இருபத்து ஏழாவது அத்தியாயம்

     குறவஞ்சி, கதகளி நிகழ்ச்சிகள் முடிந்த பின்பும் கூட, கண்ணுக்கினியாள் அங்கிருந்து உடனே வெளியேறிச் செல்ல முடியாமல் இருந்தது. அவளுடைய உணர்வுகள் மற்றவர்களுக்குப் புரியவில்லை. மற்றவர்களுடைய உணர்வுகளோடு அவளால் இரண்டறக் கலக்க முடியவில்லை. மனம் போயிருக்கிற இடத்துக்கு உடம்பு போக முடியாமலும் உடம்பு தங்கியிருக்கிற இடத்தில் மனம் இல்லாமலும் அவள் அங்கே அப்போது தவித்துக் கொண்டு இருந்தாள். பாண்டியன் போயிருக்கிற இடத்தில் என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ என்ற எண்ணங்களிலேயே இருந்ததால் மற்றவர்கள் தன்னிடம் எதைக் கேட்கிறார்கள், அதற்குத் தான் என்ன பதில் சொல்கிறோம் என்ற பிரக்ஞையே அவளுக்கு இல்லை. ஆனாலும் மற்றவர்கள் தன்னை நோக்கி முகம் மலர்ந்த போது அவளும் பதிலுக்கு முகம் மலர்ந்தாள். மற்றவர்கள் தன்னிடம் எதையாவது பேசிய போது அவளும் அதற்குப் பதிலாக எதையோ சொன்னாள். நிகழ்ச்சிகள் நிறைவேறிய பின்பும், கதகளி குழுவினருக்கும், பிற முக்கியமானவர்களுக்கும் ஒரு விருந்து கொடுக்க ஏற்பாடாகியிருந்தது. அவளைப் போலவே காலையிலிருந்து அங்கேயே இருக்கும் மாணவ மாணவிகளால் வெளியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி அதிகமாக எதையும் தெரிந்து சொல்ல முடியாமல் இருந்தது. அவள் 'க்ரீன் ரூமு'க்குள் இருந்த போது வந்து தகவல் சொல்லிய சக மாணவி கூட மாணவர்களும் பாண்டியனும் மல்லை இராவணசாமி வீட்டுத் தோட்டத்தில் மறியல் செய்தபடி அமர்ந்திருப்பதாக மட்டுமே தெரிவித்திருந்தாள். மாலை ஆறு ஆறரை மணிக்கு இருந்த நிலவரத்தைத்தான் அவள் தெரிவித்திருந்தாள். அதற்கு மேல் அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. அண்ணாச்சி கடையும் பூட்டப்பட்டு இருந்ததாக ஃபோனில் தகவல் தெரிந்ததனால் சந்தேகமும், பரபரப்பும் மேலும் மேலும் பெருகும் மனநிலையோடு இருந்தாள் அவள்.

