பதினைந்தாவது அத்தியாயம்

     வெளியே கதவு தட்டப்பட்டதும் சற்குணம் பதறிப் போனார். அவர் கண்களில் பயமும் பதற்றமும் தெரிந்தன. ஆனால் பிச்சைமுத்து பதறவில்லை. மோட்டார் ரூமிலிருந்து பின்புறம் கிணற்றுக்குள் குழாய் போவதற்கு ஜன்னல் அளவுக்கு துவாரம் இருந்தது. கதிரேசனுக்குத் தான் செய்யப் போவதைக் குறிப்புக்கள் மூலமே புலப்படுத்தி விட்டு அந்தத் துவாரத்தின் மூலம் உடலை வளைத்து வெளியேறிக் குழாயைப் பிடித்துக் கொண்டு ஓசைப் படாமல் கிணற்றுக்குள் கீழ் நோக்கி இறங்கினார் பிச்சைமுத்து. அவரைத் தொடர்ந்து கதிரேசனும் அப்படியே செய்தான். ஓசை கேட்கும்படி தண்ணீரில் குதித்தும் விடாமல், மிகமிக மேற்பக்கமே தங்கியும் இருக்காமல் நடு ஆழம் வரை குழாயைப் பிடித்துக் கொண்டு இறங்கிச் சென்று திரிசங்கு நிலையில் அப்படியே தொங்கிக் கொண்டிருந்தார்கள் அவர்கள். சற்குணம் எவ்வளவுதான் பலவீனமான மனம் உடையவராயிருந்தாலும் தங்கள் இருவரையும் காட்டிக் கொடுக்கும் மோசமான காரியத்தைச் செய்யத் துணிந்து விடமாட்டார் என்ற நம்பிக்கை பிச்சைமுத்துவுக்கு இருந்தது. அவரும் கதிரேசனும் தங்கள் உடம்புகள் ஒல்லியாயிருந்ததற்காக அன்று மகிழ்ச்சியடைந்தது போல் அதற்கு முன்பு என்றுமே மகிழ்ந்ததில்லை. அறையிலிருந்து கிணற்றுக்குள் குழாய் போவதற்காக விடப்பட்டிருந்த பெரிய திறந்த ஜன்னல் போன்ற சதுரத் துவாரம் கொள்ளுமளவு ஒல்லியாயிராவிட்டால் அன்று அந்தக் கணத்தில் அவர்கள் தப்பியிருக்கவே முடியாது. பஞ்சாயத்துத் தலைவரின் ஆட்கள் ஏதோ கேட்டதும், கத்தியதும் சற்குணம் பதில் கூறியதும் குழாயைப் பற்றித் தொங்கிக் கொண்டிருந்த பிச்சைமுத்துவுக்கும், கதிரேசனுக்கும் மங்கலாகக் கேட்டன. வந்து கதவைத் தட்டியவர்கள் அதிகமாகச் சந்தேகப்பட்டுக் கிணற்றுப் பக்கம் எல்லாம் புகுந்து தேடிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சற்குணம் சொன்ன பதிலிலேயே திருப்தியடைந்து நம்பிக்கையோடு அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிந்த பின் மீண்டும் குழாய் வழியே மேலே ஏறிக் கிணற்றின் மேற் பகுதி விளிம்புச் சுவரில் தாவித் தொற்றி மீண்டார்கள், பிச்சைமுத்துவும் கதிரேசனும். "மறுபடியும் அறைக்குப் போய் சற்குணத்திடம் பேச்சுக் கொடுத்துப் பார்க்கலாமா?" என்று கதிரேசன் கேட்டபோது பிச்சைமுத்து அதைச் செய்ய வேண்டாமென்று மறுத்துவிட்டார். "சந்தர்ப்பம் சரியில்லை. ஆட்கள் சந்தேகப்பட்டுச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் தெரிந்து கொண்டதை விட அதிகமாக எதையும் மிஸ்டர் சற்குணத்தினிடம் இனி நாம் தெரிந்து கொண்டு விட முடியாது. முதலில் நாம் இங்கிருந்து வெளியேறித் தப்பியாக வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து" என்றார் பிச்சைமுத்து. அந்த வேளையில் உள்ளூர்க்காரரும் அநுபவசாலியுமாகிய அவர் பேச்சைக் கேட்டு அதன்படி நடப்பது தான் நல்லதென்று கதிரேசனுக்கும் தோன்றியது. அவர்கள் இருவரும் வாழைத் தோட்டத்திலிருந்து காட்டு வழியாகச் சுற்றி நடந்து மறுபடியும் சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பவும் ஆலமரத்தடிக்கு வந்து சேர்ந்த பின்பே நிம்மதியாக மூச்சு விட்டார்கள். அப்போது ஏறக்குறைய இரவு ஒரு மணிக்கு மேலாகியிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் டூரிங் தியேட்டரில் சினிமா விட்டுவிடுவார்கள். ஆதலால் அந்தக் கூட்டத்துக்கு முந்தியே ஊருக்குள் தனித்தனியே பிரிந்து சென்று விட எண்ணினார்கள் அவர்கள்.

