முப்பத்து ஆறாவது அத்தியாயம்

     அவர்கள் எல்லாரும் வண்டியூர் மாரியம்மன் கோவிலிலிருந்து திரும்பும் போது பகல் ஒன்றரை மணிக்கு மேல் ஆகிவிட்டது. மணவாளன் வீட்டில் பகல் உணவுக்குத் திரும்பி வருவதாகச் சொல்லியிருந்தும் பாண்டியனால் அங்கே போக முடியவில்லை. நாயுடுவும் கண்ணுக்கினியாளும் அவள் தாயும் வற்புறுத்தி அவனைத் தங்கள் வீட்டிலேயே சாப்பிடச் செய்து விட்டார்கள். சாப்பிட்டு முடிந்தவுடன் கூட நாயுடு அவனை உடனே போக விடவில்லை. சிறிது நேரம் இருக்கச் சொன்னார்.

     "இப்போ என்ன அவசரம் அப்படி? உண்ட வீட்டில் இரண்டு நிமிஷம் உட்காராமல் போகக் கூடாதும்பாங்க... இரு... போகலாம்" என்றார் அவர். அவனாலும் மறுக்க முடியவில்லை.

     பகல் இரண்டரை மணி பஸ்ஸில் ஊருக்குப் புறப்பட எண்ணியிருந்த அவன் சித்திரக்காரத் தெருவில் கண்ணுக்கினியாளின் வீட்டிலிருந்து புறப்படும் போதே இரண்டரை மணி ஆகிவிட்டது. அவன் மணவாளனின் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த போது அங்கே மணவாளனின் உறவினரும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியும் ஆகிய ஒருவர் வந்திருந்தார். அந்த முதியவருக்குப் பாண்டியனை அறிமுகம் செய்து வைத்தார் மணவாளன். இளைஞர் இயக்கங்கள், மாணவர்கள் போராட்டங்கள் பற்றித் தம்முடைய கருத்தை அந்த முதியவர் மனம் திறந்து கூறினார். முதியவரானாலும் அவர் மனம் இளமையாக இருந்தது.

     "இட்ஸ் ஆல் தட் தி யூத் கேன் டூ ஃபோர் தி ஓல்ட் - ட்டு ஷாக் தெம் அண்ட் கீப் தெம் அப் டு டேட்" என்று பெர்னார்ட் ஷா கூறியிருப்பதைச் சிரித்துக் கொண்டே சொன்னார் அவர். அதைக் கேட்ட அவர்களும் சிரித்தனர்.

     "முதியவர்களுக்கு அதிர்ச்சியளிக்கவும், அவர்களை அப்-டு-டேட்டாக இருக்கச் செய்யவுமாவது எங்களால் முடியும் என்று நீங்கள் கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று மணவாளன் அவர்களுக்கு மறுமொழி கூறினார். பிற்பகல் நான்கு மணி வரை அவர்கள் எல்லாருமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மாணவர்கள் - கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் பற்றிய பிரச்சினைகளே பெரும்பாலும் பேச்சில் இடம் பெற்றன. துணைவேந்தர்களாக வருகிறவர்கள் பதவி நீடிப்பை எண்ணி அரசாங்கத்தின் தாசானுதாசர்களாகி விடுவதைக் கண்டித்தார் அந்த முதியவர்.

