![]() எமது இந்த சென்னை நூலகம் (www.chennailibrary.com) இணைய தளம், அரசு தளமோ அல்லது அரசு உதவி பெறும் தளமோ அல்ல. இத்தளம் எமது சொந்த முயற்சியினால் உருவானதாகும். ஆகவே வாசகர்கள் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவிட வேண்டுகிறேன். இங்குள்ள QR கோடினை ஸ்கேன் செய்து நேரடியாக நன்கொடை அளிக்கலாம் அல்லது எமது வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம். வெளிநாட்டில் வசிப்பவர், எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக நன்கொடை அனுப்பலாம் எமது கூகுள் பே / யூபிஐ ஐடி : gowthamweb@indianbank எமது வங்கிக் கணக்கு: A/c Name : Gowtham Web Services | Bank: Indian Bank, Nolambur Branch, Chennai | Current A/C No.: 50480630168 | IFS Code: IDIB000N152 | SWIFT Code : IDIBINBBPAD (நன்கொடையாளர்கள் பட்டியல் மற்றும் பிற விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) |
சென்னை நூலகம் - தற்போதைய வெளியீடு : அன்புக் கடல் - 21 |
(வ. வேணுகோபாலன் அவர்களின் ‘மருதியின் காதல்’ என்ற இந்த அரிய வரலாற்றுப் புதினத்தை அரும்பாடுபட்டு தேடிக் கண்டுபிடித்து, தட்டச்சு செய்து, எமக்கு அளித்து வெளியிடச் செய்த திரு.கி.சுந்தர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். - கோ.சந்திரசேகரன்) 11. அவள் யார்? “ஆதி... இவரை உனக்குத் தெரியாது... யாரென்று சொல்கிறேன்... முதலில் இவருக்கு நல்ல ஆடைகள் இருப்பதைக் கொணர்ந்து கொடு, ஈரமான ஆடையுடன் இருக்கின்றார்...” என்றார். அப்பெண் சிறிதே வியப்போடு அத்தியின் ஆடைகளைப் பார்த்தாள். ஆனால், உடனே நாணத்தால் தலை கவிழ்ந்தாள். புலவர் அவள் கையிலிருந்த ஓலையையும் எழுத்தானியையும் வாங்கிக் கொண்டார். அவள் மருண்டு நிற்பதையும் அறிந்து கொண்டார். “ஆதி... என்ன எழுதிக் கொண்டிருந்தாய்?” என்று ஓலைகளைப் புரட்டினார். “தாங்கள் நேற்றுப் பாடிய நீதிப் பாடல்களைப் பிரதி செய்துகொண்டிருந்தேன்... நான் இயற்றிய பாடலும் இருக்கிறது...” என்று கூறிக்கொண்டே தளர்ந்த நடையோடு உள்ளே சென்றாள். இரண்டு பட்டாடைகளை எடுத்து வந்து புலவரிடம் தந்தாள். புலவர் மகிழ்ச்சியோடு, ஆதியின் உள்ளன்பை அறிந்து கொண்டார். விலைமதிப்பிடற்கரியவையும், பொன்னால் சித்திரங்கள் வரையப்பட்டவையுமாகிய பட்டாடைகளை அத்தி கண்டான். “புலவரே, தாங்கள் பெருவள்ளலாகவும் இருக்கிறீர்கள்! நான் தங்களுக்குக் கொடுக்க இருக்க, தங்களிடம் நான் பெறுவதா? இவ்வாடைகள் தாங்கள் சம்மானமாகப் பெற்றவையல்லவா?” என்றான் குறு நகையுடன். ஆடைகளையும் வாங்கிக் கொண்டான். “என் சகோதரியின் புதல்வன் கரிகாலன் எனக்கு அளித்த ஆடைகள் இவை! இவற்றை நான் உடுத்தி அறியேன்! அத்தி! நான் வாங்கப் பிறந்தவன் அல்ல! கொடுக்கப் பிறந்தவன்! நான் மட்டுமல்ல, உயர் தமிழ்ப் புலவர் யாரும், வாங்குவதுபோல் கொடுக்கும் வள்ளன்மையும் உடையவர்கள்! புலவர் நினைத்தால் உலக முழுவதையும் காக்க முடியும். அரசல் செய்ய முடியாத காரியத்தை அருந்தமிழ்ப் புலவர் செய்து முடிப்பர். எனக்கு என்ன குறை? உன்னிடம் நான் வாங்க வேண்டியவன் என்று கருதுகிறாய்! அதேபோல் நீயும் வாங்க வேண்டியவன்தான் தெரிந்ததா?” என்றார் உற்றுப் பார்த்து. “எப்படி?” என்று கேட்டான் அத்தி. “நடனக் கலையிலே ஒப்பற்ற திறமையை உடையவன் நீ! உன் பெருமையைத் தமிழகம் அறியும்; நான் உன் நர்த்தனச் சிறப்பைக் கண்டு மகிழ்ந்தவன். ஆகவே என்னுடைய சம்மானமாக இவற்றை நீ பெறுவது தகுதியல்லவா?” ' “புலவரே, தங்களுடன் பேசி வெல்ல முடியுமா என்னால்? தங்கள் அருள் எனக்கு என்றும் நிலைத்திருக்க வேண்டும்” என்று கூறி ஆடைகளை அணிந்து கொள்ள எழுந்தான். அப்போது வீதியில் முரசறைவோன் முறையிடு கேட்டது. புலவரும், அத்தியும் உற்றுக்கேட்டார்கள். ஆதி என்ற அப்பெண் கதவுப்புறத்தில் மறைந்து நின்று அத்தியின் தோற்றத்தையும், புலவர் அவனைப் பற்றிப் புகழ்ந்து கூறுவதையும் கேட்டு நின்றாள். “இன்று காலையில் சோழவேந்தரின் பட்டத்து யானையின் கண்ணை வேலால் எறிந்த வீரன் ஒருவன், ஆமிராவதி மதகுப்புறம் வழியே