     டிரில் மாஸ்டர் பிச்சைமுத்து கூறினார்: "மிஸ்டர் கதிரேசன்! இனிமேல் நீங்களும் உங்களைச் சேர்ந்த மாணவர்களும் தொடர்ந்து இந்த ஊரில் தங்கிப் புதிதாக எதையும் தெரிந்து கொள்ள வழி இல்லை. உங்களையெல்லாம் எப்படி எதில் மாட்டி வைக்கலாம் என்று இங்குள்ள பஞ்சாயத்து தலைவரும், போலீஸும் சதி செய்யக் காத்திருக்கிறார்கள். மல்லிகைப் பந்தலுக்குத் திரும்பச் சென்று அங்கே உங்கள் போராட்டத்தைத் தீவிரமாக வலுப்படுத்துங்கள். நீங்கள் விரும்பினால் காலை மூன்று மணிக்கு இங்கிருந்து புறப்படும் லாரி ஒன்றில் நம்பிக்கையாக உங்களை ஏற்றி அனுப்புகிறேன்."

     "ஒரு லாரியில் நாங்கள் அத்தனை பேரும் போக முடியாதே சார்?"

     "மல்லிகைப் பந்தலிலிருந்து கறிகாய் ஏற்றி வந்த லாரி தான். இங்கிருந்து காலியாகத் திரும்பப் போகும். டிரைவர் சீட்பக்கம் இருவரும் மற்றவர்கள் பின்னாலுமாக ஏறிக் கொண்டு போய்விடலாம்!... அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்."

     கதிரேசனும் அந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்தான். பாண்டியன் முதலிய மாணவர் தலைவர்களால் தாங்கள் எதற்காக அனுப்பப்பட்டோமோ, அந்தக் காரியம் இந்தக் கிராமத்தில் முடிந்து விட்டதென்றே கதிரேசனுக்கும் தோன்றியது. பணத்துக்கும் அதிகாரத்துக்கும் பயந்துவிட்ட சற்குணத்திடம் இருந்து மேலே எதுவும் தெரிய வழி இருப்பதாகத் தோன்றாததால் தன் நண்பர்களிடம் கலந்து பேசிப் பயணத்துக்குத் தயாரானான் கதிரேசன்.