     நாலரை மணிக்கு மணவாளனின் குடும்பத்தினரிடம் விடை பெற்றுக் கொண்டு அந்த முதியவர் புறப்பட்டுப் போன பின் பாண்டியனும் பஸ் நிலையத்துக்குப் புறப்பட்டான். மணவாளனும் அவரைப் பார்க்க அப்போது தான் வந்த உள்ளூர் மாணவர்கள் சிலரும் இரயில்வே மேம்பாலத்து வழியே 'வாக்கிங்' போக இருந்தார்கள். போகிற வழியில் பஸ் நிலையத்தில் பாண்டியனை வழி அனுப்பி விட்டுப் போனார்கள் அவர்கள். போனதும் ஏறிப் புறப்படுகிறாற் போல் விருதுநகர் பஸ் தான் தயாராயிருந்தது. அசதி காரணமாக பஸ்ஸில் அவன் நன்றாகத் தூங்கி விட்டான். விருதுநகர் வந்ததும் யாரோ எழுப்பினார்கள். இறங்கி பஸ் மாறிக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்த போது அப்படியும், இப்படியுமாக இரவு எட்டு மணிக்கு மேல் ஆகியிருந்தது. பாலவநத்தம் கிராமம் எட்டு மணி அளவிலேயே உறங்கியிருந்தது. இரவிலும் காலதாமதமாக உறங்கி விடியலிலும் காலதாமதமாக எழும் நகரங்களை விட இரவில் விரைவாக அடங்கி அதிகாலையிலும் விரைவாக எழும் இந்தியாவின் கிராமங்கள் பரவாயில்லை என்று பெருமைப்படலாம் போலிருந்தது. அவன் போன போது வீட்டில் எல்லோரும் உறங்கியிருந்தார்கள். ஆத்தாளை எழுப்பி ஏதோ சாப்பிட்டோம் என்று பேர் பண்ணி முடித்து விட்டு அவனும் படுக்கச் சென்றான். காலையில் அவன் எழுந்திருந்து திண்ணைப் பக்கம் வந்த போது அவனுடைய தந்தையும் பக்கத்து வீட்டுச் சன்னாசித் தேவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். "ஏண்டா பொங்கலுக்கு வந்ததுதான் வந்தே. லீவு விட்டதுமே புறப்பட்டு வரப்படாது? கூட ஒரு வாரம் இருக்கலாமே? வேலை மெனக்கெட்டுப் போயி மூணு நாளைக்காகப் பஸ்காரனுக்குப் பணம் செலவழிச்சிருக்கிறாயே?" என்றார் தந்தை. "இந்தக் காலத்துப் புள்ளைங்க அப்பிடியெல்லாம் யோசிக்கிற வழக்கமே கிடையாது சுப்பையாத் தேவரே! ஆயிரம் பத்தாயிரம்னு செலவழிச்சு மகாநாடு அது இதுன்னு போட்டுக்கிட்டிருக்கான் உம்ம பையன்! அவங்கிட்டப் போயிப் பதினைஞ்சு ரூபாய் செலவைப் பெரிசாச் சொல்லி வருத்தப்படறீரே நீரு?" என்று குறுக்கிட்டு வம்பு மூட்டினார் சன்னாசித் தேவர். அங்கே மேலும் நின்றால் சன்னாசித் தேவர் ஏதாவது வாயைக் கிண்டுவார் என்று தயங்கிய பாண்டியன் வாயிற் புறத்து வேப்ப மரத்தில் ஒரு குச்சி ஒடித்துக் கொண்டு பல்விளக்கக் கிணற்றடிக்குப் போனான்.

     மறுநாள் போகி, அடுத்த நாள் பொங்கல், அதற்கடுத்த நாள் மாட்டுப் பொங்கல், மூன்று நாட்களையும் கழித்துவிட்டு எப்போது மறுபடி மதுரை போய்ச் சேருவோம் என்று தவிப்பாயிருந்தது அவனுக்கு. அவன் கொல்லைப்புறம் கிணற்றடிக்குச் சென்ற போது அய்யாவு மாட்டுக் கொட்டத்துக்கு வெள்ளை அடித்துக் கொண்டிருந்தான். பத்து நிமிஷங்களுக்குப் பின் அவன் கிணற்றடியிலிருந்து மீண்டும் வாயிற்புறம் வந்த போது கிராமத்து இளைஞர்கள் பத்துப் பன்னிரண்டு பேர் அவனைப் பார்ப்பதற்காக வந்து காத்திருந்தார்கள். பாண்டியன் அவர்களை வரவேற்றான். "பாலவநத்தம் இளைஞர் தமிழ் மன்றத்தின் சார்பாகப் பொங்கல் விழா நடத்தவும், ஒரு கவியரங்கம் அமைக்கவும் ஏற்பாடு செய்துகிட்டிருக்கோம்! அண்ணனும் அதில் கலந்துக்கிடணும்" என்று வேண்டினார் அவர்களில் ஓர் இளைஞர். "'தமிழ் வளர்த்த வள்ளல்கள்' என்பது கவியரங்கத்தின் தலைப்பு. நீங்க யாரைப் பற்றிப் பாடப் போறீங்க?" என்று அவர்கள் கேட்ட போது "நான் பாண்டித்துரைத் தேவரைப் பற்றிப் பாடறேன்" என்றான் பாண்டியன்.

