இருபத்து ஆறாவது அத்தியாயம்

     நகரில் பல பகுதிகளிலிருந்தும் பல்கலைக் கழக எல்லைக்குள் வரும் டவுன் பஸ் ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் பலமுறை மோதல்கள் வந்திருக்கின்றன. எல்லா மோதல்களுக்கும் ஒரு சிறிய பூசலே காரணமாயிருக்கும். முடிவில் எப்படியோ அது வளர்ந்து பெரிய அடிதடியாகிவிடும். பல்கலைக் கழகத்துக்கு வரும் பஸ் போக்குவரத்து மல்லை இராவணசாமிக்கு உரியதாகிய பின் இந்த மோதல்கள் மிகவும் அதிகமாயிருந்தன. முன்பு ஒருமுறை இப்படி ஒரு பூசல் நடந்த போது மாணவர்களுக்கும், பஸ் ஊழியர்களுக்கும் மூண்ட போரில் மாணவர்கள் மேல் மட்டும் தடியடிப் பிரயோகம் நடந்தது. அந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்குப் பின் அமைச்சர் கரியமாணிக்கம், மல்லை இராவணசாமியின் பஸ்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் தொழிலாளர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தில் பேசும் போது "இந்த அரசு உங்கள் அரசு! ஒரு வாரத்துக்கு முன் உங்களிடம் வம்பு செய்த மாணவர்களுக்குத் தடியடி கிடைத்தது. உங்களுக்கோ அதனால் நியாயம் கிடைத்தது" என்று ஏதோ தத்துப் பித்தென்று உளறிப் பேசி அது எதிர்க்கட்சிப் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்து விட்டது. அந்தப் பேச்சிலிருந்த மாணவர் விரோதப் போக்கை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள மாணவ சமூகம் கொதித்து எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த மந்திரி எந்த ஊருக்குப் போனாலும் மாணவர்கள் 'ஒழிக' கோஷத்துடனும், கறுப்புக் கொடிகளுடனும் அவரை எதிர்த்தார்கள். சில மாதங்கள் வரை எங்கும் மாணவர்களுக்கு முன் அந்த அமைச்சர் தலை காட்ட முடியாமலே இருந்தது. அப்போது மணவாளன் தான் மாணவர் தலைவராயிருந்தார். அந்தப் போரை அவர் முன்னின்று நடத்தியிருந்தார்.

     இப்போது மாணவி பத்மாவுக்கு பஸ்சில் ஏற்பட்ட அநுபவத்திலிருந்தும் ஒரு பெரிய போராட்டம் விளைந்து அதனாலேயே பட்டமளிப்பு விழா நாலைந்து மாதங்களுக்குத் தள்ளிப் போய்விடுமோ என்று நினைத்தான் பாண்டியன். ஆனால் இரு பக்கத்து உண்மையும் தெரியாமல் அதை அவன் பெரிதாக்க விரும்பவில்லை. பட்டமளிப்பு விழாவின் போது மாணவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை அறியவும், தடுக்கவும் துணைவேந்தர் தவிப்பதையும் கூட அவன் புரிந்து கொண்டிருந்தான். அரசாங்கமோ எப்படியாவது மாணவர்களை அமைதியடையச் செய்ய முயல்வதாகத் தெரிந்தது. ஊர்வலத்தன்று பஜார் ரோடு ஹோட்டலில், முரட்டுத்தனமாக நடந்து கொண்டவர்களில் சிலரைக் கைது செய்து போலீஸார் வழக்குத் தொடர்ந்திருந்தார்கள். மாணவர்கள் மேல் தடியடிப் பிரயோகம் நடந்ததைப் பற்றி நீலிக் கண்ணீர் வடித்து விட்டு ஒரு நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டிருந்தது