இருபத்தெட்டாவது அத்தியாயம்

     வார்டனின் வழக்கத்தை மீறிய கடுமை கண்ணுக்கினியாளுக்குப் புதுமையாக இருந்தது. மாணவிகள் விடுதியான ஔவை மனை, ஆண்டாள் மனை, இரண்டிற்கும் பொதுவான பிரதம வார்டன் அம்மையார், அந்தக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் அவள் கலந்து கொண்டதற்காகவும், தலைமை தாங்கி மாணவிகளை அழைத்துச் சென்றதற்காகவும், அவளைக் கோபமாகக் கண்டித்தாள். எப்போதும் தன்னிடம் ஓரளவு பிரியமாயிருக்கும் வார்டனின் கண்டிப்பு அன்று அதிகமாயிருந்தது போல் தோன்றியது அவளுக்கு.

     "தடை உத்தரவு அமுலில் இருக்கிற போது நீ நூறு மாணவிகளுக்கு மேல் அழைத்துக் கொண்டு போய் மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டியிருக்கிறாய்! நீங்கள் எல்லாருமே பெண்கள் என்பதால் போலீஸ் தயக்கத்தோடு எதுவும் செய்யாமல் விட்டுவிட்டது. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் பதில் சொல்ல வி.சி.க்கு முன்னால் நான் போய்க் கைகட்டி நிற்க நேர்ந்திருக்கும். உன்னால் இந்த ஹாஸ்டல் பேரே கெட்டுப் போய் விடாமல் பார்த்துக் கொள்! ஐயாம் ஏ லிட்டில் அஃப்ரைட் ஆஃப் யூ! பீ கேர் ஃபுல்! எனி ஹௌ..."

     கண்ணுக்கினியாள் இதற்குப் பதிலே சொல்லவில்லை. பெண்கள் விடுதிகளிலிருந்து எந்த மாணவி வகுப்புக்களுக்குத் தவிர வேறு காரியங்களுக்காக வெளியே செல்வதானாலும், புறப்பட்டுச் செல்கிற நேரம், செல்லும் இடம், மறுபடியும் திரும்பும் நேரம் உட்பட எழுதி வைத்துவிட்டுப் போக வேண்டிய 'அவுட் ரிஜிஸ்தர்' நோட்டுப் புத்தகம் அப்போது வார்டனின் மேஜை மேல் விரித்து வைக்கப் பட்டிருந்தது. பல்கலைக் கழக விதிமுறைகள் கண்டிப்பாக இருந்தாலும் பெரும்பாலான சமயங்களில் இந்த 'அவுட் ரிஜிஸ்தரை' யாருமே பொருட்படுத்துவதில்லை. வார்டனும் இதை அதிகம் வற்புறுத்துவதில்லை.

     இன்று வார்டன் அதை விரித்து வைத்துக் கொண்டு அவளிடம், "நீங்கள் நூறு பேருக்கு மேல் வெளியே போயிருக்கிறீர்கள்! நீங்கள் போன நேரம், போன இடம், திரும்பின நேரம் எதைப் பற்றியும் இந்த ரிஜிஸ்தரில் எழுதவே இல்லை. 'எப்படி யாரைக் கேட்டுக் கொண்டு காம்பஸுக்கு வெளியிலே போய் அவங்க மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டினாங்க? விமன்ஸ் ஹாஸ்டல் அவுட் ரிஜிஸ்டரோட உடனே என்னை வந்து பாருங்க'ன்னு வி.சி. கூப்பிடறாரு. இப்ப நான் என்ன செய்யட்டும்?" என்றாள்.