     "இல்லே! நாங்க எல்லோரும் இந்தக் காலத்துப் பிரமுகர்களைப் பற்றித்தான் பாடப்போறோம். நீங்களும் இந்தக் காலத்துப் பிரமுகர் யாரையாவது பற்றிப் பாடுங்களேன்" என்று கேட்டார் அந்த இளைஞர்களில் ஒருவர்.

     "நீங்க தமிழை வளர்த்தவர்களைப் பற்றித்தான் கவியரங்கம்னு சொன்னீங்க. அதனாலே தான் நான் பாண்டித்துரைத் தேவரைப் பற்றிப் பாடறேன்னு சொன்னேன். நீங்கள் 'தமிழாலே வளர்ந்த'வங்கன்னு தலைப்பை மாற்றிக் கொண்டால் நான் இந்தக் காலத்திலே இருக்கிற யாரைப் பற்றியும் பாடலாம்" என்று உடனே அந்த இளைஞருக்கு மறுமொழி கூறினான் பாண்டியன். இதைக் கேட்டு அந்த இளைஞர்களில் பலர் சிரித்து விட்டார்கள். அவர்கள் பேசிவிட்டுப் போன பின் பக்கத்து வீட்டுச் சன்னாசித் தேவர் அவனைக் கூப்பிட்டுத் தம் அருகே உட்காரச் சொன்னார். அப்படி அவர் கூப்பிட்ட போது பாண்டியனின் தந்தை திண்ணையிலிருந்து உள்வீட்டுப் பக்கமாக எழுந்து போயிருந்தார். "தம்பீ! நாளன்னைக்கு நம்ம தலைவரு ஒருத்தர் இங்கே வரப் போறாரு. அவர் உன்னையும் சந்திச்சுப் பேசணும். பகல்லே எங்கேயும் போயிட மாட்டியில்ல...? வீட்டிலே தானே இருப்பே?" என்று கேட்டார் சன்னாசித் தேவர். பாண்டியன் பதில் சொல்லத் தயங்கினான். சன்னாசித் தேவரின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை அவனால் உடனடியாக அநுமானம் பண்ணிவிட முடியாமலிருந்தது. சிறிது விழிப்பு உணர்ச்சியடைந்த மனநிலையுடன், "யாரு வாராங்க? நான் ஏன் அவரைப் பார்க்கணும்னு முன்னாடியே சொல்லிட்டீங்கன்னா நல்லது" என்று சன்னாசித் தேவரைக் கேட்டான் பாண்டியன். "அதையெல்லாம் பத்தி இப்ப என்ன தம்பீ? நீ அவரைச் சந்திச்சுப் பேசணும்னு நான் ஆசைப்படறேன் அவ்வளவுதான்."

     "சந்திக்கிறதைப் பற்றி ஒண்ணுமில்லே... ஆனா அது எதுக்குன்னு தெரியணும்."

     "அதெல்லாம் இப்பக் கேட்காதே தம்பீ! அவரு நாளன்னைக்குப் பகல்லே இங்கே வாராரு. நீ அவரைப் பார்க்கிறே" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் சன்னாசித் தேவர். பாண்டியனுக்கு அந்த விஷயம் பெரும் புதிராயிருந்தது. சந்தேகமாகவும் இருந்தது. சன்னாசித் தேவரின் சார்புகளும் விருப்பு வெறுப்புக்களும் அவனுக்கு நன்கு தெரியுமாகையால் தான் அவன் அதைப் பற்றிச் சந்தேகப்பட்டான். அடுத்த நாள் காலையிலே மறுபடியும் இதை நினைவூட்டினார் சன்னாசித் தேவர். மறுநாள் காலையில் பொங்கல் விழாக் கவியரங்கம் முடிந்து அவன் வீடு திரும்பியதும் தந்தையோடு சேர்ந்து உட்கார்ந்து வீட்டில் பண்டிகைச் சாப்பாடு சாப்பிட்டான். சாப்பிட்டு முடிந்ததும் தந்தையும், வேலையாள் அய்யாவுவும் மாட்டுப் பொங்கலுக்காகக் கொட்டத்தில் உள்ள மாடுகளின் கொம்புகளுக்கு வர்ணம் பூசப் போய்விட்டார்கள்.

     "ஐயா வந்திட்டுப் போகச் சொன்னாங்க" என்று அப்போது சன்னாசித் தேவர் மகள் கருப்பாயி வந்து கதவோரமாக நின்று அவனைக் கூப்பிட்டாள்.