அரசாங்கம். மாணவர்கள் மேல் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. வரப்போகிற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கரியமாணிக்கம் டாக்டர் பட்டம் பெறும் போது மாணவர்களால் எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்பதையும் மனத்தில் வைத்துக் கொண்டு அரசாங்கமும் பல்கலைக் கழக நிர்வாகமும் காரியங்களைச் செய்வது புரிந்தது. ஆனாலும் துணைவேந்தர் ஊர்வலத்தில் ஹோட்டல் முன் சோடாப்புட்டி வீச்சினால் காயமடைந்த மாணவர்களையோ, தடியடிப் பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களையோ சந்தித்து ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூடச் சொல்லவில்லை. மாணவர்கள் காரணமின்றித் தாக்கப்பட்டது பற்றி வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. தன்னையும், மோகன்தாஸையும் கூப்பிட்டுப் பேசிய போது கூட அவர் அனுதாப வார்த்தைகள் எதையும் தங்களிடம் கூறவில்லை என்பதை நினைத்த போது பாண்டியனுக்கு வருத்தமாக இருந்தது. இந்த நிலையில் 'பல்கலைக் கழக எல்லைக்குள் வரும் டவுன் பஸ் ஊழியர்களில் சிலர் மாணவ மாணவிகளிடம் முறையின்றி நடந்து கொள்கிறார்கள்' என்பதைத் துணைவேந்தரிடம் புகார் செய்து அதன் மூலம் பரிகாரம் தேட முடியாது என்பது அவனுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. இதைப் பற்றிச் சிந்தித்தபடியே வகுப்புக்குப் போனான் அவன். முதற் பாடவேளை ஆங்கில வகுப்பு விரிவுரையாளர் காமாட்சிநாதன். ஷேக்ஸ்பியரைக் கரைத்துக் குடித்தவர். சாவி கொடுத்த யந்திரம் போல் நாற்பத்தைந்து நிமிஷம் சொற்பொழிவு செய்வார். கடைசிப் பதினைந்து நிமிஷங்களில் பத்து நிமிஷம் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் அவரைக் கேள்வி கேட்கலாம். ஆனால் கேள்விகள் கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் கேட்கப்படுகிற கேள்வியின் வாக்கிய அமைப்புப் பிழையாக இருந்தாலோ அதையே பிடித்துக் கொண்டு அந்தப் பையனை வம்பு செய்வார் என்பதனால் அவரிடம் கேள்வி கேட்க முக்கால்வாசி மாணவர்களுக்குப் பயம். கடைசி ஐந்து நிமிஷம் அட்டெண்டன்ஸ் எடுப்பார். அதோடு வகுப்பு முடிந்து விடும். கடுமையான லத்தீன் வார்த்தைகளைக் கலந்து சீஸர் காலத்து ஆங்கிலம் போல் மாணவர்கள் மிரளும் ஆங்கிலத்தில் அவர் 'லெக்சரை' நடத்தும் போது சில மாணவர்களுக்குத் தூக்கம் கூட வரும். தூங்குகிற ஒரு மாணவனை அவர் பார்த்துவிட்டாலோ வகுப்பில் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு விரிவுரையின் நடுவே, "லுக் அட் மீ அண்ட் ஹியர் வாட் ஐ ஸே... அதர்வைஸ் யூ வில் பி தி லூஸர்" என்று இரைந்து கத்துவார் அவர். அதற்குப் பயந்து புத்தகத்தைக் கோட்டைச் சுவர் போல் டெஸ்க்கில் நிறுத்தி வைத்து அந்த மறைவில் முகம் புதைத்துத் தூங்குபவர்களும் உண்டு. சில சமயங்களில் அவரே விரிவுரை முடிந்ததும் தமக்குத் தாமே சிரித்தபடி, "கும்பகர்ணங்க இனிமே முழிச்சுக்கலாம். லெக்சர் இஸ் ஃபினிஷ்ட். நௌ யூ மே ஆஸ்க் க்வஸ்ச்சின்ஸ்" என்று கூறுவதும் உண்டு.