     பிச்சைமுத்து மாணவர்களின் பிரயாணத்துக்குச் சிரத்தையோடு எல்லா உதவிகளையும் செய்தார். பணத்துக்கும், அதிகாரங்களுக்கும் பயப்படுகிற மனப்பான்மையுள்ள ஒவ்வோர் இந்திய கிராமத்திலும் பிச்சைமுத்துவைப் போல் யாராவது ஒரு தெளிவான - துணிவான மனிதர் மட்டும் இருக்க முடிவதைக் கதிரேசன் கண்டான். கிராமத்தில் அந்த ஒரு மனிதர் இருக்கிறார் என்பதை விட அந்த ஒரு மனிதரே கிராமமாக இருக்கிறார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என்பதை நன்றியோடு நினைத்தான் கதிரேசன். லாரியில் புறப்படுவதற்கு முன் பிச்சைமுத்துவின் வீட்டில் அவர்கள் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்த வேளையில் அவருடைய புத்தக அலமாரியில் சமூகப் புரட்சிக்கும், கலாசார புரட்சிக்கும் வித்திட்ட பல நூல்களை அவன் பார்த்தான். ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம், காந்தியடிகளின் சத்திய சோதனை, கார்ல் மார்க்ஸின் மூலதனம், சேகுவேராவின் வரலாறு முதலியவற்றை அங்கே காண முடிந்தது. பிச்சைமுத்துவின் அஞ்சாமைக்கும், தெளிவுக்கும் காரணமான நூல்களைக் கதிரேசன் அங்கே கண்டபோது அந்தக் கிராமத்தில் அவருடைய தனித்தன்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் காரணம் என்ன என்பது புரிந்தது. புறப்படுவதற்கு முன்னர், "உங்களைப் போன்ற இளைஞர்களிடம் இந்த மாதிரியான சில புதிய நூல்கள் இருக்க வேண்டும்! தயவு செய்து இப்போது இதைப் பிரித்துப் பார்க்காதீர்கள். ஊரில் போய்ப் பாருங்கள். நம் சந்திப்பின் நினைவாக இந்த நூல்களை உங்களுக்கு அளிக்கிறேன்" என்று நன்றாக உறையிட்டுக் கட்டிய ஒரு புத்தகக் கட்டை அவனிடம் அளித்தார் பிச்சைமுத்து. மாணவர்களும், கதிரேசனும் லாரியில் புறப்படுவதற்குச் சில விநாடிகளுக்கு முன்புதான் அவர் அந்தக் கட்டை அளித்ததால் அவனாலும் உடனே அதைப் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

     "உபசார வார்த்தைகள் எனக்குப் பிடிக்காது மிஸ்டர் கதிரேசன்! ஓராயிரம் பொய்யான உபசார வார்த்தைகளை மதிப்பதை விட மெய்யான தூரத்தினால் அரும்பும் ஒரு துளி கண்ணீரை அதிகம் மதிக்க வேண்டும். மறுபடியும் நாம் அடிக்கடி சந்திக்கலாம். இப்போது போய் வாருங்கள்" என்று அந்தச் சம்பிரதாய நன்றியை ஏற்காமல் சிரித்துக் கொண்டே அவர்களிடம் விடை கொடுத்தார் பிச்சைமுத்து. புறப்படுமுன் அவரால் தான் மிக அதிகமாக வசீகரிக்கப்பட்டிருப்பதைத் தனக்குத்தானே உணர்ந்தான் கதிரேசன்.

     மறுநாள் அதிகாலையில் அவர்கள் மல்லிகைப் பந்தலை அடைந்த போது மாணவர் பிரதிநிதிகளின் உண்ணாவிரதம் இன்னும் தொடர்கிறது என்பது தெரிந்தது. அண்ணாச்சிக் கடை வாசலில் லாரியை நிறுத்தி இறங்கியதும் அவர்கள் முதலில் தெரிந்து கொண்ட செய்தியே இதுதான். இரண்டு நாட்கள் சமவெளிப் பகுதி கிராமத்தில் கழித்துவிட்டு மீண்டும் மலைக்கு வந்திருந்ததால் குளிர் எப்போதையும் விட அதிகமாக உறைப்பது போலிருந்தது.