     விருந்து முடிந்ததும் டாக்டர் கருணாகர மேனோன் விருந்தினர்களையும் கதகளி கலைஞர்களையும் பாராட்டிப் பேசினார். கேரள கதகளியோடு தமிழ்நாட்டுக் குறவஞ்சியை ஒப்பிட்டுப் பேசிக் கண்ணுக்கினியாளின் நடிப்பையும் பாராட்டினார். தென்னிந்தியாவிலேயே மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழகம் ஒன்றில்தான் 'நாடகத் துறைப் பட்டப் படிப்பு' இருக்கிறது என்பதைப் பற்றியும் மேனோன் பெருமையாகச் சொல்லிக் கொண்டார். எல்லாம் முடிந்து கண்ணுக்கினியாளும் சக மாணவிகளும், விடுதி அறைக்குத் திரும்பிய போது இரவு பத்தேமுக்கால் மணிக்கு மேல் ஆகிவிட்டது. விடுதியிலே வார்டன் அறை முகப்பிலிருந்த டெலிபோன் பூத் பூட்டப்பட்டு விட்டது. மற்ற அறைகளிலும் அநேகமாக விளக்குகள் அணைக்கப் பெற்று உறங்கத் தொடங்கியிருந்தார்கள். அறையில் உடனிருக்கும் மாணவி விஜயலட்சுமி தூக்கக் கிறக்கத்தோடு எழுந்து வந்து கண்ணுக்கினியாளுக்குக் கதவைத் திறந்து விட்டுவிட்டு உடனே போய்ப் படுக்கையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள். வார்டனை எழுப்பி டெலிபோன் பூத் அறையைத் திறக்கச் சொல்லிப் பேசலாமா என்கிற தயக்கத்தோடு சிந்தித்தாள் அவள். யாரோடு பேசி விவரங்களை அறிவது என்று திகைப்பு ஏற்படவே, அந்த எண்ணத்தையும் கைவிட வேண்டியதாயிற்று. உடைமாற்றிக் கொண்டு ஒரு கிளாஸ் தண்ணீர் பருகியபின் விளக்கை அணைத்து விட்டு அவளும் படுத்தாள். உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு கரையில் இழுத்தெறிந்த மீனாகப் படுக்கையில் தவித்தாள் அவள். எப்போது விடியும் என்று மனம் பதறியபடியே படுத்திருந்தவள் தன்னையும் மீறிய அயர்ச்சியில் சிறிது கண்ணயர்ந்தாள். விடிந்ததும் உடனே தினசரிப் பத்திரிகைகள் கிடைக்காத ஊர் மல்லிகைப் பந்தல். மதுரையிலிருந்து வெளிவருகிற தினசரிகளும் சரி, சென்னையிலிருந்து வெளிவருகிற தினசரிகளும் சரி காலை ஒன்பது மணிக்கு மேல் தான் மல்லிகைப் பந்தல் நகர எல்லைக்குள்ளேயே வந்து சேரும். அதனால் செய்தித் தாளிலிருந்து தகவல் தெரிந்து கொள்வதற்குள் யாரிடமாவது விசாரித்தே தெரிந்து கொண்டு விடலாம் என்று விடிந்ததும் பல் விளக்கிவிட்டு அறைத் தோழியோடு வெளியேறினாள் கண்ணுக்கினியாள். காப்பிக்காக மெஸ்ஸுக்குள் நுழைந்த போதே அவள் எதிர்பார்த்த தகவல் தெரிந்துவிட்டது. முந்திய இரவு ஏழு - ஏழரை மணிக்கு மல்லை இராவணசாமியே வழிக்கு வந்து மாணவி பத்மாவிடம் தவறாக நடந்து கொண்ட கண்டக்டரைக் கொல்லைப்புறம் வழியாகத் தமது பங்களாவுக்கு வரவழைத்து மாணவர்களுக்கு முன்னால் நிறுத்தி அவர்களிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லி விட்டாராம். ஆனால் மன்னிப்புக் கேட்டு முடிந்து மாணவர்கள் கோபம் தணியும் வரையில் தந்திரமாக இருந்த இராவணசாமி இருளில் தம் பங்களாவிலிருந்து வெளியேறிய மாணவர்களைப் பாதி வழியில் ஆட்களை அனுப்பித் தாக்குவதற்கு ஏற்பாடு செய்தாராம். மாணவர்கள் சேர்ந்து கூட்டமாகத் திரும்பி வந்து கொண்டிருந்ததாலும், அண்ணாச்சி முதலியவர்கள் துணைக்கு இருந்ததாலும் இராவணசாமி அனுப்பிய முரடர்களைச் சமாளித்து விரட்டியிருக்கிறார்கள். கண்ணுக்கினியாளும் அவளுடைய அறைத் தோழியும் மெஸ்ஸிலே அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருந்த போது சக மாணவிகள் சுற்றிலும் சூழ்ந்து கொண்டு இந்த விவரங்களையெல்லாம் சொன்னார்கள். பாண்டியனுக்கும் மாணவர்களுக்கும் எந்த அபாயமும் நேரவில்லை என்று அறிந்த பின்பே அவள் நிம்மதி அடைந்தாள்.