நகருக்குள் தப்பி இருக்கிறான்; அவனைப் பிடித்துக் கொடுப்பவருக்கு, உகந்த சம்மானம் அரசர் அளிப்பார். யார் அவனைப் பிடித்த போதிலும் உடனே சோழவேந்தரிடம் சேர்ப்பிக்க வேண்டும். அவனுக்கு ஆதரவு அளிப்பவர் கொலைக் குற்றத்துக்கு உட்படுவார்கள்.” முரசறைவோன் இவ்வாறு சொல்லிவிட்டுப் போவதைக் கேட்ட இரும்பிடர்த் தலையாரும் அத்தியும் திடுக்குற்றார்கள். சட்டென்று அத்தி மறைவில் நின்று கொண்டான். தன்னால் புலவருக்குக் கேடு வராமல் இருக்க வேண்டுமே என்று கவலை கொண்டான். அவன் முக பாவத்தைக் கண்டு புலவர் வியப்படைந்தார். ஆதியின் மனம் கலங்கியது. மிக விரைவாக ஆடைகளை அணிந்து கொண்டான். அவன் அரையில் கட்டியிருந்த பெரிய வாளைக் கண்டு - அதன் மின்னலொளியைக் கண்டு ஆதி பிரமிப்புற்றாள். அவன் முகத்தில் மாறுதல் உண்டானதைக் கண்டு அவளுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. சட்டென்று விடைபெற்றுப் போய்விடுவானோ!...” என்று மனம் கலங்கினாள். முரசறைவோன் நெடுந்தூரம் போய்விட்டான். அத்தி பரபரப்புடன், புலவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு மாளிகையின் உள்புறத்தை அடைந்தான். ஒரு கட்டிலில் புலவருடன் அமர்ந்து கொண்டான். அவன் செய்கையைக் கண்டு புலவருக்கே திகைப்பு உண்டாயிற்று என்றால், ஆதியின் நிலையைச் சொல்ல வேண்டுமா? - தன்னையறியாமல் நிழல் போல் பின் தொடர்ந்தாள் அவளும். அத்தியும் புலவரும் அமர்ந்திருந்த கட்டிலின் அருகில் தூண் மறைவில் நின்று கொண்டாள். “புலவரே, முரசறைவோனால் குறிப்பிடப்பட்டவன் நான்தான்!” - என்றதும் புலவர் திடுக்கிடவில்லை. புன்னகை செய்தார். ஆதி திடுக்கிட்டு விட்டாள். “அத்தி, ஏன் அப்படி? என்ன நடந்தது?” என்றார் புலவர். “புலவரே, போரில் தப்பி ஓடிவிட்டேன் நான். நன்னன் கொங்கணத்துக்கு ஓடினான். நான் தொண்டிக்கு ஓடினேன். மருதியைத்தான் நீங்கள் அறிவீர்களே: அவள் இங்கே அகப்பட்டுக் கொண்டாள். என்னுடன் அவளை இம்முறை அழைத்துப் போகவில்லை. போரில் தோல்வி என்று தெரிந்தால், தொண்டிக்குப் போய்விடு என்றேன்; அவள் அருமை உங்களுக்குத் தெரியாததன்று. ஆகவே, கவலை கொண்டு என் நண்பன் கோதை மார்பனுடன் குதிரையில் கடுகி வந்தேன். நகருக்குள் நான் எளிதில் புக முடியுமா? - ஆமிராவதிக் கரையில் நான் இறங்கி விட்டு, கோதை மார்பனைத் தொண்டிக்குப் போகும்படி சொல்லிக் கொண்டிருந்தேன். அப்போது தான் கீழ்ப்புறமிருந்து, சோழனின் யானை வெறியுடன் ஓடி வந்துகொண்டிருந்தது. நான் கலக்கத்தோடு, நீரில் இறங்கி விட்டேன்; யானை கோதை மார்பனைத் துரத்தியது. உடனே அதன் வேகத்தைத் தணிக்க என் கைவேலை எறிந்தேன். யானையின் ஒற்றைக் கண்ணீல் பாய்ந்து விட்டது. சினம் கொண்ட யானை, தன்னைத் தானே சுற்றிக் கொண்டது; உடனே, கர்ச்சித்துக் கொண்டு தன் கண்ணீல் பாய்ந்த வேலைப் பறித்து என் மீது குறி வைத்து வீசியது...” - இவ்வாறு அத்தி கூறுகையில், “ஆ” என்று கூக்குரலிட்டாள் அருகில் நின்ற ஆதி. திடுக்கிட்டு, புலவரும் அத்தியும் அவளைப் பார்த்துப் பரிகசித்தார்கள். ஆதியின் மனம் அத்தியிடம் பாய்ந்ததைப் புலவர் அறிந்து கொண்டார். “அப்புறம்!...” என்றார், “நான் தப்பி விட்டேன். மதகுக்குள் புகுந்து விட்டேன். ஆனால் ஒரு தவறு! மறுபடியும் தலை நீட்டிக் கோதை மார்பன் தப்பி விட்டானா என்று பார்த்தேன். அதனால் நான் பிழைத்து விட்டதாக வீரர் எண்ணி விட்டார்கள். இல்லையேல் நான் இறந்தேன் என்றே நிச்சயித்திருப்பார்கள். எனக்கும் இப்போது போல் கவலை இராது; தங்களுக்கும்...” “அத்தி, எனக்கு யாரிடம் பயம்? இந்தச் செங்கணானுக்கு, உறையூர் ஆட்சி யாரால் கொடுக்கப்பட்டது தெரியுமா? என் மருமகன் - கரிகாலன் மனம் விரும்பிக் கொடுத்ததுதானே! எனக்கு இவனிடம் பயம் ஏன்? எனக்கு வயதாகி விட்டது. இல்லையேல்... இந்தப் போர் நடக்காத விதம் செய்திருப்பேன். ஆனால், உங்கள் சேரனிடம் குற்றம் அதிகம் இருக்கிறது. குற்றம் செய்தவர் ஒறுக்கப்படுவது நியாயமேதான்! இன்று சேரன், தன் நாட்டிலேயே - தன் குடிமக்கள் காணும்படியாகச் சிறைபட்டுக் கிடக்கிறான். ஒவ்வொரு நாளும் அவன் உயிர் தேய்ந்து