     இந்த இரண்டு மூன்று தினங்களில் மல்லிகைப் பந்தல் நகருக்குள் சில மாறுதல்கள் தெரிந்தன. பல்கலைக் கழக விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர்களில் வெளியூரைச் சேர்ந்த பெருவாரியான மாணவர்கள் தங்கள் தங்கள் ஊர்களுக்குச் சென்றுவிட்ட காரணத்தால் நகரில் மாணவர்களின் கூட்டம் குறைந்திருந்தது. உள்ளூர் மாணவர்களும், பாண்டியன் முதலிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியமானவ்ர்களுமே நகரில் மீதமிருந்தனர். பல்கலைக் கழக விடுதிகளுக்கும் 'ஸ்டாஃப் குவார்ட்டர்'ஸுக்கும் போலீஸ் காவல் இன்னும் நீடித்துக் கொண்டிருந்தது. மேரி தங்கத்தின் மரணத்துக்குக் காரணமான இளம் விரிவுரையாளர் குடும்பத்தோடு வெளியேறி, எங்கோ இரகசியமாக வெளியூர் போயிருந்தார். இரவோடு இரவாகப் போலீஸ் ஜீப்பிலேயே போலீஸார் உதவியுடன் அவர் தப்பி வெளியேறிச் சென்றதாகப் பேசிக் கொண்டார்கள். பூட்டப்பட்டிருந்த அவர் வீடு இன்னும் போலீஸ் காவலில் பாதுகாக்கப்பட்டது. துணைவேந்தர் கல்வி மந்திரியையும், கவர்னரையும் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். ஊர் நிலவரங்களைப் பற்றி அண்ணாச்சியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பாண்டியனும் மற்றவர்களும் உண்ணாவிரதம் இருக்கும் இடமாகிய பல்கலைக் கழக வாசலை ஒட்டிய பகுதிக்குப் புறப்பட்டுப் போனார்கள் கதிரேசன் முதலியவர்கள்.

     அங்கே பல்கலைக் கழகத்தின் முக்கிய வாயிலின் நடுவே பொதுவில் மூங்கில் தட்டியிட்டு மறைக்கப்பட்ட இரண்டு கீற்றுக் கொட்டகைகள் போடப்பட்டிருந்தன. கொட்டைகைகளில் பெஞ்சுகள் போட்டு விரிப்புக்கள் விரித்து மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தார்கள். தலையணைகளும், கம்பளிப் போர்வைகளும் தென்படவே குளிர் என்றும், பனி என்றும் பாராமல் உண்ணாவிரதம் இருந்தவர்கள் அங்கேயே இரவிலும் இருப்பது தெரிய வந்தது. ஒரு கீற்றுக் கொட்டகையில் மாணிவிகள் ஆறு பேரும், மற்றொரு கீற்றுக் கொட்டகையில் மாணவர்கள் ஆறு பேரும் தளர்ந்து சோர்ந்து போய்க் காட்சி அளித்தனர். கீற்றுக் கொட்டகைகளின் இருபுறமும் போலீஸார் இருந்தார்கள். ஒரு கூட்டம் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்தது. உண்ணாவிரதக் கொட்டகைகளின் முகப்புக்களிலும், மேற்புறமும் கோரிக்கை வாசகங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. உண்ணாவிரதம் இருக்கிறவர்களுக்குப் பார்க்க வந்தவர்கள் அணிவித்த மாலைகள் பக்கத்தில் குவிந்திருந்தன. சில மாணவ மாணவிகள் அருகே படிப்பதற்குப் புத்தகங்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் அந்த அதிகாலையிலேயே படித்துக் கொண்டும் இருந்தார்கள். சிலர் சோர்ந்து போய்ப் படுத்துக் கொண்டிருந்தார்கள்.