     தன்னுடைய மௌனமும், பணிவும் வார்டனின் கோபத்தைத் தணிக்கும் என்று கண்ணுக்கினியாள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. தன்னையும் மாணவிகளையும் காப்பாற்றிக் கொள்ள வார்டனே அப்போது சாதுரியமாக ஒரு காரியம் செய்தாள். 'மாணவிகள் ஐந்து பேர் அடங்கிய குழுவாக ஷாப்பிங், திரைப்படம், சொற்பொழிவு ஆகியவற்றுக்காக விடுதியிலிருந்து வெளியே சென்று திரும்பலாம்' என்று மற்றொரு விடுதி விதியின்படி அவர்கள் 'ஷாப்பிங்'குக்காக வெளியே சென்றதாக ரிஜிஸ்தரில் பதிவு செய்து கொண்டாள் வார்டன். வெளியே சென்றவர்களில் யார் யார் மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள் என்பது பற்றித் தனக்குத் தெரியாது என்றும், தனக்குத் தெரிந்த விவரங்களின்படி பல்கலைக் கழக மாணவிகள் அல்லாத வேறு சில பெண்கள் கறுப்புக் கொடி பிடித்ததாகவும், அப்போது சில மாணவிகளும் அருகே நின்று வேடிக்கை பார்த்ததைத் தவிர வேறு குற்றம் எதுவும் செய்யவில்லை என்றும் பொய்யாக ஒரு விளக்கத்தையும் தயாரித்து எழுதி, "உன்னையும் உன் தோழிகளையும் காப்பாற்றுவதற்காக நான் இப்படி எல்லாம் புளுகித் தொலைக்க வேண்டியிருக்கிறது...! இந்தத் தடவை சரி. இனிமேல் இப்படி அடிக்கடி ஏதாவது நடந்தால் அப்புறம் நான் எதுவுமே உதவி செய்ய முடியாது" என்று சொல்லியபடியே அவளிடம் ரிஜிஸ்தரையும் துணைவேந்தருக்கு எழுதப்பட்ட தன்னுடைய விளக்கப் பதிலையும் காண்பித்தாள் வார்டன் அம்மாள். அந்த அம்மாளின் கண்டிப்பும் அதை ஒட்டிய வாஞ்சையும் கண்ணுக்கினியாளின் மனத்தில் நன்றி சுரக்கச் செய்தன. அவள் மனம் நெகிழ்ந்த வார்த்தைகளால் தன் நன்றியைத் தெரிவித்தாள். 'அவுட் ரிஜிஸ்தர்' விஷயத்தில் வார்டன் அப்படிப் புளுகி உதவி செய்திராவிட்டால் துணைவேந்தர் தன்னையும் வேறு சில மாணவிகளையும் அப்போதிருந்த ஆத்திரத்தில் பல்கலைக் கழகத்திலிருந்தே சஸ்பெண்டு செய்கிற அளவு போயிருப்பார் என்பதைக் கண்ணுக்கினியாளால் உணர முடிந்தது. கோபத்திலும் கண்டிப்பிலும் கூட இப்படி அழகான கோபங்களையும், அன்பான கண்டிப்புகளையும் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. எதையும் வெறுப்பதனால் சிலர் கோபப்படுகிறார்கள். எல்லாவற்றையும் நேசிப்பதனாலும் சிலர் கோபப்படுகிறார்கள். வளைவான வாத்தியத்தில் நேரான இசையைக் கிளரச் செய்கிறவர்களைப் போன்று பக்குவமானவர்களாக இருப்பதையும் அவள் பலமுறை பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கிறாள். துணைவேந்தர், பதிவாளர் போன்றவர்கள் வெறுப்புக்களால் கோபம் கொள்வதையும், பேராசிரியர் பூதலிங்கம், பெண்கள் விடுதி வார்டன் போன்றவர்கள் பிரியங்களால் கோபப்படுவதையும் அவள் தரம் பிரித்து உணர்ந்ததுண்டு. கையை ஓங்கி அறைய வருவது போல் ஆத்திரமாகத் தொடங்கிய வார்டன் அம்மாள், அரவணைத்துத் தழுவிக் கொண்டது போன்ற நேசத்துடன் அந்த விசாரணையை முடித்திருந்தாள்.