கொண்டிருக்கிறதாம், உனக்குத் தெரியுமா, சேரனின் சிறைக் கோட்டம் எது, என்று?” “தெரியாது!...” “குணவாயில் கோட்டத்தில் விலங்கு பூண்டு கிடக்கிறான். போவோர் வருவோரெல்லாரும் பார்த்துப் போகிறார்கள். அவன் விடுதலைக்காக, நேற்று புலவர் பொய்கையார் என்னிடம் வந்தார்: ‘என்னால் ஒன்றும் செய்வதற்கு இல்லை. கரிகாலனின் அரசுரிமைக்காக நான் பெரிதும் சிரமப்பட்டிருக்கிறேன். இப்போது கவிதை பாடுவதையே பொழுது போக்காகக் கொண்டு காலம் கழிக்கிறேன். இந்த அமைதியைக் கெடுக்க வேண்டாம்; நீரே, சென்று செங்கணானை நயமாக வசீகரித்து, சேரனுக்கு விடுதலையைக் கொடுக்க முற்படலாம்; செங்கணானைப் புகழ்ந்து போற்றினாலன்றி சேரனுக்கு விடுதலை கிட்டாது. அவன் வெற்றியைச் சிறப்பித்து ஒரு பிரபந்தம் பாடி அவன் முன் அரங்கேற்றுங்கள். பயன் கிட்டும்’ என்றேன். அவர் போயிருக்கிறார். ஆனால், சோழனும் பேராசை பிடித்தவனாக இருக்கிறான். உன்பேன்ற வீரர்களின் நினைப்பில்லாமல், இந் நாட்டைக் கூட அகப்படுத்திக் கெள்ளக் கனவு காண்கிறான்.” இவ்விதம் கூறிவிட்டு மௌனமாக அத்தியைப் பார்த்தார். அவருடைய வார்த்தைகளை அமைதியாகக் கேட்ட அத்தி, தன் விருப்பத்தைக் கூற முற்பட்டான். “புலவரே, எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும். நான் தங்கியிருந்த மாளிகையில் மருதியும் அவள் செவிலித்தாயும் இருப்பார்கள். அவர்களை இங்கே எப்படியாவது, அழைத்து வந்துவிடவேண்டும்; நான் இங்கே வந்திருப்பது தெரிந்தால் உடனே வந்துவிடுவார்கள்” என்றான். “அப்படியே செய்கிறேன்; இது என்னால் :முடியாதா?” என்று கூறிவிட்டு, “ஆதி!...” என்று கூவி அருகில் சுற்றுமுற்றும் பார்த்தார். அவளைக் காணவில்லை. “ஆதி ஆதி!!-” இரு முறை அழைத்தார். கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அழுகையை முயன்று அடக்கிக் கொண்டவளாய் ஒரு புறமிருந்து வந்தாள் ஆதி. அவளைக் கண்டு புலவருக்கு உண்டான அதிர்ச்சிக்கு எல்லையே இல்லை. அத்தியும் ஆச்சரியம் அடைந்தான். புலவர் அமைதியாக ஒரு சேடியை அழைத்து வருமாறு ஆதியிடம் சொன்னர். மறுமொழி சொல்லாமல் உள்ளே சென்று ஒரு சேடியை அனுப்பினாள். மறுபடியும் ஆதி வெளிவரவில்லை - அவள் யார்? புலவர் அந்தச் சேடியிடம், மருதியின் மாளிகையைக் குறிப்பிட்டுக் கூறி. அவளையும் அவள் தாயையும் அழைத்து வருமாறு சொல்லியனுப்பினார். மருதியின் மாளிகையை நோக்கி அவள் போனாள். இள நகையோடு, புலவருக்கு அருகில் அத்தி அமர்ந்து கொண்டிருந்தான். புலவர், தம் தீக்ஷண்யமான கண்களால் அத்தியை ஊடுருவப் பார்த்தார். இருவரும் மௌன நிலையிலேயே இருந்தார்கள். மருதியின் மாளிகை நோக்கிச் சென்ற சேடியைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தான் அத்தி. ‘காரணமில்லாமல், ஆதி விம்மி அழுவது ஏன்?’ என்ற சிந்தனையில் மூழ்கியிருத்தார் இரும் பிடர்த் தலையார். புலவரின் அறிவுக்கு எட்டாத விஷயமே உலகில் இல்லை என்று சொல்லுவார்கள். ஆனால், அத்தகைய புலவருக்கும் மதிமயக்கத்தைக் கொடுத்தது ஆதியின் காரணமில்லாத அழுகை. சட்டென்று அவர் அவளைக் கேட்டாரா? - இல்லையே! புலவரின் சிந்தனைக்குள், அத்தி குறுக்கிட்டு நிற்கிறான். ‘ஒரு வேளை, காரணம் இவனாக இருக்கலாமோ!’ என்று தான், அத்தியின் முகபாவத்தை உற்றுக் காணத் தொடங்கினார். அறிவின் ஒளி மின்னலிடும் தம் கண்களால் அவனைக் கடிந்து பார்த்தார். அத்தி அஞ்சுபவனா? ‘அவனுடைய புன்னகையில் களங்கமில்லை; அவன் கண்களில் ஒளி குன்றவில்லை; அவன் மனமோ மருதியிடம் பதிந்திருந்தது.’ - இந் நிலையில் புலவருடைய எண்ணம் மங்கி விட்டது. ‘அத்தி அற்பமானவனா என்ன! இவன் நர்த்தனச் சிறப்பு புலவரால் காவியம் புனையும் தகுதிவாய்ந்ததல்லவா! இவன் வீரத்தில் தான் குறைந்தவனா? தொண்டி நகருக்கு அரசன்! இவனே அப்படி இழிந்த குணமுடையவனாக நான் கருதக்கூடாது’ என்று எண்ணி விட்டார். மறு கணத்திலேயே. புலவருக்கு என்னவெல்லாமோ தோன்றின! பெரிய சோதனையில் இறங்கி விட்டார் அவர். அறைக்குள் இருந்து ஆதி வரவில்லை. எழுந்து போய் என்னவென்று கேட்கலாமா என்று எண்ணினார். ‘இல்லை; நானே ஏன் அவளைக் கேட்க வேண்டும்? அவள் கல்வியறிவில்லாதவளா என்ன? புலமை நிறைந்தவளாயிற்றே! அவள் உட்கருத்தைப் பற்றி என்னவென்று அறிய எனக்குத் துணிவு இல்லையா? ஏன், பொறுமையோடு இருந்தால் யாவும் வெளிவந்து விடுகின்றன!