     "இவ்வளவு நடந்திருக்கிறதே, வி.சி. ஏன் வாயை மூடிக் கொண்டு சும்மா உட்கார்ந்திருக்கிறார்? மாணவர்கள், பஸ் ஊழியர்கள் தங்களிடம் மன்னிப்புக் கோர வேண்டி இராவணசாமியின் பங்களா வாசலில் மறியல் செய்த போது வி.சி. ஏன் போய் தலையிடவில்லை? நமக்காக இல்லாவிட்டாலும் ஆளும் கட்சிப் பிரமுகர் இராவணசாமிக்காகக் கூட அவர் பரிந்து கொண்டு வரவில்லையே, ஏன்?"

     "நேற்று முழுவதும் வி.சி. யுனிவர்ஸிடி பக்கமே வரவில்லை. லேக்வியூ ஹோட்டலில் ஏதோ செமினாராம். அங்கேயே இருந்து விட்டார்..."

     "இந்த மாதிரி நேரங்களில் தப்பி நழுவுவதற்கு அவருக்கு எப்போதுமே இப்படி ஏதாவது ஒரு செமினார் இருக்கும்" என்றாள் ஒரு மாணவி. அவள் குரலில் கேலி நிரம்பியிருந்தது.

     காப்பியை முடித்துக் கொண்டு காலை எட்டு மணிக்கு மெஸ்ஸிலிருந்து திரும்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் பாண்டியனிடமிருந்து அவளுக்கு ஃபோன் வந்தது.

     "நம்முடைய போராட்டம் வெற்றியாக முடிந்து விட்டது. ரொம்ப நேரம் மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த இராவணசாமி கடைசியில் விட்டுக் கொடுத்து இறங்கி வர வேண்டியதாகிவிட்டது. அந்தக் கண்டக்டரையே வரவழைத்து எங்களிடம் மன்னிப்புக் கேட்க வைத்து நாங்கள் கோபப்படாமல் வெளியேறச் செய்த பின், பின்னாலேயே லாரிகளில் குண்டர்களை அனுப்பி எங்களைத் தாக்கவும் ஏற்பாடு செய்துவிட்டார். நாங்கள் கூட்டமாகச் சேர்ந்திருந்து தாக்க வந்தவர்களை விரட்டியடித்தோம். அப்புறம் இங்கே ஹாஸ்டலுக்குத் திரும்ப இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. மன்னித்துக் கொள்! நீ திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தும் இந்தக் கலவரங்களினால் உன் நாடகத்துக்கும், கதகளிக்கும் வரமுடியாமல் போய்விட்டது. அந்தப் பெண் - அதுதான் உன் சிநேகிதி பத்மாவிடம் இனிமேல் பயப்படாமல் தினமும் பஸ்ஸில் வரலாம் என்று சொல்லு" என்றான்.

     "எங்க நாடகமும் முடிந்து நான் அறைக்கு வரப் பதினொரு மணிக்கு மேல் ஆயிடிச்சு. எனக்கு உங்களைப் பத்தி ஒரே கவலை. விசாரிச்சுத் தெரிஞ்சுக்கவும் முடியலே. இராத்திரி எல்லாம் தூக்கமில்லாமல் தவிச்சுப் போனேன்."

     "நீ கவலைப்பட்டுத் தவிச்சிக்கிட்டிருப்பேன்னுதான் ராத்திரியே உனக்கு ஃபோன் பண்ணிச் சொல்ல நினைச்சோம். ஃபோன் பண்ண முடியாமப் போச்சு. அண்ணாச்சியும் கடையைப் பூட்டிக்கிட்டு எங்களைப் பார்க்க அங்கே வந்திட்டாரு. அவரும், வேற சில ஆட்களும் எங்களைத் தேடிக்கிட்டு அங்கே வந்திருக்காட்டித் துரத்தி அடித்து வந்து விரட்டின குண்டர்ங்ககிட்டேயிருந்து நாங்கத் தப்பியிருக்க முடியாது. அண்ணாச்சியும் அவரோட ஆட்களும் வந்து நின்னது எங்களுக்குப் பெரிய பாதுகாப்பா இருந்திச்சு" என்றான் பாண்டியன். கண்ணுக்கினியாள் தன் பதிலில் ஒரு விஷயத்தை அவனுக்கு நினைவூட்டினாள்.