     மல்லிகைப் பந்தலுக்கு வந்த மந்திரிக்கு மாணவிகள் கறுப்புக் கொடி காட்டிய மறுதினம் காலைப் பத்திரிகைகளில் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரி மாணவி 'மேரிதங்கத்தின் தற்கொலை' பற்றி விசாரிக்க நியமிக்கப் பட்டிருந்த நீதி விசாரணை முடிவு வெளியாகியிருந்தது. எதிர்பார்த்தது போலவே விசாரணை முடிவு கண் துடைப்பாக இருந்தது. மணவாளனும், பாண்டியனும் தயாரித்து அனுப்பியிருந்த மாணவர்களின் சாட்சியங்கள், தஸ்தாவேஜுகள், மேரிதங்கத்தின் கடிதம் எல்லாமே பயனற்றுப் போயிருந்தன. அமைச்சர் கரியமாணிக்கத்தின் நாற்பத்தொன்பதாவது பிறந்த நாளன்று - நாற்பத்தொன்பது ஆப்பிள்களைக் கொண்டு போய்க் கொடுத்து மாலை போடுவது, அவரைப் புகழ் பாடுவது போன்ற காரியங்களால் நீதிபதியாக உயர் பதவி பெற்ற ஒருவரைத்தான் அந்த விசாரணைக்கு நியமித்திருந்தது அரசாங்கம். அதனால் தீர்ப்பும் பாரபட்சமாகவே இருந்தது. பதவியில் இருப்பவர்களைப் புகழ்ந்து துதி பாடுவதன் மூலமே நீதிபதிகளாக உயர்வு பெறும் மனிதர்களிடமிருந்து நீதியும் ஒழுங்காகக் கிடைக்க முடியாது என்று நிரூபிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்களை அந்த ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் கண்ணாரக் கண்டிருந்தார்கள். 'தூக்கத்தில் நடக்கும் வியாதியால் தவறிக் குளத்தில் விழுந்து மரணம் நேர்ந்தது' என்றே மேரிதங்கம் பற்றிய விசாரணையில், தீர்ப்பு வந்திருந்தது. தற்கொலை செய்து கொள்வதாக அவளே எழுதி வைத்திருந்த கடிதம் - அவள் எழுதியது தான் என நிரூபிக்க முடியாமல் அவள் கையெழுத்தை ஒத்த எழுத்துக்களில் வேறு யாரோ எழுதியது போல் தோன்றுகிறது என்று அந்த வலுவான சாட்சியம் நிராகரிக்கப்பட்டிருந்தது. மந்திரிகளின் வீடு தேடிப் போய் அவர்களுக்கு மாலையிட்டு வணங்கக்கூடிய நீதிபதிகளும், ஏதாவது வழக்குக்காக மந்திரிகள் நீதிமன்றம் வந்தாலும் பயந்து எழுந்து நிற்கக் கூடிய நீதிபதிகளும் நிறைந்துவிட்ட நீதிமன்றத்திலிருந்து நீதியும் முறையாகக் கிடைக்காது என்பதை அந்தச் சம்பவம் விளக்கிவிட்டது. சட்டங்கள் உருவாகும் இடங்களும் ஒழுங்கற்றுப் போய்விட்ட சமூகத்தில் மக்கள் கொந்தளித்து எழுவது ஒன்றே நியாய மார்க்கமாக மீதம் இருக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்கிற காலமாக அது இருந்தது. இந்த விசாரணைக்காக அரசாங்கமே தனக்குச் சாதகமான தன்னால் பதவி உயர்வு பெற்ற ஒரு நீதிபதியைத் தேடி நியமித்திருந்தது தான் இதற்குக் காரணம்.

     அந்த நீதிபதி சட்ட மந்திரி வெளியூர் போகும் போதெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்குப் போய் எல்லாரையும் போல் கைகூப்பி நின்று அவரை வழியனுப்புகிற அளவு தரம் இறங்கிவிட்டவர். சட்ட மந்திரி வீட்டுத் திருமணத்துக்கு இரண்டு பவுனில் இரண்டு தனித்தனி மோதிரங்கள் செய்து கொண்டு போய் மணமக்களுக்கு அவற்றைப் பரிசு தந்தவர். சட்ட மந்திரி கூப்பிட்டு வந்து பார்க்கச் சொன்னால் இரகசியமாக வீடு தேடிப் போய் அவரைப் பார்க்கிறவர். இவை ஊரறிந்த விஷயங்களாகியிருந்தன. நீதிமன்றங்களிலிருந்து நீதி கிடைக்காத அல்லது காலதாமதமாகக் கிடைக்கிற காலங்களில் மக்கள் அவற்றை விரைவான வேறு மார்க்கங்களில் தேட முயலுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு விடுவார்கள். அந்த நிர்ப்பந்தமே பிறகு ஒரு நியாயமாகிவிடுவதும் உண்டு. 'எல்லா நீதி நியாயங்களும் பொய்த்துப் போகிற போது நீதி நியாயங்களே பொய் என்று பிரகடனப் படுத்திய ஓர் அநீதி மூலம் தான் நீதி நியாயங்களைத் தேட நேரிட்டு விடும்' என்று தீவிரமான கோபம் கொண்ட மாணவர்கள் ஒருவருக்கொருவர் கொதிப்போடு பேசிக் கொண்டார்கள். அந்த விசாரணை முடிவை எதிர்த்து மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக மாணவர்கள் ஒருநாள் முழுவதும் கறுப்புச் சின்னமணிந்து வகுப்புக்களைப் புறக்கணித்தார்கள். பல்கலைக் கழக சின்னத்தைப் போல் கரிக்கட்டியால் சுவரில் வரைந்து அதில் 'வித் ட்ரூத் அண்ட் விஸ்டம்' என்ற கொள்கை வாசகம் இருக்க வேண்டிய இடத்தில் 'வித் கரப்ஷன் அண்ட் ஃப்ராட்' என்று ஆங்கிலத்தில் மாற்றி எழுதினான் ஒரு தீவிரவாதியான கோபக்கார மாணவன்! 'நீதிக்கு நமது அனுதாபங்கள்! அது இன்றைய தினம் செத்துவிட்டது' என்று துணைவேந்தர் அலுவலகத்தின் பிரதான சாலையில் வெள்ளை சாக்பீஸால் பெரிதாக எழுதி வைத்தான் மற்றொரு மாணவன். பல்கலைக் கழக உட்புறச் சாலைகளும், சுவர்களும் அன்று வாசகங்கள் மயமாக மாறின. நிலைமை மறுபடியும் சரியாக நாலைந்து நாட்கள் ஆயின.