-’ என்று தம்மைத் தாமே அடக்கிக் கொண்டார். “ஆதி!, ஆதி!!” என்று அன்பு கனிய எப்போதும் போல அழைத்தார். அவர் குரலில் மாறுபாடு சிறிதும் இல்லை. “ஏன்? வருகிறேன்!” - என்று சொல்லிக் கொண்டே வெளி வந்தாள் ஆதி. ‘என்ன ஆச்சரியம்! அவள் முகத்தில் எவ்வளவு மலர்ச்சி! புன்னகையோடு வருகிறாளே! எப்போதும் போல் இருப்பதைக் காட்டிலும் புதிய பொலிவு தெரிகிறதே இவள் முகத்தில்!’ என்று வியப்படைந்தார் புலவர். அத்தியின் கண்கள் காரணம் இல்லாமல் - அல்லது காரணம் இருந்துதானோ என்னவோ-ஆதியை அதிகமாகப் பார்க்கவில்லை. அவனுடைய மனவுறுதியை என்னென்பது! ஆனால் அவன் மனம் பரபரப்புற்றுத் தவித்திருக்கத்தான் வேண்டும்! புலவர் ஆதியை உற்றுப் பார்த்தார். அத்தியிடம் பேசலானார்: “அத்தி, உனக்கு என் கதைதான் தெரிந்ததாயிற்றே! இவளை யார் என்று உனக்குச் சொல்கிறேன் கேள்! என் மருகன் கரிகாலனுடைய பெண் இவள்! பிறந் த ஒரு வருஷத்திற்கு மேல் இவள் கரிகாலனிடம் தங்கியிருந்ததில்லை; என்னிடமே வளர்ந்து வருகிறாள். எவ்வளவோ முறை காவிரிப் பட்டினம் சென்று விட்டு வந்தேன். இவள் அவனிடம் இருக்க விரும்பவில்லை. என்னிடமே வந்து விட்டாள். அப்படி என்னிடம் என்ன அன்பு என்று கேட்பாயோ! அதற்குக் காரணம் உண்டு. இவளுக்கு இப்போது வயது பதினெட்டு. தமிழில் பல நூல்களை என்னிடம் நன்றாகக் கற்றிருக்கிறாள். இவளே பாடலும் பாடுவாள். புலவர் யார் என்னிடம் வந்தபோதிலும் முதலில் இவள்தான், அவர்களை வரவேற்றுப் பேசி உபசரிப்பாள்; புலவரோடு பேசுவதென்றால் எளிய காரியமா? இவள் பேசினால் புலவர்கள் தலை பணிந்து நிற்பார்கள், கலைமகள் என்று கருதி. சிறிய வயதிலே இவ்வளவு முதிர்ந்த அறிவு, என்னால் இவளுக்கு நிறைந்துவிட்டது. கண்ணால் கண்ட இயற்கைக் காட்சிகளை, ஓவியன் சித்திரம் தீட்டுவது போல் பாடலிலே அமைத்து விடுவாள். செஞ்சொற் கவிகள் என்றுதான் சொல்லவேண்டும். தமிழ்ப்புலமை சான்ற இளமங்கை இவள். அரசகுலத்து இளங்குமரியானதால் இன்னும் இவளுக்கு உயர்வு அதிகம். அதுவும் சோழநாட்டு முடிமன்னன் கரிகாலனின் புதல்வி - இவளைப் பெற்ற பாக்கியத்தால் கரிகாலன் இறுமாந்துவிட்டான். தமிழ் நாட்டு முடிவேந்தர் மூவர் சபைகளிலும், வருஷத்துக்கு ஒரு முறை நானும் இவளும் புலவர் கூட்டத்தோடு போவது உண்டு; கவிகள் பாடிச் சம்மானம் பெறுவதும் உண்டு; ஆனால் இவளுக்குச் சம்மானம் எதற்கு?” “புலவரே, எனக்குப் பேராச்சரியத்தை உண்டாக்குகிறதே! இவளா, தமிழ்ப்புலமை நிறைந்தவள். இவள் கரிகால் வேந்தரின் குமரியா! உண்மைதானா?-” அத்தி திகைத்தே விட்டான். “அத்தி, நான் சொன்ன யாவும் உண்மை! இன்னும் சொல்கிறேன் கேள். இவள் தமிழ்ப் புலமை நிறைந்தவள் என்று மட்டும் நினைக்காதே! போர்க்களத்தில் வாள் பிடித்து யுத்தம் செய்யவும் பழக்கியுள்ளேன். குதிரையில் அச்சமின்றி ஆரோகணிப்பாள்! யானையிடம் பயமின்றிப் பாய்வாள். இவளுடைய மனவுறுதியை யாரும் குலைக்க முடியாது! வீரத் தமிழ்ப்பெண் இவள். அது மட்டுமா! உனக்கே உரியதாக ஆக்கிக் கொண்ட நாட்டியக் கலையிலும் இவளுக்குப் பயிற்சி உண்டு-” “அப்படியா யாரிடம் பழகிக்கொண்டாள்? தாங்களே பழக்கினீர்களோ!-” என்றான் அத்தி வியப்புடன். “இல்லை, அப்பனே! - எனக்குத் தெரியாது நாட்டியம்! இந்நகரில் சங்கமி என்ற கணிகை இருந்தாள்-” “யார்? சங்கமியா? -” “ஆம்! அவளை உனக்கு எப்படித் தெரியும்? அவள் ஓர் ஏழை. நாட்டியம் கற்றுக் கொடுக்க வேண்டுமென்ற ஆசையால் நான் அவளை அழைத்து வந்து-” “அப்படியானல், இவளுக்கு நாட்டியப் பயிற்சி உண்டா?” “அவ்வளவு விசேஷமாகப் பயிற்சி இல்லை. எல்லாக் கலைகளும் தெரிய வேண்டுமென்று நான் ஏற்பாடு செய்தேன்; இவள் முற்றும் பயிற்சி பெறுவதற்குள் அவள் இறந்துவிட்டாள். இவளுக்கு மனக் குறைவுதான். ஆனாலும் இனி இவள் கற்கவேண்டியது ஒன்றும் இல்லை. வயதும் அதிகமாகிவிட்டது. என் மனம் இப்போது பெரிய