     அன்றைய வகுப்பில் 'நவீன ஆங்கில இலக்கியம்' பற்றி ஒரு சொற்பொழிவு செய்தார் காமாட்சிநாதன். முக்கால் மணி நேரம் ஓடியது தெரியவில்லை. வகுப்பு முடிந்ததும் அடுத்த வகுப்புக்குப் போவதற்கு முன் காப்பி குடிப்பதற்காகப் பாண்டியனும் வேறு நாலைந்து மாணவர்களும் காண்டீன் பக்கம் போய் வந்தார்கள். அப்போது காண்டீனில் வேறு நாலைந்து மாணவிகளோடு மீண்டும் அந்த பி.எஸ்.ஸி. மாணவி பத்மாவைச் சந்தித்தான் அவன். அவளிடம் வம்பு செய்யும் பஸ் கண்டக்டர் பற்றிச் சக மாணவர்களிடம் அவன் தெரிவித்த போது அந்த மாணவர்களில் உள்ளூர்வாசிகள் சிலரும் பஸ் ஊழியர்களிடம் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பாண்டியனிடம் சொல்லத் தொடங்கினார்கள். குறிப்பாக மல்லை இராவணசாமியின் பஸ்களில் அவர் தம் கட்சி ஆட்களாகவே வேலைக்கு வைத்திருந்ததால் இப்படி அடிக்கடி தகராறுகள் வருவதாக மாணவர்கள் தெரிவித்தார்கள்.

     இப்பேச்சு சுவாரஸ்யத்தில் அவர்கள் காண்டீனில் சிறிது நேரம் அதிகமாகத் தாமதித்துவிடவே அடுத்த வகுப்பு காலந்தாழ்த்திப் போக நேர்ந்தது. அது பேராசிரியர் பூதலிங்கத்தின் பொருளாதார வகுப்பு. அவருடைய வகுப்புக்குத் தாமதமாகப் போய் நுழைவது மாணவர்களுக்கே பிடிக்காத காரியம். பாண்டியனும் மற்ற மாணவர்களும் பேராசிரியரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தார்கள். 'கரன்ஸி அண்ட் பேங்கிங்' பற்றி விரிவுரை நடந்து கொண்டிருந்தது. வகுப்பு முடிந்து வெளியேறும் போது, "பாண்டியன்! முடிந்தால் மூன்று மணிக்கு என்னை டிபார்ட்மெண்ட் அறையில் வந்து பார்" என்று சொல்லிவிட்டுப் போனார் பேராசிரியர் பூதலிங்கம். பகல் உணவுக்குப் பின் அறைக்குப் போய்ச் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிற்பகலில் முதல் வகுப்பாகிய தமிழ் வகுப்புக்குப் போனான் பாண்டியன். அன்று முத்து மாணிக்கம் என்ற புது விரிவுரையாளர் வந்தார். வகுப்பை முப்பதாவது நிமிஷத்திலே முடித்து மாணவர்களைப் போகச் சொல்லிவிட்டார் அவர். இரண்டே முக்கால் மணிக்கே 'எகனாமிக்ஸ் டிபார்ட்மெண்ட்' மாடிக்குப் போய் பூதலிங்கம் சாரைப் பார்க்க வசதியாயிருந்தது பாண்டியனுக்கு. பேராசிரியர் அவனை அன்போடு வரவேற்று உட்காரச் சொன்னார். பியூனைக் கூப்பிட்டு இரண்டு டீ வாங்கி வரச் செய்து அவனுக்கும் கொடுத்துத் தாமும் குடித்த பின் மெல்லப் பேச்சைத் தொடங்கினார். "பாண்டியன்! இது நமக்குள்ளே இருக்கட்டும்! என் காதிலே விழுந்ததை உன்னிடம் சொல்லிவிடலாம் என்று தோன்றியது. பட்டமளிப்பு விழாவுக்குள்ளே மாணவர்களில் யார் யார் இயக்கங்களுக்கும், போராட்டங்களுக்கும் காரணமான 'ரிங் - லீடர்ஸோ' அவங்களை எல்லாம் ஏதாவது குற்றம் சாட்டி 'சஸ்பெண்ட்' செய்வது, அல்லது போலீஸ் கேஸில் மாட்டிவிட்டுப் பட்டமளிப்பு விழா முடிகிற வரை உள்ளே தள்ளிவிடுவது என்ற ஏற்பாட்டில் இங்கே காரியங்கள் இரகசியமாக நடக்கின்றன. நீயும், உன் சகாக்களும் கவனமாக இருக்க வேண்டும். இதைச் சொல்வதற்காகத்தான் வரச் சொன்னேன். நீங்கள் நடத்திய கண்டன ஊர்வலங்களில் பெருவாரியான ஆசிரியர்களைக் கலந்து கொள்ளச் செய்தேன் என்பதனால் என் மேலேயே வி.ஸி.க்கு ரொம்பக் கோபம். எனக்கும் ஏதேதோ இடைஞ்சல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். நான் எதற்கும் பயப்படவில்லை. என்னால் அவரைப் போல் கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு மரக்கட்டையாகச் சும்மா இருக்க முடியாது."