     இதை ஒட்டிப் பட்டமளிப்பு விழா நாள் மறுபடியும் சில வாரங்கள் தள்ளிப் போடப்பட்டது.

     நீதி விசாரணை முடிவு பற்றிய பரபரப்புத் தணிந்ததும் மாணவர்கள் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் நேரு விழாக் கொண்டாடினார்கள். சோஷியாலஜி பேராசிரியர் வீரராகவன் தலைமையில் ஒரு விவாத அரங்கம் நடைபெற்றது. மாணவர் பேரவையின் சார்பில் மோகன்தாஸ் தொடக்க உரை நிகழ்த்திய பின் பாண்டியன் தலைமையில் ஆறு மாணவர்கள் 'நேருவின் சமதர்ம சமுதாயத்தை அமைக்கும் ஆசை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது' என்றும் கண்ணுக்கினியாள் தலைமையில் ஆறு மாணவிகள் 'அது அவர் கால்த்தில் வெற்றி பெறவில்லை' என்றும் கட்சி பிரித்துக் கொண்டு விவாதித்தார்கள்.

     "இந்தியா தனது வறுமையையும் ஏற்றத் தாழ்வுகளையும் ஒழிக்க விரும்பினால் சமதர்ம வழியிலேதான் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் அது அந்த இலட்சியத்தைத் தன் மேதைத் தன்மைக்குரிய முறையில் அமைத்துக் கொண்டு தன் சொந்த வழிகளையும் வகுத்துக் கொள்ளும். நமது பொருளாதாரத் திட்டம் மானிட நலனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்" என்று 1929-இல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைமை உரையிலேயே நேரு கூறியதைச் சுட்டிக்காட்டி விவாதித்தான் பாண்டியன். உடனே கண்ணுக்கினியாள் அதை எதிர்த்து விவாதித்தாள். "நேரு எதைச் சுட்டிக் காட்டினார் என்பதல்ல விவாதம். அதை அவர் காலத்தில் நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்பதுதான் கேள்வி. அதை நண்பர் பாண்டியன் விளக்கவே இல்லை..." என்று அவள் பாண்டியனை மறுத்துப் பேசிக் கொண்டிருந்த போது 'ஈவ் டீஸிங்கில்' ஆசையுள்ள யாரோ ஒரு குறும்புக்கார மாணவன் ஒரு சரம் பட்டாசைக் கொளுத்தி மேடையில் மைக்கைக் குறிவைத்து வீசினான். அது டபடபவென்று வெடித்தபடி தலைமை வகித்த பேராசிரியரின் மேஜை மேல் போய் விழுந்தது. மேலும் அந்தப் பட்டாஸ் சரம் வெடிப்பதற்குள் மாணவர்களின் கை தட்டல் சிரிப்பொலிகளிடையே அதை மேஜை விரிப்புத் துணியால் அமுக்கி மூடி விரைந்து அணைத்துவிட்டார் தலைமை வகித்த பேராசிரியர்.