     "சரி! அது போகட்டும். எடுத்த காரியத்தை வெற்றியா முடிச்சாச்சு. பேரவைத் தேர்தல் முடிஞ்சு தலைவர், செயலாளர் எல்லாரும் வந்தப்புறமும் கூட மாணவர் பேரவைத் தொடக்க விழாவையோ மாணவர்களின் விவாத அரங்கையோ நாம் இன்னும் நடத்தவில்லை. இங்கே பல மாணவ மாணவிகளுக்கு இது ஒரு பெரிய குறையாக இருக்கும் என்று தெரிகிறது..."

     "அடுத்த வாரம் நேரு விழாவைக் கொண்டாடுகிறோம். சோஷியாலஜி பேராசிரியர் வீரராகவன் தலைமை வகிக்கிறார். நேருவின் சோஷலிச சமுதாயத்தை அமைக்கும் ஆசை அவர் காலத்திலேயே வெற்றி பெற்றது என்றும், வெற்றி பெறவில்லை என்றும் இரு அணிகளாகப் பிரிந்து நாம் அந்த விழாவில் ஒரு விவாதப் பட்டிமன்றம் நடத்துகிறோம். அதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. யுனிவர்ஸிடி ஆடிட்டோரியத்தில் இந்த விழாவை நடத்தப் போகிறோம்."

     "ரொம்பச் சரி! அதில் நீங்கள் எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டு விவாதிக்கப் போகிறீர்கள்?"

     "நீ எந்தக் கட்சியை எடுத்துக் கொண்டு விவாதிக்கப் போகிறாயோ, அதற்கு நேர் எதிர்க்கட்சியை எடுத்துக் கொண்டு தான் நான் விவாதிப்பேன்..."

     "அப்படியானால் உங்கள் கட்சி நிச்சயமாகத் தோற்றுத்தான் போகப் போகிறது..."

     "போதும்! ஃபோனை வை. இங்கே 'பூத்'துக்கு வெளியே ஃபோனுக்காக நிறைய மாணவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றதை நேரில் பேசிக் கொள்ளலாம்" என்று சொல்லி அந்த நீண்ட டெலிபோன் உரையாடலை முடித்தான் பாண்டியன். பேசிவிட்டு என்.சி.சி.க்காக அவன் ஓடவேண்டியிருந்தது.