     "ஏ கருப்பாயி! அதென்ன வாசப் புறமா நின்னே சொல்லிப்பிட்டு ஓடப் பார்க்கிறே? உங்க வீட்டுக்கு வழி அண்ணனுக்குத் தெரியும். நீ உள்ளார வந்திட்டுப் போ!" என்று பாண்டியனின் தங்கை மாரியம்மாள் அவளை உள்ளே கூப்பிட்டாள். தானும் தந்தையும் சாப்பிட்டு முடித்த பின் தாயும் தங்கையும் சாப்பிடும் போது அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பாண்டியன் தன்னைத் தான் கருப்பாயி கூப்பிடுகிறாள் என்று தெரிந்ததும், "உண்ட கிறக்கம். கொஞ்சம் தூங்க விடாம நீ கூப்பிட வந்திட்டியாக்கும்?" என்று கேட்டுக் கொண்டே புறப்பட்டான். சன்னாசித் தேவர் வீட்டுக் கூடத்தில் ஆளும் கட்சியின் மாணவர் இயக்கப் பிரமுகர் ஒருவர், உள்ளூர் நண்பர்கள் சூழ அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததுமே, பாண்டியனுக்கு அங்கே என்ன நடக்கும் என்பதை அனுமானித்துக் கொள்ள முடிந்தது. எல்லாருமே மிகவும் பிரியமாகவும், அன்பாகவும் பாண்டியனை வரவேற்றார்கள். பிரமுகர் அவனோடு பேசலானார்.

     "இன்று காலையில் இங்கே நடந்த கவியரங்கத்தில் நீங்கள் பாடிய கவிதை ரொம்ப நன்றாயிருந்ததாக எல்லாருமே இவ்வளவு நேரம் பாராட்டிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கும் மகிழ்ச்சியாயிருந்தது."

     இதைக் கேட்டுப் பாண்டியன் சிரித்துக் கொண்டே வேறெதுவும் பேசாமல் இருந்து விட்டான்.

     "பல்கலைக் கழகம் என்றைக்குத் திறக்கிறது? எப்போது நீங்கள் ஊர் திரும்பப் போகிறீர்கள்?"

     "நான் நாளை மாலைக்குள் இங்கிருந்து மதுரை புறப்பட்டு விடுவேன். அங்கே ஒருநாள் தங்கிவிட்டு அப்புறம் நேரே மல்லிகைப் பந்தலுக்குப் போவேன். இந்தத் தடவை விடுமுறை நாட்களே குறைந்துவிட்டன. அநேகமாக நான் போன மறுநாளே பல்கலைக் கழகம் திறக்கிற தினமாக இருக்கும்."

     "உங்கள் நண்பர் மாணவர்களின் தலைவர் - மணவாளன் எப்படி இருக்கிறார்?"

     "அடேடே! மணவாளனை உங்களுக்குத் தெரியுமா?"

     "எதிரெதிர் முகாம்களில் இருந்தாலும் அவரை நான் மதிக்கிறேன். அவரைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன்."

     பாண்டியன் தனக்குள் சிரித்துக் கொண்டான். அந்தப் பிரமுகர் மெல்ல மெல்லத் தாம் வந்த காரியத்தை நினைவு கூர்ந்தவராய் மீண்டும் அவனிடம் பேசத் தொடங்கினார்.

     "நேற்றுத் தான் சன்னாசித்தேவர் 'டிரங்கால்' போட்டுச் சொன்னார். உங்களைப் பற்றி ரொம்ப நம்பிக்கையோடு புறப்பட்டு வந்திருக்கிறேன்."

     "... தேவர் உங்களிடம் 'டிரங்காலில்' என்ன சொன்னாரென்று எனக்குத் தெரியாது. நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. அவரும் உங்களோடு ஃபோனில் பேசியதை என்னிடம் சொல்லவில்லை. நீங்கள் வரப் போகிறீர்கள், சந்திக்க வேண்டும் என்று மட்டும் தான் என்னிடம் சொன்னார்."