     "நாம் வார்த்தைகளால் விவாதிக்கவே இங்கு கூடியிருக்கிறோம். வெடிகளால் அல்ல" என்று கண்ணுக்கினியாள் மேலே பேச்சைத் தொடர்ந்த போது மாணவிகள் கைதட்டி, 'ஹியர்', 'ஹியர்' என்று உற்சாகக் குரலெழுப்பினார்கள். "அடிப்படையிலேயே மாற்றம் பெறுவது சமதர்மத்தில் அடங்கியுள்ள முக்கியமான கருத்து. அது உடனே முடியக் கூடியதன்று. இதற்குப் போதிய காலம் தேவை" என்று நேருவே லோதியன் பிரபுவுக்கு எழுதிய கடித வாசகம் ஒன்றைக் கண்ணுக்கினியாள் சான்றாகக் காட்டி, "இப்படி எழுதியிருப்பதன் மூலம் தம் காலத்துக்குள் அந்தச் சாதனை நிறைவாக முடியாது என நேருவே கருதியிருக்கிறார். 1936-இல் இப்படி அவர் எழுதினாலும் அவர் ஆண்ட கால நிலைமையும் அதுவாகவே இருந்தது" என்று விளக்கிப் பாண்டியனை மறுத்தாள். கைதட்டல் மாணவிகள் பக்கம் மீண்டும் பலமாயிருந்தது.

     அடுத்துப் பாண்டியன் கட்சியில் தொடர்ந்து விவாதிக்க வந்த மாணவன், "எனக்கு முன் பேசிய எதிர்க்கட்சித் தலைவி கண்ணுக்குத்தான் இனியவரே ஒழியக் கருத்துக்கு இனியவரல்ல என்பதை அவரது பேச்சின் மூலமே நிரூபித்துக் காட்டிவிட்டார்" - என்று தொடங்கிய போது மாணவர்கள் தரப்பின் கைத்தட்டல்கள் அரங்கத்தை அதிர வைத்தது. அடுத்து கண்ணுக்கினியாளின் கட்சியில் தொடர்ந்து விவாதித்த மாணவி, "எதிர்க்கட்சித் தலைவரின் பெயரோ பாண்டியன். மன்னர் பரம்பரையின் ஒரு பெயர் அது. மன்னர் பரம்பரையினரின் பெயரையுடைய ஒருவர் சமதர்மத்தைப் பற்றி வாதிட வருவதே ஏமாற்று வேலை அல்லவா?" - என்று சாடியதும் மாணவிகள் ஆவேசமாகக் கைதட்டினார்கள். கைதட்டல் ஓய இரண்டு நிமிஷங்கள் ஆயின. இதற்கு நடுவில் பொறுமை இழந்த தலைவர் மெல்ல எழுந்து, "விவாதத்துக்குக் கொடுத்திருக்கும் தலைப்பை எல்லோருமே மறந்து விட்டு வேறு எவற்றையோ பேசுவதாகத் தெரிகிறது. தலைப்பை மீண்டும் எல்லோருக்கும் நினைவூட்டுகிறேன்" என்று தொடங்கி விவாதத் தலைப்பை நினைவூட்டிக் குறுக்கிட்டுப் பேசினார்.

     இரண்டு மணி நேரம் விவாதம் தொடர்ந்தது. முடிவில் பாண்டியனும் கண்ணுக்கினியாளும் தங்கள் தங்கள் கட்சி விவாதங்களைத் தொகுத்துரைத்தார்கள். தலைவர் இருதரப்பு விவாதங்களையும் அலசி ஆராய்ந்து அரைமணி நேரம் பேசிய பின், "நேரு விரும்பும் சமதர்ம இந்தியா அவர் காலத்திலேயே முழுமையாக உருவாகவில்லை" என்று கண்ணுக்கினியாள் கட்சிக்கு வெற்றியாகத் தீர்ப்பளித்தார். மறுபடியும் தலைவரின் மேஜை மீது ஒரு பட்டாஸ் கட்டு வந்து விழுந்து வெடிக்கத் தொடங்கியது. மாணவிகள் டெஸ்க்கில் கை ஓய்கிறவரை உற்சாகமாகத் தட்டினார்கள். காலை பத்து மணிக்குத் தொடங்கிய விவாதம் பகல் ஒரு மணியளவிலேயே முடிந்தது. இந்த விழாவுக்காக அன்று பல்கலைக் கழகத்தில் விடுமுறையைக் கோரி வாங்கியிருந்தார்கள் பல்கலைக் கழக மாணவர்கள்.