     அன்று காலை வகுப்புக்களுக்கு முன் மாணவர்களை மைதானத்தில் கூடச் செய்து துணைவேந்தர் தாயுமானவனார் இருபத்தைந்து நிமிடங்கள் அறிவுரை வழங்கினார். "மாணவர்கள் கலகக்காரர்கள் என்றே தொடர்ந்து பெயரெடுத்துவிடக் கூடாது. ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களுமே நமது கல்வியாகிவிடாது. பஸ் ஊழியர்களோடு மோதல்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் கோரிக்கைகளை நீங்கள் என்னிடம் முறையாகத் தெரிவித்தால் நான் உடனே அவற்றைக் கவனிப்பேன்" என்று அவர் பேசிய போது அதை எதிர்த்தும், நகையாடியும், கூட்டத்திலிருந்து மாணவ மாணவிகள் குரல் எழுப்பினார்கள். எதிர்ப்பைக் கண்டு பேச்சைச் சுருக்கமாக முடித்துக் கொண்டு தம் அறைக்குப் போய்விட்டார் துணைவேந்தர். முதல் பாட வேளை இதில் போய்விட்டது. துணைவேந்தரின் மைதானக் கூட்டம் முடிந்து கலையும் போது பாண்டியனை மீண்டும் சந்தித்து, "இன்று பகல் காட்சிக்கு, 'ஹில்வியூ' தியேட்டரில் ஆங்கிலப் படம் பார்க்கப் போக வேண்டும்! இரண்டரை மணிக்கு உங்களை யுனிவர்ஸிடி லைப்ரரி வாசலில் சந்திக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் மற்ற மாணவிகளோடு போய்விட்டாள் கண்ணுக்கினியாள். இரண்டாவது பாட வேளையில் அவளுக்குத் 'தோற்பாவைக் கூத்து', 'குறவஞ்சி நாடகங்கள்' போன்ற ஆரம்ப கால நாடகங்களினது நிலை குறித்து விரிவுரை நடந்தது. அதே வேளையில் பாண்டியனுக்கு வரலாற்றுப் பாடம். வரலாற்று விரிவுரையாளர் சபாபதி கால்மணி நேரம் பேசினாலும் அதில் 'இந்தக் காலகட்டத்திலே' என்ற தொடர் பதினைந்து முறையாவது திரும்பத் திரும்ப வரும். அன்று அவர் வகுப்புக்குள் நுழையுமுன்னேயே போர்டில் சாக்பீஸால், 'இந்தக் காலகட்டம் நீங்கள் வரலாற்று விரிவுரையாளரால் அறுக்கப்படுவதற்குரியது. உங்களுக்கு மனமார்ந்த அனுதாபங்கள்' - என்று பெரிதாக எழுதிப் போட்டிருந்தான் யாரோ ஒரு குறும்புக்கார மாணவன். உள்ளே நுழைந்து பொறுமையாகப் 'பிளாக் போர்டில்' இருந்த அந்த வாக்கியத்தை அழித்து விட்டு விரிவுரையைத் தொடங்கினார் அவர். வகுப்பு, பாட வேளைக்கான முழு நேரத்துக்கு முன்பே முடிந்துவிட்டது. மூன்றாவது பாடவேளைக்கான பேராசிரியர் அன்று வரவில்லை. மாணவர்கள் எல்லோரும் நேரே பகல் உணவுக்காக மெஸ்ஸுக்குப் போய்விட்டார்கள். மெஸ்ஸில் உள்ளே வந்திருந்த சில மாணவர்கள் இன்னும் உள்ளே வராத தங்கள் நண்பர்களுக்காகச் சாவிக் கொத்து, கைக்குட்டை, புத்தகங்களை வைத்து உட்காரும் இடங்களை ரிசர்வ் செய்திருந்தார்கள். திடீரென்று நுழைந்த ஒரு மாணவன் ஏற்கெனவே ஒரு நாற்காலியில் மற்றவன் போட்டிருந்த கைக்குட்டையை எடுத்தெறிந்து விட்டுத் தான் முந்திக் கொண்டு சாப்பிட உட்காரவே, வாஷ்பேசினில் கைகழுவப் போயிருந்த கைக்குட்டையின் உரிமையாளன் திரும்பி வந்து இரைந்து கத்தி, சண்டை போடத் தொடங்கி அதுவே கைகலப்பாக முற்றிவிடும் போலிருந்தது. பாண்டியன் இருவருக்கும் நடுவே குறுக்கிட்டுச் சமாதானப்படுத்தி வைத்தான்.

     பிற்பகல் வகுப்புக்கு அவன் போகவில்லை. இரண்டே கால் மணிக்கு நூல் நிலைய வாயிலில் கண்ணுக்கினியாளை எதிர்பார்த்து அவன் காத்திருந்தான். இரண்டரை மணிக்கு அவள் வந்தாள். வெளிர் நீல வாயில் புடவையோடு அப்போது அவள் தன்னைத் திரும்பத் திரும்பப் பார்க்க வைக்கும் கவர்ச்சி நிறைந்து அவன் எதிரே வந்து நின்றாள். அவளது மை தீட்டிய வசீகர விழிகளும், சிவந்த மாதுளை இதழ்களும் அவன் மனத்தைச் சூறையாடின. அவன் சொன்னான்: "சினிமாப் பார்க்கப் போக வேண்டாம்! உன்னையே பார்த்துக் கொண்டு நிற்கலாம் போல் தோன்றுகிறது! ரொம்ப நாளைக்கு முன் லைப்ரரியில் 'தீபன்' எழுதிய 'அரும்பிய முல்லை' என்ற புத்தகத்தில் ஒரு கவிதை படித்தேன். உன்னைப் பார்த்ததும் இப்போது மீண்டும் அந்தக் கவிதைதான் நினைவுக்கு வருகிறது..."

     "எங்கே? அந்தக் கவிதையைத்தான் கொஞ்சம் சொல்லுங்களேன்... நானும் தெரிந்து கொள்கிறேன்..."