கவலையில் மூழ்கியிருக்கிறது; சொல்லிக் கொண்டால்தான் ஆறுதல் உண்டாகுமென்று தோன்றுகிறது...” “அப்படி, தங்களுக்கு என்ன கவலை?” “ஒன்றுமில்லை: கரிகாலனிடமிருந்து ஒரு மாதத்திற்கு முன் செய்தி வந்தது. அது தொடங்கி நான் படும் கவலை...” என்று சொல்லிக்கொண்டே புலவர் கண்ணீர் விட்டார். ஆதி அதைக் கண்டு இருதயம் பதை பதைத்துப் போய், தலை குனிந்தாள். அவள் கண்களிலிருந்தும் நீர் தாரையாகப் பெருகியது. காரணம் அறியாமல் அத்தி மனம் கலங்கினான்; ‘இது என்ன? புலவர் இப்படிக் கண்ணீர் சிந்துகிறார். இளம் பெண் இவளும் அழுகிறாள். முன்பும் அழுதாள்! என்ன மாயமாயிருக்கிறது இது!’ என்று யோசித்தான். “அத்தி, என்னவோ, உன்னிடம் சொல்ல வேண்டுமென்று ஆதுரப்படுகிறது என் உள்ளம்?” “சொல்லுங்கள் விரைவில்! என் மனம் மிகவும் அல்லல் அடைகிறது.” “ஆதியை உடனே அழைத்து வருமாறு, கரிகாலன் சொல்லி யனுப்பியிருக்கிறான்.” “ஏன்?-” “இவளுக்கு மணப்பருவம் வாய்ந்துவிட்டமையால், தகுந்தபடி மணம் செய்விக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறான். இவளுக்கு ஏற்ற கணவனைத் தேடிக்கொண்டிருக்கிறான். வடநாட்டு அரசிளங் குமரர்களையெல்லாம் சித்திரத்தில் எழுதிவரச் செய்திருக்கிறான். இவள் புகார் நகரம் போனவுடன் அந்தப் படங்களையெல்லாம் காட்டி, இவளுக்குப் பிடித்த அரசகுமரனை வரிக்கப் போகிறானாம்...” “ஆம்! அது நேர்மைதானே! இப்படி உங்களோடு பாடிக்கொண்டும் பேசிக்கொண்டும்...” “அத்தி, நன்றாகப் பேசுகிறாய்? ஆனால் நீ யோசிக்கவில்லையே! இவள் என்னை விட்டுப் பிரியேன் என்கிறாள். இவ்வளவு நாட்களாக வளர்த்துச் சீராட்டிய பாசத்தால் இவளைப் பிரிந்திருக்க என் மனமும் விரும்பவில்லை. ஆனால் இவளுக்கு ஏற்ற கணவனைத் தேடி மணம் செய்விக்க வேண்டுமென்பது என் விருப்பம்; நானும் இவளுடன் புகார் போக வேண்டியிருக்கிறது. ஒரு மாதமாக இதே கவலை! பெற்றெடுத்த தாய்க்குக் கூட என்போல் பாசம் இராது! என் உயிராக மதிக்கும் பொருள் இவள்! இவள் இல்லையேல் நான் என்றோ மாண்டு மண்ணோடு போயிருப்பேன். என் நிலை கரிகாலனுக்கும் தெரியும்; தெரிந்தும் என்ன? என்னையும் அங்கேயே வந்து விடும்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறான். எப்படியேனும் இன்று புறப்பட்டு விடவேண்டுமென்று முடிவு...” “என்ன? இன்றா? - புலவரே-” என்று ஏக்கத்தோடு பார்த்தான். “ஏன், அத்தி! உனக்கு என்னால் ஆகவேண்டிய காரியம் எதுவானாலும் செய்து தருகிறேன். உன்னைப் பகைவன் கையில் அகப்பட விடமாட்டேன். என்னிடம் ஆதரவு தேடி வந்த உன்னை மதிக்காமல் போய் விடுவேனா?” “அதற்கல்ல புலவரே, உங்கள் வார்த்தைகளைக் கேட்டவுடன் எனக்கும், உங்களைப் பிரியவேண்டுமே என்று வருத்தம் உண்டாகிறது...” “நான் இன்றிரவு புறப்படலாம் என்று உறுதி செய்திருக்கிறேன். திரும்பி வருவேன் என்பது நிலையில்லை. இந் நகரையும் இம் மாளிகையையும் - இங்கே காணப்படும் காட்சிகளையும் திரும்ப, நான் காண முடியுமோ என்று கவலைப்படுகிறேன். இவை யாவற்றையும் மறந்து விடலாம்; ஆனால், இவளை மட்டும் மறக்க முடியாது. அதனால்தான் எல்லாவற்றையும் மறந்து இவளைப் பின் தொடர்ந்து போகிறேன். இவள் எங்கே, போகிறாளோ அங்கே நானும் போவேன்; போக முடியாதபடி நேர்ந்தால் என் செய்வது?-” என்று வெறித்த பார்வையோடு பார்த்தார் ஆதியை. “இல்லை; அத்தகைய மணவாளனை நான் விரும்பவில்லை. தங்களைப் பிரிந்து நான் கண் காணாத இடங்களுக்குப் போவது முடியாத காரியம். கண் குளிரத் தங்களைக் கண்டுகொண்டிருக்க வேண்டும். பெற்ற தாய் தந்தையரையும் மறந்துவிடுவேன். நான் தங்களை மறக்க மாட்டேன்” என்று தன்னை மறந்தவளாய்ப் பேசினாள் ஆதி. புலவரும் அத்தியும் திடுக்கிட்டார்கள். “பார்த்தாயா, அத்தி! இவள் அன்பை எதற்கு ஒப்பிடுவது? இந்த அன்புக்கு ஒப்புயர்வு ஏது? வானுலக, வாழ்வை அடைய முயன்று கொண்டிருக்கும் எனக்கு இவள் அன்பு ஒன்றுதான் இங்கே பற்றுதலாக நிற்கிறது!...” என்று கூறும் அளவில் இருவர் மாளிகைக்குள் புகுந்து அவ்விடம் அணுகினார்கள். திரும்பிப் பார்த்தார்கள் புலவரும் அத்தியும். மருதியைத் தேடிச்சென்ற சேடியும் விடங்கியும் வந்து