     கதிரேசன் பார்க்கச் சென்ற போது பாண்டியன் படித்துக் கொண்டிருந்தான். மோகன்தாஸ் சோர்ந்து போய்த் தலையணையில் சாய்ந்திருந்தான். கிராமத்தில் தெரிந்து கொண்டு வந்த விவரங்களையும், மேரி தங்கத்தின் பெற்றோரைச் சந்தித்ததையும், டிரில் மாஸ்டர்பிச்சை முத்து மூலம் அறிந்த உண்மைகளையும் விளக்கமாகப் பாண்டியன், மோகன்தாஸ் இருவரிடமும் விவரித்தான் கதிரேசன்.

     "மேரி தங்கத்தின் தந்தையான சற்குணம் நம்மோடு ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும் நாம் உண்மைக்காகத் தொடர்ந்து போராட வேண்டும். இந்த விஷயத்தில் நியாயம் கிடைக்கிற வரை நமது போராட்டம் நிற்காது" என்றான் பாண்டியன்.

     "நிறையப் பணத்தைக் கொடுத்து மிரட்டி மிஸ்டர் சற்குணத்தின் வாயை அடக்கி விட்டார்கள் என்றால் இனி அவரை நம்பிப் பயனில்லை" என்றான் மோகன்தாஸ்.

     அப்போது மல்லிகைப் பந்தல் நகர மாதர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவிகளுக்கும், மாணவர்களுக்கும் மாலை சூட்டி ஆதரவு தெரிவிப்பதற்காக மாதர் சங்கத் தலைவியும், காரியதரிசியும், மற்றவர்களும் ஒரு காரில் வந்து இறங்கினார்கள். முதலில் கண்ணுக்கினியாள் முதலிய மாணவிகளுக்கு மாலை சூட்டிவிட்டு அப்புறம் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு வந்தார்கள் அந்த மாதர் சங்கத் தலைவி முதலியவர்கள். அவர்களோடு கண்ணுக்கினியாளும் எழுந்திருந்து வந்தாள். களைப்பும், சோர்வும் மிகுந்த அந்த உண்ணாவிரத நிலையிலும் அவள் மான் குட்டி போல் துள்ளி நடந்து வந்து மாணவர்களை எல்லாம் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அந்த மாதர் சங்கத்தினருக்கும் அறிமுகப் படுத்தி வைத்தாள். காதோரங்களில் சுருண்டு சுழலும் கேசமும், ஒளி திகழும் கண்களும், இனிய நளினப் புன்னகையுமாக அவளைத் திடீரென்று மிக அருகில் பார்த்ததும் அப்போதுதான் முதன் முறையாகச் சந்திக்கும் ஒரு புதிய அழகியைப் போல் அவள் பாண்டியனின் பார்வையில் தோன்றினாள். வந்தவர்கள் மாலை சூட்டிவிட்டுச் சென்ற பின்பும் கூடக் கண்ணுக்கினியாள் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதிகளில் தங்கிப் பாண்டியனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தாள். பாண்டியன் அவளை வம்புக்கு இழுத்தான்:

     "கண்ணே! உண்ணாவிரதம் தான் உன்னை இவ்வளவு கவர்ச்சியாகச் செய்ய முடியும் என்றால் நீ இன்னும் ஒரு வாரம் அதிகமாகக் கூட உண்ணாவிரதம் இருக்கலாம்..."

     "யாராவது கேட்டால் சிரிக்கப் போகிறார்கள். 'கண்ணே, மூக்கே' என்றெல்லாம் கூப்பிட இதென்ன பழைய 'வள்ளி திருமண' நாடகமா, என்ன?"

     "பின்னே வேறெப்படித்தான் கூப்பிடுவது உன்னை? சுருக்கியும் கூப்பிட முடியாமல் முழுசாகவும் கூப்பிட முடியாமல் உங்கப்பா இப்படி உனக்கொரு பெயர் வைத்துத் தொலைத்திருக்கிறாரே! இதற்கு நான் என்ன செய்வது? உன் பேரைச் சுருக்கிக் கூப்பிட்டா 'கண்ணே'ன்னு தான் வருது."