     பாண்டியன் அவருடைய அன்பான எச்சரிக்கைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தான். மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அடுத்த வகுப்புக்குப் புறப்பட்டான் அவன். பிற்பகலில் மாணவ நண்பர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு அண்ணாச்சி கடைக்குச் சென்று பேராசிரியர் பூதலிங்கம் கூறிய எச்சரிக்கையைத் தெரிவித்துக் கலந்தாலோசித்தான் அவன். நண்பர்கள், "எது வந்தாலும் கவலை இல்லை. அநீதிகளை எதிர்த்தே ஆக வேண்டும்" என்றார்கள். அன்று விடுதியில் மாணவர்களுக்கு வாராந்தர 'ஃப்ரீ நைட்' ஆகையால் முக்கால்வாசி மாணவர்கள் வெளியே திரைப்படம் பார்க்க வந்திருந்தார்கள். பேச்சுப் போக்கில் நேரம் அதிகம் ஆகிவிட்டதனால் பாண்டியன், அன்றிரவு அண்ணாச்சி கடையிலேயே தங்கிவிட்டான். மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து அவன் விடுதி அறைக்கு வந்த போது லேடீஸ் ஹாஸ்டலிலிருந்து ஃபோன் வந்ததாக அறை நண்பன் பொன்னையா கூறினான்.

     கண்ணுக்கினியாள் தான் ஃபோனில் கூப்பிட்டிருக்க முடியும் என்ற அநுமானத்தோடு பாண்டியன் வராந்தாவுக்குச் சென்று லேடீஸ் ஹாஸ்டலுக்குப் ஃபோன் செய்தான். நல்ல வேளையாக அவன் கூப்பிடுவதை எதிர்பார்த்து அவள் ஃபோன் அருகிலேயே இருந்தது வசதியாகப் போயிற்று. தான் மாணவி பத்மாவின் வீட்டுக்குப் போய் அவளோடு சேர்ந்து பஸ்ஸில் புறப்பட்டு வருவதாகவும், பஸ் டெர்மினஸ் அருகே காத்திருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்தவே அவனுக்கு ஃபோன் செய்ததாகவும் அவள் கூறினாள். அதோடு அன்றிரவு ஃபைன் ஆர்ட்ஸ் ஃபேகுல்டியில் உள்ள லிட்டில் தியேட்டரில் 'டிப்ளமா இன் டிராமா' பிரிவில் படிக்கும் மாணவ மாணவிகளுக்குச் சில விளக்கங்கள் தருவதற்காக ஒரு கதகளி நாடகமும், ஒரு குறவஞ்சி நாடகமும் நடக்க இருப்பதாகவும், குறவஞ்சி நாடகத்தில் தான் குறத்தியாக நடிக்க இருப்பதாகவும் சொல்லி அவன் அதற்கு வர வேண்டும் என்றாள் அவள். அவன் மகிழ்ச்சியோடு அதற்கு இசைந்தான். காலை ஒன்பதே முக்கால் மணிக்கு பஸ் டெர்மினஸ் அருகே மாணவர்களோடு காத்திருப்பதாகவும் கூறினான். அவள் ஃபோனை வைத்தாள். அவன் அவளோடு பேசி முடித்த மன நிறைவுடன் குளிப்பதற்காகப் போனான். ஏழரை மணிக்கு அவனும் பொன்னையாவும் அறைக்குத் திரும்பி அவரவர் பாடங்களை ஒரு மணி நேரம் படித்தார்கள். திடீரென்று தான் பல்கலைக் கழக நூலகத்திலிருந்து எடுத்து வந்திருந்த 'ஆங்ரி யங் மென்' என்ற புத்தகத்தைப் பிரித்து அதன் முன்னுரையில், 'எதிலும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகமாயிருக்கும் முதியவர்கள் நிறைந்த சமூகத்தில் எதிலும் பிடிவாதம் அதிகமாயிருக்கும் இளைஞர்கள் உருவாவதைத் தவிர்க்க முடியாது. அந்தப் பிடிவாதமே இந்த நூற்றாண்டின் வரப்பிரசாதம்" என்ற பொருள்படும் ஆங்கில வாக்கியங்களைப் பாண்டியனிடம் சுட்டிக் காட்டினான் பொன்னையா.