     "மங்கைப் பருவம் உன் மேனி முழுவதும்
          பொங்கி வழியுதடி!
     செங்கையின் வீச்சினிலும் - உன் தன்
          செந்தமிழ்ப் பேச்சினிலும் - இள
     அன்னநடை தன்னிலும் - நீ
          அங்குமிங்கும் ஓடிஆடித் திரியும்
     மின்னல் நடைதன்னிலும் - அந்த
          மெட்டி குலுங்கும் இசை தன்னிலும் - இள
     மங்கைப் பருவம் பொங்கி வழியுதடீ!"

     "தப்பு! நான் இன்னும் மெட்டி அணியவில்லை..."

     "அதனாலென்ன? சீக்கிரம் அணியச் செய்து விட்டால் போகிறது."

     அந்தக் கவிதையைப் பாண்டியன் தன்னிடம் கூறியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது என்பது அவள் முகத்தின் இங்கித நளின உணர்வுகளிலிருந்து புரிந்தது. ஹில்வியூ தியேட்டர் வாசலுக்கு அவர்கள் போகும்போது படம் தொடங்க இன்னும் அரை மணி நேரம் இருந்தது. நேரம் போக வேண்டுமே என்பதற்காக எதிரே இருந்த காப்பி ஹவுஸில் நுழைந்து அவன் தனக்குத் தேநீரும் அவளுக்கு அவள் கேட்டபடி காப்பியும் ஆர்டர் செய்தான். கொண்டு வந்து வைத்த சர்வர் தேநீரை அவள் முன்பும் காப்பியை அவன் முன்பும் மாற்றி வைத்துவிட்டான். பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருமே அதைக் குடிக்கத் தொடங்கி ஒரு மடங்கு உள்ளே போனதும் தான் இந்த மாற்றம் தெரிந்தது.

     "அடடா இது காப்பி!... நான் டீ தான் கேட்டேன்" என்று மீதிக் காப்பியை அப்படியே கோப்பையோடு மேஜையில் வைத்தான் பாண்டியன். தேநீரை ஒரு மடக்குப் பருகியிருந்த அவளும் மீதித் தேநீரோடு கோப்பையை அவனருகே நகர்த்தினாள். இருவரும் ஒருவரையொருவர் குறும்புத்தனமாகப் பார்த்தபடி கோப்பைகளை மாற்றிக் கொண்டு அப்புறம் பருகினார்கள். பாண்டியன் குறும்பாக அவளிடம், "இனி நாம் ஒவ்வொரு தடவை இங்கே வரும் போதும் இந்த சர்வர் இப்படியே மாற்றிக் கொடுத்தால் அவனுக்கு நிறைய 'டிப்ஸ்' தரலாம்" என்றான். அவள் சிரித்தாள். அந்த வேளையில் அவர்களுக்கு உள்ளே இனிய உணர்வுகள் நிறைந்திருந்தன. மனம் இரண்டுமே ஒன்றாகி ஒரே விதமான உணர்வுகளால் இணைக்கப்பட்டது போல் இருந்தது. 'உள்ளூறக் கனிந்து ததும்பும் அளவற்ற பிரியத்தை எப்போதும் வார்த்தைகளால் சொல்லிக் கொள்வதற்கு முயல்கிறோமோ அப்படிச் சொல்லிக் கொள்வதற்கு முயலும் முதல் விநாடியிலேயே அதன் மேல் செயற்கை நிழல் வந்து படர்ந்து விடுகிறது' என்பதை உணர்ந்தவர்கள் போல் அவர்கள் அப்போது ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமலே பரஸ்பரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மூன்றே கால் மணிக்குத் தியேட்டரில் நுழைந்த போது படம் தொடங்க இன்னும் கால்மணி நேரமே இருந்தது.

     அந்தப் படமும் உருக்கமான காதல் கதையை மையமாகக் கொண்டது. ஆங்கிலப் படமாதலால் பட்டுக் கத்தரித்தது போல் சுருக்கமாக எடுத்திருந்தார்கள். மூன்றரை மணிக்குத் தொடங்கி மாலை ஆறு மணிக்கு முடிந்து விட்டது. வெளியேறும் போது தான் தங்களைப் போலவே பல மாணவ மாணவிகளின் இணைகள் அங்கு படத்துக்கு வந்து திரும்புவதை அவர்கள் காண முடிந்தது.