     அன்று பிற்பகல் அண்ணாச்சி தம் கடை வாசலில் நேரு விழாவுக்காக ஒரு பொதுக் கூட்டமும் ஏற்பாடு செய்திருந்தார். அதற்கும் பாண்டியன் பேசப் போக வேண்டியிருந்தது. அண்ணாச்சி ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்திலோ, கூட்டம் நடப்பதற்கு முன்போ மல்லை இராவணசாமியின் ஆட்கள் ஏதாவது கலகம் செய்வார்களோ என்று ஒரு சந்தேகம் இருந்தது. அர்த்தால் ஊர்வலத்தன்று கோட்டம் குருசாமியின் கடை தாக்கப்பட்டது, இராவணசாமியின் வீட்டு முன் மாணவர்கள் மறியல் செய்தது, அதற்கும் முன்னால் அவருக்குச் சொந்தமான லாரிகளை மடக்கிப் பல்கலைக் கழக எல்லைக்குள் நிறுத்திக் கொண்டது, இதனால் எல்லாம் ஆத்திரம் அடைந்திருந்த அந்தக் கட்சியினர் பாண்டியனையும் அவனோடு முக்கியமாயிருந்த மாணவப் பிரமுகர்களையும், அவர்களுக்குப் பாதுகாவலாயிருக்கும் அண்ணாச்சியையும், முரடர்களைக் கொண்டு தாக்கிவிடத் துடிதுடித்துக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது. இராவணசாமி முதலியவர்களுக்குப் பாண்டியன் மேலும் அண்ணாச்சி மேலும் இருந்த கோபம் முற்றி வெறியாக வளர்ந்திருந்தது. அடிதடிகளில் இறங்கக் கூட அவர்கள் தயாராக இருந்தார்கள். அண்ணாச்சியே இதுபற்றிப் பாண்டியனிடம் பலமுறை சொல்லி எச்சரித்திருந்தார். பாண்டியன் அவர் எச்சரித்த போதெல்லாம் அந்த எச்சரிக்கையைக் கேட்டுக் கொண்டானே ஒழிய அப்படி எதுவும் தனக்கு ஏற்பட்டு விட முடியும் என்று நினைத்து அஞ்சவில்லை.

     பல்கலைக் கழக நேரு விழாப் பட்டிமன்றம் முடிந்து மெஸ்ஸுக்குப் போய்ப் பகல் உணவை முடித்துக் கொண்டு அறைக்கு வந்து ஒரு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்ட பின் மூன்று மணிக்கு அண்ணாச்சிக் கடைக்குப் புறப்பட்டான் பாண்டியன். வேறு சில மாணவர்களும் உடன் வந்தனர். அவன் புறப்படும் போது கண்ணுக்கினியாளின் ஃபோன் வந்தது. 'பெண்கள் விடுதியில் வெளியே போவது வருவதில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருப்பதால் தான் அப்போதே அண்ணாச்சிக் கடைக்கு வரமுடியாமல் இருப்பதாகவும் மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை வெளியே வருவதற்கு மட்டும் சிரமப்பட்டு அனுமதி பெற்றிருப்பதாகவும்' கூறினாள் அவள்.

     "நீ ஏன் வீணாகச் சிரமப்படணும்? நீ வர வேண்டாமே! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்றான் அவன். அவளுக்கு அவன் சொல்லியதைக் கேட்டுக் கோபமே வந்துவிட்டது.

     "நான் உங்கள் பேச்சைக் கேட்க வருவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுங்களேன். சிரமம் கிரமம் என்று இதெல்லாம் என்ன வார்த்தையென்று பேசுகிறீர்கள்?"

     "அதுதான் எனக்குப் பேசத் தெரியவில்லை என்பதைக் காலையில் நேரு விழாப் பட்டிமன்றத்தில் வெற்றி பெற்றதன் மூலமே நீ நிரூபித்து விட்டாயே?"