     "பரவாயில்லை! மற்றதை நேரில் சொல்லத்தான் இப்போது நானே வந்துவிட்டேனே. தேவர் எங்கள் அணியில் இருக்கிறார். அவர் எங்கள் அன்புக்குரியவர். அவருக்குப் பக்கத்து வீட்டுக்காரரின் புதல்வராகிய நீங்களும் எங்கள் அன்புக்குரியவர்... உங்களை மிகவும் நம்பிக்கைக்குரியவராக நாங்கள் கருதுகிறோம்."

     "அப்படிக் கருதாவிட்டாலும் நான் அதற்காக வருந்த மாட்டேன்..."

     "அவசரப்படாதே தம்பீ! ஐயா சொல்றதைப் பொறுமையாகக் கேட்டுக்க" என்று சன்னாசித் தேவர் குறுக்கிட்டார். அவன் அந்தப் பிரமுகரது முகத்தை முறித்தாற் போலப் பேசத் தொடங்கியது தேவருக்குப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.

     "மாணவர் போராட்டம் அது இதுன்னு நீங்க தீவிரமாயிருக்கிறதனாலே உங்க எதிர்காலம் பாதிக்கப் படுகிறது, உங்களுக்குத் தெரியுமா? நீங்க கொஞ்சம் நடுநிலையா விலகி இருக்கணும். அதனாலே உங்களுக்கு அதிக நன்மை உண்டு."

     "எது நடுநிலை? நன்மைக்கும் தீமைக்கும் நடக்கிற போரில் இரண்டிற்கும் நடுவே நிற்பது நடுநிலைமை இல்லை. அது கையாலாகாத்தனம். தீமையைச் சாராமல் நன்மையின் பக்கம் சார்ந்து நிற்பதே நடுநிலை. இன்று இந்த நாட்டில் நடுநிலை என்ற பதமே பிழையான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. போர்க்களங்களில் நடுநிலைக்கு இடமே இல்லை. தீயவர்களை எதிர்க்கும் போரில் நல்லவர்கள் பக்கம் நிற்பதுதான் நடுநிலை."

     "தம்பி பொருளாதார மாணவராயிருந்தும் உங்களுக்கு இவ்வளவு நல்ல தமிழறிவு இருப்பதை நான் பாராட்டுகிறேன். மிக அருமையாக விவாதிக்கிறீர்கள்..."

     "அதெல்லாம் இருக்கட்டும்! என்னைக் கூப்பிட்டனுப்பிய காரியத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். எனக்கு வேறு வேலை இருக்கிறது. நான் போக வேண்டும்..."

     "பொங்கல் விடுமுறை முடிந்ததும் ஒரு நாள் பல்கலைக் கழகத்துக்குப் போய் அட்டெண்டண்ஸ் கொடுத்துவிட்டு அப்புறம் லீவு எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள். நீங்கள், நான், தேவர் எல்லாருமாகக் காஷ்மீர் வரை ஓர் உல்லாசப் பயணம் போய் வரலாம்."

     "உங்களை எனக்குப் புரிகிறது. ஆனால்...?"

     "என்ன புரிகிறது அப்படி?"

     "எல்லாமே நன்றாகப் புரிகிறது! நீங்கள் யாரால் எதற்காக அனுப்பப்பட்டு இங்கே வந்திருக்கிறீர்கள் என்றெல்லாம் புரிகிறது. ஏற்கெனவே பலர் எங்களிடம் இப்படி முயற்சிகளைச் செய்து பார்த்த பின்பு தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். உங்கள் முயற்சி பலிக்காது. பட்டமளிப்பு விழாவன்று எல்லா மாணவர்களும் மல்லிகைப் பந்தலில் தான் இருப்போம். எங்களுடைய எதிர்ப்பையும் அமைச்சருக்குத் தெரிவிப்போம்."

     "வீண் முரண்டு பிடித்துப் போலீஸ்காரர்களிடமும் எங்கள் கட்சி ஆட்களிடமும் சிக்கித் துன்புறப் போகிறீர்கள்! சுருக்கமாக இவ்வளவு தான் உங்களை எச்சரிக்க முடியும்."

     "சுருக்கமாக எச்சரித்தாலும், விரிவாக எச்சரித்தாலும் உங்களுக்கு என் பதில் இதுதான். நீங்கள் எங்களை விலைக்கு வாங்கிவிட நாங்கள் கோழைகள் அல்ல."