     படம் விட்டதும் சிறிது தொலைவு பேசிக் கொண்டே மலைச் சாலையில் உலாவச் சென்றார்கள் அவர்கள். இரவு உணவும் வெளியில் ஒரு ஹோட்டலிலேயே முடிந்தது. இரவு பத்து மணிக்குள் இருவருமே பல்கலைக் கழகத்துக்குத் திரும்பி அவரவர் விடுதிகளுக்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள்.

     மறுநாள் காலையில் தினசரிகளில் மாநில அமைச்சர்களில் ஒருவர் மாணவர்களைப் பற்றிப் பேசிய பேச்சு ஒன்று வெளிவந்திருப்பதைப் பாண்டியன் படித்த போது அவனுக்கும் ஆத்திரம் மூண்டது. "மாணவர்கள் தாங்கள் மாணவர்களாக இருப்பதனாலேயே எதை எதிர்த்தும் எப்படியும் போராட முன் வருவார்களேயானால் அதன் பயனை நிச்சயம் அனுபவிப்பார்கள். படிப்பைத் தவிர அவர்கள் வேறு வழிக்கு வரக்கூடாது. விஷயங்களின் நியாயம் அநியாயங்கள் புரியக் கூடிய பக்குவம் வரும் முன்னால் அரை வேக்காடுகளாக நம் நாட்டு மாணவர்கள் நடந்து கொள்வதாகவே நான் நினைக்கிறேன். பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் உருப்பட வேண்டுமானால் அங்கே முதலில் மாணவர்கள் யூனியன்களைக் கலைக்க வேண்டும். மாணவர் தலைவர்கள், செயலாளர்களைத் தேர்ந்தெடுப்பது நிற்க வேண்டும்" என்று பேசியிருந்தார் அந்த அமைச்சர். கை சுத்தமில்லாமல் 'லஞ்ச பூஷணம்' பட்டம் பெறத்தக்க அளவு மோசமான நடத்தை உள்ள அந்த அமைச்சர் மாணவர்களைப் பற்றி அப்படிப் பேசியிருந்தது மாணவர்கள் எல்லோரையும் அவமானப்படுத்துவது போலிருந்தது. நல்ல வேளையாக அதே மந்திரி இரண்டு மூன்று தினங்களில் மல்லிகைப் பந்தலுக்கு வந்து பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கி வைக்க இருப்பதாகவும் பத்திரிகைகளில் அன்றே வேறொரு பத்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது.