     "பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நீங்கள் இப்படியெல்லாம் சொல்லிக் காட்டுவீர்கள் என்று தெரிந்திருந்தால் நான் அந்தப் பட்டிமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உங்களை எதிர்த்துப் பேசியே இருக்க மாட்டேன். நம்மில் யார் ஜெயித்தல் என்ன? நான் ஜெயித்தாலும் நீங்கள் தான் ஜெயிக்கிறீர்கள். நீங்கள் ஜெயித்தாலும் அதனால் நான் தான் ஜெயிக்கிறேன். நமக்குள் வெற்றி தோல்வி ஏது? நீங்கள் இப்படிப் பிரித்துப் பேசலாமா?" என்று அவள் அவனைப் பதிலுக்குக் கேட்கவே அவன் மனம் இளகினான். அவளைச் சமாதானப்படுத்தவும் முயன்றான். மாலையில் நடைபெறுகிற நேரு விழாப் பொதுக் கூட்டத்துக்குக் கண்டிப்பாக அவளை வரச் சொன்னான். அவளும் சிறிது நேரம் சொற்பொழிவாற்றிவிட்டு அப்புறம் திரும்ப வேண்டிய நேரத்துக்குள் விடுதிக்குத் திரும்பி விடலாம் என்றும் கூறினான். அப்புறம் தான் அவள் மகிழ்ச்சியோடு அவனிடம் பேசி ஃபோனை வைத்தாள்.

     அண்ணாச்சிக் கடைக்குப் புறப்படுவதற்கு முன் கதிரேசன் அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போயிருக்க வேண்டும் என்று நினைவு வந்தது. அவனைப் போய்ப் பார்த்துவிட்டு அப்புறம் அண்ணாச்சியின் கடைக்குப் போகலாம் என்று சொன்னார்கள் உடனிருந்த மாணவர்கள்.

     பாண்டியன் முதலிய மாணவர்கள் கதிரேசனின் வீட்டுக்குச் செல்லும் போது மல்லை இராவணசாமியின் கட்சி அலுவலகம் இருந்த பாதையாகப் போக வேண்டியிருந்தது. அந்தக் கட்சி அலுவலக வாயிலில் இராவணசாமியின் ஆட்கள் பத்து பதினைந்து பேர் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். மாணவர்களைப் பார்த்ததும் அவர்கள் முறைத்தார்கள். சிலர் சில வகை மொழிகளையும் மாணவர்கள் காது கேட்கும்படியே வேண்டுமென்று இரைந்து சொன்னார்கள். பாண்டியனோ மற்ற மாணவர்களோ அதைப் பொருட்படுத்தாமலே அந்த இடத்தைக் கடந்து போய்விட்டார்கள். கதிரேசன் நன்றாகக் குணமடைந்து வீட்டு வாசலில் தோட்டத்திலேயே உலாவிக் கொண்டிருந்தான். மாணவ நண்பர்களை அன்போடு வரவேற்று அமரச் செய்து பருகுவதற்குத் தேநீர் கொடுத்துப் பேசிக் கொண்டிருந்தான் அவன்.

     "நான் ஓடியாடித் திரியறவன். பத்து நாளைக்கு மேலே படுத்த படுக்கையா இருந்தது போரடிச்சு போச்சு. நாளைக்கே யுனிவர்ஸிடிக்கு வந்திடலாம் போலத் துடிப்பா இருக்கு" என்றான் கதிரேசன். அப்போது ஒரு மாணவன் குறுக்கிட்டான்:

     "நீ வந்து 'நேருவின் சமதர்ம சமுதாயத்தை அமைக்கு ஆசை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது'ங்கிற கட்சியிலே அண்ணனோட அணியிலே பேசியிருந்தியின்னா இன்று அண்ணன் கட்சி தோற்காமல் பிழைத்திருக்கும்..."

     "கேள்விப்பட்டேன்! அண்ணனுக்கு இது தோல்வியே இல்லை. எந்த எதிர்க்கட்சி ஜெயிச்சிருக்கோ அந்த எதிர்க் கட்சித் தலைவியே அவர் கட்சிங்கிற இரகசியம் உனக்குத் தெரிஞ்சிருந்தா இப்படிச் சொல்லமாட்டே நீ! என்ன நான் சொல்றது சரிதானே பாண்டியன்?" என்று கதிரேசன் குறும்புத்தனமாகக் கண்களைச் சிமிட்டியபடி பாண்டியனைப் பார்த்துச் சொன்னான். மற்ற மாணவர்கள் ஓர் உற்சாகத்தில் கை தட்டினார்கள்.