     "நீங்கள் என்னோடு இன்றே புறப்பட்டு வந்தால் சென்னையில் அமைச்சர் கரியமாணிக்கத்தையே சந்தித்து இது விஷயமாகப் பேசலாம். அவர் மாணவர்களை உயிரினும் உயிராக மதிக்கிறவர்."

     "அவர் மற்றவர்களை எப்படி மதிக்கிறவர் என்பது எங்களுக்குப் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எங்களில் பலர் அவரால் நிறையத் துன்பங்களை அனுபவித்து விட்டோம்."

     "உங்கள் முடிவான பதில் இதுதானா? இதற்குத்தானா நான் முந்நூற்றைம்பது மைல் பயணம் செய்து ஆவலாக இங்கே ஓடிவந்தேன்?"

     "தெரிந்திருந்தால் நானே உங்களை வரவேண்டாம் என்று சொல்லியிருப்பேன். நீங்கள் என்னைப் பார்ப்பதற்காகவே வருவதாகத் தேவரும் என்னிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் தடுத்திருக்கலாம்."

     அவன் எழுந்திருந்து வெளியே வந்துவிட்டான். சன்னாசித் தேவர் கூடவே வாயில் வரை ஓடி வந்து, "இத்தினி பெரிய மனுசன் காரிலே மெட்ராசிலேயிருந்து புறப்பட்டு வந்திருக்கான். கொஞ்சம் இரக்கம் வேணும் தம்பீ!" என்று கெஞ்சினார். பாண்டியன் நிற்கவில்லை. அவன் தன் வீட்டுக்குள் போய் நுழைந்ததும், "பக்கத்து வீட்டு தேவரு ஏன் கூப்பிட்டாராம்?" என்று கேட்டாள் தாய்.

     "அது வேறு விஷயம். உனக்குப் புரியாதும்மா!" என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் அவன். சிறிது நேரம் கழித்து அவனுடைய தந்தையும், சன்னாசித் தேவருமாகச் சேர்ந்து அந்த ஆளும் கட்சிப் பிரமுகருடன் வந்து அவனை மீண்டும் நிர்பந்தப் படுத்தினார்கள். அவன் மசியவில்லை. பொங்கலுக்கு அங்கே வந்திருக்கவே வேண்டாம் என்று அப்போது தோன்றியது அவனுக்கு. மாலையில் விருதுநகருக்குப் போய் அங்கே ஒரு தேசிய நண்பரின் வீட்டிலிருந்து மதுரைக்கு ஃபோன் செய்து மணவாளனிடம் பேசினான் பாண்டியன். மணவாளன் சொன்னார்: "எப்படியாவது பட்டமளிப்பு விழா அமைதியாக நடந்து டாக்டர் பட்டத்தைக் கரகோஷங்களுக்கிடையே வாங்கிவிட வேண்டும் என்ற தவிப்பில் அமைச்சர் கரியமாணிக்கம் நாலா புறமும் ஆட்களை ஏவியிருக்கிறார். எந்த எல்லை வரை முயல முடியுமோ அந்த எல்லை வரை முயன்று பார்க்கிறார்கள். நீ சீக்கிரம் புறப்பட்டு இங்கே வந்து விடு! கிராமத்தில் இன்னும் யாராவது தேடி வந்து உன்னை வற்புறுத்தவோ, பயமுறுத்தவோ செய்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். இனி இங்கே எதுவும் நடக்கும்."