     "அதற்காக இத்தனை பேர் முன்னிலையில் இப்படிக் 'கண்ணே' 'மூக்கே'ன்னு கொஞ்சத் தொடங்கிறதுதான் நியாயமா?"

     "அதாவது இரகசியமாகக் கொஞ்ச வேண்டியதைப் பகிரங்கமாகக் கொஞ்சக் கூடாது என்கிறாயா? சபாஷ்! நீ கெட்டிக்காரி..."

     "இப்படியெல்லாம் பேசினால் நான் உடனே திரும்பிப் போக வேண்டியதுதான். நிலக்கோட்டைக்குப் போன கதிரேசன் குழுவினர் திரும்பி வந்து பேசிக் கொண்டிருந்தார்கள்; என்ன சொன்னார்கள் என்று தெரிந்து கொள்ளலாமே என்று பார்த்தால் அதைச் சொல்லாமல் எதை எதையோ பேசி, நீங்கள் ரொம்பத்தான் விளையாடுகிறீர்கள்..."

     "விளையாடுவதற்கு நாம் குழந்தைகள் அல்ல."

     "இப்போதெல்லாம் குழந்தைகள் அதிகம் விளையாடுவதில்லை. நம்மைப் போன்றவர்கள் தான் அதிகமாக விளையாடிக் கொண்டிருக்கிறோம்."

     "இதைத்தான் அப்பா அம்மா விளையாட்டு என்கிறார்கள்!... பிரதர்" என்று நடுவே குறுக்கிட்டான் மோகன்தாஸ். அதைக் கேட்டு, "நான் போகிறேன். இனி இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது என்னால்" என்று பொய்க் கோபத்தோடு விருட்டென்று எழ முயன்ற கண்ணுக்கினியாளைக் கையைப் பிடித்து இழுத்து அருகே உட்கார வைத்தான் பாண்டியன். அவள் உட்கார்ந்ததும், "அவன் மேலென்ன தப்பு? நீ விளையாட்டைப் பற்றிச் சொன்னதனால் அந்த விளையாட்டின் பெயரைச் சொன்னான் அவன்" என்று மோகன்தாஸுக்குப் பரிந்து பேசிவிட்டுக் கதிரேசன் தெரிவித்த செய்திகளைப் பாண்டியன் அவளிடம் கூறினான்.

     பாண்டியன் கூறியவற்றைக் கேட்டதும் அவள், "அந்தப் பெற்றோர் இப்படி நடந்து கொள்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை" என்றாள்.

     உடனே பாண்டியன், "யார்தான் அப்படி எதிர்பார்த்தார்கள். நானும் கூடத்தான் அப்படி எதிர்பார்க்கவில்லை. நீயும் நானும் புத்திபூர்வமாக அளப்பதால் நம் கணக்குப் பிசகிப் போய்விடுகிறது. ஆனால் இப்போதெல்லாம் பணத்தை அளவு கோலாக வைத்து மனிதர்கள் நிறுக்கப் படுகிறார்கள். அந்த நிறுவையில் மிஸ்டர் சற்குணம் விலைக்குப் போய்விட்டார்..." என்றான்.

     "அவர் எப்படியும் தொலையட்டும். உண்மை நமக்குத் தெரியும். இந்த அட்டூழியத்துக்குக் காரணமான விரிவுரையாளரை இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து துரத்துகிற வரையில் நாம் விடக்கூடாது."

     "அதுதான் உறுதியாயிற்றே!"