     "இந்தப் புத்தகம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு பாண்டியன்! நீயும் படி... அப்புறம் திருப்பிக் கொடுக்கலாம்" என்றான் அவன்.

     "இதை இந்தப் புத்தகத்திலிருந்து தான் தெரிஞ்சிக்கணுமா பொன்னு? ரொம்ப நாளா மணவாளன் இதை என்னைப் பார்க்கறப்ப எல்லாம் சொல்லிக்கிட்டிருக்காரு. நிதானம் அளவு மீறினால் அதுவே மந்தம். வீரம் அளவு மீறினால் அதுவே முரட்டுத்தனம். இலட்சியம் அளவு மீறினால் அதுவே அலட்சியம். பிரியம் அளவு மீறினால் அதுவே பேராசை என்று தான் சில தொடக்கங்களுக்கு முடிவுகளே ஏற்பட முடியும்" என்று ஆரம்பித்துப் பேசத் தொடங்கிய பாண்டியன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "நேரமாச்சு! புறப்படு, போகலாம்" என்று சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பத் தயாரானான். அவனும் பொன்னையாவும் மற்றும் சில மாணவர்களும் பஸ் டெர்மினஸுக்குப் போய்ச் சேர்ந்த போது ஏற்கெனவே சொல்லி வைத்திருந்தபடி நிறைய மாணவர்கள் அங்கே கூடியிருந்தார்கள். ஒன்பது ஐம்பத்தைந்துக்கு வரவேண்டிய நேரத்துக்கு ஐந்து நிமிஷம் முன்னதாகவே அந்தப் பஸ் வந்தது. எல்லாக் கூட்டமும் பஸ்ஸைச் சூழ்ந்து கொண்டது. கண்ணுக்கினியாளும் அந்த மாணவி பத்மாவும் இறங்கினார்கள். நடந்ததைப் பாண்டியனிடம் கண்ணுக்கினியாள் சுருக்கமாகச் சொல்லி இரண்டொரு சக பிரயாணிகளையும் கூப்பிட்டுச் சாட்சியத்தோடு அதை நிரூபித்தாள். உடனே மாணவர்கள் அந்தப் பஸ்ஸின் கண்டக்டர் டிரைவரை வளைத்துக் கொண்டு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக மன்னிப்புக் கேட்கும்படி அவர்களைக் கோரினார்கள். டிரைவர் கொஞ்சம் நல்ல விதமாகப் பேசினான். கண்டக்டரை மன்னிப்புக் கேட்கச் சொல்லி அவனே வற்புறுத்தினான்.