கொண்டிருந்தனர். ஆதியின் கண்கள் வியப்போடு நோக்கின. திரும்பிப் பார்த்த அத்தி பதற்றத்தோடு அங்கே வந்த இருவரையும் மாறிமாறிப் பார்த்துவிட்டுத் திகைத்தான். “விடங்கி, மருதி எங்கே? அவள் ஏன் வரவில்லை?” என்று கேட்டான் அத்தி. விடங்கியின் முகத்தில் துயரத்தின் நிழல் பரவியிருந்தது. அவளை அழைத்து வந்த சேடியை இரக்கத்தோடு அவள் பார்த்தாள். “மருதி என்ற கணிகை அங்கே இல்லை. இந்தக் கிழவியும் அவளைப் பற்றி ஒன்றும் பேசவே இல்லை” என்று கூறிவிட்டு, அப்புறம் சென்றாள் அந்தச் சேடி. “மருதி எங்கே? விடங்கி! ஏன் பேசாமலிருக்கிறாய்?” என்று கேட்டான் அத்தி. அவன் மனம் பரபரப்புற்றது. “உன் சொற்படி தோல்விச் செய்தி தெரிந்தவுடன் இந் நகரை விட்டு வெளியேறப் புறப்பட்டோம். ஆமிராவதிக் கரையிலிருந்து பல்லக்கில் புறப்படுகையில், சோழனின் மகனால் சிறைபிடிக்கப்பட்டாள்... இப்போது உறையூரில் இருக்கிறாள்” என்று கூறுகையில் இடை மறித்தான். “சோழனின் மகன் சிறை செய்தானா? இது உண்மையா?-” என்று கேட்டுக் கொண்டே பந்துபோல் கட்டிலைவிட்டு எழுந்து குதித்தான். இடி இடித்தது போன்று இருந்தது விடங்கி கூறிய செய்தி அவனுக்கு. “ஆம்! நல்லடிக்கோன் என்பவன்தான். ஆற்றின் கரையில் அப்போதுதான் அவன் படைகளுடன் வந்து கொண்டிருந்தான். எதிர்பாராத விதமாக...” “அவன் சிறைப் பிடித்தால் தப்புவதற்கு வேறு வழியில்லையா?” “இல்லை! அத்தி, அவன் சாமானியமானவன் அல்ல! அவனைப் பலவிதமாகக் கடிந்து பேசினாள் மருதி. மறுத்து எதிர்த்தாள். தான் யாரென்றே முதலில் அவள் சொல்லவில்லை; கடைசியாகத்தான் சொன்னாள். அவள் பெயரைக் கேட்டவுடன் அவன் திடுக்கிட்டு விட்டான். வீ ரர்கள் சூழ்ந்துகொண்டு விட்டார்கள். என்ன செய்வது? நானும் அவளும் பல்லக்கில் ஏறிக்கொண்டு உறையூர் சென்றோம்-” “நீயும் சென்றாயா?-” “ஆம்! முதலில் சென்றேன்; வழியிலேயே நானும் அவளும் யோசனை செய்தோம்; நீ தொண்டியைவிட்டு இந்நகர் வருவாய் என்று தெரியும். அதனால் உனக்காக நான் வழியிலேயே அவள் யோசனைப்படி இறங்கித் திரும்பி வந்தேன். உனக்காக மாளிகையில் தங்கியிருந்தேன். என்னைப்பற்றி அவன் கேட்டால், நான் தொண்டிக்குப் போயிருப்பதாக மருதி சொல்வாள். இல்லையேல் எனக்குக்கூட...” “விடங்கி, நீ சொல்வதெல்லாம் உண்மையா?” என்று பதற்றத்தோடு கேட்டான் அத்தி. “இன்னும் சந்தேகமா, உனக்கு? உன்னை எதிர்பார்த்துக்கொண்டு உயிரை வைத்துக் கொண்டிருக்கிறாள் அவள்! நீ உடனே அவளே விடுதலை செய்து...” “விடுதலையா! என்னை எதிர்பார்த்து உயிரை வைத்துக் கொண்டிருப்பானேன்? இன்னும் உயிருடன் இருக்கிறாளா? அவன் கையில் அகப்பட்ட பின்பும் அவளுக்கு...” “அத்தி, இவ்வளவு நாட்கள் அவளுடன் நீ பழகியும் அவள் தன்மையை அறியவில்லையா? அவள் உயிர் உன்னிடமல்லவா இருக்கிறது! ஒரு வேளே... உயிர்...” “தெரியும் எனக்கு! அவன் வசம் சென்றபின், மீண்டும் என்னை அடைவதென்று எண்ணமா? விடங்கி! இவ்வளவு நாட்கள் என்னுடன் பழகியும் உனக்கு என் இயல்பு தெரியவில்லையே! அவளுக்காக நான் செய்துள்ள தியாகங்களுக்குக் கணக்கு உண்டா? பேதை! பிறன் வசம் போனாளாம்! அவ்விதம் நேர்ந்த பின் உயிர் இருப்பானேன்! கணிகையின் சாகஸத்தைக் காட்டி விட்டாள். கள்ளி! குல மங்கையாயிருந்தால், அப்போதே உயிரை மாய்த்துக் கொண்டிருப்பாள்! இவள் கணிகைதானே! புதிய வெள்ளம் கண்டு பாயும் மீன் போன்றவள் தானே! நான் ஏமாற்றம் அடைந்தேன்! ஆனால், அவளுடைய நாட்டிய உயர்வு என்றும் என்னை மறக்கச் செய்யாது! அவள் அருமையை நான் மட்டுமே அறிவேன்; இனி எனக்கு வேறு என்ன வேண்டும்! நான் எதற்காக என் வாழ் நாள் முழுவதையும் சுக துக்கம் கருதாமல் போக்கிக் கொண்டிருந்தேனோ, அந்தப் பொருள் வீணாகி விட்டது! இனி அதற்காக நான் வீண் கவலை அடைய வேண்டியதே இல்லை!