     கண்ணுக்கினியாள் எழுந்து மாணவிகள் பகுதியில் திரும்பிப் போய் அமர்ந்து கொண்டாள். 'பல்கலைக் கழகத்தை உடனே திறக்க வேண்டும்', 'மேரி தங்கத்தின் தற்கொலையை மூடி மறைக்காதே', 'உடன் விசாரணைக்கு ஏற்பாடு செய்க', 'குற்றம் புரிந்தவர் யாராயிருந்தாலும் தண்டிக்கப்படுவதே நியாயம்', 'மந்திரிக்குச் சொந்தமானால் மனிதனுக்கு நியாயம் இல்லையா' என்பது போன்று அங்கே எழுதி வவக்கப்பட்டிருந்த வாசகங்களைப் படித்தபடி எதிரே வந்து நின்ற கூட்டத்தில் சிலர், மாணவ நலநிதிக்காக அங்கே வைக்கப்பட்டிருந்த டப்பா உண்டியலில் காசுகளையும் ரூபாய் நோட்டுக்களையும் போட்டு விட்டுப் போனார்கள். பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், டீன்கள், யாரும் உண்ணாவிரதம் நடந்து கொண்டிருந்த பகுதியில் வந்து எட்டிப் பார்க்கவே இல்லை. பூதலிங்கம் மட்டும் யாருக்கும் அஞ்சாமல் யாரை நினைத்தும் கவலைப்படாமல் தொடர்ந்து இரண்டு மாலை வேளைகளில் அங்கு வந்து மாணவர்களைச் சந்தித்து அவர்களோடு அமர்ந்து கனிவாக உரையாடி விட்டுப் போனார். துணைவேந்தரும் ரிஜிஸ்திராரும் மாணவர்கள் உண்ணாவிரதத்தால் மிகவும் பயந்து போயிருப்பதாகவும், பயத்தோடுதான் வி.ஸி. சென்னைக்குப் புறப்பட்டுப் போயிருப்பதாகவும், பூதலிங்கத்திடம் பேசியதிலிருந்து பாண்டியனுக்குத் தெரிந்தது. மேரி தங்கத்திடம் தவறாக நடந்து கொண்டு அவள் தற்கொலைக்குக் காரணமாயிருந்த மதனகோபால் என்ற விரிவுரையாளரைப் போலீஸும் பல்கலைக் கழக நிர்வகமுமே, எச்சரித்து அங்கிருந்து வெளியேற்றி வேறு ஊரில் போய்த் தங்கும்படி அறிவுரை கூறித் தக்க பாதுகாப்போடு அனுப்பிவிட்டதாகவும் பூதலிங்கம் தெரிவித்தார். நகர மக்களிடையேயும், மல்லை இராவணசாமியின் கட்சியைத் தவிர உள்ள மற்ற அரசியல் கட்சிகளிடையேயும், மாணவர்களுக்குப் பேராதரவு இருந்தது. இராவணசாமியின் கட்சியினர் மட்டும், 'உண்ணாவிரதம் இருந்தால் உடம்பு இளளக்கும். உடம்பு இளைப்பது மாணவர்களுக்கு நல்லது - இப்படிக்கு உடல் நலம் நாடுவோர் சங்கம்' - என்று கற்பனையாக ஒரு பொய்ப் பெயரைக் கீழே போட்டுக் கிண்டலான சுவரொட்டி ஒன்றை அச்சிட்டு மல்லிகைப் பந்தல் நகரம் எங்கும் ஒட்டியிருந்தார்கள். இது மாணவர்களின் கொதிப்பையும் குமுறலையும் அதிகப்படுத்தி இருந்தது. கோழைத்தனத்தினாலும் பயத்தினாலும் மல்லை இராவணசாமியின் ஆட்கள் அந்தச் சுவரொட்டியிலும் தங்கள் கட்சிப் பெயரை அச்சிட அஞ்சிப் பொய்யாக, 'உடல் நலம் நாடுவோர் சங்கம்' என்று போட்டிருந்தாலும் எம்.எல்.ஏ. தான் அதை அச்சிட்டு ஒட்ட ஏற்பாடு செய்தார் என்பதை அண்ணாச்சி உளவறிந்து கொண்டு வந்து சொல்லிவிட்டார்.