     உடனே அவனும் மறுநாள் மாட்டுப் பொங்கலன்று பகல் சாப்பாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்டு வந்து விடுவதாக அவரிடம் தெரிவித்து விட்டு ஃபோனை வைத்தான். ஆனால் மாட்டுப் பொங்கலாகிய மறுநாள் காலையே அவனுக்கு மல்லிகைப் பந்தலிலிருந்து எதிர்பாராத விதமாக ஒரு தந்தி கிடைத்தது. அந்தத் தந்தி மல்லிகைப் பந்தலில் முதல் நாள் இரவு பதினொரு மணிக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. 'அண்ணாச்சியைப் போலீஸார் கைது செய்திருப்பதாகவும் - அவன் உடனே புறப்பட்டு வர வேண்டும்' என்றும் தந்தி வாசகம் இருந்தது. அவன் அந்தத் தந்தியைப் படித்து அதிர்ச்சி அடைந்தான். அவனால் அதை நம்ப முடியாமல் இருந்தது. மாணவர்களிடையே சில வேளைகளில் குறும்புக்காகவும், வம்புக்காகவும் பொய்த் தந்திகள் கொடுத்து அலைக்கழிக்கும் பழக்கம் உண்டு. தமிழ் மன்றத்தின் சார்பில் பேச அழைக்கப்படும் ஒரு பேச்சாளரை - அந்தப் பேச்சாளரைப் பிடிக்காத வேறு சில மாணவர்கள், 'ஃபங்ஷன் போஸ்ட்ஃபோண்டு' என்று பொய்த் தந்தி கொடுத்து வரவிடாமல் செய்துவிடுவது போன்ற காரியங்கள் சகஜமாக நடப்பது உண்டு. ஆனால் அண்ணாச்சி விஷயத்தில் அப்படி யாரும் பொய்த் தந்தி கொடுத்திருக்க முடியாது என்பதிலும் பாண்டியன் நம்பிக்கை கொள்ள வேண்டியிருந்தது. தந்தியில் அதைக் கொடுத்தவர் பெயரும் இருந்தது. தேசியத் தோட்டத் தொழிலாளர் யூனியனின் செயலாளர் ஒருவர் தந்தியைக் கொடுத்திருந்ததால் அதை அவ்வளவு சுலபமாக புறக்கணித்து விடவும் முடியவில்லை. ஒரு வேளை தோட்டத் தொழிலாளர் யூனியனின் செயலாளருடைய பெயரை வைத்துத் தந்தி கொடுத்தால் தான் நம்பிக்கை இருக்கும் என்று அவர் பெயரைப் பயன்படுத்தி விஷமிகள் யாராவது பொய்த் தந்தியை கொடுத்திருக்கக் கூடுமோ என்றும் சந்தேகமாயிருந்தது.

     "என்னடா அது! என்ன தந்தி?" என்று தந்தியைப் பற்றி விசாரித்தார் அவன் தந்தை. தாயும் அதே கேள்வியோடு நிலைப்படியருகே வந்து தயங்கி நின்றாள். அவர்களிடம் தந்தியிலிருப்பதை அப்படியே கூறாமல், "ஒண்ணுமில்லை. ஒரு நெருங்கிய சிநேகிதனுக்கு உடம்பு சொகமில்லே. அதைப் பற்றி வந்திருக்கு. ரொம்ப வேண்டியவன். நல்லவன். உடனே புறப்பட்டுப் போகணும்" என்று மாற்றிச் சொல்லிவிட்டுப் போகப் புறப்பட்டான் அவன். நல்லவேளையாக அவனுடைய அவசரத்துக்கு ஏற்றாற் போல் விருதுநகரிலிருந்து எக்ஸ்பிரஸ் பஸ்ஸே கிடைத்ததனால் விரைவாக மதுரைக்குப் போய்ச் சேர்ந்து விட முடிந்தது. மதுரையை அடைந்ததும் நேரே மணவாளனின் வீட்டுக்குத் தான் போனான் அவன். மணவாளனின் தந்தைதான் வீட்டு முகப்பில் அவன் போன போது வரவேற்பறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அவனை வரவேற்று முகமலர்ந்த அவரிடம், தந்தியைக் குறிப்பிட்டு அவன் சொல்லியவுடன்,

     "ஆமாம்! அதே தந்தி இங்கேயும் இராத்திரி மூன்று மணிக்கே கிடைச்சு உடனே ஒரு டாக்சி ஏற்பாடு பண்ணிக் கொண்டு மணவாளன் புறப்பட்டுப் போயாச்சே" என்றார் அவர். அவரிடம் சொல்லிக் கொண்டு மல்லிகைப் பந்தலுக்குப் போவதற்காக மீண்டும் பஸ் நிலையத்துக்கே திரும்பினான் பாண்டியன். அப்போதிருந்த கவலையிலும், அவசரத்திலும், பரபரப்பிலும் சித்திரக்காரத் தெருவுக்குச் சென்று கண்ணுக்கினியாளிடம் அந்தத் தகவலைக் கூற வேண்டும் என்று கூட அவனுக்குத் தோன்றவில்லை. எப்படியும் இயல்பாகவே அவள் இன்னும் இரண்டு நாட்களில் யுனிவர்ஸிடி திறக்கிற தினத்தன்று மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிடுவாள் என்பதனால் அவன் மட்டும் அன்றைக்கு அவசரமாகப் புறப்பட்டான்.