-” என்று வெறுப்போடு பெரு மூச்சுவிட்டுக்கொண்டு கூறினான். “அத்தி, இவ்வளவு வெறுப்பு உனக்கு எப்படி வந்தது? உண்மையில் மருதியிடம் உனக்கு நம்பிக்கை இல்லையா?” என்றாள் கண்ணீர் ததும்ப, விடங்கி. “நம்பிக்கை! நம்பிக்கை உண்டாவதும், அதை இழப்பதும் தெய்வச் செயல்! என்னை விட்டுப் பிரிக்க முடியாத அவளைத் தெய்வம் பிரித்து விட்டதே என்றுதான் வருந்துகிறேன். வேறு நான் ஒன்றும் சொல்லவில்லை; இனி, பேசுவதற்கு என்ன இருக்கிறது? அவள் உயிரும் என் உயிரும் ஒன்றாகி மாய்ந்து விட்டதோ! - விடங்கி, நீ போய் வா!” என்று தழுதழுத்த குரலோடு கூறினான். “நான் எங்கே போவது? மருதியிடமே தான் போக வேண்டும்! உன்னிடமிருந்து செய்தி கொண்டுபோக வேண்டும்.” “யாருக்கு?” “மருதிக்கு! அதற்காகத் தானே, நான் அவளைப் பிரிந்து இங்கே வந்தேன்! சோதனை செய்யாதே! அத்தி!” “யாருக்குச் சோதனை? தெய்வமே எல்லாம் செய் கிறது! சேரநாட்டின் முடிமன்னன் சிறைப்பட்டு நிற்க, நான் போர்க்களத்தை விட்டுப் புறங்காட்டி ஓடினேன்! எதற்காக ஓடினேன் தெரியுமா? - மருதிக்காக! - இந்தச் செய்தியை அவளிடம் தெரிவி!” “தெரிவிக்கிறேன்! ஆனால் அவள் விடுதலையைப் பற்றி!” “விடுதலையா? திறமை உண்டானால் அவளே விடுதலை பெறலாம்! நான் ஏன் கவலைப்படவேண்டும்?” “பேதைப்பெண்! உன்னையே சரணாக அடைந்தவள்! உனக்கு அடிமை அவள்! அடிமையைக் காக்கவேண்டியது உன் கடமையாயிற்றே! பெண் என்ன செய்யமுடியும்? அவள் கணிகை என்று உன் மனத்திலும்...” “இல்லை! கடமை எனக்கு இருக்குமானால், அவள் விடுதலை அடைவாள்! அவள் கடமையை அவள் செய்யட்டும்! கடமை தவறியவர்கள் காப்பாற்றப் படுவதில்லை! ஆகவே, நீ ஏன் கவலைப்படுகிறாய்? எனக்குள்ள கடமையை நான் செய்வேன்.” “ஆனால், அவள் சந்திப்பு?” “அதற்குக் காலம் வரும்போது நேரும்” - இவ்விதம் கூறிய அத்தியின் கண்களில் நீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. “அத்தி, தெய்வம் மருதிக்கு நல்ல கதியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்; நான் இப்போதே அவளிடம் போகிறேன்” என்று கூறியவள் கண்ணீர்த் துளி சிதறிக்கொண்டிருக்க, இரக்கத்தோடு அத்தியைப் பார்த்தாள். புலவரும் ஆதியும் திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். “விடங்கி! போய் வா!” என்றான் அத்தி. விடங்கி தலைகுனிந்தவாறே மாளிகையை விட்டு, வெளியேறினாள். அவள் போனபின்பு சிறிது நாழிகை மௌனம் நிலவியது. சட்டென்று புலவர் கட்டிலைவிட்டு எழுந்தார். பிரமைகொண்டு அமைதியாக இருந்தான் அத்தி; அவன் மனத்தில் அலைகடலின் கொந்தளிப்பு இருந்தது. புலவர் தம் கடைக்கண்ணால் அவனை நோக்கிவிட்டு, உள் அறைக்குள் புகுந்தார்; ஆதியும் துள்ளிய நடையோடு அவரைப் பின்தொடர்ந்து உள்ளே புகுந்தாள். அத்தி தலைநிமிர்ந்து பார்த்தான். அவ்விருவரையும் காணவில்லை. அறைக்குள் ஏதோ ரகஸ்யமாக இருவரும் பேசுவது அவன் காதில் விழுந்தது. இன்ன விஷயம் என்று அவனால் அறிந்துகொள்ள முடியவில்லை. பித்துக் கொண்டவன் போல் அமர்ந்திருந்தான். கோபம், வெறுப்பு, அச்சம், இரக்கம் இவை மாறிமாறி அவன் உள்ளத்தைக் கிளர்ச்சியுறச் செய்தன. எழுந்து ஓடிவிடலாமா என்று எண்ணினான். எங்கேனும் மலைச்சார்பான இடங்களை அடைந்து வாழலாமா என்று பதற்றம் கொண்டான். விர் என்று பாய்ந்துபோய் மருதியைப் பழி வாங்கலாமா என்று கோபாவேசம் அடைந்தான். மருதியை மறந்தே விடலாமா என்று மறுகணமே சிந்தித்தான். இவ்விதம் அவன் மனக் கிளர்ச்சியினால் உன்மத்தனாக அமர்ந்திருந்தான். அவ்வளவு மனக்கிளர்ச்சியிலும், இடையிடையே அவன் சிந்தனையை ஊடறுத்துக் கொண்டிருந்தது ஓர் இன் குரல்! அந்த இனிய கண்டத்தொனி அவனை வெறுப்பிலிருந்து ஆட்கொள்வதுபோல் அவனை வசீகரித்தது. அந்தக் காரணத்தால், அவன் கட்டிலை விட்டுச் சிறிதும், அசையவில்லை. ஆனால், தன் உள்ளத்தைத் தானே நம்பவில்லை. அப்போது திடிரென்று அறைக்குள் இருந்து புலவர் வெளிவந்தார். நிமிர்ந்த தலையோடு, அத்தி அவரைப் பார்த்தான். “அத்தி, ஏன் இவ்வளவு கலங்குகிறாய்? அந்தக் கணிகை செய்ததில் தவறு இல்லை; கணிகையருக்கு அது இயல்பு. ஆனால், அரச குலத்தில் பிறந்த உயர்வுடையோனாகிய நீ, அவளுக்காக ஏங்கிக் கலங்குவது நேர்மையல்ல!” “புலவரே, அவள் இப்படி ஆகிவிடுவாள் என்று நான் கருதவில்லை! சீ! இனி அந்தக் கணிகைப் பெண்ணை கனவிலும் நினையேன்! அந்தக் கணிகையின் சாகஸத்தால் நெடுநாட்களாக ஏமாற்றம் அடைந்து கொண்டிருந்தேன். அவளால் நான் அடைந்த துயரங்களுக்கு அளவில்லை. ஆம்! அவள் கணிகையாகி