     "நானே அடிக்கடி சொன்னப்பல்லாம் நீ கேட்கலே! பாஸஞ்சர் கிட்டே துடுக்காப் பேசாதே! அடக்கமா வேலையைப் பாருன்னாக் கேட்கமாட்டே..." என்று கண்டக்டரைக் கண்டித்தான் அவன். டிரைவர் இப்படிக் கண்டித்ததும் கண்டக்டர் அவனையும் திட்டத் தொடங்கினான். தூரத்தில் நின்றிருந்த வேறு பஸ்களின் கண்டக்டர்கள் சிலரும் கூடி ஒன்று சேர்ந்து வந்தார்கள்.

     இந்த நிலையில் பாண்டியன் சமயோசிதமான ஒரு காரியம் செய்தான். "இனிமேல் இது எங்கள் பிரச்னை! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எல்லாரும் வகுப்புக்களுக்குப் போகலாம். தயவு செய்து இங்கே நிற்க வேண்டாம்" என்று கூறிக் கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகளை மட்டும் அங்கிருந்து பத்திரமாக அனுப்பி வைத்தான். ஒரு கலகம் மூளுவதைத் தவிர்க்க முடியாது போலிருந்தது. "சாயங்காலம் நாடகம் ஞாபகமிருக்கட்டும்" என்று போகும் போது அந்த அவசரத்திலும் கூடக் கண்ணுக்கினியாள் சொல்லிவிட்டுப் போனாள். பாண்டியன் மாணவிகளை அனுப்பிவிட்டுத் திரும்பி வருவதற்குள்ளே மற்ற மாணவர்களுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் பேச்சுவார்த்தை தடித்து விட்டது. "நீங்கள்ளாம் அக்கா தங்கச்சிகளோட தானே பொறந்திருக்கீங்க?..." என்று சூடாகக் கேட்டான் ஒரு மாணவன். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட கண்டக்டர் அதற்குத் துடுக்காக ஏதோ பதில் சொன்னான். அதற்குள் பாண்டியன் நடுவில் பாய்ந்து இரு சாராரையும் தடுத்து, எல்லா மாணவர்களையும் அந்த பஸ்ஸில் ஏறச் சொன்னான். மாணவர்கள் ஏறிக் கொண்டார்கள். "இந்தாப்பா! நாங்கள் ஓசிப் பயணம் செய்கிறோம்னு நினைக்காதே. எல்லாருக்கும் டிக்கெட் கொடு. நேரே உங்கள் முதலாளி வீட்டுக்குப் பஸ்ஸை விடு! நாங்களே அவரிடம் மானம், மரியாதை, மதிப்பைப் பற்றிப் பேசிக்கிறோம். உங்ககிட்டப் பேசிப் பிரயோசனம் இல்லை" என்று இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்களை நீட்டினான். கண்டக்டர் அதை வாங்காமல் காறித் துப்பிவிட்டு நடந்தான். ஆனால் டிரைவர் கொஞ்சம் நிதானமாகவே நடந்து கொண்டு பஸ்ஸூக்குச் சேதமில்லாமல் காக்க விரும்பினான். கண்டக்டர் இல்லாமலே பஸ்ஸை எடுத்தான் அவன். வாக்குவாதம் நீடித்ததனால் டிரைவர் பஸ்ஸை எடுக்கும் போதே பத்தே முக்கால் மணி ஆகிவிட்டது. பஸ் நிறைய எண்பது மாணவர்களுக்கு மேல் திணித்துக் கொண்டு நின்றார்கள். மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட பஸ் ஊழியர்களுக்கு எதிராகக் கோஷங்கள் முழங்கப்பட்டன. ஆத்திரம் அடைந்த சில மாணவர்கள் டிரைவர் ஸீட்டின் மேலே வைக்கப்பட்டிருந்த மல்லை இராவணசாமியின் படத்தை உடைக்க முயன்ற போது பாண்டியன் தடுத்தான். மாணவர்கள் கட்டுப்பட்டனர். "இதுவே நம் நோக்கமல்ல! நியாயம் கேட்கப் போகிற போது நாமே அநியாயங்களைச் செய்து கொண்டு போனால் நம் தரப்பில்தான் பலவீனங்கள் அதிகமாக இருக்கும்" என்று அவன் கூறிய போது மாணவர்கள் சிலருக்கு அவனது நிதானம் எரிச்சலூட்டினாலும் அவன் வார்த்தையை அவர்களால் மீற முடியவில்லை. அவனுக்காக அவர்கள் சிரமப்பட்டுப் பொறுமையைக் கடைப்பிடித்தார்கள்.