     கதிரேசன் போன்ற மாணவர்கள் நிலக் கோட்டையிலிருந்து திரும்பிய தினத்திற்கு மறுதினம் உண்ணாவிரதம் இருந்தவர்களின் நிலை மிகவும் தளர்ந்து போய்விட்டது. அன்று பிற்பகலில் அநேகமாக ஆறு மாணவிகளும், ஆறு மாணவர்களும் தளர்ந்து படுத்துவிட்டார்கள். சிலர் நிலை கவலைக்கிடமாக ஆகியிருந்தது. மாணவர்களுக்கு ஆதரவாக தாங்களும் உண்ணாவிரதம் தொடங்கப் போவதாக மல்லிகைப் பந்தல் வட்டாரத் தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் வேறு அறிவித்திருந்தது. துணைவேந்தர் இன்னும் சென்னையிலிருந்து திரும்பவில்லை. பதிவாளர் பயந்து நடுங்கினார். உண்ணாவிரதம் இருக்கும் பன்னிரண்டு பேர்களில் ஒருவருக்கு ஏதாவது நேர்ந்து விட்டாலும் நகரில் உள்ள ஆயிரக் கணக்கிலான மாணவர்கள் கொதித்து எழுவார்களே என்பது தான் பதிவாளரின் பயமாக இருந்தது. அவர் போலீஸ் அதிகாரியைச் சந்தித்தார். போலீஸ் அதிகாரி சென்னை ஐ.ஜி.யோடு ஃபோனில் பேசினார். ஐ.ஜி. மந்திரியைப் போய்ப் பார்த்துக் கலந்து ஆலோசனை செய்தார். மல்லிகைப் பந்தல் பல்கலைக் கழக விவகாரம் மல்லிகைப் பந்தல் நகரத்தோடு போகாமல் மாநிலம் முழுவதும் உள்ள இளம் மாணவ சமூகத்தைக் குமுறி எழச் செய்து விடுமோ என்று மந்திரிக்கும் உள்ளூரப் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஜம்பத்தையும் வறட்டுத் திமிரையும் விட்டுக் கொடுக்க அவர் தயாராயில்லை. அவருடைய கட்சியும் தயாராயில்லை. அதிகாரத்தை முழு மூச்சோடு பயன்படுத்த நினைத்தார் அவர். அதன் விளைவு அன்று மாலையே மல்லிகைப் பந்தலில் உண்ணாவிரதம் இருந்த மாணவ மாணவிகள் பன்னிரண்டு பேர்களும் ஐ.பி.சி. செக்ஷன் முந்நூற்று ஒன்பதின்படி 'தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக'க் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப் பெற்று ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப்பட்டார்கள். கதிரேசன், பிச்சைமுத்துவின் வார்த்தைகள் பலித்து விட்டதைக் கண்ணால் பார்த்தான்.

     "நிச்சயமாகத் தற்கொலை செய்து கொண்டு விட்ட ஒரு மாணவியைப் பற்றி விசாரிக்காமல் மூடி மறைக்கிறார்கள். அதே சமயத்தில் சும்மா உட்கார்ந்திருப்பவர்கள் மேல் 'தற்கொலை முயற்சி' என்று குற்றம் சுமத்திக் கைது செய்கிறார்கள்" என்று ஊரார் தங்களுக்குள் பேசி அரசாங்கத்தை எள்ளி நகையாடும்படி காரியங்கள் நடந்தன. அமைதியாக உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் முயற்சியைத் தந்திரமாக முறியடிக்க அரசாங்கம் மேற்கொண்ட நரித்தனமான காரியத்தால் மல்லிகைப் பந்தல் நகரப் பொதுமக்களும், பெற்றோர்களும், தொழிலாளர்களும் கொதித்தெழுந்தனர். மாணவர்களைக் கைது செய்து ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இரவிலேயே போலீஸார் நகர எல்லைக்குள் யாரும் எதற்காகவும் ஒன்று சேர முடியாதபடி உடனே தடை உத்தரவும் போட்டுத் தடுத்துவிட்டார்கள்.