விட்டாள்! இனி எனக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு! மறந்தேன்! மறந்தேன்!! - ஆனால் அவள் நாட்டியத்தை என்றும் மறக்க முடியாதுதான். ஆம்! அவள் வேறு! இப்போது சோழன் மகனின் மோகவலையில் சிக்கிய மருதி வேறு! அவள் என்னுயிரோடு ஒன்றாகிவிட்டாள். இப்போது உள்ளவள் அவள் பெயர் கொண்டு திரியும் காமப்பேய்! கணிகைப்பேய்!” - என்று நீர் வார்ந்த கண்களோடு புலவரை நோக்கினான். புலவர் சிறிது நாழிகை மௌனமாக இருந்துவிட்டுப் பேசலானார். “அத்தி, சோர்வடையாதே! உனக்கு இனிப் பெரும் புகழ் உண்டாகப் போகிறது! உன் வாழ்க்கையில் ஒளி மின்னலிடப் போகிறது! ஒன்று சொல்கிறேன் கேள்” என்று கூறினார் புலவர். “புலவரே, தாங்கள் என்ன கூறுகிறீர்களோ, அதை விருப்பத்தோடு ஏற்றுக்கொள்கிறேன்” என்று புலவரைப் பார்த்தான். “கரிகாலன் மகளைப்பற்றி உன்னிடம் சொன்னேனல்லவா? அவள் விஷயமாக உனக்கு ஒன்று சொல்ல வேண்டியிருக்கிறது.” “என்ன?” “நாட்டியத்தில் அவள் நல்ல பயிற்சி பெறவேண்டு மென்று விரும்புகிறாள். அந்தக் குறையை உன்னால் அகற்ற முடியுமா?” “என்ன சொல்கிறீர்கள்?” “உன்னை நன்றாக அவள் அறிந்தவள்! நான் சொன்னேன்; அதனால், உன்னிடம் நாட்டியம் பயிலவேண்டும் என்கிறாள்; இதை நீ ஏற்றுக்கொள்வாயா?” “புலவரே, நாட்டியப் பயிற்சி பெறுவதற்கு இப்போது எப்படி முடியும்? தாங்களோ இன்றிரவு புறப்படப் போகிறீர்களே;” “ஆம்! இன்றிரவு நிச்சயம் காவிரிப்பட்டினம் புறப்பட்டாக வேண்டும். நீயும் எங்களுடன் வந்துவிடு; உன் வருகையை அறிந்தால் கரிகாலன் மிகுந்த மகிழ்ச்சி அடைவான். அவன் மகளுக்கு நாட்டியப் பயிற்சி நீ அளிக்கிறேன் என்று சொன்னால் போதும்!-” “புலவரே, என்ன யோசனை இது! - தங்கள் விருப்பம்போல் செய்கிறேன்.” “ஆதி,” என்று அழைத்தார் புலவர், மின்னல் கொடியென, கதவுப் புறத்திலிருந்து வெளிப்பட்டாள் ஆதி. அவள் தலை நிமிரவில்லை. புலவரின் பக்கம் மறைந்து நின்றாள். “ஆதி, உன் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதி கூறிவிட்டான் அத்தி! இனி, நீ. கவலைப்படாதே” என்றார், அவள் கண்களில் களி துள்ளியது. அத்தி அவளைப் பார்த்துக்கொண்டே புலவரிடம் சொன்னான். “நான் செய்த புண்ணியமே, எனக்கு இப் பாக்கியம் கிடைத்தது.” “அது மட்டுமா? இவள் செய்த புண்ணியமே, இன்று உன்னை இவ்விடம் சேர்த்தது” என்று கூறி நகைத்தார் புலவர். அவ்வளவு எளிதில் அத்தி இணங்கி விடுவானென்று புலவர் நினைக்கவில்லை, ஆதியும் அவ்வளவு எதிர்பார்க்க வில்லை. ஆம்! அது உண்மைதான். மருதியைக் காணலாம் என்ற நம்பிக்கையிருந்தால் - காண வேண்டுமென்ற ஆதுரம் இருக்குமானால் அவ்விதம் புலவர் விருப்பத்துக்கு நிச்சயம் அவன் இணங்க மாட்டான்! ஆனால், மருதியிடம் அவன் வேண்டுமென்றே வெறுப்புக் கொண்டானா! - இல்லையே! உண்மை என்னவானாலும் மருதியின் செயல், அத்திக்குத் தீவிர வெறுப்பையும் கோபத்தையுமே தந்தது. ஏன்?- மருதி எவ்விதத்திலும் துய்மை நிலையிலிருந்து பிறழமாட்டாள் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லையா? அவ்வளவு காலம் பழகியும் அவளிடம் அவனுக்கு நம்பிக்கை ஏற்படாததற்குக் காரணம் என்ன? அவ்விதம் பழகியதில் நம்பிக்கை குன்றுமாறு அவள் எப்போதேனும் நடந்து கொண்டிருக்கிறாளா? உயர்ந்த காதலின் மாண்பு இது தானா? அவ்விதம் இல்லை. அத்தியின் மனத்தில் சுழன்று கொண்டிருந்தவை இரண்டு. பிறன் வசம் அடைக்கலம் புகாமல் தப்பிவிட வேண்டும்; இல்லையேல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாயினும் பிறனிடம் அகப்படுத லினின்றும் விடுதலை பெறவேண்டும். ஆகவே மருதியிடம் அவனுக்கு வெறுப்பு உண்டானதற்குக் காரணம் வேறு என்ன வேண்டும்? அத்தியின் நினைவில் சுழன்ற இரு வழிகளையும் மருதி பின்பற்றவில்லை என்பது தெரிந்ததுதானே! இவ்விதம் உயிர்க் காதலர்களைப் பிரித்து வைப்பதும் அவர்கள் இருதயங்களை மாறுபடச் செய்வதும் எதிர் பாரா விதம் ஒருவருக்கொருவர் நம்பிக்கை குன்றி நிலைமாறும்படி செய்வதும், பழைய நட்பு குன்றி புதிய நட்பு கிளைக்கும்படிச் செய்வதும் இயற்கையின் விளையாட்டாகவே மதிக்கத் தக்கது அல்லவா? |