     பஸ் மல்லை இராவணசாமியின் பங்களா காம்பவுண்டுக்குள் நுழைந்து நிற்கிற போது மணி பதினொன்றே கால். டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கிக் கூர்க்காவிடம் ஏதோ சொல்லி உள்ளே அனுப்பினான். கூர்க்கா உள்ளே போய்விட்டுத் திரும்பி வந்து டிரைவரிடம் சொன்ன பதிலைக் கேட்டு அவன் முகம் சுருங்கியது. "கொஞ்சம் பொறுத்துக்குங்க! நானே போய் ஐயாவைப் பார்த்துக் கேட்கிறேன்" என்று டிரைவரே உள்ளே போனான். அதையடுத்து உள்ளே மல்லை இராவணசாமியின் குரல் இரைந்து கூப்பாடு போடுவது வெளியேயும் கேட்டது. டிரைவர் திரும்பி வந்து, "அவரு உங்களைப் பார்க்க முடியாதாம்!" என்று எரிச்சலோடு பாண்டியனிடம் சொன்னான். உடனே பாண்டியன் மற்ற மாணவர்களைப் பார்த்து, "மாணவர்களே அவர் நம்மை மதித்துப் பார்த்து நாம் சொல்வதைக் கேட்கிறவரை எவ்வளவு நேரமானாலும் இங்கிருந்து நாம் நகரக் கூடாது" என்று இரைந்து சொன்னான்.. மணி பன்னிரண்டாயிற்று. ஒன்று, இரண்டு என்று பகல் நேரமாகியும் மாணவர்களும் நகரவில்லை. எம்.எல்.ஏ.யும் வெளியே வரவில்லை. மூன்று மணிக்குக் கூர்க்கா வந்து மாணவர்களை வெளியேறச் சொல்லிக் கத்திக் கூப்பாடு போட்டான். மாணவர்கள் அசையவில்லை. கோஷங்களை முழக்கினார்கள். பசி, தாகத்தைப் பொருட்படுத்தாமல் எண்பது மாணவர்கள் அங்கே மறியல் செய்து கொண்டிருந்த செய்தி பல்கலைக் கழகத்துக்கு எட்டியதால் மேலும் மாணவர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியிருந்தார்கள்.

     "உங்கள் பஸ் ஊழியர்களைத் தயவு செய்து மாணவர்களிடமும் பொது மக்களிடமும் மரியாதையாக நடந்து கொள்ளச் சொல்லுங்கள். அது போதும்" என்று தாங்கள் வேண்டப் போகிற ஒரு வேண்டுதலைக் கேட்கக் கூட மறுக்கும் அளவு மல்லை இராவணசாமி முரண்டு பிடிப்பதை மாணவர்கள் வெறுத்தனர். இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று அந்தப் பங்களாக் காம்பவுண்டிலேயே உட்கார்ந்துவிட்ட மாணவர்களை என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளேயிருந்த மல்லை இராவணசாமி திகைத்தார். மாணவர்களைச் சந்தித்துப் பேசி சமரசமாகப் போக முடியாமல் வறட்டு ஜம்பம் அவரைத் தடுத்தது. போலீஸுக்குப் ஃபோன் செய்து மாணவர்கள் தம் வீட்டில் 'டிரஸ் பாஸ்' செய்திருப்பதாகப் புகார் கொடுக்கவும் தயக்கமாக இருந்தது. அதனால் மாணவர்களை மேலும் விரோதித்துக் கொள்ள நேருமோ என்று பயமாகவும் இருந்தது. துணைவேந்தருக்குப் போன் செய்தார் இராவணசாமி. துணைவேந்தர் ஃபோனில் கிடைக்கவில்லை. பல்கலைக் கழகத்தில் பதிவாளர் மட்டுமே இருந்தார். அவரிடம் துணைவேந்தர் வந்ததும் தமக்குப் ஃபோன் செய்யச் சொல்லும்படி தகவல் தெரிவித்த இராவணசாமி பேசாமல் கொல்லைப்புற வழியாக வெளியேறலாமா என்று கூட நினைத்தார். இருட்டிய பின்னும் மாணவர்கள் விடவில்லை. மாலையில் மேலும் மாணவர்கள் அதிகமான அளவு வந்து சேர்ந்து கொண்டதால் பங்களா காம்பவுண்டில் கூட்டம் முன்னைவிட உணர்ச்சிவசப்பட்டு பஸ்ஸுக்கு நெருப்பு வைத்து விடுமோ என்று கூடத் தாமாகவே கற்பனை செய்து பயந்து நடுங்கினார் அவர்.