     உடனே நண்பர்களைக் கலந்து பேசிக் கரியமாணிக்கத்தின் அமைச்சரவையைச் சேர்ந்த அந்த மந்திரிக்குக் கறுப்புக் கொடி காட்டித் 'திரும்பிப் போ' என்ற முழக்கங்களோடு எதிர்கொள்ள ஏற்பாடு செய்தான் பாண்டியன். ஆனால் போலீஸார் அதை எப்படியோ அறிந்து பல்கலைக் கழகப் பகுதியை விட்டு மாணவர்களே வெளியேற முடியாதபடி மந்திரி வருகிற தினத்தன்று தடை உத்தரவுகள், ஐந்து பேருக்கு மேல் கூடி நிற்க முடியாதபடி ஆணைகள் எல்லாம் பிறப்பித்து விட்டார்கள். எப்படியும் அந்த மந்திரிக்குத் தங்கள் அதிருப்தியைக் காட்ட விரும்பிய பாண்டியன், கண்ணுக்கினியாள் மூலம் நூற்றுக்கு மேற்பட்ட மாணவிகளை இரகசியமாகத் தயார் செய்து கைக்குட்டைகள் போல் சிறிய சிறிய கறுப்புத் துணிகளை மறைத்து வைத்திருக்கச் சொல்லி, பெண்கள் விடுதியையொட்டிய சாலையை மந்திரி கடக்கும் போது கறுப்புக் கொடி பிடிக்கவும், 'திரும்பிப் போ' என்ற வாசகம் அடங்கிய அட்டைகளைக் காண்பிக்க வைப்பதற்கும் திட்டமிட்டிருந்தான். தடையை மீறுவதற்காகவோ, கறுப்புக்கொடி காட்டுவதற்காகவோ மாணவர்களைத் துன்புறுத்துவது போல் மாணவிகளைப் போலீஸார் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்தே மாணவிகளிடம் அந்தப் பொறுப்பை விட்டிருந்தான் பாண்டியன். இடுப்பிலே மறைத்த கறுப்புக் கைக்குட்டையும் அரை அடி ஸ்கேலுமாக எதேச்சையாக நிற்பது போல் நின்ற பல மாணவிகளும், கண்ணுக்கினியாளும், மந்திரியின் ஜீப் அருகே நெருங்கியதும் இடுப்பில் மறைத்திருந்த கறுப்புத் துணிகளை எடுத்து ஸ்கேல் நுனியில் செருகி நீட்டி எதிர்ப்புக் குரல்களை முழங்கினார்கள். 'மாணவர்களை அவமதிக்கும் மந்திரியே திரும்பிப் போ', 'மாணவர்கள் உரிமைகளைப் பறிக்க முயலும் எதேச்சாதிகாரியே! திரும்பிப் போ' - என்று குரல்கள் எழுந்த சுவட்டோடு கறுப்புக் கொடிகள் திடீரென்று முளைத்ததும் பெரிய போலீஸ் அதிகாரி ஒருவர் ஓடி வந்து கைகளை உயர்த்திக் கூப்பாடு போட்டு மாணவிகளை மிரட்டி அனுப்ப முயன்றார். கண்ணுக்கினியாள் அவரிடம் கூறினாள்: "எங்களை நீங்கள் தடுக்க முடியாது! ஜனநாயக நாட்டில் இந்த உரிமை எங்களுக்கு உண்டு. இப்போது ஜீப்பில் போகிற இதே மந்திரி முன்பு பதவிக்கு வராத காலத்தில் மனித குல மாணிக்கம் நேருவுக்கே, அவர் சென்னை வந்த போது கறுப்புக் கொடி காட்டியிருக்கிறார். இப்போது தமக்குக் கறுப்புக் கொடி காட்டுகிறவர்கள் மேல் இவர் கோபப்படுவானேன்? சரித்திரம் திரும்புகிறது."

     ஒன்றும் செய்யத் தோன்றாத போலீஸ் அதிகாரி மாணவிகளை அமைதியாகக் கலைந்து போகுமாறு நயமாக வேண்டினார். "மாணவிகளாகிய நீங்கள் மாணவர்களைப் போல் முரட்டுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது. உங்களிடம் இப்படிப்பட்ட அநாகரிகமான காரியங்களை நாங்கள் எதிர்பார்க்கவில்லை" என்றார்.

     "அதனால் தான் நாங்கள் இதைச் செய்கிறோம். நீங்கள் எதிர்பார்ப்பதை மட்டுமே நாங்கள் எப்படிச் செய்ய முடியும்?" என்று அவரிடம் பதிலுக்குக் கேட்டாள் கண்ணுக்கினியாள். போலீஸ் அதிகாரி பேசாமல் விலகி நின்று விட்டார். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்து முடிந்தது. ஆனால் அந்தப் போலீஸ் அதிகாரி கோபத்தோடு கண்ணுக்கினியாளின் பெயரை விசாரித்துக் குறித்துக் கொண்டார். அதைப் பற்றி அவள் கவலையோ பதற்றமோ அடையவில்லை. கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் முடிந்து மாணவிகளோடு அவள் விடுதிக்குத் திரும்பி ஒரு மணி நேரம் கழித்துப் பெண்கள் விடுதியின் பிரதம வார்டன் அம்மையார் உடனே வருமாறு அவளைத் தன் அறைக்குக் கூப்பிட்டு அனுப்பினாள். வார்டனின் அறைக்குள் கண்ணுக்கினியாள் நுழைந்த போது அந்த அம்மையார் மிகவும் கோபமாக முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவளை எதிர்கொண்டாள். "நீ படிக்கத்தானே இங்கே வந்திருக்கே?" என்ற வார்டனின் முதல் கேள்வியே கடுமையாக அவள் முகத்தில் வந்து அறைவது போல் இருந்தது.