்சி! இதை கவிழ்க்க முயல்வோர் எல்லாம் மேட்டுக் குடியினர்' - என்று ஒப்பாரி வைத்தார்கள். அன்று பகலில் கண்ணுக்கினியாளுடன் சென்று லேக் அவென்யூவில் உள்ள சேட் கடையில் அவளது வளைகளையும், மோதிரத்தையும், தங்கச் சங்கிலியையும் அடகு வைத்துப் பாண்டியன் பணம் வாங்கிக் கொண்டு வந்தான். பணத்துடன் அவனும் கண்ணுக்கினியாளும் மணவாளனைப் போய்ப் பார்த்த போது அவரிடம் காலையில் தன் அறையில் மல்லை இராவணசாமி கட்சியினர் போட்டிருந்த துண்டுப் பிரசுரத்தைப் பற்றிச் சொல்லி வருத்தப்பட்டான் பாண்டியன். "இது மாதிரி விஷயங்களை 'இக்னோர்' செய்யப் பழகிக் கொள் பாண்டியன்! சாதிகளின் உயிர் போய் விட்டது. சாதிகள் என்றோ செத்து விட்டன... அவற்றின் பிரேதங்களை வைத்து இங்கே சிலர் பணம் பண்ணுகிறார்கள்! தெருவில் அநாதைப் பிணங்களைக் காட்டி உயிருள்ள பிணங்கள் பணம் சேர்ப்பதை நீ பார்த்ததில்லையா? அப்படித்தான் இதுவும்" என்று ஆறுதல் கூறினார் மணவாளன். "சான்றோர்கள் என்று தங்களைக் கருதிக் கொள்ளும் பொழில் வளவனார், பண்புச் செழியனார் போன்ற தமிழாசிரியர்களே மாணவர்களிடையே சுயநலத்துக்காக இந்தச் சாதி பேதங்களைப் பரப்புகிறார்கள்." "இங்கே வேறு வழியில்லாத காரணங்களால் சிலர் சான்றோர்கள் போல் இருப்பதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உண்மையில் சான்றோர்களாகி விட மாட்டார்கள். சான்றோர்களாகச் சபிக்கப் பட்டவர்கள் எல்லாம் சான்றோர்கள் ஆக முடியாது பாண்டியன்!" ஏற்கெனவே திட்டமிட்டபடி அன்று மாலை அவர்கள் மகாநாட்டுப் பந்தலுக்கு எதிரிகள் தீ வைத்த வன்முறையைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டம் நடத்தினார்கள். பாதிக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே சரியாகப் பத்து மணியளவில் கூட்டத்துக்கு லைசென்ஸ் கொடுத்த நேரம் முடிந்து விட்டதாகப் போலீஸார் 'மைக்'கை நிறுத்திக் கூட்டத்தை முடிக்கச் சொல்லிவிட்டார்கள். மறுநாள் அதே இடத்தில் மல்லை இராவணசாமி தலைமையில் நடந்த ஒரு கூட்டம் பதினொரு மணி வரை நடந்த போது மாணவர்கள் போய்க் கூப்பாடு போட்டு எதிர்த்தார்கள். போலீஸார் தர்ம சங்கடமான நிலையில் அந்தக் கூட்டத்தை முடிக்கச் சொல்லியும் இராவணசாமி மறுத்தார். மாணவர்கள் கூப்பாடு போட்டு கூட்டத்தை முடிக்கச் செய்துவிட்டார்கள். "ஆளும் கட்சிக் கூட்டமானால் விடிகிற வரை மைக் லைசென்ஸ் உண்டா? எங்கள் கூட்டமானால் மட்டும் பத்து மணி தான் அதற்கு எல்லையா? இது என்ன நியாயம்?" என்று பாண்டியனே அந்த எஸ்.ஐ.யிடம் கேட்டான். அந்த எஸ்.ஐ. அதற்குப் பதில் சொல்ல முடியாமல் சிரித்து மழுப்பினார். "என் கூட்டம் விடிய விடியக் கூட நடக்கும்! நீ யார் அதைக் கேட்க?" என்று சவால் விட்ட மல்லை இராவணசாமியைப் பேச விடாமல் கூப்பாடு போட்டு மாணவர்கள் அந்தக் கூட்டத்தைப் பாதியிலேயே முடித்து விடச் செய்ததும் அவர் கடுங் கோபத்தோடு கறுவிக் கொண்டு போனார். கூட்டம் நடந்த இடம் அண்ணாச்சிக் கடை வாயிலாக இருந்ததால் அவர் தான் மாணவர்களைத் தூண்டியிருப்பதாகப் புரிந்து கொண்ட இராவணசாமியின் ஆட்கள் தங்கள் கூட்டத்தை முடிக்கு முன், "இங்கே சில சைக்கிள் கடை பயில்வான்கள் மாணவர்களை இப்படித் தூண்டி விடுவது எங்களுக்குத் தெரியும். நாங்கள் நினைத்தால் அவர்களைப் பூண்டோடு அழித்து நசுக்கி விட முடியும்" என்று பேசியிருந்தார்கள். அண்ணாச்சி அதைக் கேட்டுப் புன்னகை புரிந்தார். 'நான் ஒரு சத்தியாக்கிரகி! வன்முறைகள் புரிவதைக் கோழையின் செயல்களாக நினைக்கிறவன். என்னைப் பற்றி இப்படிப் பேசறதாலே இவங்கதான் தரக் குறைவாக நடந்துக்கிறாங்க. இதுனாலே நான் கெட்டவனாகி விட மாட்டேன். என்னைக் கெட்டவனாகக் காண்பிக்க இவங்க முயற்சி பண்ணிட்டதாலே நான் கெட்டவனாகி விடவில்லை' என்று அவர் மனம் நினைப்பதைக் காட்டுவது போல் இருந்தது அந்தத் தூய முகத்தின் புன்னகை. சத்திய வெள்ளம் : முன்னுரை, கதை முகம் 1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
நிறைவுரை
|