     மாலை ஆறரை மணிக்கு நுண்கலைப் பிரிவின் அரங்கில் குறவஞ்சி நாடகத்துக்காக மேக்அப் போட்டுக் கொள்ளப் போகிறவரை பாண்டியனை எதிர்பார்த்துக் காத்திருந்த கண்ணுக்கினியாளுக்கு அவன் வராதது ஏமாற்றத்தையும், கவலையையும் அளித்தது. அவள் கிரீன் ரூமில் இருந்த போது சக மாணவி ஒருத்தி வந்து நிலையைத் தெரிவித்தாள். பக்கத்தில் கதகளி ஆட்கள் வேறு நின்று கொண்டிருந்தார்கள். அவள் மனம் நாடகத்தில் லயிக்கவே இல்லை. முதலில் அவளது குறவஞ்சி நாடகம் தான் நடக்க வேண்டியிருந்தது. மாணவர்களும், பாண்டியனும், மல்லை இராவணசாமி வீட்டில் மறியலில் இருக்கிறார்கள் என்ற செய்தியை அறிந்ததும் அவள் மனம் நிம்மதி இழந்திருந்தது. அவளால் நிறைவாக நடிக்க முடியவில்லை. பத்து நிமிஷம் மேடையில் தோன்றி ஆடிப்பாடிக் குறி சொல்லிக் குறத்தியாக நடித்தாள். அப்புறமும் உடனே அங்கிருந்து கத்திரித்துக் கொண்டு புறப்பட முடியவில்லை. அவளுடைய நாடகக் கலைப்பிரிவுப் பேராசிரியர் கருணாகர மேனன் தான் இதற்கு ஏற்பாடு செய்தவர். அவர் முன்னிலையில் குறவஞ்சி நாடகம் முடிந்ததும், கதகளியைப் பார்க்காமல் அவள் வெளியேறுவது என்பது முடியாமல் இருந்தது. மேக்அப்பைக் கலைத்துவிட்டு வழக்கமான கோலத்தோடு முன் வரிசையில் அமர்ந்து கதகளி முடிகிறவரை அங்கே இருந்து பார்த்தாள் அவள். வகுப்பின் பாடங்களில் 'தென்னிந்திய நாடகங்கள் - தொடக்க நிலை' என்ற பிரிவின் கீழ் நடைமுறைப் பாடமாக இந்தக் குறவஞ்சியும், கதகளியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததன் காரணத்தால் இறுதி வரை இருந்துவிட்டுப் போக வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்து அவள் மீள முடியவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் ஃபைன் ஆர்ட்ஸ் டிபார்ட்மெண்ட் புரொபஸர் அறையிலிருந்தே அண்ணாச்சி கடைக்குப் போன் செய்தாள் அவள். கடை மூடியிருப்பதாகச் சொல்லி மருந்துக் கடையில் ஃபோனை வைத்துவிட்டார்கள். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போலிருந்தது அவளுக்கு. உடனிருந்த மற்றவர்கள் தனது பரபரப்பைப் புரிந்து கொள்ளாமல் அதை இரகசியமாகக் காப்பது கூட அப்போது அவளாலேயே முடியாததாயிருந்தது.