     பதினைந்து நிமிஷங்களுக்கு மேல் கதிரேசனோடு பேசிவிட்டு அவர்கள் அண்ணாச்சிக் கடைக்குச் செல்வதற்காக அதே பாதை வழியாகத் திரும்பிய போது இராவணசாமியின் கட்சி அலுவலக வாசலில் நின்ற அந்தக் கூட்டத்தைக் காணவில்லை. ஆனால் இரண்டு தெருக்களைக் கடந்து அண்ணாச்சிக் கடைக்கு நேரே சாலை திரும்புகிற இடம் வந்ததும் இந்த மாணவர்களில் யாருமே எதிர்பாராத விதமாகக் கத்தி, கம்பு, சைக்கிள் செயின், அரிவாள்களோடு ஒரு கூட்டம் இவர்களை எதிர்த்துத் தாக்குவதற்குப் பாய்ந்தது. அந்த முரட்டுக் கூட்டத்தில் சற்று முன் இராவணசாமி கட்சி அலுவலக வாசலில் இவர்கள் பார்த்த ஆட்களும் இருப்பதை அடையாளம் காண முடிந்தது. தாக்க வந்த கூட்டத்தைக் கண்டதுமே இந்த மாணவர்கள் போட்ட கூப்பாட்டில் அண்ணாச்சிக் கடை முன்பு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தவர்களும் அங்கே கூடியிருந்த மற்ற மாணவர்களும் அண்ணாச்சியும் ஓடி வரவே தாக்க வந்தவர்கள் நழுவி மறைந்து விட்டார்கள். இல்லையானால் இரத்தக் கலகம் ஒன்று அன்று அங்கே நடந்திருக்கும். அண்ணாச்சி பாண்டியனைக் கண்டித்து எச்சரித்தார். மாலை ஐந்தே கால் மணிக்குக் கண்ணுக்கினியாளும், சில மாணவிகளும் கூட்டத்துக்கு வந்தார்கள். கூட்டம் தொடங்கியதுமே கண்ணுக்கினியாள் முதலிய பெண்கள் முதலில் சொற்பொழிவு செய்துவிட்டார்கள். அவர்கள் விடுதிக்குத் திரும்ப இருந்த போது, கண்ணுக்கினியாளையும் பாண்டியனையும் மட்டும் கடையின் முன் பகுதிக்குத் தனியே கூப்பிட்டுக் கொண்டு போனார் அண்ணாச்சி. கடை முகப்புக்கு அழைத்துச் சென்று, "சாயங்காலம் இங்ஙனே கடைக்கு எதிரே என்ன நடந்திச்சு தெரியுமில்லே...? தம்பியை நீதான் எச்சரிக்கணும், தங்கச்சீ" என்று தொடங்கி இராவணசாமியின் கட்சி ஆட்கள் மாணவர்களைத் துரத்தித் தாக்க வந்ததை அவளிடம் விவரித்தார். அதைக் கேட்டு அவள் பதறினாள். 'நீங்கள் இப்படிச் செய்யலாமா?' என்று கேட்பது போல் பாண்டியனை அன்பு கலந்த கோபத்தோடு கண்டிக்கும் பாவனையில் ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.

     "தங்கச்சியை நினைச்சாவது இனிமே நீ அபாயங்களைப் பற்றிக் கவலைப்பட்டு எச்சரிக்கையா இருக்கணும் தம்பி! தங்கச்சி உன்மேலே உசிரையே வச்சிருக்கறப்ப அது பதறிப் போற மாதிரி நீ நடந்துக்கிடக் கூடாது... நம்மைப் பற்றிக் கவலைப்படறவங்க கவலைப்படுவது அதிகமாகிறதுக்கு நாமே காரணமாக இருந்திட்டா எப்படி? நீ பாதுகாப்பு இல்லாமே தனியா எங்கேயும் சுற்றக் கூடாது. கொலை வெறியோட எதிரிங்க அலையறாங்க. உன்னைச் சுற்றிலும் உனக்கு எத்தினி பகைமை, விரோதம், குரோதம் எல்லாம் இருக்குன்னு உனக்கே தெரியாது தம்பீ! வேணும்னே தான் தங்கச்சியைப் பக்கத்திலே வைச்சுக்கிட்டு இதையெல்லாம் உங்கிட்டச் சொல்றேன். உன் வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படற அதிகப் பொறுப்பு உன்னைவிட அதுங்கிட்டத் தானே இருக்க முடியும்?" என்று அவளையும் அருகே வைத்து கொண்டே பாண்டியனை எச்சரித்தார் அண்ணாச்சி.